திருமுதுகுன்றம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

வண்ணமா மலர்கொடு வானவர் வழிபட
அண்ணலா ராயிழை யாளொடு மமர்விடம்
விண்ணின்மா மழைபொழிந் திழியவெள் ளருவிசேர்
திண்ணிலார் புறவணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

பல வண்ண மலர்களைக் கொண்டு வானவர்கள் வழிபடச் சிவபெருமான் அழகிய ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு இனிது வீற்றிருந்தருளும் இடமாவது , வானத்திலிருந்து மழை பொழிந்து வெள்ளருவியாகப் பாயச் செழித்த திண்மையான முல்லைநிலம் சூழ விளங்கும் அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

திண்ணில் ஆர் - பிருதிவியின் தன்மையாகிய திண்மையில் பொருந்திய . புறவு - முல்லை நிலத்தை . அணி - அணிந்த ; சூழ உடைய திருமுதுகுன்றம் . ` மண் கடினமாய்த் தரிக்கும் ` ( உண்மை விளக்கம் . பா .10.) என்பதால் திண்ணில் ஆர் புறவு எனப்பட்டது .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

வெறியுலாங் கொன்றையந் தாரினான் மேதகு
பொறியுலா மரவசைத் தாடியோர் புண்ணியன்
மறியுலாங் கையினான் மங்கையோ டமர்விடம்
செறியுளார் புறவணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

வாசனை பொருந்திய கொன்றை மாலையை அணிந்து , படமெடுக்கும் புள்ளிகளையுடைய பாம்பை இடையில் கட்டி ஆடுகின்ற புண்ணிய மூர்த்தியான சிவபெருமான் , இளமான் கன்றை ஏந்திய திருக்கரத்தை உடையவனாய் , உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற இடமானது சோலைகள் நிறைந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

பொறி உலாம் மா - புள்ளியுடை மான்தோலை . அசைத்து - உடுத்து . செறியுள் ( வளம் ) செறிதல் . செய்யுள் , விக்குள் என்புழிப்போல , செறியுள் - என்பதிலும் உள் தொழிற்பெயர் விகுதி . செறியுள் - மண்டிணிந்த வன்னிலம் . ஆர் - பொருந்திய புறவு .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

ஏறினார் விடைமிசை இமையவர் தொழவுமை
கூறனார் கொல்புலித் தோலினார் மேனிமேல்
நீறனார் நிறைபுனற் சடையனார் நிகழ்விடம்
தேறலார் பொழிலணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

இறைவன் , இடபவாகனத்தில் ஏறித் தேவர்கள் தொழுது போற்ற , உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய புலியின் தோலை ஆடையாக அணிந்து , திருமேனியில் திருவெண்ணீறு அணிந்து , நிறைந்த கங்கையைச் சடைமுடியில் தாங்கி வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிகளையுடைய மலர்கள் விளங்கும் சோலைகள் சூழ்ந்த அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

உமைகூறனார் - மாதுபாதியார் . நீறனார் - திருநீறு அணிந்தவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

உரையினா ருறுபொரு ளாயினா னுமையொடும்
விரையினார் கொன்றைசேர் சடையினார் மேவிடம்
உரையினா ரொலியென வோங்குமுத் தாறுமெய்த்
திரையினா ரெறிபுனற் றிருமுது குன்றமே.

பொழிப்புரை :

இறைவன் வேதத்தால் நுவலப்படும் பொருளாக விளங்குபவன் . உமாதேவியை உடனாகக் கொண்டு நறுமணம் கமழும் கொன்றை மலரைச் சடைமுடியில் அணிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பக்தர்கள் உரைக்கும் அரநாமத்தின் ஒலியென அலையோசை எழுப்பும் , பெருகுகிற மணிமுத்தாறுடைய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

( சொல் வடிவாயிருப்பதோடு ) சொல்லிற் பொருந்திய பொருளும் ஆயினவன் ` சொல்லானைச் சொல்லார்ந்த பொருளானை ` ( அப்பர் பெருமான் ) என்பதும் காண்க . சொல் வடிவு அம்பிகை , பொருள் வடிவு இறைவன் என்ற திருவிளையாடற்புராணத்தோடு மாறுபாடின்மை சிவம் சத்தி அபேதத்தாற் கொள்க . விரை - வாசனை .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

கடியவா யினகுரற் களிற்றினைப் பிளிறவோர்
இடியவெங் குரலினோ டாளிசென் றிடுநெறி
வடியவாய் மழுவினன் மங்கையோ டமர்விடம்
செடியதார் புறவணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

கனத்த குரலில் ஆண் யானையானது பிளிற , இடிபோன்ற குரலில் கர்ச்சிக்கும் சிங்கம் செல்லும் வழிகளில் , கூரிய முனையுடைய மழுப்படை ஏந்தி , உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளும் இடமாவது செடிகொடிகள் அடர்ந்த குறிஞ்சிப் புறவிடமான அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

பிளிற - ( யானை ) முழங்க , கடிய ஆயின குரல் களிற்றினை - கடுமை உடையன ஆன குரலையுடைய அவ் யானையை . ஓர் - ஒரு . ஆளி - சிங்கம் . இடிய - இடிபோன்ற . வெங்குரலினோடு - கொடிய குரலோசையோடு . சென்றிடும் - செல்லும் . நெறி - வழிகளையுடைய - ( திருமுதுகுன்றம் ) புறவணி முதுகுன்றம் என்க . வடிய . - கூரிய .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

கானமார் கரியினீ ருரிவையார் பெரியதோர்
வானமார் மதியினோ டரவர்தா மருவிடம்
ஊனமா யினபிணி யவைகெடுத் துமையொடும்
தேனமார் பொழிலணி திருமுது குன்றமே.

பொழிப்புரை :

காட்டில் திரியும் யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்திய இறைவன் , அகன்ற வானத்தில் தவழும் சந்திரனையும் , பாம்பையும் அணிந்து , உயிர்களைப் பற்றியுள்ள குற்றமான ஆணவம் என்னும் நோயைத் தீர்த்து , அருளும் பொருட்டு உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடமாவது , தேன் துளிக்கும் பூஞ்சோலைகளையுடைய அழகிய திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

பெரியதோர் வானம் - பெரியதாகிய வானம் . ஓர் - அசை . அரவர் - அரவையணிந்தவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

மஞ்சர்தா மலர்கொடு வானவர் வணங்கிட
வெஞ்சொலார் வேடரோ டாடவர் விரும்பவே
அஞ்சொலா ளுமையொடும் மமர்விட மணிகலைச்
செஞ்சொலார் பயிறருந் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

வலிமை மிகுந்தவராகிய சிவபெருமானைத் தேவர்கள் மலர்தூவிப் போற்றி வணங்க , கொடுந்தொழில் செய்யும் வேடர்களும் , பிற ஆடவர்களும் விரும்பித் தொழ , அழகிய இன்சொல் பேசும் உமாதேவியோடு இறைவர் வீற்றிருந்தருளும் இடம் வேதங்களை நன்கு கற்றவர்களும் , பக்திப் பாடல்களைப் பாடுபவர்களும் வசிக்கின்ற திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

மஞ்சர் - சிவபெருமான் . மைந்து - வலிமை . வலிமை யுடையவர் மைந்தர் ; அது போலியாய் மஞ்சர் என ஆயிற்று . ` மஞ்சா போற்றி மணாளாபோற்றி ` ( தி .8 திருவா . பா .4 அடி . 183) செஞ்சொல் - நேரே பொருளுணர்த்தும் சொல் . ( குறிப்பிற் பொருளுணர்த்தல் முதலியன வியங்கியச் சொல் ) கலைச்செஞ்சொலார் ( விருத்தாசல புராணம் ).

பண் :கொல்லி

பாடல் எண் : 8

காரினா ரமர்தருங் கயிலைநன் மலையினை
ஏரினார் முடியிரா வணனெடுத் தானிற
வாரினார் முலையொடும் மன்னினார் மருவிடம்
சீரினார் திகழ்தருந் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

மழை பொழியும் கார்மேகம் போன்று உயிர்கட்கு அருள்புரியும் சிவபெருமான் வீற்றிருக்கும் நன்மைதரும் கயிலை மலையினை , அழகிய முடியுடைய இராவணன் எடுத்தபோது , அவனை நலியச் செய்த இறைவன் , கச்சணிந்த முலையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் இடம் சிறப்பு மிக்க திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

கார் மேகம் - பருவம் அறிந்து பெய்யும் மேகம் போல . பக்குவ நோக்கி ஆன்மாக்களுக்கு அருள் செய்ய வரலால் . காரினார் - மேகம் போன்றவர் . இராவணன் இறச் செய்து - என ஒரு சொல் வருவிக்க , சொல்லெச்சம் . சீரினார் - மேலோர்கள் . திகழ்தரு - விளங்கி வாழ்கின்ற . ( திருமுதுகுன்றம் ).

பண் :கொல்லி

பாடல் எண் : 9

ஆடினார் கானகத் தருமறை யின்பொருள்
பாடினார் பலபுகழ்ப் பரமனா ரிணையடி
ஏடினார் மலர்மிசை யயனுமா லிருவரும்
தேடினா ரறிவொணார் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

இறைவர் சுடுகாட்டில் திருநடனம் ஆடியவர் . அரிய வேதங்களை அருளி , அவற்றின் உட்பொருளை விரித்தோதியவர் . எவ்வுயிர்கட்கும் தலைவரான அவர் தம் திருவடிகளை இதழ்களையுடையை தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேடியும் அறியப்படவொண்ணாதவர் . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் இடம் திருமுதுகுன்றம் ஆகும் .

குறிப்புரை :

கானகத்து ஆடினார் . பொருளைப் பாடினார் . புகழையுடைய பரமனார் . ஏடின் - இதழ்களால் . ஒணார் - ஒன்றக் கிடைக்காதவர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

மாசுமெய் தூசுகொண் டுழல்சமண் சாக்கியர்
பேசுமெய் யுளவல்ல பேணுவீர் காணுமின்
வாசமார் தருபொழில் வண்டினம் மிசைசெயத்
தேசமார் புகழ்மிகுந் திருமுது குன்றமே.

பொழிப்புரை :

அழுக்கு உடம்பையும் , அழுக்கு உடையையுமுடைய சமணர்களும் , புத்தர்களும் கூறும் மொழிகள் மெய்ம்மையானவை அல்ல . வாசனை பொருந்திய சோலைகளில் வண்டினங்கள் இசைக்க , அழகும் , புகழும் மிகுந்த திருமுதுகுன்றம் என்னும் திருத்தலத்தைத் தரிசித்து , அங்குள்ள இறைவனைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

மாசு - அழுக்கு . அச்சொல்லைத் தூசு என்ற சொல்லினும் கூட்டி அழுக்கு உடம்பையும் அழுக்கு உடையையும் உடைய என உரைக்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

திண்ணினார் புறவணி திருமுது குன்றரை
நண்ணினான் காழியுண் ஞானசம் பந்தன்சொல்
எண்ணினா னீரைந்து மாலையு மியலுமாப்
பண்ணினாற் பாடுவார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

செழுமையான சோலைகளையுடைய திருமுதுகுன்றத்தில் வீற்றிருந்தருளும் இறைவனை மனம் , வாக்கு , காயம் மூன்றும் ஒன்றுபட வழிபட்டு , சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தைப் பண்ணிசையோடு பாடவல்லவர்களின் பாவம் நீங்கும் .

குறிப்புரை :

இயலுமாப் பண்ணினால் பாடுவார் ` கோழைமிடறாகக் கவி கோளுமில வாக இசை கூடும் வகையால் ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொல் மகிழும் ஈசன் ` ( தி .3 ப .71. பா .1.) ஒப்பிடுக . பதிகக் குறிப்பு முதுகுன்றம் என்பதற்கேற்ப 1, 5, 7 இப்பாடல்களிற் குறிஞ்சி நில வருணனை கூறப்படுகிறது .
சிற்பி