திருப்பூவணம்


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

மாதமர் மேனிய னாகி வண்டொடு
போதமர் பொழிலணி பூவ ணத்துறை
வேதனை விரவலர் அரண மூன்றெய்த
நாதனை அடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாக மாகக்கொண்டு , வண்டமர்கின்ற மலர்கள் உள்ள சோலையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளு கின்ற , துன்பம்தரும் பகையசுரர்களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த நாதனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நலன்களும் உண்டாகும் .

குறிப்புரை :

போது அமர்பொழில் - மலர்கள் உள்ள சோலை . விரவலர் - பகைவர்களாகிய அசுரர்கள் . அரணம் மூன்றும் எய்த - மதில் மூன்றையும் எய்த ( நாதன் ).

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

வானணி மதிபுல்கு சென்னி வண்டொடு
தேனணி பொழிற்றிருப் பூவ ணத்துறை
ஆனநல் லருமறை அங்கம் ஓதிய
ஞானனை அடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

வானில் அழகுறத் திகழும் சந்திரனைத் தொடுமளவு உயர்ந்தோங்கிய , வண்டு நுகரும் தேனையுடைய மலர்களுள்ள அழகிய சோலையையுடைய திருப்பூவணத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நலம்தரும் நான்கு வேதங்களையும் , அவற்றின் ஆறு அங்கங்களையும் ஓதியருளிய ஞானவடிவினனான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ , எல்லா நலன்களும் உண்டாகும் .

குறிப்புரை :

` வானணி ... பூவணம் `- வானத்தை அழகுசெய்கின்ற சந்திரமண்டலம் அளாவிய உச்சியையும் , கருவண்டு களுடன் தேன்வண்டுகளின் வரிசையையுடைய சோலைசூழ்ந்த திருப்பூவணம் . ஆன - பொருந்திய . நல் அரு மறை - நல்ல அரிய வேதங்கள் ; இருக்கு , யசுர் , சாமம் இவையே சிறந்த வேதம் எனப்படும் . இவை மூன்றுமே சிறந்தன என்பதை , ` சிறந்தவேதம் விளங்கப்பாடி ` என்ற மதுரைக் காஞ்சிக்கு நச்சினார்க் கினியர் எழுதிய உரையானும் காண்க . ஆறு அங்கம் - வேதத்தின் ஆறு அவயவம் . அவை ; சிக்கை , கற்பசூத்திரம் , வியாகரணம் , நிருத்தம் , சந்தோவிசிதி , சோதிடம் என்பவை . ஞானன் - சிவனுக்கு ஒரு பெயர் . ` ஞானன் என்பவர்க்கன்றி நன்கில் லையே ` என்ற ( திருக்குறுந்தொகை ) அப்பமூர்த்திகள் அருளிச் செயலிலும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

வெந்துயர் உறுபிணி வினைகள் தீர்வதோர்
புந்தியர் தொழுதெழு பூவ ணத்துறை
அந்திவெண் பிறையினோ டாறு சூடிய
நந்தியை அடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

கொடுந்துன்பம் தரும் நோயும் , அதற்குக் காரணமான வினைகளும் சிவனருளாலேயே தீரும் என்பதை நிச்சயித்து , அவனைத் தொழுது போற்றுகின்றவர்கள் வசிக்கும் திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , மாலைக்காலத்தில் உதிக்கும் வெண்பிறையோடு கங்கையும் சூடிய சிவபெருமானின் திருவடிகளைத் தொழ , எல்லா நலன் களும் உண்டாகும் .

குறிப்புரை :

வெந்துயர் - கொடுந்துன்பம் . அதைத் தருவதாகிய பிணியும் , அதற்குக் காரணமான கன்மமும் முற்றும் பற்றறத் தீர் விக்கும் புந்தியர் என்றது , தாங்கள் செய்வனவற்றைச் சிவார்ப் பணமாகச் செய்தலும் , தங்கட்கு வருவனவற்றைச் சிவனரு ளெனக் கொண்டு அமைந்து நுகர்தலுமாகிய புத்தி பண்ணுபவர் . இதனை ` நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே ` என்ற திருவாசகத் தொடராலும் அறிக . தொழுது எழு - பேராசிரியர் உரை கொள்க . பிரயோக விவேகமுடையார் கருத்துக் கொள்ளற்க . ` மாலைக் காலத்தில் உதிக்கும் வெண் பிறையோடு கங்கையைச் சூடிய நந்தி ` என்பது மூன்றாம் அடியின் பொருள் . நந்தி சிவனுக்கொரு பெயர் . ` நந்தி நாமம் நமச்சிவாயவே ` என்பது இத்திருமுறை . ஆறு - கங்கை . பொதுப் பெயர் சிறப்புப் பெயராயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

வாசநன் மலர்மலி மார்பில் வெண்பொடிப்
பூசனைப் பொழில்திகழ் பூவ ணத்துறை
ஈசனை மலர்புனைந் தேத்து வார்வினை
நாசனை யடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் மலர்மாலைகளை அணிந்துள்ள மார்பில் , திருவெண்ணீற்றினைப் பூசி , சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமான் , மலர்புனைந்து ஏத்தும் அன்பர்களின் வினையைப் போக்குவான் . அப்பெருமானின் திருவடிகளைத் தொழ எல்லா நன்மைகளும் உண்டாகும் .

குறிப்புரை :

வெண்பொடி பூசனை - வெள்ளியநீறு பூசிய வனை ; ஈசனை . வினை - பாவம் . பாவநாசனை அடிதொழ நன்றி யாகும் . பாவநாசன் , சிவனுக்கொரு பெயர் . ` மன்ன ... பாவநாச நின்சீர்கள் பரவவே ` என்பது திருவாசகம் . பூசன் - இரண்டுறுப்பால் முடிந்த குறிப்பு வினைமுற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

குருந்தொடு மாதவி கோங்கு மல்லிகை
பொருந்திய பொழிற்றிருப் பூவ ணத்துறை
அருந்திறல் அவுணர்தம் அரண மூன்றெய்த
பெருந்தகை அடிதொழப் பீடை யில்லையே.

பொழிப்புரை :

குருந்து , மாதவி , கோங்கு , மல்லிகை மலர்ந்துள்ள சோலைகளையுடைய திருப்பூவணம் என்னும் திருத் தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அரு வலிமையுடைய அசுரர் களின் மூன்று கோட்டைகளையும் அம்பு எய்து அழித்த பெருந் தகையான சிவபெருமானின் திருவடிகளைத் தொழ , துன்பம் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

அரும்திறல் -( வெலற்கு ) அரிய வலிமை . பெருந்தகை - சிவனுக்கு ஒரு பெயர் ; ` பெண்ணினல்லாளொடும் பெருந்தகை இருந்ததே ` என்பது இத்திருமுறை . பீடை - தோடம் , காரணப்பெயர் ; பிடித்துக் கொள்வது . தமிழ்மொழி . இதனை வட சொல் எனவுங் கூறுவர் . தமிழில் அரிய பொருள் காணா வழியே வடசொல்லுக்கு ஏகல் வேண்டும் . குருந்து ஒரு மரவிசேடம் ; மணிவாசகப் பெருமானைப் பெருந்துறையில் ஆட்கொண்டருளியது இம் மரத்தினடியிலேதான் . ` பெருந்துறையில் வந்தோர் கொந்தலர் நெருங்கிய குருந்தடியிருந்தார் ` என்பது பழைய திருவிளையாடல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

வெறிகமழ் புன்னைபொன் ஞாழல் விம்மிய
பொறியர வணிபொழிற் பூவ ணத்துறை
கிறிபடு முடையினன் கேடில் கொள்கையன்
நறுமல ரடிதொழ நன்மை யாகுமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் புன்னை , புலிநகக் கொன்றை முதலான மரங்கள் நிறைந்த அழகிய சோலையையுடைய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , கோவண ஆடை தரித்த , அழிதலில்லாத கொள்கைகளை உடைய சிவ பெருமானின் நறுமணமிக்க மலர் போன்ற திருவடிகளைத் தொழ , எல்லா நலன்களும் உண்டாகும் .

குறிப்புரை :

கிறிபடும் - பரிகசிக்கத்தகுந்த . உடையினன் என்றது ஆடையில்லாத கோலத்தையுடையவன் என்றபடி . கேடு இல் - கெடுக்க முடியாத கொள்கையன் . மலர் அடி - மலர்போன்ற அடி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

பறைமல்கு முழவொடு பாட லாடலன்
பொறைமல்கு பொழிலணி பூவ ணத்துறை
மறைமல்கு பாடலன் மாதொர் கூறினன்
அறைமல்கு கழல்தொழ அல்லல் இல்லையே.

பொழிப்புரை :

பறையின் ஒலியும் , முழவின் ஓசையும் ஒலிக்கப் பாடி ஆடுபவன் இறைவன் . அமைதி தவழும் சோலையையுடைய அழகிய திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளு பவன் . நால்வேதங்களையும் பாடுபவன் . உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு கூறாகக் கொண்டவன் . அப்பெருமானின் ஒலிக்கின்ற கழலணிந்த திருவடிகளைத் தொழத் துன்பம் சிறிதும் இல்லை .

குறிப்புரை :

பாடல் ஆடலன் - பாடுதலோடு ஆடலையுடையவன் , இங்குப் பாடல் - ஆடுங்காற்பாடுவது ; மூன்றாம் அடியிற் கூறுவது :- இருந்து பாடும் வேதப்பாடல் . அறைமல்கு - ஒலித்தல் மிகுந்த ; கழல் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

வரைதனை யெடுத்தவல் லரக்கன் நீள்முடி
விரல்தனில் அடர்த்தவன் வெள்ளை நீற்றினன்
பொருபுனல் புடையணி பூவ ணந்தனைப்
பரவிய அடியவர்க் கில்லை பாவமே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிமை வாய்ந்த அரக்கனான இராவணனின் நீண்ட முடிகளைத் தம் காற் பெருவிரலை ஊன்றி அடர்த்தவர் சிவபெருமான் . தம் திருமேனி முழுவதும் திருவெண்ணீற்றினைப் பூசி , ஒலிக்கின்ற கங்கையைத் தம் சடைமுடியின் ஒரு பக்கத்தில் அணிந்து திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருக்கின்ற அப்பெருமானைத் தொழுது போற்றும் அடியவர்களின் பாவம் நாசமாகும் .

குறிப்புரை :

விரறனில் - விரல் + தனில் . பொருபுனல் புடையணி பூவணம் - கரையை மோதுகின்ற வைகைநீரை ஒரு பக்கத்திலே யணிந்த பூவணம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

நீர்மல்கு மலருறை வானும் மாலுமாய்ச்
சீர்மல்கு திருந்தடி சேர கிற்கிலர்
போர்மல்கு மழுவினன் மேய பூவணம்
ஏர்மல்கு மலர்புனைந் தேத்தல் இன்பமே.

பொழிப்புரை :

நீரில் வளரும் தாமரைமலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் , தன்னைத் தொழுபவர்களை நன்னெறிப் படுத்தும் இறைவனின் சிறந்த திருவடிகளைச் சேர்தற்கு இயலாத வராயினர் . போர்த் தன்மையுடைய மழுப்படையுடைய சிவ பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பூவணத்தை அழகிய மலர் கொண்டு போற்றுதல் இன்பம் தரும் .

குறிப்புரை :

நீர்மல்கும்மலர் - தாமரை ; நீரஜம் என்பது வட சொல் . இரண்டாம் அடிக்குப் பிரம விட்டுணுக்கள் முதற்கண் தாம் செருக்கு அழியப் பெற்றுப் பெருமானைச் சரண் புகுந்திருந்தால் இவ்வளவு துன்பங்களுக்கு ஆளாகியிருக்க வேண்டியதில்லை என்பது பொருள் . பூவணம் வணங்குவதே முத்தியின்பமாம் . ` ஆலயம் தானும் அரனெனத் தொழுமே ` என்பது சிவஞான போதம் . ` கூடும் அன்பினிற் கும்பிடலேயன்றி , வீடும் வேண்டா விறலின் விளங்கினார் ` என்பது பெரியபுராணம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

மண்டைகொண் டுழிதரு மதியில் தேரரும்
குண்டருங் குணம்அல பேசுங் கோலத்தர்
வண்டமர் வளர்பொழின் மல்கு பூவணம்
கண்டவ ரடிதொழு தேத்தல் கன்மமே.

பொழிப்புரை :

மண்டை என்னும் ஒருவகைப் பாத்திரத்தை ஏந்திப் பிச்சையெடுத்துத் திரிகின்ற புத்தர்களும் , சமணர்களும் , இறையுண்மையை உணராது கூறும் பயனற்ற பேச்சைக் கேளாது , வண்டுகள் மொய்க்கின்ற வளமுடைய சோலைகள் நிறைந்த திருப்பூவணம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து அங்கு வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றுதல் நம் கடமையாகும் .

குறிப்புரை :

மண்டை - ஒருவகைப் பாத்திரம் . வாய்பாடு இல்லாதது . உழிதரு தேரர் - அலைந்து திரிகின்ற தேரர் , புத்தர் . குண்டர் - போக்கிரிகள் . குணம் அல பேசுங்கோலத்தர் - பயனில்லாத பேசுங் கோலத்தையுடையவர்கள் . திருப்பூவணத்தைத் தரிசித்து அவருடைய அடியைத் தொழுது துதிப்பது . கன்மம் - காரியம் . நமது கடமையாகும் . ` தன்கடன் அடியேனையும் தாங்குதல் என்கடன் பணிசெய்து கிடப்பதே ` என்ற அப்பர் சுவாமிகள் வாக்காலும் அறிக . நான்காம் அடிக்குப் பூவணம் கண்டு அவர் அடிதொழுது என்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

புண்ணியர் தொழுதெழு பூவ ணத்துறை
அண்ணலை யடிதொழு தந்தண் காழியுள்
நண்ணிய அருமறை ஞானசம் பந்தன்
பண்ணிய தமிழ்சொலப் பறையும் பாவமே.

பொழிப்புரை :

புண்ணியர்கள் தொழுது போற்றுகின்ற திருப்பூவணம் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற தலைவரான சிவபெருமானின் திருவடிகளைத் தொழுது போற்றி , அழகிய , குளிர்ச்சியான சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப் பாடல்களை ஓதவல்லவர்களின் பாவம் யாவும் நீங்கும் .

குறிப்புரை :

பண்ணிய - செய்த ; இயற்றிய . ` புகழ்கொண்டு மற்றிவர் செய்யும் உடம்பு ` என்பதனாலும் ; செய்யுள் என்னும் பெயராலும் அறிக . பறையும் - வெளிக்கிளம்பி நீங்கும் ` பறையும் பாவங்களான ` என்ற சுந்தரமூர்த்தி சுவாமிகள் வாக்கினாலும் அறிக .
சிற்பி