திருப்பிரமபுரம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

கரமுனம்மல ராற்புனன்மலர் தூவியேகலந் தேத்துமின்
பரமனூர்பல பேரினாற்பொலி பத்தர்சித்தர்கள் தாம்பயில்
வரமுன்னவ்வருள் செய்யவல்லவெம் மையனாடொறு மேயசீர்ப்
பிரமனூர்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்னருள் பேணியே.

பொழிப்புரை :

யாவர்க்கும் மேலான பொருளான சிவபெருமானது ஊரும் பல திருப்பெயர்களை உடையது . பக்தர்களும் , சித்தர்களும் போற்றி வணங்க , அவர்கள் வேண்டும் வரங்களை நல்கி அருள் செய்ய வல்ல என் தலைவன் நாள்தோறும் விரும்பி வீற்றிருந்தருளும் சிறப்புடைய பிரமனூர் ஆகிய திருப்பிரமபுரத்தில் எழுந்தருளியுள்ள பிஞ்ஞகனின் அருளைப் போற்றிக் கைத்தாமரையால் தூய நீரை அபிடேகம் செய்து , மலர்களைத் தூவி ஒரு நெறிய மனம் வைத்து வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

கரம் முனம் மலரால் :- கரமலர் , முனமலர் , கைம்மலராலும் , மனமலராலும் . முனம் - முன்னம் - கருத்து . புனல் மலர் தூவி - நீரையும் பூவையும் தூவி . கலந்து - முக்கரணமும் ஒன்றுபட்டு . பலபேரினால் - பன்னிரண்டு திருப்பெயரோடு . பொலியும் சீர்ப் பிரமனூர் எனக்கொள்க . ஆல் , ஒடுப்பொருளில் வந்தது . ` தூங்கு கையானோங்குநடைய ` ( புறம் . 22 ) ` முன்ன - நினைத்தளவில் , வரம் அருள் செய்யவல்ல ஐயன் பிஞ்ஞகன் அருள் பேணி ஏத்துமின் `.

பண் :கொல்லி

பாடல் எண் : 2

விண்ணிலார்மதி சூடினான்விரும் பும்மறையவன் றன்றலை
உண்ணநன்பலி பேணினானுல கத்துளூனுயி ரான்மலைப்
பெண்ணினார்திரு மேனியான்பிர மாபுரத்துறை கோயிலுள்
அண்ணலாரரு ளாளனாயமர் கின்றவெம்முடை யாதியே.

பொழிப்புரை :

இறைவர் விண்ணிலே விளங்கும் சந்திரனைச் சடையில் சூடியவர் . விரும்பும் நான்மறைகளை ஓதுகின்ற பிரமனின் மண்டையோட்டை உண்கலனாகக் கொண்டு பிச்சை ஏற்றவர் . உலகத்து உயிர்கட்கு உடம்பும் , உயிருமானவர் . மலைமகளான உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவரும் , திருப்பிரமபுரத்துறைகின்ற கோயிலினுள் அருளைப் பொழிபவராய் அமர்ந்துள்ள தலைவரும் ஆகிய எம்முடைய சிவபெருமானே ஆதிப்பிரான் ஆவார் .

குறிப்புரை :

தலைஉண்ண நன்பலிபேணினான் - உண்ணுவதற்குத் தலையோட்டிற் பிச்சையேற்றவன் . உலகத்துள் உயிரின் - உடம்பும் உயிரும் ஆனவன் ` ஊனுயிரானாய் உலகானாய் ` என்பது சுந்தர மூர்த்திகள் திருவாக்கு . அண்ணல் - தலைமை . சூடினான் - சூடினவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

எல்லையில்புக ழாளனும்மிமை யோர்கணத்துடன் கூடியும்
பல்லையார்தலை யிற்பலியது கொண்டுகந்த படிறனுந்
தொல்லைவையகத் தேறுதொண்டர்கள் தூமலர்சொரிந் தேத்தவே
மல்லையம்பொழி றேன்பில்கும்பிர மாபுரத்துறை மைந்தனே.

பொழிப்புரை :

இறைவர் எல்லையற்ற புகழ் உடையவர் . தேவர்கள் கூட்டம் சூழ விளங்குபவர் . பற்களையுடைய பிரமனின் மண்டையோட்டில் பிச்சையேற்று மகிழ்ந்த வஞ்சகர் . அவர் பழமையான இந்நிலவுலகில் தத்துவங்களைக் கடந்து ஏறிய தெளிந்த அறிவுடைய தொண்டர்கள் தூய மலர்களைத் தூவி ஏத்தி வழிபட , வளம் மிக்க அழகிய சோலைகளில் தேன் சொட்டும் திருப்பிரமபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற வலிமையுடைய சிவபெருமானே யாவார் .

குறிப்புரை :

பல்லையார்தலை , படிறன் - வஞ்சகன் . எல்லாச் செல்வமும் வழிபட்டோர்க் களித்து ஒன்றும் இல்லான் போல் பிச்சையேற்றலின் . ஏறு - வினையைக் கடந்தேறிய . மல்லல் - வளம் , எதுகை நோக்கி மல்லை எனத் திரிந்தது . தேன்பில்கும் - தேன் சொட்டுகின்ற .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

அடையலார்புரம் சீறியந்தண ரேத்தமாமட மாதொடும்
பெடையெலாங்கடற் கானல்புல்கும்பிர மாபுரத்துறைகோயிலான்
றொடையலார்நறுங் கொன்றையான்றொழி லேபரவிநின் றேத்தினால்
இடையிலார்சிவ லோகமெய்துதற் கீதுகாரணங் காண்மினே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் மூன்று புரங்களையும் கோபித்து அழித்து , அந்தணர்கள் போற்றி வணங்க , உமாதேவியோடு , பெண் பறவைகள் தங்கள் ஆண் பறவைகளுடன் கூடும் கடற்கரைச் சோலைகளையுடைய திருப்பிரமாபுரத்தில் கோயில் கொண்டருளியவன் சிவபெருமான் . இடையீடில்லாதவர்களாய்ச் சிவலோகம் சென்று அடைவதற்கு , நறுங்கொன்றை மலர்களை மாலையாக அணிந்த சிவபெருமானின் வழிபாட்டிற்குரியவைகளைச் செய்து , அவன் அருட்செயல்களைப் போற்றி வழிபடும் நெறியே சாதனமாகும் என்பதை அறிவீர்களாக .

குறிப்புரை :

அடையலார் - பகைவர் . தொடையல் - மாலை . கொன்றையான் தொழிலே பரவி நின்று ஏத்தினால் சிவலோகம் எய்துதற்கு இடைஇல்லார் . காரணம் ஈது காண்மின் என்க . இடை - காலம்.

பண் :கொல்லி

பாடல் எண் : 5

வாயிடைம்மறை யோதிமங்கையர் வந்திடப்பலி கொண்டுபோய்ப்
போயிடம்மெரி கானிடைப்புரி நாடகம்மினி தாடினான்
பேயொடுங்குடி வாழ்வினான்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்
றாயிடைப்பொரு டந்தையாகுமென் றோதுவார்க்கரு டன்மையே.

பொழிப்புரை :

இறைவன் தன் திருவாயால் வேதங்களை அருளிச் செய்தவன் . தாருகாவனத்து முனிபத்தினிகள் வந்து பிச்சையிடப் பிரமகபாலத்தில் பலிஏற்று , சுடுகாட்டையே அரங்கமாக் கொண்டு நடனம் ஆடுபவன் . பேய்க் கணங்களுடன் கூடி வாழ்பவன் . திருப்பிரமாபுரத்துக் கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற பிஞ்ஞகனாகச் சிவபெருமானே , பெற்ற தாயும் , தந்தையும் , மற்றுமுள்ள அனைத்துப் பொருளுமாய் விளங்குபவன் என்பதை உணர்ந்து ஓதுபவர்கட்கு அவன் அருள்செய்பவன் .

குறிப்புரை :

போய்ப்போய் - அடுக்கு , பன்மைப்பொருட்டு ; பலகாலும் போய் என்று பொருள் . இடம் - நாடகமாடும் இடமான , எரிகான் , இடை - ஏழனுருபு . தாயும் , இடைக்காலத்தில் வந்து சேரும் பொருளும் , தந்தையும் ஆவான் என்று ஓதுவார்கட்கு அருள்தன்மை அத்தகையதாயிருந்தது என்பது ஈற்றடியின் பொருள் .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

ஊடினாலினி யாவதென்னுயர் நெஞ்சமேயுறு வல்வினைக்
கோடிநீயுழல் கின்றதென்னழ லன்றுதன்கையி லேந்தினான்
பீடுநேர்ந்தது கொள்கையான்பிர மாபுரத்துறை வேதியன்
ஏடுநேர்மதி யோடராவணி யெந்தையொன்றுநின் றேத்திடே.

பொழிப்புரை :

உயர் நெஞ்சமே ! என் சொல்வழி நில்லாது பிணங்கினால் அதனால் உனக்கு ஆகப்போவது என்ன ? வல்வினையை ஈட்டுவதற்கென்றே நீ ஓடி உழல்வது தான் என்ன ? பண்டைக்காலத்தில் தன் திருக்கரத்தில் நெருப்பேந்தியவன் சிவ பெருமான் . தன்னை வழிபடும் அடியவர்கட்குப் பேரின்பத்தை வழங்கும் தன்மையன் . திருப்பிரமாபுரத்து வீற்றிருந்தருளும் வேதங்களை அருளிச் செய்தவனும் , மலரை ஒத்த பிறைச் சந்திரனையும் , பாம்பையும் அணிந்தவனுமான சிவபெருமானை எம் தந்தை என்று போற்றி வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

வல்வினைக்கு ....... என் ( உறுதுணையாய் அவனிருக்கவும் ) எளிதினீங்காத தீவினை நீங்குவதற்கு நீ ஓடியுழல்வது ஏன் ? சேர்ந்தாரைக் கொல்வதாகிய கொடியபொருளும் அவனையடைந்தால் நற்பொருளாகும் . அவன் என அறிவித்தற்கன்றோ ? அக்காலத்தில் அழலை ஏந்தினான் ? மெய்யடியாரோடு பொய்யடியோமையும் ஆட்கொள்பவன் என்பதறிவித்தற்கு மதியோடு அராவணி எந்தையாயிருந்தான் , என்றுகொண்டு நீ ஏத்துவாயாக என்பது இப்பாசுரத்தின் கருத்து .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

செய்யன்வெள்ளிய னொள்ளியார்சில ரென்றுமேத்தி நினைந்திட
ஐயனாண்டகை யந்தணனரு மாமறைப்பொரு ளாயினான்
பெய்யுமாமழை யானவன்பிர மாபுரமிடம் பேணிய
வெய்யவெண்மழு வேந்தியைந்நினைந் தேத்துமின்வினை வீடவே.

பொழிப்புரை :

இறைவன் சிவந்த திருமேனியுடையவன் . வெள்ளிமலை எனப்படும் கயிலைக்கு நாயகன் . சிவஞானம் பெற்ற பெருமக்களால் எக்காலத்திலும் போற்றப்பட்டு வணங்கப்படும் தலைவன் . அளவில்லா ஆற்றலும் , எவ்வுயிரிடத்தும் பேரிரக்கமும் உடையவன் . அரிய நான்மறைகளின் உட்பொருளாய் விளங்குபவன் . பெய்யும் மழைபோன்றவன் . திருப்பிரமாபுரத்தில் வீற்றிருந்தருளும் மழுப்படையேந்திய சிவபெருமானை உங்கள் வினைகள் நீங்க வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

பெய்யும் மாமழை ஆனவன் . வெண்மழு முன்னும் வந்தது . வினைவீட - வினை ஒழிய .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

கன்றொருக்கையி லேந்திநல்விள வின்கனிபட நூறியுஞ்
சென்றொருக்கிய மாமறைப்பொரு டேர்ந்தசெம்மல ரோனுமாய்
அன்றரக்கனைச் செற்றவன்னடி யும்முடியவை காண்கிலார்
பின்றருக்கிய தண்பொழிற்பிர மாபுரத்தரன் பெற்றியே.

பொழிப்புரை :

ஒருகையால் பசுவின் கன்றைப்பற்றி விளமரத்தின் கனியை அழித்த திருமாலும் , தொகுக்கப்பட்ட வேதங்களின் பொருளை நன்கு கற்ற பிரமனும் , அன்று தன்காற் பெருவிரலை ஊன்றி இராவணனைக் கயிலையின்கீழ் நெருக்கிய சிவபெருமானுடைய திருவடியையும் , திருமுடியையும் தேடியும் காணாதவராயினர் . அப்பெருமான் அருள் தன்மையும் , ஆற்றலும் கொண்டு எழுச்சிமிக்க குளிர்ந்த சோலைகளையுடைய திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

ஒருகை , ஒருக்கை என இசை நோக்கி ஒற்றுமிகுந்தது . நூறி - அழித்தவன் ; பெயர்ச்சொல் . ஒருக்கிய - ஒருங்கு சேர்ந்த , தொகுத்த , ( மாமறை ) பின்தருக்கிய . இந்தப் பதிகத்தில் அரக்கனையும் அடி , முடி தேடிய இருவரையும் ஒரு பாசுரத்தில் கூறியதுணர்க .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

உண்டுடுக்கைவிட் டார்களும்முயர் கஞ்சிமண்டைகொள் தேரரும்
பண்டடக்கு சொற்பேசும்அப்பரி வொன்றிலார்கள்சொற் கொள்ளன்மின்
தண்டொடக்குவன் சூலமுந்தழன் மாமழுப்படை தன்கையிற்
கொண்டொடுக்கிய மைந்தனெம்பிர மாபுரத்துறை கூத்தனே.

பொழிப்புரை :

உணவை உண்டு ஆடையைக் கைவிட்ட சமணர்களும் , மண்டை என்னும் பாத்திரத்தில் கஞ்சியேற்று உண்ணும் புத்தர்களும் மக்களிடம் பரிவில்லாதவர்கள் . உயர்ந்தவையும் தொன்றுதொட்டு வருவனவுமாகிய வேத ஆகம நூல்களைப் பழித்துப் பேசுபவர் . அவர்கள் சொற்களைக் கொள்ள வேண்டா . வீணை , அக்குமாலை , சூலம் , நெருப்பு , பெரிய மழுப்படை இவற்றைத் தன்கையில் கொண்டு இவ்வுலகமனைத்தையும் ஒடுக்கி அருளும் வல்லமையுடையவன் எம் திருப்பிரமபுரத்து வீற்றிருந்தருளும் கூத்தனாகிய சிவபெருமானேயாவான் . அவனை வணங்கிப் போற்றி உய்வீர்களாக !

குறிப்புரை :

உடுக்கை - ஆடை . பண்டு அடக்கு சொல் - தொன்று தொட்டு வந்த சற்சமயக் கருத்துக்களை . தண்டு ( ஒடு ) - யோக தண்டத்துடன் . அக்கு - செபமாலை , இவை யோகரூபங் குறித்தவை . ஒடுக்கிய - உமாதேவியாரை இடப்பாகத்தே சேர்த்த . மைந்தன் - ஆண்மையுடையோன் . இது போகரூபங் குறித்தது . ஒடுக்கிய என்ற வினைக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப்பட்டது . ஆக இறைவனது மூன்று ரூபமும் இதனுள் அமைந்தமை காண்க . ` யோகியாய் ` ( சிவஞானசித்தியார் . 50 ) ஒருவனே மூன்றுருவும் கொள்ளுதல் அவனது திருவிளையாடல் என்பார் ` கூத்தன் ` என்றார் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பித்தனைப்பிர மாபுரத்துறை பிஞ்ஞகன்கழல் பேணியே
மெய்த்தவத்துநின் றோர்களுக்குரை செய்துநன்பொருண் மேவிட
வைத்தசிந்தையுண் ஞானசம்பந்தன் வாய்நவின்றெழு மாலைகள்
பொய்த்தவம்பொறி நீங்கஇன்னிசை போற்றிசெய்யுமெய்ம் மாந்தரே.

பொழிப்புரை :

பித்தனும் , திருப்பிரமபுரத்து உறைகின்ற பிஞ்ஞகனும் ஆகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி , மெய்த் தவநெறிகளில் நிற்போர்கட்கு உரைசெய்து வீடுபேறு அடையச் செய்ய வேண்டும் என்ற சிந்தையில் , ஞானசம்பந்தன் திருவாய்நவின்ற இத்திருமாலைகளைப் பொய்த்தவத்தில் செலுத்தும் பொறிவழிச் செல்லும் புலன்களின் குற்றம் நீங்க இன்னிசையால் போற்றுபவர்களே மெய்யுணர்ந்த மாந்தர் ஆவர் .

குறிப்புரை :

சிந்தையுள் தங்கி நா நவின்று எழுந்த , மாலைகள் . நன் பொருள் - வீடு . போற்றி செய்யுங்கள் - செய்வீரேல் , மெய்யுணர்ந்த மாந்தர் ஆவீர்கள் , நன்பொருள் , ஞானம் எனலும் பொருந்தும் .
சிற்பி