திருவெண்காடு


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மந்திர மறையவை வான வரொடும்
இந்திரன் வழிபட நின்ற எம்மிறை
வெந்தவெண் ணீற்றர்வெண் காடு மேவிய
அந்தமு முதலுடை யடிக ளல்லரே.

பொழிப்புரை :

பஞ்சாக்கர மந்திரத்தைத் தனி நடுப்பகுதியில் கொண்ட வேதங்களும் , தேவர்களும் , இந்திரனும் வழிபட வீற்றிருக் கின்ற எங்கள் இறைவனாய் , வெந்த வெண்ணீற்றினைத் திருமேனியில் பூசித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் அந்தமும் , ஆதியுமாகிய அடிகள் அல்லரோ ?.

குறிப்புரை :

ஸ்ரீ பஞ்சாட்சரமாகிய திவ்விய மந்திரத்தைத் தனி நடுப்பகுதியுள்ளதாகிய வேதங்களும் தேவர்களும் இந்திரனும் வழிபாடு புரிய எழுந்தருளிய எமது பதி . இது , முதல் இரண்டடிகளுக்கு உரை . இறுதியாம் பொருள் எவற்றினுக்கும் இறுதியானவரும் முதலாம் , பொருள் எவற்றிற்கும் முதலானவரும் ஆவர் . முதல் அடியில் வரும் எண் ஒடுச் சொல்லை மறையொடும் , இந்திரனொடும் ஒட்டுக . மந்திர மறைகளோடும் தேவர்களோடும் இந்திரனும் வழிபட நின்ற இறை . மறை அவை , இதில் அவை , பகுதிப் பொருள் விகுதி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

படையுடை மழுவினர் பாய்புலித் தோலின்
உடைவிரி கோவண முகந்த கொள்கையர்
விடையுடைக் கொடியர்வெண் காடு மேவிய
சடையிடைப் புனல்வைத்த சதுர ரல்லரே.

பொழிப்புரை :

இறைவர் மழுவைப் படையாக உடையவர் . பாய்கின்ற புலித்தோலை ஆடையாக உடையவர் . கோவணத்தை உகந்து அணிந்தவர் . இடபவடிவம் பொறிக்கப்பட்ட கொடியுடையவர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் சடையிலே கங்கையைத் தாங்கிய திறமையானவர் அல்லரோ ?

குறிப்புரை :

படையுடை மழுவினர் - மழுவைப் படையாக வுடையவர் . தோலின் உடை - தோலாகிய உடை , இங்கு இன் - தவிர் வழிவந்த சாரியை யென்பர் நச்சினார்க்கினியர் . ` முள்ளின் ஊசித்துன்ன ` - சீவக சிந்தாமணி . சடையில் புனல் வைத்த திறமையை யுடையன் . இதில் திறமை என் எனில் நீரானது உச்சியிலிருந்து கீழே வழிந்து ஒருவழி நில்லாமல் பரந்து ஓடிச்செல்லும் ; நிலத்துக்கு ஏற்ற இயல்பையுடையது . சுவையடையும் இயல்பினது , அதனை அடக்கித் திவலையாக்கிச் சடையில் நிலையாகவைத்தல் ஒரு திறமையேயாம் . அவ்வாறு செய்து பழகி அப்பழக்கத்தால் கீழ்நோக்கிப் பல்லாயிர நினைப்பாகப் பரவிச் சார்ந்ததன் வண்ணமாக விரிந்து ஓடும் என் மனத்தை அணு அளவிற்றாக்கித் தன் திருவடியை நினைக்க நிலைக்க வைத்த வல்லாளன் என்னும் கருத்து .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

பாலொடு நெய்தயிர் பலவு மாடுவர்
தோலொடு நூலிழை துதைந்த மார்பினர்
மேலவர் பரவுவெண் காடு மேவிய
ஆலம தமர்ந்தவெம் மடிக ளல்லரே.

பொழிப்புரை :

இறைவர் பாலொடு , நெய் , தயிர் மற்றும் பலவற்றாலும் திருமுழுக்கு ஆட்டப்படுபவர் . யானைத்தோலைப் போர்வையாகவும் , புலித்தோலை ஆடையாகவும் அணிந்தவர் . முப்புரி நூலணிந்த மார்பினர் , சிவஞானிகள் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கல்லால மரத்தின்கீழ் வீற்றிருந்து அறம் உரைத்த எம் தலைவர் அல்லரோ ?

குறிப்புரை :

தோலொடு நூலிழைதுதைந்த மார்பினர் . ஆலம் அது அமரும் - கல்லாலின் அடியில் அமரும் எம் அடிகள் . இனி நஞ்சை விரும்பியுண்ட எனினும் அமையும் . அது - பகுதிப்பொருள் விகுதி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

ஞாழலுஞ் செருந்தியு நறுமலர்ப் புன்னையுந்
தாழைவெண் குருகயல் தயங்கு கானலில்
வேழம துரித்தவெண் காடு மேவிய
யாழின திசையுடை யிறைவ ரல்லரே.

பொழிப்புரை :

புலிநகக் கொன்றையும் , செருந்தியும் , நறுமணமிக்க புன்னை மலர்களும் , தாழையும் , குருக்கத்தியும் விளங்கும் கடற்கரைச் சோலையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் , யானையின் தோலையுரித்த ஆற்றல் உடையவராயும் , யாழிசை போன்ற இனிமை உடையவராயும் உள்ள சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் அல்லரோ ?

குறிப்புரை :

ஞாழல் - புலிநகக்கொன்றை . ஞாழற்பூவும் , செருந்திப் பூவும் ( செருந்தி - செந்நிறப் பூவையுடைய ஒரு மரம் ,) புன்னைப்பூவும் ஆகிய இவைகள் விளங்கும் கடற்கரைச் சோலையில் உள்ள திருவெண்காடு மேவிய - யானையையுரித்த - இசையையுடைய - இறைவர் எனத் தனித் தனிக் கூட்டுக . ஞாழல் , செருந்தி இரண்டும் முதல் ஆகுபெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

பூதங்கள் பலவுடைப் புனிதர் புண்ணியர்
ஏதங்கள் பலவிடர் தீர்க்கு மெம்மிறை
வேதங்கண் முதல்வர்வெண் காடு மேவிய
பாதங்கள் தொழநின்ற பரம ரல்லரே.

பொழிப்புரை :

எம் இறைவர் , பூதகணங்கள் பல உடைய புனிதர் . புண்ணிய வடிவினர் . தம்மை வழிபடுபவர்களின் குற்றங்களையும் , துன்பங்களையும் தீர்த்தருளுபவர் . அவர் வேதங்களில் கூறப்படும் முதல்வர் . திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அவர்தம் பாதங்கள் அனைவராலும் தொழப்படும் நிலையில் விளங்கும் பரம்பொருள் அல்லவோ ?

குறிப்புரை :

ஏதம் - குற்றம் . ஏதங்களையும் பல இடர்களையும் தீர்க்கும் எமது பதி . வெண்காடு மேவி . பரமர் பாதங்களைத் தொழ என்பதற்கு அடியார் என வினைமுதல் வருவித்துரைக்கப்படும் . ` அடியார்கள் குடியாகப் பாதத்தைத் தொழநின்ற பரஞ்சோதி பயிலும் ` என்புழிப்போல . ( தி .2. ப .43. பா .5.) பரமர் - பரம்பொருள் , மேலான பொருள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

மண்ணவர் விண்ணவர் வணங்க வைகலும்
எண்ணிய தேவர்கள் இறைஞ்சும் எம்மிறை
விண்ணமர் பொழில்கொள்வெண் காடு மேவிய
அண்ணலை அடிதொழ அல்லல் இல்லையே.

பொழிப்புரை :

மண்ணுலகத்தோரும் , விண்ணுலகத்தோரும் , மற்றுமுள்ள தேவர்களும் தினந்தோறும் எங்கள் இறைவனை வழிபட்டுப் போற்றுகின்றனர் . வானளாவிய சோலைகளையுடைய திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானின் திருவடிகளை வணங்குபவர்கட்குத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

மண்ணவரும் விண்ணவரும் , ஏனை விண்ணவரும் தம்பொருட்டு எம்மிறையை வணங்குகின்றனர் . அவர்கள் திருவெண்காடு மேவிய அண்ணலைக் கடிது வணங்கிப் பிறவியறுக்க அறிகிலர் என்பது இப்பாடலிற் குறித்த பொருளாகும் . அது ` வாழ்த்துவதும் வானவர்கள் தாம்வாழ்வான் ` என்னும் திருவாசக ( தி .8 பா .20) த்தின் கருத்தாகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

நயந்தவர்க் கருள்பல நல்கி யிந்திரன்
கயந்திரம் வழிபடநின்ற கண்ணுதல்
வியந்தவர் பரவுவெண் காடுமேவிய
பயந்தரு மழுவுடைப் பரம ரல்லரே.

பொழிப்புரை :

விரும்பி வழிபடும் அடியவர்கட்கு வேண்டுவன வேண்டியவாறு அருளி , இந்திரனின் வெள்ளையானை வழிபட அதற்கும் அருள்புரிந்தவர் நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் ஆவார் . அனைவரும் அந்த இன்னருளை வியந்து போற்றும்படி திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பயந்தரு மழுப்படையுடைய பரமர் அல்லரோ ?

குறிப்புரை :

கயந்திரம் வழிபட :- கஜேந்திரம் பூஜைசெய்ய . யானை ( கஜங் ) களுக்குத் தலைமையுடையது கஜேந்திரம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மலையுட னெடுத்தவல் லரக்கன் நீள்முடி
தலையுட னெரித்தருள் செய்த சங்கரர்
விலையுடை நீற்றர்வெண் காடு மேவிய
அலையுடைப் புனல்வைத்த அடிகள் அல்லரே.

பொழிப்புரை :

கயிலைமலையை எடுத்த கொடிய அரக்கனாகிய இராவணனின் நீண்டமுடி , தலை , உடல் ஆகியவற்றை நெரித்து , பின் அவன் தவறுணர்ந்து சாமகானம் பாட , அருள் செய்த சங்கரர் , மதிப்புடைய திருநீற்றினைப் பூசியவர் . அலையுடைய கங்கையைச் சடையில் தாங்கித் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளும் பெருமான் அவர் அல்லரோ ?

குறிப்புரை :

விலையுடை நீற்றர் . அன்பே விலை . ஆநந்தமே பயன் . வைத்த - சடையில் வைத்த .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

ஏடவிழ் நறுமலர் அயனு மாலுமாய்த்
தேடவுந் தெரிந்தவர் தேர கிற்கிலார்
வேடம துடையவெண் காடு மேவிய
ஆடலை யமர்ந்தஎம் அடிகள் அல்லரே.

பொழிப்புரை :

பூவிதழ்களுடைய நறுமணம் கமழும் தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் திருமுடியையும் , திருஅடியையும் காணத்தேடியும் காண்பதற்கு அரியவராய் நெருப்புமலையாய் விளங்கியவரும் , பலபல வேடம் கொள்பவருமான இறைவன் திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்து திருநடனம் புரிதலை விரும்பிய அடிகள் அல்லரோ ?

குறிப்புரை :

ஏடு - பூ இதழ் . தேடவும் தெரிந்தவர் தேரகிற்கிலார் வேடம் உடைய திருவெண்காடு ஆடலை . அமர்ந்த - விரும்பிய . எம் அடிகள் எனத் தனித்தனிக் கூட்டுக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

போதியர் பிண்டியர் பொருத்தம் இல்லிகள்
நீதிகள் சொல்லியும் நினைய கிற்கிலார்
வேதியர் பரவுவெண் காடு மேவிய
ஆதியை யடிதொழ அல்லல் இல்லையே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணரும் பொருத்தம் இல்லாதவராய் , இறையுண்மையை உணர்த்தும் நீதிகளை எடுத்துரைத்தும் , நல்வாழ்வு இல்லாமையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதவர் ஆயினர் . எனவே அவர்களைச் சாராது , வேதம் ஓதும் அந்தணர்கள் பரவித் துதிக்கின்ற திருவெண்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்ற அனைத்துலகுக்கும் முதற்பொருளாகிய சிவபெருமான் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லையாம் .

குறிப்புரை :

நீதிகள் சொல்லியும் நினையகிற்கிலார் - சைவத்தின் உயர்வு முதலிய நீதிகளை எடுத்துரைத்தலும் நல்லூழ் இன்மையால் அவற்றை நினைத்துப் பார்த்தலும் செய்யாதார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

நல்லவர் புகலியுள் ஞான சம்பந்தன்
செல்வன்எம் சிவனுறை திருவெண் காட்டின்மேற்
சொல்லிய அருந்தமிழ் பத்தும் வல்லவர்
அல்லலோ டருவினை அறுதல் ஆணையே.

பொழிப்புரை :

பசுபுண்ணியம் , பதிபுண்ணியம் செய்த நல்லவர்கள் வசிக்கின்ற திருப்புகலியுள் அவதரித்த ஞானசம்பந்தன் , செல்வனாகிய எம் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவெண்காட்டின் மேல் பாடிய அருந்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் பக்தியோடு ஓதவல்லவர்களுடைய துன்பங்களோடு அவற்றிற்குக் காரணமான அருவினையும் அறும் என்பது நமது ஆணையாகும் .

குறிப்புரை :

பிறவித் துன்பங்கள் அவற்றிற்கு மூலகாரணமான தொலைத்தற்கரிய வினைகளோடும் விட்டொழியும் . நமது ஆணை - மேலும் மேலும் வரக்கடவதுடன் , வினையால் ஆனமையின் அல்ல லோடு அருவினையறுதல் ஆணை கூறியருளினார் .
சிற்பி