திருப்பூந்தராய்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மின்னன வெயிறுடை விரவ லோர்கள்தந்
துன்னிய புரமுகச் சுளிந்த தொன்மையர்
புன்னையம் பொழிலணி பூந்த ராய்நகர்
அன்னமன் னந்நடை யரிவை பங்கரே.

பொழிப்புரை :

மின்னலைப் போன்ற பற்களையுடைய பகையசுரர்களின் நெருங்கிய புரம்மூன்றும் சாம்பலாகும்படி கோபித்த பழமையானவரான சிவபெருமான் , புன்னை மரங்கள் நிறைந்த சோலைகளால் சூழப்பட்ட அழகிய பூந்தராய் நகரில் , அன்னம் போன்ற நடையையுடைய உமாதேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந் தருளுகின்றார் .

குறிப்புரை :

மின் அன்ன எயிறுஉடை விரவலோர்கள் தம் - மின்னலைப் போன்ற பற்களையுடைய பகைவர்களாகிய அசுரர்களின் துன்னியபுரம் . உகச்சுளிந்த தொன்மையர் - நெருங்கியபுரம் ( மூன்றும் ) அழியும்படி , கோபித்தருளிய பழமையானவர் . புன்னையம்பொழில் - புன்னை மரச்சோலைகளின் அழகுடைய பூந்தராய் நகரில் எழுந்தருளி யிருப்பவர் - அரிவை பங்கரே , புரம் உகச் சுளிந்த தொன்மையரே , திருப்பூந்தராய் எழுந்தருளிய கடவுள் ஆவர் . விரவலோர் - ஆர்விகுதி ஓர் என ஆயிற்று . சுளிதல் - கோபித்தல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மூதணி முப்புரத் தெண்ணி லோர்களை
வேதணி சரத்தினால் வீட்டி னாரவர்
போதணி பொழிலமர் பூந்த ராய்நகர்த்
தாதணி குழலுமை தலைவர் காண்மினே.

பொழிப்புரை :

பழமையான அணிவகுப்பையுடைய முப்புரத் திலிருந்த அளவற்ற அசுரர்களை வெம்மையுடைய அம்பினால் அழித்தவராகிய சிவபெருமான் , மலர்கள் நிறைந்த அழகிய சோலை களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் மகரந்தப் பொடிகள் தங்கிய கூந்தலையுடைய உமாதேவியின் தலைவராய் வீற்றிருந்தருளுகின்றார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

மூது அணி - பழமையான அணிவகுப்பையுடைய . முப்புரத்து எண்ணிலோர்களை - முப்புரத்திலிருந்த அளவற்ற அசுரர்களை . வேது அணி சரத்தினால் வீட்டினார் அவர் - வெம்மை யையுடைய அம்பினால் அழித்தவராகிய அப்பெருமான் . திரிபுரம் எரித்தநாளில் அம்பின் அடிப்பாகம் வாயு , இடைப்பாகம் திருமால் , நுனிப்பாகம் நெருப்பு ஆக அமைந்தமையால் , வேது அணி சரம் எனப்பட்டது . போது அணிபொழில் - மலர்களால் அலங்கரிக்கப்பட்ட சோலைகளை உடைய . தாது அணி குழல் உமை - மகரந்தப் பொடி களைக் கொண்ட கூந்தலையுடைய உமாதேவியார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

தருக்கிய திரிபுரத் தவர்கள் தாம்உகப்
பெருக்கிய சிலைதனைப் பிடித்த பெற்றியர்
பொருக்கடல் புடைதரு பூந்த ராய்நகர்க்
கருக்கிய குழலுமை கணவர் காண்மினே.

பொழிப்புரை :

செருக்குக் கொண்ட திரிபுரத்தசுரர்கள் அழியு மாறும் , தேவர்களின் இன்பம் பெருகுமாறும் , மேருமலையை வில்லாகப் பிடித்த சிவபெருமான் , அலைவீசுகின்ற கடல் பக்கங்களில் சூழ்ந்திருக்க , பெருமையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுவாராய் , கூந்தலுக்கு உவமையாகக் கூறப்படும் பொருள்களெல்லாம் தமக்கு அத்தகைய நிறமும் , அழகும் இல்லையே என்று வருத்தமுறும்படி அழகிய , கரிய கூந்தலையுடைய உமா தேவியின் கணவர் ஆவார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

தருக்கிய - இறுமாந்த . திரிபுரத்தவர்கள்தாம் உக - அழியவும் . பெருக்கிய - தேவர்க்கு இன்பத்தைப் பெருக்கவும் . சிலை - மேருவில் . பெற்றி - நன்மை . பொருகடல் - கரையை மோதும் கடல் . வினைத்தொகை . பொரு + கடல் எதுகைநோக்கியது . கருக்கிய குழல் - அம்பிகை குழலுக்கு . உவமைகூறும் பொருள்களையெல்லாம் வருத்திய குழல் . கருக்கிய - கருகும்படி செய்த ( வருத்திய என்றவாறு .) போர்க்கு அணிவகுத்துச் செல்லுதல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

நாகமும் வரையுமே நாணும் வில்லுமா
மாகமார் புரங்களை மறித்த மாண்பினர்
பூகமார் பொழிலணி பூந்த ராய்நகர்ப்
பாகமர் மொழியுமை பங்கர் காண்மினே.

பொழிப்புரை :

வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மேரு மலையை வில்லாகவும் கொண்டு , ஆகாயத்தில் திரிந்த திரிபுரங்களை அழித்த மாண்புடைய சிவபெருமான் , கமுக மரங்கள் நிறைந்த சோலைகளால் அழகுடன் திகழும் திருப்பூந்தராய் என்னும் திருத் தலத்தில் வெல்லப்பாகு போன்று இனிமையாகப் பேசுகின்ற உமா தேவியைப் பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . அவரைத் தரிசித்துப் பிறவிப்பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

நாகமும் வரையுமே நாணும் வில்லும் ஆக எனக் கொள்ள நிற்றலால் இது நிரனிறை . மாகம் ஆர் - ஆகாயத்துப் பொருந்திய . புரங்களை - திரிபுரங்களை . மறித்த - அவர் வழியிற் செல்லாது தடுத்துத் தொலைத்த . மாண்பினர் - மாட்சிமையுடையவர் . பூகம் - கமுகு . பாகம் ஆர்மொழி - இனிமை தங்கிய மொழி . பாகு + அமர் மொழி என்று பிரித்து , வெல்லப் பாகுபோலும் இனிமை பொருந்திய சொல் எனலே பொருந்தும் . ` பாகமார் ` என்ற பாடம் யாண்டுளது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வெள்ளெயி றுடையவவ் விரவ லார்களூர்
ஒள்ளெரி யூட்டிய வொருவ னாரொளிர்
புள்ளணி புறவினிற் பூந்த ராய்நகர்க்
கள்ளணி குழலுமை கணவர் காண்மினே.

பொழிப்புரை :

வெண்ணிறப் பற்களையுடைய அசுரர்களின் திரிபுரங்கள் , ஒளி பொருந்திய நெருப்பால் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் சிவபெருமான் . மின்னுகின்ற பறவைகளை உடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானார் தேன்கமழும் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார் . அப்பெருமானாரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

வெள் எயிறு உடைய - கரிய உடம்பில் வெள்ளைப் பற்கள் மிக வெண்மையாய்த் தோன்றுகையால் வெள் எயிறு உடைய . புறவு - பன்னிரு பெயர்களுள் ஒன்று . ஊரை எரியூட்டிய ஒருவனார் . ஒளிர் - மின்னுகிற . புள் - பறவை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

துங்கிய றானவர் தோற்ற மாநகர்
அங்கியில் வீழ்தர வாய்ந்த வம்பினர்
பொங்கிய கடலணி பூந்த ராய்நகர்
அங்கய லனகணி யரிவை பங்கரே.

பொழிப்புரை :

அசுரர்களின் நெடிய வடிவங்களைப் போன்று தோற்றத்தையுடைய பெரிய முப்புரங்களையும் , நெருப்பால் அழியுமாறு செய்த அக்கினிக் கணையை உடைய சிவபெருமான் , பொங்கும் கடலையுடைய அழகிய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் . அப்பெருமான் அழகிய கயல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியை ஒரு பாகமாக உடையவர் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப்பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

துங்கு இயல் தானவர் தோற்றம் மாநகர் - அசுரர்களின் தோற்றத்தையுடைய பெரிய புரங்களை . ஆய்ந்த - ஆராய்ந்து செலுத்திய . அம்கயல் அ ( ன் ) ன கணி அரிவை - அழகிய கயல்மீனை ஒத்த கண்ணியாகிய உமாதேவியார் ( உடையவர் .)

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

அண்டர்க ளுய்ந்திட வவுணர் மாய்தரக்
கண்டவர் கடல்விட முண்ட கண்டனார்
புண்டரீ கவ்வயற் பூந்த ராய்நகர்
வண்டமர் குழலிதன் மணாளர் காண்மினே

பொழிப்புரை :

சிவபெருமான் எல்லா அண்டத்தவர்களும் நன்மை அடையும் பொருட்டுத் திரிபுர அசுரர்களை மாய்த்தவர் . கடலில் தோன்றிய நஞ்சை உண்ட கருநிறக் கண்டத்தர் . தாமரை மலர்கள் பூத்துள்ள வயல்களையுடைய திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவர் . பூவிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு வண்டு அமர்கின்ற கூந்தலையுடைய உமாதேவியின் மணாளர் ஆவார் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

மாய்தர - மாய் - பகுதி . தர - துணைவினை . கண்டவர் - செய்தவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மாசின வரக்கனை வரையின் வாட்டிய
காய்சின வெயில்களைக் கறுத்த கண்டனார்
பூசுரர் பொலிதரு பூந்த ராய்நகர்க்
காசைசெய் குழலுமை கணவர் காண்மினே.

பொழிப்புரை :

சிவபெருமான் குற்றம் செய்த அரக்கனான இராவணனைக் கயிலை மலையின்கீழ் அடர்த்தவர் . கோபத்தால் பிற உயிர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளை எரித்த நீலகண்டர் . அந்தணர்கள் நிறைந்து விளங்குகின்ற திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் , வீற்றிருந்தருளும் அவர் காயாம்பூவைப் போன்ற கருநிறக் கூந்தலையுடைய உமாதேவியின் கணவராவார் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனைப் பெறுங்கள் .

குறிப்புரை :

மாசு இன் + அ அரக்கனை வரையின் வாட்டிய - பாவத்தையுடைய பாவியாகிய இராவணனைக் கயிலை மலையின்கீழ் வாடச்செய்த , காய்ச்சின - துன்புறுத்தும் கோபத்தையுடைய . கறுத்த - கோபித்த . கண்டனார் - கண்டத்தையுடையவர் . அரசன் குற்றத்தைக் கண்டித்தான் என்றதில் வரும் கண்டித்தல் என்பதுபோல , காசை - காயாம்பூ . செய் - உவமவாசகம் . மாசின - பெயரடியாகப் பிறந்த குறிப்புப் பெயரெச்சம் . அடுத்த அடியிற் காய்சினம் என வருதலால் முதலடியிலும் சினம் என்று பிரித்தல் சிறப்புடைத்தன்று . வரையின் - இன் ஏழனுருபில் வந்தது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

தாமுக மாக்கிய வசுரர் தம்பதி
வேமுக மாக்கிய விகிர்தர் கண்ணனும்
பூமக னறிகிலாப் பூந்த ராய்நகர்க்
கோமக னெழில்பெறு மரிவை கூறரே.

பொழிப்புரை :

தம் விருப்பம்போல் தேவர்கட்குத் துன்பம் செய்த அசுரர்களின் மூன்று நகரங்களை வெந்தழியுமாறு செய்த விகிர்தர் சிவபெருமான் . திருமாலும் , பிரமனும் அறிய ஒண்ணாதவர் . திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் அழகிய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர் . அவரைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

தாம் - தாங்கள் . முகம் ஆக்கிய - முகம்போற் சிறப்புடையதாகக் கொண்ட . வேம்முகம் ஆக்கிய - வேகும் இடமாகச்செய்த . விகிர்தர் - வேறுபட்ட தன்மையையுடையவர் . பூமகன் - பிரமன் . முகம் - முதலடியிற் சிறப்புடையது என்னும் பொருளிலும் . இரண்டாமடியில் இடம் என்னும் பொருளிலும் வந்தது . பூமகன் - இங்கு எண்ணும்மை தொக்கது . கோமகன் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

முத்தர வசுரர்கண் மொய்த்த முப்புரம்
அத்தகு மழலிடை வீட்டி னாரமண்
புத்தரு மறிவொணாப் பூந்த ராய்நகர்க்
கொத்தணி குழலுமை கூறர் காண்மினே.

பொழிப்புரை :

சிவபெருமான் மூன்று தரத்தினராகிய அசுரர்கள் மிகுந்த முப்புரங்களை நெருப்பில் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . சமணர்களாலும் , புத்தர்களாலும் அறிய ஒண்ணாதவர் . திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர் , பூங்கொத்துக்களால் அழகுபடுத்தப்பட்ட கூந்தலையுடைய உமாதேவியைத் தம் உடம்பின் ஒரு கூறாகக் கொண்டவர் . அப்பெருமானைத் தரிசித்துப் பிறவிப் பயனை அடையுங்கள் .

குறிப்புரை :

முத்தர அசுரர்கள் - மூன்று தரத்தினராகிய அசுரர்கள் மிகுந்த முப்புரம் . அ தகும் + அழல் + இடை + வீட்டினார் - அப்படிப் பட்ட தக்க நெருப்பின் மத்தியிற் சிக்கி அழியும்படி தொலைத்தவர் . கொத்து - பூங்கொத்து . இரும்பு வெள்ளி பொன் ஆகிய மூன்று கோட்டைகளை யுடையராதலால் முத்தர அசுரர் எனப்பட்டனர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புரமெரி செய்தவர் பூந்த ராய்நகர்ப்
பரமலி குழலுமை நங்கை பங்கரைப்
பரவிய பந்தன்மெய்ப் பாடல் வல்லவர்
சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே.

பொழிப்புரை :

முப்புரம் எரித்த சிவபெருமான் திருப்பூந்தராய் என்னும் திருத்தலத்தில் அடர்த்தியான கூந்தலையுடைய உமா தேவியை ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் . அப் பெருமானை ஞானசம்பந்தன் நவின்ற இம்மெய்ம்மைப் பதிகத்தால் போற்ற வல்லவர்கள் தலையானதாகக் கருதப்படுகின்ற சிவகதியை நிச்சயம் பெறுவர் .

குறிப்புரை :

பரம் - பாரம் . கூந்தல் ; அளகபாரம் எனப்படுவதால் , பரம்மலி குழல் எனப்பட்டது . மிக்க கூந்தல் என்பது பொருள் . சிரம்மலி - உயர்நிலையதாகிய சிவகதி . ஒவ்வொரு பாசுரத்திலும் திரிபுரத்தை எரித்தவர் , பூந்தராய் நகரில் வீற்றிருக்கும் உமாபதி என்று கூறிவந்து , திருக்கடைக் காப்பிலும் புரம் எரிசெய்தவர் பூந்தராய் நகர் பரமலிகுழலுமை நங்கை பங்கரைப் பரவிய பந்தன் மெய்ப்பாடல் வல்லவர் , சிரமலி சிவகதி சேர்தல் திண்ணமே எனத் தொகுத்துக் கூறியிருப்பது இப்பதிகத்துக் குரிய சிறப்பியல்பு .
சிற்பி