திருக்கருக்குடி


பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 1

நனவிலும் கனவிலும் நாளும் தன்னொளி
நினைவிலும் எனக்குவந் தெய்து நின்மலன்
கனைகடல் வையகம் தொழுக ருக்குடி
அனலெரி யாடுமெம் அடிகள் காண்மினே.

பொழிப்புரை :

நான் விழித்திருக்கும் பொழுதும் , கனவு காணும்பொழுதும் , உள்ளொளியாக நெஞ்சில் நின்று நினைவிலும் எனக்குக் காட்சி தரும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனாகிய இறைவனாய் , ஒலிக்கின்ற கடல் சூழ்ந்த இப்பூவுலகத்தோர் போற்றும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற , நெருப்பைக் கையிலேந்தி ஆடுகின்ற எம் தலைவரான சிவபெரு மானைத் தரிசித்துப் பயனடைவீர்களாக .

குறிப்புரை :

நான் விழித்திருக்கும்பொழுதும் , கனாக் காணும் பொழுதும் எந்நாளும் தன்னுடைய ஞான ஒளி வடிவு நினைவிலும் ( வாக்கிலும் ) எனக்குவந்து எய்தும் நின்மலன் என்பது முதலிரண்டடிகளின் கருத்து . நினைவிலும் என்ற எச்சவும்மையால் , வாக்கிலும் என்பது வருவித்துக் கொண்டது . எரி ஆடும் - நெருப்பில் ஆடும் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 2

வேதியன் விடையுடை விமலன் ஒன்னலர்
மூதெயில் எரியெழ முனிந்த முக்கணன்
காதியல் குழையினன் கருக்கு டியமர்
ஆதியை அடிதொழ அல்ல லில்லையே.

பொழிப்புரை :

வேதத்தை அருளிச் செய்தவனும் , வேதப் பொருளாக விளங்குபவனும் , இயல்பாகவே பாசங்களின் நீங்கியவனும் , பகையசுரர்களின் மூன்று மதில்களும் எரிந்து சாம்பலாகுமாறு கோபித்த முக்கண்ணனுமான சிவபெருமான் காதில் குழை அணிந்தவனாய்த் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . எப்பொருட்கும் முதல்வனான அப்பெருமானின் திருவடிகளைத் தொழத் துன்பம் இல்லை .

குறிப்புரை :

மூது எயில் - பழமையான மதில் , இங்குத் திரிபுரம் . இயல் - பொருந்திய .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 3

மஞ்சுறு பொழில்வள மலிக ருக்குடி
நஞ்சுறு திருமிட றுடைய நாதனார்
அஞ்சுரும் பார்குழல் அரிவை அஞ்சவே
வெஞ்சுரந் தனில்விளை யாடல் என்கொலோ.

பொழிப்புரை :

மேகம் சூழும் சோலைகளையுடைய வளம் மிக்க திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற நஞ்சுண்ட திருக்கழுத்தையுடைய தலைவரான சிவபெருமான் , அழகிய வண்டுகள் மொய்க்கும் கூந்தலையுடைய உமாதேவி அஞ்சும்படி கொடிய சுடுகாட்டில் ஆடல் செய்வது என்கொல் ?

குறிப்புரை :

மஞ்சு - மேகம் . அஞ்சுரும்பார் குழலரிவை - அழகிய வண்டுகள் ஒலிக்கும் குழலையுடைய அம்பிகை ; வெம்சுரம் - கொடியகாடு . பிரளயத்து உலகம் வெந்து சாம்பலான இடம் வெஞ்சுரம் எனப்பட்டது . அதில் இறைவன் நடித்தது ஒரு விளையாட்டாக இருந்தது என்பார் ; ` வெஞ்சுரம் விளையாடல் என்கொலோ ` என்றார் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 4

ஊனுடைப் பிறவியை அறுக்க உன்னுவீர்
கானிடை யாடலான் பயில்க ருக்குடிக்
கோனுயர் கோயிலை வணங்கி வைகலும்
வானவர் தொழுகழல் வாழ்த்தி வாழ்மினே.

பொழிப்புரை :

வினைப்பயனை அனுபவிக்க உடம்பெடுத்த இப்பிறவியை ஒழிக்க நினைக்கும் மாந்தரீர் ! சுடுகாட்டில் திருநடனம் செய்யும் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள உயர்ந்த கோயிலை வணங்கியும் , நாள்தோறும் வானவர்கள் தொழுகின்ற அப்பெருமானின் திருவடிகளை வாழ்த்தி யும் வாழ்வீர்களாக !

குறிப்புரை :

ஊன் - உடம்பு . அறுக்க - ஒழிக்க . உன்னுவீர் - நினைக் கும் மாந்தரீர் . கான் இடை ஆடலான் - சுடுகாட்டில் ஆடுதலை யுடைவன் . கழல் - திருவடி .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 5

சூடுவர் சடையிடைக் கங்கை நங்கையைக்
கூடுவர் உலகிடை ஐயங் கொண்டொலி
பாடுவர் இசைபறை கொட்ட நட்டிருள்
ஆடுவர் கருக்குடி அண்ணல் வண்ணமே.

பொழிப்புரை :

இறைவர் சடைமுடியில் கங்கையைச் சூடி உள்ளார் . தம் திருமேனியில் ஒரு பாகமாக உமாதேவியை வைத்துள்ளார் . இவ்வுலகில் பிச்சை ஏற்கும் பொழுது இசையோடு பாடுவார் . பறை கொட்ட நள்ளிருளில் நடனம் ஆடுவார் . இது திருக்கருக்குடியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் அருள் தன்மையாகும் .

குறிப்புரை :

நங்கை - பெண்களிற் சிறந்தவள் . ஒலிபாடுவர் இசை - இசையை ஒலியோடு பாடுவர் . ` நட்டு நள் + அ + து நள்ளது = நடுவினது ; அகரச் சாரியை நீக்கினால் நள் + து = நட்டு என்று ஆகும் . நட்டு இருள் - நடுவினதாகிய இருளில் . நடு இராத்திரியில் ஆடுவர் . ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே ` என்பது திருவாசகம் . அண்ணல் வண்ணம் - இது கருக்குடி அண்ணல் தன்மையாம் . நடு + இருள் - நட்டிருள் என்பதே தக்கது .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 6

இன்புடை யாரிசை வீணை பூணரா
என்புடை யாரெழின் மேனி மேலெரி
முன்புடை யார்முதல் ஏத்தும் அன்பருக்
கன்புடை யார்கருக் குடியெம் அண்ணலே.

பொழிப்புரை :

திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமான் வீணையை இசைத்துப் பாடுவதில் மகிழ்பவர் . தம்முடைய அழகிய திருமேனியில் பாம்பையும் , எலும்பையும் ஆபரணமாக அணிந்துள்ளவர் . எரிகின்ற நெருப்பைத் திருக்கரத்தில் ஏந்தியுள்ளவர் . யாவற்றுக்கும் மூலப் பொருளாகிய , முதற்பொருளாக விளங்குபவர் . அன்பர்களிடத்து அன்புடையவர் .

குறிப்புரை :

இன்பு - வீணை - இசை வீணை பாடுதலில் மகிழ்வுடையார் . பூண் - ஆபரணமாக . அரா என்பு உடையார் - பாம்பையும் எலும்பையும் உடையவர் . மேனிமேல் எரிமுன்பு உடையார் . முதல் - காரணம் . முதல் ஏத்தும் அன்பர் - உலகமாகிய காரியத்துக்கு இறைவன் நிமித்த காரணமாம் தன்மையை அறிந்து ஏத்தும் இக்கருத்து ` கோலத்தாய் அருளாய் உனகாரணம் கூறுதுமே ` என்னும் இத்திருமுறை முதற்பதிகத்தும் காண்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 7

காலமும் ஞாயிறுந் தீயும் ஆயவர்
கோலமும் முடியர வணிந்த கொள்கையர்
சீலமும் உடையவர் திருக்க ருக்குடிச்
சாலவும் இனிதவ ருடைய தன்மையே.

பொழிப்புரை :

சிவபெருமான் கால தத்துவமாகவும் , அதனைக் கடந்தும் விளங்குபவர் . ஞாயிறு முதலிய சுடராக ஒளிர்பவர் . நெருப்பு முதலிய பஞ்சபூதங்களானவர் . தம் சடைமுடியில் பாம்பணிந்தவர் . சிறந்த புகழை உடையவர் . திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற அப்பெருமானின் தன்மை சாலவும் இனிதாகும் .

குறிப்புரை :

காலம் இடம் முதலிய பொருள்களும் சூரியன் முதலிய கோள்களும் தீ முதலிய பஞ்சபூதங்களும் , ஆயவர் - ஆனவர் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 8

எறிகடல் புடைதழு விலங்கை மன்னனை
முறிபட வரையிடை யடர்த்த மூர்த்தியார்
கறைபடு பொழின்மதி தவழ்க ருக்குடி
அறிவொடு தொழுமவர் ஆள்வர் நன்மையே.

பொழிப்புரை :

அலைவீசுகின்ற கடலையுடைய இலங்கை மன்னனான இராவணனை நிலை கெடும்படி மலையிடையில் வைத்து அடர்த்த சிவமூர்த்தியாகிய இறைவர் , மரங்களின் அடர்த்தியால் இருண்ட சோலைகளில் சந்திரன் தவழும் திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுபவராய் , தம்மை ஞானத்தால் தொழும் அடியவர்கட்கு நன்மையைத் தந்தருளி ஆட்சி செய்கின்றார் .

குறிப்புரை :

கறைபடு பொழில் . நன்மை ஆள்வர் - நன்மை களையெல்லாம் உடையராயிருப்பர் . அறிவொடு தொழுமவர் என்ற இலேசினான் அபுத்திபூர்வமாகச் செய்யும் சிவபுண்ணியமும் பயன் தாராதொழியாது என்பதும் கொள்க .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 9

பூமனுந் திசைமுகன் றானும் பொற்பமர்
வாமனன் அறிகிலா வண்ண மோங்கெரி
ஆமென வுயர்ந்தவன் அணிக ருக்குடி
நாமன னினில்வர நினைதல் நன்மையே.

பொழிப்புரை :

தாமரைப் பூவில் வாழ்கின்ற பிரமனும் , அழகிய வாமனாவதாரம் எடுத்த திருமாலும் அறிய முடியா வண்ணம் , ஓங்கிய நெருப்பு மலையாய் உயர்ந்து நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கருக்குடி என்னும் திருத்தலத்தை நாம் மனத்தால் நினைந்து வழிபட நன்மையாகும் .

குறிப்புரை :

பூம ( ன் ) னும் - பூவில் வாழும் . பொற்பு அமர் வாமனன் - அழகு பொருந்திய வாமன அவதாரமெடுத்த திருமாலும் . பொற்பு அமர் என்பது குறிப்பு . கருக்குடி ...... நன்மையே - கருக்குடி நமது மனத்தில் வரும்படி நாம் நினைத்தல் நன்மையேயாகும் . மனம் - மனன் எனப் போலியாய் ஏழனுருபுபெற்று மனனில் என்று ஆகி அதனோடு இன்சாரியை பெற்று ` மனனினில் என்று ஆயிற்று .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 10

சாக்கியர் சமண்படு கையர் பொய்ம்மொழி
ஆக்கிய வுரைகொளேல் அருந்தி ருந்நமக்
காக்கிய அரனுறை அணிக ருக்குடிப்
பூக்கமழ் கோயிலே புடைபட் டுய்ம்மினே.

பொழிப்புரை :

புத்தரும் , சமணர்களுமான வஞ்சகர் கூறும் பொய்ம்மொழிகளை உரையாகக் கொள்ள வேண்டா . பெறுதற்கரிய சைவசமயத்தில் நம்மைப் பிறக்குமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற அழகிய திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள பூமணம் கமழும் திருக்கோயிலைச் சார்ந்து உய்தி அடையுங்கள் .

குறிப்புரை :

சமண்படு - சமணக் கோட்பாடு . பொருந்திய . கையர் - வஞ்சகர் . அருந்திரு - சைவசமயத்திற் பிறத்தல் பிறர் எவருக்குங் கிடைத்தற்கரிய திரு - செல்வம் , பாக்கியம் . ` நரர்பயில் தேயந்தன்னில் நான்மறை பயிலா நாட்டில் ...... பரசமயங்கள் செல்லாப் பாக்கியம் பண்ணொணாதே .` சிவஞான சித்தியார் . அத்திருவை நமக்கு ஆக்கிய அரன் . புடைபட்டு - சார்ந்து ; ஒருமை பன்மை மயக்கம் .

பண் :காந்தார பஞ்சமம்

பாடல் எண் : 11

கானலில் விரைமலர் விம்மு காழியான்
வானவன் கருக்குடி மைந்தன் றன்னொளி
ஆனமெய்ஞ் ஞானசம் பந்தன் சொல்லிய
ஊனமில் மொழிவலார்க் குயரு மின்பமே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலைகளில் நறுமணம் கமழும் மலர்கள் நிறைந்த சீகாழியில் அவதரித்த , வானவர் தொழுதெழு திருக்கருக்குடி என்னும் திருத்தலத்திலுள்ள சிவனொளியே தானான மெய்ஞ்ஞான சம்பந்தன் அருளிய குற்றமில்லாத இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குப் பேரின்பம் மிகும் .

குறிப்புரை :

மைந்தன் - சம்பந்தன் . சிவனொளியே தான் ஆன மெய்ஞ் ஞானசம்பந்தம் பெற்ற வலிமையோடு கூடியவன் .
சிற்பி