திருப்பெருவேளூர்


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

அண்ணாவுங் கழுக்குன்று மாயமலை யவைவாழ்வார்
விண்ணோரு மண்ணோரும் வியந்தேத்த வருள்செய்வார்
கண்ணாவா ருலகுக்குக் கருத்தானார் புரமெரித்த
பெண்ணாணாம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் திருவண்ணாமலையும் , திருக்கழுக் குன்றமும் ஆகிய மலைகளில் தம்மை அடைந்தோர்க்கு வாழ்வுதரும் பொருட்டு எழுந்தருளியுள்ளார் . விண்ணுலகத்தவரும் , மண்ணுலகத்தவரும் வியந்து போற்ற அருள்செய்வார் . உலகிற்குக் கண்ணாக விளங்குபவர் . வழிபடுபவர்களின் கருத்தில் இருப்பவர் . முப்புரங்களை எரித்தவர் , பெண்ணும் , ஆணுமாக விளங்கும் அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தைப் பிரியாது வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அண்ணாமலையும் , திருக்கழுக்குன்றமும் ஆகிய மலைகளில் வாழ்வார் . கண்ணாவார் , உலகுக்குக் கருத்தானார் . உலகுக்கு :- இடை நிலைத் தீவகம் . பெண்ணும் , ஆணும் ஆகிய பெருமான் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

கருமானி னுரியுடையர் கரிகாட ரிமவானார்
மருமானா ரிவரென்று மடவாளோ டுடனாவர்
பொருமான விடையூர்வ துடையார்வெண் பொடிப்பூசும்
பெருமானார் பிஞ்ஞகனார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கரியமானின் தோலை ஆடையாக உடுத்தவர் . சுடுகாட்டில் ஆடுபவர் . இமவான் மருமகன் இவர் என்று சொல்லும்படி உமாதேவியை உடனாகக் கொண்டவர் . போர்புரிய வல்ல பெருமையையுடைய இடப வாகனத்தில் ஊர்ந்து செல்பவர் . திருவெண்ணீற்றினைப் பூசியவர் . பிஞ்ஞகன் என்று போற்றப்படும் அச்சிவபெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரிய நாதர் ஆவார் .

குறிப்புரை :

கருமானின் - கரிய மானினது ; மானில் கருநிறம் உடைய ஒரு சாதி உண்டென்றும் , அதனால் மானுக்குக் கிருஷ்ணம் எனப் பேர் என்றும் கூறுப , மருமானார் - மருமகனார் என்பதன் மரூஉ ; இவரென்று உலகத்தவர் சொல்ல . என்று - என்ன என்னும் வினையெச்சத் திரிபு . பொரு - போர்புரியவல்ல . மானவிடை - பெருமை பொருந்திய விடை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

குணக்குந்தென் றிசைக்கண்ணுங் குடபாலும் வடபாலும்
கணக்கென்ன வருள்செய்வார் கழிந்தோர்க்கு மொழிந்தோர்க்கும்
வணக்கம்செய் மனத்தராய் வணங்காதார் தமக்கென்றும்
பிணக்கஞ்செய் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கிழக்கு , தெற்கு , மேற்கு , வடக்கு என எத்திசையிலுள்ளோர்க்கும் ஒன்றுபோல் அருள்புரிவார் . அஞ்ஞானத்தால் நாள்களைக் கழிப்பவர்கட்கும் , மெய்ஞ்ஞானத்தால் தம்மைப் போற்றுவார்கட்கும் , மனத்தால் சிந்தித்துக் காயத்தால் தம்மை வழிபடும் அடியவர்கட்கும் அருள்புரிபவர் . வணங்கிப் போற்றாதவர்கட்கு மாறுபாடாக விளங்குபவர் . அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

குணக்கு - கிழக்கு . குடபால் - மேற்குப் பக்கம் . வடபால் - வடக்குப் பக்கம் . கணக்கு என்ன - ஒரு நிகராக . பிணக்கம் - மாறுபாடு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

இறைக்கொண்ட வளையாளோ டிருகூறா யொருகூறு
மறைக்கண்டத் திறைநாவர் மதிலெய்த சிலைவலவர்
கறைக்கொண்ட மிடறுடையர் கனல்கிளருஞ் சடைமுடிமேல்
பிறைக்கொண்ட பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் , முன்கையில் வளையலணிந்த உமாதேவி ஒரு கூறாகவும் , தாம் ஒரு கூறாகவும் இருகூறுடைய அர்த்தநாரியாய் விளங்குபவர் . வேதங்களை அருளிச் செய்த நாவுடையர் . மும்மதில்களை எய்த மேருமலையை வில்லாக உடையவர் . நஞ்சை அடக்கியதால் கறைகொண்ட கண்டத்தர் . நெருப்புப்போல் மிளிரும் ஒளிரும் சிவந்த சடையில் பிறையணிந்த பெருமானாகிய அவர் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

இறை - முன்கை . கனல் கிளரும் - தீப்போற் பிரகாசிக்கும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

விழையாதார் விழைவார்போல் விகிர்தங்கள் பலபேசிக்
குழையாதார் குழைவார்போற் குணநல்ல பலகூறி
அழையாவு மரற்றாவு மடிவீழ்வார் தமக்கென்றும்
பிழையாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

உலகப் பொருள்களில் பற்றுக் கொண்டு விழையாமல் இறைவன்பால் விழைந்து பலவாறு போற்றி , உலகியலில் மருள்கொண்டு குழையாது , இறைவனின் திருவருளில் குழைந்து அவன் புகழ்களைப் பலவாறு எடுத்துக்கூறி , ` பெருமானே ! அருள் புரிவீராக !` என அழைத்தும் , அரற்றியும் , அவன் திருவடிகளில் வீழ்ந்து வணங்குபவர்கட்கு என்றும் தவறாது உடனே அருள்புரியும் சிவ பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

விகிர்தம் - வேறுபாடு ஆனமொழி . அழையாவும் அரற்றாவும் - அழைத்தல் ஆகவும் , அரற்றுதல் ஆகவும் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

விரித்தார்நான் மறைப்பொருளை யுமையஞ்ச விறல்வேழம்
உரித்தாரா முரிபோர்த்து மதின்மூன்று மொருகணையால்
எரித்தாரா மிமைப்பளவி லிமையோர்க டொழுதிறைஞ்சப்
பெருத்தாரெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் நான்மறைகளை விரித்துப் பொருள் உரைத்தவர் . உமாதேவி அஞ்சும்படி யானையின் தோலை உரித்துப் போர்த்திக் கொண்டவர் . மும்மதில்களையும் ஓர் அம்பினால் இமைக்கும் அளவில் எரித்தவர் . தேவர்கள் வணங்கிப் போற்ற விசுவரூபம் கொண்ட எம்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

ஆம் - அசை . பெருத்தார் - விசுவரூபம் கொண்டு அருளியவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

மறப்பிலா வடிமைக்கண் மனம்வைப்பார் தமக்கெல்லாம்
சிறப்பிலார் மதிலெய்த சிலைவல்லா ரொருகணையால்
இறப்பிலார் பிணியில்லார் தமக்கென்றும் கேடிலார்
பிறப்பிலாப் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

இறைவர் தம்மை மறவாது தமக்கு அடியவர்களாய் விளங்குபவர்கள் மனத்தில் வீற்றிருப்பவர் . சிறப்பில்லாத பகையசுரர்களின் மும்மதில்களை மேருமலையை வில்லாகக் கொண்டு , அக்கினியைக் கணையாக எய்து நெருப்புண்ணும்படி அழித்தவர் . அவர் இறப்பற்றவர் . நோயில்லாதவர் . கேடு இல்லாதவர் . பிறப்பில்லாத அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

மறப்பு இலா அடிமைக்கண் மனம் வைப்பார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

எரியார்வேற் கடற்றானை யிலங்கைக்கோன் றனைவீழ
முரியார்ந்த தடந்தோள்க ளடர்த்துகந்த முதலாளர்
வரியார்வெஞ் சிலைபிடித்து மடவாளை யொருபாகம்
பிரியாத பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

நெருப்புப் போல் சிவந்த வேற்படை உடைய சேனைகளைக் கடல்போல் விரியப் பெற்றுள்ள இராவணன் அலறுமாறு , வலிமை வாய்ந்த அவனுடைய அகன்ற தோள்களை நெரித்துப் பின்னர் அவன் சாமகானம் பாடக் கேட்டுகந்த முதல்வரான சிவபெருமான் , கட்டுக்களையுடைய கொடிய வில்லேந்தி , உமா தேவியைத் தம்திருமேனியின் ஒருபாகமாகப் பிரியாது பெற்று , திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

எரி ஆர் - நெருப்புப் பொருந்திய . வேல் :- வெல்லக் கூடியது என்னும் காரணக் குறியாய் , இங்கு ஆயுதப் பொதுப்பெயராய் நின்றது . மூரி என்ற வலிமையைக் குறிக்கும் சொல் , குறுக்கல் விகாரம் உற்றது . முதல் ஆளர் - முதன்மையை ஆள்பவர் . வரி ஆர் - கட்டுக் களையுடைய . வெஞ்சிலை - கொடியவில் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

சேணியலு நெடுமாலுந் திசைமுகனுஞ் செருவெய்திக்
காணியல்பை யறிவிலராய்க் கனல்வண்ண ரடியிணைக்கீழ்
நாணியவர் தொழுதேத்த நாணாமே யருள்செய்து
பேணியவெம் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

திருவிக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும் , பிரமனும் செருக்குற்றுத் தாமே தலைவர் எனக் கருதி இறைவனைத் தேட , அவனைக் காணும் முறையை அறியாதவராய் , நெருப்பு வண்ணமாய் நின்ற சிவபெருமானின் திருவடிக்கீழ் நாண முற்று நின்று தொழுது போற்ற , அவர்களின் நாணத்தைப் போக்கி அருள்செய்து பாதுகாத்த அப்பெருமான் திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதர் ஆவார் .

குறிப்புரை :

சேண் இயலும் நெடுமாலும் - திரு விக்கிரமாவதாரத்தில் வானை அளந்த திருமாலும் . திசைமுகனும் - பிரமனும் . செரு எய்தி - தம்முள் மாறுபட்டு . செரு - போர் ; அதன் காரணமாகிய மாறுபாட்டைக் குறித்தமையால் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது . காண் இயல்பை - காணும் முறையை ( அறியாது ) அது , திருக் குறுந்தொகையிற் கூறியபடி ` மரங்களேறி மலர் பறித்திட்டிலார் , நிரம்ப நீர் சுமந்தாட்டி நினைந்திலார் , உரம் பொருந்தி ஒளிநிற வண்ணனை , நிரம்பக் காணலுற்றார் அங்கிருவரே ` என்பதால் அறியப்படும் . இவர்கள் தங்கள் அறியாமைக்கு நாணினர் . அது ஆன்ம இயல்பு என உணர்த்தி இறைவர் நாணம் போக்கி அருள் செய்தனர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

புற்றேறி யுணங்குவார் புகையார்ந்த துகில்போர்ப்பார்
சொற்றேற வேண்டாநீர் தொழுமின்கள் சுடர்வண்ணம்
மற்றேரும் பரிமாவு மதகளிறு மிவையொழியப்
பெற்றேறும் பெருமானார் பெருவேளூர் பிரியாரே.

பொழிப்புரை :

புற்றேறும்படிக் கடுமையான தவத்தால் உடம்பை வாட்டும் சமணர்களும் , மஞ்சட்காவியூட்டிய ஆடையை அணியும் புத்தர்களும் இறையுண்மையை உணராது கூறும் சொற்களை நீங்கள் ஏற்க வேண்டா . நெருப்புப் போன்று சிவந்த வண்ணமுடையவனும் , தேரும் , குதிரையும் , யானையும் வாகனமாகக் கொள்ளாது , இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள தலைவனுமான , திருப்பெருவேளூர் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் பிரியநாதனை நீவிர் தொழுது வணங்குங்கள் .

குறிப்புரை :

புற்றேறி உணங்குவார் - சமணர் . புகை ஆர்ந்த துகில் போர்ப்பார் - புத்தர் . சொல் தேற வேண்டா . வண்ணமாவது சுடர் . மல்தேர் , மல்லல்தேர் - சிறப்புடைய தேர் . மல்லல் - கடைக் குறைந்து நின்றது . பெற்று - இடபம் . ஏறும் பெருமானார் பெருவேளூர் பிரியார் , அவர் வண்ணம் சுடர் , அவரைத் தொழுமின்கள் என்க . ` கடகரியும் பரிமாவும் தேரும் உகந்தேறாதே இடபம் உகந்து ஏறியவாறு எனக்கறிய இயம்பேடி ` என வரும் பாடலடிகளோடு பின்னிரண்டு அடியையும் ஒப்பிடுக . ( தி .8 திருச்சாழல் - 15.)

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

பைம்பொன்சீர் மணிவாரிப் பலவுஞ்சேர் கனியுந்தி
அம்பொன்செய் மடவரலா ரணிமல்கு பெருவேளூர்
நம்பன்றன் கழல்பரவி நவில்கின்ற மறைஞான
சம்பந்தன் தமிழ்வல்லார்க் கருவினைநோய் சாராவே.

பொழிப்புரை :

அழகிய பொன்னையும் , சிறந்த மணிகளான இரத்தினங்களையும் , பலவகையான கனிகளையும் அடித்துக் கொண்டுவரும் காவிரியில் , பொன்னாலாகிய அழகிய ஆபரணங்களை அணிந்த , நீராடும் மகளிர்கள் மிகுந்த திருப்பெருவேளூரில் வீற்றிருக்கும் சிவபெருமானின் திருவடிகளைப் போற்றிஅருளிய வேதம்வல்ல ஞானசம்பந்தனின் இச்செந்தமிழ்ப் பதிகத்தை ஓத வல்லவர்களை அருவினைகளும் , அவற்றால் வரும் பிறவிநோயும் சாரா .

குறிப்புரை :

பைம்பொன் - பசிய பொன்னையும் . சீர் - சிறப்புப் பொருந்திய . மணி - இரத்தினங்களையும் ( வாரி ). சேர் - திரட்சியான . கனி பலவும் - கனிகள் பலவற்றையும் . உந்தி - அடித்துக் கொண்டு வரும் ( காவிரியில் ). அம்பொன்செய் - அழகிய பொன் அணிகளால் ( அலங்கரித்தலைச் ) செய்த . மடவரலார் - நீராடும் மகளிரின் . அணி - வரிசை . மல்கும் - மிகுந்த ( பெருவேளூர் நம்பன் ). செய் - பொதுவினை சிறப்பு வினைக்காயிற்று . ( சிவபெருமானின் ) கழல் - திருவடிகளை ; துதித்து . நவில்கின்ற - பாடுகின்ற . மறை - வேதநூல் ; வல்ல ஞானசம்பந்தன் . தமிழ் வல்லார்க்கு வினையால் நேரும் நீக்குதற்கு அரிய துன்பங்கள் சாரமாட்டா . வினைநோய் - வினையால் வரும் நோய் என மூன்றன் உருபும் பயனும் தொக்க தொகை . உந்தி பெயர்ச்சொல் - உந்து + இ = இகரம் வினை முதற்பொருளில் வந்தது .
சிற்பி