திருச்சிற்றேமம்


பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 1

நிறைவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
குறைவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
சிறைவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
இறைவனென்றே யுலகெலா மேத்தநின்ற பெருமானே.

பொழிப்புரை :

வெண்மையான முழுநிலவு போன்று ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, நடனம் புரிகின்ற இயல் புடையவராய், சிறகுகளையுடைய வண்டுகள் யாழ் போன்று ஒலிக்கும் பசுமையான சோலைகளும், வயல்களும் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவர் உலகமெல்லாம் ஏத்திப் போற்றுகின்ற சிவபெருமானே ஆவர்.

குறிப்புரை :

நிறைவெண் திங்கள் - பூரணசந்திரன். அதுபோலும் வாள் (ஒளி) முகம். மாதர்பாட. குறைவெண்திங்கள் சூடி - பிறையை அணிந்து. மேய - விரும்பிய. பொழிலும் பழனமும் சூழ்ந்த சிற்றேமம். குறை வெண் திங்கள் சூடியதாதலின், நிறைவெண் திங்கள் முகத்தர் பாடலை விரும்பினான். முகமாதர் - உமாதேவியார். மேல்வரும் எல்லாப் பாடலிலும் இதைக் காண்க. சிற்றேமத்தானே இறைவன் என்றும், உலகம் ஏத்த நின்றபெருமான் என்றும், ஏகாரத்தைப் பிரித்துக் கூட்டுக.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 2

மாகத்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைப்
பாகத்திங்கள் சூடியோ ராடன்மேய பண்டங்கன்
மேகத்தாடு சோலைசூழ் மிடைசிற்றேம மேவினான்
ஆகத்தேர்கொ ளாமையைப் பூண்டவண்ண லல்லனே. 

பொழிப்புரை :

ஆகாயத்தில் விளங்கும் சந்திரன் போன்று ஒளியுடைய முகத்தையுடைய உமாதேவியார் இசைபாட, நீண்ட சடையில் பிறைச்சந்திரனைச் சூடிப் பண்டரங்கம் என்னும் கூத்தாடும் இறைவர், மேகம் திகழும் சோலைசூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந் தருளுகின்றார். அப்பெருமான் திருமார்பில் ஆமை ஓட்டினை ஆபரணமாகப் பூண்ட அண்ணலான சிவபெருமான் அல்லரோ?

குறிப்புரை :

மாகம் - ஆகாயம். பாகம் - ஒரு பகுதி. (ஒரு கலைத் திங்கள்) பண்டங்கன் - பாண்டரங்கம் என்னும் ஒரு கூத்தை விரும்பி ஆடியவன். மிடை - (வளம்) மிகுந்த. ஆகத்து - மார்பில். ஏர் - அழகு. இடை ஒன்பது பாட்டிலும் முடிவு ஒன்றாயிற்று.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 3

நெடுவெண்டிங்கள் வாண்முக மாதர்பாட நீள்சடைக்
கொடுவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
படுவண்டியாழ்செய் பைம்பொழிற் பழனஞ்சூழ்சிற் றேமத்தான்
கடுவெங்கூற்றைக் காலினாற் காய்ந்தகடவு ளல்லனே.

பொழிப்புரை :

வெண்ணிறப் பூரண சந்திரன் போன்ற ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவி இன்னிசையோடு பாட, நீண்ட சடையில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி நடனம் செய்கின்ற பெருமானாய், வண்டுகள் யாழ்போன்று ஒலி செய்யப் பசுமை வாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்ற இறைவன் கொடிய காலனைக் காலால் உதைத்து அழித்த கடவுளான சிவபெருமான் அல்லனோ?

குறிப்புரை :

தன் நிலவை உலகெலாம் விரித்தலால் நெடியதாகிய வெண்திங்கள். கொடு - வளைந்த. கடுவெம் கூற்று - மிகக் கொடிய கூற்றுவன். கடு என்பது - மிகுதியைக் குறிக்கும் கடியென்ற உரிச் சொல்லின் திரிபு. சிவனடியார்மேற் சென்றமை கருதிக் கடுவெங்கூற்று எனப்பட்டான்.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 4

கதிரார் திங்கள் வாண்முக மாதர்பாடக் கண்ணுதல்
முதிரார்திங்கள் சூடியோ ராடன்மேய முக்கணன்
எதிரார்புனலம் புன்சடை எழிலாருஞ்சிற் றேமத்தான்
அதிரார்பைங்க ணேறுடை யாதிமூர்த்தி யல்லனே. 

பொழிப்புரை :

கதிர்வீசும் சந்திரனைப் போன்ற ஒளிபொருந்திய முகம்கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, நெற்றிக்கண்ணையுடைய சிவபெருமான் இளம்பிறைச் சந்திரனைச் சூடி, ஆடுகின்ற முக்கண்ணர் ஆவார். அவர் கங்கையும், சடைமுடியும் கொண்டவராய் அழகுடைய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர், கழுத்தில் கட்டிய சதங்கைமணி ஒலிக்கும், பசிய கண்களையுடைய இடபத்தை வாகனமாகக் கொண்ட ஆதிமூர்த்தி அல்லரோ?

குறிப்புரை :

முதிரார் திங்கள் - முதிராத் திங்கள் என்று பாடமிருக்க வேண்டும். இளம்பிறைச் சந்திரன் என்று அப்பொருள் கோடலுக்கு. இனி இப்பாடத்துக்கு முதிர் - முதிர்தல். ஆர் - நிறைந்துவிட்ட. இனி முதிர்தலில்லாத இன்னும் பிறைச் சந்திரனாகவேயுள்ள, திங்கள் என்று பொருள் கொள்ளல் தகும். எதிர் ஆர்புனல் அம்புன்சடை எழில் ஆரும் சிற்றேமத்தான் - அலைமோதும் எதிரொலியையுடைய (கங்கை) நீரைத் தாங்கிய அழகிய சிறிய சடையின் அழகு பொருந்திய சிற்றேமத்துக் கடவுள். அதிர்தல் (சதங்கை மணி முதலியவற்றால்) ஒலித்தல். ஆர் - பொருந்திய. பைங்கண் ஏறு - பசிய கண்களையுடைய விடை.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 5

வானார்திங்கள் வாண்முக மாதர்பாட வார்சடைக்
கூனார்திங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தேனார்வண்டு பண்செயுந் திருவாருஞ்சிற் றேமத்தான்
மானார்விழிநன் மாதொடும் மகிழ்ந்தமைந்த னல்லனே. 

பொழிப்புரை :

வானில் விளங்கும் சந்திரனைப் போன்று ஒளிபொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணோடு பாட, நீண்ட சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்பவனாய்ப் பூக்களிலுள்ள தேனை அருந்திய வண்டு இசைபாடுகின்ற அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளும் இறைவன், மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியோடு மகிழ்ந்திருக்கும் வீரமுடைய சிவபெருமான் அல்லரோ?

குறிப்புரை :

கூன் ஆர் திங்கள் - கூன்பொருந்திய திங்கள். திருஆரும் - சிறப்புப் பொருந்திய, சிற்றேமம். அந்த ஆடலுக்கு அம்பிகாஜத்ய நடனம் என்று பெயர். மான்போன்ற விழியையுடைய அகிலாண்டேசுவரியென்னும் அம்மையோடும் பொன்வைத்தநாகனெனப் பெயர்பூண்டு இங்குத் திருச்சிற்றேமத்திலெழுந்தருளிய இறைவன் முன்பு சிவகாமசுந்தரியார் பாட நடனமாடிய கொள்கையன் அல்லனோ?என இப்பாடலுக்குப் பொருள் கூறுக.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 6

பனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடப் பல்சடைக்
குனிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய கொள்கையான்
தனிவெள்விடையன் புள்ளினத் தாமம்சூழ்சிற் றேமத்தான்
முனிவு மூப்புநீக்கிய முக்கண்மூர்த்தி யல்லனே. 

பொழிப்புரை :

குளிர்ந்த வெண்ணிலவைப் போன்ற ஒளி பொருந்திய முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப் பாட, சடைமுடியில் வளைந்த பிறைச்சந்திரனைச் சூடி ஆடல்புரிகின்றவர் இறைவர். அவர் ஒற்றை வெள் இடபத்தை வாகனமாகக் கொண்டு, பறவை இனங்களும் நறுமண மலர்களும் சூழ்ந்து விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அவர் விருப்பு வெறுப்பு அற்றவராய், மூப்பினை அடையப்பெறாதவரான முக்கண் மூர்த்தியான சிவபெருமான் அல்லரோ?

குறிப்புரை :

மேய - மேவிய. தனி - ஒப்பற்ற. புள்ளினத்தாமம் - மாலைபோற் பறக்கும் பறவைக்கூட்டம். முனிவும் மூப்பும் நீக்கிய முக்கண் மூர்த்தி. முனிவு - வெறுப்பு (விருப்பும், நீங்கிய \\\\\\\"ஆசை முனிவு இகந் துயர்ந்த அற்புதமூர்த்தி\\\\\\\" என்றார் பிறரும்) மூப்பும், உபலக்கணத்தால், நரை, திரை சாக்காடும் கொள்க.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 7

கிளருந்திங்கள் வாண்முக மாதர்பாடக் கேடிலா
வளருந்திங்கள் சூடியோ ராடன்மேய மாதவன்
தளிருங்கொம்பு மதுவுமார் தாமஞ்சூழ்சிற் றேமத்தான்
ஒளிரும்வெண்ணூன் மார்பனென் உள்ளத்துள்ளான் அல்லனே.

பொழிப்புரை :

கிளர்ந்து எழுந்த பூரண சந்திரனைப் போன்று ஒளி பொருந்திய முகம் கொண்ட உமாதேவியார் பண்ணோடு பாட, குறைவிலாது வளரும் தன்மையுடைய பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் இறைவர், தளிரும், கொம்புகளும், தேன் துளிக்கும் மலர்மாலைகளும் சூழ விளங்கும் திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுபவர். அப்பெருமான் ஒளிரும் முப்புரிநூலை அணிந்த திருமார்பினராய் என் உள்ளத்திலுள்ளவர் அல்லரோ?

குறிப்புரை :

வளரும் திங்கள் - தன்மை மாத்திரை கூறியது. வளராத திங்கள் ஆதலால் இளம் திங்கள் என்றபடி.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 8

சூழ்ந்ததிங்கள் வாண்முக மாதர்பாடச் சூழ்சடைப்
போழ்ந்ததிங்கள் சூடியோ ராடன்மேய புண்ணியன்
தாழ்ந்தவயற்சிற் றேமத்தான் றடவரையைத்தன் றாளினால்
ஆழ்ந்தவரக்க னொல்கவன் றடர்த்தவண்ண லல்லனே. 

பொழிப்புரை :

சந்திரனைப் போன்று ஒளியுடைய முகம் கொண்ட உமாதேவியார் பண் இசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச் சந்திரனைச் சூடித் திருநடனம் செய்யும் புண்ணிய மூர்த்தியாகிய சிவபெருமான், வயல்வளமிக்க திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தம்காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அரக்கனான இராவணன் நெருக்குண்ணும்படி அன்று அடர்த்த அண்ணல் அல்லரோ?

குறிப்புரை :

போழ்ந்த - போழ்ந்தாலனைய. \\\"குணந்தான் வெளிப்பட்ட கொவ்வைச் செவ்வாயிக் கொடியிடை\\\" என்பதுபோல. தாழ்ந்த பள்ளமான வயல், தாள் முயற்சியினால், \\\"வாளுழந்ததன் தாள் வாழ்த்தி\\\" என்பது மதுரைக் காஞ்சி. \\\"தாளுளான் தாமரையினாள்\\\" என்பது திருக்குறள்.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 9

தனிவெண்டிங்கள் வாண்முக மாதர்பாடத் தாழ்சடைத்
துணிவெண்டிங்கள் சூடியோ ராடன்மேய தொன்மையான்
அணிவண்ணச்சிற் றேமத்தா னலர்மேலந்த ணாளனும்
மணிவண்ணனுமுன் காண்கிலா மழுவாட்செல்வ னல்லனே.

பொழிப்புரை :

ஒப்பற்ற வெண்ணிறச் சந்திரன் போன்று ஒளிரும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசையோடு பாட, தாழ்ந்த சடையில் இளம்பிறைச்சந்திரனைச் சூடித் திருநடனம் செய்கின்ற மிகப் பழமையான இறைவன், அழகிய திருச்சிற்றேமத்தில் வீற்றிருந்தருளுகின்றார். அப்பெருமான் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், நீலரத்தினம் போன்ற நிறமுடைய திருமாலும் காணமுடியாதவாறு மழுப்படை ஏந்தி விளங்குகின்ற செல்வர் அல்லரோ?

குறிப்புரை :

தனி - ஒப்பற்ற. தணி என்று பாடமாயின் - குளிர்ந்த என்று பொருள் கொள்ளலாம். துணி - துண்டம். துண்ட வெண்பிறை (நிறைமதியின் ஒரு துண்டம்) மணி - நீல ரத்தினம். \\\"மழுவாட் செல்வர்\\\" என்பர் அப்பர் சுவாமிகள்.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 10

வெள்ளைத்திங்கள் வாண்முக மாதர்பாட வீழ்சடைப்
பிள்ளைத்திங்கள் சூடியோ ராடன்மேய பிஞ்ஞகன்
உள்ளத்தார்சிற் றேமத்தா னுருவார்புத்த ரொப்பிலாக்
கள்ளத்தாரைத் தானாக்கியுட் கரந்துவைத்தான் அல்லனே. 

பொழிப்புரை :

வெண்ணிறச் சந்திரன் போன்ற ஒளி திகழும் முகமுடைய உமாதேவியார் பண்ணிசைத்துப்பாட, சடைமுடியில் பிறைச்சந்திரனைச் சூடி, திருநடனம் செய்யும் இறைவன் விரும்பி வீற்றிருந்தருளுவது திருச்சிற்றேமம் என்ற தலமாகும். அப்பெருமான் புத்தர், சமணர் ஆகியோர்களைப் படைத்தும், அவர்கட்குத் தோன்றாதவாறு மறைந்தும் விளங்குபவர்.

குறிப்புரை :

ஒப்பில்லாக் கள்ளத்தார் - என்றது சமணரை.

பண் :கொல்லிக்கௌவாணம்

பாடல் எண் : 11

கல்லிலோத மல்குதண் கானல்சூழ்ந்த காழியான்
நல்லவாய வின்றமிழ் நவிலுஞான சம்பந்தன்
செல்வனூர்சிற் றேமத்தைப் பாடல்சீரார் நாவினால்
வல்லராகி வாழ்த்துவா ரல்லலின்றி வாழ்வரே. 

பொழிப்புரை :

கற்களால் ஆகிய மதிலில் கடல்அலைகள் மல்கும், குளிர்ந்த கடற்கரைச் சோலைசூழ்ந்த சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன், செல்வனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருச்சிற்றேமத்தைப் போற்றி நல்ல இன்தமிழில் அருளிய சிறப்புடைய இப்பாடல்களை நாவினால் ஓதவல்லவர்கள் துன்பம் அற்று வாழ்வார்கள்.

குறிப்புரை :

கல்லில் - கற்சுவரால் ஆகிய மதிலில். ஓதம் - கடல் அலைகள் மல்கும். தண்கானல் சூழ்ந்த - குளிர்ந்த கடற்கரைச் சோலை சூழ்ந்த, காழியான். சீர்காழி வரையின் கீழ்ப்பால் நெய்தல் நிலமும் ஏனைய மருத நிலமும் உள்ளமையின் சில பாசுரங்களில் நெய்தல் நிலமாகவும், சிலவற்றில் மருதநிலமாகவும், சிலவற்றில் இவ்விரு நிலமாகவும் ஆளுடையபிள்ளையார் அருளிச்செய்தனர். அவற்றில் திருக்கடைக்காப்பு நெய்தல் நிலவருணனை. கல் - கற்சுவருக்கு ஆகி அது மதிலைக் குறித்தலால் இரு மடியாகு பெயர். \\\\\\\\\\\\\\\"கல்நடந்த மதிற் பிரமபுரத்துறையும் காவலனை\\\\\\\\\\\\\\\" என்ற திருப்பாடலிலும் இக்கருத்துக் காண்க. கல் நடந்த என்ற சொல்லில் பிற வினை விகுதி குன்றியதாகி, எடுத்த என்று பொருள் கொள்ளுதல் முறை. குறிப்புரை (தி.2. ப.40. பா.11) நோக்குக.
சிற்பி