திருப்பிரமபுரம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

சுரருலகு நரர்கள்பயி றரணிதல முரணழிய வரணமதின்முப்
புரமெரிய விரவுவகை சரவிசைகொள் கரமுடைய பரமனிடமாம்
வரமருள வரன்முறையி னிரைநிறைகொள் வருசுருதி சிரவுரையினாற்
பிரமனுய ரரனெழில்கொள் சரணவிணை பரவவளர் பிரமபுரமே.

பொழிப்புரை :

தேவர் வாழ்கின்ற விண்ணுலகமும் , மனிதர்கள் வாழ்கின்ற இப்பூவுலகமும் வலிமை அழியும்படி துன்புறுத்திய , காவலாகக் கோட்டை மதில்களையுடைய முப்புரங்களும் எரிந்து சாம்பலாகுமாறு ஒர் அம்பை விரைவாகச் செலுத்தும் ஆற்றலுடையவர் சிவபெருமான் . எல்லாச் சுரங்களும் வரிசைபெற அமைந்த , வேதசிரமாகிய உபநிடதஉரைகளை வரன்முறையோடு ஓதி , அரனாரின் எழில் மிகுந்த புகழை எடுத்துரைத்துச் சரணடைந்து அவர் இணை மலரடியைத் தான் வரம் பெற வேண்டிப் பிரமன் துதித்தலால் புகழால் ஓங்கிய பிரமாபுரம் எனப்பட்டது .

குறிப்புரை :

சுரர் உலகும் - தேவலோகமும் . நரர்கள் பயில் - மனிதர் வாழும் . தரணி தலம் - பூலோகமும் , முரண் அழிய - வலிமை அழியும்படி . ( அதனால் ,) அரணம் - காவலாகிய . முப்புரம் - முப்புர முடிய . சரவிசை - அம்பின் விசையால் , விரவுவகை எரிய - கலந்து பல இடமும் எரியும்படி . கொள் - ( அவ்அம்பைக் ) கொண்ட , கரம் உடைய , பரமன் இடமாம் . நிரை - வரிசையாக , நிறைகொள் - நிறைவையுடைய . வரன்முறையின் வரு - வரன்முறையில் ஓதிவருகின்ற . சுருதி சிரம் - வேத முடிவாகிய உபநிடதங்களின் , உரையினால் - வசனங்களினால் . உயர் - எவரினும் உயர்ந்த , அரன் - சிவபெருமானின் . எழில் கொள் - அழகையுடைய , சரண இணை - இரு திருவடிகளையும் . வரம் அருள - தனக்கு வரம் அருள்வான் வேண்டி , பிரமன் . பரவ - துதிக்க . வளர் - புகழால் ஓங்கிய . பிரமபுரமே - பிரமபுரம் என்னும் பெயர்பெற்ற தலமாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

தாணுமிகு வாணிசைகொ டாணுவியர் பேணுமது காணுமளவிற்
கோணுநுத னீணயனி கோணில்பிடி மாணிமது நாணும்வகையே
ஏணுகரி பூணழிய வாணியல்கொண் மாணிபதி சேணமரர்கோன்
வேணுவினை யேணிநகர் காணிறிவி காணநடு வேணுபுரமே.

பொழிப்புரை :

தன்னை அன்பால் வழிபடும் தேவர்கள் கயமுகாசுரனால் துன்புற்று அஞ்சி வழிபட , நிலைபெற்ற சிவபெருமான் வலிமைமிகுந்த ஆண்யானையின் வடிவம் கொண்டருளினார் . வளைந்த நெற்றியையும் , நீண்ட கண்களையுமுடைய உமாதேவி குற்றமில்லாதபடி பெண்யானையின் உருவை எடுத்தாள் . மது என்னும் அசுரன் வெட்கப்படும்படியும் , வலிமைகொண்டு தீமை செய்த கயமுகாசுரன் அழியுமாறும் ஆற்றல்மிக்க அழகிய விநாயகக் கடவுளைத் தோற்றுவித்த பெருமைக்குரிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , வானுலகிலுள்ள தேவர்களின் தலைவனான இந்திரன் சூரபதுமனுக்கு அஞ்சி ஒளிந்து வாழ்ந்ததால் மூங்கிலை ஏணியாகக் கொண்டு , தான் நேரே காணமுடியாத தேவலோகத்தின் நிலையை ஒளிந்து காணும்பொருட்டு நட்ட வேணுபுரம் ஆகும் . சூரபதுமனுக்கு அஞ்சி இந்திரன் வந்து மூங்கிலில் மறைந்திருந்து பூசித்த வரலாற்றால் போந்த பெயர் வேணுபுரம் என்பது .

குறிப்புரை :

ஆணு - ( தன் ) அன்பர்களாகிய தேவர்கள் . வியர் பேணு மது - ( கயமுகாசுரனால் ) அச்சம் கொள்வதை . காணும் அளவில் - அறிந்ததும் . தாணு - சிவபெருமான் . மிகு - வலிமை மிகுந்த . ஆண் இசைகொடு - ஆண் யானையின் வடிவைக்காண இசைந்து . ( நிற்க - அதற்கேற்ப .) கோணுநுதல் - வளைந்த நெற்றியை . நீள்நயனி - நீண்ட கண்ணையுமுடையவளாகிய அம்பிகை . கோண்இல் - குற்றமில்லாத படி . பிடி - பெண் யானையின் உருவை . மாணி - பெருமையையுடையவளாய்க் காண . மது - மது என்ற அசுரனும் . நாணும் வகை ஏணு - வெட்கும்படி வலிமைகொண்ட . கரி - கயமுகாசுரன் . பூண் - தான் மேற்கொண்ட தீய தொழில்கள் . அழிய - அழியும்படி . ஆண் - ஆண் தகையாகிய விநாயகக் கடவுள் . ( கயமுகாசுரனுக்குப் பேடியர் போல் அஞ்சிய தேவர் துயரந் தவிர்த்த வீரம் குறிக்க ஆண் என்றனர் ) இயல் - ( அன்பர்க்கு அனுக்கிரகிக்கும் ) அருளை , கொள் - கொள் வித்த . மாணி - பெருமையுடையோனாகிய சிவபெருமானின் . பதி - இடம் . சேண் - வானுலகில் உள்ள , அமரர்கோன் - இந்திரன் . வேணு வினை - மூங்கிலை . ஏணி - ஏணியாகக்கொண்டு . காண்இல் - தான் நேரேகாண முடியாத . திவி - தேவலோகத்தின் நிலையைக் காண - ஒளிந்து காணும் பொருட்டு . நடு - நட்ட , வேணுபுரம் - வேணுபுரமாம் ஆணு - அன்பு ; ` ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே ` ( சீவக சிந்தாமணி . 1002)

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பகலொளிசெய் நகமணியை முகைமலரை நிகழ்சரண வகவுமுனிவர்க்
ககலமலி சகலகலை மிகவுரைசெய் முகமுடைய பகவனிடமாம்
பகைகளையும் வகையிலறு முகவிறையை மிகவருள நிகரிலிமையோர்
புகவுலகு புகழவெழி றிகழநிக ழலர்பெருகு புகலிநகரே.

பொழிப்புரை :

சூரியனைப் போல் பிரகாசிக்கும் மலையிற் பிறந்த நாகரத்தினத்தையும் , அரும்பு விரிந்த செந்தாமரையையும் போன்ற திருவடிகளைச் சரணாக அடைந்த சனகாதி முனிவர்கட்குச் சகல கலைகளையும் நன்கு உணருமாறு விரித்து உபதேசித்தருளிய திருவருள் நோக்கத்தையுடையவர் சிவபெருமான் . அத்தகைய பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது பகையசுரர்களை வேர் அறுக்கும் வகையில் அறுமுகக்கடவுளை அருளும்படி ஒப்பற்ற தேவர்கள் சரண்புக அழகுடன் திகழும் புகழ்மிக்க திருப்புகலி என்னும் திருத்தலமாகும் . தேவர்கள் புகலடைந்தமையால் புகலி எனப் பெயர் பெற்றது .

குறிப்புரை :

பகல் ஒளி செய் - சூரியனைப்போற் பிரகாசிக்கும் . நகம் மணியை - மலையிற் பிறக்கும் பத்மராக மணிகளையும் . முகை மலரை - அரும்பு விரிந்த செந்தாமரை ( நாண் ) மலரையும் . நிகழ் - போன்ற . சரண - திருவடிப் பேற்றுக்குரிய . அகவு - விருப்பம் மிக்க . முனிவர்க்கு - சனகாதி முனிவர்களுக்கு , அகலம்மலி - விஸ்தார மாகிய , சகலகலை - கலைகளனைத்தையும் . மிக - ( தெளிவு ) மிகும்படி . உரை செய் - உபதேசித்தருளிய . முகம் உடைய - திருவருள் நோக்கம் உடைய . பகவன் - சிவபெருமானின் . இடம் ஆகும் . ` அரும்பித்த செஞ்ஞாயிறு ஏய்க்கும் அடி ` ` மணியடி ` என்னும் திருவடித் திருத்தாண்டகத்தாலும் முதலடியின் முற்பகுதி தெளிவாம் , முகை மலர்ந்த மலர் - புதுப்பூ . பகவன் - சிவபெருமான் ஒருவர்க்கே உண்மையில் உள்ளது , ஏனைக் கடவுளர்க்கு உபசாரமாத்திரையே . ` முகந்தான் தாராவிடின் முடிவேன் பொன்னம்பலத்தெம் முழுமுதலே ` - என்னும் திருவாசகத்தில் ( கோயில் மூத்த திருப்பதிகம் 3) முகம் - என்னும் சொல் திருவருள் நோக்கம் என்னும் பொருளில் வந்தமை காண்க . பகை - தேவர் பகைவர்களாகிய அரக்கர் முதலாயினோரை . ` பகை ` பகைவருக்கு ஆயினமையின் பண்பாகுபெயர் . இறை - கடவுள் . மிக - அறச்செயல்கள் அதிகரிக்க . அருள - தர . அதனால் . நிகரில் இமையோர் - மகிழ்ச்சியில் நிகர் இல்லாத தேவர்கள் . புக - சரண்புக , எழில் திகழ - அழகு விளங்க . நிகழ் - ( இவற்றால் ) நேர்ந்த ( புகலியெனும் பெயர் ). அலர்பெருகு - அனைத்துலகினும் மிக்குப் பெருகிய ( புகலி நகர் என்க .)

பண் :சாதாரி

பாடல் எண் : 4

அங்கண்மதி கங்கைநதி வெங்கணர வங்களெழி றங்குமிதழித்
துங்கமலர் தங்குசடை யங்கிநிக ரெங்களிறை தங்குமிடமாம்
வெங்கதிர்வி ளங்குலக மெங்குமெதிர் பொங்கெரிபு லன்கள்களைவோர்
வெங்குருவி ளங்கியுமை பங்கர்சர ணங்கள்பணி வெங்குருவதே.

பொழிப்புரை :

அழகிய சந்திரனும் , கங்கை நதியும் , கொடிய பாம்புகளும் , அழகிய இதழ்களையுடைய கொன்றை மலரும் நெருப்புப் போன்ற சடைமுடியில் அணிந்தவர் , எங்கள் இறைவராகிய சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , சூரியனால் விளங்குகின்ற இவ்வுலகிலுள்ளோர் நல்வழிக்கு மாறாக மிக வருத்துகின்ற மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையால் வரும் துன்பத்தைக் களைய விரும்புபவர்கள் பணியும் வெங்குரு ஆகும் . அது தேவகுருவாகிய வியாழபகவான் உமை பங்கராகிய பரமனைப் பணிந்து பேறு பெற்ற தலமாகும் .

குறிப்புரை :

அங்கண்மதி - அழகிய ஆகாயத்தினிடத்தில் உள்ள சந்திரனும் , வெங்கண் அரவங்கள் - கொடிய பாம்புகளும் . எழில் தங்கும் இதழித் துங்கமலர் - அழகு தங்கிய கொன்றையின் தூயமலரும் . தங்கு சடை - பொருந்திய சடையானது . அங்கி நிகர் - தீயையொக்கும் . எங்கள் இறை - எங்கள் தலைவன் . ( சினை வினை . முதலொடு முடிந்தது ) வெங்கதிர் - சூரியனால் , விளங்கும் - விளங்குகின்ற . உலகமெங்கும் - உலகில் உள்ள அனைவரும் . எதிர் - நல் வழிக்குமாறாக . பொங்கு - மிக . எரி - வருத்துகின்ற . புலன்கள் - மனம் முதலிய அந்தக் கரணங்களின் சேட்டையை . களைவோர் - நீக்க விரும்புவோர் . வெங்குரு - கொடிய தேவ குருவினால் . விளங்கி - தமது துயர் களைதற்கிடமிதுவேயென்று தெளிந்து . உமைபங்கர் - சிவபெருமானின் - சரணங்கள் பணி - பாதங்களைப் பணிந்த . வெங்குரு அது . வெங்குரு என்னும் அத்தலமாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

ஆணியல்பு காணவன வாணவியல் பேணியெதிர் பாணமழைசேர்
தூணியற நாணியற வேணுசிலை பேணியற நாணிவிசயன்
பாணியமர் பூணவருண் மாணுபிர மாணியிட மேணிமுறையிற்
பாணியுல காளமிக வாணின்மலி தோணிநிகர் தோணிபுரமே.

பொழிப்புரை :

விசயனுடைய வீரத்தன்மையை உமை காண வனத்தில் வாழும் வேடன் வடிவம் கொண்டு , அவனுக்கு எதிராகப் போர் தொடங்கி , அவன் சொரியும் மழைபோன்ற அம்புகளும் , அவ்வம்புகள் தங்கிய அம்பறாத்துணியும் நீங்கவும் , வில்நாண் அறு படவும் , வளைந்த மூங்கிலால் வடிவமைத்த வில்லைத் துணித்தவர் . அதனால் அர்ச்சுனன் நாணமுற்றுக் கையால் அடித்துச் செய்யும் மற்போர் செய்யவர , அவனுக்கு அருள்புரிந்தவர் , பிரமாணமான மறைகட்கு வாச்சியமாக ( பொருளாக ) உள்ள சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது காலாந்தரத்தில் பிரளய கால வெள்ளமானது உலகம் முழுவதையும் மூழ்கச் செய்ய , ஆற்றல் பெருகுமாறு ஊழி வெள்ளத்தில் தோணிபோல் மிதந்த தோணிபுரம் எனப்படும் திருத்தலமாகும் . பிரமாணி - பிரமாணமாகிய மறைகட்கு வாச்சியமாக உள்ளவர் .

குறிப்புரை :

ஆண் இயல்புகாண ( விசயனுடைய ) வீரத்தன்மையை உமைகாண . வன வாணஇயல் - வனத்தில் வாழ்பவர்களாகிய வேடர் வடிவம் . பேணி - கொண்டு , எதிர் . அவனுக்கு எதிராக . ( போர் தொடங்கி ) பாணமழை - ( அவன் சொரியும் ) மழைபோன்ற அம்புகளும் . சேர் - அவ்வம்புகள் தங்கிய . தூணி - அம்பறாத் தூணியும் . அற - நீங்கவும் . நாணி அற - வில்நாண் அறுபடவும் . வேணுசிலை பேணி - அவனது மூங்கிலால் ஆகிய வில்லின் வளைவு . அற - நீங்கவும் . விசயன் - அவ்வர்ச்சுனன் . நாணி - நாணமுற்று . பாணி அமர் பூண - கையால் அடித்துச் செய்யும் மற்போரைச் செய்ய வர . அருள் மாணு - அவனுக்கு மிகவும் அருள் புரிந்த , பிரமாணி இடம் - கடவுட்டன்மைக்கு எடுத்துக் காட்டாக விளங்கும் சிவபெருமானின் இடம் . ஏணி முறையில் - மிக்கது என்ற முறையினால் . பாணி - பிரளயகால வெள்ளமானது . உலகு ஆள - உலகம் முழுதும் மூழ்கச் செய்ய . மிக ஆணின் - அதனின் மிகவும் பொருந்திய . ஆண்மை வலிமையினால் . மலி - சிறந்த . தோணி நிகர் - அதனைக்கடக்கவல்ல தோணியை யொத்த ( தோணிபுரம் ஆம் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நிராமய பராபர புராதன பராவுசிவ ராகவருளென்
றிராவுமெ திராயது பராநினை புராணனம ராதிபதியாம்
அராமிசை யிராதெழி றராயர பராயண வராகவுருவா
தராயனை விராயெரி பராய்மிகு தராய்மொழி விராயபதியே.

பொழிப்புரை :

இறைவன் நோயற்றவன் . அனைத்துப் பொருட்கட்கும் மேலான பரம்பொருள் . மிகப்பழமையானவன் . பராவுசிவன் என்று இரவும் , பகலும் போற்றித் தியானிக்கப்படுகின்ற பழமையானவன் . தேவர்கட்கெல்லாம் தலைவனாக விளங்கும் அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இரணியாக்கனால் கொள்ளப்பட்டுக் கடலில் கிடந்த அழகிய பூமியை , திருமால் பாற்கடலில் அரவணையிலிருந்து எழுந்து வந்து வெள்ளைப் பன்றி உருவெடுத்து இரணியாக்கனைக் கொன்று பூமியைக் கொம்பிலேற்றி அவனை வருத்திய பழிபோகச் சிவனை வழிபட்ட புகழ்மிக்க பூந்தராய் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நிராமய - நோயற்றவனே . பராபர - உயர்வுடையதும் , உயர்வற்றதும் ஆனவனே ; புராதன - பழமையானவனே . பராவு - அனை வரும் துதிக்கின்ற . சிவ - சிவனே . ராக - விரும்பத்தக்கவனே . அருள் என்று - அருள் வாயாக என்று . இராவும் - இரவிலும் . எதிராயது - பகலினும் . பரா - பரவி . நினை - உயிர் அனைத்தும் தியானிக்கின்ற . புராணன் - பழமையானவனும் . அமர ஆதி - தேவர்களுக்குத் தலைவனுமாகிய சிவபெருமானின் . பதி - இடமாகும் . அராமிசை - ஆதிசேடனாகிய பாம்பின்மேல் . இராத - இல்லாத . ( இரணியாக்கனாற் கொள்ளப்பட்டுக் கடலிற் கிடந்த ) எழில் - அழகிய பூமியை . தரு - கொம்பினால் கொண்டு வந்த . ஆய - அத்தகைமை பொருந்திய . அரபராயண - சிவனைத் துதிக்கின்ற . வராக உரு - வெள்ளைப் பன்றி வடிவுகொண்ட . வாதராயனை - திருமாலை . விராய் - கலந்த . எரி - தீப்போன்ற பழி நீங்குதற்பொருட்டு . பராய் - அவனால் வணங்கப்பட்டு . ( அதனால் ) மிகு - புகழ்மிகுந்த . தராய் மொழி - பூந்தராய் என்னும் பெயர் . விராய - கலந்த , பதி ஆம் . எழில் - ஆகுபெயர் . பராயணன் - குறுக்கல்விகாரம் . விராயெரி - விராய எரி எனப்பிரிக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அரணையுறு முரணர்பலர் மரணம்வர விரணமதி லரமலிபடைக்
கரம்விசிறு விரகனமர் கரணனுயர் பரனெறிகொள் கரனதிடமாம்
பரவமுது விரவவிடல் புரளமுறு மரவையரி சிரமரியவச்
சிரமரன சரணமவை பரவவிரு கிரகமமர் சிரபுரமதே.

பொழிப்புரை :

மும்மதில்களை அரணாகக் கொண்ட திரிபுரத்தசுரர்களால் பலருக்கு மரணம் ஏற்பட , காயங்கள் முதலான உண்டாக்கித் துன்புறுத்தும் அம்மதிலின் மேல் அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தைக் கையினால் ஏவிய சமர்த்தனும் , தன்னைச் சரணடைந்தவர்களின் கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும் , யாவரினும் உயர்ந்த மேன்மையுடையவனும் , உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லோராலும் போற்றப்படுகின்ற அமுதத்தைப் பாற் கடலிலிருந்து கடைந்து எடுத்த காலத்தில் , தனக்குக் கிடைக்கும்படி பந்தியில் வந்த பாம்பின் சிரத்தினைத் திருமால் அரிந்து வீச , அந்தத் தலையானது சிவபெருமானைச் சரணடைந்து துதித்தலால் இரு கிரகங்களாக நவக்கிரக வரிசையில் பொலியும் சிரபுரம் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

அரணையுறும் - மதிலைப்பொருந்திய , முரணர் - திரிபுரத்தசுரர்களால் . பலர் மரணம்வர - பலருக்கு மரணம் நேர . இரணம் - காயங்கள் முதலியன உண்டாக்கித் துன்புறுத்தும் , மதில் - அம்மதிலின்மேல் . அரமலி படை - அரத்தால் அராவப்பட்ட ஆயுதத்தை , கரம் - கையினால் . விசிறு - ஏவிய , விரகன் - சமர்த்தனும் , அமர் கரணன் தன்னை அடைந்தவருக்கு கரணங்களின் சேட்டையை அடக்குவிப்போனும் . ( உயர்பரன் - யாவரினும் உயர்ந்த மேன்மை உடையவனும் ). நெறி கொள்கரன் அது - உபதேசிக்கும் முறையைக் கொண்ட திருக்கரத்தை உடையவனுமாகிய சிவபெருமானின் , இடமாம் - தலமாகும் . பரவு - துதிக்கத்தக்க . அமுது - அமிர்தம் , விரவ - தனக்குக்கிடைக்கும்படி உறும் அரவை - பந்தியில் வந்த பாம்பை . விடல் - விடத்தோடு . புரளம் உறும் - புரளுதல் உறும் , அரிசிரம் அரிய - திருமால் அதன்தலையை வெட்ட . அச்சிரம் - அந்தத் தலையானது , அரன் - சிவபெருமானது , சரணமவை - பாதங்களை , பரவ - துதித்ததினால் இருகிரகம் - இரண்டு கிரகங்களாக , அமர் - நவக்கிரக வரிசையில் அமரச்செய்த , சிரபுரம் - சிரபுரமாம் . உபதேசிக்கும் முறையைக் கொண்ட கரன் என்றது ` மும்மலம்வேறு பட்டொழிய மொய்த்துயிர் , அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக் , கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய ` என்னும் கச்சியப்ப முனிவர் வாக்கால் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

அறமழிவு பெறவுலகு தெறுபுயவன் விறலழிய நிறுவிவிரன்மா
மறையினொலி முறைமுரல்செய் பிறையெயிற னுறவருளு மிறைவனிடமாங்
குறைவின்மிக நிறைதையுழி மறையமரர் நிறையருள முறையொடுவரும்
புறவனெதிர் நிறைநிலவு பொறையனுடல் பெறவருளு புறவமதுவே.

பொழிப்புரை :

தருமம் அழியுமாறு உலகத்தைத் துன்புறுத்திய புயவலிமையுடைய இராவணனது வலிமை அழியுமாறு தம் காற்பெருவிரலை ஊன்றி , பின் இராவணன் தவறுணர்ந்து சாமகானம் பாடிப் போற்ற வளைந்த பற்களையுடைய அந்த இராவணனுக்கு நீண்ட வாழ்நாளும் , ஒளிபொருந்திய வாளும் அருளியவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , வேதங்கட்கும் , தேவர்கட்கும் ஒத்ததாகிய நீதியை வழங்கும்படி , முறையிட்டு வந்த புறாவிற்குரியவனாகிய வேடன் எதிரே , புறாவின் எடைக்குச் சமமாகத் தன் சதையை அறுத்து வைத்தும் நிரம்பாது தான் துலையேறி எடை சமன்பெறுமாறு செய்த சிபிச்சக்கரவர்த்தி குறையில்லா உடம்பைப் பெற அருள் புரிந்ததும் , தான் செய்த பழிபோக புறா உருவில் வந்த தீக்கடவுள் பூசித்ததும் ஆகிய புறவம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அறம் அழிவுபெற - தர்மம் அழியும் படியாக . உலகு - உலகத்தை , தெறு - அழித்த , புயவன் - தோள்களையுடைய இராவணனது . விறல் அழிய - வலிமை யொழியும்படி , விரல் நிறுவி - விரலை அழுத்தி ; ( பின் ) மாமறையின் ஒலி - சிறந்த சாமவேத கானத்தை , முறை - வரிசையாக , முரல் செய் - பாடிய , பிறை எயிறன் - பிறை போன்ற பற்களையுடைய அவ்விராவணன் . உற - நாளும் , வாளும் பெற . அருளும் இறைவன் இடமாம் . மறை அமரர் - வேதங்களுக்கும் தேவர்களுக்கும் ஒத்ததாகிய , நிறை - நீதியை . அருள - வழங்கும்படி . முறையொடு வரும் - முறையிட்டு வந்த , புறவன் - புறாவிற்குரியவனாகிய வேடன் , எதிர் - எதிரே , குறைவில் - புறாவின் எடைக்குச் சரியாக இட்ட மாமிசத்தின் குறைவில் . மிக அதிகரிக்க , நிறைதை உழி - நிறைவுவேண்டியிருந்த பொழுது . நிறை நிலவு - அந்த எடையின் நிறை சரியாகப் பொருந்த இட்ட . பொறையன் - உடலின் அரிந்த மாமிசத்தை எடையாக்கினவனாகிய சிபி , உடல் பெற - தன் உடம்பைப்பெற , அருள் - ( அவன் வந்து பணிய ) அருள் புரிந்த - புறவம் அது - புறவம் என்னும் பெயருடைய திருத்தலமாம் . நிறைதை - நிறைவு . பொறை - பாரம் , எடை .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

விண்பயில மண்பகிரி வண்பிரம னெண்பெரிய பண்படைகொண்மால்
கண்பரியு மொண்பொழிய நுண்பொருள்கள் தண்புகழ்கொள் கண்டனிடமாம்
மண்பரியு மொண்பொழிய நுண்புசகர் புண்பயில விண்படரவச்
சண்பைமொழி பண்பமுனி கண்பழிசெய் பண்புகளை சண்பைநகரே.

பொழிப்புரை :

சிறந்த பிரமன் அன்ன உரு எடுத்து ஆகாயத்தில் சென்றும் , மிக்க மதிப்புடைய தகுதியான சக்கராயுதப் படையைக் கொண்ட திருமால் பன்றி உரு எடுத்து மண்ணைப் பிளந்து சென்றும் காணப்பெறாது , கண்ணால் பற்றக்கூடிய ஒளி நீங்க , நுண்ணிய பொருளாக , இனிய கீர்த்தியைக் கொண்ட அகண்டனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , மண்ணின் நுண்புழுதிபோல் அராவிய இரும்பு உலக்கைத்தூள் சண்பைப் புல்லாக முளைக்க அவற்றால் யாதவ குமாரர்கள் ஒருவரையொருவர் அடித்துக் கொண்டு இறந்து விண்ணுலகை அடைய , துருவாச முனிவரை இழிவு செய்து பழிகொண்ட தன் இனத்தவர்கட்கு நற்கதி உண்டாகுமாறும் சண்பை என்னும் கோரையால் உண்டான புண்கள் தீருமாறும் கண்ணபிரான் போற்றி வழிபட்டுச் சாபத்தை நீக்கியதால் , சண்பை என்னும் பெயர் பெற்ற திருத்தலமாகும் .

குறிப்புரை :

மண்பகிரி - மண்ணைப்பிளக்கும் பன்றி ( யாகி ). எண் பெரிய - மிக்க மதிப்புடைய . பண் - தகுதியான , படைகொள் - சக்கராயுதத்தைக் கொண்ட . மால் - திருமால் ( பூமியிற் சென்றும் ) வண் பிரமன் - சிறந்த பிரமன் . விண்பயில - ஆகாயத்தில் சென்றும் , கண்புரியும் - கண்ணாற் பற்றக்கூடிய . ஒண்பு - ஒளி . ஒழிய - நீங்க . நுண் பொருள்கள் - அவற்றிற்கு எட்டாததாகிய நுண்ணிய பொருள்களாக . தண்புகழ்கொள் - இனிய கீர்த்தியைக்கொண்ட . கண்டன் இடமாம் - அகண்டனாகிய சிவபெருமானின் இடமாகும் . அகண்டன் என்பது முதற்குறைந்து நின்றது . மண்பரியும் - உலகத்தைக் காக்கின்ற , ஒண்பு ஒழிய - ஆண்மை நீங்க . நுண்பு - அற்பர்களாகிய . சகர் - யாதவர்கள் . புண்பயில - ஒருவரோடு ஒருவர் அடித்துக் கொண்டு செத்து . விண்படர - விண்ணுலகை அடைய . பண்பமுனி தவப்பண்பையுடைய துருவாசமுனிவர் . கண்பழி செய் - கருதத்தக்க பழியைச் செய்த . பண்பு - சாபத்தை . களை - நீக்கியதனால் . சண்பை மொழி - சண்பையென்று மொழியப்படும் . சண்பைநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

பாழியுறை வேழநிகர் பாழமணர் சூழுமுட லாளருணரா
ஏழினிசை யாழின்மொழி யேழையவள் வாழுமிறை தாழுமிடமாங்
கீழிசைகொண் மேலுலகில் வாழரசு சூழரசு வாழவரனுக்
காழியசில் காழிசெய வேழுலகி லூழிவளர் காழிநகரே.

பொழிப்புரை :

பாழியில் தங்கும் , யானையை ஒத்த சமணர்களும் , கூட்டமாக வாழும் உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் இறைவனை உணராதவர்கள் . ஏழிசையும் , யாழின் இனிமையும் போன்ற மொழியுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கீழுலகில் புகழ்கொண்ட அரசர்களும் , மேலுலகில் வாழ்கின்ற அரசனாகிய இந்திரனும் , மற்றும் சூழ்ந்துள்ளவர்களும் வாழும்பொருட்டு நடனம் புரிந்த இறைவனிடம் ஆடலில் தோற்று , தன் குற்றம் நீங்குமாறு அப்பெருமானை வழிபட்டு காளி அருள் பெற்ற செயல் சப்தலோகங்களிலும் பல ஊழிக்காலமாக பேசப்பட்டு வரும் பெருமையுடைய காழிநகராகும் .

குறிப்புரை :

பாழி உறை - பாழியில் தங்கும் , வேழம் நிகர் - யானையை யொத்த , பாழ் அமணர் - பாழ்த்த அமணர்களும் . சூழும் - கூட்டமாக உள்ள , உடல் ஆளர் - உடலைப் பாதுகாப்போராகிய பௌத்தர்களும் , உணரா - உணராத , ஏழின் இசை - ஏழு சுரங்களையுடைய , யாழின்மொழி - யாழ் போற் பேசுகின்ற , ஏழையவள் - பெண்ணாகிய அம்பிகையுடன் , வாழும் இறை - வாழ்பவராகிய சிவபெருமான் , தாழும் - தங்கும் , ( இடம் ஆம் ) கீழ் ( உலகில் ) கீழ் உலகில் , சூழ் - சூழ்ந்த அரசு - அரசர்களும் , இசைகொள் - புகழ்கொண்ட , மேல் உலகில் மேல் உலகத்தில் , வாழ் - வாழ்கின்ற , அரசு - அரசனாகிய இந்திரனும் ; வாழ - ( காளியின் துன்புறுத் தலினின்று ) வாழும் பொருட்டு ( நடனம் ஆடுதலில் ) அரனுக்கு சிவபெருமானுக்கு , ஆழிய - ஆழ்ந்த , தோற்ற , சில்காழி - சிலகோவைகளையுடைய மேகலாபரணம் அணிந்தவளாகிய அக்காளி , செய - தன் குற்றம் நீங்கும்படி வந்துபோற்ற , அருள் பெற்ற செயல் ஏழுலகில் - சப்த லோகங்களிலும் , ஊழி - பல ஊழி காலமாக , வளர் - பெருகும் காழிநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

நச்சரவு கச்செனவ சைச்சுமதி யுச்சியின்மி லைச்சொருகையான்
மெய்ச்சிர மணைச்சுலகி னிச்சமிடு பிச்சையமர் பிச்சனிடமாம்
மச்சமத நச்சிமத மச்சிறுமி யைச்செய்தவ வச்சவிரதக்
கொச்சைமுர வச்சர்பணி யச்சுரர்க ணச்சிமிடை கொச்சைநகரே.

பொழிப்புரை :

நஞ்சையுடைய பாம்பைக் கச்சாகக் கட்டி , சந்திரனைத் தலையிலே சூடி , ஒரு கையில் பிரமகபாலத்தைத் தாங்கி , உலகிலே நாடோறும் இடுகின்ற பிச்சையை விரும்பும் பித்தனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , மீன் நாற்றத்தை விரும்பும் மச்சகந்தியை வசமிழந்து ஆற்றினிடையில் புணர்ந்த கொச்சைத் தன்மைக்குக் கதறி அது நீங்க பராசரமுனிவர் வணங்க , தேவர்களும் விரும்பி அணுகும் கொச்சைவயம் எனப்படும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நச்சு அரவு - நஞ்சு அரவு , நஞ்சையுடைய பாம்பை : கச்சென - கச்சாக . அசைச்சு - அசைத்து - கட்டி , மதி - சந்திரனை , உச்சியில் - தலையில் , மிலைச்சு - மிலைத்து , மிலைந்து , ஒரு கையான் - ஒரு கையில் மெய் - ( பிரமன் ) உடம்பினின்றும் ( கிள்ளிய ) சிரம் - தலையை , அணைச்சு - தாங்கி , உலகில் - உலகிலே , நிச்சம் - நாடோறும் , இடு - இடுகின்ற , பிச்சை - பிச்சையை , அமர் - விரும்பும் , பிச்சன் இடமாம் - பித்தனாகிய பெருமானின் இடமாகும் . மச்சம் - மீனின் . மதம் - நாற்றத்தை , நச்சி - விரும்பி . மதமச்சிறுமியை - வலையர் சிறுமியை , அச்சவரதம் - ( அச்சத்ததைத் தரும் , விரதம் ) அச்சத்தைத் தரும் கொள்கையின் பயனாக நேர்ந்த . கொச்சை - கொச்சைத் தன்மைக்கு . முரவு - கதறிய . அச்சர் - பராசர முனிவர் . பணிய - வணங்க ( அதுகண்டு ) சுரர்கள் - தேவர்களும் . மிடை - நெருங்குகின்ற .

பண் :சாதாரி

பாடல் எண் : 12

ஒழுகலரி தழிகலியி லுழியுலகு பழிபெருகு வழியைநினையா
முழுதுடலி லெழுமயிர்க டழுவுமுனி குழுவினொடு கெழுவுசிவனைத்
தொழுதுலகி லிழுகுமல மழியும்வகை கழுவுமுரை கழுமலநகர்ப்
பழுதிலிறை யெழுதுமொழி தமிழ்விரகன் வழிமொழிகண் மொழிதகையவே.

பொழிப்புரை :

நல்லொழுக்கத்தில் நிற்றல் அரிதாகி அழிகின்ற கலிகாலத்தில் உலகில் பழிபெருகுதலை நினைந்து வருந்தி , உடல் முழுவதும் முடி முளைத்துள்ள உரோமச முனிவர் தம் குழுவினருடன் அங்குத் தங்கி , சிவபெருமானைத் தொழுது , உலக இச்சைக்கு இழுக்கின்ற மலங்கள் நீங்கிச் சிவஞான உபதேசம் பெற்றதால் கழுமலம் எனப் போற்றப்படும் திருத்தலத்தினை வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும் , எழுதும் வேதமெனப் போற்றப்படும் தமிழ் வல்லவனுமாகிய ஞானசம்பந்தன் அருளிய இந்த வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் பாடிப் பயன்பெறும் தன்மை உடையன .

குறிப்புரை :

அழிகலியில் - அறம் அழிகின்ற கலியுகத்தில் , உலகு உழி - உலகினிடத்தில் , ஒழுகல் அரிது - அறவழியில் ஒழுகுவது அரியது ( என்றும் ) பழிபெருகு வழியை - பாவம் பெருகுகின்ற வழியையும் , நினையா - நினைந்து . முழுது உடலின் - உடல் முழுவதும் , எழும் மயிர்கள் - முளைத்த உரோமங்களைக்கொண்ட , முனி - உரோமச முனிவர் , குழுவினொடு - தமது கூட்டத்தொடு . ( வந்து ) கெழுவு - அங்கே தங்கிய . சிவனை - சிவபெருமானை ! தொழுது - வணங்கி , உலகில் - உலக இச்சையில் , இழுகும் - வழுக்கச் செய்கின்ற . மலம் அழியும் வகை - பாசங்கள் நீங்கும் விதம் . கழுவும் - போக்கிய , உரை - வார்த்தையை ( புகழை ) யுடைய . கழுமலநகர் - கழுமலமென்னும் பதியின் , பழுதில் இறை - வணங்குவோரின் குற்றம் இல்லையாகச் செய்கின்ற தலைவனும் , எழுதும் மொழி - எழுதக்கூடிய வேதமொழியாகிய தமிழ் , விரகன் - தமிழில் வல்லவனுமாகிய திருஞான சம்பந்தனேன் . வழி மொழிகள் - வழிமொழித் திருவிராகப் பாசுரங்கள் . மொழி தகையவே - பாடிப்பயன்பெறும் தன்மை உடையனவாம் .
சிற்பி