திருக்கொள்ளிக்காடு


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

நிணம்படு சுடலையி னீறு பூசிநின்
றிணங்குவர் பேய்களோ டிடுவர் மாநடம்
உணங்கல்வெண் டலைதனில் உண்ப ராயினும்
குணம்பெரி துடையர்நங் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

பிணங்களை எரிக்கும் சுடுகாட்டின் சாம்பலைப் பூசிப் பேய்களோடு பெரிய கூத்து ஆடுகின்ற இறைவர் , உலர்ந்த பிரமகபாலத்தைக் கையில் ஏந்திப் பலியேற்று உண்பர் . ஆயினும் அப்பெருமான் உயர்ந்த குணம் உடையவராய்த் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சுடலையில் எழும்பிய நீறு பூசிப் பேய்களோடு இணங்குவர் . அங்குப் பெரிய கூத்து ஆடுவர் . உலர்ந்த மண்டை யோட்டில் உண்பர் . ஆயின் அவரிடத்தில் என்ன குணம் உளதாவது என்னற்க ; உயர்ந்த குணம் எல்லாம் உடையர் என்க ` கோயில் சுடுகாடு கொல் புலித்தோல் நல்லாடை தாயுமிலி தந்தையிலி தான் தனியன் காணேடி ..... காயின் உலகனைத்தும் கற்பொடி காண் சாழலோ .`

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

ஆற்றநல் லடியிணை அலர்கொண் டேத்துவான்
சாற்றிய அந்தணன் தகுதி கண்டநாள்
மாற்றல னாகிமுன் னடர்த்து வந்தணை
கூற்றினை யுதைத்தனர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

நலம் தரும் இறைவனின் திருவடிகளை மலர்கொண்டு போற்றி வழிபட்ட மார்க்கண்டேயனின் வாழ்நாள் இறுதியை அறிந்து யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி மார்க்கண்டேயனை நெருங்கி வந்தடைந்த கூற்றுவனைக் காலால் உதைத்த இறைவர் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந் தருளுகின்றார் .

குறிப்புரை :

நல்ல திருவடிகளை மலர்கொண்டு முற்றப் பூசிப்பவனாய் . சாற்றிய - அபயம் என்று சொல்லிய . அந்தணன் - மார்க்கண்டேயர் . ஆற்ற ஏத்துவானாய்ச் சாற்றிய அந்தணன் என்க . தகுதி - இறுதி . மாற்றலன் ஆகி - யாவராலும் தவிர்க்க முடியாதவனாகி . வந்து அணை - வந்து அடைந்த . கூற்றினை உதைத்தனர் கொள்ளிக்காடர் . மாற்றுதல் - ` மாற்றேனெனவந்த கூற்றனை மாற்றி ` என்று திருவாசகத்திலும் வருதல் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

அத்தகு வானவர்க் காக மால்விடம்
வைத்தவர் மணிபுரை கண்டத் தின்னுளே
மத்தமும் வன்னியும் மலிந்த சென்னிமேல்
கொத்தலர் கொன்றையர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

தாம் வாழ்வான் வேண்டி வணங்கும் வானவர்களைக் காப்பதற்காகக் கொடிய விடத்தை உண்டு தம் கண்டத்தில் அடக்கிய சிவபெருமான் , ஊமத்தம் பூவும் , வன்னியும் அணிந்த சடைமுடியில் கொத்தாகக் கொன்றைமலர் சூடியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அத்தகு - அப்படிப்பட்ட . மால்விடம் - கொடிய விடத்தை , மால் என்ற சொல் இங்குக் கொடுமையென்னும் பொருளில் வந்தது . இப்பொழுது நீலமணி போற்காணப்படுவதாகிய கண்டத்தின் உட்பாகத்தில் வைத்தவர் . மத்தம் - பொன்னூமத்தை . மலிந்த - மிகுதி யாக அணியப்பட்ட . கொத்துக் கொத்தாக அலரும் கொன்றையை அணிந்தவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

பாவண மேவுசொன் மாலை யிற்பல
நாவணங் கொள்கையின் நவின்ற செய்கையர்
ஆவணங் கொண்டெமை யாள்வ ராயினும்
கோவணங் கொள்கையர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

யாப்பிலக்கணம் பொருந்துமாறு சொல்லைத் தொடுக்கும் மாலை போன்ற பாடல்கள் பலவற்றை நாநயத்துடன் நவிலுமாறு செய்தவர் இறைவர் . அவர் உயிர்களாகிய எங்களை அடிமை கொண்டு ஆள்பவராயினும் கோவணஆடை உடையவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பாவ ( ண் ) ணம் - பாட்டின் இலக்கணம் ( யாப்பு ). மேவு - பொருந்திய . சொல் மாலையில் பல - சொல்லைத் தொடுக்கும் மாலைபோன்ற பாடல்களிற் பலவற்றை . நாவணம் - நாவிற்குப் பொருந்து விதமாக . கொள்கையின் - விதிப்படி . நவின்ற - பாடிய ஆவணம் கொண்டு - அடிமை ஓலை எழுதி . எமை ஆள்வர் - எங்களையாட்கொள்பவர் . ஆயினும் , கோவணங் கொள்கையர் - கோவணம் உடையாகக் கொள்பவர் . அத்தகையர் அடியோங்களுக்கு யாது தரற்பாலர் என்பது குறிப்பெச்சம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

வாரணி வனமுலை மங்கை யாளொடும்
சீரணி திருவுருத் திகழ்ந்த சென்னியர்
நாரணி சிலைதனால் நணுக லாரெயில்
கூரெரி கொளுவினர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

கச்சணிந்த அழகிய முலையுடைய உமாதேவியோடு , சிறந்த அழகிய திருவுருவத்துடன் விளங்கும் சிவபெருமான் , நாண் பூட்டிய மேருமலையை வில்லாகக் கொண்டு பகைவர்களாகிய முப்புர அசுரர்களின் மதில்களை அக்கினியை அம்பின் நுனியாகக் கொண்டு கொளுத்தியவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சீர் அணி திருவுரு - சிறந்த அழகோடு கூடிய திருவுருவம் . நார் - நாரி , நாணி , நணுகலார் - பகைவர் . கூர் எரி - மிக்க நெருப்பு . கொளுவினார் - பற்றவைத்தார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

பஞ்சுதோய் மெல்லடிப் பாவை யாளொடும்
மஞ்சுதோய் கயிலையுள் மகிழ்வர் நாள்தொறும்
வெஞ்சின மருப்பொடு விரைய வந்தடை
குஞ்சரம் உரித்தனர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

செம்பஞ்சுக் குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள கயிலைமலையில் மகிழ்ந்திருந்து நாள் தோறும் தம்மை வழிபடுபவர்கட்கு அருள் பாலிக்கும் இறைவர் , கொடிய சினத்தோடும் , கொம்போடும் வேகமாக வந்தடைந்த யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அப்பெருமான் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

செம்பஞ்சுக்குழம்பு தோய்ந்த மெல்லிய பாதத்தை யுடைய பதுமை போன்ற அம்பிகை . மஞ்சு - மேகம் . கொடிய சினத்தோடும் மருப்போடும் வந்தடைந்த குஞ்சரம் என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

இறையுறு வரிவளை யிசைகள் பாடிட
அறையுறு கழலடி ஆர்க்க ஆடுவர்
சிறையுறு விரிபுனல் சென்னி யின்மிசைக்
குறையுறு மதியினர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

திருக்கையில் விளங்கும் அழகிய வளையல்களையுடைய உமாதேவி இசைபாட , திருவடிகளில் விளங்கும் வீரக்கழல்கள் ஒலிக்க , இறைவர் திருநடனம் புரிகின்றார் . அப் பெருமான் பாய்கின்ற கங்கையைத் தடுத்துச் சடையில் தாங்கி , கலைகுறைந்த சந்திரனையும் தலையில் சூடி , திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

இறை - முன்கை . உறும் - பொருந்திய . வரிவளை - கீற்றுக்களையுடைய வளையலையணிந்த உமாதேவியார் . வரிவளை என்பது அன்மொழித்தொகை . அறை உறு - ஒலித்தலையுடைய . சிறை உறு - தடுக்கப்படுதலையுடைய . குறையுறுமதி - கலை குறைந்த சந்திரன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எடுத்தனன் கயிலையை யியல்வ லியினால்
அடர்த்தனர் திருவிர லால்அ லறிடப்
படுத்தன ரென்றவன் பாடல் பாடலும்
கொடுத்தனர் கொற்றவாள் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

தன்னுடைய வலிமையினால் கயிலைமலையை அப்புறப்படுத்த எடுத்த இராவணனை , தம் காற்பெரு விரலையூன்றி அம்மலையின்கீழ் அடர்த்து அவறும்படி செய்ய , இராவணன் தவறுணர்ந்து , தன்னை வருத்திய சிவனைப் போற்றிச் சாமகானம் பாட , இறைவர் இரங்கி வீரவாளை அருளினார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

இயல் - தனக்கு உள்ள . வலியினால் - வலிமையினால் . அலறிடத் திருவிரலால் அடர்த்தனர் என்க . ` நம்மைச் சிவன் வருத்தினன் ` என்று தன்னுள் நினைத்து . அவன் - அவ்விராவணன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

தேடினா ரயன்முடி மாலுஞ் சேவடி
நாடினா ரவரென்று நணுக கிற்றிலர்
பாடினார் பரிவொடு பத்தர் சித்தமும்
கூடினார்க் கருள் செய்வர் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

பிரமன் திருமுடியினையும் , திருமால் திருவடியையும் தேட , அவர்களால் எப்பொழுதும் அணுகமுடியாதவராய் விளங்கும் சிவபெருமான் , பக்தர்கள் மனம் ஒன்றி அன்பால் அகம் குழைந்து பாட அருள்செய்வார் . அப்பெருமானார் திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அயன்முடி , மால் சேவடி , தேடினார் என்க . தேடினவர்களாகிய அவர்களால் எப்பொழுதும் அணுக முடியாதவராயிருப்பர் . அன்போடு பாடியவர்களாய் மனமும் ஒருமைப்பட்ட பத்தர்கட்கு நணுகுபவராய் இருப்பதன்றி அருளும் செய்வர் திருக்கொள்ளிக்காடர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

நாடிநின் றறிவில்நா ணிலிகள் சாக்கியர்
ஓடிமுன் னோதிய வுரைகள் மெய்யல
பாடுவர் நான்மறை பயின்ற மாதொடும்
கூடுவர் திருவுருக் கொள்ளிக் காடரே.

பொழிப்புரை :

இறையுண்மையை உணரும் அறிவில்லாத நாணமற்ற சமணரும் , புத்தர்களும் முனைந்து சொல்லும் உரைகள் மெய்யானவை அல்ல . அவர்களைச் சாராதுவிட்டு , நான்கு வேதங்களை அருளிய சிவபெருமான் , நன்கு பழகிய உமாதேவியோடு திருக்கொள்ளிக்காடு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் திருக்கோலத்தைக் கண்டு தரிசித்து உய்தி அடையுங்கள் .

குறிப்புரை :

அறிவில் நாண் இலிகள் - அறிவும் நாணமும் இல்லாதவர் . ஆடையின்றி யிருக்கும் துறவிகளை நாணிலிகள் என்றார் . ` நாணமும் உடையும் நன்கனம் நீத்து ` என்பது மணி மேகலை . அவர் உரைகள் அனைத்தும் பொய் . அவற்றை விட்டு நான்மறை பாடிய , மாதோடும் கூடியிருப்பவராகிய கொள்ளிக்காடர் உளார் . ` அவரைச் சார்ந்து உய்தி கூடுங்கள் ` என்பது குறிப்பெச்சம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

நற்றவர் காழியுண் ஞானசம் பந்தன்
குற்றமில் பெரும்புகழ்க் கொள்ளிக் காடரைச்
சொற்றமி ழின்னிசை மாலை சோர்வின்றிக்
கற்றவர் கழலடி காண வல்லரே.

பொழிப்புரை :

நல்தவத்தோர் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , குற்றமற்ற பெரும்புகழுடைய திருக்கொள்ளிக்காடு என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை , அழகு தமிழில் , இன்னிசையோடு பாடிய இப்பாமாலையைத் தளராது கற்று ஓத வல்லவர்கள் அப்பெருமானின் திருவடிகளைக் காணும் பேறு பெறுவார்கள் .

குறிப்புரை :

நல்ல தவத்தைச் செய்தவர்களையுடைய சீகாழி . குற்றமில் பெரும் புகழ்க் கொள்ளிக்காடர் :- இறைவன் புகழே புகழ் . ஏனையோர் புகழ் அனைத்தும் பொய்ப்புகழ் என்பதாம் . ` இறைவன் பொருள் சேர் புகழ் ` என்ற திருக்குறட் பரிமேலழகருரையானும் உணர்க .
சிற்பி