திருவான்மியூர்


பண் :கௌசிகம்

பாடல் எண் : 1

விரையார் கொன்றையினாய் விடமுண்ட மிடற்றினனே
உரையார் பல்புகழா யுமைநங்கையொர் பங்குடையாய்
திரையார் தெண்கடல்சூழ் திருவான்மி யூருறையும்
அரையா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் கொன்றைமலரை அணிந்தவனே. விடமுண்ட கறுத்த கண்டத்தினனே. அடியவர்களால் பலவாகப் புகழ்ந்துரைக்கப் படுபவனே. உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவனே. அலைவீசும் அழகிய கடல் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் அரசனே! உன்னைத்தவிர என்மனம் ஆதரவாக வேறெதையும் அடையாது.

குறிப்புரை :

விரை - வாசனை. உரைஆர் - (அடியவர்) பேச்சில் பொருந்திய. அரையா - அரசனே, ஆதரவு - புகலிடமாகக் கொள்வது; ஆசை எனினும் ஆம். அரசன் - அரையன் என வந்தது எழுத்துப் போலி.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 2

இடியா ரேறுடையா யிமையோர்தம் மணிமுடியாய்
கொடியார் மாமதியோ டரவம்மலர்க் கொன்றையினாய்
செடியார் மாதவிசூழ் திருவான்மி யூருறையும்
அடிகே ளுன்னையல்லா லடையாதென தாதரவே.

பொழிப்புரை :

இடிபோல் முழங்கும் இடபத்தை வாகனமாக உடையவனே! தேவர்கள் தங்கள் மணிமுடி உன் திருப்பாதத்தில் படும்படி வணங்க அவர்கட்கு வாழ்வளிக்கும் முதற்பொருளே! இடபக்கொடியும், சந்திரனும், பாம்பும், கொன்றைமலரும் உடைய இறைவனே! செடிகளோடு கூடிய மாதவி மலரின் மணம் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தலைவனான சிவபெருமானே! உன்னைத் தவிர என் மனம், ஆதரவாக வேறெதையும் அடையாது.

குறிப்புரை :

இடி ஆர் ஏறு - இடியைப்போல் ஒலிக்கும் ஏறு. ஆர்த்தல் - ஒலித்தல். கொடி - ஒழுங்கு. செடி ஆர் மாதவி - செடிகளோடு கூடிய மாதவி முதலிய தருக்கள் சூழ்திருவான்மியூர். மாதவி ஏனை மரங்களையும் தழுவலால் உபலட்சணம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 3

கையார் வெண்மழுவா கனல்போற்றிரு மேனியனே
மையா ரொண்கணல்லா ளுமையாள்வளர் மார்பினனே
செய்யார் செங்கயல்பாய் திருவான்மி யூருறையும்
ஐயா வுன்னையல்லா லடையாதென தாதரவே.

பொழிப்புரை :

கையின்கண் பொருந்திய வெண்மையான மழு வாயுதத்தை உடையவனே! கனல் போன்ற சிவந்த திருமேனியனே! மை பூசப் பெற்ற, ஒளி பொருந்திய கண்களை உடைய நல்லவளாகிய உமையம்மை கண்வளரும் மார்பினனே! வயல்களில் செங்கயல்கள் பாயும் வளம் பொருந்திய திருவான்மியூரில் உறையும் ஐயனே! உன்னையல்லால் எனது அன்பு பிறிதொருவரைச் சென்றடையாது.

குறிப்புரை :

வளர் - தங்குகின்ற.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 4

பொன்போ லுஞ்சடைமேற் புனல்தாங்கிய புண்ணியனே
மின்போ லும்புரிநூல் விடையேறிய வேதியனே
தென்பால் வையமெலாந் திகழுந்திரு வான்மிதன்னில்
அன்பா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

பொன்போல் ஒளிரும் சடைமேல் கங்கையைத் தாங்கிய புண்ணியமூர்த்தியே! மின்போல் ஒளிரும் முப்புரிநூல் அணிந்து, இடப வாகனத்திலேறி, வேதங்களை அருளிச் செய்தவனாய், வேதப் பொருளாகவும் விளங்குபவனே! உலகெலாம் இன்புறத் திருவான்மியூர் என்னும் தலத்தில் வீற்றிருந்தருளும் அன்புருவான உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

புனல் - கங்கைநீர். புரிநூலொடு விடையேறிய வேதியனே. வேதியன் என்பதற்கேற்ப, புரிநூல் அடை அடுத்தது. அந்தணனாகி அறவிடையேறி வருவான் என்பது, தென்பால் - தமிழ்நாடு. தமிழ் நாட்டிலுள்ளதாகிய, உலகமெங்கும் விளங்கும் திருவான்மியூர் என்க

பண் :கௌசிகம்

பாடல் எண் : 5

கண்ணா ருந்நுதலாய் கதிர்சூழொளி மேனியின்மேல்
எண்ணார் வெண்பொடிநீ றணிவாயெழில் வார்பொழில்சூழ்
திண்ணார் வண்புரிசைத் திருவான்மி யூருறையும்
அண்ணா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

நெற்றிக்கண்ணை உடையவனே! கதிர்போல் ஒளிரும் திருமேனி மீது திருவெண்ணீற்றினை அணிந்துள்ளவனே! அழகிய சோலைகள் சூழ்ந்த உறுதியான மதில்களை உடைய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் தந்தையே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

எண் ஆர் - பாராட்டுதற்குரிய, பொடி நீறு - பொடியாகிய திருநீறு - இருபெயரொட்டுப் பண்புத்தொகை. அண்ணா - தந்தையே, திசைச்சொல். அண்ணல் என்பதன் விளியுமாம்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 6

நீதீ நின்னையல்லா னெறியாதும் நினைந்தறியேன்
ஓதீ நான்மறைகள் மறையோன்றலை யொன்றினையும்
சேதீ சேதமில்லாத் திருவான்மி யூருறையும்
ஆதீ யுன்னையல்லா லடையாதென தாதரவே.

பொழிப்புரை :

நீதிவடிவாயுள்ளவனே! உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுதற்குரிய நெறி வேறொன்றை அறிந்திலேன். நால்வேதங்களை அருளிச் செய்தவனே! பிரமன் தலை ஒன்றை நகத்தால் கிள்ளியவனே! எத்தகைய குறைவுமின்றி வளம் பொருந்திய திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் ஆதிமூர்த்தியே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

நீதீ - நீதி வடிவாயுள்ளவனே, உன்னையே நினைப்பதல்லாமல் உன்னை வழிபடுவதற்குரிய முறை எதனையும் நினைந்தறியேன் என்பது முதலடிக்குப் பொருள். ஓதீ - நான்மறைகள் - நான்கு வேதங்களையும் ஓதினவனே, சேதீ - சேதித்தவனே, சேதித்தல் - வெட்டுதல், (நகத்தாற்கிள்ளினமை.) ஆதீ - முதல்வனே.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 7

வானார் மாமதிசேர் சடையாய்வரை போலவரும்
கானா ரானையின்றோ லுரித்தாய்கறை மாமிடற்றாய்
தேனார் சோலைகள்சூழ் திருவான்மி யூருறையும்
ஆனா யுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

வானில் விளங்கும் சந்திரனைச் சடையில் தரித்தவனே! மலைபோல வரும் காட்டிலுள்ள யானையின் தோலை உரித்தவனே! நஞ்சுண்டு கறுத்த கண்டத்தையுடையவனே! தேன் துளிக்கும் மலர்கள் நிறைந்த சோலைகள் சூழ்ந்த திருவான்மியூரில் இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் இறைவனே! உன்னையல்லால் என்மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

கான் ஆர் ஆனை - காட்டிலுள்ள யானை, ஆனாய் - இடபவாகனத்தை யுடையவனே. ஆன் - பொதுப்பெயர். இங்குக் காளையை உணர்த்திற்று. `பசுவேறும் எங்கள் பரமன்` என்றதும் காண்க. (தி.2. ப.85. பா.9.) தேன் - வண்டு.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 8

* * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * *

பண் :கௌசிகம்

பாடல் எண் : 9

பொறிவாய் நாகணையா னொடுபூமிசை மேயவனும்
நெறியார் நீள்கழன்மேன் முடிகாண்பரி தாயவனே
செறிவார் மாமதில்சூழ் திருவான்மி யூருறையும்
அறிவே யுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

நெருப்புப் பொறிபோல் விடம் கக்கும் வாயுடைய பாம்பைப் படுக்கையாகக் கொண்ட திருமாலும், தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், நன்னெறி காட்டும் உனது நீண்ட திருவடியையும், மேலோங்கும் திருமுடியையும் காண்பதற்கு அரியவனாய் விளங்கியவனே! நெருக்கமாக நீண்ட பெரிய மதில்கள் சூழ்ந்த திருவான்மியூரில் வீற்றிருந்தருளும் முற்றுணர்வும், இயற்கை உணர்வுமுடையவனே! உன்னையல்லால் என் மனம் வேறெதையும் ஆதரவாக அடையாது.

குறிப்புரை :

பொறிவாய் - புள்ளிகள் பொருந்திய, நாகணையான் - நாக அணையான், நாகணை என்பது மரூஉ `கோணாகணையானும்` எனப் பின்னும் வருதல் அறிக. நீள்கழல் - பாதாளத்தின் கீழும் நீண்ட திருவடிகள். மேல்முடி - வானுலகின் மேலும் சென்றமுடி. நெறியார் கழல்.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 10

குண்டா டுஞ்சமணர் கொடுஞ்சாக்கிய ரென்றிவர்கள்
கண்டார் காரணங்கள் கருதாதவர் பேசநின்றாய்
திண்டேர் வீதியதார் திருவான்மி யூருறையும்
அண்டா வுன்னையல்லா லடையாதென தாதரவே. 

பொழிப்புரை :

விதண்டாவாதம் செய்கின்ற சமணர்களும், முரட்டுத் தன்மையுடைய புத்தர்களும் காரணம் அறியாதவராய் உன்னைப்பேச வீற்றிருந்தாய். வலிமை வாய்ந்த தேரோடும் வீதிகளையுடைய திருவான்மீயூரில் வீற்றிருந்தருளும் தேவனே! உன்னையல்லால் என் மனமானது ஆதரவாக வேறெதையும் நாடாது.

குறிப்புரை :

குண்டு ஆடும் சமணர் - விதண்டை பேசுகின்ற, கண்டார் காரணங்கள் கருதாதவர் - சிலவற்றையறிந்தும், அவற்றின் காரணங்களை அறியாதவர் என்றது, உலகு உள் பொருள் என்று அறிந்தும் அது ஒருவனாற் படைக்கப்படவில்லை எனல் போல்வன. அண்டா - தேவனே.

பண் :கௌசிகம்

பாடல் எண் : 11

கன்றா ருங்கமுகின் வயல்சூழ்தரு காழிதனில்
நன்றான புகழான் மிகுஞானசம் பந்தனுரை
சென்றார் தம்மிடர்தீர் திருவான்மி யூரதன்மேல்
குன்றா தேத்தவல்லார் கொடுவல்வினை போயறுமே. 

பொழிப்புரை :

பாக்குமரக் கன்றுகள் வயல்களைச் சூழ்ந்து விளங்குகின்ற சீகாழியில் அவதரித்து, நல்ல புகழ் மிகுந்த ஞானசம்பந்தன், இடர்தீர்க்கும் திருவான்மியூரின் மேல் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓதவல்லவர்கட்குக் கொடிய தீவினையானது நீங்கும்.

குறிப்புரை :

கன்று - இளஞ்செடி, திருவான்மியூர் அதன்மேல் ஞானசம்பந்தன் உரை என இயைக்க.
சிற்பி