திருக்காளத்தி


பண் :கொல்லி

பாடல் எண் : 1

சந்தமா ரகிலொடு சாதிதேக் கம்மரம்
உந்துமா முகலியின் கரையினி லுமையொடும்
மந்தமார் பொழில்வளர் மல்குவண் காளத்தி
எந்தையா ரிணையடி யென்மனத் துள்ளவே. 

பொழிப்புரை :

சந்தனம், அகில், சாதிக்காய், தேக்கு ஆகிய மரங்களை அலைகளால் உந்தித் தள்ளிவரும் சிறப்பான பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில், தென்றல் காற்று வீசும் சோலைகள் வளர்ந்து பெருக, வள்ளல் தன்மையுடைய எம் தந்தையாகிய காளத்தி நாதர் உமாதேவியோடு, அவருடைய திருவடிகள் எம் மனத்தில் பதியுமாறு வீற்றிருந்தருளுகின்றார்.

குறிப்புரை :

சந்தம் - சந்தனமரம். ஆர் - ஆத்தி. சாதி - சாதிக்காய் மரம்.
உந்தும் - அலையால் தள்ளி வரும். மந்தம் - தென்றல் காற்று. மல்குவளன் - வளம் மிகுந்த; காளத்தி.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

ஆலமா மரவமோ டமைந்தசீர்ச் சந்தனம்
சாலமா பீலியுஞ் சண்பக முந்தியே
காலமார் முகலிவந் தணைதரு காளத்தி
நீலமார் கண்டனை நினையுமா நினைவதே. 

பொழிப்புரை :

ஆல், மா, குங்கும மரம், சந்தனம் ஆகிய மரங்களும், மிகுதியான மயிற்பீலியும், சண்பகமும் அலைகளால் தள்ளப்பட்டுப் பருவக்காலங்களில் நிறைகின்ற பொன்முகலி என்னும் ஆற்றின் கரையில் அமைந்துள்ள திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் நீலகண்டனான இறைவனை எவ்வகையில் நினைந்து வழிபடுதல் பொருந்துமோ அத்தன்மையில் நினைந்து வழிபடுதல் நம் கடமையாகும்.

குறிப்புரை :

ஆலம், மா, மரவம் ஓடு. சாலம் - மரவிசேடம். காலம் - பருவக் காலங்களில். ஆர் - நிறை(ந்தோடு)கின்ற, `காரூர்புனல் எய்திக் கரை கல்லி` என்பது சுந்தரமூர்த்தி சுவாமிகள் திருவாக்கு. நினையும் ஆ(று) நினைவது; நினைவீர்களாக, வியங்கோள். நினையுமாறு நினைவதாவது - \\\"நெஞ்சினைத் தூய்மை செய்து நினைக்குமா நினைப்பியாதே.\\\" (தி.4 ப.23 பா.9); \\\"உற்றவரும் - உறுதுணையும் நீயேயென்றும், உன்னையல்லால் ஒரு தெய்வம் உள்கேன் என்றும்\\\" (தி.6 ப.31 பா.7); \\\"பொதுநீக்கித் தனைநினையவல்லோர்க்கு\\\" (தி.6 ப.1 பா.5)

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கோங்கமே குரவமே கொன்றையம் பாதிரி
மூங்கில்வந் தணைதரு முகலியின் கரையினில்
ஆங்கமர் காளத்தி யடிகளை யடிதொழ
வீங்குவெந் துயர்கெடும் வீடெளி தாகுமே. 

பொழிப்புரை :

கோங்கு, குரவம், கொன்றை, பாதிரி, மூங்கில் ஆகிய மரங்களைத் தள்ளிக் கொண்டுவரும் பொன்முகலி ஆற்றின் கரையில் வீற்றிருக்கும் காளத்திநாதரின் திருவடிகளைத் தொழுது போற்ற, பெருகிவரும் கொடிய துன்பம் கெடும். முத்திப்பேறு எளிதாகக் கைகூடும்.

குறிப்புரை :

வீங்கு - வளர்ந்து வருகிற. வெந்துயர் - கொடிய துயர். கன்மங்கள்; காரணத்தைக் காரியமாக உபசரித்தார்.

பண் :கொல்லி

பாடல் எண் : 4

கரும்புதேன் கட்டியுங் கதலியின் கனிகளும்
அரும்புநீர் முகலியின் கரையினி லணிமதி
ஒருங்குவார் சடையினன் காளத்தி யொருவனை
விரும்புவா ரவர்கடாம் விண்ணுல காள்வரே.

பொழிப்புரை :

கரும்பு, தேன் கட்டி, வாழைக்கனி ஆகியவற்றை விளைவிக்கும் நீர்வளமுடைய பொன்முகலி ஆற்றின் கரையில், அழகிய பிறைச்சந்திரனை நீண்ட சடையில் சூடி வீற்றிருந்தருளும் ஒப்பற்ற காளத்திநாதரை விரும்பிப் பணிபவர்கள் விண்ணுலகை ஆள்வார்கள்.

குறிப்புரை :

கரும்பு தேன்கட்டி - கரும்பில் தொடுத்த இறாலின் தேனும், கரும்பு (சுடு) கட்டியும், அரும்பும் - விளைவிக்கும். நீர்வளம் உடைய முகலி அரும்பும். பிறவினை விகுதி தொக்கு நின்றது.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வரைதரு மகிலொடு மாமுத்த முந்தியே
திரைதரு முகலியின் கரையினிற் றேமலர்
விரைதரு சடைமுடிக் காளத்தி விண்ணவன்
நிரைதரு கழலிணை நித்தலும் நினைமினே.

பொழிப்புரை :

மலையில் வளரும் அகிலும் முத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில், தேன் துளிக்கின்ற நறுமண மலர்களைச் சடைமுடியில் அணிந்து விளங்கும், காளத்தியிலுள்ள தேவாதி தேவனாகிய சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழல்களை அணிந்த திருவடிகளைத் தினந்தோறும் நினைந்து போற்றி வழிபடுவீர்களாக.

குறிப்புரை :

வரை - மலை. அகில் - மரம். திரைதரு - அலைகளால் தருகின்ற.
முகலி - பொன் முகலியாறு. விரை - மணம். விண்ணவன் - தேவாதி தேவனாகிய சிவபிரான். நித்தல் - நாள்தோறும்.

பண் :கொல்லி

பாடல் எண் : 6

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 7

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கொல்லி

பாடல் எண் : 8

முத்துமா மணிகளு முழுமலர்த் திரள்களும்
எத்துமா முகலியின் கரையினி லெழில்பெறக்
கத்திட வரக்கனைக் கால்விர லூன்றிய
அத்தன்றன் காளத்தி அணைவது கருமமே.

பொழிப்புரை :

இராவணன் கயிலைமலையின் கீழ் நெரியும்படி தன் காற்பெருவிரலை ஊன்றிய சிவபெருமான், முத்துக்களும், மணிகளும், மலர்க்கொத்துக்களும் அலைகளால் தள்ளப்பட்டு வரும் பொன்முகலி ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகிய திருக்காளத்தி என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான். அத்திருத்தலத்தை அடைந்து அப்பெருமானை வணங்குதல் நம் கடமையாகும்.

குறிப்புரை :

இராவணன் என்ற பெயர்க்காரணம் புலப்பட, கத்திட என்றார்.

பண் :கொல்லி

பாடல் எண் : 9

மண்ணுமா வேங்கையும் மருதுகள் பீழ்ந்துந்தி
நண்ணுமா முகலியின் கரையினி னன்மைசேர்
வண்ணமா மலரவன் மாலவன் காண்கிலா
அண்ணலார் காளத்தி யாங்கணைந் துய்ம்மினே. 

பொழிப்புரை :

வேங்கை, மருது ஆகிய மரங்கள் வேருடன் வீழ்த்தப்பட்டுச் சேற்று மண்ணுடன் கலந்து தள்ளப்பட்டு வரும் பொன்முகலியாற்றின் கரையில், அழகிய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் காண்பதற்கு அரியவனும், எவ்வுயிர்கட்கும் நன்மையே செய்கின்றவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளு கின்றான். அத்திருத்தலத்தை அடைந்து வணங்கிப் போற்றி உய்தி பெறுங்கள்.

குறிப்புரை :

மண்ணும் - நிலத்தையும், (மா) வேங்கை மரங்களையும். மருதுகள் - மருதமரம் முதலியவற்றையும். பீழ்ந்து - பிளந்து. உந்தி - அடித்துக்கொண்டு.

பண் :கொல்லி

பாடல் எண் : 10

வீங்கிய வுடலினர் விரிதரு துவருடைப்
பாங்கிலார் சொலைவிடும் பரனடி பணியுமின்
ஓங்குவண் காளத்தி யுள்ளமோ டுணர்தர
வாங்கிடும் வினைகளை வானவர்க் கொருவனே. 

பொழிப்புரை :

பருத்த உடலுடைய சமணர்களும், புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களைக் கை விடுக. இறைவனுடைய திருவடிகளை வணங்கிப் போற்றுங்கள். வளமுடன் ஓங்கும் வள்ளலாகிய திருக்காளத்திநாதனை உள்ளத்தால் உணர்ந்து மனம் ஒன்றி வழிபட்டால் தேவர்களுக்கெல்லாம் தலைவனான அச்சிவபெருமான், வழிபடும் உயிர்களின் வினைகளைத் தீர்த்து நன்மை செய்வான்.

குறிப்புரை :

வீங்கிய உடலினர் - சமணர். விடும் - ஒழியுங்கள். பன்மையேவல் வினைமுற்று. வாங்கிடும் - நீக்கிடும்.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

அட்டமா சித்திகள் அணைதரு காளத்தி வட்டவார்
சடையனை வயலணி காழியான்
சிட்டநான் மறைவல ஞானசம் பந்தன்சொல்
இட்டமாப் பாடுவார்க் கில்லையாம் பாவமே. 

பொழிப்புரை :

அட்டமா சித்திகளைத் தரும் திருக்காளத்தியில் வீற்றிருந்தருளும் நீண்ட சடைமுடியுடைய சிவபெருமானைப் போற்றி, வயல் வளமிக்க அழகிய சீகாழியில் அவதரித்த நான்கு வேதங்களை யும் நன்கு கற்றுவல்ல ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை விரும்பி ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை.

குறிப்புரை :

அட்டமாசித்திகளாவன; அணிமா - சிறியதிற் சிறிதாதல், மகிமா - பெரியதிற் பெரிதாதல் அண்டங்களெல்லாம் அணு ஆதல், அணுக்கள் எல்லாம் அண்டங்கள் ஆதல் (திருவிளையாடற் புராணம்). லகிமா - மிகத் திண்ணியபொருளை மிக நொய்ய பொரு ளாக்குதல். கரிமா - மிக நொய்ய பொருளை மிகத் திண்ணிய பொரு ளாக்குதல். பிராத்தி - பாதாளத்திலிருப்பவன்; அடுத்த நிமிடம் வானுல கிலும் காணப்படுதல். பிராகாமியம் - பரகாயப் பிரவேசம். (வேற்று உடலில் புகுதல். இருந்த இடத்திலிருந்தே எண்ணிய போகமெல்லாம் அடைதல்). ஈசத்துவம் - சிவபெருமானைப்போல முத்தொழிலையும் செய்து நாள் கோள் முதலியவை தம் ஏவல் கேட்ப இருப்பது. வசித் துவம் - அனைத்துயிரும் அனைத்துலகும் தன் வசமாகச் செய்தல். கோளில் ... எண்குணத்தான் என்ற தொடருக்குப் பிறர் கருத்தாகப் பரிமேலழகர் இவற்றையும் காட்டினர். இச்சித்திகள் இன்றும் இத் தலத்துக் காணலாகும் என்பர். சிட்டம் - முறைமை, ஒழுக்கம்.
சிற்பி