திருவிசயமங்கை


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மருவமர் குழலுமை பங்கர் வார்சடை
அரவமர் கொள்கையெம் அடிகள் கோயிலாம்
குரவமர் சுரபுன்னை கோங்கு வேங்கைகள்
விரவிய பொழிலணி விசய மங்கையே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை ஒருபாகத்தில் கொண்ட , நீண்ட சடையில் பாம்பணிந்த சிவபெருமான் எழுந்தருளியுள்ள கோயில் , குரவம் , சுரபுன்னை , கோங்கு , வேங்கை ஆகிய மரங்கள் நிறைந்து விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருவிசயமங்கை ஆகும் .

குறிப்புரை :

மரு - வாசனை . தெய்வக் கற்புடைய அம்பிகையின் கூந்தல் இயற்கை மணம் கமழ்வது ஆதலால் ` மரு அமர் குழல் உமை ` என்றார் . வார்சடை ...... எம் அடிகள் - நெடிய சடையின் கண்ணே பாம்பையும் விரும்பத்தக்க கொன்றை மாலையையும் உடைய எம் அடிகள் . குரவும் ஏனைய மரங்களும் கலந்தபொழில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

கீதமுன் னிசைதரக் கிளரும் வீணையர்
பூதமுன் னியல்புடைப் புனிதர் பொன்னகர்
கோதனம் வழிபடக் குலவு நான்மறை
வேதியர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

கீதங்களை முன்னே இசைக்க விளங்கும் வீணையினை உடையவரும் , பூதகணங்கள் சூழ விளங்கும் புனிதரான சிவபெருமானின் பொன்னகர் என்பது , இடபதேவர் வழிபட விளங்குவதும் , நான்கு வேதங்களையும் ஓதும் அந்தணர்கள் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . கோதனம் வழிபட - பசுக்கூட்டங்கள் வழிபட என்றும் பொருள் உரைப்பர் . ஒரு காலத்தில் இவ்வூர் கோவந்த புத்தூர் என வழங்கப்பட்டதாகக் கூறுவர் .

குறிப்புரை :

இசைப்பாட்டு முன்னே இசைக்க விளங்கும் வீணையையுடையர் என்பது முதலடியின் பொருள் . பூதம் ... புனிதர் - பூதங்கள் முன்னால் தம்மைச் சூழ நடந்துவரச்செல்லும் தூயோர் . கோதனம் - பசு . இங்கே இடபதேவரைக் குறிக்கும் . ` புடைமலிந்த பூதத்தின் பொலிவு தோன்றும் ` ` வெள்விடைக் கருள்செய் விசய மங்கை ` என்னும் அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

அக்கர வரையினர் அரிவை பாகமாத்
தொக்கநல் விடையுடைச் சோதி தொன்னகர்
தக்கநல் வானவர் தலைவர் நாள்தொறும்
மிக்கவர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

உருத்திராக்கத்தையும் , பாம்பையும் அணிந்த இடுப்பையுடையவரும் , உமாதேவியை ஒரு பாகமாகக் கொண்ட வரும் , சிறந்த நல் இடபத்தை வாகனமாக உடைய சோதி வடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமை வாய்ந்த நகர் , தகுதியுடைய நல்ல தேவர்களும் , அவர்களுடைய தலைவர்களும் நாள்தோறும் வணங்கிப் போற்றுகின்ற திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் . அக்கு - உருத்திராக்கம் . இதனை ` அக்கு மாலைகொடங்கையி வெண்ணுவார் ` ( தி .3 ப .307 பா .3) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கால் அறிக .

குறிப்புரை :

அக்கு அரவு அரையினர் - அக்குப் பாசியையும் பாம்பையும் அணிந்த இடுப்பை உடையவர் . அரை - அளவையாகு பெயர் . சோதி - சிவனுக்கு ஒரு பெயர் . வானவர் ..... மிக்கவர் - வான வரும் அவர்கள் தலைவராகிய இந்திரன் , பிரமன் , திருமால் முதலியோரும் அவரினும் மிக்க அடியார்களும் . தொழுது எழு விசய மங்கையே சோதி தொல் நகர் . அக்கு - எலும்பும் , உருத்திராக்கமும் ஆம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

தொடைமலி யிதழியுந் துன்னெ ருக்கொடு
புடைமலி சடைமுடி யடிகள் பொன்னகர்
படைமலி மழுவினர் பைங்கண் மூரிவெள்
விடைமலி கொடியணல் விசய மங்கையே.

பொழிப்புரை :

கொன்றை மாலையும் , நெருக்கமாகத் தொடுக்கப் பட்ட எருக்க மாலையும் பக்கங்களிலே விளங்கும் சடைமுடியுடைய அடிகளாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் அழகிய நகரம் , மழுவை ஆயுதமாக உடையவரும் , பசிய கண்களையுடைய வலிமை யுடைய வெண்ணிற எருதுவை கொடியாக உடைய சிவபெருமானின் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இதழி - கொன்றை . துன் - நெருங்கிய . எருக்கு - வெள் எருக்கம் பூமாலை . புடை - பாகம் . படை மலி மழு - ` படைமலிந்த மழு ` என அப்பர் மூர்த்திகள் திருவாக்கிலும் இத்தொடர் வருதல் காண்க . மூரி - வலிமை . வெள்விடை . மூரி என்ற சொல் மலையாளத்தில் - எருத்துக்கு வழங்கும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

தோடமர் காதினன் துதைந்த நீற்றினன்
ஏடமர் கோதையோ டினித மர்விடம்
காடமர் மாகரி கதறப் போர்த்ததோர்
வேடம துடையணல் விசய மங்கையே.

பொழிப்புரை :

இறைவன் இடப்பாகத்தில் தோடணிந்த காதினன் . நன்கு குழையத் திருநீறு பூசிய மேனியன் . காட்டிலே வசிக்கின்ற பெரிய யானை கதறும்படி அதன் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட ஒப்பற்ற திருக்கோலத்தையுடைய அண்ணலான சிவபெருமான் , பூவிதழ்களை அணிந்த கூந்தலையுடைய உமாதேவியோடு இனிது வீற்றிருக்கும் இடம் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஏடு - பூ இதழ் . கோதை - கூந்தல் , ஏடு அமர் கோதை - உமாதேவியார் ; அன்மொழித்தொகை . பன் மொழித் தொடர் . மாகரி கதறப் போர்த்தது , இங்கு ( கதற ) உரித்து என ஒரு சொல் வருவிக்க . கரி போர்த்தது ஓர் வேடம் , யானைத்தோலைப் போர்த்த கோலம் . அ ( ண் ) ணல் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

மைப்புரை கண்ணுமை பங்கன் வண்டழல்
ஒப்புரை மேனியெம் முடைய வன்னகர்
அப்பொடு மலர்கொடங் கிறைஞ்சி வானவர்
மெய்ப்பட வருள்புரி விசய மங்கையே.

பொழிப்புரை :

நீலோற்ப மலர் போன்ற கண்ணுடைய உமா தேவியை ஒரு பாகத்தில் கொண்டவன் இறைவன் . சிறந்த நெருப்புப் போன்ற திருமேனியுடையவன் . எம்மை ஆளும் அவரின் நகர் நீரும் , மலரும் கொண்டு தேவர்கள் உண்மையாக வழிபட அவர்களுக்கு அருள்புரிந்த திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் . பூவும் , நீரும் கொண்டு அன்புடன் வழிபடுபவர்களின் பூசையை ஏற்று இறைவன் அருள் செய்வான் என்று கூறுவது அன்பில்லாதவர்களின் பூவையும் , நீரையும் இறைவன் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதைப் புலப்படுத்தும் . ` பொக்கம் மிக்கவர் பூவும் நீரும் கண்டு நக்கு நிற்பர் அவர்தமை நாணியே ` ( தி .5 ப .90 பா .9) என்ற திருநாவுக்கரசரின் திருவாக்கை இங்கு நினைவுகூர்க .

குறிப்புரை :

மை - கருமை - கரிய நீலோற்பல மலருக்கு ஆகுபெயர் . நீலோற்பல மலரையொக்கும . கண் உமை - கண்களையுடைய உமாதேவியார் . வண்தழல் - சிறந்த நெருப்பை . ஒப்பு உரை மேனி ஒப்பாக உரைக்கும் உருவத்தையுடைய . எம் உடையவன் - எம்மை ஆளாக உடையவன் . அப்பு - நீர் . இறைஞ்சி - மெய்ப்பட வணங்கி , உண்மையான தியானத்திலிருக்க . ` மைப்பயந்த வொண்கண் ` ( பூம்பாவைத் திருப்பதிகம் ) என்றதில் கண்ணின் கருமைக்கு ஒப்பாகாமையால் மை அஞ்சியதாதலின் மையைப் போன்ற கரியகண் எனலுமாம் . பயன்பட்ட எனின் பொருந்தாது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

இரும்பொனின் மலைவில்லின் எரிச ரத்தினால்
வரும்புரங் களைப்பொடி செய்த மைந்தனூர்
சுரும்பமர் கொன்றையும் தூய மத்தமும்
விரும்பிய சடையணல் விசய மங்கையே.

பொழிப்புரை :

பெரிய மேருமலையாகிய வில்லினால் எய்யப்பட்ட நெருப்பாகிய அம்பினால் திரிபுரங்களைப் பொடிசெய்த பெரும் வீரமுடையவன் இறைவன் . வண்டுகள் அமர்கின்ற கொன்றை மலர் மாலையையும் , தூய ஊமத்தை மலரையும் விரும்பி அணிந்த சடைமுடியுடைய தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

இரும் பொ ( ன் ) னின் மலைவி ( ல் ) லின் - பெரிய பொன்மலை ( மேரு ) வில்லினால் . எரி - நெருப்பாகிய சரத்தினால் ( அம்பினார் ) திரிபுரமெரித்த அம்பின் நுனிப்பாகம் தீக்கடவுளாய் இருந்தமையால் ` எரி சரம் ` எனப்பட்டது . அ ( ண் ) ணல் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

உளங்கைய இருபதோ டொருபதுங் கொடாங்
களந்தரும் வரையெடுத் திடும்அ ரக்கனைத்
தளர்ந்துட னெரிதர வடர்த்த தன்மையன்
விளங்கிழை யொடும்புகும் விசய மங்கையே.

பொழிப்புரை :

தன்னுடைய வழியில் இம்மலை தடுக்கின்றது என்று மனம் கசந்து , இருபது தோள்களும் , பத்துத் தலைகளும் கொண்டதால் தான் வலிமையுடையவன் என்று எண்ணி , எடுத்தற்கு அரிய கயிலை மலையினைப் பெயர்த்தெடுக்க முயன்ற அரக்கனான இராவணன் தளர்ந்து உடல் நெரியும்படி அடர்த்த தன்மையுடைய சிவபெருமான் , ஒளிவீசும் ஆபரணங்களை அணிந்த உமாதேவியோடு வீற்றிருந் தருளுவது திருவிசயமங்கை என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

உளம் கைய ( இம்மலை செல்லுதற்குத் தடையாயிருந்த தென்று ) மனம் வெறுக்க . அளந்து - தன் இருபது தோளும் பத்துத் தலையும் கொண்ட தன் வலிமையை அளந்து தெரிந்துகொண்டு . அருவரை - எடுத்தற்கரிய கயிலைமலையை . விளங்கு இழை - ( அம்மையாரால் அணியப்பெற்றதால் ) விளங்கும் இழை . ( அணி ) யை யுடைய அம்மையார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

மண்ணினை யுண்டவன் மலரின் மேலுறை
அண்ணல்கள் தமக்களப் பரிய அத்தனூர்
தண்ணறுஞ் சாந்தமும் பூவு நீர்கொடு
விண்ணவர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

மண்ணினை உண்ட திருமாலும் , தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் அளத்தற்கரிய தலைவனான சிவபெருமானது ஊர் , குளிர்ச்சி பொருந்திய நறுமணம் கமழும் சந்தனமும் , பூவும் நீரும் கொண்டு விண்ணவர் தொழுது போற்றும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இப்பாடலின் முற்பகுதிக்குத் திருமால் பிரமர்கள் என்பது பொருள் . அத்தன் - தலைவன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கஞ்சியுங் கவளமுண் கவணர் கட்டுரை
நஞ்சினுங் கொடியன நமர்கள் தேர்கிலார்
செஞ்சடை முடியுடைத் தேவன் நன்னகர்
விஞ்சையர் தொழுதெழு விசய மங்கையே.

பொழிப்புரை :

கஞ்சி உண்ணும் புத்தர்களும் , கவனமாக உணவு உண்ணும் சமணர்களும் உரைக்கின்ற கருத்துக்கள் நஞ்சினும் கொடியனவாகும் . நம்மவர்கள் அவற்றை ஏற்றுக் கொள்ளார் . சிவந்த சடைமுடியுடைய தேவாதி தேவனின் நல்ல நகரம் வித்தியாதரர்கள் தொழுது வணங்கும் திருவிசயமங்கை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கவணர் - மாறுபட்ட தன்மையை யுடையவர்கள் , வட சொல் . கஞ்சியும் கவளமும் உண்பவர் , முறையே சமணரும் புத்தரும் ஆவார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

விண்ணவர் தொழுதெழு விசய மங்கையை
நண்ணிய புகலியுள் ஞானசம் பந்தன்
பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர்
புண்ணியர் சிவகதி புகுதல் திண்ணமே.

பொழிப்புரை :

விண்ணவர்கள் தொழுது வழிபடும் திருவிசய மங்கை என்னும் திருத்தலத்தை அடைந்து , திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தழிழ்ப் பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் சிவபுண்ணியச் செல்வர்களாவர் . அவர்கள் சிவகதி அடைவது உறுதியாகும் .

குறிப்புரை :

ஞானசம்பந்தன் பண்ணிய செந்தமிழ் பத்தும் வல்லவர் . சிவ புண்ணியச் செல்வர் ஆவர் . அவர்கள் சிவாநந்தப் பெரு வாழ்வு அடைவது திண்ணம் .
சிற்பி