திருமயேந்திரப்பள்ளி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

திரைதரு பவளமும் சீர்திகழ் வயிரமும்
கரைதரு மகிலொடு கனவளை புகுதரும்
வரைவிலா லெயிலெய்த மயேந்திரப் பள்ளியுள்
அரவரை யழகனை யடியிணை பணிமினே.

பொழிப்புரை :

கடலலைகள் அடித்துவரும் பவளங்களும் , சிறப்புடைய வைரமும் , கரையிலே ஒதுக்கப்பட்ட அகில் மரங்களும் , கனமான சங்குகளும் நிறைந்த திருமயேந்திரப்பள்ளி என்னும் திருத்தலத்தில் , மேருமலையாகிய வில்லால் , அக்கினிக் கணையாகிய அம்பை எய்து முப்புரங்களை எரியும்படி செய்த , இடையில் பாம்பைக் கச்சாக அணிந்துள்ள அழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

திரைதரு - கடல் அலைகள் அடித்துவந்த , பவளம் . கரைதரு - கரையில் ஒதுக்கப்பட்ட . ( அகில் ) வளை - சங்கு . பின் இரண்டடிக்கு , எயில் எய்த அழகன் , மயேந்திரப்பள்ளியுள் அழகன் , அரவு : அரை அழகன் , எனப்பொருள் கொள்க . அரை - இடுப்பு . ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

கொண்டல்சேர் கோபுரங் கோலமார் மாளிகை
கண்டலுங் கைதையுங் கமலமார் வாவியும்
வண்டுலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியிற்
செண்டுசேர் விடையினான் றிருந்தடி பணிமினே.

பொழிப்புரை :

மேகத்தைத் தொடும்படி உயர்ந்த கோபுரங்களும் , அழகிய மாளிகைகளும் , நீர்முள்ளியும் , தாழையும் , தாமரைகள் மலர்ந்துள்ள குளங்களும் , வண்டுகள் உலவுகின்ற சோலைகளுமுடைய அழகிய திருமயேந்திரப் பள்ளியில் வட்டமாக நடைபயிலும் இடபத்தை வாகனமாகக் கொண்ட சிவபெருமானின் , உயிர்களை நன்னெறியில் செலுத்தும் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

கண்டல் - நீர்முள்ளி . உலாம் - உலாவும் . செண்டு - வட்டமாக நடை பயிலுதல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கோங்கிள வேங்கையும் கொழுமலர்ப் புன்னையும்
தாங்குதேன் கொன்றையும் தகுமலர்க் குரவமு
மாங்கரும் பும்வயன் மயேந்திரப் பள்ளியுள்
ஆங்கிருந் தவன்கழ லடியிணை பணிமினே.

பொழிப்புரை :

கோங்கு , வேங்கை , செழுமையான மலர்களையுடைய புன்னை , தேன் துளிகளையுடைய கொன்றை , சிறந்த மலர்களை உடைய குரவம் முதலிய மரங்கள் நிறைந்த சோலைகளும் , மாமரங்களும் , கரும்புகள் நிறைந்த வயல்களும் உடைய திருமயேந்திரப்பள்ளியில் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் வீரக் கழல்கள் அணிந்த திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

சோலைகளில் கோங்கு குரவம் முதலிய மரங்களும் ; வயல் - வயல்களில் . கரும்பும் பொருந்திய , மயேந்திரப்பள்ளி என்பது முன்னடிகளின் பொருளாதலின் அதற்கேற்பச் சோலையில் என்று ஒரு சொல் வருவித்து , வயல் மாவும் கரும்பும் எனமாற்றி ஏழனுருபு விரிக்க . மா + கரும்பு = மாங்கரும்பு என்ற உம்மைத்தொகையிலும் மெலிமிக்கது , எதுகை நோக்கி . மயேந்திரப்பள்ளியுள் ஆங்கு என்பதை ` எம்மூர் ஆங்கண் ` என்பதுபோற் கொள்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

வங்கமார் சேணுயர் வருகுறி யான்மிகு
சங்கமா ரொலியகில் தருபுகை கமழ்தரு
மங்கையோர் பங்கினன் மயேந்திரப் பள்ளியுள்
எங்கணா யகன்றன திணையடி பணிமினே.

பொழிப்புரை :

வாணிகத்தின் பொருட்டு மிக்க நெடுந்தூரம் சென்ற கப்பல்கள் திரும்பிவரும் குறிப்பினை ஊரிலுள்ளவர்கட்கு உணர்த்த ஊதப்படும் சங்குகளின் ஒலியும் , அகிற்கட்டைகளால் தூபம் இடுகின்ற போது உண்டாகும் நறுமணம் கமழும் புகையுமுடைய திருமயேந்திரப் பள்ளியுள் , உமாதேவியைத் தன் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டு வீற்றிருந்தருளும் எங்கள் தலைவனான சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

உயர்சேண் ஆர் வங்கம் - மிக்க நெடுந்தூரம் ( வாணிகத்தின் பொருட்டுச் ) சென்ற கப்பல் . வருகுறியால் மிகுசங்கம் ஆர் ஒலி தரு - திரும்பி வரும் குறிப்பை ஊரார்க்கு உணர்த்த ஊதுவதால் பல சங்குகள் ஆரவாரிக்கும் ; ஒலியையுடைய மயேந்திரப்பள்ளி . சேண் - நெடுந்தூரம் , ` சேணிகந்து விளங்கும் செயிர்தீர் மேனி ` என்னும் திருமுருகாற்றுப்படையாலும் அறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

நித்திலத் தொகைபல நிரைதரு மலரெனச்
சித்திரப் புணரிசேர்த் திடத்திகழ்ந் திருந்தவன்
மைத்திகழ் கண்டனன் மயேந்திரப் பள்ளியுட்
கைத்தல மழுவனைக் கண்டடி பணிமினே.

பொழிப்புரை :

இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல , பல முத்துக்குவியல்களை அழகிய கடலானது அலைகளால் கரையினில் சேர்க்கத் திருமயேந்திரப் பள்ளியுள் வீற்றிருந்தருளும் இறைவனும் , மை போன்று கருநிறம் கொண்ட கழுத்தையுடையவனும் , கையில் மழு என்னும் ஆயுதத்தை ஏந்தியவனுமான சிவபெருமானைத் தரிசித்து அவன் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

நித்திலத்தொகை - முத்துக்குவியல் பல . நிரைதரு - வரிசையாகப் பொருந்திய . மலர் என - மலர்களைப்போல . சித்திரம் - விதம் விதமான . புணரி - அலைகளில் . சேர்த்திட - சேர்க்க . கடலானது , இறைவனை வழிபடற்கு மலர்களைக் கையால் ஏந்தி வருதல் போல முத்துக்குவியலை அலையினால் அடித்து வருகிறது என்பது முன்னிரண்டடிகளின் கருத்து . கைத்தலம் மழுவன் - கையினிடத்து மழுவை ஏந்தியவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

சந்திரன் கதிரவன் றகுபுக ழயனொடும்
இந்திரன் வழிபட விருந்தவெம் மிறையவன்
மந்திர மறைவளர் மயேந்திரப் பள்ளியுள்
அந்தமி லழகனை யடிபணிந் துய்ம்மினே.

பொழிப்புரை :

சந்திரன் , சூரியன் , மிகுபுகழ்ப் பிரமன் , இந்திரன் முதலியோர் வழிபட விளங்கும் எம் இறைவனாய் , வேதமந்திரங்கள் சிறப்படைய திருமயேந்திரப் பள்ளியில் வீற்றிருந்தருளும் அழிவில்லாத பேரழகனாகிய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக .

குறிப்புரை :

அந்தம் இல் அழகன் - பேரழகன் ; மேல் , ` அந்தமில் அணி மலை மங்கை ` எனக்கூறியதற்கேற்ப ( தி .3 ப .27. பா .5.) இங்கு அந்தமில் அழகன் என்றதூஉம் காண்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

சடைமுடி முனிவர்கள் சமைவொடும் வழிபட
நடநவில் புரிவின னறவணி மலரொடு
படர்சடை மதியினன் மயேந்திரப் பள்ளியுள்
அடல்விடை யுடையவ னடிபணிந் துய்ம்மினே.

பொழிப்புரை :

சடைமுடியுடைய முனிவர்கள் பூசைத்திரவியங்களைச் சேகரித்து வழிபட , திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளுபவனும் , திருநடனம் செய்பவனும் , தேன் துளிக்கும் வாசனைமிக்க அழகிய மலர்களோடு பரந்து விரிந்த சடையில் சந்திரனைச் சூடியவனும் , வலிமையுடைய எருதினை வாகனமாக உடையவனுமான சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடைவீர்களாக !

குறிப்புரை :

சமைவு ஓடும் - சேகரித்த பூசைத்திரவியங்களோடும் ( வழிபட ). சமைவு - சேகரித்தல் , அமைத்தல் . இங்கு ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

சிரமொரு பதுமுடைச் செருவலி யரக்கனைக்
கரமிரு பதுமிறக் கனவரை யடர்த்தவன்
மரவமர் பூம்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
அரவமர் சடையனை யடிபணிந் துய்ம்மினே.

பொழிப்புரை :

பத்துத் தலைகளையுடைய , போர் செய்யும் வலிமையுடைய அரக்கனான இராவணனின் இருபது கரங்களும் கெடுமாறு , கனத்த கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வெண்கடம்ப மரங்கள் நிறைந்த அழகிய சோலை சூழ்ந்த திருமயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் பாம்பணிந்த சடைமுடியுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்கி நன்மை அடையுங்கள் .

குறிப்புரை :

சிரம் , ஒருபதும் - ஒருபத்தும் , செருவலி - போர் செய்யும் வலிமையையுடைய . மரவு - வெண்கடம்பு .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நாகணைத் துயில்பவ னலமிகு மலரவன்
ஆகணைந் தவர்கழ லணையவும் பெறுகிலர்
மாகணைந் தலர்பொழின் மயேந்திரப் பள்ளியுள்
யோகணைந் தவன்கழல் உணர்ந்திருந் துய்ம்மினே.

பொழிப்புரை :

ஆதிசேடனாகிய பாம்புப் படுக்கையில் துயில்பவனான திருமாலும் , அழகிய தாமரையில் வீற்றிருக்கும் பிரமனும் இறைவனின் அடிமுடிகளைத் தேட முற்பட்டு , பன்றி உருவெடுத்த திருமால் சிவனின் திருவடிகளை நெருங்கவும் இயலாதவரானார் . ( அன்ன உருவெடுத்த பிரமன் திருமுடியை நெருங்க இயலாதவரானார் என்பதும் குறிப்பு .) ஆகாயமளாவிய பூஞ்சோலைகளையுடைய திருமயேந்திரப் பள்ளியில் யோகமூர்த்தியாய் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை உணர்ந்து தியானித்து நன்மை அடைவீர்களாக !

குறிப்புரை :

நாகணை , நாக + அணை - ஆதிசேடனாகிய படுக்கை . அதில் துயில்பவனும் , மலரவனும் , இருவருமாகத் தேடத் தொடங்கி , மாகணைந்து - ( மாகம் அணைந்து ) - ஆகாயத்தை அளாவி . மாகம் - மாகு எனக் கடைக்குறைந்து நின்றது . யோகு அணைந்தவன் - யோகம் செய்பவன் . யோகியாயிருந்து ` முத்தியுதவுதலதுவும் ஓரார் ` என்பதுங் காண்க . ( சிவஞானசித்தியார் சுபக்கம் சூ - ம் . 1-50)

பண் :கொல்லி

பாடல் எண் : 10

உடைதுறந் தவர்களு முடைதுவ ருடையரும்
படுபழி யுடையவர் பகர்வன விடுமினீர்
மடைவளர் வயலணி மயேந்திரப் பள்ளியுள்
இடமுடை யீசனை யிணையடி பணிமினே.

பொழிப்புரை :

ஆடையினைத் துறந்தவர்களாகிய சமணர்களும் , மஞ்சள் உடை அணிபவர்களாகிய புத்தர்களும் மிக்க பழிக்கிடமாகக் கூறுவனவற்றைக் கேளாது விடுவீர்களாக . மடையின் மூலம் நீர் பாயும் வளமுடைய வயல்களையுடைய அழகிய மயேந்திரப்பள்ளியுள் வீற்றிருந்தருளும் சிவபெருமானின் திருவடிகளை வணங்குவீர்களாக .

குறிப்புரை :

உடை துறந்தவர் - சமணர் . உடை துவர் உடையவர் - மருதந்துவரினால் தோய்த்த காவி உடையை யுடைய புத்தர் . துவர் - இங்கு மருதந்துவர் மஞ்சட்காவியை யுணர்த்திற்று . மயேந்திரப் பள்ளியுள் ; இடம் உடை - தனக்கு இடமாக உறைதலையுடைய . முடை - தீ நாற்றம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

வம்புலாம் பொழிலணி மயேந்திரப் பள்ளியுள்
நம்பனார் கழலடி ஞானசம் பந்தன்சொல்
நம்பர மிதுவென நாவினா னவில்பவர்
உம்பரா ரெதிர்கொள வுயர்பதி யணைவரே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் சோலைகளையுடைய அழகிய திருமயேந்திரப்பள்ளியுள் எவ்வுயிரும் விரும்பும் சிவபெருமானின் வீரக்கழலணிந்த திருவடிகளைப் போற்றி ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை ` இது நம்முடைய கடமை ` என்ற உறுதியுடன் நாவினால் பாடித் துதிப்பவர்கள் தேவர்கள் எதிர்கொண்டு அழைக்க உயர்ந்த இடத்தினை அடைவார்கள் .

குறிப்புரை :

நம்பரம் - நமது கடமை . பரம் - பாரம் . வம்பு - மணம் . உம்பர் + ஆர் = தேவர் .
சிற்பி