திருமழபாடி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

காலையார் வண்டினங் கிண்டிய காருறும்
சோலையார் பைங்கிளி சொற்பொருள் பயிலவே
வேலையார் விடமணி வேதியன் விரும்பிடம்
மாலையார் மதிதவழ் மாமழ பாடியே.

பொழிப்புரை :

காலைப்பண்ணாகிய மருதப்பண்ணை இசைக்கின்ற வண்டினங்கள் கிளர்ந்த மலர்களையுடைய , மரங்கள் மேகத்தைத் தொடும்படி வளர்ந்துள்ள சோலைகளில் பைங்கிளிகள் அத்தலத்திலுள்ளோர் பயிலும் சைவநூல்களில் , சொல்லையும் , பொருளையும் பயில்வன . கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் மணிபோல் உள்ளடக்கிய வேதப்பொருளாகிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , மாடங்களில் சந்திரன் தவழ்கின்ற திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

காலை - மருதப்பண்ணை . காலை - காலைப்பண் ; ஆகுபெயர் . ஆர் - பாடிய ( ஆர்த்தல் - ஒலித்தல் ) வண்டினம் . கிண்டிய - தம்கால்களால் கிளர்ந்த , ( மலர்களையுடையசோலை ). கார் உறும் - மேகம்தங்கும் . சோலை - சோலையிற் பொருந்திய . பசிய கிளிகள் அத்தலத்தினர் பயிலும் சைவ நூல்களின் சொல்லையும் பொருளையும் பயில , வேதியன் விரும்பும் இடம் மழபாடியென்க . பயில - என்பது காரண காரியம் ஒன்றும் இன்றி வந்த வினையெச்சம் . ` வாவி செங்கமலம் முகங்காட்ட ...... குவளைக் கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே .` என்பதில் காட்ட என்புழிப்போல . ( தி .1 பதி .129) கார் - பண்பாகுபெயர் . பைங்கிளி சொற்பொருள் பயில என்பதனை ` வேரிமலிபொழிற் கிள்ளை வேதங்கள் பொருட் சொல்லும் மிழலையாமே ` என்பதனோடு ஒப்பிடுக . மாடங்களில் சந்திரன் தவழும் மழபாடி என்க . விடம் அணி வேதியன் - விடக் கறையைக் கழுத்திலணிந்த வேதத்தின் பொருளானவன் . விடம் காரண ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கறையணி மிடறுடைக் கண்ணுதல் நண்ணிய
பிறையணி செஞ்சடைப் பிஞ்ஞகன் பேணுமூர்
துறையணி குருகினம் தூமலர் துதையவே
மறையணி நாவினான் மாமழ பாடியே.

பொழிப்புரை :

நீலகண்டராயும் , நெற்றிக்கண்ணை உடையவரும் தம்மை அடைக்கலமாக வந்தடைந்த சந்திரனை அழகிய செஞ்சடையில் சூடிய பிஞ்ஞகருமான சிவபெருமான் வேதங்களை ஓதுபவர் . அவர் வீற்றிருந்தருளும் ஊர் , நீர்த்துறைகளிலே வெண்ணிறப் பறவைகள் அங்கு மலர்ந்துள்ள வெண்ணிற மலர்கட்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி விளங்கும் திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கண்ணுதலும் பிஞ்ஞகனுமாகிய இறைவன் . பேணும் - விரும்பும் . ( ஊர் ). நண்ணிய பிறை - தன்னைச் சரண் அடைந்தபிறை . பிஞ்ஞகம் - மயில் தோகை ; வேட உருத்தாங்கியபோது தரித்தலால் பிஞ்ஞகன் என்று சிவபெருமானுக்குப் பெயர் . நீர்த்துறைகளிலே வெள்ளிய பறவைகள் அங்கு மலர்ந்த வெண்மலர்களுக்கும் தமக்கும் வேறுபாடு தோன்றாதபடி நெருங்கியுள்ள வளம்பொருந்திய மழபாடி என்பது மூன்றாம் அடிக்குப் பொருள் . ( துதைய -) பொருந்திய என ஒரு சொல் வருவிக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

அந்தணர் வேள்வியும் அருமறைத் துழனியும்
செந்தமிழ்க் கீதமும் சீரினால் வளர்தரப்
பந்தணை மெல்விர லாளொடு பயில்விடம்
மந்தம்வந் துலவுசீர் மாமழ பாடியே.

பொழிப்புரை :

அந்தணர்கள் வேள்வி செய்யும்போது கூறுகிற வேதங்கள் ஒலிக்கவும் , செந்தமிழ்ப் பக்திப்பாடல்கள் இசைக்கவும் , சிறப்புடன் , இறைவன் , பந்து வந்தடைகின்ற மென்மையான விரல் களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் , தென்றற் காற்று வீசும் புகழ்மிக்க திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

துழனி - ஓசை . செந்தமிழ்க்கீதம் - தனித் தமிழிசைப் பாடல் . சீர் - முறை , சிறப்பு , தாளஒத்து . வேள்விகள் முறையோடும் , மறைத்துழனி சிறப்போடும் , செந்தமிழ்க்கீதம் , தாள ஒத்துக்களோடும் விருத்தியடைய அம்பிகையோடும் இறைவன் பயிலும் இடம் என்பது முதல் மூன்றடியின்பொருள் . பயில் + இடம் = பயில்விடம் - உடம்படுமெய்யல்லாத மெய் . இறைவன் என்பது சொல் எச்சம் . ( பரிமேலழகர் ). தோன்றா எழுவாய் எனினும் ஆம் . மந்தம் - தென்றற் காற்று , பண்பாகு பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

அத்தியின் உரிதனை அழகுறப் போர்த்தவன்
முத்தியாய் மூவரின் முதல்வனாய் நின்றவன்
பத்தியால் பாடிடப் பரிந்தவர்க்கு அருள்செயும்
அத்தனார் உறைவிடம் அணிமழ பாடியே.

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்து அழகுறச் சிவபெருமான் போர்த்திக் கொண்டவன் . வீடுபேறாயும் , மும்மூர்த்தி கட்கு முதல்வனாயும் விளங்குபவன் . பக்தியால் பாடிப் போற்றும் அன்பர்கட்கு அருள்புரியும் தலைவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பேரழகுடைய அவன் போர்த்ததனால் யானைத் தோலும் ஓர் அழகுடையதாயிற்று என்பது முதலடியின் பொருள் . ` நாறு பூம்பொழில் நாரையூர் நம்பனுக்கு ஆறுசூடினும் அம்ம அழகிதே ` என்ற அப்பர் வாக்கானும் அறிக . ( திருக்குறுந் தொகை .) வீடு பேறாயும் , மூவரினும் முதல்வனாயும் நிற்பவன் என்பது இரண்டாம் அடியின்பொருள் . இவற்றை முறையே `..... விண் பொருந்து தேவர்க்கும் வீடுபேறாய் நின்றானை ` என்ற அப்பர் பெருமான் ( திருப்பழனம் . 5.) திருவாக்கானும் , ` மூவண்ணல் தன்சந்நிதி முத்தொழில் செய்ய வாளா மேவண்ணல் ` என்ற பரஞ்சோதியார் வாக்கானும் ( திருவிளையாடற் புராணப் பாயிரம் ) உணர்க . பரிந்து - இரங்கி .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கங்கையார் சடையிடைக் கதிர்மதி யணிந்தவன்
வெங்கண்வாள் அரவுடை வேதியன் தீதிலாச்
செங்கயற் கண்ணுமை யாளொடுஞ் சேர்விடம்
மங்கைமார் நடம்பயில் மாமழ பாடியே.

பொழிப்புரை :

கங்கையைத் தாங்கிய சடைமுடியின் இடையில் ஒளிரும் சந்திரனை அணிந்தவன் சிவபெருமான் . கொடிய கண்ணை யுடைய ஒளியுடைய பாம்பை ஆபரணமாக அணிந்தவன் . வேதத்தை அருளி வேதப்பொருளாகவும் விளங்குபவன் . தன்னை வழிபடுபவர்களின் தீவினைகளை நீக்கும் அருளுடைய சிவந்த கண்ணையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் மங்கையர்கள் நடம் பயின்று விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

வாள் அரவு - ஒளியையுடைய பாம்பு . வாள் என்னும் சொல் பாம்புக்கு அடைமொழியாக வருவதைப் பல இடங்களிலும் காண்க . தீது இலா உமையாள் - தன்னை யடைந்தவர்களின் பாவத்தை இல்லையாகச் செய்விப்பவளாகிய உமையாள் . இலா என்னும் ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்துப் பிறவினை விகுதி தொக்கது .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

பாலனார் ஆருயிர் பாங்கினால் உணவரும்
காலனார் உயிர்செகக் காலினால் சாடினான்
சேலினார் கண்ணினாள் தன்னொடுஞ் சேர்விடம்
மாலினார் வழிபடும் மாமழ பாடியே.

பொழிப்புரை :

பாலனான மார்க்கண்டேயனின் வாழ்நாள் முடிந்ததும் அவன் ஆருயிரைக் கவரவந்த காலனின் உயிர் அழியும்படி அவனைக் காலால் உதைத்த சிவபெருமான் , சேல்மீன் போன்ற கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் திருமால் முதலான பெருமையுடையவர்கள் வழிபடும் சிறப்புமிக்க திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

பாலனார் - மார்க்கண்டேயர் . பாங்கினால் :- அளந்த வாழ்நாள் முடிந்தவர் உயிரைக்கவரத் தனக்கு இறைவன் அளித்த ஆணை இங்குப் , பாங்கு எனப்பட்டது . செக - அழிய . காலன் ஆகையினால் அவனைக் காலினாற் சாடினான் என்பது ஓர் சொல்நயம் . சேல் - மீன் . மாலினார் - திருமால் . இறைவனை வழிபடும் பேறு உற்றமையின் மாலினார் எனச்சிறப்புக் கிளவியாற் கூறினார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

விண்ணிலார் இமையவர் மெய்ம்மகிழ்ந் தேத்தவே
எண்ணிலார் முப்புரம் எரியுண நகைசெய்தார்
கண்ணினால் காமனைக் கனலெழக் காய்ந்தஎம்
அண்ணலார் உறைவிடம் அணிமழ பாடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் விண்ணுலகத்துத் தேவர்கள் மெய்ம்மகிழ்ந்து போற்றத் தம்மை வழிபட்டு உய்யும் எண்ணமில்லாத அசுரர்களின் முப்புரங்களைச் சிரித்து எரியுண்ணும்படி செய்தவர் . நெற்றிக்கண்ணைத் திறந்து நெருப்புப்பொறி பறக்க மன்மதனை எரித்த எம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

விண் - தேவ உலகம் . எண் இலார் - ( வழிபட்டு உய்யும் ) எண்ணம் இல்லாதார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

கரத்தினால் கயிலையை யெடுத்தகார் அரக்கன
சிரத்தினை ஊன்றலுஞ் சிவனடி சரண்எனா
இரத்தினாற் கைந்நரம் பெடுத்திசை பாடலும்
வரத்தினான் மருவிடம் மாமழ பாடியே.

பொழிப்புரை :

தன் கையால் கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த கரிய அரக்கனான இராவணனின் தலைகள் அம்மலையின்கீழ் நலிவுற்றுத் துன்புறும்படி தம்காற்பெருவிரலைச் சிவபெருமான் ஊன்றியவர் . பின் இராவணன் சிவன் திருவடியையே சரணம் எனக் கொண்டு அருள்புரியும்படி கெஞ்சி வேண்டித் தன் கை நரம்பினை எடுத்து வீணையாக மீட்டிச் சாமகானம் பாட , அவனுக்கு வரமருளிய சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அரக்கன சிரம் - அரக்கனுடைய தலைகள் . வருமொழி பன்மையாதலினால் ஆறனுருபில் அகரம் வந்தது . அதனால் சிரம் என்பதைப் பால் பகா அஃறிணைப் பெயராகக் கொள்க . இரத்து - இரத்தல் . கெஞ்சி வேண்டல் , து - தொழிற்பெயர் விகுதி , பாய்த்து என்பதிற்போல . வரத்தினான் - வரத்தைத் தந்தவன் . பாடலும் , அவனுக்கு அருளிய வரத்தையுடையவன் ( வரன் அருளியவன் ) என்பது .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

ஏடுலா மலர்மிசை அயனெழில் மாலுமாய்
நாடினார்க் கரியசீர் நாதனார் உறைவிடம்
பாடெலாம் பெண்ணையின் பழம்விழப் பைம்பொழில்
மாடெலாம் மல்குசீர் மாமழ பாடியே.

பொழிப்புரை :

இதழ்களையுடைய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அடிமுடி தேட , காண்பதற்கு அரியவராய் விளங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஒருபக்கம் பனைமரங்களின் பழுத்த பழங்கள் உதிர மறுபக்கம் பசுமையான சோலைகள் விளங்கும் சிறப்புடைய திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

எழில் - அழகையுடைய . மால் , பன்றி உரு எடுத்தமையின் இங்ஙனம் கூறப்பட்டது . இகழ்ச்சிக்குறிப்பு . ` எழில்செய் கூகை ` என்றார் சிந்தாமணியில் . இனி , எழில் - கோலம் . அச்சொல் பன்றியைக் குறிக்கும் . ` இலட்சிதலட்சணையால் ` எனக்கொண்டு அதற்கேற்ப அன்னமாகப் பிரமனும் ( பன்றியாகத் திருமாலும் ) நாடினார்க்கு அறிதற்கரிதாயிருந்த நாதனார் எனலும் ஆம் . பக்கங்களிலெல்லாம் பனைமரங்கள் பழுத்துப் பழம் உதிர்விக்கவும் , மற்றப் பக்கங்களிலெல்லாம் பசிய சோலைகள் வளம் மிகுவிக்கவும் பொருந்திய மழபாடி . பழம் பழுத்தவுடனே உதிர்தல் பனை மரத்துக் குண்மையால் ` காகதாலியம் ` என வடநூலார் கூறுவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உறிபிடித் தூத்தைவாய்ச் சமணொடு சாக்கியர்
நெறிபிடித் தறிவிலா நீசர்சொற் கொள்ளன்மின்
பொறிபிடித் தரவினம் பூணெனக் கொண்டுமான்
மறிபிடித் தானிடம் மாமழ பாடியே.

பொழிப்புரை :

நீர்க்கலசத்தை உறியிலே தாங்கி அதைப் பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்லும் , வாய் கழுவும் வழக்கமில்லாத சமணர்களும் , புத்தர்களும் இறையுண்மையை அறியாது கூறும் சொற்களைப் பொருளாகக் கொள்ள வேண்டா . படமெடுத்தாடும் , புள்ளிகளையுடைய பாம்பை ஆபரணமாக அணிந்து , இள மான்கன்றைக் கரத்தில் ஏந்திய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருமழபாடி என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

உறி பிடித்து :- நீர்க்கரகத்தில் எறும்பு விழுந்து கொலைப் பாவம் சேராதிருக்க அதனை ஓர் உறியில் வைத்து அவ்வுறியை ஒரு பிரம்பில் மாட்டித் தூக்கிச் செல்வது சமணர் வழக்கம் . ஊத்தை வாய் - ஊற்றை வாய் , பல் விளக்கினால் அதில் இருக்கும் சிறு கிருமிகள் சாம் என்று விளக்காமையினால் ஊத்தை வாயையுடைய சமண் எனப்பட்டது . பொறி பிடித்த அரவு இனம் - படத்திற் புள்ளிகளையுடைய பாம்பு . பிடித்த அரவு ; பெயரெச்சத்து விகுதி அகரம் தொக்கது .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

ஞாலத்தா ராதிரை நாளினான் நாள்தொறும்
சீலத்தான் மேவிய திருமழ பாடியை
ஞாலத்தான் மிக்கசீர் ஞானசம் பந்தன்சொல்
கோலத்தால் பாடுவார் குற்றமற் றார்களே.

பொழிப்புரை :

இப்பூவுலகில் சிறப்பாக விளங்கும் ஆதிரை என்னும் நட்சத்திரத்திற்குரிய சிவபெருமானுக்கு , நாள்தோறும் சிவாகமவிதிப்படி பூசைகள் நடைபெறுகின்ற திருமழபாடி என்னும் திருத்தலத்தினை , உலகத்தோரால் போற்றப்படுகின்ற மிகுந்த புகழையுடைய திருஞானசம்பந்தன் அருளிய திருப்பதிகத்தைச் சிவவேடப் பொலிவுடன் பாடுபவர்கள் தீவினையிலிருந்து நீங்கப் பெற்றவர்கள் ஆவர் .

குறிப்புரை :

ஆதிரை நாளினான் - சிவபெருமான் . திருவாதிரை சிவனுக்குரியது . ஞாலத்து ஆர் - உலகில் எங்கும் நிறைந்த ; ஆதிரை நாளினான் . கோலத்தால் பாடுவார் - சிவவேடத்தோடு பாடுவோர் ; குற்றமற்றாராவர் - தேவாரத் திருமுறைகளையும் , சித்தாந்த நூல்களையும் ஓதுங்கால் இயன்ற அளவு உடற்சுத்தியோடு , விபூதி , உருத்திராக் கமணிந்து ஓதவேண்டுமென்பது முறை . ஆதலாற் கோலத்தாற் பாடுவார் என்றார் . ஆல் உருபு ஒடுப் பொருளில் வந்தது . இவ்வாறு வருதலைத் ` தூங்குகையா னோங்குநடைய ` என்ற புறநானூற்றானும் அறிக . நாள்தொறும் சீலத்தான்மேவிய திருமழபாடி . நித்திய நைமித்திக வழிபாட்டு முறைகள் நாள்தோறும் தவறாது பொருந்திய திருமழபாடி . சீலம் - ஒழுக்கம் ; இங்குச் சிவாலயபூசையைக் குறிக்கிறது .
சிற்பி