திருச்சக்கரப்பள்ளி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

படையினார் வெண்மழுப் பாய்புலித் தோலரை
உடையினார் உமையொரு கூறனார் ஊர்வதோர்
விடையினார் வெண்பொடிப் பூசியார் விரிபுனல்
சடையினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெண்ணிற மழுவைப் படைக்கலனாக உடையவர் . பாயும் புலித்தோலை அரையில் ஆடையாக அணிந்தவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . இடபத்தை வாகனமாகக் கொண்டவர் . திருவெண்ணீற்றைப் பூசியவர் . கங்கையைச் சடையிலே தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருச்சக்கரப்பள்ளி என்னும் கோயிலாகும் .

குறிப்புரை :

படையினார் வெண்மழு - வெண்மையாகிய மழுவைப் படையாக உடையவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

பாடினார் அருமறை பனிமதி சடைமிசைச்
சூடினார் படுதலை துன்எருக் கதனொடும்
நாடினார் இடுபலி நண்ணியோர் காலனைச்
சாடினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் அரிய நால்வேதங்களை ஓதி அருளியவர் . குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர் . மண்டை யோட்டு மாலையுடன் எருக்கம் பூவும் அணிந்தவர் . திருக்கரத்தில் கபாலம் ஏந்திப் பிச்சை ஏற்றுத் திரிபவர் . தம்மை உறுதியாகப் பற்றி வழிபடும் மார்க்கண்டேயனின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப் பள்ளி என்னும் திருக்கோயிலை உடைய ஊராகும் .

குறிப்புரை :

மதியை வெள்ளியதலையோடும் எருக்கமாலையோடும் சடைமிசைச் சூடினார் . படுதலை , தலைமாலையைக் குறித்தது . துன் - நெருங்கிய . இடு பலி - ( மாதர் ) இடும் பிச்சையை ; ( நாடினர் .)

பண் :கொல்லி

பாடல் எண் : 3

மின்னினார் சடைமிசை விரிகதிர் மதியமும்
பொன்னினார் கொன்றையும் பொறிகிளர் அரவமும்
துன்னினார் உலகெலாம் தொழுதெழ நான்மறை
தன்னினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் மின்னலைப் போன்ற சடையின் மீது , ஒளிக்கதிர்களை வீசுகின்ற சந்திரனையும் , பொன் போன்ற கொன்றை மலரையும் நெருப்புப் பொறி போன்று விடத்தைக் கக்குகின்ற பாம்பையும் அணிந்தவர் . உலகம் யாவும் தொழுது போற்றுமாறு நான்கு வேதங்களின் உட்பொருளாக விளங்குபவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

மின்னின் ஆர்சடை - மின்னலைப் போன்ற சடை . பொன்னின் ஆர் - பொன்னைப்போன்ற . துன்னினார் - நெருங்க அணிந்தவர் . நான் மறை தன்னினார் - நான்கு வேதங்களிலும் உள்பொருள் ஆனவர் . தன் - அசை .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

நலமலி கொள்கையார் நான்மறை பாடலார்
வலமலி மழுவினார் மகிழும்ஊர் வண்டறை
மலர்மலி சலமொடு வந்திழி காவிரி
சலசல மணிகொழி சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்யும் பெருங்கருணையாளர் . நான்கு வேதங்களையும் அருளிச் செய்தவர் . வலிமையுடைய மழுவைப் படைக்கலனாக ஏந்தியவர் . அப்பெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் ஊர் , வண்டுகள் ஒலிக்கின்ற , தேன்துளிகளைக் கொண்ட மலர்கள் மணம் வீச , வேகமாகப் பாயும் காவிரியாறு சலசல என ஒலிக்கும் , மணிகளைக் கரையிலே ஒதுக்கும் வளமுடைய திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

வந்து இழி - வந்து பாய்கின்ற ( காவிரி ). சலசல என்னும் ஓசையோடு மாணிக்கங்களைக் கொழித்துவீசும் சக்கரப்பள்ளி .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வெந்தவெண் பொடியணி வேதியர் விரிபுனல்
அந்தமில் அணிமலை மங்கையோ டமரும்ஊர்
கந்தமார் மலரொடு காரகில் பல்மணி
சந்தினோடு அணைபுனற் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெந்த திருவெண்ணீற்றினை அணிந்த வேதநாயகர் . கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . அவர் அழியா அழகுடைய மலைமங்கையான உமாதேவியோடு வீற்றிருந்தருளும் ஊர் , நறுமணம் கமழும் மலர் , அகில் , பலவகை மணிகள் , சந்தனமரம் இவை வந்தடைகின்ற நீர்வளமிக்க திருச்சக்கரப் பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

விரிபுனல் - பரவும் நீர்வளம் பொருந்திய . ஊர் - வேதியர் மலைமங்கையோடு அமரும் ஊர் என்க . சந்து - சந்தனமரம் . அந்தம் இல் அணி - பேரழகு ; அழியா அழகு எனலும் ஆம் . ` அழியா அழகுடையான் ` என வருதலும் காண்க . ( கம்பராமாயணம் .)

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பாங்கினான் முப்புரம் பாழ்பட வெஞ்சிலை
வாங்கினார் வானவர் தானவர் வணங்கிட
ஓங்கினார் உமையொரு கூறொடும் ஒலிபுனல்
தாங்கினார் உறைவிடஞ் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

உரிய தன்மையில் முப்புரங்களும் பாழ்பட்டு எரிந்து சாம்பலாகும்படி , கோபத்துடன் , வளைக்க முடியாத மேருமலையை வில்லாக வளைத்தவர் . தேவர்களும் , அசுரர்களும் வணங்கும் பெருமை பெற்றவர் . உமாதேவியைத் தம் உடம்பில் ஒரு கூறாகக் கொண்டவர் . ஒலிக்கின்ற கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

முப்புரம் பாழ்பட . வெம்சிலை - விரும்பத்தக்க ( மேரு ) மலையை . பாங்கினால் - இனங்களுக் கேற்க . வாங்கினார் - வளைத்தவர் . வெம்மை விருப்பம் . கொடியவில் என்பதில் பொருள் சிறவாது ; தேர் ஆதற்கு இயைபில்லாதது . அம்பு ஆதற்கு இயைபில்லாதது , குதிரை ஆதற்கு இயைபு இல்லாதது . ( பூமி , திருமால் வதம் ) முறையே தேரும் , அம்பும் குதிரையும் ஆனாற்போல , வில்லாதற்கு இயைபு இல்லாத மலை வில்லாயிற்று .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

பாரினார் தொழுதெழு பரவுபல் லாயிரம்
பேரினார் பெண்ணொரு கூறனார் பேரொலி
நீரினார் சடைமுடி நிரைமலர்க் கொன்றையந்
தாரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

சிவபெருமான் இப்பூவுலக மக்களெல்லாம் தொழுது போற்றும் பல்லாயிரக்கணக்கான திருநாமங்களை உடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . பேரொலியோடு பெருக்கெடுத்து வரும் கங்கையைச் சடைமுடியில் தாங்கியவர் . கொத்தாக மலரும் கொன்றை மலர்களை அழகிய மாலையாக அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

பாரினார் - பூமியிலுள்ளோர் . தொழுது எழும் - துதித்தற்குரிய பல ஆயிரம் பெயரை உடையவர் , எழும் என்ற பெயரெச்சம் ( பெயரை ) உடையவர் என்ற பெயரைத் தழுவும் . பரவு பெயர் ; வினைத் தொகை . பல்லாயிரம் - இடைப்பிறவரல் . நிரை - வரிசை . அடுக்கு அடுக்காகப் பூத்தலினால் கொன்றைமலர் நிரைமலர் எனப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

முதிரிலா வெண்பிறை சூடினார் முன்னநாள்
எதிரிலா முப்புரம் எரிசெய்தார் வரைதனால்
அதிரிலா வல்லரக் கன்வலி வாட்டிய
சதிரினார் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

முதிர்வு அடையாத இள வெண்திங்களைச் சிவபெருமான் சடைமுடியில் சூடியவர் . முன்பொருநாள் தம்மை எதிர்த்துப் போர் செய்து வெற்றி பெறுதற்கு ஒருவரும் இல்லை என்னும் நிலையில் திரிந்த அசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகுமாறு செய்தவர் . கயிலைமலையினால் வல்லசுரனான இராவணனின் வலிமையை அடக்கிய திறமையாளர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

முதிர் , அதிர் - என்பன முதிர்தல் , அதிர்தல் என்ற பொருளில் வருதலால் முதனிலைத் தொழிற்பெயர் . வரை தன் ஆல் - தன் - அசை . சதிர் - திறமை .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

துணிபடு கோவணம் சுண்ணவெண் பொடியினர்
பணிபடு மார்பினர் பனிமதிச் சடையினர்
மணிவணன் அவனொடு மலர்மிசை யானையும்
தணிவினர் வளநகர் சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

கிழிக்கப்பட்ட துணியைக் கோவணமாகச் சிவ பெருமான் அணிந்தவர் , மணம் கமழும் திருவெண்ணீற்றினைப் பூசியவர் . பாம்பை மார்பில் ஆபரணமாக அணிந்தவர் . குளிர்ந்த சந்திரனைச் சடைமுடியில் சூடியவர் . திருமாலும் , பிரமனும் தங்களையே தலைவராகக் கருதிய செருக்கைத் தணியச் செய்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் வளநகர் திருச்சக்கரப்பள்ளி என்பதாகும் .

குறிப்புரை :

துணி படு - கிழிக்கப்பட்ட , பணி - பாம்பு . மணி - நீலமணி . தணிவினர் - செருக்குத்தணியச் செய்தவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உடம்புபோர் சீவரர் ஊண்டொழிற் சமணர்கள்
விடம்படும் உரையவை மெய்யல விரிபுனல்
வடம்படு மலர்கொடு வணங்குமின் வைகலும்
தடம்புனல் சூழ்தரு சக்கரப் பள்ளியே.

பொழிப்புரை :

உடம்பைப் போர்க்கும் சீவரம் என்று சொல்லப்படும் மஞ்சள் உடை உடுத்தும் புத்தர்களும் , உண்பதையே தொழிலாகக் கொண்ட சமணர்களும் உரைப்பவை நஞ்சு போன்று கொடுமையானவை . மெய்ம்மையானவை அல்ல . அவற்றைப் பொருளாகக் கொள்ளவேண்டா . விரிந்து பரவும் புனிதநீர் கொண்டு அபிடேகம் செய்தும் , மலர் மாலைகளைச் சார்த்தியும் , குளிர்ந்த குளங்கள் சூழ்ந்து நீர்வளம் மிகுந்து விளங்கும் திருச்சக்கரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் இறைவனை நாளும் வணங்குவீர்களாக !

குறிப்புரை :

உடம்பைப் போர்க்கும் சீவர மென்னும் ஆடையையுடைய புத்தர் . விடம் - நஞ்சு . புனல் கொடு - நீரைக்கொண்டும் ; வடம்படு மலர் கொடு - மலர்மாலைகளைக்கொண்டும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

தண்வயல் புடையணி சக்கரப் பள்ளியெம்
கண்ணுத லவனடிக் கழுமல வளநகர்
நண்ணிய செந்தமிழ் ஞானசம் பந்தன்சொல்
பண்ணிய விவைசொலப் பறையுமெய்ப் பாவமே.

பொழிப்புரை :

குளிர்ந்த வயல் சூழ்ந்த வளமை நிறைந்த அழகிய திருச்சக்கரப்பள்ளியில் எம்முடைய , நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமானின் திருவடிகளை , திருக்கழுமல வளநகரில் அவதரித்த செந்தமிழ் வல்ல ஞானசம்பந்தன் போற்றிய இத்திருப்பதிகத்தைப் பக்தியுடன் பாடுபவர்களின் பாவம் நீங்கும் .

குறிப்புரை :

மெய்ப்பாவமே - உடம்பினாற் செய்த பாவம் . எனவே ஏனைக்கரணங்களாற் செய்த பாவமும் அடங்குதலறிக .
சிற்பி