திருவெண்டுறை


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

ஆதிய னாதிரையன் னன லாடிய வாரழகன்
பாதியொர் மாதினொடும் பயி லும்பர மாபரமன்
போதிய லும்முடிமேற் புன லோடர வம்புனைந்த
வேதியன் மாதிமையால் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஆதிமூர்த்தியானவர் . திருவாதிரை என்னும் நட்சத்திரத்திற்கு உரியவர் . நெருப்பைக் கையிலேந்தித் திருநடனம் புரியும் பேரழகர் . தம் திருமேனியின் ஒரு பாகமாகக் உமாதேவியை ஏற்று மேலான பொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவர் . கொன்றை முதலிய மலர்களை அணிந்த முடிமேல் , கங்கையையும் பாம்பையும் அணிந்தவராய் , வேதங்களை அருளிச் செய்தவர் சிவபெருமான் ஆவார் . அப்பெருமானார் மிக்க அன்புடன் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்பதாகும் .

குறிப்புரை :

ஆதிரையான் - திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரியவன் . அனல் ஆடிய அரு அழகன் - அனலில் ஆடிய அரிய அழகையுடையவன் , பரமா பரமன் - மேலானபொருள்கள் எவற்றினும் மிக மேலான பொருளாயிருப்பவன் . பயிலும் - பொருந்திய . போது இயலும் - மலர்களை யணிந்த .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காலனை யோருதையில் லுயிர் வீடுசெய் வார்கழலான்
பாலொடு நெய்தயிரும் பயின் றாடிய பண்டரங்கன்
மாலை மதியொடுநீ ரர வம்புனை வார்சடையான்
வேலன கண்ணியொடும் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயர் உயிரைக் கவரவந்த காலனைக் காலால் உதைத்து உயிர்விடும்படி செய்த சிவபெருமான் வாரால் கட்டிய வீரக்கழலையணிந்தவன் . பால் , நெய் , தயிர் முதலியவற்றால் திருமுழுக்காட்டப்பட்டுப் பண்டரங்கம் என்னும் திருக்கூத்துப் புரிந்தவன் . மாலை நேர சந்திரனொடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்த விரிந்த சடையுடையவன் . வேல்போன்ற கண்களையுடைய உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளுமிடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

உயிர்வீடுசெய் - உயிர்விடச்செய்த ( வீடு - விடுதல் ) வார் - வாராற் கட்டிய கழலையுடையவன் . பயின்று ஆடிய - பலதரமும் திருமஞ்சனம் கொண்டருளுகின்ற , மாலை மதி - மாலைக்காலத்தில் தோன்றும் சந்திரன் , நீர் - கங்கைநீரையும் , புனை - அணிந்த . வார்சடையன் - நெடிய சடையையுடையவன் . வேல் அ ( ன் ) ன - வேலையொத்த , கண்ணியோடும் - கண்களையுடைய உமாதேவியோடும் . பயின்று - இப்பொருளாதலை ` பாலினால் நறுநெய்யாற் பழத்தினாற் பயின்றாட்டி ` என்புழியும் காண்க . ( தி .1. ப .61. பா .5.) ஆடிய - ஆடுகின்ற - காலவழுவமைதி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

படைநவில் வெண்மழுவான் பல பூதப் படையுடையான்
கடைநவின் மும்மதிலும் மெரி யூட்டிய கண்ணுதலான்
உடைநவி லும்புலித்தோ லுடை யாடையி னான்கடிய
விடைநவி லுங்கொடியான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் தூய மழுப்படை உடையவர் . பலவகையான பூதகணங்களைப் படைவீரர்களாகக் கொண்டுள்ளவர் . பாவங்களைச் செய்து வந்த மூன்று மதில்களையும் எரியுண்ணும்படி செய்த நெற்றிக் கண்ணையுடையவர் . புலித்தோலாடை அணிந்தவர் . விரைந்து செல்லக்கூடிய ஆற்றல் பொருந்திய இடபத்தைக் கொடியாக உடைய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலத்தைப் போற்றி வழிபடுங்கள் .

குறிப்புரை :

படைநவில் - படையாகக் கொள்கின்ற . கடைநவில் - பாவங்களைச் செய்துவந்த , மும்மதிலும் எரியூட்டிய கண்நுதலான் கடை - பாவம் ` அறன்கடை ` ( திருக்குறள் ). உடைநவிலும் - உடையாகக் கொள்ளப்படும் . புலித்தோல் , உடை ஆடையினான் - ஆடையாக உடையவன் . உடை - உடு என்னும் வினையடியாகச் செயப்படுபொருள் உணர்த்தும் ஐகாரவிகுதி புணர்ந்தும் , உடைமை என்னும் விகுதி குன்றி வினைத்தொகையின் நிலைமொழியாயும் நின்றது . கடிய - விரைந்து செல்லக் கூடிய ( விடை ) நவிலும் - பொருந்திய , கொடியான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பண்ணமர் வீணையினான் பர விப்பணி தொண்டர்கடம்
எண்ணமர் சிந்தையினா னிமை யோர்க்கு மறிவரியான்
பெண்ணமர் கூறுடையான் பிர மன்றலை யிற்பலியான்
விண்ணவர் தம்பெருமான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் வீணையிலே பண்ணோடு கூடிய பாடலை மீட்டுபவர் . தம்மைப் போற்றி வணங்குகின்ற தொண்டர்களின் சிந்தையில் எழுந்தருளியிருப்பவர் . தேவர்களால் அறிவதற்கு அரியவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . பிரம கபாலம் ஏந்திப் பிச்சையேற்றவர் . தேவர்களுக்கெல்லாம் தலைவராக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பரவி - துதித்து . வணங்குகின்ற . எண் அமர் சிந்தையினான் - நினைத்தலையுடைய சிந்தையில் எழுந்தருளியிருப்பவன் . பிரமன் தலையிற் பிச்சை ஏற்பவன் , ஏற்கும் - சொல்லெச்சம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

பாரிய லும்பலியான் படி யார்க்கு மறிவரியான்
சீரிய லும்மலையா ளொரு பாகமும் சேரவைத்தான்
போரிய லும்புரமூன் றுடன் பொன்மலை யேசிலையா
வீரிய நின்றுசெய்தான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் உலகத்தார் செய்யும் பூசைகளைத் தான் ஏற்பவன் . தன் தன்மையை உலக மாந்தர்களின் சிற்றறிவால் அறிவதற்கு அரியவனாய் விளங்குபவன் . புகழ்மிக்க உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . போர் செய்யும் தன்மையுடைய முப்புரங்களுடன் பொன்மயமான மேருமலையே வில்லாகக் கொண்டு தன் வலிமையைக் காட்டிப் போர் செய்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

பார் இயலும் பலியான் - உலகம் முழுவதிலும் , செய்யும் பூசையைக்கொள்பவன் . பார் - பூமி - இங்கு உலகம் என்னும் பொருளில் வந்தது . ` உலகுக்கொருவனாய் நின்றாய் நீயே ` எனப் படுவதால் . ( தி .6 ப .38 பா .1) உலகத்தார் பலவடிவிலும் போற்றும் பூசையெல்லாம் அவனுக்கேயாதலின் - இங்ஙனம் கூறியருளினார் . படி - நிலைமை , யார்க்கும் அறிவு அரியான் . ` அப்படியும் , அந்நிறமும் அவ்வண்ணமும் , அவனருளே கண்ணாகக் காணின் அல்லால் .... காட்டொணாதே ` ( தி .6 ப .97 பா .10) என்ற கருத்து . மலையாள் - இமய மலையில் வளர்ந்த உமாதேவியார் . ` மலையான் மருகா ` என ஆண் பாலில் வந்துள்ளதுபோலப் பெண்பாலில் மலையாள் என வந்தது . சீர் - தனக்கு ஒத்த பண்பு அது . சிவஞான சித்தியாரில் ` எத்திறன் நின்றான் ஈசன் அத்திறம் அவளும் நிற்பள் ` ` சத்திதான் சத்தனுக்குச் சத்தியாம் , சத்தன் வேண்டிற்றெல்லாம் ஆம் சத்திதானே ` ( சித்தியார் 75, 76) என்னுங் கருத்து . கங்கையைத் தலையில் வைத்ததன்றி யென்னும் பொருள்தருதலால் பாரகமும் என்றது இறந்தது தழுவிய எச்ச உம்மை . இயலும் - ( வானில் ) இயங்கிய , புரம் மூன்றுடன் - திரிபுரங்களுடன் , பொன் மலையே - மேருமலையே சிலையா ( க ). வீரியம் நின்று - தன்வீரியங்காட்டி நின்று போர் செய்தான் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

ஊழிக ளாயுலகா யொரு வர்க்கு முணர்வரியான்
போழிள வெண்மதியும் புன லும்மணி புன்சடையான்
யாழின் மொழியுமையாள் வெரு வவ்வெழில் வெண்மருப்பின்
வேழ முரித்தபிரான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் ஊழிக்காலங்கள்தோறும் உலகப்பொருட்களுள் கலப்பால் ஒன்றாய் விளங்கினும் , ஒருவர்க்கும் உணர்வதற்கு அரியவனாய் விளங்குகின்றான் . பிளவுபட்ட வெண்ணிறச் சந்திரனையும் , கங்கையையும் அணிந்த சடையுடையவன் . யாழ் போன்று இனிமையான மொழி பேசுகின்ற உமாதேவி அஞ்சும்படி அழகிய வெண் தந்தமுடைய யானையின் தோலை உரித்தவன் . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஊழிகளாய் - ஊழிக்காலங்களாய் . உலகமாகி நின்றும் - ஒருவர்க்கும் உணர்வரியன் . ஒரு நயம் . ` மரத்தில் மறைந்தது மாமதயானை . பரத்தை மறைத்தது பார் முதற்பூதம் ` ( தி .10 பா .2256) என்று உவமை முகத்தாற் கூறுவர் திருமூல நாயனார் . போழ் - பிளவாகிய , வெண்மதி . மருப்பின் வேழம் - கொம்பையுடைய யானை . யாழின் மொழி - இன் - ஒப்புப் பொருளில் வந்தது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கன்றிய காலனையும் முரு ளக்கனல் வாயலறிப்
பொன்றமு னின்றபிரான் பொடி யாடிய மேனியினான்
சென்றிமை யோர்பரவுந் திகழ் சேவடி யான்புலன்கள்
வென்றவ னெம்மிறைவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

மார்க்கண்டேயரின் உயிரைக் கவரச் சினந்து வந்த காலன் அலறி விழுமாறு காலால் உதைத்து அழித்தவன் . திருவெண்ணீற்றினைத் திருமேனியில் பூசியவன் . தேவர்களெல்லாம் சென்று போற்றி வணங்கும் செம்மையான திருவடிகளை உடையவன் . ஞானிகள் புலன்களை வெல்லும்படி செய்பவன் . எம் தலைவனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கன்றிய - ( மார்க்கண்டேயரைக் ) கோபித்த . உருள , வாய் அலறிப் பொன்ற - இறக்க முனிந்த பிரான் . கனல்வாய் - பிறர்க்கு நெருப்பைக் கக்கும் வாய் இங்கு அலறிற்று என்றது ஒருநயம் . ` கன்றிய காலன் ` ( தி .4. ப .26. பா .8.) அப்பர் பெருமான் திருவாக்கிலும் அமைகிறது . ஐம்புலன் வென்றவன் - ஞானிகளுக்கு ஐம்புலன்களையும் வெல்லுவித்தவன் என்க . ` பொறிவாயிலைந்த வித்தான் ` என்ற திருக்குறளுக்கும் இப்பொருள் நேரிது . பிறவினை விகுதி தொக்கு நின்றது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

கரமிரு பத்தினாலுங் கடு வன்சின மாயெடுத்த
சிரமொரு பத்துமுடை யரக் கன்வலி செற்றுகந்தான்
பரவவல் லார்வினைக ளறுப் பானொரு பாகமும்பெண்
விரவிய வேடத்தினான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

பத்துத் தலைகளையுடைய அரக்கனான இராவணன் , தன் இருபது கரங்களினாலும் கடும் கோபத்துடன் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க அவனது வலிமையை சிவபெருமான் அழித்தான் . அவன் தன்னைப் போற்றி வழிபடும் பக்தர்களின் வினைகளை அறுப்பவன் . தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியைக் கொண்ட கோலத்துடன் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இருபதினாலும் - இருபத்தினாலும் என்றது விரித்தல் விகாரம் . கடு ( ம் ) வன் சினம் - மிகவலிய கோபம் . ` கடி ` என்னும் உரிச்சொல் மிகுதிப்பொருளில் வந்தது . எடுத்த என்ற பெயரெச்சத்துக்கு மலையை என்ற செயப்படு பொருள் வருவித்துரைக்க.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

கோல மலரயனுங் குளிர் கொண்ட னிறத்தவனும்
சீல மறிவரிதாய்த் திகழ்ந் தோங்கிய செந்தழலான்
மூலம தாகிநின்றான் முதிர் புன்சடை வெண்பிறையான்
வேலை விடமிடற்றான் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

அழகிய தாமரை மலர்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , குளிர்ந்த மழைநீர் பொழியும் மேகம் போன்று கருநிறமுடைய திருமாலும் , தனது தன்மையை அறிதற்கு அரியவனாய்ச் சிவந்த நெருப்பு மலைபோல் ஓங்கி நின்றவன் சிவபெருமான் . அவன் எல்லாவற்றுக்கும் மூலப்பொருளாக விளங்கி நின்றான் . முதிர்ந்த சடையில் வெண்ணிறப் பிறைச்சந்திரனை அணிந்தவன் . கடலில் தோன்றிய விடத்தைக் கண்டத்தில் அடக்கிய நீலகண்டனான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கோலம் - அழகையுடைய மலர் . குளிர் கொண்டல் - என்றமையாற் கரியமேகம் என்க . சீலம் தனது நிலையை . திகழ்ந்து தங்கிய - பிரகாசித்து உயர்ந்த , செந்தழலான் மூலம் அது - எல்லாத் தத்துவங்கட்கும் முதலாம் பொருள் . ஆகி நின்றார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

நக்குரு வாயவருந் துவ ராடை நயந்துடையாம்
பொக்கர்க டம்முரைகள் ளவை பொய்யென வெம்மிறைவன்
திக்கு நிறைபுகழார் தரு தேவர்பி ரான்கனகம்
மிக்குயர் சோதியவன் விரும் பும்மிடம் வெண்டுறையே.

பொழிப்புரை :

ஆடையணியா உடம்புடைய சமணர்களும் , மஞ்சட் காவியாடை அணிந்த புத்தர்களும் மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றி ஏதும் கூறாது , தோன்றி நின்று அழியும் தன்மையுடைய உலகப் பொருள்கள் பற்றிக் கூறும் உரைகளைப் பொருளெனக் கொள்ளற்க . எம் தலைவனான சிவபெருமான் எல்லாத் திக்குகளிலும் நிறைந்து புகழுடன் விளங்குபவன் . தேவர்கட்கெல்லாம் தலைவன் . பொன் போன்று மிக்குயர்ந்த சோதியாய் விளங்குபவனான அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருவெண்டுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நக்குரு - நக்க உரு . ஆடையணியா உடம்பு . நயந்துடை - நயந்த உடை , பொக்கர் - பொய்யர் . பொக்கு - திசைச்சொல் . பொய்யென - பொய் என்னும்படி திக்கு நிறைந்த புகழ் உடைய பிரான் என்க . கனகம் - பொன்போலும் . மிக்கு உயர்சோதியவன் - மிகுந்த உயர்ந்த உடம்பின் ஒளியையுடையவன் ` பொன்னொத்த மேனிமேல் வெண்ணீறணிந்து ` என்றும் ( தி .4. ப .81. பா .9.) ` பொன்னார் மேனியனே ` என்றும் ( தி .7. ப .24. பா .1.) வருவன காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

திண்ணம ரும்புரிசைத் திரு வெண்டுறை மேயவனைத்
தண்ணம ரும்பொழில்சூழ் தரு சண்பையர் தந்தலைவன்
எண்ணமர் பல்கலையா னிசை ஞானசம் பந்தன்சொன்ன
பண்ணமர் பாடல்வல்லார் வினை யாயின பற்றறுமே.

பொழிப்புரை :

உறுதியான மதில்களையுடைய திருவெண்டுறை என்னும் திருத்தலத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைப் போற்றி , குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த சண்பை எனப்படும் சீகாழியில் அவதரித்த தலைவனான , பலகலைகளில் வல்ல ஞானசம்பந்தன் அருளிய இப்பண்ணோடு கூடிய திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

திண் ( ண ) ம் அமரும் புரிசை - உறுதி தங்கிய மதில் . திண்மை - திண் என்று ஆயது . ` ஈறுபோதல் ` என்னும் விதி . சூழ் தரு - சூழ்ந்த . எண் அமர் - பாராட்டுதல் அமைந்த பல்கலை . இசை - இசைத்தமிழால் .
சிற்பி