திருப்புகலி


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

கண்ணுத லானும்வெண் ணீற்றினா னுங்கழ லார்க்கவே
பண்ணிசை பாடநின் றாடினா னும்பரஞ் சோதியும்
புண்ணிய நான்மறை யோர்களேத் தும்புக லிந்நகர்ப்
பெண்ணினல் லாளொடும் வீற்றிருந் தபெரு மானன்றே.

பொழிப்புரை :

நெற்றிக் கண்ணையுடையவனும் , திருவெண் ணீற்றினைப் பூசியுள்ளவனும் , திருவடிகளில் கழல்கள் ஒலிக்கப் பண்ணுடன் இசைபாட நடனம் ஆடுபவனும் ஆகி , மேலான சோதி வடிவாக விளங்குகின்ற கடவுள் , சிவபுண்ணியர்களாகிய , நான்கு வேதங்களையும் பயின்ற அந்தணர்கள் துதிக்கின்ற திருப்புகலி நகரில் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

திருப்புகலியுள் பெண்ணின் நல்லவளாகிய உமாதேவி யோடும் வீற்றிருந்தருளும் பெருமானே நெற்றிக் கண்ணையுடைய வனும் , வெண்ணீற்றவனும் , பண்ணிசை பாட நின்று ஆடியவனும் பரஞ்சோதியும் ஆவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

சாம்பலோ டுந்தழ லாடினா னுஞ்சடை யின்மிசைப்
பாம்பினோ டும்மதி சூடினா னும்பசு வேறியும்
பூம்படு கல்லிள வாளைபா யும்புக லிந்நகர்க்
காம்பன தோளியொ டும்மிருந் தகட வுளன்றே.

பொழிப்புரை :

மகாசங்கார காலத்தில் சாம்பலோடு நெருப்பில் ஆடியவனும் , சடைமுடியில் பாம்போடு சந்திரனைச் சூடியுள்ளவனும் , இடபவாகனத்தில் ஏறியுள்ளவனுமான சிவபெருமான் , மலர்ப் பொய்கையில் இள வாளை மீன்கள் துள்ளிப் பாய்கின்ற திருப்புகலி நகரில் , மூங்கில் போன்ற தோளுடைய உமாதேவியோடு வீற்றிருக்கும் கடவுளே ஆவான் .

குறிப்புரை :

பூம்படுகல் - மலர்ப்பொய்கையில் . படுகர் :- போலி . காம்பு - மூங்கில் , தோளியொடும் இருந்த கடவுள் - தோளியோடும் புகலிநகர் இருந்த பெருமானே சாம்பலோடு நெருப்பிலாடினவனும் , சடையில் பாம்போடு சந்திரனைச் சூடினவனும் , பகடு ஏறினவனும் ஆவான் . மகாசங்காரகாலத்தில் உலகமெல்லாம் நெருப்புமயமாய் இருக்கும்பொழுது அந்நெருப்பின் நடுநின்று ஆடினான் சிவபெரு மான் என்பது புராண வரலாறு . விடையைப் பசு என்றது சாதி பற்றி . ` பசு ஏறும் எங்கள் பரமன் ` என இரண்டாந் திருமுறையில் வருதலுங் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

கருப்புநல் வார்சிலைக் காமன்வே வக்கடைக் கண்டானும்
மருப்புநல் லானையி னீருரி போர்த்தம ணாளனும்
பொருப்பன மாமணி மாடமோங் கும்புக லிந்நகர்
விருப்பினல் லாளொடும் வீற்றிருந் தவிம லனன்றே.

பொழிப்புரை :

நல்ல நீண்ட கரும்பு வில்லையுடைய மன்மதன் எரியும்படி நெற்றிக் கண்ணால் விழித்தவனும் , அழகிய தந்தத்தை யுடைய யானையின் வலிய தோலினை உரித்துப் போர்த்திக் கொண்ட மணாளனுமாகிய சிவபெருமான் , மலைகள் போன்று உயர்ந்து விளங்கும் அழகிய மாடங்களையுடைய திருப்புகலி நகரில் தன்மீது விருப்பமுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனே யாவான் .

குறிப்புரை :

கருப்பு நல்வார் சிலைக்காமன் - நல்ல நெடிய கரும்பு வில்லையுடைய மன்மதன் . கடைக்கண்டானும் - கடைக் கண்ணினால் பார்த்தவனும் . மருப்பு - தந்தம் . மணாளன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர் . ` நித்த மணாளர் நிரம்ப அழகியர் ` ( திருவாசகம் - அன்னைப் பத்து ) காமனைக் கடைக்கண் விழித்து எரித்தவரும் , யானைத் தோலைப் போர்த்தவரும் , தம்மீது விருப்பினையுடைய உமாதேவி யாரோடு திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானே யாவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

அங்கையி லங்கழ லேந்தினா னும்அழ காகவே
கங்கையைச் செஞ்சடை சூடினா னுங்கட லின்னிடைப்
பொங்கிய நஞ்சமு துண்டவ னும்புக லிந்நகர்
மங்கைநல் லாளொடும் வீற்றிருந் தமண வாளனே.

பொழிப்புரை :

உள்ளங்கையில் நெருப்பை ஏந்தியவனும் , அழகுறக் கங்கையைச் செஞ்சடையில் சூடியவனும் , திருப்பாற் கடலில் தோன்றிய நஞ்சை அமுதாக உண்டவனும் , திருப்புகலி நகரில் மங்கை நல்லாளாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாவான் .

குறிப்புரை :

உள்ளங்கையில் அழல் ஏந்தினவனும் , கங்கையைச் சடையிற் சூடியவனும் , கடலில்வந்த நஞ்சையுண்டவனும் திருப்புகலியுள் எழுந்தருளிய பெருமானே . அங்கையில் அங்கு அழல் ஏந்தினானும் என்ற தொடரில் அங்கு அசைநிலை . ` போர்த்தாய் அங்கோர் ஆனையின் ஈருரி தோல் ` செந்நிறச்சடையில் வெண்ணிறக் கங்கையைக் கடவுள் சூடினது ஓர் அழகைத் தருகிறது என்பார் அழகாகவே கங்கையைச் செஞ்சடைச் சூடினான் என்றார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சாமநல் வேதனுந் தக்கன்றன் வேள்வித கர்த்தானும்
நாமநூ றாயிரஞ் சொல்லிவா னோர்தொழு நாதனும்
பூமல்கு தண்பொழின் மன்னுமந் தண்புக லிந்நகர்க்
கோமள மாதொடும் வீற்றிருந் தகுழ கனன்றே.

பொழிப்புரை :

நல்ல சாமவேதத்தை அருளியவனும் , சிவனை நினையாது தக்கன் செய்த யாகத்தைத் தகர்த்தவனும் , நூறாயிரம் திருநாமங்களைச் சொல்லித் தேவர்களும் அருச்சித்து வணங்கும் தலைவனும் , பூக்கள் நிறைந்த குளிர்ந்த சோலைகள் நிலைபெற்றி ருக்கும் அழகும் , குளிர்ச்சியுமுடைய திருப்புகலி நகரில் அழகிய இளம் பெண்ணாகிய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் அழகிய சிவ பெருமானேயாவான் .

குறிப்புரை :

சாமவேதம் பாடினவனும் , தக்கன் வேள்வியை அழித்தவனும் , லட்சம்பெயர் சொல்லித் தேவர் அருச்சித்துப் பூசிக்கும் தலைவனும் , ( கோமளமாது ) இளம்பெண்ணாகிய உமாதேவியோடுங் கூடித் திருப்புகலியில் எழுந்தருளியிருப்பவனேயாவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

இரவிடை யொள்ளெரி யாடினா னும்இமை யோர்தொழச்
செருவிடை முப்புரந் தீயெரித் தசிவ லோகனும்
பொருவிடை யொன்றுகந் தேறினா னும்புக லிந்நகர்
அரவிடை மாதொடும் வீற்றிருந் தவழ கனன்றே.

பொழிப்புரை :

மகாசங்காரம் என்று சொல்லப்படும் நள்ளிரவில் ஒளிமிக்க நெருப்பில் ஆடியவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர் முகத்தில் முப்புரங்களைத் தீப்பற்றி எரியும்படி செய்த சிவலோக நாதனும் , இடபவாகனத்தில் உகந்து ஏறியவனும் , திருப்புகலி நகரில் பாம்பு போன்ற இடையினையுடைய உமாதேவியோடு வீற்றிருந் தருளும் அழகிய சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

மகா சங்கார காலம் ` இரவு ` எனப்பட்டது , சூரிய சந்திரர் , உடுக்கள் இவையெல்லாம் அழிந்துபட்டமையின் . இப்பதிகம் 2 - ஆம் பாடலைப்பார்க்க . மகா சங்கார காலத்தில் நெருப்பில் ஆடினவனும் , தேவர்கள் தொழுது வேண்டப் போர்முகத்தில் முப்புரத்தைத் தீயால் எரியச் செய்தவனும் , விடையை விரும்பி ஏறினவனும் , திருப்புகலியின் கண்ணே , பாம்பு போலும் இடையை யுடைய உமாதேவியோடும் எழுந்தருளினவனும் இவனேயாவன் . அப்பர் பெருமான் திருவாக்கில் வருதலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

சேர்ப்பது திண்சிலை மேவினா னுந்திகழ் பாலன்மேல்
வேர்ப்பது செய்தவெங் கூற்றுதைத் தானும்வேள் விப்புகை
போர்ப்பது செய்தணி மாடமோங் கும்புக லிந்நகர்ப்
பார்ப்பதி யோடுடன் வீற்றிருந் தபர மனன்றே.

பொழிப்புரை :

திண்ணிய கயிலை மலையை விரும்பி இருப்பிட மாகக் கொண்டவனும் , பாலனான மார்க்கண்டேயர் மீது சினம் கொண்டு வந்த கொடுங்காலனைக் காலால் உதைத்தவனும் , வேள்விப் புகையால் மூடப்பட்ட அழகிய மாடங்கள் ஓங்கும் திருப்புகலி நகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருள்பவனும் எல்லோருக்கும் மேலானவ னான சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

சேருமிடம் திண்ணிய கைலை மலையாகத் தங்கின வனும் , மார்க்கண்டர்மீது கோபித்தலைச் செய்து வந்த கொடிய யமனை உதைத்தவனும் , திருப்புகலியில் மலையரையன் மகளோடும் எழுந் தருளிய பெருமானும் ஆவான் . சேர்ப்பது என்ற சொல்லில் ` அது ` பகுதிப்பொருள் விகுதி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

கன்னெடு மால்வரைக் கீழரக் கன்னிடர் கண்டானும்
வின்னெடும் போர்விறல் வேடனா கிவிச யற்கொரு
பொன்னெடுங் கோல்கொடுத் தானுமந் தண்புக லிந்நகர்
அன்னமன் னந்நடை மங்கையொ டும்அமர்ந் தானன்றே.

பொழிப்புரை :

கல் போன்று திண்ணிய நெடிய பெரிய திருக்கயிலை மலையின் கீழ் அரக்கனான இராவணனை இடர் செய்தானும் , வில்லேந்திப் போர்புரியும் வீரமுடைய வேட்டுவ வடிவில் வந்து அர்ச்சுனனுக்கு ஒரு பொன்மயமான பாசுபதம் என்ற அம்பைக் கொடுத்தவனும் , அழகிய குளிர்ச்சியான திருப்புகலி நகரில் அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்து அருளுபவ னான சிவபெருமானேயாவான் .

குறிப்புரை :

கல்லைப்போலும் திண்ணிய நெடிய பெரிய வெள்ளி மலையின்கீழ் இராவணன் துன்பம் கண்டு அருளியவனும் ; வேடனாகி விசயனுக்குப் பொன்மயமான பாசுபதமென்னும் அம்பைக் கொடுத்த வனும் , திருப்புகலியுள் அன்னம் அனைய நடையையுடைய உமா தேவியாரோடும் வீற்றிருந்தருளிய பெருமானும் அவனே ஆவான் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

பொன்னிற நான்முகன் பச்சையான் என்றிவர் புக்குழித்
தன்னையின் னானெனக் காண்பரி யதழற் சோதியும்
புன்னைபொன் றாதுதிர் மல்குமந் தண்புக லிந்நகர்
மின்னிடை மாதொடும் வீற்றிருந் தவிம லனன்றே.

பொழிப்புரை :

பொன்னிறப் பிரமனும் , பச்சைநிறத் திருமாலும் என்ற இவர்கள் அடிமுடி காணப் புகுந்தபோது தன்னை இன்னா னெனக் காண்பதற்கியலாதபடி அழற்பிழம்பாய் நின்ற பெருமான் , புன்னை மரங்கள் பொன் போன்ற தாதுக்களை உதிர்க்க அழகிய , குளிர்ச்சியான திருப்புகலி நகரில் மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் விமலனாகிய சிவபெருமானே யாவான் .

குறிப்புரை :

பிரமனும் திருமாலும் இன்னானென்று தன்னைக் கண்டறியாதபடி தழல் சோதியானவனும் , மின்னல் போன்ற இடையையுடைய உமாதேவியாரோடும் திருப்புகலியுள் எழுந் தருளிய பெருமானும் இவனேயாவன் . ` எண்ணுங்காலும் அது அதன் பண்பே ` யென்ற தொல் காப்பியப்படி பொன்னிற ( நான்முக ) ன் - பச்சையன் என்று சொல்லப் பட்டனர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

பிண்டியும் போதியும் பேணுவார் பேச்சினைப் பேணாததோர்
தொண்டருங் காதல்செய் சோதியா யசுடர்ச் சோதியான்
புண்டரீ கம்மலர்ப் பொய்கைசூழ்ந் தபுக லிந்நகர்
வண்டமர் கோதையோ டும்மிருந் தமண வாளனே.

பொழிப்புரை :

அசோக மரத்தையும் , அரசமரத்தையும் போற்றும் சமணர்கள் , புத்தர்கள் சொல்லும் உரைகளைப் போற்றாது ஒப்பற்ற தொண்டர்கள் பக்தியுடன் வழிபாடு செய்கின்ற சோதிச் சுடராய் ஒளிரும் இறைவன் தாமரைகள் மலரும் பொய்கைகள் சூழ்ந்த திருப்புகலி நகரில் வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியோடு எழுந்தருளியுள்ள மணவாளனான சிவபெருமானே யாவான் .

குறிப்புரை :

பிண்டி - அசோகமரம் ; தங்கள் கடவுள் அதனடியில் இருப்பானென்று அதனைப் போற்றுவர் . போதி - அரசமரம் . தங்கள் தலைமகன் அதனடியில் இருந்து ஞானம்வரப் பெற்றானென்று புத்தர் அதனைப் போற்றுவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

பூங்கமழ் கோதையோ டும்மிருந் தான்புக லிந்நகர்ப்
பாங்கனை ஞானசம் பந்தன்சொன் னதமிழ் பத்திவை
ஆங்கமர் வெய்திய வாதியா கவிசை வல்லவர்
ஓங்கம ராவதி யோர்தொழச் செல்வது முண்மையே.

பொழிப்புரை :

பூ மணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட திருப்புகலி நகர் இறைவனை , ஞான சம்பந்தன் சொன்ன தமிழ்ப்பாக்கள் பத்தினைத் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவமாகவே கொண்டு இன்னிசையுடன் ஓதித் துதிக்க வல்லவர்கள் பெருமையுடைய தேவலோகத்தாரும் தொழும்படி சிவனுலகம் செல்வர் என்பது உண்மையே ஆகும் .

குறிப்புரை :

ஆங்கு - திருப்புகலியுள் . ஆங்கு - அவ்விதமாக என்றுமாம் . உமாதேவியாரோடும் . அமர்வு எய்திய - எழுந்தருளிய , ஆதியாக - சிவம் ஆக . ஞானசம்பந்தன் சொன்ன பத்தும் ஓதி இவற்றை அந்தச் சிவமாகவே கொண்டு இசையாற் போற்றவல்லவர் அமராவதி யோர் தொழச் செல்வர் .
சிற்பி