திருக்கச்சியேகம்பம்


பண் :கொல்லி

பாடல் எண் : 1

கருவார்கச்சித் , திருவேகம்பத்
தொருவாவென்ன , மருவாவினையே.

பொழிப்புரை :

யாவற்றுக்கும் கருப்பொருளாக விளங்கும் திருக்கச்சியேகம்பத்தில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானைப் போற்றி வணங்க வினைவந்து சாராது .

குறிப்புரை :

கரு - கர்ப்பம் ..... ஏக ஆம்பரம் - ஏகம்பம் என மரீஇயிற்று . ஒற்றை மாமரத்தினடி , கோயிலின் பெயர் . வினை - வினைகள் , பால்பகா அஃறிணைப்பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 2

மதியார்கச்சி , நதியேகம்பம்
விதியாலேத்தப் , பதியாவாரே.

பொழிப்புரை :

மதி தவழும் மாடங்களையுடைய கச்சியில் கம்பை நதியின் கரையில் விளங்குகின்ற திருவேகம்பத்தைச் சிவாகம விதிப்படி அன்பர்கள் போற்றி வணங்கச் சிவகணங்களுக்குத் தலைமையாய் விளங்குவார்கள் .

குறிப்புரை :

மதி ஆர்கச்சி - மதி தவழும் மாடங்களையுடைய கச்சி .

பண் :கொல்லி

பாடல் எண் : 3

கலியார்கச்சி , மலியேகம்பம்
பலியாற்போற்ற , நலியாவினையே.

பொழிப்புரை :

விழாக்கள் மலிந்து ஆரவாரத்துடன் எப்பொழுதும் விளங்கும் கச்சியில் வீற்றிருந்தருளுகின்ற திருவேகம்பநாதரைப் பூசைக்குரிய பொருள்களைக் கொண்டு பூசை செய்து போற்றி வழிபடத் தீவினையால் வரும் துன்பம் இல்லை .

குறிப்புரை :

கலி ஆர் - ஓசைமிக்குடைய கச்சி , இதனை ` மலி தேரான் ` என்ற தண்டியலங்கார உதாரணச் செய்யுளாலும் , பெரிய புராணத்தாலும் அறியலாம் . பலி - பூசைக்குரிய பொருள் ; காரிய ஆகுபெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 4

வரமார்கச்சிப் , புரமேகம்பம்
பரவாவேத்த , விரவாவினையே.

பொழிப்புரை :

தன்னை வழிபடும் அன்பர்களுக்கு வேண்டிய வரங்களை நல்கும் தெய்வத்தன்மையுடைய நகர் காஞ்சிபுரம் ஆகும் . இத்திருத்தலத்தில் திருவேகம்பப் பெருமானை வணங்கிப் போற்ற வினை தொடராது நீங்கும் .

குறிப்புரை :

பரவா - பரவி , துதித்து . உடன்பாட்டு வினையெச்சம் . கச்சிப்புரம் - காஞ்சிபுரம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 5

படமார்கச்சி , இடமேகம்பத்
துடையாயென்ன , அடையாவினையே.

பொழிப்புரை :

சித்திர வேலைப்பாடுகளையுடைய அழகிய கச்சியை இடமாகக் கொண்டு திருவேகம்பத்தில் வீற்றிருந்தருளும் இறைவன் எங்கள் தலைவனே என்று போற்ற வினை வந்து சாராது .

குறிப்புரை :

படம் - மாடங்களில் ஆடும் கொடியினையுடைய . உடையாய் - தலைவனே . என்ன வினை அடையா .

பண் :கொல்லி

பாடல் எண் : 6

நலமார்கச்சி , நிலவேகம்பம்
குலவாவேத்தக் , கலவாவினையே.

பொழிப்புரை :

நலம் தரும் கச்சிநகரில் விளங்குகின்ற திருவேகம்பத்தை அன்பால் அகமகிழ்ந்து போற்றி வணங்க வினை நீங்கும் .

குறிப்புரை :

நிலவு - விளங்குகின்ற . குலம் ஆக . குலவா - குலவி .

பண் :கொல்லி

பாடல் எண் : 7

கரியின்னுரியன் , திருவேகம்பன்
பெரியபுரமூன் , றெரிசெய்தானே.

பொழிப்புரை :

யானையின் தோலை உரித்துப் போர்த்துக் கொண்ட இறைவனான திருவேகம்பப் பெருமான் , தேவர்களைத் துன்புறுத்திய அசுரர்கள் வாழ்ந்த மூன்றுபுரங்களையும் எரியுண்ணும்படி செய்தார் .

குறிப்புரை :

பெரியபுரம் - தீமை செய்தலிற் பெரியதாகிய திரிபுரம் .

பண் :கொல்லி

பாடல் எண் : 8

இலங்கையரசைத் , துலங்கவூன்றும்
நலங்கொள்கம்பன் , இலங்குசரணே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனைக் கயிலை மலையின் கீழ் நெரியுமாறு காற்பெருவிரலை ஊன்றி , அவன் நலத்தை அழித்த திருவேகம்பன் திருவடியைச் சரணடைதலே ஒளிமிக்க வாழ்விற்குரிய வழியாகும் .

குறிப்புரை :

துலங்க - அவன் வலி இது என்பது அனைவருக்கும் விளங்க . கம்பன் - ஏகம்பன் என்பதன் ஒருபுடைப்பெயர் .

பண் :கொல்லி

பாடல் எண் : 9

மறையோனரியும் , அறியாவனலன்
நெறியேகம்பம் , குறியாற்றொழுமே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் அறியமுடியாத வண்ணம் நெருப்பு மலையாய் நின்ற சிவபெருமான் கச்சியில் திருவேகம்ப நாதராக நெறியாகவும் , போற்றித்தொழப் பெறும் குறியாகவும் உள்ளார் .

குறிப்புரை :

( அறியா ) அனலன் - நெருப்பாகி நின்றவன் .

பண் :கொல்லி

பாடல் எண் : 10

பறியாத்தேரர் , நெறியில்கச்சிச்
செறிகொள்கம்பம் , குறுகுவோமே.

பொழிப்புரை :

தலைமயிர் பறியாத புத்தர்களும் , அது பறிக்கப் பட்ட சமணர்களும் கூறும் நெறியில் அமையாது , கச்சியில் ஞானம் பெருகும் திருவேகம்பநாதனின் திருக்கோயிலை அடைந்து வழி படுவோமாக .

குறிப்புரை :

பறியாத் தேரர் - தலைமயிர் பறியாத புத்தர் ; என்ற இலேசானே அது பறிக்கப்பட்ட சமணரும் கூறியதாயிற்றாம் . நெறியில் - அவர்கள் வழியிற் சேர்தலில்லாத . கம்பம் - கோயில்.

பண் :கொல்லி

பாடல் எண் : 11

கொச்சைவேந்தன், கச்சிக்கம்பம்
மெச்சுஞ்சொல்லை, நச்சும்புகழே.

பொழிப்புரை :

கொச்சைவயம் என்னும் திருப்பெயருடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் திருக்கச்சியேகம்பத்தைப் போற்றிப்பாடிய இத்திருப்பதிகத்தை ஓதுபவர்கள் நிலைத்த புகழுடன் விளங்குவார்கள் .

குறிப்புரை :

கொச்சை - கொச்சைவயம் , சீகாழி . மெச்சும் சொல்லை - வியந்து பாடிய இப்பதிகத்தை . நச்சும் புகழ் - புகழ் விரும்பும் ; என்றது இப்பதிகத்தைப் பாடவல்லார்க்குப் புகழ் முதலிய மேன்மைகள் தாமாகவே விரும்பி வந்தடையும் என்பதாம் . புகழ் - உபலட்சணம் .
சிற்பி