திருக்காளத்தி


பண் :சாதாரி

பாடல் எண் : 1

வானவர்கள் தானவர்கள் வாதைபட வந்ததொரு மாகடல்விடம்
தானமுது செய்தருள் புரிந்தசிவன் மேவுமலை தன்னைவினவில்
ஏனமிள மானினொடு கிள்ளைதினை கொள்ளவெழி லார்கவணினால்
கானவர்த மாமகளிர் கனகமணி விலகுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

தேவர்களும் , அசுரர்களும் வருந்தித் துன்புறுமாறு பாற்கடலைக் கடைந்தபோது தோன்றிய ஆலகால விடத்தை , தான் அமுது போன்று உண்டு அருள் செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை எது என வினவினால் , பன்றிகள் , இளமான்கள் , கிளிகள் இவை தினைகளைக்கவர வேட்டுவ மகளிர்கள் பொன்னாலும் , இரத்தினங்களாலும் ஆகிய ஆபரணங்களைக் கவண்கற்களாக வீசி விரட்டும் சிறப்புடைய திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

விடம் - ஆலகால விடத்தை . தான் அமுது செய்து - தாம் உண்டு . அருள் புரிந்த - அவர்களுக்கு அருளின . ஏனம் - பன்றிகள் . இளம் மானினொடு - இளமான்களொடு . கிள்ளை - கிளிகளும் . தினை கொள்ள - தினைகளைக் கவர . எழில் ஆர் - அழகு பொருந்திய . கவணினால் - கவணால் . கானவர்தம் மாமகளிர் - வேடுவர்களுடைய சிறந்த பெண்கள் ; வீசியெறிகின்ற . கனகம் - பொன்னாலும் . மணி - இரத்தினங்களாலும் . விலகு - அவை விலகுதற்கிடமாகிய ( காளத்தி மலை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 2

முதுசினவி லவுணர்புர மூன்றுமொரு நொடிவரையின் மூளவெரிசெய்
சதுரர்மதி பொதிசடையர் சங்கரர் விரும்புமலை தன்னைவினவில்
எதிரெதிர வெதிர்பிணைய வெழுபொறிகள் சிதறவெழி லேனமுழுத
கதிர்மணியின் வளரொளிக ளிருளகல நிலவுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

மிகுந்த கோபத்துடன் மேருமலையை வில்லாகக் கொண்டு பகையசுரர்களின் முப்புரங்களையும் ஒருநொடிப் பொழுதில் எரியுண்ணும்படி செய்த சமர்த்தர் சிவபெருமான் . அவர் சந்திரனைத் தரித்த சடையையுடையவர் . எல்லா உயிர்கட்கும் நன்மையே செய்பவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் மலை , எதிரெதிராக உள்ள மூங்கில்கள் உராய்வதால் தோன்றிய நெருப்புப் பொறிகளாலும் , பன்றிகள் கொம்பினால் மண்ணைக் கிளறும்போது கிடைத்த மணிகளாலும் இருள் நீங்க விளங்குகின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

முது - பழமையான ( வில் ). சினம் - கோபத்தையுடைய . வில் - வில்லினால் . அவுணர் புரம் மூன்று - அசுரர்கள் புரம் மூன்றும் . ஒரு நொடி வரையில் - ஒரு நொடிப் பொழுதில் . மூள - எரிமூளும்படியாக எரிசெய் - எரித்த . சதுரர் - சமர்த்தர் . மதி - சந்திரன் . பொதி - தங்கிய . சடையர் - சடாபாரத்தையுடையவர் . சங்கரர் - ஆன்மாக்களுக்கு நன்மையைச்செய்பவர் . ( விரும்பும் மலை ) எதிர்எதிர - எதிர்எதிர் உள்ளனவாகிய . வெதிர் பிணைய - மூங்கில்கள் ஒன்றோடு ஒன்று மோத ( உராய ). எழு - உண்டான . பொறிகள் - நெருப்புப் பொறிகள் . ( சிதற , அவற்றாலும் ). ஏனம் உழுத - பன்றிகள் கொம்பினால் கிளறுவதால் தோன்றிய . கதிர் மணியின் வளர் ஒளிகள் - ஒளியையுடைய இரத்தினங்களின் மிகும் ஒளியினாலும் . இருள் அகல - இருள் நீங்க , நிலவு - விளங்குகின்ற ; காளத்திமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

வல்லைவரு காளியைவ குத்துவலி யாகிமிகு தாரகனைநீ
கொல்லென விடுத்தருள் புரிந்தசிவன் மேவுமலை கூறிவினவில்
பல்பலவி ருங்கனி பருங்கிமிக வுண்டவை நெருங்கியினமாய்க்
கல்லதிர நின்றுகரு மந்திவிளை யாடுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

தாரகன் இழைத்த துன்பம் கண்டு , விரைந்து நீக்கவரும் காளியை நோக்கி , ` வலிமை மிகுந்த தாரகன் என்னும் அசுரனை நீ கொல்வாயாக ` என்று மொழிந்து அருள்செய்த சிவ பெருமான் வீற்றிருந்தருளும் மலை , பலவகைச் சுவைமிகுந்த பெரிய கனிகளின் சாற்றை அருந்தி , ஒரே கூட்டமாய் மொய்த்து , மலை அதிரும்படி கருங்குரங்குகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

வல்லைவரு - விரைவிலே வந்த . வகுத்து - நியமித்து . வலியாகி - வலிமை பொருந்தி . மிகு - மிக்க ; ( தாருகனை ). இருங்கனி பருங்கி - பெரிய பழங்களின் ( சாற்றைக் ) குடித்து . மிகவுண்டலை - மிகவும் உண்டவைகளாகி . இனமாய் நெருங்கி - ஒரே கூட்டமாய் மொய்த்து . கல் அதிர - மலை அதிரும்படியாக . கருமந்தி - கரிய பெண் குரங்குகள் . ( விளையாடுகின்ற காளத்தி மலை .) மந்தி - பெண் குரங்கின் பொதுப் பெயர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

வேயனைய தோளுமையொர் பாகமது வாகவிடை யேறிசடைமேல்
தூயமதி சூடிசுடு காடினட மாடிமலை தன்னைவினவில்
வாய்கலச மாகவழி பாடுசெய்யும் வேடன்மல ராகுநயனம்
காய்கணை யினாலிடந் தீசனடி கூடுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

மூங்கிலைப் போன்ற தோளுடைய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு , இடப வாகனத்தில் ஏறி , சடைமுடியில் தூயசந்திரனைச் சூடி , சுடுகாட்டில் நடனம் ஆடும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , வாயே அபிடேக கலசமாக வழிபாடு செய்த வேடராகிய கண்ணப்பர் , தம் மலர்போன்ற கண்ணைக் கொடிய அம்பினால் தோண்டி இறைவனுக்கு அப்பி , இறைவனின் திருவடியைச் சார்ந்த சிறப்புடைய திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

வேய் அனைய - மூங்கிலையொத்த . ( தோள் ). விடை ஏறி - விடையை ஊர்தியாக உடையவன் . தூய - வெண்மையான . மதிசூடி - சந்திரனை அணிந்தவன் ; ( சுடுகாட்டில் நடனமாடி ). வாய் கலசமாக - வாயே அபிடேக கலசமாக . வழிபாடு செய்யும் - பூசித்த . வேடன் - கண்ணப்ப நாயனார் . மலராகும் நயனம் - மலர் போன்ற கண்ணை . காய் கணையினால் - கோபிக்கின்ற அம்பினால் . இடந்து - தோண்டி . ஈசன் அடி கூடும் - சிவபிரானின் திருவடி சேர்ந்த ; காளத்தி மலை . காய் கணை - வினைத்தொகை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மலையின்மிசை தனின்முகில்போல் வருவதொரு மதகரியை மழைபொலலறக்
கொலைசெய்துமை யஞ்சவுரி போர்த்தசிவன் மேவுமலை கூறிவினவில்
அலைகொள்புன லருவிபல சுனைகள்வழி யிழியவய னிலவுமுதுவேய்
கலகலென வொளிகொள்கதிர் முத்தமவை சிந்துகா ளத்திமலையே.

பொழிப்புரை :

மலையின்மேல் தவழும் மேகம்போல் வந்த மதம்பொருந்திய யானையானது இடிபோல் பிளிற , அதனைக் கொன்று உமாதேவி அஞ்சும்படி அதன் தோலைப் போர்த்திக் கொண்ட சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , அலைகளையுடைய நீர் மலையிலிருந்து அருவிபோல் இழிந்து , பல சுனைகளின் வழியாக வயல்களில் பாய , அருகிலுள்ள முற்றிய மூங்கில்கள் கலகல என்ற ஒலியுடன் , கதிர்போல் ஒளிரும் முத்துக்களைச் சிந்தும் திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

மலையின் மிசைதனின் - மலையின் மேல் இடத்தில் , முகில்போல் வருவது ஒரு மதகரி - முகில்போல் வந்த ஓர் மதங் கொண்ட யானை , மழைபோல் அலற - இடியைப் போல் பிளிறும்படி , ( கொலை செய்து உரிபோர்த்த சிவன் .) அலைகொள் - அலைகளையுடைய , புனல் அருவி பல - நீரையுடைய அருவிகள் , பல சுனைகள் வழி - பல சுனைகளிடத்தில் . இழிய - பாய , அயல் - அருகிலே , நிலவும் - பொருந்திய , முதுவேய் - முதிய மூங்கில்கள் , ஒளிகொள் - பிரகாசிக்கின்ற , கதிர் - கிரணங்களையுடைய , முத்தம் அவை - முத்துக்களை , கலகலவென ( அருவியின் வெள் ஒளிக்கு எங்கள் ஒளி தோற்றனவா என்று சொரிவது போல் ) சிந்து - சொரிகின்ற ( காளத்தி மலை ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பாரகம் விளங்கிய பகீரத னருந்தவ முயன்றபணிகண்
டாரருள் புரிந்தலைகொள் கங்கைசடை யேற்றவரன் மலையைவினவில்
வாரத ரிருங்குறவர் சேவலின் மடுத்தவ ரெரித்தவிறகில்
காரகி லிரும்புகை விசும்புகமழ் கின்றகா ளத்திமலையே.

பொழிப்புரை :

பாரதபூமியில் சிறந்து விளங்கிய பகீரதன் என்னும் மன்னன் , பிதிரர்கட்கு நற்கதி உண்டாகுமாறு அரியதவம் செய்து வானிலுள்ள கங்கையைப் பூவுலகிற்குக் கொண்டுவர , அவனுக்கு அருள்செய்து , பெருக்கெடுத்த கங்கையைத் தன் சடையில் தாங்கிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெடிய வழிகளையுடைய கானகக் குறவர்கள் தங்கள் குடிசையில் அடுப்பெரித்த , கரிய அகில் கட்டையிலிருந்து கிளம்பிய பெரியபுகை ஆகாயத்தில் மணக்கின்ற திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

பாரகம் - பூமியில் ( விளங்கிய பகீரதன் ). அருந்தவம் முயன்ற - அரிய தவம் செய்த , பணி கண்டு - வினையைக் கண்டு , ஆர் அருள்புரிந்து - அரிய கிருபைசெய்து , ( அலைகொள்கங்கையை ) சடைஏற்ற அரன் - சடையில்தாங்கிய சிவபெருமானது , வார் அதர் - நெடிய வழிகளையுடைய , இரும் - பெரிய , சேவலின் - தங்கும் இடமாகிய குடிசையில் , அவர் - அவர்கள் , மடுத்து - மூட்டி , ( எரித்த விறகில் - கரிய , அகில் கட்டையிலிருந்து கிளம்பிய ) இரும்புகை - பெரிய புகை , விசும்பு - வான் உலகில் , கமழ் - மணக்கின்ற காளத்தி மலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

ஆருமெதி ராதவலி யாகிய சலந்தரனை யாழியதனால்
ஈரும்வகை செய்தருள் புரிந்தவ னிருந்தமலை தன்னைவினவில்
ஊருமர வம்மொளிகொண் மாமணி யுமிழ்ந்தவை யுலாவிவரலால்
காரிருள் கடிந்துகன கம்மென விளங்குகா ளத்திமலையே.

பொழிப்புரை :

தன்னை எதிர்த்துப் போர்செய்ய யாரும் வாராத , வலிமை மிகுந்த சலந்தராசுரனின் தலையைச் சக்கராயுதத்தால் பிளந்து தேவர்கட்கு அருள்புரிந்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் உமிழ்ந்த இரத்தினங்களின் ஒளியால் கரிய இருள் நீங்கப் பெற்று , பொன்மலைபோல் பிரகாசிக்கின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

ஆரும் எதிராத - எவரும் தன்னோடு சண்டைக்கு எதிராத , வலியாகிய - வலிமை பொருந்திய ( சலந்தராசுரனை ) ஆழி அதனால் - சக்கரத்தினால் , ஈரும் வகைசெய்து - அவன்தலையை அறுக்கும்படி செய்து , தேவர்களுக்கு அருள் புரிந்தவன் . ஊரும் அரவம் - ஊர்ந்து செல்லுகின்ற பாம்புகள் ; உமிழ்ந்தவை - உமிழ்ந்தவைகளாகிய , ஒளி கொள் மாமணி - ஒளியைக் கொண்ட சிறந்த இரத்தினங்கள் , உலவி வரலால் - ஒளி உலாவி வருதலினால் , கார் இருள் கடிந்து - கரிய இருளை ஓட்டி , கனகம் என - பொன்மலையைப் போல , விளங்கு - விளங்குகின்ற , காளத்திமலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

எரியனைய சுரிமயி ரிராவணனை யீடழிய எழில்கொள்விரலால்
பெரியவரை யூன்றியருள் செய்தசிவன் மேவுமலை பெற்றிவினவில்
வரியசிலை வேடுவர்க ளாடவர்க ணீடுவரை யூடுவரலால்
கரியினொடு வரியுழுவை யரியினமும் வெருவுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

நெருப்புப்போல் சிவந்த சுருண்ட முடிகளையுடைய இராவணனின் வலிமை அழியுமாறு , தன் அழகிய காற்பெருவிரலை ஊன்றிப் பெரிய கயிலைமலையின் கீழ் அவனை அழுத்தி , பின் அருள்செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நீண்ட வில்லேந்திய வேடர்கள் நெடிய மலையினூடே வருவதால் , யானைகளும் , வரிகளையுடைய புலிகளும் , சிங்கக் கூட்டங்களும் அஞ்சுகின்ற திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

சுரி - சுரிந்த , எரி அனைய மயிர் - அக்கினியைப் போன்ற செம்பட்டை மயிர்களையுடைய ( இராவணனை - வலிமை அழியும்படி ). பெரிய வரை ஊன்றி - பெரிய மலையின் அடியில் அழுத்தி , அருள் செய்த சிவன் - மீண்டும் அவனுக்கே அருள் செய்த சிவன் ( மேவும் ). மலை - மலையையும் , பெற்றி - அதன் சிறப்பையும் வினவின் - வினவினால் ( முறையே ) வரிய - நெடிய , சிலை - வில்லை யேந்திய , வேடுவர்கள் ஆடவர்கள் - வேட்டுவ ஆண் மக்கள் , நீடுவரை யூடு - நெடிய மலையின் வழியாக , வரலால் - வருவதால் , வரி - கீற்றுக்களையுடைய , உழுவையும் - புலியும் , அரியினமும் - சிங்கக் கூட்டமும் ( யானைகளோடு ) வெருவு - அஞ்சுகின்ற காளத்திமலை . மலை , பெற்றி - எதிர் நிரனிறை . பெற்றி , ` கரியினொடு வெருவு ` என்பதனாலும் , மலை - காளத்திமலை என்பதனாலும் கொள்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

இனதளவி லிவனதடி யிணையுமுடி யறிதுமென விகலுமிருவர்
தனதுருவ மறிவரிய சகளசிவன் மேவுமலை தன்னை வினவில்
புனவர்புன மயிலனைய மாதரொடு மைந்தரு மணம்புணருநாள்
கனகமென மலர்களணி வேங்கைக ணிலாவுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் இவன் திருவடியும் , திருமுடியும் அறியவேண்டும் என்று தமக்குள் மாறுபட்ட திருமாலும் , பிரமனும் முனைந்து தேடியும் அறிவதற்கு அரியவனாய் விளங்கியவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருக்கும் மலை , தினைப்புனத்திலுள்ள வேடுவர்கள் மயிலொத்த சாயலுடைய பெண்களை மைந்தர்களுக்கு மணம் செய்விக்கும் நாளில் பொன் போன்ற மலர்களைப் பூத்து அழகிய வேங்கைகள் விளங்கும் திருக்காளத்திமலையாகும் .

குறிப்புரை :

இ ( ன் ) னது அளவில் - குறிப்பிட்ட இந்தக் கால எல்லைக்குள் . ( இவனது அடியும் முடியும் ) அறிதும் - அறிவோம் , இகலும் - மாறுபட்ட . சகள சிவன் - திருவுருவுடைய சிவன் , புனவர் - தினைப்புனத்திலுள்ளவர்களாகிய வேடுவர்கள் , மயில் அனைய - மயிலையொத்த . மாதருடன் - பெண்களோடு , மைந்தரும் , ஆட வரும் , மணம் புணரும் நாள் - மணம் புணர்விக்கும் நாளில் . அணி வேங்கை - வேங்கை மரங்களின் வரிசை . கனகம் என - தங்கத்தைப் போல , மலர்கள் - பூக்களால் , நிலாவு - விளங்குகின்ற காளத்திமலை . வேங்கை பூத்தலால் மணம் செய்காலம் இது வென உணரும் மரபு கூறியவாறு . இறைவன் வடிவம் சகளம் , நிஷ்களம் , சகள நிஷ்களம் என மூன்று . சகளம் - மான் , மழு , சதுர்ப்புசம் , சந்திரசூடம் முதலிய உருவத்தோற்றம் . நிஷ்களம் - அருவத்தோற்றம் . சகள நிஷ்களம் - உரு அருவத்தோற்றம் - சிவலிங்க வடிவம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

நின்றுகவ ளம்பலகொள் கையரொடு மெய்யிலிடு போர்வையவரும்
நன்றியறி யாதவகை நின்றசிவன் மேவுமலை நாடிவினவில்
குன்றின்மலி துன்றுபொழி னின்றகுளிர் சந்தின்முறி தின்றுகுலவிக்
கன்றினொடு சென்றுபிடி நின்றுவிளை யாடுகா ளத்திமலையே.

பொழிப்புரை :

நின்று கொண்டே கவளமாக உணவு உண்ணும் சமணர்களும் , உடம்பில் போர்த்த போர்வையுடைய புத்தர்களும் தனது பேரருளை அறியாவண்ணம் விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் மலை , நெருங்கிய சோலைகளில் உள்ள குளிர்ந்த சந்தனத் தழைகளைத் தம் கன்றுகளுடன் சென்று தின்று பெண் யானைகள் விளையாடுகின்ற திருக்காளத்தி மலையாகும் .

குறிப்புரை :

நின்று - நின்று கொண்டே , கவளம் பல கொள் - பல கவளங்களை யுண்ணுகின்ற , கையரொடு - கையையுடைய சமணர்களுடன் . மெய்யில் இடு - உடம்பில் போர்த்த , போர்வையரும் - போர்வையை உடையவர்களாகிய புத்தர்களும் , நன்றி - தனது அனந்த கல்யாண குணங்களை , அறியாதவகை - தெரியாத விதம் ; நின்ற - அவர்களை மறைத்து நின்ற . ( சிவன் மேவும் மலையை ) நாடி - ஆராய்ந்து , வினவில் - கேட்பீர்களே யானால் , பிடி - பெண் யானைகள் ; குன்றில் - மலையில் , துன்று - நெருங்கிய , பொழில் - சோலையில் , நின்ற - உள்ள , மலிகுளிர் - மிக்க குளிர்ச்சியாகிய , சந்தின் முறி - சந்தனத் தழைகளை , கன்றினொடு தின்று - தமது கன்றினுடனே தின்று , குலவி - மகிழ்ந்து திரிந்து , விளையாடுகின்ற காளத்திமலை , கையர் - அற்பர் என இரு பொருளும் கொள்க . மலைவளம் கூறியது : தன்மை நவிற்சியணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

காடதிட மாகநட மாடுசிவன் மேவுகா ளத்திமலையை
மாடமொடு மாளிகைக ணீடுவளர் கொச்சைவய மன்னுதலைவன்
நாடுபல நீடுபுகழ் ஞானசம் பந்தனுரை நல்லதமிழின்
பாடலொடு பாடுமிசை வல்லவர்க ணல்லர்பர லோகமெளிதே.

பொழிப்புரை :

சுடுகாட்டை அரங்காகக் கொண்டு ஆடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற காளத்திமலையைப் போற்றி , மாடமாளிகைகள் நீண்டு ஓங்கி வளர்ந்துள்ள கொச்சைவயம் என்னும் சீகாழியின் நிலைபெற்ற தலைவனும் , பலநாடுகளிலும் பரவிய புகழையுடையவனுமாகிய ஞானசம்பந்தன் நல்ல தமிழில் அருளிய இப்பாடல்களை இசையுடன் ஓத வல்லவர்கள் சிறந்தவர்களாவர் . அவர்கள் சிவலோகம் அடைதல் எளிதாகும் .

குறிப்புரை :

காடு ( அது ) மயானம் , இடமாக - அரங்காக , நடம் ஆடு - கூத்தாடுகின்ற சிவன் , நீடுவளர் - மிக உயர்ந்த : கொச்சை வயம் - சீகாழியில் , மன்னு - நிலைபெற்ற தலைவனாகிய : நாடுபல - பல நாடுகளிலும் , நீடு புகழ் - சென்று பரவிய , புகழையுடைய , ( ஞான சம்பந்தன் ) உரை - பாடிய . பாடலொடு பாடும் இசை - பாடலொடு இசைத்துப் பாடும் இசையில் வல்லவர்கள் . நல்லர் - சிறந்தவர்கள் ஆவார்கள் . ( அவர்களுக்கு ) பரலோகம் - சிவலோகம் . எளிது - அடைவதற்கு எளிதாகும் . பிறர் அடைவதற்கு அரியதாயினும் என்பது இசையெச்சம் .
சிற்பி