சீகாழி


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

சந்த மார்முலை யாடன கூறனார்
வெந்த வெண்பொடி யாடிய மெய்யனார்
கந்த மார்பொழில் சூழ்தரு காழியுள்
எந்தை யாரடி யென்மனத் துள்ளவே

பொழிப்புரை :

இறைவர் அழகிய திருமுலைகளையுடைய உமாதேவியாரைத் தம் திருமேனியில் ஒரு கூறாகக் கொண்டவர் . வெந்த திருவெண்ணீற்றினைப் பூசிய திருமேனி உடையவர் . நறுமணம் கமழும் சோலைகள் சூழ்ந்த சீகாழியுள் வீற்றிருந்தருளிய என் தந்தையாராகிய சிவபெருமானின் திருவடிகள் என் மனத்தில் நன்கு பதிந்துள்ளன .

குறிப்புரை :

முலையாள் தனகூறனார் ; தன - தன்னதாகிய . இது குறிப்புப் பெயரெச்சம் . கந்தம் - நறுமணம் . ஈற்றடி , திருக்காளத்தி முதற் பாட்டின் ( தி .3 ப .36. பா .1.) ஈற்றடியிலும் சிறிது மாறி வருகிறது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

மானி டம்முடை யார்வளர் செஞ்சடைத்
தேனி டங்கொளுந் கொன்றையந் தாரினார்
கானி டங்கொளுந் தண்வயற் காழியார்
ஊனி டங்கொண்டெ னுச்சியி னிற்பரே.

பொழிப்புரை :

மானை இடக்கரத்தில் ஏந்திய சிவபெருமான் நீண்ட சிவந்த சடைமுடியின்மீது , தேன் துளிக்கும் கொன்றைமாலையை அணிந்தவர் . நறுமணம் திகழும் குளிர்ந்த வயல்களையுடைய சீகாழியில் வீற்றிருந்தருளும் அப்பெருமான் இந்த உடலை இடமாகக் கொண்டு எனது உச்சியில் நிற்பர் .

குறிப்புரை :

வரம்புகளில் மலர்ந்த தாமரை முதலிய மலர்களின் மணம் பரவுவதால் கானிடம் கொளும் தண்வயல் காழி என்றார் . கான் - வாசனை . மானிடங்கொண்டு - மானை இடப்பக்கத்தில் ஏந்தி . ஊன் - உடம்பு . இடங்கொண்டு என்பது . ` எந்தையே ஈசா உடலிடங் கொண்டாய் ` என்ற திருவாசகத்திலும் காண்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

மைகொள் கண்டத்தர் வான்மதிச் சென்னியர்
பைகொள் வாளர வாட்டும் படிறனார்
கைகொண் மான்மறி யார்கடற் காழியுள்
ஐய னந்தணர் போற்ற இருக்குமே.

பொழிப்புரை :

நஞ்சுண்டதால் மை போன்ற கறுத்த கண்டத்தை உடையவரும் , வானில் விளங்கும் சந்திரனைச் சடைமுடியில் சூடி , படமெடுத்தாடும் பாம்பினை ஆட்டும் படிறரும் , இளமான்கன்றை இடக்கரத்தில் ஏந்தியுள்ள தலைவருமான சிவபெருமான் , அந்தணர்கள் போற்றக் கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பை - படம் , அரவு ஆட்டும் , படிறனார் ; வஞ்சகர் , அரவு ஆட்டும் . மான்மறி - மான்கன்று . மை - கருமைநிறம் , கண்டத்தர் சென்னியர் , படிறனார் , மான்மறியார் . குறிப்பு :- இன்னதெனத் தோற்றாமையால் படிறனார் என்றார் . அதன் கருத்து இத்திருமுறை ( தி .3 ப .107. பா .10.) காண்க . தலைவனாய் முனிவர் போற்ற இருப்பர் என முடிக்க . ஒருமை பன்மை மயக்கம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

புற்றி னாகமும் பூளையும் வன்னியுங்
கற்றை வார்சடை வைத்தவர் காழியுட்
பொற்றொ டியோ டிருந்தவர் பொற்கழல்
உற்ற போதுட னேத்தி யுணருமே.

பொழிப்புரை :

புற்றில் வாழும் பாம்பையும் , தும்பைப்பூ மாலையையும் , வன்னிப் பத்திரத்தையும் தமது கற்றையான நீண்ட சடைமேல் அணிந்து , சீகாழியில் உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்ற சிவ பெருமானின் பொன்போன்ற திருவடிகளைச் சமயம் நேர்ந்தபொழுது தாமதியாது உடனே துதித்துத் தியானித்து அவனருளை உணர்வீர்களாக .

குறிப்புரை :

பாம்பும் , பூளைப்பூவும் , வன்னிப்பத்திரமும் சடையில் , வைத்தவர் - அணிந்தவர் , வைத்தல் - அணிதல் . ` மத்தமும் மதியமும் வைத்திடும் அரன்மகன் ` என்று திருப்புகழிலும் வருகிறது . உற்றபோது - அமயம் நேர்ந்தபோது , உடனே ( தாமதியாது ). ஏத்தி - துதித்து . உணரும் - தியானித்திருங்கள் . உணரும் - ஏவற்பன்மை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

நலியுங் குற்றமு நம்முட னோய்வினை
மெலியு மாறது வேண்டுதி ரேல்வெய்ய
கலிக டிந்தகை யார்கடற் காழியுள்
அலைகொள் செஞ்சடை யாரடி போற்றுமே.

பொழிப்புரை :

நம் மனத்தை வருத்தும் குற்றங்களும் , தீவினைகளால் நம் உடலை வருத்தும் நோய்களும் , மெலிந்து விலக விரும்புவீர்களாயின் , கையால் வேள்வி வளர்த்துக் கொடிய கலியினால் ஏற்படும் துன்பத்தை ஓட்டும் அந்தணர்கள் வாழ்கின்ற கடல்சூழ்ந்த சீகாழியில் , அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய செஞ்சடையானாகிய சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

நலியும் நமது மனத்தைப்பற்றி வருத்துகின்ற , குற்றமும் கவலைகளும் நம் உடல் ( நலியும் ). நோய்வினை - நம் உடலைப்பற்றி வருத்துகின்ற பிணிகளாகிய தீவினைகளும் . மெலியும் - மெலிந்தொழியும் . ஆறு அது - அந்தவழியை வேண்டுதிரேல் , வெய்யகலி கடிந்த கையார் - கையாற் செய்யும் வேள்வி முதலியவற்றால் உலகில் துன்பம் வாராது ஓட்டிய அந்தணர்கள் வாழும் , கடற்காழி என்றது , ` கற்றாங்கு எரியோம்பிக்கலியை வாராமே செற்றார் வாழ்தில்லை ` ( தி .1. ப .80. பா .1) என்றதை , ` சமன் செய்து சீர்தூக்குங்கோல் போல் அமைந்தொருபாற் கோடாமை ` ( குறள் . 118) என்பதிற்போல உடல் என்பதற்கேற்ப உளம் என்றும் , நோய் என்பதற்கேற்பக் கவலை என்றும் தந்துரைத்து நலியும் என்பதனைப் பின்னும் கூட்டப்பட்டது . அலை - கங்கையைக் குறித்தது சினையாகுபெயர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

பெண்ணொர் கூறினர் பேயுட னாடுவர்
பண்ணு மேத்திசை பாடிய வேடத்தர்
கண்ணு மூன்றுடை யார்கடற் காழியுள்
அண்ண லாய வடிகள் சரிதையே.

பொழிப்புரை :

சிவபெருமான் உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாக உடையவர் . பேய்க்கணங்கள் சூழ ஆடுபவர் . உலகத்தார் போற்றும்படி நல்ல பண்களை ஏழிசைகளோடு பாடிய வேடத்தர் , மூன்று கண்களை உடையவர் . இவை கடல்சூழ்ந்த சீகாழியில் வீற்றிருந்தருளும் தலைவரான சிவபெருமானின் புகழை உணர்த்துபவைகள் ஆகும் .

குறிப்புரை :

ஏத்து - உலகத்தார் போற்றத்தக்க இசையும் ஏழிசையும் , பண்ணும் - உருக் ( சாகித்தியம் ) களையும் , பாடிய வேடத்தார் . சரிதை - இங்குப்புகழ் என்ற பொருளில் வந்தது , இவை அண்ணலாகிய அடிகள் புகழ்களேயாகும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

பற்று மானு மழுவு மழகுற
முற்று மூர்திரிந் துபலி முன்னுவர்
கற்ற மாநன் மறையவர் காழியுட்
பெற்ற மேற துகந்தார் பெருமையே.

பொழிப்புரை :

பெருமானார் தம் திருக்கரத்திலே மானையும் , மழுவையும் அழகுற ஏந்தி , ஊர்முழுவதும் திரிந்து பிச்சை எடுக்க முற்படுவார் . வேதங்களை நன்கு கற்ற பெருமையுடைய நல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் இடபத்தை வாகனமாக விரும்பி வீற்றிருந்தருளுகின்ற அச்சிவபெருமானது தன்மை இத்தன்மைத் தாகும் .

குறிப்புரை :

ஊர் முற்றும் திரிந்து பலி ஏற்பதற்கு முற்படுவர் என்பது இரண்டாம் அடியின் பொருள் . மூன்றாம் அடியில் கற்ற மா நல் ( ல ) மறையவர் எனக்கொள்க . கற்ற என்பதனால் நூலறிவாகிய அபர ஞானமும் நல் என்றதனாற் பரஞானமும் குறித்தபடி . பெற்றம் ஏறு - பசுவின் ஆண் . சிங்க ஏறு என்றாற் போல . பெருமையே - பெருமை இத்தகையது ஆகும் என்பது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

எடுத்த வல்லரக் கன்முடி தோளிற
அடர்த்து கந்தருள் செய்தவர் காழியுட்
கொடித்த யங்குநற் கோயிலு ளின்புற
இடத்து மாதொடு தாமு மிருப்பரே.

பொழிப்புரை :

திருக்கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வல்லரக்கனான இராவணனின் முடியும் , தோளும் நெரியுமாறு அடர்த்து , பின் அவன் எழுப்பிய சாமகானத்தால் மகிழ்ந்து அருள் செய்த சிவபெருமான் சீகாழியில் கொடிகள் விளங்குகின்ற அழகிய திருக்கோயிலுள் தம் திருமேனியின் இடப்புறத்தில் உமாதேவியை உடனாகக் கொண்டு இன்புற வீற்றிருந்தருளுவர் .

குறிப்புரை :

கொடி - பதாகைகள் . தயங்கும் - விளங்குகின்ற . இடத்து - இடப்பாகத்திலுள்ள , மாது .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

காலன் தன்னுயிர் வீட்டு கழலடி
மாலு நான்முகன் றானும் வனப்புற
ஓல மிட்டுமுன் றேடி யுணர்கிலாச்
சீலங் கொண்டவ னூர்திகழ் காழியே.

பொழிப்புரை :

காலன் உயிரைப் போக்கிய இறைவன் திருவடியைத் திருமாலும் , பிரமனும் வனப்புறும் தோற்றத்தினராய் ஓலமிட்டுத் தேடியும் காணவொண்ணாத சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் பெருமையுடன் திகழும் சீகாழியாகும் .

குறிப்புரை :

` மேலும் அறிந்திலன் நான்முகன் மேற்சென்றும் கீழிடந்து மாலும் அறிந்திலன் ...... காலன் அறிந்தான் அறிதற் கரியான் கழலடியே ` என்ற கருத்து .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

உருவ நீத்தவர் தாமு முறுதுவர்
தருவ லாடையி னாருந் தகவிலர்
கருமம் வேண்டுதி ரேற்கடற் காழியுள்
ஒருவன் சேவடி யேஅடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

தமது கடுமையான சமய ஒழுக்கத்தினால் உடலின் இயற்கை நிறம் மாறிக் கருநிறமான சமணர்களும் , துவர் நிறம் ஊட்டப் பட்ட ஆடையை உடுக்கின்ற புத்தர்களும் தகைமை யற்றவர்கள் . உங்களுக்கு நல்ல காரியம் கைகூட வேண்டுமென்று விரும்பினீர்களேயானால் , கடலை அடுத்த சீகாழியில் வீற்றிருந்தருளும் ஒப்பற்ற சிவபெருமானின் சிவந்த திருவடிகளைச் சரணடைந்து உய்வீர்களாக !

குறிப்புரை :

ஒருவன் - சிவனுக்கு ஒரு பெயர் . ` ஒருவனென்னும் ஒருவன் காண்க `. ( தி .8 திருவா . - திருவண்டப்பகுதி . அடி - 43.)

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

கானல் வந்துல வுங்கடற் காழியுள்
ஈன மில்லி யிணையடி யேத்திடும்
ஞான சம்பந்தன் சொல்லிய நற்றமிழ்
மான மாக்கும் மகிழ்ந்துரை செய்யவே.

பொழிப்புரை :

கரையிலுள்ள சோலைகளிலிருந்து நறுமணம் வீசும் கடலை அடுத்த சீகாழியில் , அழிவற்று என்றும் நித்தப் பொருளாக விளங்கிடும் சிவபெருமானுடைய இரண்டு திருவடி களையும் வணங்கிடும் ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிகத்தை மனமகிழ்ச்சியுடன் பாட அத்தமிழ் மேலான வீடுபேற்றைத் தரும் .

குறிப்புரை :

ஈனம் இல்லி - சிவபெருமான் , காரணப்பெயர் . மானம் - பெருமை . அது வீடு பேற்றைக் குறிக்கும் . ` உரைத்த நாற் பயனுட் பெரும்பயன் ஆயது ஒள்ளிய வீடு , அது உறலால் தரைத்தலைப் பேரூர் என்பர்கள் சிலர் ` என்பது பேரூர்ப்புராணம் .
சிற்பி