திருக்கழிப்பாலை


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

வெந்த குங்கி லியப்புகை விம்மவே
கந்த நின்றுல வுங்கழிப் பாலையார்
அந்த மும்மள வும்மறி யாததோர்
சந்த மாலவர் மேவிய சாந்தமே.

பொழிப்புரை :

நெருப்பிலிடப்பட்ட குங்கிலியத்தின் புகைப் பெருக்கால் நறுமணம் கமழும் திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் அழிவில்லாதவர் . இன்ன தன்மையர் என்று அளந்தறிய முடியாதவர் . அப்பெருமானின் சாந்தநிலையும் அளக்கொணாத தன்மையுடையதாகும் .

குறிப்புரை :

விம்ம - மிக . அந்தமும் அளவும் எனவே , ஏனைய ஆக்கமும் கொள்ளப்படும் . ` ஆக்கம் அளவு இறுதியில்லாய் ` என்பது திருவாசகம் . ஆக்கம் - பிறப்பு . அந்தம் - இறப்பு . அறியாத - அறியப்படாத ; செயப்படுபொருளுணர்த்தும் படுவிகுதி குன்றியது , அறியப் படாத என்று கூறினாரேனும் இல்லாத என்பது பொருள் . சந்தம் - தன்மை . அது திருக்கோவையாரில் ` அடிச்சந்தம் ` என வருவதாற் காண்க . அவர் மேவிய சாந்தம் - அவர் மேவிய சாந்தநிலையும் அத்தகையதே (அறியப்படாததே). என்பது குறிப்பெச்சம். ஆல் - அசை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

வானி லங்க விளங்கு மிளம்பிறை
தான லங்க லுகந்த தலைவனார்
கானி லங்க வருங்கழிப் பாலையார்
மான லம்மட நோக்குடை யாளொடே.

பொழிப்புரை :

வானம் பிரகாசிக்க விளங்கும் இளம்பிறைச் சந்திரனை மாலைபோல் விரும்பி அணிந்த தலைவரான சிவபெருமான் , கடற்கரைச் சோலை விளங்கும் திருக்கழிப்பாலையில் மான் போன்ற பார்வையுடைய உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுவார் .

குறிப்புரை :

வான் இலங்க - வானம் பிரகாசிக்க விளங்கும் இளம் பிறையை . அலங்கல் உகந்த - மாலையாக விரும்பிய . ( தலைவனார் ) கான் - ( சோலை முதலியவற்றின் ) நறுமணம் . இலங்க - மிக . வரும் - பரவி வருகின்ற . ( கழிப்பாலையார் ) மான் - மானின் . நலம் - அழகு மட நோக்கு - மடப்பத்தோடு நோக்குதலையுடையவளாகிய ; அம்பிகையோடும் திருக்கழிப்பாலையுள் எழுந்தருளியுள்ளார் என்க . தலைவனார் - எழுவாய் . கழிப்பாலையர் - பயனிலை .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

கொடிகொ ளேற்றினர் கூற்றை யுதைத்தனர்
பொடிகொண் மார்பினிற் பூண்டதொ ராமையர்
கடிகொள் பூம்பொழில் சூழ்கழிப் பாலையுள்
அடிகள் செய்வன வார்க்கறி வொண்ணுமே.

பொழிப்புரை :

இறைவர் எருதுக் கொடியுடையவர் . காலனைக் காலால் உதைத்தவர் . திருநீறு அணிந்துள்ள மார்பில் ஆமையின் ஓட்டினை ஆபரணமாக அணிந்தவர் . நறுமணம் கமழும் பூஞ் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் அப்பெருமானின் செயல்களை யார்தான் அறிந்துகொள்ளமுடியும் ? ஒருவராலும் முடியாது .

குறிப்புரை :

கொடியின் கண் கொண்ட இடபத்தையுடையவர் - இடபக்கொடியை உடையவர் . ஆமை ; ஆமையோட்டைக் குறிப்பதால் முதலாகுபெயர் . கடி - நறுமணம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பண்ண லம்பட வண்டறை கொன்றையின்
தண்ண லங்க லுகந்த தலைவனார்
கண்ண லங்கவ ருங்கழிப் பாலையுள்
அண்ண லெங்கட வுள்ளவன் அல்லனே.

பொழிப்புரை :

பூக்களிலுள்ள தேனை உண்டதால் வண்டுகள் பண்ணிசைக்கக் குளிர்ச்சி பொருந்திய கொன்றைமாலையை விரும்பி அணிகின்ற தலைவரான சிவபெருமான் கண்ணைக் கவரும் பேரழகினையுடைய திருக்கழிப்பாலையில் வீற்றிருக்கும் அண்ணலாவார் . அவரே எம் கடவுள் அல்லரே ?

குறிப்புரை :

பண் - இசையின் . நலம் - இனிமை . பட - பொருந்த . வண்டு , அறை - பாடுகின்ற . ( கொன்றை ). அலங்கல் உகந்த - மாலை விரும்பிய , தலைவனார் . நலம் கண்கவரும் கழிப்பாலை - எனமாற்றி , கண்ணைக் கவரும் பொலிவை உடைய கழிப்பாலை யென்க . நலம் - பொலிவு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

ஏரி னாருல கத்திமை யோரொடும்
பாரி னாருட னேபர வப்படுங்
காரி னார்பொழில் சூழ்கழிப் பாலையெம்
சீரி னார்கழ லேசிந்தை செய்ம்மினே.

பொழிப்புரை :

எழுச்சி மிகுந்த விண்ணுலகத்தவராகிய தேவர்களோடு , மண்ணுலக மக்களாலும் சேர்ந்து தொழப்படுகின்றவனும் , மேகங்கள் தவழும் சோலைகள் சூழ்ந்த திருக்கழிப்பாலையில் வீற்றிருந்தருளும் சிறப்புடையவனுமாகிய சிவபெருமானின் திருவடிகளையே சிந்தை செய்யுங்கள் .

குறிப்புரை :

ஏரின் ஆர் - அழகால் மிகுந்த . உலகத்து - விண்ணுலகத்திலுள்ள . இமையோரோடும் - தேவர்களுடனே ; மண்ணுலகத்திலுள்ள யாவரும் கலந்து துதிக்கின்ற . காரின் - மேகத்தினால் . ஆர் - படியப் பட்ட . சோலை ஆர் என்பதில் செயப்பாட்டு வினைவிகுதி குன்றியது . சீரினார் - சிறப்பை உடையவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

துள்ளு மான்மறி யங்கையி லேந்தியூர்
கொள்வ னாரிடு வெண்டலை யிற்பலி
கள்வ னாருறை யுங்கழிப் பாலையை
உள்ளு வார்வினை யாயின வோயுமே.

பொழிப்புரை :

துள்ளுகின்ற இளமையான மானை , அழகிய கையில் ஏந்தி , ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்கின்ற கள்வனாராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை நினைந்து ஏத்த வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

இடுபலி வெண்டலையிற் கொள்வனார் எனக்கூட்டி இடும் பிச்சையை வெண்தலை யோட்டிற் கொள்பவர் என்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

மண்ணி னார்மலி செல்வமும் வானமும்
எண்ணி நீரினி தேத்துமின் பாகமும்
பெண்ணி னார்பிறை நெற்றியொ டுற்றமுக்
கண்ணி னாருறை யுங்கழிப் பாலையே.

பொழிப்புரை :

மண்ணுலகில் பொருந்திய மிக்க செல்வங்களையும் , வானுலகில் மறுமையில் பெறக்கூடிய செல்வத்தையும் தருபவன் இவனே என்பதை மனத்தில் எண்ணி , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்டுள்ளவனும் , பிறைச் சந்திரனைச் சடைமுடியில் அணிந்தவனும் , முக்கண்ணனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை இனிதே போற்றி நீங்கள் வணங்குவீர்களாக !

குறிப்புரை :

மண்ணின் - பூமியில் . ஆர் பொருந்திய . மலி - மிக்க . செல்வமும் வானமும் - வானத்திற் பொருந்திய மிக்க செல்வமும் . எண்ணி ( அழியாத இன்பம் தாரா என்பதையும் ) தெளிந்து . இனிது - நன்கு ( ஏத்துமின் ) கழிப்பாலை - கழிப்பாலையைத் துதியுங்கள் . பேரின்பத்தைத் தரத்தக்கவன் சிவனே என்பதையும் . பிறை நெற்றியோடு உற்ற - நெற்றியினருகே ( சடாபாரத்தில் ) பிறைமதி பொருந்திய .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

இலங்கை மன்னனை யீரைந் திரட்டிதோள்
துலங்க வூன்றிய தூமழு வாளினார்
கலங்கள் வந்துல வுங்கழிப் பாலையை
வலங்கொள் வார்வினை யாயின மாயுமே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனின் இருபது தோள்களும் நொறுங்கும்படி கயிலைமலையில் தன்காற்பெருவிரலை ஊன்றிய , தூய்மையான மழுவாகிய படைக்கலத்தை உடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற , மரக்கலங்கள் வந்து உலவும் திருக்கழிப்பாலையை வலமாக வருபவர்களுக்கு வினைகள் யாவும் அழிந்துவிடும் .

குறிப்புரை :

துலங்க - துளங்க ( நடுங்க ) போலி . ல , ள , ஒற்றுமை . கலங்கள் வந்துலவும் கழிப்பாலை என்றதனால் அது ஒரு துறைமுகப் பட்டினமாய் இருக்கவேண்டும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

ஆட்சி யாலல ரானொடு மாலுமாய்த்
தாட்சி யாலறி யாது தளர்ந்தனர்
காட்சி யாலறி யான்கழிப் பாலையை
மாட்சி யாற்றொழு வார்வினை மாயுமே.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கின்ற பிரமனும் , திருமாலும் தாங்கள் செய்கின்ற படைத்தல் , காத்தல் ஆகிய தொழில்களின் ஆளுமையால் ஏற்பட்ட செருக்குக் காரணமாக இறைவனுடைய திருமுடியையும் , திருவடியையும் அறிய முற்பட்டு , தமது தாழ்ச்சியால் அவற்றை அறியமுடியாது தளர்ச்சியடைந்தனர் . நூலறிவாலும் , ஆன்ம அறிவாலும் அறியப்படாதவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருக்கழிப்பாலையை அதன் மாட்சிமை உணர்ந்து தொழுவாருடைய வினைகள் யாவும் மாயும் .

குறிப்புரை :

ஆட்சியால் - படைத்தலும் காத்தலுமாகிய தொழிலை ஆளுகிறோம் என்னும் செருக்கினால் , ஆட்சி என்ற சொல் காரியம் காரணமாக உபசரிக்கப்பட்டது . தாழ்ச்சியால் - அது தங்கள் மாட்டின்மையாகிய குறைவால் ; அறியாது தளர்ந்தனர் . தாட்சி - தாழ்ச்சியென்பதன் மரூஉ . அல்லது வீரசோழிய விதிப்படி எனினும் ஆம் . அன்றி தாள் + சி = முயற்சியின் தன்மையெனினும் ஆம் ; ஆயின் சி என்பது பண்புப்பெயர் விகுதி யென்க . காட்சியால் - நூலறிவாலும் ஆன்ம அறிவாலும் அறியப்படாதவன் . மாட்சி - மாணுதல் . சி . தொழிற்பெயர் விகுதி . மாட்சியால் தற்போதம் அற்றுத் தொழுவார் வினைமாயும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

செய்ய நுண்டுவ ராடையி னாரொடு
மெய்யின் மாசு பிறக்கிய வீறிலாக்
கையர் கேண்மை யெனோகழிப் பாலையெம்
ஐயன் சேவடி யேயடைந் துய்ம்மினே.

பொழிப்புரை :

சிவந்த மெல்லிய மஞ்சட்காவி உடைகளை உடுத்தும் புத்தர்களோடும் , அழுக்கு உடம்பை உடைய பெருமையற்ற கீழ்மக்களாகிய சமணர்களோடும் நட்பு உங்கட்கு ஏனோ ? திருக்கழிப் பாலையில் வீற்றிருந்தருளும் எம் தலைவராகிய சிவபெருமானுடைய சிவந்த திருவடிகளையே சரணாக அடைந்து உய்தி பெறுங்கள் .

குறிப்புரை :

செய்ய - சிவந்த . நுண் - மெல்லிய . துவர் ஆடையினார் - காவி உடையை உடைய புத்தர் ( மெய்யில் நீராடாமையால் ) உடம்பில் அழுக்கு மிகுந்த . வீறு இலா - பெருமையில்லாத . கையர் - வஞ்சகராகிய சமணர் . வீறு - பெருமை . கையர் - வஞ்சகர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

அந்தண் காழி யருமறை ஞானசம்
பந்தன் பாய்புனல் சூழ்கழிப் பாலையைச்
சிந்தை யாற்சொன்ன செந்தமிழ் வல்லவர்
முந்தி வானுல காடன் முறைமையே.

பொழிப்புரை :

அழகிய , குளிர்ச்சி மிகுந்த சீகாழியில் அவதரித்த அருமறைவல்ல ஞானசம்பந்தன் , பாய்கின்ற நீர் சூழ்ந்த திருக்கழிப் பாலையைப் போற்றிச் சிவ சிந்தையோடு சொன்ன செந்தமிழாகிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் எல்லோரும் முன்னதாக வானுலகத்தை ஆளுதற்கு உரியவராவர் .

குறிப்புரை :

அம் - அழகு . தண் - குளிர்ச்சி . சிந்தை - சிவனடிக்கு இடமாக்கிய கருத்து , முந்தி - ஏனைய தவிர்த்தோர்க்கும் முன்னரே . உலகு + ஆள்தல் = உலகாடல் - உலகை ஆளுதல் .
சிற்பி