திருஅரதைப் பெரும்பாழி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

பைத்தபாம் போடரைக் கோவணம் பாய்புலி
மொய்த்தபேய் கள்முழக் கம்முது காட்டிடை
நித்தமா கந்நட மாடிவெண் ணீறணி
பித்தர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

இடுப்பில் படத்தையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி , கோவணமும் புலித்தோலும் அணிந்து , பூதகணங்கள் சூழ்ந்து , முழங்கச் சுடுகாட்டில் நிலைபெற்ற நடனம் ஆடி , திருவெண்ணீறு அணிந்த பித்தரான சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும் .

குறிப்புரை :

பைத்த - படத்தையுடைய , பாம்பு . பைத்த குறிப்புப் பெயரெச்சம் . பாம்பு கோவணத்தோடு - என உருபு பிரித்துக் கூட்டுக . முழக்கம் முதுகாடு - முழக்கத்தையுடைய முதுகாடு . நடம் ஆடி வெண்ணீற்றை அணிந்த பித்தர் கோயில் என்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கயலசே லகருங் கண்ணியர் நாள்தொறும்
பயலைகொள் ளப்பலி தேர்ந்துழல் பான்மையார்
இயலைவா னோர்நினைந் தோர்களுக் கெண்ணரும்
பெயரர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

கயல்மீன் போன்றும் , சேல் மீன் போன்றும் அழகிய கருநிறக் கண்களையுடைய மகளிர் நாள்தோறும் பசலை நோய் கொள்ளுமாறு அழகிய தோற்றத்துடன் பலியேற்று உழலும் தன்மை யுடையவர் சிவபெருமான் . அவருடைய தன்மைகள் வானவர்களும் , அடியவர்களும் எண்ணுதற்கு அரிய . பல திருப்பெயர்களைக் கொண்டு விளங்கும் அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

கயல் போன்ற கண்ணியரும் , சேல் போன்ற கண்ணியருமாகிய பல பெண்கள் ( தாருகா வனத்து முனிபன்னியர் ) பயலை - பசலை . பான்மையார் - தன்மையுடையவர் . இயலை - தம் தன்மைகளை ; நினைந்தோர்களுக்கு எண்ணுதற்கரிய பல பெயரை யுடையராயிருப்பார் . அவர் எழுந்தருளியிருக்குங் கோயில் , அரதைப் பெரும்பாழி .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கோடல்சா லவ்வுடை யார்கொலை யானையின்
மூடல்சா லவ்வுடை யார்முளி கானிடை
ஆடல்சா லவ்வுடை யாரழ காகிய
பீடர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

அடியவர்களின் வேண்டுதல்களை ஏற்று இறைவர் அருள்புரிபவர் . கொல்லும் தன்மையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்டவர் . அருவருக்கத்தக்க சுடுகாட்டில் நடனம் புரிபவர் . அழகிய பெருமையுடைய அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

கோடல் - பிச்சை கொள்ளுதல் . மூடல் - போர்வை ; தொழிலாகுபெயர் . முளிகான் - சுடுகாடு . பீடர் - பெருமை யுடையவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

மண்ணர்நீ ரார்அழ லார்மலி காலினார்
விண்ணர்வே தம்விரித் தோதுவார் மெய்ப்பொருள்
பண்ணர்பா டல்உடை யாரொரு பாகமும்
பெண்ணர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என்ற ஐம்பூதங்களாக விளங்குபவர் இறைவர் . வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுபவர் . மெய்ப்பொருளாகியவர் . பண்ணோடு கூடிய பாடலில் விளங்குபவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு விளங்குபவர் . அப்பெருமானார் கோயில் கொண்டருளுவது திருஅரதைப்பெரும்பாழியே .

குறிப்புரை :

பஞ்சபூத சொரூபியாய் இருப்பார் என்பது முற்பகுதியின் பொருள் . வேதம் மெய்ப்பொருள் விரித்து ஓதுவார் - வேதத்தின் உண்மைப் பொருளை விரித்து ஓதுவார் , என்றது வேதத்துக்குப் பொருளருளிச் செய்த ( திருவிளையாடற் புராண ) வரலாறு . பண் - இசை .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

மறையர்வா யின்மொழி மானொடு வெண்மழுக்
கறைகொள்சூ லம்முடைக் கையர்கா ரார்தரும்
நறைகொள்கொன் றைநயந் தார்தருஞ் சென்னிமேல்
பிறையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்தவர் , மானும் , வெண்மழுவும் , சூலமும் ஏந்திய கையர் . கார் காலத்தில் மலரும் தேன் துளிக்கும் நறுமணமுடைய கொன்றை மாலையை விரும்பி அணிந்துள்ளவர் . சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடியவர் . அப் பெருமான் கோயில் கொண்டருளுவது திரு அரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

வாயின்மொழி மறையர் என்க . மான் , மழு , சூலம் உடைய கையர் . ஓடு ; பிரிந்து , பொருள் தோறும் சென்று பொருளுணர்த்திற்று . கார் ஆர்தரும் கொன்றை - கார்காலத்தில் நிறையப் பூக்கும் கொன்றை . நறை - வாசனை ; தேன் . சென்னிமேல் தரும் பிறையர் என்க . தரும் - வைத்த .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

புற்றர வம்புலித் தோலரைக் கோவணம்
தற்றிர வின்னட மாடுவர் தாழ்தரு
சுற்றமர் பாரிடந் தொல்கொடி யின்மிசைப்
பெற்றர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் இடையில் அணிந்து , இரவில் நடனமாடும் சிவபெருமான் , பூதகணங்கள் சூழ்ந்து நின்று வணங்க இடபக் கொடியுடையவர் . அப்பெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

தற்று - இடையில் உடுத்து , ` மடிதற்றுத்தான் முந்துறும் ` என்பது திருக்குறள் 1023. இரவில் நடம் ஆடுவர் . தாழ்தரு - வணங்குகின்ற . துற்று அமர் ( வன ) பாரிடம் - சுற்றியுள்ளவை பூதப்படை . அமர் ; பகுதியே நின்று வினைமுற்றுப் பொருளுணர்த்திற்று . ` பெறுவது கொள்வாரும் கள்வரும் நேர் ` என்ற திருக்குறளிற் (813) போல . கொடியின் மிசைப் பெற்றத்தை உடையவர் . பெற்று - பெற்றம் , விடை .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

துணையிறுத் தஞ்சுரி சங்கமர் வெண்பொடி
இணையிலேற் றையுகந் தேறுவ ரும்எரி
கணையினான் முப்புரம் செற்றவர் கையினில்
பிணையர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

அழகிய சுரிந்த சங்கினாலாகிய குழைகளைக் காதில் அணிந்தும் , திருவெண்ணீற்றைப் பூசியும் விளங்குபவர் இறைவர் , ஒப்பற்ற இடபத்தை விரும்பி வாகனமாக ஏறுபவரும் , அக்கினிக் கணையைச் செலுத்தி முப்புரங்களை அழித்தவரும் , கையினில் இள மான்கன்றை ஏந்தியவருமான அச்சிவபெருமான் கோயில் கொண்டு அருளுவது திருஅரதைப் பெரும்பாழியே ஆகும் .

குறிப்புரை :

அம் - அழகிய . சுரிசங்கு - சுரிந்த சங்குக் குழையை . துணை - ஒன்றோடொன்று ஒக்க . இறுத்து - தங்கவிட்டு ( காதில் அணிந்து ). அமர் - விரும்பத்தக்க . வெண்பொடி - வெள்ளிய திருநீற்றை . உகந்து - விரும்பி . இணை இல் - நிகர் அற்ற . ஏற்றை - இடபத்தை . ஏறுவரும் - ஏறுபவரும் . எரிகணையினால் - அக்கினியாகிய அம்பினால் ; முப்புரம் அழித்தவரும் . கையினில் மானை யுடையவருமாகிய சிவபெருமான் கோயில் அரதைப் பெரும்பாழியே . சுரி - சங்குக்கு அடைமொழி , சங்கம் - கருவியாகுபெயர் . இறுத்தல் - தங்குதல் . துணையிறுத்த ` துணையற இறுத்துத் தூங்க நாற்றி ` என்னும் திருமுருகாற்றுப்படையால் அறிக . இறுத்தல் என்பதில் பிறவினை விகுதி குன்றி நின்றது . அமர்தல் - விரும்பல் ; ` அமர்தல் மேவல் ` ( தொல் , சொல் ). உகந்து என்பதை வெண் பொடியோடும் கூட்டுக . ஏறுவர் - வினையால் அணையும் பெயர் . பிணை - மானின் பொதுப்பெயர் . ` ஆரிணம் நவ்வி குரங்கம் சாரங்கம் மறியுழை ஆனம் பிணை மானின் பெயர் ` என்பது பிங்கலந்தை . 2498. ஏறு ( ப ) வரும் என்ற உம்மையை , செற்றவர் , பிணையர் என்பவற்றோடும் கூட்டுக .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சரிவிலா வல்லரக் கன்றடந் தோடலை
நெரிவிலா ரவ்வடர்த் தார்நெறி மென்குழல்
அரிவைபா கம்அமர்ந் தாரடி யாரொடும்
பிரிவில்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

தளர்ச்சியே இல்லாத வல்லசுரனான இராவணனின் வலிமையான பெரிய தோள்களும் , தலைகளும் நெரியுமாறு அடர்த்த சிவபெருமான் , அடர்த்தியான மென்மை வாய்ந்த கூந்தலையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , அடியவர்களோடு பிரிவில்லாது வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

சரிவு இலா - தளர்தல் இல்லாத . தோடலை - தோள் + தலை . நெரிவில்லார் அடர்த்தார் - நெரித்தலால் முற்ற அடர்த்தவர் . நெறி குழலுக்குவரும் அடை . ` வணர்வார் குழல் ` எனவருவதும் அது .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

வரியரா என்பணி மார்பினர் நீர்மல்கும்
எரியரா வுஞ்சடை மேற்பிறை யேற்றவர்
கரியமா லோடயன் காண்பரி தாகிய
பெரியர்கோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

வரிகளையுடைய பாம்பு , எலும்பு ஆகியவற்றை ஆபரணமாக அணிந்த மார்பினர் இறைவர் . கங்கையைத் தாங்கிய நெருப்புப் போன்ற சிவந்த சடையில் பிறைச்சந்திரனைச் சூடியவர் . கருநிறத் திருமாலும் , பிரமனும் காண்பதற்கரிய ஓங்கிய பெருமை யுடைய சிவபெருமான் கோயில் கொண்டருளுவது திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

வரி அரா - கோடுகளை உடைய பாம்பு . மல்கும் - நிறைந்துள்ள . எரியராவுஞ்சடை - நெருப்புப்போன்ற நிறமுடைய செஞ்சடை .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

நாணிலா தசமண் சாக்கியர் நாடொறும்
ஏணிலா தம்மொழி யவ்வெழி லாயவர்
சேணுலா மும்மதில் தீயெழச் செற்றவர்
பேணுகோ யில்அர தைப்பெரும் பாழியே.

பொழிப்புரை :

சமணர்களும் , புத்தர்களும் நாள்தோறும் பெருமையற்ற சொற்களை மொழிகின்றனர் . அவற்றை ஏலாது அழகுடையவராய் , ஆகாயத்தில் திரியும் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு அழித்த சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் கோயில் திருஅரதைப் பெரும்பாழியே .

குறிப்புரை :

ஏண் இலாத மொழி - பெருமையற்ற சொற்கள் . சேண் - ஆகாயம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

நீரினார் புன்சடை நிமலனுக் கிடமெனப்
பாரினார் பரவர தைப்பெரும் பாழியைச்
சீரினார் காழியுள் ஞானசம் பந்தன்செய்
ஏரினார் தமிழ்வல்லார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

கங்கையை மெல்லிய சடையில் தாங்கிய நிமலனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் எனப் பூவுலகத் தோரால் போற்றி வணங்கப்படும் திருஅரதைப் பெரும்பாழியைப் போற்றி , புகழுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இத்தமிழ்ப்பதிகத்தை ஓத வல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

நீரின்ஆர் - நீரினால் நிறைந்த . ஏரின் ஆர் - அழகால் நிறைந்த . தமிழ்வ ( ல் ) லார்க்கு இல்லையாம் பாவமே .
சிற்பி