திருவைகல் மாடக்கோயில்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

துளமதி யுடைமறி தோன்று கையினர்
இளமதி யணிசடை யெந்தை யாரிடம்
உளமதி யுடையவர் வைக லோங்கிய
வளமதி தடவிய மாடக் கோயிலே.

பொழிப்புரை :

இறைவன் , துள்ளிக்குதிக்கும் இயல்புடைய மான்கன்றை ஏந்தியுள்ள திருக்கரத்தினன் . இளம்பிறையை அணிந்துள்ள சடையன் . எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது சிவஞானிகள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , அழகிய சந்திரனை வருடுமளவு ஓங்கி உயர்ந்துள்ள திருமாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

து ( ள் ) ளமதியுடைமறி - துள்ளிக் குதிக்கக் கருத்து உடையமான் கன்று . உளம் - உள்ளம் . வைகல் - தலத்தின் பெயர் . மாடக்கோயில் ஆலயத்தின் பெயர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மெய்யக மிளிரும்வெண் ணூலர் வேதியர்
மையகண் மலைமக ளோடும் வைகிடம்
வையக மகிழ்தர வைகல் மேற்றிசைச்
செய்யகண் வளவன்முன் செய்த கோயிலே.

பொழிப்புரை :

இறைவர் ஒளிர்கின்ற முப்புரிநூல் அணிந்துள்ளவர் . வேதத்தை அருளிச்செய்தவர் . அவர் , மை தீட்டிய கரிய கண்ணுடைய மலைமகளான உமாதேவியை உடனாகக் கொண்டு வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூவுலகத்தார் மகிழும்படி திருவைகல் என்னும் திருத்தலத்தில் மேற்குத் திசையில் , சிவந்த கண்ணுடைய கோச்செங்கட் சோழ மன்னனால் முற்காலத்தில் எழுப்பப்பட்ட மாடக்கோயிலாகும் .

குறிப்புரை :

மெய் அகம் - உடம்பினிடத்தில் . மிளிரும் - விளங்குகின்ற - வேதியர் - வேதத்தாற் பிரதிபாதிக்கப்படுபவர் . செய்ய கண் வளவன் - கோச்செங்கண்ணன் என்னும் சோழ அரசர் . கோச்செங்கட் சோழ நாயனார் வரலாற்றை அவர் மாடக்கோயில் எழுபது கோடியமையும் தலவரலாற்றில் அறிக . கோச் செங்கட்சோழ நாயனார் பெருமையைத் திருநாவுக்கரசு நாயனார் ஐந்தாம் திருமுறையிலும் , ஆறாந் திருமுறையிலும் சுந்தரமூர்த்தி நாயனார் ஏழாந் திரு முறையிலும் அருளினமை காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

கணியணி மலர்கொடு காலை மாலையும்
பணியணி பவர்க்கருள் செய்த பான்மையர்
தணியணி யுமையொடு தாமும் தங்கிடம்
மணியணி கிளர்வைகன் மாடக் கோயிலே.

பொழிப்புரை :

வேங்கைமரத்தின் அழகிய மலர்களைக் கொண்டு காலையும் , மாலையும் வழிபாடு செய்பவர்கட்கு அருள்செய்யும் தன்மையுடைவர் இறைவர் . அவர் குளிர்ந்த அருளையே தம் வடிவ மாகக் கொண்டு உமாதேவியோடு தாமும் வீற்றிருந்தருளும் இடமாவது இரத்தினங்களால் அழகுபடுத்தப்பட்ட திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக்கோயிலாகும் .

குறிப்புரை :

கணி - கண்ணி , அதே குறிக்கோளாகக் கருதி . அணி - அழகிய . பணி - திருப்பணியாகக்கொண்டு . அணிபவர்க்கு - காலையும் மாலையும் அணிமலர் கொணர்ந்து அணிபவர்களுக்கு . அருள் செய்த . பான்மையர் - தன்மையுடையவர் . தணி - ( தண் + இ ) குளிர்ந்த அருள் . அணி - தன் வடிவாகக்கொண்ட உமை . மணி அணிகிளர் - இரத்தினங்களால் அழகு விளங்குகின்ற வைகலில் . மாடக்கோயில் , பான்மையர் உமையொடும் தங்கும் இடம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

கொம்பியல் கோதைமுன் அஞ்சக் குஞ்சரத்
தும்பிய துரிசெய்த துங்கர் தங்கிடம்
வம்பியல் சோலைசூழ் வைகல் மேற்றிசைச்
செம்பியன் கோச்செங்க ணான்செய் கோயிலே.

பொழிப்புரை :

பூங்கொம்பு போன்ற மெல்லியலாளான உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்த மேன்மையுடையவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத்திசையில் கோச்செங்கட் சோழன் எழுப்பிய மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

கொம்பு இயல் கோதை - ஸ்தலத்து அம்பிகையின் பெயர் . பூங்கொம்பு அசைவதுபோல் நடக்கின்ற அம்பிகை ; கோதை - பெண் . குஞ்சரத்தும்பி - இருபெயர் ஒட்டுப் பண்புத்தொகை . துங்கர் - மேலானவர் . வம்பு இயல் - வாசனையையுடைய சோலை சூழ்ந்த தலத்துக்கு மேற்றிசையிலுள்ள கோயில் . அடுத்த பாடலிலும் இக் குறிப்பு வருதல் காண்க . செம்பியன் - சோழன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

விடமடை மிடற்றினர் வேத நாவினர்
மடமொழி மலைமக ளோடும் வைகிடம்
மடவனம் நடைபயில் வைகல் மாநகர்க்
குடதிசை நிலவிய மாடக்கோயிலே.

பொழிப்புரை :

இறைவர் பாற்கடலில் தோன்றிய நஞ்சை அடைத்து வைத்துள்ள கண்டத்தினர் . வேதங்களை ஓதும் நாவினர் . அவர் , இனிய மொழிகளை மென்மையாகப் பேசுகின்ற மலைமகளான உமாதேவி யோடு வீற்றிருந்தருளும் இடம் , இள அன்னப்பறவைகள் நடை பயிலும் திருவைகல் என்னும் பெருநகரின் மேற்குத்திசையில் நிலவும் மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

விடம் அடைமிடற்றினர் - விடந்தங்கிய கழுத்தை யுடையவர் . வேதம் நாவினர் - வேதத்தைப்பாடும் நாவினை யுடையவர் . மடம்மொழி - குதலைச் சொல்லையுடைய . மலைமகள் . மட அனம் - இளம் அன்னப் பறவைகள் . நடைபயில் - மாதர் நடையைப் பழகுகின்ற . நிலவிய - விளங்குகின்ற , மாடக்கோயில் துங்கர் தங்குமிடம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

நிறைபுனல் பிறையொடு நிலவு நீள்சடை
இறையவர் உறைவிடம் இலங்கு மூவெரி
மறையொடு வளர்வுசெய் வாணர் வைகலில்
திறையுடை நிறைசெல்வன் செய்த கோயிலே.

பொழிப்புரை :

புனிதமான கங்கையையும் , பிறைச்சந்திரனையும் அணிந்துள்ள நீண்ட சடைமுடியுடைய இறைவர் வீற்றிருந்தருளும் இடமாவது , மூவகை அக்கினிகளை வேதங்களோடு வளர்க்கின்ற அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , சிற்றரசர்கள் கப்பம் கட்ட நிறைந்த செல்வனாக விளங்கும் கோச்செங்கட்சோழன் என்ற மாமன்னன் கட்டிய மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

நிலவும் நீள்சடை . மூஎரி மறையொடு வளர்வு செய்வாணர் - மூவகை அக்கினிகளை - வேதத்தினோடு வளர்க்கின்றவர் . எரிவாணர் - அக்கினியில் வாழ்பவர் ; வாணர் . ( வாழ் + க் + அர் ) திறை உடை நிறை செல்வன் - அரசர்கட்டும் கப்பத்தையுடைய நிறைந்த செல்வன் ; கோச்செங்கட் சோழ நாயனார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

எரிசரம் வரிசிலை வளைய ஏவிமுன்
திரிபுர மெரிசெய்த செல்வர் சேர்விடம்
வரிவளை யவர்பயில் வைகல் மேற்றிசை
வருமுகில் அணவிய மாடக் கோயிலே.

பொழிப்புரை :

அக்கினியாகிய அம்பை , மேருமலையை நீண்ட வில்லாக வளைத்துச் செலுத்தி முற்காலத்தில் திரிபுரங்களை எரி யுண்ணுமாறு செய்த செல்வராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடமாவது , வரிவளையல்கள் அணிந்த பெண்கள் பழகுகின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தின் மேற்குத் திசையில் விரிந்துள்ள மேகத்தைத் தொடும்படி ஓங்கியுள்ள மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

அக்கினியாகிய அம்பை . வரிசிலை வளைய - நீண்ட வில்லை வளைத்து . ஏவி - செலுத்தி . திரிபுரம் எரி செய்த செல்வர் என்பது இப்பாடலின் முற்பகுதிக்குப் பொருள் . வரிவளையவர் - கீற்றுக்களையுடைய வளையணிந்த மகளிர் . வரும் முகில் அணவிய - படர்ந்து வருகின்ற மேகங்கள் அளாவிய சோதியாரிடம் மாடக்கோயில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

மலையன இருபது தோளி னான்வலி
தொலைவுசெய் தருள்செய்த சோதி யாரிடம்
மலர்மலி பொழிலணி வைகல் வாழ்வர்கள்
வலம்வரு மலையன மாடக் கோயிலே.

பொழிப்புரை :

மலை போன்ற இருபது தோள்களையுடைய இராவணனது வலிமையை அழித்து , பின்னர் அவன் சாம கானம் பாடிப் போற்ற அவனுக்கு அருள் செய்த சோதியாகிய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது , மலர்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய திருவைகலில் வாழ்கின்றவர்கள் வலம் வந்து வணங்கும் மலை போன்ற மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

அன - அன்ன - போன்ற . வலி தொலைவு செய்து அருள் செய்த - வலிமையைத் தொலைத்து மீள அவனுக்கே அருளும் செய்த ( சோதியார் ) என்பது இரண்டாம் அடியின் பொருள் . வலம் வந்து வணங்குகின்ற மலையை ஒத்த மாடக்கோயில் என்பது நான்காம் அடியின் பொருள் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

மாலவன் மலரவன் நேடி மால்கொள
மாலெரி யாகிய வரதர் வைகிடம்
மாலைகொ டணிமறை வாணர் வைகலில்
மாலன மணியணி மாடக் கோயிலே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் இறைவனின் அடிமுடி களைத் தேடியும் காணமுடியாது மயக்கம் கொள்ள , நெருப்பு மலையாய் நின்ற , வழிபடுபவர்கட்கு வேண்டிய வரங்களை அளிக்கவல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , பூமாலைகளை இறைவனுக்கு அணிவித்து , வேதங்களை ஓதி வழிபாடு செய்யும் அந்தணர்கள் வாழ்கின்ற திருவைகல் என்னும் திருத்தலத்தில் , மேகம் போலும் நிறத்தையுடைய நீலமணிகளால் அழகுபடுத்தப்பட்ட மாடக்கோயில் ஆகும் .

குறிப்புரை :

மால் - ( அவன் ) திருமால் . மால்கொள்ள - மயக்கம் கொள்ள . மால் எரி ஆகிய - நெருப்பு ( மலை ) ஆகிய . வரதர் - சிவபெருமானுக்கொரு பெயர் . வேண்டிய வரங்களை அளிக்க வல்லவர் , சிவபெருமானொருவனேயாவர் ; ஏனையர் , அத்தகையர் அல்லர் . மறைவாணர் - மறையால் வாழ்பவர் ; அந்தணர் . மால் அ ( ன் ) ன மணி அணிமாடம் - மேகம்போலும் நிறத்தையுடைய நீலமணிகளாலும் அழகுபடுத்தப் பெற்ற மாடக்கோயில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

கடுவுடை வாயினர் கஞ்சி வாயினர்
பிடகுரை பேணிலார் பேணு கோயிலாம்
மடமுடை யவர்பயில் வைகல் மாநகர்
வடமலை யனையநன் மாடக் கோயிலே.

பொழிப்புரை :

கடுக்காயைத் தின்னும் வாயுடையவர்களும் , கஞ்சி குடிக்கும் வாயுடையவர்களுமான சமணர்களையும் , புத்தர்களின் பிடகநூலையும் பொருட்படுத்தாத சிவனடியார்கள் போற்றும் கோயிலாவது , மடம் என்னும் பண்புடைய மகளிர் பழகுகின்ற திருவைகல் என்னும் மாநகரில் மேருமலையை ஒத்த சிறப்புடைய நன்மாடக் கோயில் ஆகும் .

குறிப்புரை :

கடு - உடைவாயினர் - கடுக்காயைத் தின்பவர் ( புத்தர் ). கஞ்சி வாயினர் - கஞ்சியைக் குடிப்போர் ( சமணர் ). இவர்கள் சொல்லப்படுகின்ற திரிபிடகம் முதலிய அவர்கள் சமய நூல்களைப் பொருட்படுத்தாதவராகிய சிவனடியார்கள் பாராட்டும் கோயில் . வட மலை - மேருமலை ( போன்ற ) மாடக்கோயிலாம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

மைந்தன திடம்வைகல் மாடக் கோயிலைச்
சந்தமர் பொழிலணி சண்பை ஞானசம்
பந்தன தமிழ்கெழு பாடல் பத்திவை
சிந்தைசெய் பவர்சிவ லோகஞ் சேர்வரே.

பொழிப்புரை :

அளவில்லாத ஆற்றலுடைய இறைவன் வீற்றிருந்தருளும் இடமாகிய திருவைகல் என்னும் திருத்தலத்திலுள்ள மாடக் கோயிலைச் சந்தன மரங்கள் கொண்ட சோலைகளையுடைய அழகிய திருச்சண்பை நகரில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பதிகத்தைச் சிந்தையிலிருத்திப் போற்ற வல்லவர்கள் சிவலோகத்தில் இருப்பர் .

குறிப்புரை :

சந்து - சந்தன மரங்கள் . சண்பை - சீகாழி . சிந்தை செய்பவர் சிவலோகத்து இருப்பர் .
சிற்பி