திருப்பனந்தாள்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

கண்பொலி நெற்றியினான் றிகழ் கையிலொர் வெண்மழுவான்
பெண்புணர் கூறுடையான் மிகு பீடுடை மால்விடையான்
விண்பொலி மாமதிசேர் தரு செஞ்சடை வேதியனூர்
தண்பொழில் சூழ்பனந்தாட் டிருத் தாடகை ஈச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நெற்றிக்கண்ணையுடையவன் . தூய வெண்மழுவினைக் கையிலேந்தியவன் . உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாக உடையவன் . மிக்க பெருமையுடைய திருமாலை இடப வாகனமாகக் கொண்டவன் . விண்ணிலே விளங்குகின்ற பிறைச்சந்திரனை அணிந்த சிவந்த சடையினையுடைய , வேதங்களை அருளிச் செய்த சிவபெருமானுடைய உறைவிடம் குளிர்ந்த சோலைகள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

கண் பொலிகின்ற நெற்றியினான் , திகழ்கையில் - கையில் விளங்கும் . புணர் - ஒருபால் கலந்த . பீடு - பெருமித நடையையுடைய , விடையன் . ` ஏறுபோற் பீடுநடை `. ( குறள் - 59.) மால் விடை - திருமாலாகிய இடபம் . ` தடமதில்க ளவைமூன்றும் தழல் எரித்த அந்நாளில் இடபமதாய்த் தாங்கினான் திருமால்காண் சாழலோ ` ( திருவாசகம் . 269). ` திருத்தாடகையீச்சரம் ` திருக்கோயிலின் பெயர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

விரித்தவ னான்மறையை மிக்க விண்ணவர் வந்திறைஞ்ச
எரித்தவன் முப்புரங்கள் ளிய லேழுல கில்லுயிரும்
பிரித்தவன் செஞ்சடைமே னிறை பேரொலி வெள்ளந்தன்னைத்
தரித்தவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் நான்கு வேதங்களின் பொருளை விரித்து ஓதியவன் . தேவர்களெல்லாம் வந்து வேண்ட முப்புரங்களை எரித்தவன் . ஏழுலகங்களிலுமுள்ள உயிர்களைச் சங்கார காலத்தில் பிரித்தவன் . சிவந்த சடையின்மேல் நிறைந்த பேரொலியோடு பெருக்கெடுத்து வந்த கங்கையைத் தாங்கியவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

நான்மறையை - நான்கு வேதத்தின் பொருளையும் . விரித்தவன் - விரித்துரைத்தவன் , வேதத்துக்குப் பொருளருளிச் செய்த திருவிளையாடல் இங்குக் குறித்தது . இயல் - பொருந்திய , உலகில் உயிர் , பிரித்தவன் , ஆசாரியனாகவந்து , தத்துவ ரூபம் , தத்துவ தரிசனம் , தத்துவ நீக்கம் செய்து , ஆன்மரூபம் முதலியன காட்டத் தொடங்கும் . அவதாரத்தை உலகில் உயிர் பிரித்தான் என்றருளிச் செய்தனர் . வெள்ளம் - நீர்ப் பெருக்கம் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

உடுத்தவன் மானுரிதோல் கழ லுள்கவல் லார்வினைகள்
கெடுத்தருள் செய்யவல்லான் கிளர் கீதமொர் நான்மறையான்
மடுத்தவ னஞ்சமுதா மிக்க மாதவர் வேள்வியைமுன்
தடுத்தவனூர் பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மான்தோலை ஆடையாக அணிந்தவன் . தன் திருவடிகளை நினைத்து வழிபடுபவர்களின் வினைகளைப் போக்குபவன் . இனிய இசையுடைய நால்வேதங்களை அருளிச்செய்து அவ்வேதங்களின் உட்பொருளாகவும் விளங்குபவன் . பாற்கடலில் தோன்றிய நஞ்சை அமுதம்போல் உட்கொண்டவன் . தன்னை மதியாது தக்கன் செய்த வேள்வியைத் தகர்த்தவன் . இத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் கோயிலாகும் .

குறிப்புரை :

உடுத்தவன் மான் உரிதோல் - மானை உரித்த தோலை உடையாக உடுத்தவன் , மான் தோலும் இறைவனுக்கு உடை என்பதை ` புள்ளியுழைமானின் தோலான் கண்டாய் ` என்ற அப்பர் வாக்காலும் அறிக . கழல்கள் உள்க வல்லார் வினை - திருவடிகளை நினைப்பவரது வினைகளைக் ( கெடுத்து , அருள் செய்ய வல்லான் ) கிளர் - மிக்கு ஒலிக்கின்ற . கீதம் - கீதத்தினோடும் . ஓர் நான்மறையான் - ஒரு நான்கு வேதங்களையும் உடையவன் . ( நஞ்சு அமுதாகுமாறு ) மடுத்தவன் - உண்டவன் . மாதவர் - தாருகவனத்து முனிவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

சூழ்தரு வல்வினையு முடல் தோன்றிய பல்பிணியும்
பாழ்பட வேண்டுதிரேன் மிக வேத்துமின் பாய்புனலும்
போழிள வெண்மதியும் மனல் பொங்கரவும் புனைந்த
தாழ்சடை யான்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

பிறவிதோறும் உயிர்களைச் சூழ்ந்து வருகின்ற எளிதில் நீங்காத வினைகளும் , அவற்றின் காரணமாக உடலில் தோன்றும் பலவகை நோய்களும் நீங்க வேண்டும் என்று எண்ணுவீராயின் பாய்கின்ற கங்கையையும் , பிளவுபட்ட இளமையான வெண்ணிறச் சந்திரனையும் , நெருப்புப் போல் விடம் கக்கும் பாம்பையும் அணிந்த தாழ்ந்த சடையினையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலைப் மிகவும் போற்றி வழிபடுவீர்களாக !

குறிப்புரை :

சூழ் தரு - பற்றிவிடாது சூழ்ந்த , வல்வினையும் ( எளிதில் நீங்காத ) வலிய வினைகளும் . ` பற்றி நின்ற வல்வினை ` என்பர் அப்பர்பெருமான் . உடன் தோன்றிய - உடலோடு தோன்றிய . பல் பிணி - பல நோய்களும் . ` உடன் பிறந்தே கொல்லும் வியாதி ` என்பது மூதுரை . ஏத்துமின் - துதியுங்கள் . அனல் பொங்கு அரவும் - விடம் பொங்கும் அரவும் . தாழ் - தொங்குகின்ற ; சடையான் . இடமாகிய தாடகையீச்சரத்தை ஏத்துமின் என்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

விடம்படு கண்டத்தினா னிருள் வெள்வளை மங்கையொடும்
நடம்புரி கொள்கையினா னவ னெம்மிறை சேருமிடம்
படம்புரி நாகமொடு திரை பன்மணி யுங்கொணரும்
தடம்புனல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் விடத்தைத் தேக்கிய கண்டத்தை உடையவன் . வெண்ணிற வளையல்களையணிந்த உமாதேவியோடு நள்ளிருளில் திருநடனம் புரிபவன் . எங்கள் தலைவனான சிவ பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடம் , படமெடுத்தாடும் பாம்பு கக்குகின்ற நவரத்தினமணிகளோடு , அலைகள் பலவகையான மணிகளை அடித்துக் கொண்டு வந்து சேர்க்கும் பெருமையுடைய மண்ணியாறு சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

இருள் - மகாசங்கார காலத்தில் எங்கும் இருள் மயமாய் இருத்தலின் இருள் என்றார் . ( அக்காலத்தில் நடம்புரிவர் என்பர் ) இதனை ` நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே ` ( திருவாசகம் .1. அடி . 89) காண்க . இறைவி காண்பவளாய்த் தான் ஆடுபவனுமாய் அமைதலின் ` வெள்வளை மங்கையொடும் நடம்புரி கொள்கை யினான் ` என்றார் . படம்புரி - படத்தை விரிக்கின்ற ; நாகம் . புரிதல் , செய்தல் , பொதுவினை சிறப்பு வினைக்கு ஆயிற்று . நாகமொடு - நாகரத்தினங்களுடன் ( பல இரத்தினங்களையும் ) அலை - அடித்து வரும் . தடம் புனல் - பெருமை பொருந்திய காவிரி நீர் சூழ்ந்த ; திருப்பனந்தாள் . ` தடவுங் கயவும் நளியும் பெருமை ` ( தொல்காப்பியம் - சொல் . 320.)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

விடையுயர் வெல்கொடியா னடி விண்ணொடு மண்ணுமெல்லாம்
புடைபட வாடவல்லான் மிகு பூதமார் பல்படையான்
தொடைநவில் கொன்றையொடு வன்னி துன்னெருக் கும்மணிந்த
சடையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் வெற்றிக் கொடியாக இடபம் பொறித்த கொடி உடையவன் . விண்ணுலகமும் , மண்ணுலகமும் , மற்றுமுள்ள எல்லா உலகங்களும் தன் திருவடிபதியுமாறு விசுவரூபம் எடுத்து ஆடவல்லவன் . பலவகையான பூதகணங்களைப் படையாக உடையவன் . கொன்றைமாலையோடு , வன்னி , எருக்கம் இவை அணிந்த சடையுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் உறைவிடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

விண்ணொடு மண்ணும் எல்லாம் புடைபட - விண்ணுலகம் ` மண்ணுலகம் முதலிய எல்லா உலகங்களும் , தன் அடியின் பக்கத்திலே தங்கும்படி ; ஓங்கி ஆடவல்லான் என்றது , பேருரு எடுத்து ஆடுதலைக் குறித்தது . அது ` பூமே லயனறியா மோலிப் புறத்ததே , நாமே புகழ்ந்தளவை நாட்டுவோம் ... கூத்துகந்தான் கொற்றக் குடை ` ( கோயில் நான்மணிமாலை . பா .1.) என்பதுங் காண்க . படையான் - சேனைகளையுடையவன் . தொடை - மாலை . துன் - நெருங்கிய .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மலையவன் முன்பயந்த மட மாதையொர் கூறுடையான்
சிலைமலி வெங்கணையாற் புர மூன்றவை செற்றுகந்தான்
அலைமலி தண்புனலும் மதி யாடர வும்மணிந்த
தலையவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மலையரசன் பெற்றெடுத்த உமாதேவியைத் தன் திருமேனியின் ஒருபாகமாகக் கொண்டவன் . மேரு மலையை வில்லாக்கி , அக்கினியைக் கணையாக்கி முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகும்படி அழித்தவன் . அலைகளையுடைய குளிர்ந்த கங்கையையும் , சந்திரனையும் , பாம்பையும் அணிந்த சடைமுடியுடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளுவது திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

மலையவன் - இமயமலையரசன் . பயந்த - பெற்ற . அலை மலி தண்புனல் - கங்கை . தலையவன் - தலைமையானவன் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

செற்றரக் கன்வலியைத் திரு மெல்விர லாலடர்த்து
முற்றும்வெண் ணீறணிந்த திரு மேனியன் மும்மையினான்
புற்றர வம்புலியின் னுரி தோலொடு கோவணமும்
தற்றவ னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

இராவணனது வலிமையைத் தன் மெல்லிய திருக்காற்பெருவிரலை ஊன்றி அழித்தவன் . முற்றும் திருவெண்ணீறு அணிந்த திருமேனியுடையவன் . உருவம் , அருவம் , அருவுருவம் என்ற மூவகைத் திருமேனிகளையுடையவன் . புற்றில் வாழ்கின்ற பாம்பையும் , புலித்தோலையும் , கோவணத்தையும் ஆடையாக உடுத்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

திரு மெல் விரலால் அடர்த்து - அரக்கன் வலியைச் செற்று (அழித்து) என மாற்றுக . அரவம் கோவணமும் , புலியின் உரித்த தோலை ( உடையும் ) ஆக . தற்றவன் - உடுத்தியவன் . கோவணமும் என்ற இலேசால் உடையும் என ஒரு சொல் வருவிக்க . தற்றுதல் (தறுதல்) = உடுத்தல் . ` மடி தற்றுத் தான் முந்துறும் ` ( குறள் - 1023.) மேனியன் மும்மையினான் என்றது உரு , அரு , அருவுருஆம் மேனியை - ` உருமேனி தரித்துக் கொண்டதென்றலும் உருவிறந்த , அருமேனியதுவும் கண்டோம் அருவுரு வானபோது , திருமேனி யுபயம் பெற்றோம் ` ( சிவஞானசித்தியார் சுபக்கம் - 55.)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

வின்மலை நாணரவம் மிகு வெங்கன லம்பதனால்
புன்மைசெய் தானவர் தம் புரம் பொன்றுவித் தான்புனிதன்
நன்மலர் மேலயனுந் நண்ணு நாரண னும்மறியாத்
தன்மைய னூர்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

சிவபெருமான் மேருமலையை வில்லாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் , மிகுந்த வெப்பமுடைய அக்கினியை அம்பாகவும் கொண்டு , தீமை செய்த அசுரர்களின் முப்புரங்களையும் எரித்துச் சாம்பலாகுமாறு அழித்தவன் . நல்ல தாமரை மலரின்மேல் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் அறியாத தன்மையன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது திருப்பனந்தாள் என்னும் திருத்தலமாகும் . அங்குத் திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் எழுந்தருளியுள்ளான் .

குறிப்புரை :

வில் :- மலை . நாண் :- அரவம் . அம்பு :- மிகுவெம் கனல் - மிகுந்த வெப்பத்தையுடைய அக்கினி . புன்மைசெய் - தீமையைச் செய்த . தானவர் - அசுரர் . கீழ்மக்கள் செயலாதலின் தீமை புன்மை எனப்பட்டது .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

ஆதர் சமணரொடும் மடை யைந்துகில் போர்த்துழலும்
நீத ருரைக்குமொழி யவை கொள்ளன்மி னின்மலனூர்
போதவிழ் பொய்கைதனுட் டிகழ் புள்ளிரி யப்பொழில்வாய்த்
தாதவி ழும்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரமே.

பொழிப்புரை :

பயனிலிகளாகிய சமணர்களும் , அழகிய துணிகளைப் போர்த்துத் திரிகின்ற புத்தர்களும் உரைக்கின்ற மொழிகளை ஏற்றுக் கொள்ளாதீர்கள் . நின்மலனான சிவபெருமானது உறைவிடம் தாமரை மொட்டுகள் மலர்கின்ற பொய்கைகளில் புள்ளினங்கள் ஓடச் சோலைகளிலுள்ள மலர்களின் மகரந்தப் பொடிகள் உதிரும் திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்திலுள்ள திருத்தாடகை யீச்சரம் என்னும் திருக்கோயிலாகும் .

குறிப்புரை :

ஆதர் - பயனிலிகள் , ஐந்துகில் .... நீதர் - நீசர் - புத்தர் . உரைக்கும் மொழி கொள்ளன்மின் . நின்மலன் ஊராகிய திருப்பனந்தாளை . அடைந்துய்ம்மின் என்பது அவாய்நிலை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

தண்வயல் சூழ்பனந்தாட் டிருத் தாடகை யீச்சரத்துக்
கண்ணய லேபிறையா னவன் றன்னைமுன் காழியர்கோன்
நண்ணிய செந்தமிழான் மிகு ஞானசம் பந்தனல்ல
பண்ணியல் பாடல்வல்லா ரவர் தம்வினை பற்றறுமே.

பொழிப்புரை :

குளிர்ந்த வயல்கள் சூழ்ந்த திருப்பனந்தாள் என்னும் திருத்தலத்தில் , திருத்தாடகையீச்சரம் என்னும் திருக்கோயிலில் , வீற்றிருந்தருளுகின்ற நெற்றிக் கண்ணின் அருகே பிறைச் சந்திரனை அணிந்துள்ள சிவபெருமானைப் போற்றி , சீகாழியில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் செந்தமிழில் அருளிய நன்மைபயக்க வல்ல பண்ணோடு கூடிய இப்பாடல்களைப் பாடவல்லவர்களின் வினைகள் யாவும் அழியும் .

குறிப்புரை :

கண் அயலே - பிறையான் - மேல் நோக்கிய திருவிழி நெற்றியில் உண்மையால் அதன்மேல் ( தலையின் பாகத்தில் ) பிறையை யணிந்தவன் , நல்ல - நற்பயனைத் தருதலாகிய , பண் இயல் பாடல் - பண்ணொடு கூடிய பாடல் .
சிற்பி