திருக்கண்டியூர் வீரட்டம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

வினவினேனறி யாமையில்லுரை செய்ம்மினீரருள் வேண்டுவீர்
கனைவிலார்புனற் காவிரிக்கரை மேயகண்டியூர் வீரட்டன்
தனமுனேதனக் கின்மையோதம ராயினாரண்ட மாளத்தான்
வனனில்வாழ்க்கைகொண் டாடிப்பாடியிவ் வையமாப்பலி தேர்ந்ததே.

பொழிப்புரை :

இறையருளை வேண்டிப் பணிசெய்யும் அன்பர்காள் ! அறியாமை காரணமாக வினவுகின்றேன் . உரைசெய்வீர்களாக ! ஆரவாரத்தோடு மிகுந்தநீர் செல்லும் காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்ட நாதன் , தனக்கு நெருக்கமான திருமாலும் , பிரமனும் அண்டங்களை ஆளத்தான் சுடுகாட்டில் வாழ்ந்து ஆடியும் , பாடியும் பிச்சையேற்றுத் திரிவது ஏன் ? தனக்கு முன்னோர் தேடிவைத்த பொருள் இல்லாத காரணத்தினாலா ?

குறிப்புரை :

கனைவு - வேகம் . கண்டியூர் வீரட்டன் . தமர் ஆயினார் - தம்தம் இனத்தவரான பிரம விட்டுணுக்கள் . அண்டம் ஆளத்தான் வனத்தில் குடியிருந்து இவ்வுலகில் பெரிய பிச்சை எடுப்பது . முன்னே தனம் - முன்னோர் தேடிவைத்த பொருள் , தனக்கு இல்லாமையாலோ ? அவன் அருளை வேண்டிப் பணிசெய்யும் அடிகளீர் , நீர் முற்றிலும் உணரும்படி விடை சொல்வீர்களாக என்பது இதன் பொழிப்பு . அறியாமை இல் உ ரை செய்தல் - கேட்போர் ஐயந்திரிபு இல்லையாக அங்கை நெல்லியென உணருமாறு உரைத்தல் வினவினேன் , அருள வேண்டுவீராகிய நீவிர் அறியாமை இல்லாத விடையாக உரை செய்யுமின் என்றார் கேட்டோர் . அறியாமை என்பதற்கு வேறு பொருள் கூறுதல் பிழையாகும் . தமர் ஆயினார் என்றது அரசினையும் , தண்டலையாளரையும் . குடியரசுகள் அரசியலார் என்பது போன்று , தமர் அண்டம் ஆளத்தான் பிச்சை எடுப்பது ஏன் ?

பண் :கொல்லி

பாடல் எண் : 2

உள்ளவாறெனக் குரைசெய்மின்னுயர் வாயமாதவம் பேணுவீர்
கள்ளவிழ்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை காதலான்
பிள்ளைவான்பிறை செஞ்சடைம்மிசை வைத்ததும்பெரு நீரொலி
வெள்ளந்தாங்கிய தென்கொலோமிகு மங்கையா ளுடனாகவே.

பொழிப்புரை :

உயர்ந்த பெரிய தவநெறியில் நிற்பவர்களே !. எனக்கு உள்ளவாறு உரைசெய்வீர்களாக ! தேன்கமழும் சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூரில் தனக்கு ஒப்பாரும் , மிக்காருமில்லாத , உமாதேவியோடு வீற்றிருந்தருளும் சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சிவந்த சடையின்மீது வைத்ததும் , பெருநீர்ப் பெருக்காகிய கங்கையைச் சடையில் தாங்கியதும் என் கொல் ?.

குறிப்புரை :

உறைகாதலான் - வாழ்வதில் காதலுடையவன் . பிள்ளைப்பிறை - இளம்பிறை . மிகும் மங்கையாள் - ஒப்பாரும் மிக்காரும் இல்லாது மேன்மையுற்ற மங்கை , அம்பிகை . கடவுளாயின் மங்கை உடனாகத் தலையிற் பிறையும் நீர்ப்பெருக்கையும் தாங்கியது என்கொல் ?.

பண் :கொல்லி

பாடல் எண் : 3

அடியராயினீர் சொல்லுமின்அறி கின்றிலேன்அரன் செய்கையைப்
படியெலாந்தொழு தேத்துகண்டியூர் வீரட்டத்துறை பான்மையான்
முடிவுமாய்முத லாய்இவ்வைய முழுதுமாய்அழ காயதோர்
பொடியதார்திரு மார்பினிற்புரி நூலும்பூண்டெழு பொற்பதே.

பொழிப்புரை :

என் சிற்றறிவினால் சிவபெருமானின் செய்கையை அறிய இயலவில்லை . எப்பொழுதும் சிவபெருமானின் திருவடிகளை இடையறாது சிந்தித்துக் கொண்டிருக்கும் அடியவர்களே ! நீங்கள் எனக்குச் சொல்வீர்களாக ! உலகமெல்லாம் தொழுது போற்றுகின்ற திருக்கண்டியூரில் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் இவ்வுலகிற்கு அந்தமாயும் , ஆதியாயும் இருப்பவன் . இவ்வுலகம் முழுவதும் நிறைந்து விளங்குபவன் . அப்பெருமான் தன் அழகிய மார்பில் திருநீற்றுப்பூச்சும் , முப்புரிநூலும் பூண்டு தோன்றுவது ஏன் ?

குறிப்புரை :

அறிகின்றிலேன் என்றது - முற்பிறப்பிற் செய்த சிவ புண்ணிய மேலீட்டினால் சைவநெறி தலைப்பட்ட ஒருவர் கூறுவதாக வந்தது . கழை - மூங்கில் . முடிவும் முதலும் ஆய் - எல்லா இடமும் , எல்லாக் காலமுமாகிய ஒரு பொருளுக்கு இவ்வையகம் முழுதும் ஒரு உடம்பு . அதில் மார்பும் அழகிய திருநீற்றுப் பூச்சும் , முப்புரிநூலும் பூண்டு தோன்றும் தோற்றம் ஏன் ? பொற்பு என்றது இங்குத் தன்மை என்னும் பொருளில் வந்தது .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

பழையதொண்டர்கள் பகருமின்பல வாயவேதியன் பான்மையைக்
கழையுலாம்புனல் மல்குகாவிரி மன்னுகண்டியூர் வீரட்டன்
குழையொர்காதினிற் பெய்துகந்தொரு குன்றின்மங்கை வெருவுறப்
புழைநெடுங்கைநன் மாவுரித்தது போர்த்துகந்த பொலிவதே.

பொழிப்புரை :

சிவனடியார் திருக்கூட்டமரபில் வழிவழியாய் வருகின்ற பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குப் பலவாகிய தன்மைகளையுடைய இறைவனின் தன்மையைக் கூறுங்கள் . மலையிலிருந்து பெருகும் காவிரியால் வளம்மிகுந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , தன் காதில் ஒரு குழையணிந்து மகிழ்ந்து , மலைமகளான உமாதேவி அஞ்சுமாறு துளையுடைய நீண்ட தும்பிக்கையையுடைய யானையின் தோலை உரித்துப் போர்த்தது ஏன் ?

குறிப்புரை :

ஈசனது பழ அடியீராகிய நீங்கள் புத்தடியேனுக்குத் தெளியப் பகருமின் . கடவுள் - எனின் அவன் காதில் குழை அணிந்ததும் யானையை உரித்து அதைப் போர்த்ததும் ஏன் ?

பண் :கொல்லி

பாடல் எண் : 5

விரவிலாதுமைக் கேட்கின்றேன்அடி விரும்பியாட்செய்வீர் விளம்புமின்
கரையெலாந்திரை மண்டுகாவிரிக் கண்டியூருறை வீரட்டன்
முரவமொந்தை முழாவொலிக்க முழங்குபேயொடுங் கூடிப்போய்ப்
பரவுவானவர்க் காகவார்கடல் நஞ்சமுண்ட பரிசதே.

பொழிப்புரை :

அடியார் நடுவுள் கலந்திருக்கப் பெறாமையால் இவற்றை வினவுகின்றேன் . இறைவனின் திருவடிகட்கு விரும்பிப் பணிசெய்யும் அடியவர்களே ! விளம்புவீராக . அலைகள் மோதுகின்ற காவிரியின் கரையிலுள்ள திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , முரவு , மொந்தை , முழவு முதலான வாத்தியங்கள் முழங்க , பேய்க்கணங்களும் , பூதகணங்களும் சூழ்ந்து நிற்க , தன்னை வழிபட்ட தேவர்கள் பொருட்டுப் பெரிய பாற்கடலில் தோன்றிய நஞ்சினை உண்ட தன்மைதான் என்கொல் ?.

குறிப்புரை :

விரவு இலாது - ( அடியார் நடுவுள் ) கலந்திருக்கப் பெறாமையினால் இவற்றை வினவுகிறேன் . இறைவன் கிளம்பும் பொழுது பூதகணம் முதலிய கணங்களோடு பேய்க்கணங்களும் போவன ஆதலின் . பேயொடுங்கூடி என்ற தொடரில் பேய் என்பது உபலட்சணம் ஆகலின் பேய் முதலிய கணங்களோடும் என்க . வானவர்க்காக விடத்தை உண்பானேன் ? உண்ணச் சோறின்றி நஞ்சுண்டவன் கடவுளாவானா ? விடமுண்டவன் சாவவில்லை என்பது நம்பத்தகுமா ? எனப் பிற மதத்தினர் கூறுவது ` அம்பரமாம் புள்ளித் தோல் ஆலாலம் ஆரமுதம் ` என்னும் திருவாசகத்தால் அறிக .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

இயலுமாறெனக் கியம்புமின்னிறை வன்னுமாய்நிறை செய்கையைக்
கயனெடுங்கண்ணி னார்கள்தாம்பொலி கண்டியூருறை வீரட்டன்
புயல்பொழிந்திழி வானுளோர்களுக் காகஅன்றயன் பொய்ச்சிரம்
அயனகவ்வ தரிந்துமற்றதில் ஊணுகந்த வருத்தியே.

பொழிப்புரை :

மெய்யடியார்களே ! இறைவன் உலகினுக்கும் , உயிருக்கும் தலைவனாய் இருப்பதோடு , உலகப்பொருள்களிலும் , அனைத்து உயிர்களிடத்தும் அவையேயாய்க் கலந்து வியாபித்து நிற்கும் தன்மையை எனக்கு இயன்ற அளவு இயம்புவீர்களாக ! கயல் போன்ற நீண்ட கண்களையுடைய மகளிர் வாழ்கின்ற திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் உலகத்தில் மழை பொழியச் செய்து நலம்புரியும் தேவர்கட்காகப் பிரமனுடைய ஐந்தாவது சிரத்தை அயலார் பரிகசிக்கும்படி நகத்தால் அரிந்து , அதில் பிச்சையேற் றுண்ணும் விருப்பம் என்கொல் ?.

குறிப்புரை :

இறைவனுமாய் நிறைசெய்கையை - உலகினுக்கும் உயிருக்கும் தலைவனுமாய் , அவையெயாகி அவற்றுள் வியாபித்து நிறைந்து நின்ற செய்கையை . புயல் - மேகம் . பொழிந்து - மழைபோல் பெய்து . பொய் இன்மைப் பொருளில் வந்தது . அயல் - அயலார் . நக - அவனைப் பரிகசிக்கும்படியாக அது அரிந்து எனவும் , அயலார் , தன்னை நக அதில் ( அம்மண்டை யோட்டில் ) உணவை உகந்து ( உண்டு ) எனவும் - இருவழியும் கூட்டுக . வானவர்களுக்காக அயன்தலையைக் கொய்ததென்பது - படைத்தற்கர்த்தா தன் தலையைப் படைத்தளிக்கும் வலியின்மையும் படைப்போற் படைக்கும் பழையோன் இவனே என்பதும் வானவர் தெளிவதற்காக ஒருவன் தலையைக் கொய்து , அதில் உணவு நுகர்தல் கடவுட்டன்மைக்கு ஒக்குமா ?

பண் :கொல்லி

பாடல் எண் : 7

திருந்துதொண்டர்கள் செப்புமின்மிகச் செல்வன்றன்னது திறமெலாம்
கருந்தடங்கண்ணி னார்கடாந்தொழு கண்டியூருறை வீரட்டன்
இருந்துநால்வரொ டானிழல்லற முரைத்ததும்மிகு வெம்மையார்
வருந்தவன்சிலை யாலம்மாமதின் மூன்றுமாட்டிய வண்ணமே.

பொழிப்புரை :

தெளிந்த சிவஞானம் பெற்று இறைவனுக்குத் தொண்டு செய்யும் அன்பர்களே ! மெய்ச் செல்வனாக விளங்கும் சிவபெருமானின் தன்மைகளை எனக்கு உரைப்பீர்களாக ! கருநிற அழகிய கண்களையுடைய மகளிர் வழிபடும் திருக்கண்டியூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , அன்று ஆலமரநிழலில் நால்வர்க்கு அறம் உரைத்ததும் , தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்களின் மூன்று கோட்டைகளும் எரியுமாறு மேருமலையை வில்லாக வளைத்ததும் என்கொல் ?.

குறிப்புரை :

திருந்துமாறு சொல்லவல்லீர் நீவிரே என்பான் , திருந்து தொண்டர்கள் என்றான் . இன்றேல் ` குருடும் குருடும் குருட்டாட் டமாடிக் குழி வீழ்ந்தவாறே `. தொண்டர்கள் அண்மைவிளி . இருந்து நால்வரோடு ... வண்ணமே - துறவியாய் உபதேசம் செய்த தூயோன் , திரிபுரத்தசுரர்களைக் கொலை செய்யலாமா ? சரியை கிரியை இரண்டும் - அறம் , சிவதன்மம் . ( திருக்களிற்றுப்படியார் ) மாட்டிய - மாள்வித்த . மாள் என்பதன் பிறவினை .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

நாவிரித்தரன் றொல்புகழ்பல பேணுவீரிறை நல்குமின்
காவிரித்தடம் புனல்செய்கண்டியூர் வீரட்டத்துறை கண்ணுதல்
கோவிரிப்பய னானஞ்சாடிய கொள்கையுங்கொடி வரைபெற
மாவரைத்தலத் தாலரக்கனை வலியைவாட்டிய மாண்பதே.

பொழிப்புரை :

நாவால் சிவபெருமானது பழம்புகழ் போற்றும் அடியவர்களே ! எனக்கு விடை கூறுவீர்களாக . காவிரியால் நீர் வளம்மிக்க திருக்கண்டியூர் வீரட்டானத்தில் வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக்கண்ணுடைய சிவபெருமான் , பசுவிலிருந்து பெறப்படும் பால் , தயிர் , நெய் , கோசலம் , கோமயம் ஆகிய பஞ்சகவ்வியங்களால் திருமுழுக்காட்டப்படும் தன்மையும் , கொடி போன்ற பார்வதி அமைதி பெற , பெரிய கயிலைமலையில் தன் காற்பெருவிரலை ஊன்றி மலையின் கீழ் இராவணன் நெரியுமாறு செய்து அவன் வலிமையை அழித்த மாண்பும் என்கொல் ?.

குறிப்புரை :

( அரன் தொல் புகழ் ) நாவிரித்து , ` உன் திருவார்த்தையை விரிப்பார் ` என்பது திருவாசகம் . புனல் - நீர்வளம் . செய் - உண்டாக்குகின்ற . கண்டியூர் வீரட்டம் . கோ - பசுவினின்றும் கிடைக்கக் கூடிய . விரிப்பயன் - பெரும் பயனையுடைய . ஆன் அஞ்சு ஆடிய - பஞ்சகவ்வியத்தை ஆடுகின்ற கொள்கையும் , அரக்கனை வலியை வாட்டிய மாண்பும் . இறைநல்குமின் - விடை அளியுங்கள் . ஆனஞ் சாடுதல் - சத்துவ குணத்தைத் தரும் . அதற்கு மாறாக அரக்கனை அடர்த்தலாகிய ரஜோகுண வினை புரிந்தமை ஏன் ? கொடிவரை - கொடி போன்ற பார்வதி அமைதி உற , பெற .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

பெருமையேசர ணாகவாழ்வுறு மாந்தர்காளிறை பேசுமின்
கருமையார்பொழில் சூழுந்தண்வயற் கண்டியூருறை வீரட்டன்
ஒருமையாலுயர் மாலுமற்றை மலரவன்உணர்ந் தேத்தவே
அருமையாலவ ருக்குயர்ந்தெரி யாகிநின்றவத் தன்மையே.

பொழிப்புரை :

சிவபெருமானுடைய பெருமையைப் புகழ்ந்து கூறி , அவனைச் சரண்புகுந்து அவனருளால் வாழும் மாந்தர்காள் ! விடை கூறுவீர்களாக ! மரங்களின் அடர்த்தியால் வெயில் நுழையாது இருண்டு விளங்கும் சோலைகள் சூழ்ந்த , குளிர்ச்சியான வயல்களையுடைய திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளுகின்ற வீரட்டநாதன் , திருமாலும் , பிரமனும் சிவபெருமானின் முழுமுதல்தன்மையை உணர்ந்து போற்றும்படி , அவர்கள் காண்பதற்கு அரியவனாய் உயர்ந்து நெருப்புமலையாய் நின்ற தன்மை என் கொல் ?.

குறிப்புரை :

மரச்செறிவால் வெயில் . நுழையாமையால் கருமை ஆர்பொழில் என்றார் . ` வெயில் நுழைபு அறியாக் குயின் நுழை பொதும்பர் ` என்பது மணிமேகலை . ஒருமையால் ... ... அத்தன்மையே அருமையால் - காண்டற்கரிய தன்மையால் அவர்க்கு உயர்ந்து , எரியாகிநின்ற , ஓங்கி அனலாகி நின்ற அத்தன்மையை . இறைபேசுமின் - பிரம்மா , விட்டுணு , உருத்திரனென்று உடனெண்ணப்படுகின்ற கடவுள் அவரினும் மிக்கோனாய் அழலாகிநின்றது ஏன் ?

பண் :கொல்லி

பாடல் எண் : 10

நமரெழுபிறப் பறுக்குமாந்தர்காள் நவிலுமின்உமைக் கேட்கின்றேன்
கமரழிவயல் சூழுந்தண்புனற் கண்டியூருறை வீரட்டன்
தமரழிந்தெழு சாக்கியச்சமண் ஆதரோது மதுகொளா
தமரரானவ ரேத்தவந்தகன் தன்னைச்சூலத்தில் ஆய்ந்ததே.

பொழிப்புரை :

தம்மைச் சார்ந்து விளங்கும் சுற்றத்தவர்களின் ஏழு பிறப்புக்களையும் அறுக்கும் மெய்யடியார்களே ! உங்களை வினவு கின்றேன் . விடை கூறுவீர்களாக . பூமியில் வெடிப்பு ஏற்பட்டு வறட்சி உண்டாகாதவாறு குளிர்ந்த நீர் பாயும் வயல்கள் சூழ்ந்த திருக்கண்டியூரில் வீற்றிருந்தருளும் வீரட்டநாதன் , தமது சமயத்தவர் பயனெய்தாது அழியும்படி இறைவனைச்சாரும் வழிகளை எடுத்துரைக்காத புத்தர் , சமணர்கள் உரைக்கும் உலகியல் அறங்களான கொல் லாமை , பரதுக்க துக்கம் இவற்றை மறுத்து , தேவர்கள் ஏத்த அந்தகாசுரனைச் சூலத்தால் குத்திக் கொன்றது ஏன் ?

குறிப்புரை :

நமர் - நம்மவர் . சுற்றத்தார் ஏழுபிறப்பு அறுக்கும் மாந்தர் காள் என்றது . ஒருவன் சிவஞானியாய் வீடு பேறு அடைவானாகில் அவனது இருபத்தொரு வமிசத்திலுள்ளவர்கட்கும் நரக மில்லை என்ற கருத்து . அது திருவாசகம் . ` மூவேழ்சுற்றம் முரணுறு நரகிடை ஆழாமே அருள் அரசே போற்றி ` என்பதனால் அறிக . ஈரேழுலகை ஏழுலகு என்பது போல வானவர் மக்கள் நரகர் ஆகிய ஒவ்வோர் வகையிலும் ஏழு பிறப்பு என்றுணர்க . கமர் - பூமி வெடிப்பு . நீர் பாய்வதால் அது அழிகின்றது . தமர் அழிந்து - தமது சமயத்தவர் பயனெய்தாது அழிய . அழிந்து வினையெச்சத்திரிபு . கொல்லாமையும் பரதுக்க துக்கமுமாகிய அவர்களின் கொள்கையை மறுத்து , அவர் தொழிலினும் தாழ்ந்ததாக அந்த காசுரனைச் சூலத்திற் குத்திக் கொன்றது தகுமா ?.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கருத்தனைப்பொழில் சூழுங்கண்டியூர் வீரட்டத்துறை கள்வனை
அருத்தனைத்திறம் அடியர்பால்மிகக் கேட்டுகந்த வினாவுரை
திருத்தமாந்திகழ் காழிஞானசம் பந்தன்செப்பிய செந்தமிழ்
ஒருத்தராகிலும் பலர்களாகிலும் உரைசெய்வார் உயர்ந்தார்களே.

பொழிப்புரை :

அன்பர்தம் கருத்தாக விளங்குபவனாய் , சோலைகள் சூழ்ந்த திருக்கண்டியூர் வீரட்டானத்தில் பிறரால் காணப்பெறாது மறைந்திருந்து மனத்தைக் கவரும் கள்வனாய் , சொல்லின் பொருளாக இருக்கும் , அப்பெருமானின் திறத்தினை அடியவர்களிடம் வினாவுரையாகக் கேட்டு மகிழும் முறையில் சீகாழியில் அவதரித்த , இறைவனின் இயல்புகளை நன்கு உணர்ந்த ஞானசம்பந்தன் செப்பிய செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஒருவராகத் தனித்தும் , பலராகச் சேர்ந்தும் ஓதவல்லவர்கள் உயர்ந்தவர்கள் ஆவர் .

குறிப்புரை :

கருத்தனை - ` மனத்துள் நின்ற கருத்தானை `. கள்வனை - மேற்கூறிய காரணங்களால் இத்தன்மையன் இறைவன் ஆகான் எனச் சைவம் சாரும் ஊழிலார் மறுக்கும் வண்ணம் , மறைந்து நிற்றலின் கள்வன் என்றார் . வினாவுரையாகிய சம்பந்தன் நிரப்பிய செந்தமிழ் பாடுவார் உயர்ந்தார்கள் . பதிகக் குறிப்பு : புத்தர் சைவத்திற் குறை கூறும் கூற்றுக்களையே வினாவாக வைத்து மணிவாசகப்பெருமான் , திருச்சாழலில் வினாவியதை ஒக்கும் இப்பதிகம் . அட்டவீரட்டத்தில் இத்தலம் அயனைச் சிரங்கொய்த தலம் .
சிற்பி