திருக்குடமூக்கு


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

அரவிரி கோடனீட லணி காவிரி யாற்றயலே
மரவிரி போதுமௌவன் மண மல்லிகை கள்ளவிழும்
குரவிரி சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா
இரவிரி திங்கள்சூடி யிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

பாம்பைப் போலும் தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால் , அழகிய காவிரியாற்றின் பக்கம் , மராமரங்கள் விரிந்த மலர்களும் , முல்லையும் , மணம் வீசும் மல்லிகையும் , தேனோடு முறுக்கு உடையும் மலர்களைஉடைய குராமரங்களும் விரிந்த சோலை சூழ்ந்த கும்பகோணத்தினை இடமாகக் கொண்டு குழகனாகிய சிவபெருமான் , இரவில் ஒளிரும் சந்திரனைச் சூடி வீற்றிருக்கிறான் . அப்பெருமானே எம் இறைவன் .

குறிப்புரை :

அரவிரி கோடல்நீடல் - பாம்பைப்போலும் , தண்டோடு மலர் விரிந்த காந்தட் செடிகள் செழித்திருத்தலால் , அணி - அழகு செய்கின்ற . அயலே - காவிரியாற்றின் அருகில் . மர - மராமரங்கள் . விரி - விரிந்த . போது - மலர்களும் . மௌவல் - முல்லையும் . மண மல்லிகை - மணத்தையுடைய மல்லிகையும் . கள் அவிழும் - தேனோடும் முறுக்கு உடையும் . குர - குராமரங்கள் . விரி - விரிந்த . சோலைசூழ் , குடமூக்கு - கும்பகோணம் . இடம் ஆ - இடம் ஆக . இரவு - இரவில் . விரி - பரப்புகின்ற . திங்கள் , குழகன் , காவி யாற்று அயலே குடமூக்கு இடமாக இருந்தான் அவனே எம் இறை யாவான் என்க . நீடல் மூன்றன் உருபுத்தொகை . இத்திருப்பாடலின் நான்கடியினும் முதலசைகளாகிய , அரா , மரா , குரா , இரா - இந்நான்கும் கடைகுறுகி வந்தன . காந்தள் தண்டு பாம்பின் உருவிற்கும் அதன் பூவிரிதல் - படத்திற்கும் உவமை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

ஓத்தர வங்களோடு மொலி காவிரி யார்த்தயலே
பூத்தர வங்களோடும் புகை கொண்டடி போற்றிநல்ல
கூத்தர வங்களோவாக் குழ கன்குட மூக்கிடமா
ஏத்தர வங்கள்செய்ய விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

வேதங்கள் ஓதப்படும் ஒலியோடு , காவிரியாறு பாயும் ஒலியும் சேர்ந்தொலிக்க , பக்கத்திலுள்ள பூஞ்சோலைகளில் மலர்ந்துள்ள பூக்களைக் கொண்டு தூவி , தூபதீபம் காட்டி இறைவனைப் போற்றுவதால் உண்டாகும் ஒலி விளங்க , திருநடனம் புரியும் அழகனாகிய சிவபெருமான் , திருக்குட மூக்கினை இடமாகக் கொண்டு வீற்றிருந்தருளுகின்றான் . எல்லோரும் போற்றி வணங்கும் புகழுடைய அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

ஓத்து - வேதங்களின் . அரவங்களோடு - ஓசைகளுடனே . ஒலி - எதிர் ஒலியாக . ஆர்த்து - தானும் ஆரவாரித்து . அயலே - அருகிலுள்ள பூந்தோட்டங்களில் . பூத்து - மலர்ந்து இருக்க . ( அம்மலர்களையும் ) புகை - நறும்புகைகளையும் , பிற பூசைத் திரவியங்களும் கொண்டு . அரவங்களோடும் - ( சிவ ; போற்றி என்னும் ) ஓசைகளோடும் . ( திருக்கோயில் வந்து ) மெய்யடியார்கள் அடிபோற்றி - திருவடியைப் போற்றி வழிபாடுசெய்ய . நல்ல கூத்து - நன்மை பயக்கும் கதை தழுவி வரும் கூத்தும் சிறந்த நாட்டியமும் , உண்டாகும் அரவங்கள் . ஓவா - நீங்காத . குடமூக்கு இடமாக . ஏத்து - துதித்தலின் . அரவங்கள் செய்ய இருந்தான் . பூத்து வினையெச்சத் திரிபு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

மயில்பெடை புல்கியால மணன் மேன்மட வன்னமல்கும்
பயில்பெடை வண்டுபண்செய் பழங் காவிரிப்பைம் பொழில்வாய்க்
குயில்பெடை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா
இயலொடு வானமேத்த விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

ஆண்மயில் பெண்மயிலைத் தழுவி ஆட , காவிரியாற்றின் கரையிலுள்ள மணலின் மீது ஆண் அன்னம் தன் பெண் அன்னத்தோடு நடைபயில , வண்டுகள் பண்ணிசைக்க , நிறைய பழங்கள் கனிந்துள்ள பசுமையான சோலைகளில் குயிலானது பெடையோடு சேர்ந்து கீதமிசைக்கத் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் விண்ணோர்கள் வேதாகம முறைப்படி பூசிக்க வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

புல்கி - தழுவி . ஆல - ஆட . மல்கும் - நிறைந்திருக்கும் . பயில் - தங்கியுள்ள . இயலொடு - முறைப்படி . வானம் ஏத்த .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

மிக்கரை தாழவேங்கை யுரி யார்த்துமை யாள்வெருவ
அக்கர வாமையேன மருப் போடவை பூண்டழகார்
கொக்கரை யோடுபாட லுடை யான்குட மூக்கிடமா
எக்கரை யாருமேத்த விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் புலியின் தோலை உரித்து நன்கு தாழ இடுப்பில் கட்டியவர் . உமாதேவி அஞ்சுமாறு எலும்பு , பாம்பு , ஆமையோடு , பன்றியின் கொம்பு ஆகியவற்றை அழகிய ஆபரணமாகப் பூண்டு , கொக்கரை என்னும் வாத்தியம் இசைக்கப் பாடும் சிவபெருமான் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் எத்தன்மையோரும் போற்றி வணங்க வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

அரை - இடுப்பில் . மிக்கு - மிகவும் . தாழ - தொங்க . வேங்கை உரி - வேங்கைத்தோலை . ஆர்த்து - கட்டி . அக்கு - அக்குப் பாசி . அரவு , ஆமையொடு . ஏனம் - பன்றியின் . மருப்பு - கொம்பு . கொக்கரை முதலிய வாச்சியங்களோடு எக்கரையாரும் , தீவிலுள்ளவர்களும் , ஏத்த இருந்தான் . இறைவனுக்குப் புலித்தோல் உடையும் , கரித்தோல் போர்வையும் , சிங்கத்தோல் ஏகாசமுமாம் என்பர் . ஆமை - முதலாகுபெயர் . கரை - தீவு . சம்புத்தீவன்றிப் பிற தீவிலுள்ளவர்களும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

வடிவுடை வாட்டடங்கண் ணுமை யஞ்சவோர் வாரணத்தைப்
பொடியணி மேனிமூட வுரி கொண்டவன் புன்சடையான்
கொடிநெடு மாடமோங்குங் குழ கன்குட மூக்கிடமா
இடிபடு வானமேத்த விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

அழகிய உருவமுடைய வாள்போன்ற ஒளி பொருந்திய அகன்ற கண்களையுடைய உமாதேவி அஞ்சுமாறு யானையின் தோலை உரித்து , திருவெண்ணீறணிந்த திருமேனிமீது போர்த்தவனும் , சடைமுடியுடையவனும் , அழகனும் ஆன சிவபெருமான் , கொடிகள் அசைகின்ற ஆகாயத்தைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள நீண்ட மாடங்கள் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வானவர்கள் போற்ற வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

வடிவு உடை - அழகிய உருவமுடைய . வாரணம் - யானையை . உரிகொண்டவன் - உரித்தவன் . இடிபடு - இடியையுடைய . வானம் - வானுலகில் உள்ளவர்களும் . ஏத்த இருந்தான் . மேக மண்டலம் வானிற் காணப்படுதலால் அதன் கண்படும் இடியை , வானத்தின் மீது ஏற்றப்பட்டது . இடத்து நிகழ்பொருளின் தொழில் இடத்தின் மேல் ஏற்றப்பட்டது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கழைவளர் கவ்வைமுத்தங் கமழ் காவிரி யாற்றயலே
தழைவளர் மாவினல்ல பல வின்கனி கள்தங்கும்
குழைவளர் சோலைசூழ்ந்த குழ கன்குட மூக்கிடமா
இழைவளர் மங்கையோடு மிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

முற்றிய மூங்கில்களிலிருந்து மிகுதியாகக் கிடைக்கும் ஒலிக்கின்ற முத்துக்கள் நிறைந்த காவிரியாற்றின் பக்கத்திலே , தழைகள் மிகுந்த மாங்கனிகளும் , பலாவின் கனிகளும் கொத்தாக விளைகின்ற சோலைகள் சூழ்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் , அழகான சிவபெருமான் , நல்ல ஆபரணங்கள் அணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

கழை - மூங்கிலினின்று . வளர் - மிகுதியாகக் கிடைக்கும் . கவ்வை - பெருவிலையையுடைய , கமழ்கின்ற - கலவைச்சாந்து பூசிய பெண்கள் ஆடிய நீர்த்துறையில் தெறிக்கப்பட்டமையின் முத்துக்களும் கமழ்கின்றன . தழைவளர் - தழைகள் மிகும் . தயங்கும் - விளங்கும் . குழை - கொழுந்து . இழை - ஆபரணங்கள் . வளரும் - மிகும் . மாவின் - மாமரத்தின் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மலைமலி மங்கைபாகம் மகிழ்ந் தானெழில் வையமுய்யச்
சிலைமலி வெங்கணையாற் சிதைத் தான்புர மூன்றினையும்
குலைமலி தண்பலவின் பழம் வீழ்குட மூக்கிடமா
இலைமலி சூலமேந்தி யிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

மலைமகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , மகிழ்ந்து விளங்கும் சிவபெருமான் எழில்மிக்க இவ்வுலகம் உய்யுமாறு மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக்கித் தொடுத்து , மூன்று புரங்களையும் சிதைத்தவன் . கொத்தாகக் காய்க்கும் பலாக்கனிகள் தாமாகவே கனிந்து வீழும் வளம் நிறைந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இலைபோன்ற சூலப்படையை ஏந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

வையம் உய்ய மங்கைபாகம் மகிழ்ந்தான் . உலகம் அவன் உரு ஆகலான் . உலகில் இல்லற தருமம் நடத்தற்கு அவன் அம்மையோடு கூடியிருத்தலின் வையம் உய்ய மங்கை பாகம் மகிழ்ந்தான் என்றார் . ` பெண்பால் உகந்திலனேற் பேதாய் இரு நிலத்தோர் விண்பாலி யோகெய்தி வீடுவர்காண் சாழலோ ` - என்ற திருவாசகத்தாலும் அறிக . இலைமலி சூலம் - இலைவடிவத்தையுடைய சூலம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

நெடுமுடி பத்துடைய நிகழ் வாளரக் கன்னுடலைப்
படுமிடர் கண்டயரப் பரு மால்வரைக் கீழடர்த்தான்
கொடுமட றங்குதெங்கு பழம் வீழ்குட மூக்கிடமா
இடுமண லெக்கர்சூழ விருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

நீண்ட முடிகள் பத்துடைய வாளுடைய இராவணனின் உடலானது துன்பப்படுமாறு கயிலைமலையின் கீழ் அடர்த்த பெருமானாய் , வளைந்த மடல்களையுடைய தென்னை மரங்களிலிருந்து முற்றிய காய்கள் விழும் திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் மணல் திட்டு சூழ வீற்றிருந்தருளும் சிவபெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

இடர்கண்டு - துன்பப்பட்டு , அயர - தளர , அடர்த்தான் . கொடு - வளைந்த , மணல் எக்கர் - மணல் திடல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஆரெரி யாழியானு மல ரானும ளப்பரிய
நீரிரி புன்சடைமே னிரம் பாமதி சூடிநல்ல
கூரெரி யாகிநீண்ட குழ கன்குட மூக்கிடமா
ஈருரி கோவணத்தோ டிருந் தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

அக்கினிபோல் ஒளிரும் சக்கராயுதப் படையுடைய திருமாலும் , பிரமனும்அளக்கமுடியாதவனாய் , கட்டுப்படுத்த முடியாமல் பெருக்கெடுத்த கங்கையைப் புன்சடைமேல் தாங்கி , இளம்பிறைச் சந்திரனைச் சூடி , நல்ல நெருப்புப் பிழம்பு போல் ஓங்கி நின்றஅழகனானசிவபெருமான் , திருகுடமூக்கு என்னும் திருத்தலத்தில் தோலும் கோவணஆடையும்அணிந்து வீற்றிருந்தருளுகின்றான் . அவனே யாம் வணங்கும் கடவுள் ஆவான் .

குறிப்புரை :

ஆர் - பொருந்திய . எரி - அக்கினிபோல் ஒளிரும் . ஆழி - சக்கராயுதம் . நீர் - கங்கைநீர் . இரி - வழிந்தோடுகின்ற . கூர் எரி - மிக்க நெருப்புப் பிழம்பு . ஈர் உரி - உரித்த தோல் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மூடிய சீவரத்தார் முது மட்டையர் மோட்டமணர்
நாடிய தேவரெல்லா நயந் தேத்திய நன்னலத்தான்
கூடிய குன்றமெல்லா முடை யான்குட மூக்கிடமா
ஏடலர் கொன்றைசூடி யிருந்தானவ னெம்மிறையே.

பொழிப்புரை :

மஞ்சட் காவியுடையணிந்த , இறைவனை உணராத பேதையராகிய புத்தர்களும் , இறுமாப்புடைய சமணர்களும் , கூறுவன பயனற்றவை . தன்னை நாடித் தேவர்கள் எல்லாம் விரும்பி வழிபட , அவர்கட்கு நல்லதையே அருளும் சிவபெருமான் , மன்னுயிரைக் குன்றவைக்கும் தீவினையால் வரும் குற்றங்களை நீக்கி அருள்புரிவான் . திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் இதழ் விரிந்த கொன்றைமாலையைச் சூடி வீற்றிருந்தருளும் அப்பெருமானே யாம் வணங்கும் கடவுளாவான் .

குறிப்புரை :

மூடிய சீவரத்தார் - சீவர ஆடையைப் போர்த்தவர் . முதுமட்டையர் - மிக்க பேதையராகிய புத்தர் . மோட்டு அமணர் - இறுமாப்புடைய அமணர் . ஏடு அலர் - இதழ்விரிந்த .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

வெண்கொடி மாடமோங்கு விறல் வெங்குரு நன்னகரான்
நண்பொடு நின்றசீரான் றமிழ்ஞானசம் பந்தனல்ல
தண்குட மூக்கமர்ந்தா னடிசேர்தமிழ் பத்தும்வல்லார்
விண்புடை மேலுலகம் வியப்பெய்துவர் வீடெளிதே.

பொழிப்புரை :

வெண்கொடி அசைகின்ற மாடங்கள் ஓங்கி விளங்கும் வெங்குரு எனப்படும் சீகாழியில் அனைவரிடத்தும் நட்புக் கொண்டு பழகும் புகழ்மிக்க தமிழ் ஞானசம்பந்தன் நல்ல குளிர்ந்த திருக்குடமூக்கு என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திருவடிகளைப் போற்றி அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வானிலுள்ள சுவர்க்கலோகத்தை அடைந்து இன்புறுவர் . அவர்கட்கு முக்திப்பேறு எளிதாகக் கைகூடும் .

குறிப்புரை :

வெண்கொடி மாடம் ஓங்கும் - புகழின் அடையாளமாக வெண்கொடி கட்டிய மாடம் . வெங்குரு - சீர்காழி .
சிற்பி