தென்குடித்திட்டை


பண் :கொல்லி

பாடல் எண் : 1

முன்னைநான் மறையவை முறைமுறை குறையொடும்
தன்னதாள் தொழுதெழ நின்றவன் றன்னிடம்
மன்னுமா காவிரி வந்தடி வருடநல்
செந்நெலார் வளவயல் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

நான்கு மறைகளும் நூல்களில் விதித்த முறையில் தொழுது போற்ற , உயிர்களெல்லாம் தங்கள் குறைகளை முறையிட்டுத் தன் திருவடிகளை வணங்கிப் போற்றச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , காவிரிநீர் வாய்க்கால்கள் வழிவந்து செந்நெல் விளையும் வயல்களை வளப்படுத்தும் சிறப்புடைய தென்குடித்திட்டை ஆகும் .

குறிப்புரை :

தன்னதாள் - தன்னுடைய திருவடிகள் . அகரம் - ஆறன் உருபு ` மன்னுமா காவிரி .`

பண் :கொல்லி

பாடல் எண் : 2

மகரமா டுங்கொடி மன்மத வேடனை
நிகரலா காநெருப் பெழவிழித் தானிடம்
பகரவா ணித்திலம் பன்மக ரத்தொடும்
சிகரமா ளிகைதொகுந் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

மீன்கொடியுடைய மன்மதன் எரிந்து சாம்பலாகுமாறு நெருப்புப்பொறி பறக்க நெற்றிக் கண்ணைத் திறந்து விழித்த ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வாள் போல் மின்னும் முத்துக்களும் , பல அணிவகைகளும் பதிக்கப்பெற்று உயர்ந்து விளங்கும் மாளிகைகளையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

மீன்அசையும் கொடியையுடைய மன்மதனாகிய வேளை . வேள் , எனலாகுமெனில் ஏனையவற்றினின்றும் பிரித்தற்கு மன்மத வேள்தனை என்றார் . மன்மதவேடனை - மன்மதவேள்தனை . மன்மதவேள் இருபெயரொட்டுப் பண்புத்தொகை .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கருவினா லன்றியே கருவெலா மாயவன்
உருவினா லன்றியே யுருவுசெய் தானிடம்
பருவநாள் விழவொடும் பாடலோ டாடலும்
திருவினான் மிகுபுகழ்த் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

இறைவன் கருவயப்பட்டுப் பிறவாமலே எல்லாப் பொருள்கட்கும் கருப்பொருளாக விளங்குபவன் . தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவமில்லாத இறைவன் பிற பொருள்களெலாம் உருவு கொள்ளும்படி தோற்றுவித்து அருள்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பருவகாலங்களிலும் , திருவிழாக்காலங்களிலும் பாடலும் , ஆடலும் செல்வத்தால் மிகச் சிறப்புற நடக்கும் புகழையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் . கருவினாலன்றி என்றது சிவபெருமான் கருவயப்பட்டுப் பிறவான் என்பதை உணர்த்தும் . ` பிறவாதே தோன்றிய பெம்மான் தன்னை ` ( தி .6 ப .11 பா .1) என்ற திருநாவுக்கரசர் திருவாக்கை இங்கு நினைவுகூர்க . பிறப்பில்லாத அவனுக்கு இறப்புமில்லை . அவன் அநாதி நித்தப்பொருள் . ( அநாதி - தோற்றமும் , அழிவுமில்லாதது ) உருவினாலன்றி - தனக்கென ஒரு குறிப்பிட்ட உருவம் இல்லாதவன் . தன்பொருட்டு உருவு கொள்ளாது அடியார் பொருட்டு உருவம் கொள்பவன் . ` நானாவித உருவால் நமை ஆள்வான் ` ( தி .1 ப .9 பா .5) என்ற திருஞானசம்பந்தர் திருவாக்கையும் , ` இப்படியன் இந்நிறத்தன் இவ்வண்ணத்தன் இவனிறைவன் என்றெழுதிக் காட்டொணாதே ` என்ற திருநாவுக்கரசர் திருவாக்கையும் ( தி .6 ப .97 பா .10) இங்கு நினைவுகூர்க .

குறிப்புரை :

பருவநாள்களிலும் , திருவிழாக்களிலும் பாடல் , ஆடல் முதலியவை செல்வத்தினால் மிகச்சிறப்புற நடக்கும் புகழையுடைய தென் குடித்திட்டை என்பது பின்னிரண்டடிக்கும் பொருள் . பருவ நாளொடும் விழாவொடும் , என ஒடு , உம் இரண்டையும் முன்னும் கூட்டுக . மூன்றன் உருபு ஏழன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம் . பருவம் - அமாவாசை , பௌர்ணமி என்பவை .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

உண்ணிலா வாவியா யோங்குதன் றன்மையை
விண்ணிலா ரறிகிலா வேதவே தாந்தனூர்
எண்ணிலா ரெழின்மணிக் கனகமா ளிகையிளந்
தெண்ணிலா விரிதருந் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

இறைவன் உயிருக்குள் உயிராய் ஓங்கி ஒளிரும் தன்மையைத் தேவர்களும் அறிகிலர் . அவன் வேத உபநிடத உட்பொருளாக விளங்குபவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் அழகிய மணிகள் பதிக்கப்பெற்ற பொன்மாளிகையின் மேல் , தெளிந்த நிலவின் ஒளி பரவும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

உள் - உயிருக்குள் . நிலாவு - விளங்கும் . ஆவியாய் - உயிராய் . ஓங்கும் தம் தன்மை . ` உயிர்க்குயிராம் ஒருவனையும் ` என வருதல் காண்க . ( சிவஞானசித்தியார் . சூ . 9. பா . 5) ஆர் - நிறைந்த . எண்ணில் - அளவற்ற . அழகையுடைய மணிகள் அழுத்திய பொன் மாளிகையின்மேல் தெளிவான நிலாவிரித்துப் பரவும் தென்குடித் திட்டை .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வருந்திவா னோர்கள்வந் தடையமா நஞ்சுதான்
அருந்தியா ரமுதவர்க் கருள்செய்தா னமருமூர்
செருந்திபூ மாதவிப் பந்தர்வண் செண்பகம்
திருந்துநீள் வளர்பொழில் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

திருப்பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய நஞ்சின் வெப்பத்தால் துன்புற்ற தேவர்கள் தன்னைத் தஞ்சமென வந்தடைய அவர்களுக்கு இரங்கி நஞ்சைத் தான் அருந்தி அமுதத்தை அவர்கட்கு அருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் நகர் , செருந்தி , மாதவி , செண்பகம் இவை மிகுதியாக வளரும் நீண்ட சோலைகளை உடைய தென்குடித்திட்டையாகும் .

குறிப்புரை :

வந்துஅடைய - வந்து சரண்புக . தான் நஞ்சு அருந்தி அரிய அமிர்தத்தை அவர்களுக்கு அருள்செய்தவன் என , அவன் பெருங்கருணைத்திறம் வியந்தவாறு . மாதவிக்கொடி பந்தல் போலப் படர்தலால் , மாதவிப்பந்தல் என்றே கூறப்படும் . மாதவிமரம் என்றலும் உண்டு . திருந்து நீள் என்றது பொழிலொடும் சேரும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

ஊறினா ரோசையுள் ஒன்றினா ரொன்றிமால்
கூறினா ரமர்தருங் குமரவேள் தாதையூர்
ஆறினார் பொய்யகத் தையுணர் வெய்திமெய்
தேறினார் வழிபடுந் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

இறைவர் எப்பொருள்களிலும் நிறைந்தவர் . எல்லா ஓசைகளிலும் ஒன்றியவர் . திருமாலை ஒரு கூறாகக் கொண்டவர் . குமரக்கடவுளின் தந்தை . அப்பெருமானார் வீற்றிருந்தருளும் நகரானது ஆறு பகைகளாகிய காமம் , குரோதம் , உலோபம் , மோகம் , மதம் , மாச்சரியம் இவற்றைக் களைந்து , நிலையற்ற பொருள்கள்மேல் செல்லும் அவாவினை அடக்கி , மனத்தைப் பொறி வழிச் செல்ல விடாது ஒருமுகப்படுத்தி , சிவனே மெய்ப்பொருள் எனத் தெளிந்தவர்கள் வழிபடும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

பொய்யகத்து ஆறினார் - பொய்ப்பொருள்கள் மேற்செல்லும் அவா அடங்கினவர் . ஐ உணர்வு - ஐந்தாகிய உணர்வு மனம் . ` அஃது எய்தலாவது , மடங்கி ஒருதலைப்பட்டுத் தாரணைக்கண் நிற்றல் `. ( திருக்குறள் 354 பரிமேலழகருரை . ) இவை எய்திய வழியும் , மெய்யுணர்வு இல்லாவிடத்து வீடுபய வாமையின் மெய்தேறினார் என்றருளினர் . மெய்தேறுதல் - சிவனே பரம்பொருளெனத் தெளிதல் .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கானலைக் கும்மவன் கண்ணிடந் தப்பநீள்
வானலைக் குந்தவத் தேவுவைத் தானிடம்
தானலைத் தெள்ளமூர் தாமரைத் தண்டுறை
தேனலைக் கும்வயல் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

காட்டிலுள்ள உயிர்களை வருத்தும் வேடர் குலத்தவராகிய கண்ணப்ப நாயனார் கண் இடந்து அப்பியபோது , தேவர்களும் பொறாமையால் வருந்தும்படி , தவத்தையுடைய கண்ணப்பரைத் தெய்வமாகச் செய்தான் சிவபெருமான் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தெளிந்த நீர்நிலைகளில் மலர்ந்துள்ள தாமரைகளில் தண்டிலிருந்து தேன்பெருகிப் பாயும் வயல்வளமுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

கான் அலைக்கும் அவன் - காட்டிலுள்ள உயிர்வருக்கங்களை வருத்துகின்ற அவ்வேடர் குலத்தினராகிய கண்ணப்ப நாயனார் . வான் - தேவர்களையும் . அலைக்கும் - ( பொறாமையினால் ) வருந்தச் செய்வதாகிய . தவம் - தவத்தையுடைய . தேவு செய்தான் - தெய்வமாகச் செய்தவன் . ` குவபெருந்தடக்கை வேடன் ... ... தவப் பெருந்தேவு செய்தார் சாய்க்காடு மேவினாரே ` என்பதும் ` நரகரைத் தேவு செய்வானும் ` என்பதும் அப்பர் திருவாக்கு . தெள்ளம் ஊர் ... தென்குடித்திட்டை - தாமரைகளையுடைய தண்ணிய துறையிலிருந்து தேன் அலை வீசிப்பாயும் வயல் வளத்தையுடைய தென்குடித்திட்டை .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

மாலொடும் பொருதிறல் வாளரக் கன்னெரிந்
தோலிடும் படிவிர லொன்றுவைத் தானிடம்
காலொடுங் கனகமூக் குடன்வரக் கயல்வரால்
சேலொடும் பாய்வயல் தென்குடித்திட்டையே.

பொழிப்புரை :

திருமாலின் அவதாரமான இராமனோடும் போர் புரியும் வல்லமைபெற்ற அரக்கனான இராவணன் கயிலைமலையின் கீழ்ச் சிக்குண்டு ஓலமிட்டு அலறும்படி தன்காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கால்வாய் வழியாகச் செல்லும் நீரில் பொன்னிற மூக்குடைய கயல் , வரால் , சேல் போன்ற மீன்கள் வந்து பாயும் வயல்களையுடைய திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

மாலொடும் பொருதிறல் - திக்குவிசயத்தில் திருமாலொடும் போர் செய்யும் வலிமை வாய்ந்த . ( வாளரக்கன் ) நெரிந்து - அரைபட்டு . ஓல் - ஓலம் . விரல் ஒன்று வைத்தான் - ஒரு விரலை வைத்தவன் ; ஊன்றவுமில்லை , வைத்த அளவிலேயே வாளரக்கன் நெரிந்து ஓலமிட்டான் என்பதை வைத்தான் என நயம்படக் கூறினார் . கால் ஓடும் - கால்வாய் வழியாகச் செல்லும் . கயல் - ஒரு வகை மீன் . கனகம் மூக்குடன்வர - பொன்மயமான மூக்கோடும்வர . பொன்மூக்கு மீன் என ஒரு மீன் இருப்பதாகத் தெரிகிறது . ( வ . சு . செங்கல்வராயப்பிள்ளை , தேவார ஒளிநெறிக் கட்டுரை - பாகம் 1, பக் 143. )

பண் :கொல்லி

பாடல் எண் : 9

நாரணன் றன்னொடு நான்முகன் றானுமாய்க்
காரணன் னடிமுடி காணவொண் ணானிடம்
ஆரணங் கொண்டுபூ சுரர்கள்வந் தடிதொழச்
சீரணங் கும்புகழ்த் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

திருமாலும் , பிரமனும் தேடியும் அடிமுடி காணவொண்ணாதவாறு விளங்கிய , உலகிற்கு நிமித்த காரணமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இப்பூவுலக தேவர்கள் என்று சொல்லப்படும் அந்தணர்கள் வேதம் ஓதித் தன் திருவடிகளை வணங்குமாறு சிறந்த தெய்வத்தன்மையுடைய புகழுடன் சிவ பெருமான் விளங்கும் திருத்தென்குடித்திட்டை என்பதாகும் .

குறிப்புரை :

காரணன் - உலகிற்கு நிமித்த காரணன் ஆகிய சிவபிரான் . சீர் அணங்கும் - சிறப்பினால் தெய்வத்தன்மை வாய்ந்த . புகழ்த் தென்குடித்திட்டை . அணங்கும் - பெயரடியாகப் பிறந்த பெயரெச்சம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

குண்டிகைக் கையுடைக் குண்டரும் புத்தரும்
பண்டுரைத் தேயிடும் பற்றுவிட் டீர்தொழும்
வண்டிரைக் கும்பொழிற் றண்டலைக் கொண்டலார்
தெண்டிரைத் தண்புனல் தென்குடித் திட்டையே.

பொழிப்புரை :

கமண்டலம் ஏந்திய கையுடைய சமணர்களும் , புத்தர்களும் சொல்லும் பொருத்தமில்லாத உரைகளைப் பற்றி நில்லாதீர் . வண்டுகள் ஒலிக்கும் சோலையின் உச்சியில் குளிர்ந்த மேகங்கள் தவழ , தெளிந்த அலைகளையுடைய குளிர்ச்சியான ஆறுபாயும் திருத்தென்குடித்திட்டையைச் சார்ந்து இறைவனை வழிபடுங்கள் .

குறிப்புரை :

பற்றுவிட்டீர்தொழும் - பற்றுவிட்டீர்களாகித் தொழு மின்கள் . விட்டீர் - முற்றெச்சம் . தொழும் - ஏவற்பன்மை . பொழில் தண்தலை கொண்டல் ஆர் - சோலைகளின் குளிர்ந்த உச்சியில் மேகங்கள் படியும் .

பண் :கொல்லி

பாடல் எண் : 11

தேனலார் சோலைசூழ் தென்குடித் திட்டையைக்
கானலார் கடிபொழில் சூழ்தருங் காழியுள்
ஞானமார் ஞானசம் பந்தன செந்தமிழ்
பானலார் மொழிவலார்க் கில்லையாம் பாவமே.

பொழிப்புரை :

தேன் துளிக்கும் மலர்களையுடைய சோலைகள் சூழ்ந்த திருத்தென்குடித்திட்டையைப் போற்றி , கடற்கரையின்கண் அமைந்துள்ள நறுமணமிக்க சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த , சிவஞானம் நிறைந்த ஞானசம்பந்தன் அருளிய இச் செந்தமிழ்ப்பாக்களைப் பாடவல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

கானல் ஆர் - கடற்கரையின் கண்ணே பொருந்திய . கடி பொழில் - வாசனையையுடைய பொழில் சூழ்ந்த காழி . பால்நல் ஆர் மொழி - பால்போலும் நன்மை பயக்கும் மொழியாலாகிய . மாலை வல்லார்க்குப் பாவம் இல்லையாம் .
சிற்பி