திருஅம்பர்ப் பெருந்திருக்கோயில்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

எரிதர அனல்கையில் ஏந்தி யெல்லியில்
நரிதிரி கானிடை நட்டம் ஆடுவர்
அரிசிலம் பொருபுனல் அம்பர் மாநகர்க்
குரிசில்செங் கண்ணவன் கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

இறைவர் எரிகின்ற நெருப்பைக் கையில் ஏந்தி நள்ளிருளில் , நரிகள் திரிகின்ற மயானத்தில் திருநடனம் புரிகின்றார் . அப்பெருமானார் அரிசில் ஆறு பாய்வதால் நீர்வளமிக்க அம்பர் மாநகரில் பெருமையிற் சிறந்த , சிவந்த கண்களையுடைய கோச்செங்கட்சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நெருப்பு , கையில் எரிய ஏந்திக் கொண்டு இரவில் மயானத்தில் நட்டம் ( நடனம் ) ஆடுவாய் என்பது முதலிரண்டு அடியின் கருத்து . அரிசில் அம்பொரு புனல் அம்பர் - அரிசில் ஆற்றின் நீர்வளம் பொருந்திய திருஅம்பர் . குரிசில் - சிறந்தோன் . செங்கண்ணவன் - கோச்செங்கட்சோழ நாயனார் . நட்டம் ஆடுபவராகிய சிவபெருமான் அம்பர்மா நகர்க்கோயில் சேர்ந்திருப்பர் என்பது முடிவு . மகாப்பிரளய காலத்தில் எங்கும் ஒரே இருள்மயமாய் இருத்தலின் , எல்லியில் என்றார் . நரி திரிகான் - சுடுகாடு . ` கோயில் சுடுகாடு ` என்பது காண்க . ( திருவாசகம் )

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

மையகண் மலைமகள் பாக மாயிருள்
கையதோர் கனலெரி கனல ஆடுவர்
ஐயநன் பொருபுனல் அம்பர்ச் செம்பியர்
செய்யகண் ணிறைசெய்த கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

மைபூசிய கண்ணையுடைய மலைமகளான உமாதேவியை ஒருபாகமாகக் கொண்டு , இருளில் , இறைவர் கையில் கனன்று எரிகின்ற நெருப்பானது சுவாலை வீச , நடனம் ஆடுவார் . அப்பெருமானார் கரையை மோதுகின்ற அரிசிலாற்றினால் நீர்வளமிக்க அழகிய நல்ல அம்பர் மாநகரில் கோச்செங்கட் சோழன் கட்டிய கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மையகண் - மையை அணிந்த கண் . மைய - குறிப்புப் பெயரெச்சம் . இருள் ... ஆடுவர் . இருளில் கையில் உள்ளதாகிய நெருப்பானது சுவாலை வீச , ஆடுவர் . ஐய ... அம்பர் - அழகிய நல்ல கரையை மோதும் ( அரிசிலாற்றின் ) நீர்வளம் பொருந்திய அம்பர் . செய்யகண் - செங்கண் . இறை - அரசன் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மறைபுனை பாடலர் சுடர்கை மல்கவோர்
பிறைபுனை சடைமுடி பெயர ஆடுவர்
அறைபுன னிறைவயல் அம்பர் மாநகர்
இறைபுனை யெழில்வளர் இடம தென்பரே.

பொழிப்புரை :

வேதங்களை அருளிப் பாடுகின்ற இறைவர் , சுடர்விடு நெருப்பு கையில் விளங்கவும் , பிறைச்சந்திரன் சடைமுடியில் அசையவும் ஆடுவார் . ஒலிக்கின்ற அரிசிலாற்றினால் நீர் நிறைந்த வயல்களையுடைய அம்பர் மாநகரில் , கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய அழகுமிகு கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மறை - வேதத்தை . புனைபாடலர் - புனைந்து பாடு தலையுடையவர் . சுடர் - நெருப்பானது . கைமல்க - கையிலே தங்க . அறை - ஒலிக்கின்ற . இறை - கோச்செங்கட் சோழ நாயனார் . புனை - அலங்கரித்துச் செய்யப்பட்ட . எழில்வளர் - அழகுமிகும் , இடம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

இரவுமல் கிளமதி சூடி யீடுயர்
பரவமல் கருமறை பாடி யாடுவர்
அரவமோ டுயர்செம்மல் அம்பர்க் கொம்பலர்
மரவமல் கெழினகர் மருவி வாழ்வரே.

பொழிப்புரை :

இரவில் ஒளிரும் இளம்பிறைச் சந்திரனைச் சூடி , தம் பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குரிய அருமறைகளை இறைவர் பாடி ஆடுவார் . பாம்பணிந்து உயர்ந்து விளங்கும் செம்மலாகிய சிவபெருமான் , கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்ப மரங்கள் நிறைந்த சோலைகளையுடைய அழகிய அம்பர் மாநகரில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

மல்கு இளமதி - மிகுந்த இளமையையுடைய பிறைச் சந்திரன் . ஈடுஉயர் பரவமல்கு அருமறை - ( தன் ) பெருமையின் உயர்வைத் துதிப்பதற்குப் பொருந்திய அரிய வேதத்தைப்பாடி ஆடுவர் . ஈடு - பெயர் உயர் - ( உயர்வு ) ` உ ` பண்புப்பெயர் விகுதி . அரவமோடு உயர் செம்மல் அம்பர் - ஆரவாரத்தோடு உயர்ந்த ( அரிசில் நதியின் ) மிகு வளத்தையுடைய அம்பர் . செம்மல் - மிகுதி . கொம்பு ... நகர் - கொம்புகளில் மலர்களையுடைய வெண்கடம்பச் சோலைகளையுடைய ( அம்பர் ) நகர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சங்கணி குழையினர் சாமம் பாடுவர்
வெங்கனல் கனல்தர வீசி யாடுவர்
அங்கணி விழவமர் அம்பர் மாநகர்ச்
செங்கணல் இறைசெய்த கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

இறைவர் சங்கினாலாகிய குழை அணிந்த காதினர் . சாமவேதத்தைப் பாடுவார் . மிகுந்த வெப்பமுடைய நெருப்புச் சுவாலை வீசத் தோள்வீசி ஆடுவார் . அழகிய திருவிழாக்கள் நடை பெறும் அம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் எழுப்பிய திருக்கோயிலில் அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

சங்கை அணிந்த காதையுடையவர் . சாமவேதத்தைப் பாடுவார் கொடிய நெருப்புச் சுவாலிக்கத் தோளை வீசி ஆடுவர் - என்பது முதலிரண்டடியின் பொருள் . சங்கு - ஆகுபெயர் . ` எண்தோள் வீசி நின்றாடும் பிரான் ` என அப்பர் பெருமான் வாக்கில் வருவதால் வீசி என்பதற்குத் தோள்வருவித்துரைக்கப் பட்டது . அழகிய திருவிழாக்களை உடைய அம்பர் . செங்கண்நல் இறை - நல்ல கோச்செங்கட் சோழர் , செய்த கோயில் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

கழல்வளர் காலினர் சுடர்கை மல்கவோர்
சுழல்வளர் குளிர்புனல் சூடி யாடுவர்
அழல்வளர் மறையவர் அம்பர்ப் பைம்பொழில்
நிழல்வளர் நெடுநகர் இடம தென்பரே.

பொழிப்புரை :

இறைவர் வீரக்கழல்கள் அணிந்த திருவடிகள் உடையவர் . சுடர்விட்டு எரியும் நெருப்பைக் கையில் ஏந்தியுள்ளவர் . நீர்ச்சுழிகளையுடைய குளிர்ந்த கங்கையைச் சடையில் சூடி ஆடுவர் . அப்பெருமானார் , வேள்வித்தீ வளர்க்கும் அந்தணர்கள் வாழ்கின்ற அம்பர் மாநகரில் அழகிய சோலைகளையுடைய நிழல்தரும் பெருந் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கழல்வளர் - கழலோசை மிகும் , காலையுடையவர் . சுடர் - நெருப்பு . சுழல் ... புனல் - நீர்ச்சுழிகளையுடைய கங்கை நீரைச் , சூடி ஆடுவர் . அழல் - நித்திய அக்கினி . நெடுநகர் - பெருந்திருக் கோயில் . நகர் - கோயில் . ` நடுவூர் நகர்செய்து அடுபவம் துடைக்கும் ` என்னும் கல்லாடத்தால் அறிக .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

இகலுறு சுடரெரி யிலங்க வீசியே
பகலிடம் பலிகொளப் பாடி யாடுவர்
அகலிட மலிபுகழ் அம்பர் வம்பவிழ்
புகலிட நெடுநகர் புகுவர் போலுமே.

பொழிப்புரை :

இறைவர் , வலிமைமிக்க சுடர்விட்டு எரியும் நெருப்பை ஏந்தித் தோள்களை வீசிப் பலி ஏற்கும் பொருட்டுப் பாடி ஆடுவர் . அப்பெருமானார் அகன்ற இப்பூவுலகெங்கும் பரவிய மிகு புகழையுடைய அம்பர் மாநகரில் , தெய்விக மணம் கமழும் திருக்கோயிலைத் தமது இருப்பிடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

இகல்உறு - வலிமை மிக்க . அகல் இடம் மலிபுகழ் அம்பர் - இந்த உலகமெங்கும் மிகப் பரவிய புகழையுடைய அம்பர் . போலும் - உரையசை .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எரியன மணிமுடி யிலங்கைக் கோன்தன
கரியன தடக்கைகள் அடர்த்த காலினர்
அரியவர் வளநகர் அம்பர் இன்பொடு
புரியவர் பிரிவிலாப் பூதஞ் சூழவே.

பொழிப்புரை :

சிவபெருமான் , நெருப்புப் போன்று ஒளிவீசும் இரத்தினங்கள் பதிக்கப்பட்ட கிரீடம் அணிந்த இலங்கை மன்னனான இராவணனின் கரிய , பருத்த கைகளை அடர்த்த திருவடிகளை யுடையவர் . அருந்தவத்தோர் வாழ்கின்ற வளம் பொருந்திய அம்பர் மாநகரில் , தம்மைப் பிரிவில்லாத பூதகணங்கள் புடைசூழ இனிதே வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

எரி அ ( ன் ) னமணி - நெருப்புப் போன்ற ஒளியுடைய இரத்தினம் . கரியன - கருநிறத்தையுடையன ஆகிய . தடக்கைகள் - பருத்த கைகள் . கரியன - வினைப்பெயர் . அரியவர் வளநகர் ... சூழவே - அருந்தவத்தோர் வாழ்கின்ற வளநகராகிய திருவம்பர்ப் பெருங்கோயிலுக்குத் தம்மைப் பிரிதலில்லாத பூதகணம் சூழ , மகிழ்வோடு போதலையுடையவர் . புரிதல் - செய்தல் என்னும் பொதுவினை - போதல் என்னும் சிறப்புவினைப் பொருளைத்தந்தது . புரீ இயவர் என்பதன் மருஉ புரியவர் எனக்கொண்டு விரும்புதலை யுடையவர் எனினும் ஆம் . இனி , அரியவர் ... நகர் - என்பதற்கு யாராலுங் காண்டற்கு அரியராய் இருப்பவர் . அவர் வளநகர் அம்பர் ஆகும் எனலும் ஆகும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

வெறிகிளர் மலர்மிசை யவனும் வெந்தொழிற்
பொறிகிள ரரவணைப் புல்கு செல்வனும்
அறிகில அரியவர் அம்பர்ச் செம்பியர்
செறிகழ லிறைசெய்த கோயில் சேர்வரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , கொல்லும் தன்மையுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்டுள்ள செல்வனாகிய திருமாலும் , அறிதற்குஅரியரான இறைவர் திருஅம்பர் மாநகரில் கோச்செங்கட்சோழ மன்னன் கட்டிய திருக்கோயிலில் தம் கழலணிந்த திருவடி பொருந்த வீற்றிருந்தருளு கின்றார் .

குறிப்புரை :

வெறி - வாசனை . வெந்தொழில் ... அரவு - கொடிய கொலைத் தொழிலையுடையதாகிய அரவு . படப்புள்ளிகளையுடைய தாகிய அரவு . புல்கு - பொருந்திய . அடிதேடி அறியாதவனைச் செல்வன் என்றது குறிப்பு மொழி . ` அறனன்று மாதவனென்பதுலகு எந்தை தாள்காணான் நாணுக் கொள ` என்ற குமரகுருபரர் வாக்கு இங்கு நினைவிற்கு வருகின்றது . செறிகழல் - அணிந்த கழல் , செம்பியர் இறை - சோழ அரசர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

வழிதலை பறிதலை யவர்கள் கட்டிய
மொழிதலைப் பயனென மொழியல் வம்மினோ
அழிதலை பொருபுனல் அம்பர் மாநகர்
உழிதலை யொழிந்துளர் உமையுந் தாமுமே.

பொழிப்புரை :

மழித்த தலையையும் , முடி பறித்த தலையையும் உடைய புத்தர்களும் , சமணர்களும் கட்டுரையாகக் கூறியவற்றைப் பயனுடையவெனக் கொள்ள வேண்டா . கங்கையைச் சடையிலே தாங்கி , அங்குமிங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து , அம்பர் மாநகரில் உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இறைவனைத் தரிசித்து அருள் பெற வாருங்கள் .

குறிப்புரை :

வழிதலையவர் - மழித்த தலையை யுடையவர்கள் - புத்தர் . பறிதலையவர்கள் - மழித்ததால் , மீளவும் முளைத்திடுமென்று பிடுங்கி விடப்படுதலால் ` பறிதலையவர் ` எனப்பட்டனர் ; சமணர் மொழியல் என்றதற்கு மொழியா தொழிதல் பொருளாகக் கொள்க . ஒருமை பன்மை மயக்கம் . அழிதலை பொருபுனல் அம்பர் - அங்கும் இங்கும் சுற்றித் திரிதலை ஒழிந்து , அம்பர் மாநகரில் உமையும் தாமுமாக . உளர் - இருப்பர் . அவரை வணங்கிப் பயனெய்த வம்மின் என்பது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

அழகரை யடிகளை அம்பர் மேவிய
நிழல்திகழ் சடைமுடி நீல கண்டரை
உமிழ்திரை யுலகினில் ஓதுவீர் கொண்மின்
தமிழ்கெழு விரகினன் தமிழ்செய் மாலையே.

பொழிப்புரை :

அழகரை , அடிகளை , திருஅம்பர் மாநகரில் எழுந்தருளியிருக்கும் ஒளிர்கின்ற சடைமுடியுடைய நீலகண்டரான சிவபெருமானை , அலைவீசுகின்ற கடலுடைய இவ்வுலகினில் , முத்தமிழ் விரகனாகிய ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாமாலையாகிய திருப்பதிகத்தை ஓதிச் சிவகதி பெறுமின் .

குறிப்புரை :

நிழல் - ஒளி . உமிழ்திரை - வீசுகின்ற அலைகளை யுடைய கடல் . தமிழ்கெழுவிரகினன் - முத்தமிழ் விரகனாகிய நான் தமிழாற் பாடப்பட்ட மாலையாகிய இப்பதிகத்தை . ஓதுவீர் - சிவபெருமானைப் பாடுவீர் ! இப்பாடல்களைக் கொள்ளுங்கள் ! இப்பாடல் குறில் வருக்க எதுகை . முதல் ஏழு பாசுரங்களிலும் ஆடுவர் என்றே கடவுளைப் பற்றிக் கூறப்படுகிறது .
சிற்பி