திருவக்கரை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

கறையணி மாமிடற்றான் கரி காடரங் காவுடையான்
பிறையணி கொன்றையினா னொரு பாகமும் பெண்ணமர்ந்தான்
மறையவன் றன்றலையிற் பலி கொள்பவன் வக்கரையில்
உறைபவ னெங்கள்பிரா னொலி யார்கழ லுள்குதுமே.

பொழிப்புரை :

இறைவன் நஞ்சுண்ட கறுத்த கண்டத்தை உடையவன் . சுடுகாட்டில் திருநடனம் செய்பவன் . பிறைச் சந்திரனையும் , கொன்றைமாலையையும் அணிந்தவன் . உமாதேவியைத் தன்திரு மேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . பிரமன் தலையைக் கொய்து அதன் ஓட்டில் பிச்சை ஏற்பவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்ற எங்கள் தலைவனான சிவபெருமானின் ஒலிக்கின்ற வீரக்கழலணிந்த திருவடிகளைத் தியானிப்பீர்களாக .

குறிப்புரை :

கரிகாடு - ( கொள்ளிகள் ) கரிந்தகாடு . அரங்கு ஆக - ஆடும் இடமாக . பிறை அணி - ( கொன்றையினான் ) - பிறையினோடு ) அணிந்த கொன்றையினான் . மறையவன் - பிரமன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பாய்ந்தவன் காலனைமுன் பணைத் தோளியொர் பாகமதா
ஏய்ந்தவ னெண்ணிறந்தவ் விமை யோர்க டொழுதிறைஞ்ச
வாய்ந்தவன் முப்புரங்க ளெரி செய்தவன் வக்கரையில்
தேய்ந்திள வெண்பிறைசேர் சடை யானடி செப்புதுமே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் சிவபெருமான் உதைத்தவன் . பருத்த தோள்களை உடைய உமா தேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . எண்ணற்ற தேவர்களால் தொழுது போற்றப்படுபவன் . முப்புரங்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்தவன் . திருவக்கரை என்னும் திருத்தலத்தில் தேய்ந்த வெண்ணிறப் பிறைச்சந்திரனைச் சடையில் சூடி வீற்றிருந்தருளும் அச்சிவபெருமானின் திருவடிகளை வணங்கிப் போற்றுவோமாக !

குறிப்புரை :

ஏய்ந்தவன் - பொருந்தியவன் . தேய்ந்து - தன் கலைகளெல்லாம் தேய்ந்து . ( சரண்புக்க ) இளம்பிறைசேர்ந்த , சடையான் . அடி - திருவடிப் புகழ்ச்சியை . செப்புதும் - சொல்லுவோம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

சந்திர சேகரனே யரு ளாயென்று தண்விசும்பில்
இந்திர னும்முதலா விமை யோர்க டொழுதிறைஞ்ச
அந்தர மூவெயிலும் மன லாய்விழ வோரம்பினால்
மந்தர மேருவில்லா வளைத் தானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

` சந்திரனைச் சடைமுடியில் சூடியுள்ள சிவபெருமானே ! அருள்புரிவீராக ` என்று குளிர்ந்த விண்ணுலகத்தில் விளங்கும் இந்திரன் முதலான தேவர்கள் தொழுது போற்ற , அந்தரத்தில் திரிந்து கேடுகளை விளைவித்த மூன்று கோட்டைகளும் அக்கினியாகிய கணையினால் எரிந்து சாம்பலாகுமாறு மந்தர மேருமலையை வில்லாக வளைத்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

சேகரன் - முடியை யுடையவன் . அந்தரம் - ஆகாயத்திலே ( திரிந்த .) முப்புரம் வளைத்தான் - வளைத்து எய்தான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

நெய்யணி சூலமொடு நிறை வெண்மழு வும்மரவும்
கையணி கொள்கையினான் கனன் மேவிய வாடலினான்
மெய்யணி வெண்பொடியான் விரி கோவண வாடையின்மேல்
மையணி மாமிடற்றா னுறை யும்மிடம் வக்கரையே.

பொழிப்புரை :

நெய் தடவப்பட்ட சூலத்தையும் , வெண்ணிற மழுவையும் படைக்கலனாக ஏந்தி , பாம்பைக்கையில் ஆபரணமாகப் பூண்டு , நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன் சிவபெருமான் . அவன் தன் திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . விரித்து ஓதப்பெறும் வேதங்களைக் கோவணமாக அணிந்தவன் . மை நிறம் பெற்ற கரிய கண்டத்தையுடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நெய் அணி - நெய்பூசிய . நிறை வெண்மழு - வெண்மை நிறைந்த மழு . கை அணி - கையிற் பற்றிய . கனல் மேவிய ஆடலினான் - உலகெலாம் எரியும் மகா சங்கார காலத்தில் அவ்வக்கினி நடுவில் நின்று ஆடுதலையுடையவன் . விரி - விரித்துக் கட்டிய , கோவண ஆடையின் - கோவணமாகிய ஆடையினோடும் . மெய்மேல் - தன்னுடம்பின்மீது , அணிந்த வெண் திருநீற்றை யுடையவன் . மூன்றாம் அடி கொண்டு கூட்டுப் பொருள்கோள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

ஏனவெண் கொம்பினொடும் மிள வாமையும் பூண்டுகந்து
கூனிள வெண்பிறையுங் குளிர் மத்தமுஞ் சூடிநல்ல
மானன மென்விழியா ளொடும் வக்கரை மேவியவன்
தானவர் முப்புரங்க ளெரி செய்த தலைமகனே.

பொழிப்புரை :

பன்றியின் கொம்பும் , ஆமையின் ஒடும் அணிகலனாகக் கொண்டு , வளைந்த பிறைச்சந்திரனையும் , குளிர்ந்த ஊமத்த மலரையும் சூடி , நல்ல மான்போன்ற மென்மையான விழிகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பகையசுரர்களின் முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த முதல்வன் ஆவான் .

குறிப்புரை :

ஏனம் - பன்றி . ஆமையும் - ஆமையோடும் . பூண்டு - அணிந்து . அதனால் மகிழ்ச்சியுற்று . மத்தம் - பொன்னூமத்தை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

கார்மலி கொன்றையொடுங் கதிர் மத்தமும் வாளரவும்
நீர்மலி யுஞ்சடைமே னிரம் பாமதி சூடிநல்ல
வார்மலி மென்முலையா ளொடும் வக்கரை மேவியவன்
பார்மலி வெண்டலையிற் பலி கொண்டுழல் பான்மையனே.

பொழிப்புரை :

கார்காலத்தில் மிகுதியாக மலரும் கொன்றை மலரும் , ஊமத்த மலரும் , ஒளி பொருந்திய பாம்பும் , கங்கையும் சடைமுடியில் திகழ , கலைநிரம்பா பிறைச்சந்திரனைச் சூடி , நல்ல கச்சணிந்த மென்மையான முலைகளையுடைய உமாதேவியோடு திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . அப்பெருமான் இப்பூவுலகில் வெண்ணிறப்பிரம கபாலத்தில் பிச்சையேற்றுத் திரியும் தன்மையன் .

குறிப்புரை :

கார் - கார்காலத்தில் . மலி - மிகுதியாக மலரும் , கொன்றை , வாள் அரவு - ஒளிபொருந்திய பாம்பு . நிரம்பாத மதி - கலை நிரம்பாத பிறை . பார் - பூமியின்கண் . மலிவெண்தலை - வெண்மை மிக்க தலை . பலி கொண்டுழல் - பிச்சையேற்றுத் திரிகின்ற , பான்மையன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கானண வும்மறிமா னொரு கையதோர் கைமழுவாள்
தேனண வுங்குழலா ளுமை சேர்திரு மேனியனான்
வானண வும்பொழில்சூழ் திரு வக்கரை மேவியவன்
ஊனண வுந்தலையிற் பலி கொண்டுழ லுத்தமனே.

பொழிப்புரை :

காட்டில் உலவும் மானை ஒரு கையில் ஏந்தி , மழுவாளை மற்றொரு கையிலேந்தியவன் சிவபெருமான் . வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . வானளாவிய சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் பிரமனின் மண்டையோட்டை ஏந்திப் பிச்சை எடுத்துத் திரியும் உத்தமனாவான் .

குறிப்புரை :

கான் அணவும் - காட்டில் பொருந்திய . மறிமான் - மான் கன்று . ஓர் கையது ; ஒர் கை ( யது ) - மற்றொரு கையது ( மழுவாள் .) தேன் - வண்டு . அணவும் - பொருந்திய . வான் அணவும் - ஆகாயத்தை யளாவிய பொழில் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

இலங்கையர் மன்னனாகி யெழில் பெற்ற விராவணனைக்
கலங்கவொர் கால்விரலாற் கதிர் பொன்முடி பத்தலற
நலங்கெழு சிந்தையனா யருள் பெற்றலு நன்களித்த
வலங்கெழு மூவிலைவே லுடை யானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான அழகிய இராவணன் கலங்குமாறு , சிவபெருமான் தன் காற்பெருவிரலை ஊன்றி , ஒளி வீசுகின்ற பொன்னாலான திருமுடிகளணிந்த அவன் தலைகள் பத்தும் அலறுமாறு செய்தான் . பின் இராவணன் செருக்கு நீங்கி , நல்ல சிந்தனையோடு இறைவனைப் போற்றிசைக்க , திருவருளால் இறைவன் அவனுக்கு வீரவாளும் , நீண்ட வாழ்நாளும் கொடுத்து அருள் புரிந்தான் . அத்தகைய பெருமான் வலக்கையில் மூவிலைவேல் ஏந்தி வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஓர் கால்விரலால் , கதிர் பொன் முடி பத்து அலற . கால் ஐந்து விரலிலும் ஒருவிரல் - அடர்த்ததோ முடி , அவையும் பத்து , முடியணிந்தது , பொன் முடி - கதிர்விடும் பொன் என்ற நயம் காண்க . செருக்குற்ற தீய சிந்தையனாகாது . செருக்கு ஒழிந்து நலங்கெழு சிந்தையனாகி . அருள் பெற்றலும் - திருவருளுக்குப் பாத்திரமான அளவில் , நன்கு - நல்லனவாகிய வாளும் , நாளும் , அளித்த - அருள் புரிந்த - மூவிலை வேல் உடையவன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

காமனை யீடழித்திட் டவன் காதலி சென்றிரப்பச்
சேமமே யுன்றனக்கென் றருள் செய்தவன் றேவர்பிரான்
சாமவெண் டாமரைமே லய னுந்தர ணியளந்த
வாமன னும்மறியா வகை யானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

மன்மதனுடைய அழகிய வலிய தேகத்தை எரித்துச் சாம்பலாக்கிப் பின்னர் அவன் மனைவி இரதி இரந்து வேண்டிப் பிரார்த்திக்கச் சிவபெருமான் மன்மதனை உயிர்ப்பித்து அவள் கண்ணுக்கு மட்டும் புலப்படும்படி அருள்புரிந்தான் . வெண்டாமரையில் வீற்றிருந்து சாமகானம் பாடுகின்ற பிரமனும் , உலகையளந்த வாமனனான திருமாலும் அறியாவண்ணம் நீண்ட சோதியாக நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஈடு அழித்திட்டு - வலிமைக்கு இடமாகிய உடம்பை அழித்து . அவன் காதலி - இரதி . உன்தனக்குச் சேமமே - ( உன் கண்ணுக்கு மட்டும் புலப்படுவான் ஆகையினால் ) உன்னைப் பொறுத்தவரையில் உனக்கு நன்மையே . சாமம் - வேதம் பாடுகின்ற ( வெண்தாமரைமேல் ) அயனும் . தரணி - பூமி . அளந்த , வாமனனும் வாமனாவதாரம் கொண்ட திருமாலும் . சிறப்புப்பெயர் பொதுப் பெயருக்கு ஆயிற்று .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

மூடிய சீவரத்தர் முதிர் பிண்டிய ரென்றிவர்கள்
தேடிய தேவர்தம்மா லிறைஞ் சப்படுந் தேவர்பிரான்
பாடிய நான்மறையன் பலிக் கென்றுபல் வீதிதொறும்
வாடிய வெண்டலைகொண் டுழல் வானிடம் வக்கரையே.

பொழிப்புரை :

காவியாடை போர்த்திய புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் , தேடுகின்ற தேவர்களால் வணங்கப் படுகின்ற தேவர்கட்கெல்லாம் தலைவனான சிவபெருமான் நான்மறைகளை அருளிச்செய்து , பல வீதிகள்தோறும் சென்று உலர்ந்த பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவக்கரை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பிண்டியர் - அசோக மரத்திற் பற்று உடையவர்கள் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தண்புன லும்மரவுஞ் சடை மேலுடை யான்பிறைதோய்
வண்பொழில் சூழ்ந்தழகா ரிறை வன்னுறை வக்கரையைச்
சண்பையர் தந்தலைவன் றமிழ் ஞானசம் பந்தன்சொன்ன
பண்புனை பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.

பொழிப்புரை :

குளிர்ந்த கங்கையும் , பாம்பும் சடைமுடியில் அணிந்த அழகனான சிவபெருமான் , உறையும் சந்திரனைத் தொடும்படி ஓங்கி வளர்ந்துள்ள செழுமைவாய்ந்த சோலைகள் சூழ்ந்த திருவக்கரை என்னும் திருத்தலத்தைப் போற்றி , சண்பை நகர் எனப்படும் சீகாழியில் சிவம் பெருக்க அவதரித்த தலைவனான தமிழ் ஞானசம்பந்தன் , அருளிய பண்ணோடு கூடிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் வினையிலிருந்து நீங்கப் பெறுவர் .

குறிப்புரை :

பண்புனை பாடல் - பண்ணாற் புனைந்து பாடிய பாடல் .
சிற்பி