திருக்கச்சிநெறிக் காரைக்காடு


பண் :பஞ்சமம்

பாடல் எண் : 1

வாரணவு முலைமங்கை பங்கினரா யங்கையினில்
போரணவு மழுவொன்றங் கேந்திவெண் பொடியணிவர்
காரணவு மணிமாடங் கடைநவின்ற கலிக்கச்சி
நீரணவு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கச்சு அணிந்த மெல்லிய முலையுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவன் . அழகிய கையில் போருக்குரிய மழுவை ஏந்தியவன் . திருமேனியில் திருவெண்ணீற்றினைப் பூசியவன் . மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள இரத்தினங்கள் பதிக்கப்பட்ட மாளிகைகளையும் , பிரளயகாலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுமுடைய காஞ்சியில் , நீர் நிரம்பிய மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றான் .

குறிப்புரை :

வார் அணவும் - கச்சு அணிந்த . போர் அணவும் - போருக்குரிய ; மழு . அங்கு - அசை . கார் அணவும் - மேகத்தை அளாவிய . மணிமாடம் - இரத்தினங்கள் பதித்த வீடுகளையும் . கடை நவின்ற கலி - பிரளய காலத்து ஒலியோ என்று சொல்லும் பேரோசையையுடைய , கச்சி - காஞ்சியின் . நீர் அணவும் - நீர் நிரம்பிய . பொய்கை - குளங்களையுடைய ; நெறிக்காரைக்காடு . காஞ்சி மிக்கொலியை உடையதென்பது . ` மலிதேரான் கச்சியும் மாகடலும் தம்முள் ஒலியும் பெருமையும் ஒக்கும் \\\' என்ற தண்டி அலங்கார உதாரணச் செய்யுளாள் அறிக.

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 2

காரூரு மணிமிடற்றார் கரிகாட ருடைதலைகொண்
டூரூரன் பலிக்குழல்வா ருழைமானி னுரியதளர்
தேரூரு நெடுவீதிச் செழுங்கச்சி மாநகர்வாய்
நீரூரு மலர்ப்பொய்கை நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் கார்மேகம் போன்ற நீலநிறமுடைய கண்டத்தார் . கொள்ளிகள் கரிந்த சுடுகாட்டிலிருப்பவர் , பிரமகபாலத்தைக் கையிலேந்தி ஊர்தோறும் சென்று பிச்சை எடுத்துத் திரிவார் . மான்தோலை ஆடையாக உடுத்தவர் . அப்பெருமான் தேரோடும் நீண்ட வீதிகளையுடைய செழிப்புடைய திருக்கச்சிமாநகரில் நீர் நிறைந்த , மலர்கள் பூத்துள்ள குளங்களையுடைய திருக்கச்சிநெறிக் காரைக் காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

கார் ஊரும் - மேகம்போன்ற . மணி - நீலநிறம்வாய்ந்த . மிடற்றார் - கண்டத்தையுடையவர் . கரி - கொள்ளிகள் கரிந்த . காடர் - மயானத்திலிருப்பவர் . ஊர் - ஊர்கள்தோறும் . ஊரான் - ( பிச்சைக்குத் ) திரிபவனைப் போல . பலிக்கு - பிச்சையின்பொருட்டு . உழல்வார் - திரிவார் . உரி - உரியாகிய . அதளர் - தோலாடையையுடையவர் ` புள்ளி உழைமானின் , தோலான் கண்டாய் ` ( தி .6. ப .23. பா .4.) என்னும் திருவாக்காலும் அறிக .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 3

கூறணிந்தார் கொடியிடையைக் குளிர்சடைமே லிளமதியோ
டாறணிந்தா ராடரவம் பூண்டுகந்தா ரான்வெள்ளை
ஏறணிந்தார் கொடியதன்மே லென்பணிந்தார் வரைமார்பில்
நீறணிந்தார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

ஒலிநிறைந்த திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமான் கொடிபோன்ற இடையுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாதியாகக் கொண்டவர் . குளிர்ந்த சடைமீது இளம்பிறைச் சந்திரனோடு , கங்கை , பாம்பு இவற்றை அணிந்து மகிழ்ந்தவர் . வெற்றிக் கொடியில் வெண்ணிற இடபத்தைக் கொண்டுள்ளார் . மலைபோன்ற மார்பில் எலும்பு மாலையை அணிந்துள்ளார் . திருநீற்றையும் அணிந்துள்ளார் .

குறிப்புரை :

கொடி இடையை - பூங்கொடிபோலும் இடையுடைய உமா தேவியாரை . கூறு அணிந்தார் - ( இடப் ) பாதியாகக் கொண்டார் . உகந்தார் - மகிழ்ந்தார் . கொடியதன்மேல் - கொடியின்மேல் . வெள்ளை - வெண்மையாகிய . ஆன் ஏறு அணிந்தார் - இடபத்தைக் கொண்டார் . வரைமார்பில் - மலைபோன்ற மார்பில் . என்பு - எலும்பு ; மாலையை அணிந்தார் . நீறு அணிந்தார் - திருநீற்றையும் அணிந்தார் . கொடி இடை - அன்மொழித்தொகை .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 4

பிறைநவின்ற செஞ்சடைகள் பின்றாழப் பூதங்கள்
மறைநவின்ற பாடலோ டாடலராய் மழுவேந்திச்
சிறைநவின்ற வண்டினங்கள் தீங்கனிவாய்த் தேன்கதுவும்
நிறைநவின்ற கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

பிறைச்சந்திரனைச் சூடிய சிவந்த சடைகள் பின் பக்கம் தொங்க , பூதகணங்கள் நால்வேதங்களை ஓதப் பாடலும் , ஆடலும் கொண்டு மழுப்படை ஏந்திச் சிவபெருமான் விளங்குகின்றார் . அப்பெருமான் சிறகுகளையுடைய வண்டுகள் இனிய கனிகளில் சொட்டும் தேனை உறிஞ்சி உண்ட மகிழ்ச்சியில் இன்னொலி செய்யும் திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

நவின்ற - தங்கிய . பின் - பின்புறத்தில் . தாழ - தொங்க . பூதங்கள் - பூதங்கள் ; பாடும் . மறை நவின்ற - வேதங்களைப் பாடுகின்ற ( பாடலோடு ) ஆடலர் ஆய் - ஆடுதலை உடையவராய் . ( சோலைகளில் ) சிறைநவின்ற - சிறகுகளையுடைய ; வண்டு இனங்கள் . தீங்கனி வாய்த்தேன் - மலரிலுள்ள தேனை வெறுத்து இனிய கனிகளில் சொட்டும் தேனை . கதுவும் - பற்றியுண்பதால் . நவின்ற - உண்டான . நிறைகலி - நிறைந்த ஓசையையுடைய ( கச்சி ).

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 5

அன்றாலின் கீழிருந்தங் கறம்புரிந்த வருளாளர்
குன்றாத வெஞ்சிலையிற் கோளரவ நாண்கொளுவி
ஒன்றாதார் புரமூன்று மோங்கெரியில் வெந்தவிய
நின்றாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் அன்று ஆலமரநிழலின் கீழிருந்து சனகாதி முனிவர்கட்கு அறம் உரைத்த அருளாளர் , குன்றாத வலிமையுடைய மேருமலையை வில்லாகக் கொண்டு , கொல்லும் தன்மையுடைய பாம்பை நாணாகப்பூட்டி , பகையசுரர்களின் முப்புரங்களை மிக்க நெருப்பில் வெந்தழியும்படி செய்தவர் . அப்பெருமான் ஒலிமிகுந்த திருக்கச்சி நெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

அன்று - அக்காலத்தில் . ஆலின்கீழ் இருந்து - கல்லால மரத்தின் அடியில் வீற்றிருந்து . அறம் - சிவதருமமாகிய சரியை , கிரியைகளையும் . ( யோக , ஞானங்களையும் ) புரிந்த - விரும்பியுரைத்த . அருளாளர் - கிருபையுடையவர் . குன்றாத - வலிமையிற் குறையாத . கோள் அரவம் - கொல்லுதலையுடைய பாம்பை . நாண் கொளுவி - நாணாகப்பூட்டி . ஒன்றாதார் - பகைவராகிய அசுரர்களின் ( புரம் மூன்றும் ). ஓங்கு எரியில் - மிக்க நெருப்பில் . வெந்து அவிய - வெந்தொழிய .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 6

பன்மலர்கள் கொண்டடிக்கீழ் வானோர்கள் பணிந்திறைஞ்ச
நன்மையிலா வல்லவுணர் நகர்மூன்று மொருநொடியில்
வின்மலையி னாண்கொளுவி வெங்கணையா லெய்தழித்த
நின்மலனார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

தேவர்கள் பலவகையான மலர்களைத் தூவி இறைவனின் திருவடிக்கீழ்ப் பணிந்து வணங்க , நன்மைபுரியாது தீமை செய்த வலிய அசுரர்களின் மூன்று நகரங்களையும் , ஒரு நொடியில் , மேருமலையை வில்லாகக் கொண்டு , வாசுகி என்னும் பாம்பை நாணாகக் கொண்டு அக்கினியாகிய அம்பை எய்து அழித்த , இயல்பாகவே பாசங்களின் நீங்கிய சிவபெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பன்மலர்கள் கொண்டு - பலவகை மலர்களையும் கொண்டு . ( தூவி ) அடிக்கீழ்ப்பணிந்து இறைஞ்ச - திருவடியின்கீழ்ப் பணிந்துவணங்க . நன்மை இலா - தீமை செய்தலையுடைய . வில் மலையின் - வில்லாகிய மலையில் . வெம்கணையால் - திருமாலாகிய கொடிய அம்பினால் . நகர் மூன்றும் - முப்புரங்களையும் . ஒரு நொடியில் - ஒரு மாத்திரைப்பொழுதில் . நின்மலனார் - இயல்பாகவே பாசங்களின் நீங்கிய பெருமானார் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 7

புற்றிடை வாளரவினொடு புனைகொன்றை மதமத்தம்
எற்றொழியா வலைபுனலோ டிளமதிய மேந்துசடைப்
பெற்றுடையா ரொருபாகம் பெண்ணுடையார் கண்ணமரும்
நெற்றியினார் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமான் புற்றில் வாழும் ஒளிமிக்க பாம்பையும் , கொன்றை மலரையும் , ஊமத்தை மலரையும் அணிந்து , ஓய்தல் இல்லாது அலைவீசும் கங்கையோடு , பிறைச்சந்திரனையும் தாங்கிய சடையையுடையவர் . தம் திருமேனியில் ஒருபாகமாக உமாதேவியைக் கொண்டவர் . நெற்றிக்கண்ணையுடையவர் . அப்பெருமான் ஒலிமிக்க திருக்கச்சிநெறிக்காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

புற்று இடை - புற்றில் உள்ள . வாள் - ஒளியையுடைய . அரவினொடு - பாம்பினோடும் . புனை - அணிந்த . மதம் வாசனையையுடைய . மத்தம் - பொன்னூமத்தை ( இவற்றோடும் ) எற்று ஒழியா - மோதுதல் ஒழியாத . அலை - அலைவீசும் . புனலோடு - கங்கைநீரோடு . இளம்மதியம் - பிறைச் சந்திரனையும் . ஏந்து - தாங்கிய . சடைபெற்று உடையார் - சடையாகிய பெருக்கத்தை யுடையவர் .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 8

ஏழ்கடல்சூழ் தென்னிலங்கைக் கோமானை யெழில்வரைவாய்த்
தாழ்விரலா லூன்றியதோர் தன்மையினார் நன்மையினார்
ஆழ்கிடங்குங் சூழ்வயலு மதில்புல்கி யழகமரும்
நீண்டமறுகிற் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

ஏழுகடல் சூழ்ந்த இலங்கை மன்னனான இராவணனை அழகிய கயிலையின் கீழ் நொறுங்கும்படி தம் காற்பெரு விரலை ஊன்றி வலியழித்த தன்மையுடையவர் சிவபெருமான் . அவர் எவ்வுயிர்க்கும் நன்மையே செய்வார் . அப்பெருமான் ஆழ்ந்த அகழியும் , சுற்றிய வயல்களும் , மதில்களும் நிறைந்த அழகுடன் திகழும் , நீண்ட வீதிகளையுடைய ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

எழில் வரைவாய் - அழகிய ( கைலை ) மலையினிடத்து . தாழ் - ( சற்றே ) வளைத்த . விரலால் ஊன்றியது ஓர் தன்மையினார் - ஊன்றி வலியழித்த தன்மையையுடையவர் . நன்மையினார் - ( அவ்வாறு செய்த அதுவும் மறக்கருணையேயாகலான் ) நன்மையே செய்பவர் ; இறைவன் செயல் . சிவஞானசித்தியார் சுபக்கம் 5,6,15,16. ` நிக்கிரகங்கள் தானும் நேசத்தாலீசன் ` என்றும் , ` தந்தைதாய் பெற்ற தத்தம் புதல்வர்கள் ` என்றும் தொடங்கும் சிவஞானசித்தியார் விருத்தங்களும் , ` இமையளவும் உபகாரம் அல்லா ஒன்றை இயக்கா நிர்க்குணக் கடலாய் இருந்த ஒன்றே ` என்ற தாயுமானவர் வாக்கும் அறியத்தக்கன . மதில் புல்கி - மதிலைச் சேர்ந்து . ஆழ் கிடங்கும் - ஆழ்ந்த அகழியும் ( ஆகிய இவற்றால் ). அழகு அமரும் - அழகு தங்கிய . கச்சி நீள்மறுகின் - நெடிய வீதியையுடைய கச்சி .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 9

ஊண்டானு மொலிகடனஞ் சுடைதலையிற் பலிகொள்வர்
மாண்டார்தம் மெலும்பணிவர் வரியரவோ டெழிலாமை
பூண்டாரு மோரிருவ ரறியாமைப் பொங்கெரியாய்
நீண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

சிவபெருமானின் உணவு ஒலிக்கின்ற கடலில் தோன்றிய நஞ்சு . உடைந்த தலையாகிய பிரமகபாலத்தை ஏந்திப் பிச்சையேற்றுத் திரிவார் . இறந்த தேவர்களின் எலும்புகளை மாலையாக அணிந்தவர் . வரிகளையுடைய பாம்போடு , அழகிய ஆமையோட்டையும் அணிந்தவர் . திருமால் , பிரமன் இருவரும் அறியா வண்ணம் ஓங்கிய நெருப்புப் பிழம்பாய் நின்றவர் . அப் பெருமான் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

ஊன் தானும் - உணவு தானும் ; கடல் நஞ்சு . உடை - தலையில் பலிகொள்வர் . மாண்டார் தம் - இறந்த தேவர்களுடைய ; எலும்பு அணிவர் . வரி - நெடிய . ( அரவோடு ) எழில் - அழகிய . ஆமை - ஆமையோட்டை . பூண்டாரும் - அணிந்தவரும் . ஓர் இருவர் - பிரமவிட்டுணுக்கள் . அறியாமை - அறியாதவாறு . பொங்கு - மிகுந்த . ( எரியாய் நீண்டாரும் கச்சி நெறிக் காரைக் காட்டாரே ) இருவர் என்பது தொகைக் குறிப்பு .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 10

குண்டாடிச் சமண்படுவார் கூறைதனை மெய்போர்த்து
மிண்டாடித் திரிதருவா ருரைப்பனகண் மெய்யல்ல
வண்டாருங் குழலாளை வரையாகத் தொருபாகம்
கண்டாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டாரே.

பொழிப்புரை :

விதண்டாவாதம் பேசி நல்லூழ் இல்லாமையால் சமண சமயம் சார்ந்தோரும் , மஞ்சள் காவியாடையை உடம்பில் போர்த்திய வலிய உரைகளைப் பேசித் திரியும் புத்தர்களும் இறை யுண்மையை உணராதவர்கள் . ஆதலால் அவர்கள் பேசுவதை விடுத்து , வண்டுகள் மொய்க்கின்ற கூந்தலையுடைய உமாதேவியைத் தன் மலை போன்ற திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டு கண்டவர்கள் மகிழும்படி ஒலிமிக்க திருக்கச்சிநெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்குங்கள் .

குறிப்புரை :

குண்டாடி - விதண்டை பேசி . சமண்படுவார் - ( நல்லூழ் இன்மையின் ) சமணசமயமுற்றவரும் . கூறைதனை - ஆடையை . மிண்டு ஆடி - வலிய உரைகளைப் பேசித் திரிவாராகிய புத்தரும் . உரைப்பனகள் - சொல்லுவன . ( மெய்யல்ல ) அவற்றை விடுத்து , சார்புணர்ந்து சாரத்தக்கவர் யார் எனின் , அவர் வண்டு ஆரும் குழலாளை மலைபோன்ற உடம்பில் ஒரு பாகம் வைத்துக்கொண்டு பொருந்தும் கச்சிநெறிக்காரைக்காட்டார் ஆவர் என்க . உரைப்பனவற்றிலும் பல வகைகள் என்பதை உரைப்பனகள் என விகுதிமேல் விகுதி தந்து விளக்கினார் . ` பிழைத்தனகள் அத்தனையும் பொறுத்தா யன்றே ` என இவ்வாறே அப்பர்பெருமானும் அருளினமை காண்க .

பண் :பஞ்சமம்

பாடல் எண் : 11

கண்ணாருங் கலிக்கச்சி நெறிக்காரைக் காட்டுறையும்
பெண்ணாருந் திருமேனிப் பெருமான தடிவாழ்த்தித்
தண்ணாரும் பொழிற்காழித் தமிழ்ஞான சம்பந்தன்
பண்ணாருந் தமிழ்வல்லார் பரலோகத் திருப்பாரே.

பொழிப்புரை :

கண்ணுக்கு இனிமை தரும் ஒலிமிக்க திருக்கச்சி நெறிக் காரைக்காட்டில் வீற்றிருந்தருளும் , தன் திருமேனியின் ஒரு பாகமாக உமாதேவியை வைத்த சிவபெருமான் திருவடிகளை வாழ்த்தி , குளிர்ச்சி பொருந்திய அழகிய சோலைகள் சூழ்ந்த சீகாழியில் அவதரித்த தமிழ் ஞானசம்பந்தன் அருளிய பண்ணோடு கூடிய இத்தமிழ்த் திருப்பதிகத்தை ஓதவல்லவர்கள் இறைவனுலகில் இருப்பதாகிய சாலோக பதவியை அடைவர் .

குறிப்புரை :

கண் ஆரும் - கண்ணுக்கினிமை நிறைந்த . ( கலிக்கச்சி நெறிக் காரைக்காடு )
சிற்பி