திருச்சாத்தமங்கை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

திருமலர்க் கொன்றைமாலை திளைக் கும்மதி சென்னிவைத்தீர்
இருமலர்க் கண்ணிதன்னோ டுட னாவது மேற்பதொன்றே
பெருமலர்ச் சோலைமேக முரிஞ் சும்பெருஞ் சாத்தமங்கை
அருமல ராதிமூர்த்தீ யய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

தெய்வத்தன்மை பொருந்திய கொன்றை மலர்களை மாலையாக அணிந்தவனும் , சந்திரனைத் தலையில் தரித்தவனும் , இரு தாமரை மலர் போன்ற கண்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு , நறுமணம் பெருகும் மலர்கள் நிறைந்த சோலைகளிலுள்ள மரங்கள் மேகத்தை உராயும்படி விளங்கும் திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் , உலகிற்கு ஒப்பற்றவனாகி விளங்கும் ஆதிமூர்த்தியும் ஆகிய சிவபெருமான் அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . இத்திருத்தலத்தின் அம்பிகையின் திருப்பெயரான இருமலர்க்கண்ணம்மை என்பது இப்பாடலில் உணர்த்தப்படுகின்றது .

குறிப்புரை :

கொன்றை மாலையில் திளைக்கும் மதி , கொன்றை சிவபிரானுக்குரியதாந் தன்மையாலும் , பிரணவபுட்பம் எனப் படுவதாலும் - திருமலர் என்னப்பட்டது . இரண்டு மலர்களையொத்த கண்களையுடையவள் . மலர் என்றது - தாமரை மலரைக் குறிக்கும் . ` உயர்ந்ததன்மேற்றே யுள்ளுங்காலை ` ( தொல் . பொருள் . 274) ` மரங்களும் நிகர்க்கல மலையும் புல்லிய ` ( கம்பர் . ஆரண்ய . சூர்ப் . 14 ) ஏற்பது ஒன்றே - அனைவரும் உடன்படக் கூடிய ஒரு செயலா ? உரிஞ்சும் - உராயும் , மலர் - உலகமெங்கும் பரவிய . அரு - ஒப்பற்ற . ஆதிமூர்த்தி , அயவந்தி - ஆலயத்தின் பெயர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பொடிதனைப் பூசுமார்பிற் புரி நூலொரு பாற்பொருந்தக்
கொடியன சாயலாளோ டுடனாவதுங் கூடுவதே
கடிமண மல்கிநாளுங் கம ழும்பொழிற் சாத்தமங்கை
அடிகணக் கன்பரவ வய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவெண்ணீற்றினைப் பூசிய திருமார்பில் முப்புரிநூல் அணிந்து , பூங்கொடி போன்ற மெல்லிய சாயலுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் . நறுமண மலர்கள் நாளும் பூத்து வாசனை வீசும் சோலைகளையுடைய திருச்சாத்தமங்கையில் சிவபெருமான் திருநீலநக்க நாயனார் போற்றி வழிபட அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கொடி அன சாயலாள் - பூங்கொடிபோன்ற தோற்றப் பொலி வினை உடையவள் . கூடுவதே - கூடுவது தகுமா ? கடிமணம் - புது வாசனை . அடிகள் நக்கன் - அடியராகிய திருநீல நக்கநாயனார் . பரவ அயவந்தி அமர்ந்தவனே .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

நூனலந் தங்குமார்பி னுகர் நீறணிந் தேறதேறி
மானன நோக்கிதன்னோ டுட னாவது மாண்பதுவே
தானலங் கொண்டுமேகந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை
ஆனலந் தோய்ந்தவெம்மா னயவந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

முப்புரிநூல் அணிந்த திருமார்பில் திருவெண்ணீற்றினைப் அணிந்து , இடப வாகனத்திலேறி , மான் போன்ற மருண்ட பார்வையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குபவன் சிவபெருமான் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்த அழகிய சோலைகள் சூழ்ந்த திருச்சாத்த மங்கை என்னும் திருத்தலத்தில் பசுவிலிருந்து பெறப்படும் பஞ்சகவ்வியங்களால் திருமுழுக் காட்டப்படும் சிவபெருமான் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

நூல் நலம் - நல்லபுரி நூல் . நுகர் - பூசிய நீறு . மாண்பு அதுவே - பெருமையாமா ? நோக்கி - கண்களையுடையவள் . ஆன்நலம் - பசுவினிடம் கிடைக்கும் பஞ்சகவ்வியத்தை . தோய்ந்த - திருமஞ்சனம் கொண்டருளிய . எம்மான் - எமது தலைவனே .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

மற்றவின் மால்வரையா மதி லெய்துவெண் ணீறுபூசிப்
புற்றர வல்குலாளோ டுட னாவதும் பொற்பதுவே
கற்றவர் சாத்தமங்கை நகர் கைதொழச் செய்தபாவம்
அற்றவர் நாளுமேத்த வய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

பெரிய மேருமலையை வில்லாகக் கொண்டு மும்மதில்களை எய்து அழித்து , திருவெண்ணீற்றினைப் பூசி , புற்றில் வாழ்கின்ற பாம்பு போன்ற அல்குலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகிறான் சிவபெருமான் . வேதாகமங்களை நன்கு கற்றவர்கள் வாழ்கின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தைக் கைக்கூப்பித் தொழப் பாவம் நீங்கும் . உலகப் பற்றற்ற மெய்யடியார்கள் , தமக்குப் பற்றுக் கோடாக விளங்கும் சிவ பெருமானை நாள்தோறும் போற்றி வழிபட திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் அவன் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

மற்ற - ( எதிரிகள் வில்லுக்கு ) எதிராகிய வில் மால் வரையா ( க ) பெரிய ( மேரு ) மலையாக . பொற்பதுவே - அழகு உடையதா ?. கற்றவர் சாத்தமங்கை - கற்றவர் வாழும் திருச்சாத்த மங்கையில் . அற்றவர் - பற்றற்ற மெய்யடியார் ` அற்றவர்க் கற்ற சிவனுறைகின்ற ஆலவாய் ஆவதும் இதுவே ` என்புழியும் ( தி .3. ப .120. பா .2.) காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

வெந்தவெண் ணீறுபூசி விடை யேறிய வேதகீதன்
பந்தண வும்விரலா ளுட னாவதும் பாங்கதுவே
சந்தமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை
அந்தமா யாதியாகி யய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

இறைவன் திருவெண்ணீற்றனைப் பூசியவன் . இடபவாகனத்தில் ஏறியமர்பவன் . வேதத்தை இசையோடு பாடியருளி , வேதப் பொருளாகவும் விளங்குபவன் . பந்து வந்தணைகின்ற விரல்களையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டவன் . வேதமும் , அதன் ஆறங்கமும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உலகத்திற்கு அந்தமும் , ஆதியுமாகிய சிவபெருமான் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

வேதகீதன் - வேதத்தை இசையோடு பாடுபவன் . சந்தம் - அழகிய . ஆறு அங்கம் - ஆறு அங்கங்களையும் . வேதம் - வேதத்தையும் . தரித்தார் - உச்சரிப்பவர்களாகிய அந்தணர்கள் . ` உன் திருநாமம் தரிப்பார் ` ( திருவாசகம் - கோயிலின் மூத்த . 9) என்பதும் காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

வேதமாய் வேள்வியாகி விளங் கும்பொருள் வீடதாகிச்
சோதியாய் மங்கைபாகந் நிலை தான்சொல்ல லாவதொன்றே
சாதியான் மிக்கசீராற் றகு வார்தொழுஞ் சாத்தமங்கை
ஆதியாய் நின்றபெம்மா னய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

இறைவன் வேதங்களை அருளி வேதப் பொருளாகவும் விளங்குபவன் . எரியோம்பிச் செய்யப்படும் வேத வேள்வியாகவும் , ஞானவேள்வியாகவும் திகழ்பவன் . ஒண் பொருளாகவும் , வீடுபேறாகவும் உள்ளவன் . சோதிவடிவானவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு விளங்குபவன் . இப்பெருமான் இத்தகையவன் என்பதை வாயினால் சொல்லவும் ஆகுமோ ? அத்தகைய சிறப்புடைய பெருமான் , தக்கவர்கள் தொழும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் ஆதிமூர்த்தியாய் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

பொருள்வீடு - பொருளாகிய வீடு . சொல்லலாவதொன்றே - புகழ்ந்து சொல்லக்கூடிய ஒருசெயலாகுமோ . ஆதியாய் - முதல்வனாகி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

இமயமெல் லாமிரிய மதி லெய்துவெண் ணீறுபூசி
உமையையொர் பாகம்வைத்த நிலை தானுன்ன லாவதொன்றே
சமயமா றங்கம்வேதந் தரித் தார்தொழுஞ் சாத்தமங்கை
அமையவே றோங்குசீரா னய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

சிவபெருமான் இமயம் முதலான பெரிய மலைகளும் நிலைகலங்குமாறு , முப்புரங்களை எரித்து , திருவெண்ணீற்றினைப் பூசி உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக வைத்த தன்மை பாராட்டிப் பேசக் கூடிய அரிய செயலாகும் . அவன் சமயநூல்களையும் , வேதத்தையும் , அதன் அங்கங்களையும் ஓதுகின்ற அந்தணர்கள் தொழுகின்ற திருச்சாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் சிறப்புடன் ஓங்கித் திருஅயவந்தி என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

இமயம் எல்லாம் - இமயம் முதலிய மலைகளெல்லாம் . இரிய - ( அதிர்ச்சியால் ) நிலை பெயர , மதில் எய்து , உன்னலாவது . ஒன்றே - பாராட்டி நினைக்கக் கூடியது ஓன்றா ? சமயம் - சமய நூல்களையும் . அமைய - இடமாகப் பொருந்த . வேறு ஓங்குசீரான் - பிறிதொன்றற்கு இல்லாத மிக்கசிறப்புடன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

பண்ணுலாம் பாடல்வீணை பயில் வானோர் பரமயோகி
விண்ணுலா மால்வரையான் மகள் பாகமும் வேண்டினையே
தண்ணிலா வெண்மதியந் தவ ழும்பொழிற் சாத்தமங்கை
அண்ணலாய் நின்றவெம்மா னய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

இறைவன் பண்ணிசையோடு கூடிய பாடலை வீணையில் மீட்டிப் பாடுவான் . பரமயோகி அவன் . மலையரசன் மகளாகிய பார்வதி தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அப்பெருமான் குளிர்ச்சி பெருந்திய வெண்ணிற சந்திரனைத் தொடும்படி ஓங்கி உயர்ந்த சோலைகள் சூழ்ந்த திருசாத்தமங்கையில் தலைவனாய் விளங்கி , திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

பயில்வான் - பயின்றவனாகிய . ஓர் பரம யோகி - ஓர் மேலான யோகியே . மகள்பாகமும் வேண்டினை ஒரு நயம் . அண்ணலாய் - தலைவனாகி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

பேரெழிற் றோளரக்கன் வலி செற்றதும் பெண்ணோர்பாகம்
ஈரெழிற் கோலமாகி யுட னாவது மேற்பதொன்றே
காரெழில் வண்ணனோடு கன கம்மனை யானுங்காணா
ஆரழல் வண்ணமங்கை யய வந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

மிகுந்த எழிலுடைய வலிமை வாய்ந்த தோள்களினால் மலையைப் பெயர்த்த இராவணனின் வலிமையை அடக்கிய சிவபெருமான் உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு அம்மையப்பனாகவும் , உடனாகக் கொண்டு அழகிய இரண்டு கோலமாகவும் , கார்மேகம் போன்ற அழகிய வண்ணனான திருமாலும் , பொன்போன்ற நிறமுடைய பிரமனும் , காண முடியாவண்ணம் நெருப்பு வண்ணமுமாகி , திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் , திரு அயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

பெண்ணோர் பாகம் - ஒரு பாகத்திற் பெண்ணும் ஒரு பாகத்தில் ஆணுமாகி . ஈரெழிற் கோலமாகி - அழகிய இரண்டு கோலமாகி . உடன் ஆவது - ஓருருவமாவதும் . கனகம் அனையான் - நிறத்தினால் பொன்னொப்பான் ஆகிய பிரமன் . ஆர் அழல் வண்ணம் ஆகி , அருமை + அழல் அணுகற்கரிய தீயின் வண்ணம் - இங்கு வடிவின் மேல் நின்றது . மங்கை - சாத்தமங்கை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

கங்கையோர் வார்சடைமே லடை யப்புடை யேகமழும்
மங்கையோ டொன்றிநின்றம் மதிதான்சொல்ல லாவதொன்றே
சங்கையில் லாமறையோ ரவர் தாந்தொழு சாத்தமங்கை
அங்கையிற் சென்னிவைத்தா யயவந்தி யமர்ந்தவனே.

பொழிப்புரை :

சிவபெருமான் கங்கையை நீண்ட சடைமுடியில் தாங்கி , பக்கத்தில் உமாதேவியோடு ஒன்றி நின்ற அறிவுடைமை சொல்லக் கூடிய தொன்றா ? அவன் ஐயமில்லாமல் வேதங்களைக் கற்ற அந்தணர்கள் தொழுகின்ற திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்தில் உள்ளங்கையில் பிரமகபாலம் ஏந்தித் திருஅயவந்தி என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

கங்காதேவி ஓர் வார்சடையின் பால் , அடைய , புடை - ( உடம்பின் ) ஒருபக்கல் . மணம் புரிந்து கொண்ட உமாதேவியோடு ஓருடம்பாகி நின்ற அறிவுடைமை - புகழ்ந்து சொல்லக் கூடிய தொன்றா ? கமழ்தல் - மணத்தல் , அச்சொல்லால் அறியக்கூடிய மற்றொரு பொருள் விவாகம் செய்து கோடலுக்கு ஆகியது . இலட்சித இலட்சனை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

மறையினார் மல்குகாழித் தமிழ் ஞானசம் பந்தன்மன்னும்
நிறையினார் நீலநக்க னெடு மாநக ரென்றுதொண்டர்
அறையுமூர் சாத்தமங்கை யய வந்திமே லாய்ந்தபத்தும்
முறைமையா லேத்தவல்லா ரிமை யோரிலு முந்துவரே.

பொழிப்புரை :

நான்மறைவல்ல அந்தணர்கள் வாழ்கின்ற சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் , மனத்தைப் புறவழியோடாது நிறுத்தி , திருநீலநக்கருடைய நெடுமா நகர் என்று தொண்டர்களால் போற்றப்படும் திருசாத்தமங்கை என்னும் திருத்தலத்திலுள்ள திருஅயவந்தி என்னும் திருக்கோயிலைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் தேவர்களைவிட மேலானவர்கள் ஆவர் .

குறிப்புரை :

நிறை - மனத்தைத் தன்வழியோடாது நிறுத்தல் . இமையோரிலும் முந்துவர் - ` யான் எனது என்னுஞ் செருக்கு அறுப்பான் வானோர்க்கு உயர்ந்த உலகம் புகும் `. ( குறள் . 346) எட்டாம் திருப்பாடலில் வரும் இராவணன் செயல் ஒன்பதாம் திருப்பாடலில் அயன் செயலோடு கூறப்பட்டுள்ளது . இரண்டாம் திருப்பாடலிலும் , திருக்கடைக்காப்பிலும் இத்தலத்தில் வாழ்ந்து வந்த திருநீலநக்க நாயனாரைப்பற்றிக் கூறப்படுகிறது .
சிற்பி