திருச்செங்காட்டங்குடி


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

பைங்கோட்டு மலர்ப்புன்னைப் பறவைகாள் பயப்பூரச்
சங்காட்டந் தவிர்த்தென்னைத் தவிராநோய்  தந்தானே
செங்காட்டங் குடிமேய சிறுத்தொண்டன்  பணிசெய்ய
வெங்காட்டு ளனலேந்தி விளையாடும் பெருமானே.

பொழிப்புரை :

பசுமையான கிளைகளில் மலர்களையுடைய புன்னைமரத்தில் வீற்றிருக்கும் பறவைகளே! தலைவனான சிவபெருமான் என்னைப் பிரிந்ததால் உடம்பு பசலைநிறம் பெற, ஓடி ஆடி உல்லாசமாக இயங்கிய என் மகிழ்ச்சியை நீக்கி எனக்குத் தாங்காத துன்பம் தந்தான். அவன் திருச்செங்காட்டங்குடி என்னும் திருத்தலத்தில் சிறுத்தொண்டர் பணி செய்ய சுடுகாட்டுள், கையில் அனல் ஏந்தி திருநடனம் புரியும் பெருமானாவான்.

குறிப்புரை :

பைம்கோட்டு - பசிய கிளைகளில். மலர்ப்புன்னை - மலர்களையுடைய புன்னை மரத்திலுள்ள (பறவைகாள்). பயப்பு - பசப்பு, பசலைநிறம். ஊர - உடம்பிற்பரவ. சங்கு ஆட்டம் - சங்குப் பூச்சிகள் திரையில் தவழ்வதுபோலத் தனியே உலாவிய என் மகிழ்ச்சியை, தவிர்த்து - நீக்கி, என்னைத், தவிரா - அழியாத; துயர்தந்தான். ஏகாரம் இரங்கற்குறிப்பு. இடைச்சொல் - இடத்துக்கு ஏற்ற பொருள் தரும் என்பர். வெம்காட்டுள் - கொடிய மயானத்துள் (அனல் ஏந்தி விளையாடும் பெருமான்.) ஏகாரம் - ஈற்றசை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

பொன்னம்பூங் கழிக்கானற் புணர் துணையோ டுடன்வாழும்
அன்னங்கா ளன்றில்கா ளகன் றும்போய் வருவீர்காள்
கன்னவிறோட் சிறுத்தொண்டன் கணபதீச் சரமேய
இன்னமுத னிணையடிக்கீ ழெனதல்ல லுரையீரே.

பொழிப்புரை :

பொன்போன்ற மகரந்தத்தை உதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கடற்கரைச் சோலையில் தம் துணையோடு சேர்ந்து வாழும் அன்னப் பறவைகளே! அன்றில் பறவைகளே! நீங்கள் இச்சோலையிலிருந்து வெளி இடங்கட்கும் சென்று வரும் இயல்புடையவர்கள். கல் போன்று திண்மையான அழகிய தோள்களையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யக் கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற இனிய அமுது போன்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் இருந்து என்னுடைய துன்பத்தைச் சொல்லமாட்டீர்களா?

குறிப்புரை :

பொன்னம்பூம் கழிக்கானல் - பொன்போன்ற மகரந்தத்தை யுதிர்க்கும் புன்னைப் பூக்களையுடைய கழியருகே உள்ள கடற்கரைச் சோலையில். புணர் துணையோடு - கூடிய துணையுடனே. உடன் வாழும் - இணைபிரியாது வாழ்கின்ற. அன்னங்காள் - அன்னப் பறவைகளே. அன்றில்காள் - அன்றிற்பறவைகளே.
அகன்றும் போய் - இரையின்பொருட்டு (இச்சோலையை) நீங்கிப் போய். வருவீர்காள். தங்குவதற்கு இங்கே வந்து கொண்டிருக்கின்றீர்கள். இன் அமுதன் - இனிய அமுதுபோல்வானது. இணை அடிக் கீழ் - இரு திருவடிகளின் முன்பாக. எனது அல்லல் எனது பிரியாத் துயரை. உரையீரே - சொல்ல மாட்டீரோ.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

குட்டத்துங் குழிக்கரையுங் குளிர்பொய்கைத் தடத்தகத்தும்
இட்டத்தா லிரைதேரு மிருஞ்சிறகின் மடநாராய்
சிட்டன்சீர்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வட்டவார் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே. 

பொழிப்புரை :

குட்டை, குழி, குளிர்ந்த பொய்கை ஆகிய இடங்களில் விருப்பத்துடன் இரையைத் தேர்கின்ற பெரிய இரு சிறகுகளை உடைய இள நாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் நியமத்தோடு வழிபடத் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற நீண்ட அடர்ந்த சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைக்க மாட்டாயோ? உரைப்பாயாக என்பது குறிப்பு.

குறிப்புரை :

குட்டத்தும் - நீர் நிலையிலும்; குளத்திலும் சிறியது. \\\"கடற்குட்டம் போழ்வர் கலவர்\\\" என்பது நான்மணிக்கடிகை. பொய்கைத் தடத்தும் - பொய்கையாகிய தடாகத்தினிடத்தும்; பொய்கை, தடம் இரண்டும் ஒரு பொருளையே குறித்தலால் இரு பெயரொட்டுப் பண்புத்தொகை. இட்டத்தால் - விருப்போடு. இரை தேரும் - இரையைத் தேர்கின்ற, மடநாராய் - இள நாரையே. சிட்டன் - நியமம் உடையவன். சென்று சடையை யுடையவனாகிய பெருமானுக்கு என் வருத்தம் உரையாய். பொய்கை - மானிடர் ஆக்காத நீர் நிலை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

கானருகும் வயலருகுங் கழியருகுங் கடலருகும்
மீனிரிய வருபுனலி லிரைதேர்வெண் மடநாராய்
தேனமர் தார்ச் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
வானமருஞ் சடையார்க்கென் வருத்தஞ்சென் றுரையாயே.

பொழிப்புரை :

கடற்கரைச் சோலையின் அருகிலும், வயல், கழி, கடல் ஆகியவற்றின் அருகிலும் பெருகும் நீரில் ஓடுகின்ற மீன்களை இரையாகத் தேரும் வெண்ணிறமான மட நாரையே! தேன் துளிக்கும் மாலைகளையுடைய சிறுத்தொண்டர் பணிசெய்யத் திருச்செங்காட்டங் குடியில் வீற்றிருந்தருளுகின்ற, மாலை வானம் போன்ற சிவந்த சடையுடைய சிவபெருமானிடம் சென்று என் வருத்தத்தை உரைப்பாயாக.

குறிப்புரை :

கான் - கடற்கரைச் சோலை. (வயல், கழி, கடல் ஆகிய இவ்விடங்களில் வரும் நீரில்) மீன் இரிய - சிறுமீன் ஓட (பெரிய மீனை) இரை தேரும், எனத் தனித்தனி சென்றியையும், வானமரும் சடை யார்க்கு - செவ்வானம் போலும் சடையையுடைய பெருமானுக்கு. என் வருத்தம் உரையாய்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

ஆரலாஞ் சுறவமேய்ந் தகன்கழனிச் சிறகுலர்த்தும்
பாரல்வாய்ச் சிறுகுருகே பயிறூவி மடநாராய்
சீருலாஞ் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
நீருலாஞ் சடையார்க்கென் நிலைமைசென் றுரையீரே. 

பொழிப்புரை :

ஆரல், சுறவம் ஆகியன பாய்கின்ற அகன்ற கழனிகளில் சிறகுகளை உலர்த்துகின்ற நெடிய மூக்கையுடைய சிறிய உள்ளான் பறவையே!. அடர்ந்த சிறகுடைய இளநாரையே! புகழ்மிக்க சிறுத்தொண்டர் பணி செய்ய திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கங்கையைத் தாங்கிய சடைமுடியுடைய சிவபெருமானிடம் சென்று என்னுடைய நிலையினை உரைப்பீர்களாக.

குறிப்புரை :

கழனியின் கண்ணே சிறகையுலர்த்துகின்ற பார் அல்வாய் - நெடிய மூக்கையுடைய. சிறு குருகே - சிறிய உள்ளான் பறவையே, பயில் - அடர்ந்த, தூவி - இறகையுடைய நாரையே.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

குறைக்கொண்டா ரிடர்தீர்த்தல் கடனன்றே குளிர்பொய்கைத்
துறைக்கெண்டை கவர்குருகே துணைபிரியா மடநாராய்
கறைக்கண்டன் பிறைச்சென்னிக் கணபதீச்  சரமேய
சிறுத்தொண்டன் பெருமான்சீ ரருளொருநாட் பெறலாமே. 

பொழிப்புரை :

தங்களின் குறைகளைத் தீர்க்க வேண்டுபவர்களின் துன்பத்தைப் போக்குதல் தலைவரானவரின் கடமை அன்றோ? குளிர்ந்த குளத்தின் கரையில் கெண்டை மீனைக் கவர்ந்து இரையாகக் கொள்ளும் பறவையே! துணையைப் பிரியாதிருக்கும் மடநாரையே! நீலகண்டரும், பிறைச்சந்திரனைத் தலையிலே சூடியுள்ளவரும், கணபதீச்சரம் என்னும் திருக்கோயிலில் சிறுத்தொண்டரால் வழி படப்படுபவரும் ஆகிய சிவபெருமானது சீராகிய எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக!

குறிப்புரை :

குறைக்கொண்டார் - குறைவேண்டிக் கொள்பவர்களின் இடர்தீர்த்தல் - நேர்ந்த துன்பத்தைப் போக்குதல். கடன் அன்றே உபகாரிகளுக்குக் கடமையல்லவா. பெருமானது சீர் எய்ப்பிடத்து உதவும் பேரருளை நான் பெறுமாறு தூது சென்றுரைப்பீர்களாக. (பொய்கைத் துறையில்) கெண்டை - கெண்டை மீனை. கவர் - கவர்ந்துண்ணும், குருகே - பறவையே; நாரையே. கறைக்கண்டனும், பிறைச் சென்னியையுடைய பெருமானும். சிறுத்தொண்டன் பெருமான் - சிறுத்தொண்டர் வழிபடும் பெருமானும் ஆகிய இறைவன். மூன்றன் உருபும் பயனுந்தொக்க தொகை.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

கருவடிய பசுங்கால்வெண் குருகேயொண் கழிநாராய்
ஒருவடியா ளிரந்தாளென் றொருநாட்சென் றுரையீரே
செருவடிதோட் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
திருவடிதன் திருவருளே பெறலாமோ திறத்தவர்க்கே.

பொழிப்புரை :

கரிய சேற்றில் அளைந்த பசுங்காலையுடைய வெண்குருகே! அழகிய கழியிலுள்ள நாரையே! போர் செய்வதால் வலிமை பெற்ற அழகிய வடிவுடைய தோள்களையுடைய சிறுத் தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியிலுள்ள திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானின் திரு வடிகளை வழிபடும் திறத்தவர்களே அவன் திருவருளைப் பெறலாமோ? ஓர் அடியாள் அவருடைய திருவருளைக் கெஞ்சி வேண்டினாள் என்று ஒரு நாளாவது சென்று அவரிடம் உரைப்பீராக!

குறிப்புரை :

கரு அடிய - கரிய பாதத்தை உடைய. (பசுங் காலைக் கொண்ட) ஒண் - அழகிய, கழி - கழியில் உள்ள, கரு + அடிய. `காரடிய` ஒரு அடியாள். ஒருஅடியாள் இரந்தாள் - கெஞ்சி வேண்டிக் கொண்டாள். என்று ஒருநாள் - ஒரு நாளைக்கேனும். சென்று - போய். உரையீர் - சொல்வீர். செரு - போரில், வடித்ததோள், சிறுத்தொண்டன் - சிறுத்தொண்டரது (செங்காட்டங்குடி) மேய - மேவிய. திரு அடிதன் திருவருளே திறத்தவர்க்கு - அவன் வழிச்செல்பவர்கட்கு.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

கூரார லிரைதேர்ந்து குளமுலவி வயல்வாழும்
தாராவே மடநாராய் தமியேற்கொன் றுரையீரே
சீராளன் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பேராளன் பெருமான்ற னருளொருநாட் பெறலாமே. 

பொழிப்புரை :

கூர்மையான அலகால் இரையைக் கொத்திக் குளங்களிலும், வயல்களிலும் வாழ்கின்ற தாரா என்ற பறவையே! மட நாரையே! என் பொருட்டுச் சிவபெருமானிடம் சென்று ஒரு செய்தியைச் சொல்வீரோ? சிறந்த புகழுடைய சிறுத்தொண்டர் வழிபடுகின்ற திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற கீர்த்தியுடைய சிவபெருமான் திருவருளை ஒருநாள் அடியேன் பெறுதல் இயலுமா?

குறிப்புரை :

கூர்ஆரல் - மிக்க ஆரல் என்னும் மீனாகிய இரையை தமியேற்கு - ஒன்றியாகிய எனக்கு; என்றமையால் (துணை பிரியாத) தாராவே, மடநாராய் என்பது பெறப்படும்.
ஒன்று - (ஆற்றி யிருக்கத்தக்க) ஒருவழி, தமியேற்கு - தமியேன் பொருட்டு. ஒன்று - ஒரு தூது மொழியை. (உரைப்பீர் ஆக) பேராளன் - கீர்த்தியை யுடையவன்.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

நறப்பொலிபூங் கழிக்கான னவில்குருகே யுலகெல்லாம்
அறப்பலிதேர்ந் துழல்வார்க்கென் னலர்கோட லழகியதே
சிறப்புலவான் சிறுத்தொண்டன் செங்காட்டங் குடிமேய
பிறப்பிலிபேர் பிதற்றிநின் றிழக்கோவெம் பெருநலமே.

பொழிப்புரை :

தேனுடைய பூக்கள் நிறைந்த கழியின் கரையிலுள்ள சோலையில் வாழ்கின்ற பறவையே! உலக மக்களெல்லாம் அறத்தைக் கருதி இடுகின்ற பிச்சையை ஏற்று உழல்கின்ற சிவபெருமானுக்குப் பிறர் என்னைத் தூற்றுமாறு செய்வது அழகாகுமா? சிறப்புடைய சிறுத்தொண்டன் வழிபடும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற பிறப்பிலியாகிய சிவபெருமானுடைய திருநாமத்தைப் போற்றித் துதிசெய்யும் நான் எல்லாவிதப் பெருமைக்குரிய நலங்களை இழப்பது முறைமையா?

குறிப்புரை :

நறவு - தேன், நவில் - வாழ்கின்ற, (பலி உலகெல்லாம் தேர்ந்து) அறப்பலி - அறத்தைக் கருதித் தரும் பிச்சை. என் அலர் கோடல் - என்னைப்பற்றி எழும்பிய அலர் தூற்ற நின்ற பழியைக் கோடல்.

பண் : பஞ்சமம்

பாடல் எண் : 10

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

செந்தண்பூம் புனல்பரந்த செங்காட்டங் குடிமேய
வெந்தநீ றணிமார்பன் சிறுத்தொண்ட னவன்வேண்ட
அந்தண்பூங் கலிக்காழி யடிகளையே யடிபரவும்
சந்தங்கொள் சம்பந்தன் றமிழுரைப்போர் தக்கோரே.

பொழிப்புரை :

சிறந்த, குளிர்ந்த, அழகிய ஆறுபாயும் திருச்செங்காட்டங்குடியில் வீற்றிருந்தருளுகின்ற, திருவெண்ணீறு அணிந்த மார்புடைய சிவனை, சிறுத்தொண்டர் வழிபட்டபடி, அழகிய, குளிர்ந்த ஒலிமிக்க காழியிலுள்ள இறைவனின் திருவடிகளை வணங்கும் ஞானசம்பந்தன் சந்தம் மிகுந்த திருத்தமிழில் அருளிய இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்கள் மனிதப்பிறவி எடுத்ததன் தகுதியைப் பெற்றவராவர்.

குறிப்புரை :

அம் - அழகிய, தண் - குளிர்ந்த, பூ - பொலிவுற்ற. கலி - ஒலிமிக்க (காழி). காழியடிகள் - திருத்தோணியப்பர்.
சிற்பி