திருக்கடவூர் வீரட்டம்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

சடையுடை யானும்நெய் யாடலா னுஞ்சரி கோவண
உடையுடை யானுமை யார்ந்த வொண்கண் உமைகேள்வனும்
கடையுடை நன்னெடு மாடமோங் குங்கட வூர்தனுள்
விடையுடை யண்ணலும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

சடை முடியுடையவனும் , பசுவிலிருந்து பெறப்படும் நெய் முதலான ஐந்து பொருள்களால் திருமுழுக்காட்டப் படுபவனும் , சரிந்த கோவண ஆடையுடையவனும் , மை தீட்டிய ஒளி பொருந்திய கண்ணையுடைய உமாதேவியின் கணவனும் , வாயில் களையுடைய நெடிதோங்கிய நல்ல மாடங்களை உடைய திருக் கடவூரில் இடபவாகனத்தில் வீற்றிருக்கும் அண்ணலும் வீரட்டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

சடையையுடையவன் . மை ஆர்ந்த ஒண்கண் உமை கேள்வன் - மைதீட்டிய கண்களையுடைய உமை கணவனும் , கடை - வாயில் . கடவூரில் விடையுடையவனும் வீரட்டானத் தானல்லனோ ? வீர + அட்ட + தானம் = வீரட்டானம் , மரூஉ . சிவபெருமான் வீரத்தைக் காட்டிய எட்டு இடம் - அவை ` பூமன் சிரங்கண்டியந்தகன் கோவல் புரமதிகை ` என்னும் பாடலால் அறிக . வீரஸ்தாநம் எனலுமாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

எரிதரு வார்சடை யானும்வெள் ளையெரு தேறியும்
புரிதரு மாமலர்க் கொன்றைமா லைபுனைந் தேத்தவே
கரிதரு காலனைச் சாடினா னுங்கட வூர்தனுள்
விரிதரு தொல்புகழ் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

நெருப்புப் போன்று சிவந்த நீண்ட சடைமுடி உடையவனும் , வெண்ணிற எருதை வாகனமாகக் கொண்டவனும் , சிறந்த கொன்றை மலர்களாலான மாலையைப் புனைந்து ஏத்தி மார்க்கண்டேயன் வழிபட , அவனுயிரைக் கவர வந்த கருநிறக் காலனைக் காலால் உதைத்தவனுமாகிய இறைவன் திருக்கடவூரில் மேன்மேலும் பெருகுகின்ற பழம்புகழுடைய திருவீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ?

குறிப்புரை :

எரிதருவார் சடையானும் - நெருப்புப் போன்ற செந்நிறம் பொருந்திய நெடிய சடையையுடையவனும் . எருது ஏறி - எருது ஏறினவன் . கரிதருகாலன் - கரிய நிறத்தையுடைய இயமன் ; சிவனடியார்க்குத் தீமை செய்பவனுக்கு இந்தக் கதிதான் என்று கரி ( சாட்சி ) யானவன் எனலுமாம் . கடவூர் - இயமனை வீட்டிய வீரஸ் தானம் ஆகையால் காலனைச் சாடினானும் என வரலாறு குறித்தது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

நாதனும் நள்ளிரு ளாடினா னும்நளிர் போதின்கண்
பாதனும் பாய்புலித் தோலினா னும்பசு வேறியும்
காதலர் தண்கட வூரினா னுங்கலந் தேத்தவே
வேதம தோதியும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

எல்லா உலகங்கட்கும் தலைவனும் , மகாசங்கார காலத்தில் நடனம் புரிபவனும் , அடியவர்களின் இதயத்தாமரையில் வீற்றிருப்பவனும் , புலித்தோலாடை உடையவனும் , இடபவாகனனும் , அன்பர்கள் வசிக்கும் குளிர்ச்சி பொருந்திய திருக்கடவூரில் விளங்கு பவனுமான இறைவன் யாவரும் வணங்குமாறு வேதத்தை அருளிச் செய்த வீரட்டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

நளிர்போதின் கண் பாதனும் - அடியார்களின் குளிர்ந்த தாமரை ( இருதய ) மலரின்கண் தங்கும் திருவடியையுடையவனும் , காதலர் - அன்பர்கள் வசிக்கும் . தண் - குளிச்சி பொருந்திய , கடவூரினானும் - திருக் கடவூரில் எழுந்தருளியிருப்பவனும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

மழுவமர் செல்வனும் மாசிலா தபல பூதமுன்
முழவொலி யாழ்குழன் மொந்தைகொட் டமுது காட்டிடைக்
கழல்வளர் கால்குஞ்சித் தாடினா னுங்கட வூர்தனுள்
விழவொலி மல்கிய வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

மழுப்படையேந்திய செல்வனும் , குற்றமில்லாத பல பூதகணங்கள் முரசு ஒலிக்க , யாழும் குழலும் இசைக்க , மொந்தை என்னும் வாத்தியம் கொட்ட , சுடுகாட்டில் கழல் ஒலிக்கத் தன் திருப்பாதத்தை நன்கு வளைத்து ஆடும் பெருமான் திருக்கடவூரில் திருவிழாக்களின் ஒலி நிறைந்த வீரட்டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

மழு அமர் செல்வனும் - மழுவை விரும்பி ( யேந்தி ) ய செல்வனும் , மொந்தை - ஒருவகை வாத்தியம் . முழவொலி யாழ் குழல் மொந்தை கொட்ட - முழவொலியும் யாழ் ஒலியும் குழல் ஒலியும் ஆகிய இவற்றோடு மொந்தை கொட்ட , குழல் ஒலி என்னுந் தொடரி லுள்ள ஒலி யென்ற சொல்லை , யாழ் , குழல் என்பவற்றோடும் கூட்டுக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சுடர்மணிச் சுண்ணவெண் ணீற்றினா னுஞ்சுழல் வாயதோர்
படமணி நாகம ரைக்கசைத் தபர மேட்டியும்
கடமணி மாவுரித் தோலினா னுங்கட வூர்தனுள்
விடமணி கண்டனும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

சுடர்விடும் மணிபோன்ற உருத்திராக்கம் அணிந் துள்ளவனும் , வாசனை பொருந்திய திருவெண்ணீற்றினைப் பூசியுள்ள வனும் , அசைகின்ற படமுடைய பாம்பை இடையில் கச்சாக அணிந்துள்ள கடவுளும் , மதமுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தவனும் , திருக்கடவூரில் நஞ்சை மணி போன்று கண்டத்தில் கொண்டு விளங்குபவனும் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ? விடமணி கண்டன் - ` நீலமணி மிடற்று ஒருவன் போல ` ( ஔவையார் , புறநானூறு . ) நினைவுகூர்க .

குறிப்புரை :

சுடர்மணி - ஒளிர்கின்ற உருத்திராக்க மணி . சுழல்வு ஆயது ஓர் படம் மணிநாகம் அரைக்கு அசைத்த - மண்டலம் இடுகிறதாகிய ஒரு பாம்பை இடுப்பிற் கட்டிய . கடம் அணி - மா மதத்தையுடைய அழகிய யானை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பண்பொலி நான்மறை பாடியா டிப்பல வூர்கள்போய்
உண்பலி கொண்டுழல் வானும்வா னின்னொளி மல்கிய
கண்பொலி நெற்றிவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வெண்பொடிப் பூசியும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

நான்கு வேதங்களையும் பண்ணோடு பாடுபவனும் , நடனம் ஆடுபவனும் , பலவூர்களுக்கும் சென்று மண்டையோட்டில் பிச்சையேற்றுத் திரிபவனும் , நெற்றிக் கண்ணை உடையவனும் , வானில் ஒளிரும் வெள்ளிய சந்திரனைச் சடையிலணிந்துள்ளவனும் , திருவெண்ணீற்றைப் பூசியுள்ளவனும் திருக்கடவூரிலுள்ள வீரட் டானத்து அரன் அல்லனோ ?

குறிப்புரை :

உழல்வான் - சுற்றித்திரிவான் . கண்பொலி நெற்றி வெண் திங்களான் - கண் விளங்குகின்ற நெற்றியின்மீது வெள்ளிய சந்திரனை அணிந்தவன் . வெண்பொடி பூசி - வெண்மையான திருநீற்றைப் பூசியவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

செவ்வழ லாய்நில னாகிநின் றசிவ மூர்த்தியும்
முவ்வழல் நான்மறை யைந்துமா யமுனி கேள்வனும்
கவ்வழல் வாய்க்கத நாகமார்த் தான்கட வூர்தனுள்
வெவ்வழல் ஏந்துகை வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

செந்நிற நெருப்பாகவும் , நிலமாகவும் விளங்கும் சிவமூர்த்தியும் , ஆகவனீயம் , காருகபத்தியம் , தட்சிணாக்கினி என்ற மூவகை நெருப்பாய்த் திகழ்பவனும் , இருக்கு , யசுர் , சாமம் , அதர்வணம் என நான்கு வேதங்களாய் விளங்குபவனும் , ஞானநூல்களை ஓதல் , ஓதுவித்தல் , கேட்டல் , கேட்பித்தல் , சிந்தித்தல் என்ற ஞானவேள்வி ஐந்து இயற்றும் முனிவர்களின் துணைவனாய் விளங்குபவனும் , கவ்வுகின்ற நெருப்பைப் போன்று விடத்தைக் கக்குகின்ற வாயையுடைய சினமிகுந்த பாம்பை அணிந்தவனும் , வெப்பமுடைய நெருப்பை ஏந்திய கரத்தை உடையவனும் , திருக் கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியுள்ள அரன் அல்லனோ ?

குறிப்புரை :

சிவமூர்த்தி - மங்களகரமான திருவுருவுடையவன் . முத்தழல் , ஆகவனீயம் ; காருபத்தியம் ; தட்சிணாக்கினியென்பன . ஐந்தும் ஆய - ஐவகை வேள்வியுமாகிய . ` ஐவகை வேள்வியமைத்து ` என வருவது காண்க . ( திருவெழுகூற்றிருக்கை .) முனிகேள்வன் - முனிவரிடத்து நண்பு பூண்டவன் . கேள்வன் - நண்பன் . கேண்மையென்னும் பண்படியாகப் பிறந்தபெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

அடியிரண் டோருடம் பைஞ்ஞான்கி ருபது தோள்தச
முடியுடை வேந்தனை மூர்க்கழித் தமுதன் மூர்த்தியும்
கடிகம ழும்பொழில் சூழுமந் தண்கட வூர்தனுள்
வெடிதலை யேந்தியும் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

ஓர் உடம்பில் இரண்டு கால்களும் , இருபது தோள்களும் , பத்துத் தலைகளுமுடைய இலங்கை வேந்தனான இராவணனின் மூர்க்கத் தன்மையை அழித்த முதல் பொருளாகிய மூர்த்தியும் , முடை நாற்றமுடைய பிரமனின் மண்டையோட்டை ஏந்தியுள்ளவனும் , திருக்கடவூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளி யுள்ள அரன் அல்லனோ ?

குறிப்புரை :

ஐந்நான்கிருபது தோள் - ஐந்நான்காகிய இருபது தோள் . தசம் - பத்து . மூர்க்கு - மூர்க்கத்தன்மை . வெடி - முடைநாற்றம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

வரைகுடை யாமழை தாங்கினா னும்வளர் போதின்கண்
புரைகடிந் தோங்கிய நான்முகத் தான்புரிந் தேத்தவே
கரைகடல் சூழ்வையங் காக்கின்றா னுங்கட வூர்தனுள்
விரைகமழ் பூம்பொழில் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

கோவர்த்தன மலையைக் குடையாகப் பிடித்துப் பெருமழையிலிருந்து ஆக்களையும் , ஆயர்களையும் காத்த திருமாலும் , குற்றமற்ற தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் சிவனே முழுமுதற்பொருள் என உணர்ந்து துதிக்க , பக்கங்களில் கடல் சூழ்ந்த இவ்வுலகத்தைக் காக்கின்றவன் , திருக்கடவூரில் மணங்கமழ் பூஞ்சோலைகளுடைய வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் அரன் அல்லனோ ?

குறிப்புரை :

வரை - கோவர்த்தன மலை . மழை தாங்கினான் - கண்ணனாகிவந்த திருமால் . புரைகடிந்து - குற்றம்நீங்கி . நான் முகத்தான் - நான்முகத்தானும் என்க . உம்மை விகாரத் தால் தொக்ககது . புரிந்து - விரும்பி . கரை - எல்லை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

தேரரும் மாசுகொள் மேனியா ரும்தெளி யாததோர்
ஆரருஞ் சொற்பொரு ளாகிநின் றஎம தாதியான்
காரிளங் கொன்றைவெண் டிங்களா னுங்கட வூர்தனுள்
வீரமுஞ் சேர்கழல் வீரட்டா னத்தர னல்லனே.

பொழிப்புரை :

புத்தர்களும் , அழுக்கு உடம்பையுடைய சமணர்களும் தெளிந்தறிதற்கரிய சொல்லும் , பொருளுமாகி நின்ற எம் ஆதிப்பிரான் , கார்காலத்தில் மலரும் இளங்கொன்றைப் பூக்களை அணிந்துள்ளவனும் , வெண்ணிறச் சந்திரனைச் சடையில் சூடி யுள்ளவனும் , வீரக்கழல்களை அணிந்துள்ளவனும் ஆகிய , திருக்கட வூரிலுள்ள வீரட்டானத்தில் எழுந்தருளியிருக்கும் அரன் அல்லனோ ?

குறிப்புரை :

தேரர் - புத்தர் . மாசுகொள் மேனியர் - அழுக்குடைய உடம்பையுடைய சமணர் . குளித்தால் நீரில் உள்ள சிறு உயிர்கள் இறந்து விடுமேயென்று நீராடாமையால் மாசுகொள் மேனியர் ஆவர் . ஆர் அரும் சொல் பொருளாகி நின்ற - நிறைந்த அரிய சொல்லும் பொருளுமாகி நின்ற . கார் இளங் கொன்றை - கார் காலத்தில் மலரக் கூடிய இளம் கொன்றை , அன்றலர்ந்த கொன்றைப்பூ . கொன்றை வெண் டிங்களானும் - கொன்றைமாலையோடணிந்த வெள்ளிய சந்திரனை யுடையவனும் , வீரமும் சேர் கழல் - அதுவே பின் கருணையும் செய்தது என்னும் பொருள் தரலால் எதிரது தழுவிய எச்சவும்மை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

வெந்தவெண் ணீறணி வீரட்டா னத்துறை வேந்தனை
அந்தணர் தங்கட வூருளா னைஅணி காழியான்
சந்தமெல் லாம்அடிச் சாத்தவல் லமறை ஞானசம்
பந்தன செந்தமிழ் பாடியா டக்கெடும் பாவமே.

பொழிப்புரை :

விதிப்படி அமைக்கப்பட்ட திருவெண்ணீற்றினை அணிந்துள்ள திருவீரட்டானத்து இறைவனாய் , அந்தணர்கள் வழிபாடு செய்யத் திருக்கடவூரில் திகழ்பவனை , அழகிய சீகாழியில் அவதரித்த வேதமுணர்ந்த ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய இச்சந்தப் பாடல்களை இறைவன் திருவடிக்குப் பக்தியுடன் சாத்திப் பாடியாடும் அன்பர்களின் பாவம் கெடும் .

குறிப்புரை :

சந்தம் எல்லாம் அடிச்சாத்தவல்ல - அழகிய சந்தப் பாடல்களையெல்லாம் திருவடிக்குச் சாத்தவல்ல ( ஞானசம்பந்தன் ) சந்தம் - பண்பாகு பெயர் . வெந்த - விதிப்படி செய்யப்பட்ட கற்பநீறு . அந்தணர் - மாதவக்கலயர் முதலோர் . அகரம் ஆறனுருபு பன்மை . ஆடப் பாவம் கெடும் .
சிற்பி