திருமழபாடி


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

அங்கை யாரழ லன்னழ கார்சடைக்
கங்கை யான்கட வுள்ளிட மேவிய
மங்கை யானுறை யும்மழ பாடியைத்
தங்கை யாற்றொழு வார்தக வாளரே.

பொழிப்புரை :

இறைவன் அழகிய கையில் நெருப்பேந்தியவன் . அழகிய செஞ்சடையில் கங்கையைத் தாங்கி , இடம் , பொருள் , காலம் இவற்றைக் கடந்து என்றும் நிலைத்துள்ள அச்சிவபெருமான் தன் திருமேனியின் இடப்பாகமாக உமாதேவியைக் கொண்டு வீற்றிருந்தருளும் மழபாடியைக் கைகளால் கூப்பித் தொழும் அன்பர்கள் நற்பண்பாளர்கள் ஆவர் .

குறிப்புரை :

சடைக் கங்கையான் - சடையில் தாங்கிய கங்கையை உடையவன் . கடவுள் - எவற்றையும் கடந்தவன் ; சிவபெருமானுக்கொரு பெயர் . ` கடவுளே போற்றி ` என்பது திருவாசகம் . ( தி .8. திருச்சதகம் - 64). கடவுள் - கடத்தல் . உள் தொழிற்பெயர் விகுதி . ` விக்குள் ` என்பதுபோல தொழிலாகு பெயராய்ச் சிவபெருமானை உணர்த்திற்று . ` அண்டம் ஆரிரு ளூடு கடந்துஉம்பர் உண்டு போலும்ஓர் ஒண்சுடர் அச்சுடர் , கண்டிங்கு ஆர்அறி வர்அறிவார் எலாம் , வெண்டிங் கட்கண்ணி வேதிய னென்பரே ` ( தி .5 ப .97 பா .2) என்னுந் திருக்குறுந் தொகையாலறிக . இடம் மேவிய மங்கையான் - இடப்பாகத்தில் பொருந்திய பெண்ணை உடையவன் . கங்கையைச் சடையில் தாங்கியவன் , மங்கையை இடம் மேவியவன் என்பவற்றைமுறையே , ` சடைக் கங்கையான் ` ` இடம் மேவிய மங்கையான் ` என்றது வடமொழி விதி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

விதியு மாம்விளை வாமொளி யார்ந்ததோர்
கதியு மாங்கசி வாம்வசி யாற்றமா
மதியு மாம்வலி யாமழ பாடியுள்
நதியந் தோய்சடை நாதன்நற் பாதமே.

பொழிப்புரை :

திருமழபாடியில் வீற்றிருந்தருளும் கங்கையைச் சடையில் தாங்கிய சிவபெருமானின் திருவடிகளே ஆன்மாக்களுக்கு விதியாவதும் , அவ்விதியின் விளைவாவதும் , ஒளியிற் கலப்பதாகிய முத்தி ஆவதுமாம் . மனத்தைக் கசியவைத்துத் தன்வயப்படுத்தும் சிவஞானத்தை விளைவிக்கும் அத்தகைய திருவடிகளை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

மழபாடியுள் தலைவராகிய சிவபெருமானது திருவடியே ஆன்மாக்களுக்கு விதியாவதும் , அவ்விதியின் விளைவாவதும் , ஒளியிற் கலப்பதாகிய முத்தியாவதும் , மனம் கசிவிப்பதும் , அதனால் தன்வயமாகச் செய்வதும் , சிவஞானமாகி விளைவதும் , வலிய பற்றுக்கோடாவதும் , அனைத்தும் ஆம் என்க . மதி - இங்குச் சிவஞானம் . வலி - ஆகுபெயர் . நற்பாதம் :- ` நற்றாள் ` என்ற திருக்குறட் சொற்றொடர்க்குப் பரிமேலழகர் உரைத்ததுரைக்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

முழவி னான்முது காடுறை பேய்க்கணக்
குழுவி னான்குல வுங்கையி லேந்திய
மழுவி னானுறை யும்மழ பாடியைத்
தொழுமி னுந்துய ரானவை தீரவே.

பொழிப்புரை :

இறைவன் முழவு என்னும் வாத்தியம் உடையவன் . சுடுகாட்டில் உறையும் பேய்க்கணத்துடன் குலவி நடனம்புரிபவன் . அழகிய கையில் மழுப்படையை உடையவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை உங்கள் துன்பம் எல்லாம் நீங்கும்படி தொழுது போற்றுங்கள் .

குறிப்புரை :

குழு - கூட்டம் . குலவும் - விளங்குகின்ற . ( நும் துயரானவை தீரத் ) தொழுமின் - வணங்குங்கள் . ஆனவை சொல்லுருபு . முழவின் - முழவு என்னும் வாத்தியத்தால் . ஆல் - ஆரவாரிக்கின்ற ; பேய்க்கணங்களின் குழு .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

கலையி னான்மறை யான்கதி யாகிய
மலையி னான்மரு வார்புர மூன்றெய்த
சிலையி னான்சேர் திருமழ பாடியைத்
தலையி னால்வணங் கத்தவ மாகுமே.

பொழிப்புரை :

இறைவன் ஆயகலைகள் அறுபத்துநான்கு ஆனவர் . நான்கு மறைகள் ஆகியவன் . உயிர்கள் சரண்புகும் இடமாகிய கயிலை மலையினை உடையவன் . பகையசுரர்களின் திரிபுரங்களை எரியுண்ணுமாறு அக்கினிக்கணையை ஏவிய , மேருமலையை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைத் தலையினால் வணங்கிப் போற்றத் தவத்தின் பலன் கைகூடும் .

குறிப்புரை :

கலை - சாத்திரம் . அவை அறுபத்து நான்கு என்ப . கதி ஆகிய - சரணம் புகும் இடம் ஆகிய . மலையினான் - கயிலை மலையை உடையவன் . மருவார் - சேராதவர் , பகைவர் . வணங்க அதுவே தவமாம் . வரும் பாடலில் ` புல்கி ஏத்துமது புகழாகும் ` என்றதையும் காண்க .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

நல்வி னைப்பய னான்மறை யின்பொருள்
கல்வி யாயக ருத்தனு ருத்திரன்
செல்வன் மேய திருமழ பாடியைப்
புல்கி யேத்து மதுபுக ழாகுமே.

பொழிப்புரை :

இறைவன் நல்வினையின் பயனாகியவன் . நான்மறையின் பொருளாகியவன் . கல்விப் பயனாகிய கருத்தன் . உருத்திரனாகத் திகழ்பவன் . அச்செல்வன் வீற்றிருந்தருளும் திருமழ பாடியைப் போற்றுங்கள் . அது உமக்குப் புகழ் தரும் .

குறிப்புரை :

புல் + கு + இ = புல்கி . கு , சாரியை . ஏத்தும் அது - துதித்தலாகிய அப்பணி .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நீடி னாருல குக்குயி ராய்நின்றான்
ஆடி னானெரி கானிடை மாநடம்
பாடி னாரிசை மாமழ பாடியை
நாடி னார்க்கில்லை நல்குர வானவே.

பொழிப்புரை :

பரந்த இவ்வுலகிற்கு இறைவன் உயிராய் விளங்குகின்றான் . அப்பெருமான் சுடுகாட்டில் திருநடனம் ஆடுபவன் . பத்தர்கள் இசையோடு போற்றிப் பாடத் திருமழபாடியில் இனிது வீற்றிருந்தருளும் அவனைச் சார்ந்து போற்றுபவர்கட்கு வறுமை இல்லை .

குறிப்புரை :

நீடினார் உலகுக்கு - பரப்பான் மிக்க உலகத்திற்கு . ` மலர் தலை உலகம் ` என்றபடி . எரி - எரியும் . கான்இடை - காட்டிடை . ( மயானத்தில் ) பாடின் ஆர் இசை - பாடுதலால் உண்டாகிய இனிய இசைமிக்க ( திருமழபாடி ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

மின்னி னாரிடை யாளொரு பாகமாய்
மன்னி னானுறை மாமழ பாடியைப்
பன்னி னாரிசை யால்வழி பாடுசெய்
துன்னி னார்வினை யாயின வோயுமே.

பொழிப்புரை :

மின்னலைப் போன்று ஒளிரும் நுண்ணிய இடையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற மாமழபாடியை இசைப்பாடலால் போற்றி வழிபாடு செய்யும் அன்பர்களின் வினை யாவும் நீங்கும் .

குறிப்புரை :

மின்னின் - மின்னற் கொடிபோல் . ஆர் - பொருந்திய ; இடையாள் . பண்ணினார் - ( புகழ்ந்து ) சொல்பவர்களாய் . இசையால் வழிபாடு செய்தலாவது , இறைவன் புகழை இன்னிசையோடு துதித்தல் . ` அளப்பிலகீதஞ் சொன்னார்க்கு அடிகள் தாம் அருளுமாறே ` என்பதனாலும் அறிக . ( தி .4 ப .77 பா .3) ` கோழை மிடறாக கவி கோளுமிலவாக இசை கூடும் வகையால் ஏழை அடியார் அவர்கள் யாவை சொனசொல் மகிழும் ஈசனிடமாம் ` ( தி .3 ப .71. பா .1) என்னும் திருவைகாவூர்ப் பதிகத்தாலும் அறிக . வழிபாடு செய்து - வழிபட்டு . உன்னினார் - தியானிப்பவர்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

தென்னி லங்கையர் மன்னன் செழுவரை
தன்னி லங்கவ டர்த்தருள் செய்தவன்
மன்னி லங்கிய மாமழ பாடியை
உன்னி லங்க வுறுபிணி யில்லையே.

பொழிப்புரை :

இராவணனைச் செழுமையான கயிலைமலையின் கீழ் அடர்த்து அருள் செய்தவர் சிவபெருமான் . அவர் நிலையாக வீற்றிருந்தருளுகின்ற திருமழபாடியை நினைந்து போற்ற உடம்பில் உறுகின்ற பிணி யாவும் நீங்கும் .

குறிப்புரை :

மன்னன் - மன்னனை . செழுவரை தன்னில் - கயிலை மலையில் ; அடர்த்துப் பின் அவனுக்கு அருள்செய்தவன் என்பது இரண்டாமடியின் பொருள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

திருவி னாயக னுஞ்செழுந் தாமரை
மருவி னானுந் தொழத்தழன் மாண்பமர்
உருவி னானுறை யும்மழ பாடியைப்
பரவி னார்வினைப் பற்றறுப் பார்களே.

பொழிப்புரை :

திருமகளின் நாயகனாகிய திருமாலும் , செழுமை வாய்ந்த தாமரையில் வீற்றிருந்தருளும் பிரமனும் , தொழுது போற்ற நெருப்பு மலையாக நின்ற மாண்புடைய வடிவினரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருமழபாடியைப் பரவிப் போற்றும் அன்பர்கள் பற்றிலிருந்து நீங்கியவராவர் .

குறிப்புரை :

தழல் - நெருப்பாகிய . மாண்பு அமர் உருவினான் - பெருமை தங்கிய வடிவினை உடையவன் . பரவினார் - துதிப்பவர் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

நலியும் நன்றறி யாச்சமண் சாக்கியர்
வலிய சொல்லினு மாமழ பாடியுள்
ஒலிசெய் வார்கழ லான்திற முள்கவே
மெலியு நம்முடன் மேல்வினை யானவே.

பொழிப்புரை :

நன்மை அறியாத சமணர்களும் , புத்தர்களும் பிறரை வருத்தும் சொற்களை வலிய உரைத்தாலும் அவற்றைப் பொருளாகக் கொள்ளாது , திருமழபாடியுள் வீரக்கழல்கள் ஒலிக்கத் திருநடனம் புரியும் சிவபெருமானின் அருட்செயலை நினைந்து போற்றினால் நம்மைப் பற்றியுள்ள வினையாவும் மெலிந்து அழியும் .

குறிப்புரை :

நலியும் - பிறரை வருத்துகின்ற . நன்று அறியா - நீதியை அறியாத . உடல் மேல் வினை - உடலைப்பற்றிய பிழைகள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

மந்த முந்து பொழின்மழ பாடியுள்
எந்தை சந்த மினிதுகந் தேத்துவான்
கந்த மார்கடற் காழியுண் ஞானசம்
பந்தன் மாலைவல் லார்க்கில்லை பாவமே.

பொழிப்புரை :

தென்றல் காற்று வீசும் சோலைகள் சூழ்ந்த திருமழபாடியுள் வீற்றிருந்தருளும் எம் தந்தையாகிய சிவபெருமானைச் சந்தம் பொலியும் இசைப்பாடல்களால் போற்றி , வாசனை வீசும் கடலுடைய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இத்திருப்பதிக மாலையை ஓதவல்லவர்கட்குப் பாவம் இல்லை .

குறிப்புரை :

மந்தம் - தென்றற்காற்று . சந்தம் - இசைப்பாடல்கள் .
சிற்பி