திருக்கோட்டாறு


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

வேதியன் விண்ணவ ரேத்தநின் றான்விளங் கும்மறை
ஓதிய வொண்பொரு ளாகிநின் றானொளி யார்கிளி
கோதிய தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
ஆதியை யேநினைந் தேத்தவல் லார்க்கல்ல லில்லையே.

பொழிப்புரை :

வேதங்களை அருளிச் செய்த சிவபெருமான் விண்ணோர்களாலும் தொழப்படுகின்றான் . அவ்வேதங்களால் போற்றப்படும் உயர்ந்த பொருளாகவும் விளங்குகின்றான் . அழகிய கிளிகள் கொஞ்சும் குளிர்ச்சியான சோலைகள் சூழ்ந்த அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள ஆதிப் பிரானான அவனை நினைந்து வணங்க வல்லவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

மறை - வேதம் , ஓதிய - சொல்லப்பட்ட . ஒண்பொருள் ஆகி நின்றான் . வேதம் - பிரபலசுருதி . ஆதியிற் கூறுவதே ஏனைய வற்றினும் சிறந்த பிரமாணமாகும் . ஆகவே அவ்வேதத்தாற் பிரதி பாதிக்கப்பட்ட எவற்றிலும் சிறந்த பொருள் எனப்படுதலின் மறையோதிய ஒண்பொருளாகி நின்றான் என்றார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

ஏலம லர்க்குழன் மங்கைநல் லாள்இம வான்மகள்
பாலம ருந்திரு மேனியெங் கள்பர மேட்டியும்
கோலம லர்ப்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆலநீ ழற்கீ ழிருந்தறஞ் சொன்ன அழகனே.

பொழிப்புரை :

மணம் கமழும் கூந்தலையுடைய மங்கை நல்லாளான , இமவான் மகளான உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாக வைத்த எங்கள் பரம்பொருளான சிவபெருமான் , வண்ணப் பூக்களையுடைய சோலைகள் சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் ஆலமரநிழலில் தட்சணாமூர்த்தியாக அமர்ந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அழகனாவான் .

குறிப்புரை :

ஏலம் - மயிர்ச்சாந்து . பால் - ( இடம் ) பக்கம் . ` அறம் சொன்ன அழகன் ` அறம் என்பது , புருடார்த்தங்களையன்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

இலைமல்கு சூலமொன் றேந்தினா னுமிமை யோர்தொழ
மலைமல்கு மங்கையோர் பங்கனா யம்மணி கண்டனும்
குலைமல்கு தண்பொழில் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அலைமல்கு வார்சடை யேற்றுகந் தவழ கனன்றே.

பொழிப்புரை :

சிவபெருமான் இலைபோன்ற சூலப்படையைக் கையில் ஏந்தியவன் . விண்ணோர்களும் தொழுது வணங்க மலை மகளான உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட நீலகண்டன் . கங்கையை நீண்ட சடையிலே தாங்கிய அழகனான அவன் , காய்களும் , கனிகளும் குலைகளாகத் தொங்கும் குளிர்ந்த சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் தலத்தில் எழுந்தருளியுள்ளான்.

குறிப்புரை :

இலை மல்கு சூலம் , மல்கு உவமானம் . மலைமல்கும் மங்கை - மலைகளோடு மிக்க உறவுடைய மங்கையாகிய உமாதேவி , இமயமலை , கயிலை நீங்கிய ஏனையமலைகளுக்கும் அரசனாதலின் அம்மலைகளெல்லாம் அம்பிகைக்கு உரியவாயின . கயிலைமலை அவளுடையதேயானால் ` மலை மல்கு மங்கை ` என்பதில் யாது வியப்பு ? குலை -சோலைகளின் மரங்களிற் காய்த்துத் தொங்கும் குலைகள் . அலை - சினையாகு பெயராய்க் கங்கையை யுணர்த்திற்று . உகப்பு - உயர்வு என்னும் பொருளில் வரும் உரிச்சொல் . உகந்த - உவந்த , விரும்பிய என்ற பொருளில் இங்கு வந்தது . ` ஆயிரம் பேருகந் தானும் ஆரூரமர்ந்த அம்மானே ` என்னும் அப்ப மூர்த்திகள் தேவாரம் முதலியவற்றானும் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

ஊனம ரும்முட லுள்ளிருந் தவ்வுமை பங்கனும்
வானம ரும்மதி சென்னிவைத் தமறை யோதியும்
தேனம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
தானம ரும்விடை யானும்எங் கள்தலை வனன்றே.

பொழிப்புரை :

இறைவன் உடம்பினை இயக்கும் உயிர்க்குள் உயிராய் விளங்குபவன் . உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வானில் தவழும் சந்திரனைத் தலையிலே அணிந்தவன் . வேதங்களை அருளிச் செய்தவன் . இடபத்தை வாகனமாக உடையவன் . அவன் தேனுடைய மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவன் ஆவான் .

குறிப்புரை :

ஊன் - மாமிசம் . உடலுள்ளிருந்த உமைபங்கன் என்றது . உடலில் உள்ளது உயிர் . உயிரில் உள்ளது சிவம் . உயிரால் உடல் இயங்குகிறது . சிவத்தினால் உயிரியங்குகிறது . ` எவ்வுயிரும் ஈசன் சந்நிதியதாகும் ` என்று சிவஞான சித்தியார் ஒற்றுமை நயம்பற்றி உயிரிலிருக்கும் சிவனை உடலுள் இருப்பானாகக் கூறியது இப்பாட்டு . மறை ஓதி - வேதங்களை ஓதினவன் . மழுவாள் வலனேந்தீ மறையோதீ என்பது சுந்தரமூர்த்திகள் தேவாரம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வம்பல ரும்மலர்க் கோதைபா கம்மகிழ் மைந்தனும்
செம்பவ ளத்திரு மேனிவெண் ணீறணி செல்வனும்
கொம்பம ரும்மலர் வண்டுகெண் டுந்திருக் கோட்டாற்றுள்
நம்பனெ னப்பணி வார்க்கருள் செய்யெங்கள் நாதனே.

பொழிப்புரை :

சிவபெருமான் நறுமணம் கமழும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியை ஒரு பாகமாக வைத்து மகிழும் வலிமையுடையவன் . செம்பவளம் போன்ற திருமேனியில் வெண்ணிறத் திருநீறு அணிந்துள்ள செல்வன் . அனைத்துயிர்களும் விரும்பி அடையத்தக்க அவன் , கொம்புகளிலுள்ள மலர்களை வண்டுகள் கெண்டுகின்ற திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , தன்னைப் பணிந்து வணங்குபவர்கட்கு அருள்புரிபவன் . அவனே எங்கள் தலைவன் .

குறிப்புரை :

வம்பு அலரும் மலர்க்கோதை - வாசனை விரியும் மாலையணிந்த கூந்தலையுடைய உமாதேவியார் . மைந்தன் - வலியவன் , மைந்து - வலிமை , இரண்டாம் அடி முரண்தொடை , ` செல்வன் ` - சிவபெருமானுக்கொரு பெயர் . மலர் வண்டு கெண்டும் - மலரில் வண்டுகள் உளர்கின்ற . ( அருள்செய் எங்கள் நாதன் ) நம்பன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர் . விரும்பத் தக்கவன் என்பது பொருள் . ` நம்பும் மேவும் நசையாகும்மே ` என்பது தொல்காப்பியம் . பதிப்பொருளைத்தவிரப் பிறபொருள்களில் விருப்பம் வைத்தால் அவை துன்பமே பயக்குமாதலால் எல்லா உயிரும் விரும்பியடையத் தக்கவன் சிவபெருமான் ஒருவனேயாதலால் நம்பன் எனப்பட்டான் . ` நதிசேர் செஞ்சடை நம்பாபோற்றி ` என்ற திருவாசகமும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பந்தம ரும்விரன் மங்கைநல் லாளொரு பாகமா
வெந்தம ரும்பொடிப் பூசவல் லவிகிர் தன்மிகும்
கொந்தம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அந்தண னைநினைந் தேத்தவல் லார்க்கில்லை அல்லலே.

பொழிப்புரை :

சிவபெருமான் பந்துபோன்ற திரட்சியான விரல்களையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்டவன் . வெந்து தணிந்த திருநீற்றினைப் பூசியுள்ள விகிர்தன் . மிகுதியாகக் கொத்தாகப் பூக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருள்கின்ற , அனைத்துயிர்களிடத்தும் செவ்விய அருளுடைய அவனை நினைந்து வழிபடும் அடியவர்கட்கு அல்லல் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

`பந்து அமரும் விரல்`. அமரும் - என்ற சொல் போலும் என்ற பொருள்தரலால் உவமவாசகம் . மாதர் கைவிரல் நுனியின் திரட்சிக்குப் பந்து உவமை . வெந்து அமரும் - வெந்து தணிந்த . பொடி - திருநீறு . பொடி பூசவல்ல விகிர்தன் - மேலானவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

துண்டம ரும்பிறை சூடிநீ டுசுடர் வண்ணனும்
வண்டம ருங்குழன் மங்கைநல் லாளொரு பங்கனும்
தெண்டிரை நீர்வயல் சூழ்ந்தழ கார்திருக் கோட்டாற்றுள்
அண்டமு மெண்டிசை யாகிநின் றவழ கனன்றே.

பொழிப்புரை :

துண்டித்த பிறை போன்ற சந்திரனைச் சடையில் சூடியவன் சிவபெருமான் . நீண்டு ஓங்கும் நெருப்புப் போன்ற சிவந்த நிறமுடையவன் . பூவிலுள்ள தேனை விரும்பி வண்டுகள் அமர்கின்ற கூந்தலையுடைய மங்கை நல்லாளாகிய உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டவன் . கடலும் , நீர்வளமிக்க செழுமையான வயல்கள் சூழ்ந்த நிலவளமுமுடைய அழகான திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள இறைவன் அண்டங்களும் , எட்டுத்திசைகளுமாகி நின்ற அழகன் அல்லனோ ?

குறிப்புரை :

வண்டு அமரும் குழல் - பூவில் உள்ள தேனை விரும்பி வண்டுகள் தங்கும் கூந்தல் . அண்டமும் எண்திசையும் ஆகித் திருக்கோட்டாற்றுள் எழுந்தருளியுள்ள அழகனே சுடர் வண்ணனும் மங்கையாளோர் பங்கனும் ஆவான் . சுடர் - தீ . ` சோதியே சுடரே ` என்ற திருவாசகம் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

இரவம ருந்நிறம் பெற்றுடை யவிலங் கைக்கிறை
கரவம ரக்கயி லையெடுத் தான்வலி செற்றவன்
குரவம ரும்மலர்ச் சோலைசூழ்ந் ததிருக் கோட்டாற்றுள்
அரவம ருஞ்சடை யானடி யார்க்கருள் செய்யுமே.

பொழிப்புரை :

இரவு போன்ற கருமைநிறமுடைய இலங்கை மன்னனான இராவணன் வஞ்சனையால் கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க , அவன் வலிமையை அழித்த சிவபெருமான் , குரா மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து , சடைமுடியில் பாம்பணிந்து விளங்கி , தன் அடியவர்கட்கு அருள்புரிகின்றான் .

குறிப்புரை :

`கரவு அமரக் கயிலை எடுத்தான்` - திக்கு விசயம் பண்ணவந்த இராவணன் , விமானத்தோடு கயிலையைக் கடக்க வேண்டியபொழுது , தன் ஆற்றல் கருதாது பொருதற்குந் தூது அனுப்பிப் போர்புரிந்து வென்று கடக்க வேண்டும் ; அன்றேல் , தன் எளிமை கருதி அஞ்சி விரும்பி வரம் பெற்றுச் செல்ல வேண்டும் ; இவ்விரண்டுமல்லாதது வஞ்சச் செயலாதலால் கரவு அமரக் கயிலை எடுத்தான் எனப்பட்டான் . குரவு - ஒருவகை மரம் ; அதன் பூ சிவபூசைக்குரியது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

ஓங்கிய நாரண னான்முக னும்உண ராவகை
நீங்கிய தீயுரு வாகிநின் றநிம லன்னிழற்
கோங்கம ரும்பொழில் சூழ்ந்தெழி லார்திருக் கோட்டாற்றுள்
ஆங்கம ரும்பெரு மானம ரர்க்கம ரனன்றே.

பொழிப்புரை :

செருக்குடைய திருமாலும் , பிரமனும் உணரா வண்ணம் அளந்தறிய முடியாத தீ யுருவாகிநின்ற சிவபெருமான் இயல்பாகவே பாசங்களின் நீங்கியவன் . நிழல்தரும் கோங்குமலர்ச் சோலை சூழ்ந்த அழகிய திருக்கோட்டாறு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பெருமான் . தேவர்கட்கெல்லாம் தேவனாவான் .

குறிப்புரை :

ஓங்கிய - செருக்கால் மிக்க . நீங்கிய - அளவு நீங்கிய ; அளவு அறியமுடியாத - தீ உரு ஆகி நின்றவன் . அமரர்க்கமரன் - மகாதேவன் . இவை சிவபெருமானுக்கு உரிய பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கடுக்கொடுத் ததுவ ராடையர் காட்சியில் லாததோர்
தடுக்கிடுக் கிச்சம ணேதிரி வார்கட்குத் தன்னருள்
கொடுக்ககில் லாக்குழ கன்அம ருந்திருக் கோட்டாற்றுள்
இடுக்கணின் றித்தொழு வார்அம ரர்க்கிறை யாவரே.

பொழிப்புரை :

சாயம் பற்றும் பொருட்டுக் கடுக்காய் நீரில் தோய்த்த காவி ஆடை அணிந்த புத்தர்களுக்கும் , சிறுபாயைச் சுமந்து திரியும் சமணர்களுக்கும் தன்னை நாடாததால் , அருள் புரியமாட்டாத அழகன் சிவபெருமான் . திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அவனைச் சிரமப்படாமல் எளிய முயற்சியால் வழிபடு கின்றவர்களும் , தேவர்கட்குத் தலைவராவர் .

குறிப்புரை :

சாயம் ஆடையில் பற்றுதற் பொருட்டுக் கடுக்காய் நீர் உதவலால் கடுக்கொடுத்தது . செல்லுமிடங்களில் உட்காருவதற்குத் தடுக்கை இடுக்கிச் செல்லுவர் . பீலி , உறித்தாழ்ந்த கரகம் முதலியன கையிற் பற்றுதலின் தடுக்கை இடுக்கிச் செல்லுவர் . சமணேதிரிவார் - சமணமதத்திலே திரிபவர் . இடுக்கண் இன்றித் தொழுவார் - இடுக்கண் துன்பம் . இங்குச் சிரமம் என்றபொருள் , எளிய முயற்சியால் வழிபடுவாரேனும் என்றது . பித்தன் என்றொருகால் பேசுவரேனும் பிழைத்தவை பொறுத்தருள் செய்வீர் . தலவிசேடத்தால் சிறு சிவபுண்ணியமும் பெரும் பயன் விளைக்கும் என்பது கருத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கொடியுயர் மால்விடை யூர்தியி னான்திருக் கோட்டாற்றுள்
அடிகழ லார்க்கநின் றாடவல் லஅரு ளாளனைக்
கடிகம ழும்பொழிற் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
படியிவை பாடிநின் றாடவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

இடபத்தைக் கொடியாகவும் , வாகனமாகவும் கொண்டு திருக்கோட்டாறு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் திருவடிகளிலுள்ள கழல்கள் ஒலிக்க , திருநடனம் புரியும் அருளாளன் . அப்பெருமானை நறுமணம் கமழும் சோலைகளை யுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இப்பதிகப் பாடல்களால் போற்றிப் பாடியாட வல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

கொடி உயர் மால்விடை ஊர்தியினான் - கொடியின் கண் உயர்த்திய பெரிய இடபத்தைவாகனமாகவும் , உடையவன் . மால்விடை யென்பதற்குத் திருமாலாகிய விடை எனலுமாம் .
சிற்பி