திருவாலவாய்


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

செய்ய னேதிரு வாலவாய் மேவிய
ஐய னேயஞ்ச லென்றருள் செய்யெனைப்
பொய்ய ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பைய வேசென்று பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

நடுநிலைமை உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . பொய்யராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு மெல்லச் சென்று பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .

குறிப்புரை :

செய்யனே - நடுநிலைமையை யுடையானே . ` ஒப்பநாடி அத்தக ஒறுத்தல் ` என்னும் குறிப்புப்போலும் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

சித்த னேதிரு வாலவாய் மேவிய
அத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எத்த ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பத்தி மன்தென்னன் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

எல்லாம் வல்ல சித்தரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளிய தலைவரே ! என்னை அஞ்சேல் என்று அருள் செய்வீராக . ஏமாற்றித் திரிவோராகிய சமணர் இம்மடத்திற்கு வைத்த இந்நெருப்பு ஆருக மதத்தில் பக்தியுடையோனாகிய பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .

குறிப்புரை :

சித்தன் - எல்லாம் வல்ல சித்தராகியவன் . அத்தன் - தலைவன் . எத்தர் - ஏமாற்றுவோர் . கொளுவும் சுடர் - பற்றவைத்த தீ . பத்திமான் - ( ஆருக மதத்திற் ) பக்தியுடையவனாகிய அரசன் . தென்னன் - பாண்டியன் ; தமிழ்நாட்டின் தென்பகுதியை ஆள்பவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

தக்கன் வேள்வி தகர்த்தரு ளாலவாய்ச்
சொக்க னேயஞ்ச லென்றருள் செய்யெனை
எக்க ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பக்க மேசென்று பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

சிவனை மதியாது தக்கன் செய்த வேள்வியைச் சிதைத்த திருஆலவாய்ச் சொக்கரே ! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக . இறுமாப்புடைய சமணர்கள் இம்மடத்திற்குப் பற்ற வைத்த நெருப்பு அத்தகையோர் பக்கமே சார்ந்து பாண்டிய மன்னனைப் பற்றுவதாக .

குறிப்புரை :

சொக்கன் - கண்டாரைச் சொக்கச் ( மயங்க ) செய்யும் பேரழகுடையவன் ; சுந்தரபாண்டியன் என்னும் பெயர் பூண்டமையும் காண்க . எங்கள் பக்கம் ஏவப்பட்ட தீ , அவர்கள் பக்கமே சென்று பாண்டியற்கு ஆகுக என்பது நான்காம் அடியின் கருத்து . எக்கர் - இறுமாப்புடையோர் , ஆடையிலிகள் எனினுமாம் ( பிங்கலம் ).

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

சிட்ட னேதிரு வாலவாய் மேவிய
அட்டமூர்த்திய னேயஞ்ச லென்றருள்
துட்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பட்டி மன்றென்னன் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

நீதிநெறி தவறாதவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அட்டமூர்த்தி வடிவானவரே ! என்னை அஞ்சேல் என்று அருள்புரிவீராக ! கொடியவரான அமணர் இம்மடத்தில் பற்ற வைத்த நெருப்பு கல்வியறிவுடையோனாகிய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

சிட்டன் - நீதிமுறை வழுவாதவன் . பட்டிமன் - கல்வியறிவு உடைய அரசன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

நண்ண லார்புர மூன்றெரி யாலவாய்
அண்ண லேயஞ்ச லென்றருள் செய்யெனை
எண்ணி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பண்ணி யற்றமிழ்ப் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

பகையசுரர்களின் திரிபுரங்களை எரித்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே ! என்னை அஞ்சேல் என்று அருள்செய்வீராக . சிந்திக்கும் திறனில்லாத சமணர்கள் இம்மடத்தைக் கொளுத்திய நெருப்பானது பண்ணிசையோடு தமிழ் வழங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

எரி ஆலவாய் அண்ணல் - எரித்த ஆலவாயிலுள்ள அண்ணல் . எண்ணிலா - நினைத்தல் இல்லாத . பண் இயல்தமிழ்ப் பாண்டியன் - பண்பு அமைந்த தமிழ்மொழி வழங்கும் பாண்டிநாட்டரசன் என்பது . ஈற்றடியின் பொருள் . பண்பு உணர்த்தும் விகுதி குன்றியது . இதில் முதல் தொடருக்கு இசையோடு கூடிய என்றுரைப்பினுமாம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

தஞ்ச மென்றுன் சரண்புகுந் தேனையும்
அஞ்ச லென்றரு ளாலவா யண்ணலே
வஞ்சஞ் செய்தம ணர்கொளு வுஞ்சுடர்
பஞ்ச வன்தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அண்ணலே ! அபயம் என்று உம்முடைய திருவடிகளைச் சரணம் அடைந்த அடியேனையும் அஞ்சேல் என்று கூறி அருள்புரிவீராக . வஞ்சகம் செய்யும் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த இந்த நெருப்பு , பஞ்சவன் , தென்னன் முதலிய பெயர்களையுடைய பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

தஞ்சம் - ( தண் + து + அம் ) அபயம் . அஞ்சல் - அஞ்சாதே . வஞ்சம் - ( வல் + து + அம் ) கொடுமை . பஞ்சவன் ; தென்னவன் ; பாண்டியனைக் குறித்த பெயர்கள் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

செங்கண் வெள்விடை யாய்திரு வாலவாய்
அங்க ணாவஞ்ச லென்றருள் செய்யெனைக்
கங்கு லாரமண் கைய ரிடுங்கனல்
பங்கமில் தென்னன் பாண்டியற் காகவே.

பொழிப்புரை :

சிவந்த கண்களையுடைய வெண்ணிற இடபத்தை வாகனமாக உடையவரே ! திருஆலவாயில் வீற்றிருந்தருளும் அழகிய கண்களையுடைய சிவபெருமானே ! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக ! இருள்மனம் கொண்ட சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது , உயிருக்குத் தீங்கு நேராதபடி பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

அங்கணன் - சிவபெருமானுக்கு ஒரு பெயர் . ` அங்கணன் கையிலை காக்கும் ` ( காஞ்சிப் புராணம் .) கங்குலார் - இருள் போன்றவர் . மீளவும் சைவம் திரும்புகின்றமையின் ` பங்கம் இல் தென்னன் ` என்றார் . ( தி .12 பெரியபுராணம் ) பங்கம் - குற்றம் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

தூர்த்தன் வீரந் தொலைத்தரு ளாலவாய்
ஆத்த னேயஞ்ச லென்றருள் செய்யெனை
ஏத்தி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பார்த்தி வன்தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

பிறன் மாதரை விரும்பிய தூர்த்தனாகிய இராவணனின் வீரத்தை அழித்துப்பின் அருள்செய்த திருஆலவாயில் வீற்றிருந்தருளும் பெருங்கருணையுடைய சிவபெருமானே ! அடியேனை அஞ்சேல் என்று அருள்செய்வீராக ! இறைவனைத் துதிக்கும் பேறு பெறாத சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பு , இப்பூவுலகை ஆளும் தென்னன் பாண்டியனைச் சென்று பற்றுவதாக !

குறிப்புரை :

பிறன் மாதரை விரும்பினமைபற்றி இராவணன் தூர்த்தன் எனப்பட்டான் . ஏத்து ( தல் ) - துதித்தல் . இல்லா ( த ) அமணர் . பார்த் திவன் - பூமியை ஆள்பவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

தாவி னானயன் றானறி யாவகை
மேவி னாய்திரு வாலவா யாயருள்
தூவி லாவம ணர்கொளு வுஞ்சுடர்
பாவி னான்தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

உலகத்தைத் தாவியளந்த திருமாலும் , பிரமனும் அறிய முடியாதவாறு நெருப்பு மலையாய் ஓங்கி நின்ற திருஆலவாய் இறைவனே ! அடியேனுக்கு அருள் புரிவீராக ! நீராடாமையால் தூய்மையற்ற சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட இந்நெருப்பு இதற்குக் காரணமான பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக !

குறிப்புரை :

தாவினான் - உலகத்தைத் தாவி அளந்த திருமால் . தூஇலா - நீராடாமையால் தூய்மை இல்லாத அமணர் . பாவினான் - ( அத்தீயைத் திருமடத்தில் ) பற்றுவித்தவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

எண்டி சைக்கெழி லாலவாய் மேவிய
அண்ட னேயஞ்ச லென்றருள் செய்யெனைக்
குண்ட ராமம ணர்கொளு வுஞ்சுடர்
பண்டிமன் தென்னன் பாண்டியற்காகவே.

பொழிப்புரை :

எட்டுத் திசைகளிலும் எழில் பரவும் திருஆலவாயில் வீற்றிருந்தருளும் , அண்டங்களுக்கெல்லாம் நாயகனான சிவபெருமானே ! அடியேனை அஞ்சேல் என்று அருள்புரிவீராக ! சிறுமையுடைய சமணர்கள் இம்மடத்திற்கு இட்ட நெருப்பானது தொன்மையாக விளங்கும் பாண்டிய மன்னனைச் சென்று பற்றுவதாக .

குறிப்புரை :

அண்டன் - தேவன் .

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

அப்ப னாலவா யாதி யருளினால்
வெப்பம் தென்னவன் மேலுற மேதினிக்
கொப்ப ஞானசம் பந்த னுரைபத்தும்
செப்ப வல்லவர் தீதிலாச் செல்வரே.

பொழிப்புரை :

` எனக்குத் தந்தையாக விளங்கும் திருஆலவாய் ஆதிமூர்த்தியின் திருவருளால் சமணர்கள் இம்மடத்திற்கு வைத்த நெருப்பின் வெப்பமானது பாண்டிய மன்னனைப் பற்றுவதாக ` என்று உலக நியதிக்கு ஏற்ற தன்மையில் ஞானசம்பந்தன் உரைத்தருளிய இத் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் குற்றமற்ற செல்வர்களாகத் திகழ்வர் .

குறிப்புரை :

மேதினிக்கு ஒப்ப - உலகுக்கு ஒக்கும்படியாக ( உரைத்த பதிகம் .) முதற்பாடலில் செய்யனே என அழைத்தமையுங் காண்க . பதிகக் குறிப்பு . ஒவ்வொரு பாட்டிலும் கடவுளை விளிப்பன இங்கு உய்த்து உணரத்தக்கன . எனை அஞ்சல் என்று அருள்செய் , தீ பாண்டியர்க்கு ஆக என இருவாக்கியங்களாகக் கொள்வது பொருத்தம் .
சிற்பி