திருக்கொள்ளம்பூதூர்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

கொட்ட மேகம ழுங்கொள்ளம் பூதூர்
நட்டம் ஆடிய நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

நல்லமணம் கமழும் திருக்கொள்ளம்பூதூர் என்னும் திருத்தலத்தில் திருநடனமாடும் இறைவனைத் தியானிப்பதால் , இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப் படுவதாக . எம் நம்பிக்கைக்கும் , விருப்பத்திற்குமுரிய சிவபெரு மானே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வணங்க அருள்புரிவா யாக .

குறிப்புரை :

கொட்டம் - வாசனை . நம்பனை உள்க , செல்ல , உந்துக . சிவபெருமானை நாங்கள் தியானிப்பதனால் அதன்பயனாக இந்த ஓடமானது ஆற்றைக்கடந்து செல்லத் தனக்குத்தானே தள்ளப் படுவதாக . ஆண்டவனே ! அகமும் உம்மைத் தொழுது கொண்டி ருக்கும் . அகத்திலும் அன்றிப் புறத்திலும் கண்டு தொழுவ தற்கு அருள் புரிய வேண்டும் . அவ்வருள் புரிவதற்கு முன் இவ்வோடம் வந்தணை யும்படியாகத் திருவருள் புரியவேண்டும் என விரும்பினார் . சிந்தையார் , சிந்திக்கும் அடியார் எனலும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கோட்ட கக்கழ னிக்கொள்ளம் பூதூர்
நாட்ட கத்துறை நம்பனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

நீர்நிலைகளும் , வயல்களும் கொண்டு விளங்கும் திருக்கொள்ளம் பூதூர் என்னும் தலத்தில் விரும்பி வீற்றிருக்கின்ற நம்பனைத் தியானிக்க , இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

கோட்டகம் - வயலின் புறத்தே நீர்தேங்கி நிற்கும் இடம் . கொள்ளம் பூதூரைச் சேர்ந்த நாடு - கொள்ளம் பூதூர் நாடு .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

குலையி னார்தெங்கு சூழ்கொள்ளம் பூதூர்
விலையி லாட்கொண்ட விகிர்தனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

குலைகளோடு கூடிய தென்னை மரங்கள் சூழ்ந்த திருக்கொள்ளம்பூதூரில் , விலை கொடுத்து வாங்கிய பொருளைப் போன்ற அருமையுடன் என்னை ஆட்கொண்ட விகிர்தனாகிய உன்னைத் தியானிக்க இந்த ஓடமாவது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

குலையின் ஆர்தெங்கு - குலையினால் நிறைந்த தென்னை . விலையில் ஆட்கொண்ட விகிர்தன் - விலைகொடுத்துப் பெற்ற பொருளைப் போல் என்னை ஆட்கொண்டருளியவன் . அதாவது ` இருந்து என்னை ஆண்டுகொள் விற்றுக்கொள் ஒற்றிவை யென்னின் அல்லால் விருந்தினனேனை விடுதி கண்டாய் ` ( திருவாசகம் 122) என்றபடியாம் . ஆகவே ` நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே ` என்றபடி தன்வயமிழந்து கூறினபடியாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

குவளை கண்மல ருங்கொள்ளம் பூதூர்த்
தவள நீறணி தலைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

பெண்களின் கண்களைப் போன்று குவளை மலர்கள் மலர்ந்துள்ள திருக்கொள்ளம்பூதூரில் வீற்றிருக்கின்ற திருவெண்ணீறு அணிந்துள்ள தலைவனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடந்து செல்லத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் . புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

குவளைகள் , கண்களைப்போல மலரும் - கொள்ளம் பூதூரில் வெண்மையான நீறுபூசிய தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

கொன்றை பொன்சொரி யுங்கொள்ளம் பூதூர்
நின்ற புன்சடை நிமலனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

கொன்றை மரமானது பொன்னிறப் பூக்களை உதிர்க்கின்ற திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ள நிமலனைத் தியானிக்க இந்த ஓடமானது ஆற்றைக் கடக்கத் தனக்குத் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

கொன்றை மரங்கள் மஞ்சள் நிறமான மலர்களை யுதிர்ப்பது பொன்சொரிவது போற் காணப்படுகின்றது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

ஓடம் வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஆடல் பேணிய அடிகளை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

திருநடனம் செய்யும் தலைவனான சிவபெரு மானைத் தியானிக்க ஓடமானது திருக்கொள்ளம்பூதூர் என்னும் தலத்தினை அடையும்படி ஆற்றைக் கடக்கத் தானாகவே தள்ளப் படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

பதிகம் முற்றுப்பெறு முன்னமே ஓடம் கொள்ளம் பூதூரையடைந்து விட்டதாதலால் ` ஓடம் வந்தணையும் கொள்ளம் பூதூர் ` என்று அருளினார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

ஆறு வந்தணை யுங்கொள்ளம் பூதூர்
ஏறு தாங்கிய இறைவனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

ஆறு வந்தடைகின்ற திருக்கொள்ளம்பூதூரில் இடபம் தாங்கிய இறைவனைத் தியானிக்க ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

ஆறுவந்தணையும் கொள்ளம் பூதூர் என்று பாடப் பட்டது . இவ்வாறே மயிலாப்பூரில் அங்கம் பூம்பாவையானபோது பதிகம் முற்றுப் பெறுமுன்னமே பூம்பாவை வெளிப்பட்டமையையும் அறிக . ( பெரியபுராணம் .)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

குரக்கி னம்பயி லுங்கொள்ளம் பூதூர்
அரக்க னைச்செற்ற ஆதியை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

குரங்குக் கூட்டங்கள் மரங்களில் ஆடிக் குதிப்பதால் உண்டாகும் ஒலி நிறைந்த திருக்கொள்ளம்பூதூரில் எழுந்தருளி யிருக்கின்றவனும் , இராவணனை மலையின் கீழ் நெருக்கியவனுமான ஆதிமுதல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

குரக்கினம் - குரங்குக் கூட்டம் . சிலப்பதிகாரம் போன்ற தொடர் . நிலைமொழி மெல்லெழுத்து வல்லெழுத்தாயிற்று . செற்ற - கோபித்த . ஆதிமுதல்வன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

பருவ ரால்உக ளுங்கொள்ளம் பூதூர்
இருவர் காண்பரி யான்கழ லுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

பருத்த வரால்மீன்கள் துள்ளுகின்ற திருக் கொள்ளம்பூதூரில் எழுந்தருளியிருக்கின்ற , திருமாலும் , பிரமனும் காண்பதற்கு அரியவனாய் நின்ற சிவபெருமானின் திருவடிகளைத் தியானிக்க இந்த ஓடம் தானாகவே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியவர்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

பருவரால் - பருத்த வரால் மீன்கள் . உகளும் - துள்ளும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

நீர கக்கழ னிக்கொள்ளம் பூதூர்த்
தேர மண்செற்ற செல்வனை யுள்கச்
செல்ல வுந்துக சிந்தை யார்தொழ
நல்கு மாறருள் நம்பனே.

பொழிப்புரை :

நீர்வளம் மிக்க வயல்களையுடைய திருக் கொள்ளம்பூதூரில் எழுந்தருளியுள்ளவனாய் , புத்தர்களும் , சமணர் களும் பகைத்துப் பேசும் செல்வனான சிவபெருமானைத் தியானிக்க இந்த ஓடம் தானே தள்ளப்படுவதாக . நம்பனே ! மனத்தால் உன்னைச் சிந்தித்து மகிழும் அடியார்கள் புறத்தேயும் உன்னைத் திருக்கோயிலில் கண்டு வழிபட அருள்புரிவாயாக .

குறிப்புரை :

நீர் அகம் - நீரைத்தன்னிடத்தே உடைய . நீரகக்கழனி என்றதால் கொள்ளம் பூதூரின் நீர் வளம் , நில வளம் இரண்டையும் புலப்படுத்தினார் . தேர் அமண் - தேரரும் அமணரும் , தேரர் - சாக்கியர் , அமணர் - சமணர் உம்மைத்தொகை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கொன்றை சேர்சடை யான்கொள்ளம் பூதூர்
நன்று காழியுள் ஞானசம் பந்தன்
இன்றுசொன் மாலைகொண் டேத்த வல்லார்போய்
என்றும் வானவ ரோடிருப் பாரே.

பொழிப்புரை :

கொன்றை மலர்களை அணிந்த சடைமுடியுடைய சிவபெருமான் எழுந்தருளியுள்ள திருக்கொள்ளம்பூதூரில் நற்புக ழுடைய காழியில் வசிக்கும் ஞானசம்பந்தன் உரைத்த இப்பதிகப் பாமாலையால் இறைவனைப் போற்ற வல்லவர்கள் எப்பொழுதும் தேவர்களோடு கூடி மகிழ்வர் .

குறிப்புரை :

நன்று காழி - புண்ணியம் பொருந்திய காழி . ஞான சம்பந்தன் இன்று சொன்ன பாடல்களைக் கொண்டு , இன்னும் பிற்பட்ட பல்லாயிர ஆண்டுகளிற் கூறுவாரேனும் , என்றென்றைக்கும் தமக்கு வந்த ஆபத்தினின்றும் நீங்கி வானவரோடு இருப்பார் .
சிற்பி