திருவொற்றியூர்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

விடையவன் விண்ணுமண்ணுந் தொழ நின்றவன் வெண்மழுவாட்
படையவன் பாய்புலித்தோ லுடை கோவணம் பல்கரந்தைச்
சடையவன் சாமவேதன் சசி தங்கிய சங்கவெண்டோ
டுடையவன் னூனமில்லி யுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடபவாகனத்தை உடையவன் . விண்ணுளோரும் , இம்மண்ணுலக மாந்தரும் தொழுது போற்ற விளங்குபவன் . கறைபடியாத மழுப்படை உடையவன் . பாயும் புலித்தோலுடையும் , கோவணமும் உடையவன் . பலவிதமான மலர்களைச் சடையில் அணிந்தவன் . சாமகானப் பிரியன் . சந்திரனைச் சடையில் தாங்கி , சங்கினால் ஆகிய வெண்மையான தோடு என்னும் காதணி அணிந்தவன் . குறைவில்லாத அப்பெருமான் தன்னை வழிபடும் அடியவர்களின் ஊனமாகக் கருதப்படும் குற்றம் குறைகளைக் களைந்து வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

வெண்மழு - இரத்தக்கறை தோய்தலின்மையினால் வெண்மையாகவுள்ள மழு . மழு - மழுவாள் எனவும் படும் . ஆகையினால் மழுவாள் படையவன் என்றார் . படை - ஆயுதம் . சசி தங்கிய - சந்திரனைப் போன்ற , வெண்சங்கத்தோடு , உடையவன் . தங்கிய - உவமவாசகம் . அடைந்தவர்க்கு ஊனம் இல்லையாகச் செய்பவன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாரிடம் பாணிசெய்யப் பறைக் கட்செறு பல்கணப்பேய்
சீரொடும் பாடலாட லில யஞ்சிதை யாதகொள்கைத்
தாரிடும் போர்விடையன் றலைவன்றலை யேகலனா
ஊரிடும் பிச்சைகொள்வா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

பூதகணங்கள் பண்ணிசைத்துப் பாட , பறைகள் கொட்ட , கண்டாரைக் கொல்லவல்ல பல்வேறு பேய்க்கணங்கள் தாளத்தோடு இலயம் கெடாதவாறு பாடி ஆடத் திருநடனம் புரிபவன் . கிண்கிணிமாலை அணிந்த போர்செய்யும் தன்மையுடைய இடபவாகனத்தில் வீற்றிருந்தருளும் தலைவன் . பிரமகபாலத்தை உண்கலனாகக் கொண்டு ஊர்தோறும் திரிந்து பிச்சை ஏற்பவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

பாரிடம் - பூதம் , பாணி செய்ய - பாட . பறைக்கண் - பறை போன்ற கண்பார்வையினாலேயே , செறு - கண்டாரைக் கொல்லவல்ல . பல்கணப் பேய் - பல பேய்க்கூட்டங்களின் , சீரொடும் - தாளவொத்தோடும் . இலயம் - ஒன்றுதல் , சிதையாத கொள்கை - சிதையாத முறையோடு . பாடல் ஆடல் - பாடலுக்கேற்ற ஆடலையுடைய . விடையன் . தார் - கிண்கிணிமாலை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

விளிதரு நீருமண்ணும் விசும் போடனல் காலுமாகி
அளிதரு பேரருளா னர னாகிய வாதிமூர்த்தி
களிதரு வண்டு பண்செய் கமழ் கொன்றையி னோடணிந்த
ஒளிதரு வெண்பிறையா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

ஓசையுடன் பாயும் நீர் , நிலம் , ஆகாயம் , நெருப்பு , காற்றுமாகி , மன்னுயிர்களைக் காக்கும் பெருங்கருணையாளன் ஆகிய சங்கார கர்த்தாவாகிய சிவபெருமானே உலகத்தோற்றத்திற்கும் நிமித்த காரணனாவான் . மலர்களிலுள்ள தேனைப்பருகிய மகிழ்ச்சியில் வண்டுகள் பண்ணிசைக்கும் நறுமணம் கமழும் கொன்றை மாலையோடு ஒளிரும் வெண்பிறைச் சந்திரனையும் சடையில் அணிந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளுவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

விளிதருநீர் - பிரளயகாலத்து உலகை அழிக்க வல்ல தண்ணீர் . அளிதரு - ( உயிர்களைக் ) காக்கின்ற . பேர் அருளான் - பெருங்கருணையுடையவன் , அரன் ஆகிய - சங்காரகர்த்தாவும் ஆகிய ஆதிமூர்த்தி . எவன் சங்கார கர்த்தாவோ அவனே முழுமுதற்கடவுள் என்னும் உண்மை நூற்கருத்துப்பற்றி இங்ஙனம் கூறினார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

அரவமே கச்சதாக வசைத் தானலர் கொன்றையந்தார்
விரவிவெண் ணூல்கிடந்த விரை யார்வரை மார்பனெந்தை
பரவுவார் பாவமெல்லாம் பறைத் துப்படர் புன்சடைமேல்
உரவுநீ ரேற்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

சிவபெருமான் இடையிலே பாம்பைக் கச்சாக அணிந்தவர் . கொன்றை மலர்மாலை அணிந்தவர் . வெண்ணிற முப்புரி நூலணிந்து கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பை உடையவர் . எம் தந்தையான அச் சிவபெருமான் தம்மை வணங்குவாரின் பாவத்தைப் போக்கிப் படர்ந்த சடையின் மேல் கங்கையைத் தாங்கியவர் . அவர் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அசைத்தான் - கட்டியவன் . விரையார்வரைமார்பன் - கலவைச் சாந்தணிந்த மலைபோன்ற மார்பையுடையவன் . பரவுவார் பாவம் எல்லாம் . பறைத்து - ஓட்டி . ` பரவுவார் பாவம் பறைக்கும் அடி ` என்ற அப்பர் வாக்கிலும் ( திருமுறை 6) இத்தொடர் பயில்கிறது . உரவுநீர் - உலாவும் நீர் ( சீவகசிந்தாமணி ) - கங்கை . ஏற்ற - தாங்கிய . பெம்மான் - பெருமான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

விலகினார் வெய்யபாவம் விதி யாலருள் செய்துநல்ல
பலகினார் மொந்தைதாளந் தகுணிச்சமும் பாணியாலே
அலகினால் வீசிநீர்கொண் டடி மேலல ரிட்டுமுட்டா
துலகினா ரேத்தநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

கொடிய பாவத்திலிருந்து விடுபட்ட பக்குவ ஆன்மாக்கட்கு , விதிப்படி அருள்செய்து , சிவபெருமான் நல்ல பல வகையான வாத்தியங்களான மொந்தை , தாளம் , தகுணிச்சம் என்னும் ஒருவகை தோற்கருவி முதலியன ஒலிக்கப் பாட்டோடும் , தாளத் தோடும் எண்தோள் வீசி நின்று ஆட , உலகத்தோர் அவன் திருவடியில் மலர்களைத் தூவி , தங்கள் வழிபாடு தடைப்படா வண்ணம் துதித்து வணங்க அவன் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வெய்யபாவம் விலகினார் - கொடிய பாவம்நீங்கிய பக்குவிகளுக்கு . விதியால் - விதிப்படி . அருள் செய்து - தீக்கை முதலிய செய்வித்து . பாணியால் - பாட்டோடும் , அலகினால் - தாளத்தோடும் . வீசி - ( எண்தோள் ) வீசிநின்று ஆடி , உலகினார் நீர் கொண்டு ( ஆட்டி ) அடிமேல் அலர் இட்டு . முட்டாது ஏத்த - தங்கள் வழிபாடு தடைப்படாவண்ணம் துதித்து வணங்க , நின்றான் - அருள்செய்து , வீசி , ஏத்தநின்றான் என முடிவு கொள்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கமையொடு நின்றசீரான் கழ லுஞ்சிலம் புமொலிப்பச்
சுமையொடு மேலும்வைத்தான் விரி கொன்றையுஞ் சோமனையும்
அமையொடு நீண்டதிண்டோ ளழ காயபொற் றோடிலங்க
உமையொடுங் கூடிநின்றா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

பொறுமையுடன் விளங்கும் தலைவனான சிவபெருமான் , தன் திருவடிகளிலுள்ள கழலும் , சிலம்பும் ஒலிக்கச் சடைமுடியில் மலர்ந்த கொன்றையையும் , சந்திரனையும் தாங்கிய , நீண்ட வலிமையான தோளழகு உடையவன் . காதில் பொன்னாலாகிய தோடு பிரகாசிக்க உமாதேவியோடு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

கமை - பொறுமை . கழலும் சிலம்பும் ஒலிப்ப என்றது - உமையொரு கூறன் என்பது உணர்த்தியது . சுமையொடு - சுமையாக . ஒடு - இசைநிறை . அமையொடு - அழகின் அமைதியோடு , நீண்ட திண்ணிய தோளின் மீது , பொன்மயமான காதணி , இலங்க - பிரகாசிக்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

நன்றியால் வாழ்வதுள்ளம் முல குக்கொரு நன்மையாலே
கன்றினார் மும்மதிலுங் கரு மால்வரை யேசிலையாப்
பொன்றினார் வார் சுடலைப் பொடி நீறணிந் தாரழலம்
பொன்றினா லெய்தபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

உள்ளத்தில் பிறருக்கு உபகாரமாய் வாழவேண்டும் என்பதை உலகிற்கு உணர்த்தச் சிவபெருமான் , உலகத்தார்க்கு தீமை செய்த அசுரர்கள் வாழும் முப்புரங்களையும் , பெருமை வாய்ந்த மேருமலையை வில்லாகக் கொண்டு அக்கினிக்கணை ஒன்றை எய்து அழித்தவர் . நெடிய சுடலைப்பொடியாகிய நீற்றினை அணிந்தவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

உள்ளம் - உள்ளத்தில் . நன்றியால் - பிறருக்கு உபகாரம் ஆம் தன்மையோடு . வாழ்வது - வாழவேண்டுமென்பதை , உலகுக்கு - உலகத்துக்கு . ஒரு நன்மையாலே - நல்லது என்னும் நோக்கத்தினால் . உலகுக்குத் தீமை செய்த திரிபுரங்களை அழித்தார் என்றது இடை இரண்டடிகளின் கருத்து . கன்றினார் - தீமை செய்வோர்களாகிய அசுரர்கள் . கரு - பெருமைதங்கிய . மால் - பெரிய , வரையேசிலையா - மலையே வில்லாக . பொன்றினார் - பொன்றுவிப்பாராகி ( பொன்றுதல் - சாதல் ) அழல் அம்பு ஒன்றினால் - அக்கினியாகிய ஒரு பாணத்தினால் . எய்த - எய்து அழித்த பெம்மான் . வார் - நெடிய , சுடலைப்பொடி நீறணிந்தாரும் ; மும்மதிலும் பொன்றுவிப்பாராகி அழல் அம்பு எய்த பெம்மானுமாகிய சிவபிரான் உறையும் இடம் ஒற்றியூரே எனக்கொண்டு கூட்டுக . பொன்றினார் , பிறவினை விகுதி குன்றியது , முற்றெச்சம் ; காலவழுவமைதி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

பெற்றியாற் பித்தனொப்பான் பெரு மான்கரு மானுரிதோல்
சுற்றியான் சுத்திசூலஞ் சுடர்க் கண்ணுதன் மேல்விளங்கத்
தெற்றியாற் செற்றரக்கன் னுட லைச்செழு மால்வரைக்கீழ்
ஒற்றியான் முற்றுமாள்வா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

பித்தனைப் போன்று விளங்கும் சிவபெருமான் , செய்கையால் அறிவில் பெரியவனாவான் . கலைமானின் தோலைச் சுற்றி உடுத்தவன் . சுத்தி , சூலம் என்பன ஏந்தியவன் . நெற்றிக்கண் உடையவன் . கோபமுடைய அரக்கனான இராவணன் கயிலை மலையைப் பெயர்த்து எடுக்க , அவன் அம்மலையின்கீழ் நெரியுமாறு தன் காற்பெருவிரலை அழுத்தியவன் . உலகம் முழுவதையும் ஆட் கொண்டருளும் அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பெற்றி - தன்மை , பித்தனொப்பானாயினும் , செய்கையால் அறிவிற்பெரியானாவான் என்பார் பெருமான் என்றார் . சுற்றியான் - சுற்றியுடுத்தவன் , சுத்தி - இப்பியாலாகிய பொக்கணமும் , சூலம் - சூலமும் , ( கையில் விளங்க ) சுடர்க்கண் - அக்கினியாகிய கண் , நுதல்மேல் விளங்க - நெற்றியின் மேல் விளங்க , நுதல்மேல் விளங்க என்ற சொல்லாற்றலால் கையில் விளங்க என்பதும் பெற்றாம் . தெற்றி - உதை , தெற்றியால் - உதையால் , ஒற்றியான் - அழுத்தினவன் , ` ஒற்றியான்முற்றும் ஆள்வான் ` உலகம் முழுவதையும் ஒற்றிகொண்டு ஆள்வான் என ஒரு பொருள் தோன்றிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

திருவினார் போதினானுந் திரு மாலுமொர் தெய்வமுன்னித்
தெரிவினாற் காணமாட்டார் திகழ் சேவடி சிந்தைசெய்து
பரவினார் பாவமெல்லாம் பறையப்படர் பேரொளியோ
டொருவனாய் நின்றபெம்மா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

இலக்குமி எழுந்தருளிய தாமரை மலரில் வீற்றிருந்தருளும் பிரமனும் , திருமாலும் ஒப்பற்ற தெய்வத்தைக் காணவேண்டும் என நினைத்துத் தம் அறிவால் தேடிக் காணமாட்டாதவர் ஆயினர் . சிவபெருமானின் சிவந்த திருவடிகளை மனத்தால் சிந்தித்து வழிபடுபவர்களின் பாவம் எல்லாம் அழியப் படர்ந்த பேரொளியோடு ஒப்பற்றவனாயிருந்த அச் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

திருவின்ஆர் - அழகால்மிகுந்த . ஓர் தெய்வம் முன்னி - தாங்கள் ஓர் தெய்வமாக நினைத்து . தெரிவில் - தம் அறிவால் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

தோகையம் பீலிகொள்வார் துவர்க் கூறைகள் போர்த்துழல்வார்
ஆகமச் செல்வனாரை யலர் தூற்றுதல் காரணமாக்
கூகையம் மாக்கள்சொல்லைக் குறிக் கொள்ளன்மி னேழுலகும்
ஓகைதந் தாளவல்லா னுறை யும்மிட மொற்றியூரே.

பொழிப்புரை :

நடந்து செல்லும்போது எறும்பு முதலிய சிறு பூச்சிகள் மிதிபட்டு இறந்துவிடாதிருக்க மயில்தோகை ஏந்திப் பெருக்கிச் செல்லும் சமணர்களும் , துவர் ஆடையைப் போர்த்திய புத்தர்களும் , ஆகமம் அருளிய , ஆகம நெறியில் பூசிக்கப்படும் செல்வரான சிவபெருமானைப் பழித்துக் கூறுவதால் , கோட்டான் போன்று ஐயறிவுடைய விலங்குகட்கு ஒப்பாவாராதலால் அவர்கள் கூறும் சொற்களைப் பொருளெனக் கொள்ள வேண்டா . ஏழுலகும் மகிழுமாறு ஆட்கொள்ள வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவொற்றியூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஆகம செல்வனாரை - சிவபெருமானை , அலர்தூற்றுதல் - பழித்துரைத்தல் , கூகை - கோட்டான் , மாக்கள் - ஐயறிவுடை விலங்குகளோடொப்பவர் . ` மாவும் புள்ளும் ஐயறி வினவே `. ( தொல்காப்பியம் . 576 ) ஓகை - மகிழ்ச்சி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

ஒண்பிறை மல்குசென்னி யிறை வன்னுறை யொற்றியூரைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்பத்தும் பர விப்பணிந் தேத்தவல்லார்
விண்புனை மேலுலகம் விருப் பெய்துவர் வீடெளிதே.

பொழிப்புரை :

ஒளிரும் பிறைச்சந்திரனைத் தலையில் சூடிய இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவொற்றியூரை , சண்பை என்று கூறப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இப்பாடல்கள் . பத்தையும் ஓதி வழிபட வல்லவர்கள் விண்ணிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து வீடுபேற்றை எளிதில் அடைவர் .

குறிப்புரை :

மல்கு - ஒளி விளங்குகின்ற , விண் - வானிலுள்ள , புனையப்பட்ட , மேலுலகம் - சுவர்க்கலோகம் , எய்துவர் , அவர்கட்குப் பின் வீடும் எளியது ஆகும் .
சிற்பி