திருமயிலாடுதுறை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

ஏனவெயி றாடரவொ டென்புவரி யாமையிவை பூண்டிளைஞராய்க்
கானவரி நீடுழுவை யதளுடைய படர்சடையர் காணியெனலாம்
ஆனபுகழ் வேதியர்க ளாகுதியின் மீதுபுகை போகியழகார்
வானமுறு சோலைமிசை மாசுபட மூசுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் பன்றியின் கொம்பும் , படமெடுத்து ஆடும் பாம்பும் , எலும்பும் , வரிகளையுடைய ஆமையோடும் அணிந்து , இளைஞராய் , காட்டில் வாழும் , வரிகளையுடைய புலித் தோலை ஆடையாக உடுத்தவர் . படர்ந்து விரிந்த சடையுடைய அச்சிவ பெருமானைக் கண்டு தரிசிப்பதற்குரிய இடம் , புகழ்மிக்க அந்தணர்கள் வளர்க்கும் வேள்வியிலிருந்து எழும்புகை , அழகிய தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலை மீது அழுக்குப்படப் படியும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஏன எயிறு - பன்றியின் கொம்பும் . ஆடு அரவொடு - ஆடும் பாம்பும் . என்பு - எலும்பும் . வரி - வரிகளையுடைய . ஆமை - ஆமையோடும் . இவை - ( ஆகிய ) இவற்றை . பூண்டு - அணிந்து . இளைஞராய் - வாலிபராகி . ( சதாசிவமூர்த்தத் தியானம் பதினாறு வயதினராகப் பாவிக்கச் சொல்வது காண்க .) கானம் - காட்டில் வாழும் . வரி - கீற்றுக்களையுடைய . நீடு - நெடிய . உழுவை அதள் - புலித்தோலை . உடைய - ஆடையாக உடைய . படர் சடையர் - படர்ந்த சடையை உடையவராகிய சிவபெருமானது . காணி - உரிய இடம் எனலாம் . ஆன புகழ் - சிறந்த புகழையுடைய . வேதியர்கள் ( செய்யும் ) ஆகுதியின் மீது - வேள்வியில் ( கிளம்பும் ) புகை - புகையானது . போகி - மேற்சென்று . அழகார் - அழகு மிகுந்த . வானம் உறு - தேவலோகத்தில் உள்ள . சோலைமிசை - கற்பகச் சோலையின் மீது . மாசுபட - அழுக்கு உண்டாக . மூசு - மூடுகின்ற மயிலாடுதுறை .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

அந்தண்மதி செஞ்சடைய ரங்கணெழில் கொன்றையொ டணிந்தழகராம்
எந்தமடி கட்கினிய தானமது வேண்டிலெழி லார்பதியதாம்
கந்தமலி சந்தினொடு காரகிலும் வாரிவரு காவிரியுளால்
வந்ததிரை யுந்தியெதிர் மந்திமலர் சிந்துமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த சிவந்த சடையையுடையவர் . அச்சடையிலே அழகிய கொன்றை மாலையை அணிந்த அழகரான எம் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இனிய இடம் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் . அத்திருத்தலமானது மணம் கமழும் சந்தனமரங்களோடு , கரிய அகில் மரங்களையும் வாரிக் கொண்டு வரும் காவிரியின் அலைகள் தம்மேல் நீர்த்திவலை வீசுவதால் , அதனைக் கோபித்து அதற்கு எதிராக , கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் மலர்களை வீசுகின்ற தன்மையுடன் திகழ்வதாகும் .

குறிப்புரை :

அந்தண்மதி - அழகிய குளிர்ந்த சந்திரனை அணிந்த . ( செஞ்சடையர் ). அங்கண் - அந்தச் சடையினிடத்தில் . எழில் - அழகிய . கொன்றையொடு - கொன்றை மாலையோடு . அணிந்து - சூடி . அழகராம் - அழகராகிய . எந்தம் அடிகட்கு - எமது கடவுளாகிய சிவபெருமானுக்கு . இனிய - விருப்பமான . தானம் அது - இடமாவது . வேண்டில் - எது என அறிய வேண்டுவீரேல் , எழிலார் பதியதாம் ; அழகு மிக்க பதி அது ஆகும் . ( மயிலாடுதுறை ) கந்தம் மலி - வாசனை மிகுந்த . சந்தினொடு - சந்தன மரங்களோடு . கார் அகிலும் - கரிய அகில் மரங்களையும் . வாரிவரு - வாரிக்கொண்டு வருகின்ற . காவிரி உள் - காவிரி நதியில் . வந்ததிரை - வந்த அலைகள் . உந்தி - தம்மேல் நீர்த்திவலை வீசுவதால் . எதிர - அதற்கு எதிராக . மந்தி - கரையோரத்துச் சோலைகளிலுள்ள குரங்குகள் . மலர் சிந்து - மலர்களை வீசுகின்ற . மயிலாடுதுறை . தம்மீது திவலை சிந்திய காவிரியைக் கோபித்து , மந்திகள் அதற்கு எதிராக மலர்களை வீசுகின்றன எனத் தலத்தின் வளம் கூறியவாறு . உந்தி - உந்த . வினையெச்சத்திரிபு .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

தோளின்மிசை வரியரவ நஞ்சழல வீக்கிமிகு நோக்கரியராய்
மூளைபடு வெண்டலையி லுண்டுமுது காடுறையு முதல்வரிடமாம்
பாளைபடு பைங்கமுகு செங்கனி யுதிர்த்திட நிரந்துகமழ்பூ
வாளைகுதி கொள்ளமடல் விரியமண நாறுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் , தோளின்மீது வரிகளையுடைய பாம்பு நஞ்சை உமிழுமாறு , அதனை இறுக அணிந்தவர் . எண்ணுதற்கு அரியவராய் விளங்குபவர் . மூளை நீங்கிய பிரமகபாலத்தில் பலியேற்று உண்டு சுடுகாட்டில் வசிப்பவர் . எப்பொருட்கும் முதல்வரான அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , காவிரியிலுள்ள வாளைமீன்கள் கரையோரங்களிலுள்ள பாளைபொருந்திய பசிய கமுக மரங்களில் பாய , அவை சிவந்த பழங்களை உதிர்க்க , அதனால் பூ இதழ்கள் விரிய நறுமணம் கமழும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

தோளின் மிசை - தோளின் மீது . வரி அரவம் - நெடிய பாம்புகளை . நஞ்சு அழல - விஷத்தைக் கக்க . வீக்கி - கட்டி . மிகு - மிகுந்த . நோக்கு அரியராய் - அரிய அழகுடையவராய் . மூளைபடு - மூளையிருந்த . வெண் தலையில் - வெள்ளிய மண்டையோட்டில் ( உண்டு ). முதுகாடு உறையும் - சுடுகாட்டில் வசிக்கும் . முதல்வர் இடமாம் . வாளை குதி கொள்ள - வாளை மீன்கள் தாவ . ( அதனால் ). பாளைபடு - பாளை பொருந்திய . பைங்கமுகு - பசிய கமுகு மரங்கள் . செங்கனி - சிவந்த பழங்களை . உதிர்த்திட - உதிர்க்க , அதனால் நிரந்து - பரவி . கமழ் - மணக்கும் . பூமடல் - கோட்டுப்பூ முதலிய மலர்களின் இதழ்கள் . விரிய - விரிவதனால் . மணம் நாறும் ( மயிலாடுதுறை .) உதிர்த்திட காரணகாரியப் பொருட்டு . குதிகொள்ள - காரணப் பொருட்டு .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

ஏதமில ரரியமறை மலையர்மக ளாகியவி லங்குநுதலொண்
பேதைதட மார்பதிட மாகவுறை கின்றபெரு மானதிடமாம்
காதன்மிகு கவ்வையொடு மவ்வலவை கூடிவரு காவிரியுளால்
மாதர்மறி திரைகள்புக வெறியவெறி கமழுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் எவ்விதக் குற்றமுமில்லாதவர் . அரிய வேதங்களை அருளிச் செய்து அவற்றின் பொருளாகவும் விளங்குபவர் . மலையரசன் மகளான , ஒளி பொருந்திய வளைந்த நெற்றியையுடைய உமாதேவியின் அகன்ற மார்பு தன் இடப்பகுதியாக உறைகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , ஆரவாரித்து வரும் அலைகள் மூலம் மல்லிகை முதலிய நறுமணமலர்கள் கூடிவரும் காவிரியில் நீராட மாதர்கள் புக , மணமற்ற பொருள்களும் மணம் கமழப்பெறும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அரிய மறை ஏதமிலர் - அரிய வேதங்களில் சொல்லப் படுகின்ற நிஷ்களங்கர் . மலையர் மகளாகிய - மலையரனுக்கும் , மலையத்துவசபாண்டியனுக்கும் மகளாகிய . விலங்குநுதல் - வளைந்த புருவத்தையுடைய . பேதை - உமாதேவியாரின் . தடம் - விசாலமான ( மார்பு ) காதல் - விருப்பம் . கவ்வை - ஓசை . மவ்வல் - மல்லிகை முதலாகிய நறுமண மலர்கள் . கூடிவரு - சேர்ந்து வருகின்ற . காவிரியுள் - காவிரியில்வரும் . திரைகள் - அலைகள் . புக - பாய்வதால் . வெறிய - மணமற்ற மற்றைப் பொருள்களும் . வெறி கமழும் - மணம் வீசப்பெற்ற ( மயிலாடுதுறை ). மலையர் என்ற பன்மையால் , இமயமலைக்குரியார் , பொதியமலைக்குரியார் ஆம் இருவரையும் கொள்க . காவிரிச் சிறப்பு : வீறுகோளணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பூவிரி கதுப்பின்மட மங்கையர கந்தொறு நடந்துபலிதேர்
பாவிரி யிசைக்குரிய பாடல்பயி லும்பரமர் பழமையெனலாம்
காவிரி நுரைத்திரு கரைக்குமணி சிந்தவரி வண்டுகவர
மாவிரி மதுக்கிழிய மந்திகுதி கொள்ளுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

மலர்ந்த பூக்களைக் கூந்தலில் சூடியுள்ள , தாருகாவனத்து முனிபத்தினிகளின் இல்லங்கள்தோறும் சென்று பிச்சையெடுத்துப் பண்ணோடு கூடிய பாடல்களை இசைக்கும் சிவபெருமான் மிகப் பழமையானவர் . காவிரியின் அலைகள் இரு கரைகளிலுமுள்ள சோலைகளில் இரத்தினங்களைச் சிதற , அதனால் அஞ்சி மந்திகள் குதிக்க , மரக்கிளைகளில் மோதி , மாமரத்தில் கட்டப்பட்ட தேன்கூடுகள் கிழியத் தேன் சிந்த , அதனை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளமிக்க திருமயிலாடுதுறையில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றார் .

குறிப்புரை :

பூவிரி - மலர்கள் விரிந்த . கதுப்பின் - கூந்தலையுடைய , மடமங்கையர் - இளம்பெண்கள் . அகம்தொறும் நடந்து - வீடுதோறும் சென்று , பலிதேர் - பிச்சைஎடுக்கும் , பாவிரி - பாக்கள் விரிந்த , இசைக்குரிய - இராகத்திற்கு ஏற்ற , பாடலொடுபயிலும் - பாடல்களைப் பாடும் . பரமர் - சிவபெருமானின் . பழமை எனலாம் - பழமையாகிய பதி என்று சொல்லலாம் . ( பழமை - பண்பாகுபெயர் ) காவிரி . நுரைத்து - நுரையையுடையதாகி . இருகரைக்கும் - இருபாலும் உள்ள ஆற்றங்கரைச் சோலைகளில் . மணிசிந்த - இரத்தினங்களைச் சிதற ( அதற்கு அஞ்சி மந்தி குதிகொள்ளும் மயிலாடுதுறை ). வண்டு கவர - வண்டுகள் கவர்ந்துண்ணுமாறு . மா - மரங்களில் . விரி - விரிவாகத் தொடுக்கப்பட்ட . மது - தேன் . இறால் ( தேன்கூடு ) கள் கிழிய - கிழியும்படி , மந்தி குதிகொள்ளும் - குரங்குகள் குதித்துப்பாயும் . மயிலாடுதுறை . காவிரி மணி சிதற , ( அஞ்சி ) மந்தி குதிகொள்ள ( அதனால் ) மரக்கிளைகள் மோதி இறால்கிழிய - அதை வண்டுகள் கவர்ந்துண்ணும் வளம்மிக்க மயிலாடுதுறை என்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

கடந்திகழ் கருங்களி றுரித்துமையு மஞ்சமிக நோக்கரியராய்
விடந்திகழு மூவிலைநல் வேலுடைய வேதியர் விரும்புமிடமாம்
தொடர்ந்தொளிர் கிடந்ததொரு சோதிமிகு தொண்டையெழில் கொண்டதுவர்வாய்
மடந்தையர் குடைந்தபுனல் வாசமிக நாறுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

சிவபெருமான் மதம் பொருந்திய கரிய யானையின் தோலை உரித்து உமாதேவி அஞ்சுமாறு போர்த்திக் கொண்டவர் . மனத்தால் எண்ணுதற்கு அரியவர் . பகைவர்கட்குக் கேடு விளைவிக்கும் மூவிலைச் சூலம் கொண்டவர் . வேதங்களை அருளிச் செய்து வேதப்பொருளாகவும் விளங்குபவர் . அப்பெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இடமாவது ஒளிர்கின்ற மேனியும் , கொவ்வைப் பழம் போல் அழகிய சிவந்த வாயும் கொண்ட தேவமகளிர் நீரைக் குடைந்து ஆடுவதால் நீர் நறுமணம் கமழும் சிறப்புடைய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கடந்திகழ் - மதம் மிகுந்த . கருங்களிறு - கரிய யானையை . உரித்து நோக்கு அரியராய் - அரிய அழகு உடையராய் , விடம் திகழும் - விடம் பூசிய . மூவிலை நல்வேல் உடைய - நல்ல மூன்று இலை போலும் வேலையுடைய . வேதியர் - வேதத்தின் பொருளாய் உள்ள சிவபெருமான் . கிடந்தது - மேனியில் தங்கியதாகி , ஒரு - ஒப்பற்ற , சோதி - ஒளி , தொடர்ந்து - பற்றி . ஒளிர் பிரகாசிக்கின்ற , தொண்டை - கொவ்வைப் பழத்தின் . மிகுஎழில் - மிகுந்த அழகைக் கொண்ட . துவர்வாய் - சிவந்த வாயையுடைய . மடந்தையர் - தேவ மகளிர் . குடைந்தபுனல் - நீராடிய தண்ணீர் . மிகநாறும் ( மிகவாசனை ) மணக்கும் . மயிலாடுதுறை ( உடலில் ) சோதியுடைய மடந்தையர் என்றமையால் - தேவ மடந்தையரென்றும் , அவர் ஆடுவதால் - புனல் முன்னையினும் மணம் மிக்கதென்றும் பொருள் கொள்ளக்கிடக்கின்றது . மூவிலைய வேல் - சூலம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

அவ்வதிசை யாருமடி யாருமுள ராகவருள் செய்தவர்கண்மேல்
எவ்வமற வைகலு மிரங்கியெரி யாடுமெம தீசனிடமாம்
கவ்வையொடு காவிரி கலந்துவரு தென்கரை நிரந்துகமழ்பூ
மவ்வலொடு மாதவி மயங்கிமண நாறுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

அந்தந்தத் திக்குகளிலுள்ள எல்லா அடியவர்களும் நல்ல வண்ணம் வாழும் பொருட்டு அருள்செய்து , அவர்களுடைய வினைகள் நீங்க நாள்தோறும் இரங்கித் தீயேந்தி ஆடுகின்ற எம் இறைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , ஆரவாரத்தோடு வரும் காவிரி - மணமிக்க மல்லிகை , மாதவி முதலான மலர்களைத் தள்ளிவர நறுமணம் கமழும் அதன் தென்கரையிலுள்ள திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அவ்வதிசையாரும் - ( அவ் . அ . திசையாரும் ). அந்தந்தத் திக்குகளில் உள்ள ஏனைமாந்தரும் . உளர் ஆக - நன்றாக வாழும் பொருட்டு , அவர்கள்பால் உள்ள . எவ்வம்அற - வினைகள் நீங்க . வைகலும் - நாடோறும் . இரங்கி அருள்செய்து , எரி ஆடும் - அக்கினியில் ஆடுகின்ற . எமது ஈசன் இடமாம் . கவ்வையொடு கலந்து காவிரி வரும் தென்கரையில் கமழ்பூ மவ்வலொடு மாதவி மயங்கி மணம் நாறும் மயிலாடுதுறை எனக் கூட்டுக . கவ்வை - ஆரவாரம் . மவ்வல் - முல்லை . மாதவி - ஒரு வகை மரவிசேடம் . மடங்கி - கலந்து . நிரந்து - பரவி . அவ்வத்திசை - சந்தம் நோக்கி வலிமிகாதாயிற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

இலங்கைநகர் மன்னன்முடி யொருபதினொ டிருபதுதொ ணெரியவிரலால்
விலங்கலி லடர்த்தருள் புரிந்தவ ரிருந்தவிடம் வினவுதிர்களேல்
கலங்கனுரை யுந்தியெதிர் வந்தகய மூழ்கிமலர் கொண்டுமகிழா
மலங்கிவரு காவிரி நிரந்துபொழி கின்றமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

இலங்கை மன்னனான இராவணனின் பத்து முடிகளையும் , இருபது தோள்களையும் நெரியும்படி தன்காற் பெருவிரலைக் கயிலைமலையில் ஊன்றி அடர்த்துப் பின் அவனுக்கு அருள்புரிந்தவர் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , கலங்கலோடு நுரையைத் தள்ளி , எதிரேயுள்ள குளத்தில் பாய்ந்து அங்குள்ள மணமிக்க மலர்களை அடித்துக் கொண்டு களிப்புடன் சுழித்து வருகின்ற காவிரியாறு பாய்வதால் வளமிக்க திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

( இலங்கை நகர் மன்னன் முடியொருபதினொடு இருபது ) தோள் நெரிய - தோள்கள் அரைபடும்படி . விலங்கலில் - கைலைமலையில் . அடர்த்து - நெருக்கி , அருள்புரிந்தவன் . வினவுதிர்களேல் - கேட்பீர்களேயானால் , கலங்கல் நுரை உந்தி - கலங்கலோடு நுரையைத் தள்ளி . எதிர் வந்த - எதிரேயுள்ள . கயம் மூழ்கி - குளத்தில் பாய்ந்து , மலர்கொண்டு - அங்குள்ள மலர்களை அடித்துக்கொண்டு , ( அதனால் ) மகிழ்ந்து , மலங்கி வரு - சுழித்து வருகின்ற , காவிரியாறு , நிரந்து - பரவி . பொழிகின்ற - வளம் கொழிக்கின்ற , மயிலாடுதுறை . வந்த - உள்ள என்னும் பொருள் தந்து நின்றது . ` வான் வந்த தேவர்களும் மாலயனோடிந்திரனும் ` என்புழிப்போல ( தி .8 திருவம்மானை . 4). தோள் - இசை நோக்கிக் குறுக்கல் விகாரமுற்றது . மேல்வீழிமிழிலைப் ( தி .3 ப .85) பதிகத்தும் காண்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

ஒண்டிறலி னான்முகனு மாலுமிக நேடியுண ராதவகையால்
அண்டமுற வங்கியுரு வாகிமிக நீண்டவர னாரதிடமாம்
கெண்டையிரை கொண்டுகெளி றாருட னிருந்துகிளர் வாயறுதல்சேர்
வண்டன்மணல் கெண்டிமட நாரைவிளை யாடுமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

மிகுந்த வலிமையுடைய பிரமனும் , திருமாலும் தேடியும் உணரமுடியாவண்ணம் , ஆகாயம்வரை அளாவி நெருப்புப் பிழம்பாய் நீண்டு நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , கெண்டைமீனை இரையாக உண்டு , கெளிறு , ஆரல் முதலிய மீன்கள் விளங்குகின்ற ஆற்றின் கரையிலுள்ள நாரை , தண்ணீர் அறுத்தலால் உண்டான வண்டல் மண்ணைக் கிளறி விளையாடும் திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஒண்திறலின் - மிக்க வலிமையுடைய . நான்முகனும் , மாலும் , மிகநேடி - மிகவும்தேடி , உணராத வகையால் - அவர்கள் அறியாத வண்ணம் , அண்டமுற - ஆகாயமளவும் , அங்கி உருவாகி - நெருப்பின் வடிவாகி , ( மிக நீண்ட ) அரனாரது இடமாம் - சிவபெருமானது இடமாகும் . மடநாரை - இளம் நாரைகள் . கெண்டை இரை கொண்டு - கெண்டை மீனை இரையாக உண்டு , கெளிறு ஆர் உடன் இருந்து - கெளிற்று மீன்களோடும் ஆரல் மீன்களோடும் இருந்து , கிளர் - விளங்குகின்ற . வாய் - கரையினிடத்தில் . அறுதல்சேர் - தண்ணீர் அறுத்தலால் உண்டாகிய . வண்டல் மணல் - வண்டல் மணலை . கெண்டி - கிளறி - விளையாடும் மயிலாடுதுறை . வாய் - ஆற்றோரம் ` காவிரியதன் வாய்க்கரை ` என்ற சுந்தரமூர்த்திகள் தேவாரத்தாலும் அறிக . ( நமச்சிவாயத் திருப்பதிகம் ) ஆற்றோரம் தண்ணீரறுக்காமல் கட்டப்படும் அணையை - வாய்க்கணை , வாய்கணை . வாகணை என வழங்குப .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மிண்டுதிற லமணரொடு சாக்கியரு மலர்தூற்ற மிக்கதிறலோன்
இண்டைகுடி கொண்டசடை யெங்கள்பெரு மானதிட மென்பரெழிலார்
தெண்டிரை பரந்தொழுகு காவிரிய தென்கரை நிரந்துகமழ்பூ
வண்டவை திளைக்கமது வந்தொழுகு சோலைமயி லாடுதுறையே.

பொழிப்புரை :

துடுக்காகப் பேசுகின்ற சமணர்களும் , புத்தர்களும் பழித்துக்கூற , அவர்கள் அறிவிற்கு அப்பாற்பட்ட ஆற்றலுடையவனும் , இண்டைமாலை சூடிய சடைமுடி உடையவனுமான எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தெள்ளிய அலைகள் உடன் பாயும் காவிரியாற்றின் தென்கரையில் மணமிக்க பூக்களில் வண்டுகள் மூழ்கியுண்ண , தேன் வெளிப்பட்டு ஒழுகுகின்ற சோலைகளையுடைய அழகிய திருமயிலாடுதுறை என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

மிண்டுதிறல் - ஏமாற்றுகின்ற வலிமை மிக்க , ( அமணர் ஒடு ) சாக்கியரும் புத்தரும் . அலர்தூற்ற - பலரும் அறியும்படி , பழிக்க . மிக்க திறலோன் - அவர் அறிவுக்கு மேற்பட்ட ( எட்டாத ) வலிமையுடையோன் . இண்டை குடிகொண்ட - இண்டை மாலை குடி கொண்ட ( சடையையுடைய எங்கள் பெருமான் அது இடம் .) தெண் திரை பரந்து ஒழுகு - தெள்ளிய அலைகள் பரவி ஓடிவருகின்ற . காவிரிய - காவிரியினுடைய , ( தென்கரை ) நிரைந்து - நிரம்பி , கமழ்பூ - மணக்கின்ற மலர்களில் , வண்டு அவை - வண்டுகள் திளைக்க - மூழ்கியுண்ண . மது - தேன் , வந்து - வெளிப்பட்டு , ஒழுகுகின்ற சோலை சூழ்ந்த மயிலாடு துறை . ஒழுகு - ( காவிரி ) நேர்மையாய் ஓடிவருகின்ற , ஒழுகு - நேர்மை . ( தொல் - சொல் . உரி . )

பண் :சாதாரி

பாடல் எண் : 11

நிணந்தரு மயானநில வானமதி யாததொரு சூலமொடுபேய்க்
கணந்தொழு கபாலிகழ லேத்திமிக வாய்த்ததொரு காதன்மையினால்
மணந்தண்மலி காழிமறை ஞானசம் பந்தன்மயி லாடுதுறையைப்
புணர்ந்ததமிழ் பத்துமிசை யாலுரைசெய் வார்பெறுவர் பொன்னுலகமே.

பொழிப்புரை :

இறந்தார் உடலின் கொழுப்புப் பொருந்திய சுடுகாட்டில் , பூவுலகிலும் , வானுலகிலும் உள்ள வீரர் எவரையும் பொருட்படுத்தாத சிறப்புடைய சூலப்படையோடு , பேய்க்கூட்டங்கள் தொழ , பிரமகபாலத்தை ஏந்தியுள்ள சிவபெருமானின் திருவடிகளை வணங்கி மிக்க அன்புடன் , நறுமணமும் , குளிர்ச்சியும் பொருந்திய சீகாழியில் அவதரித்த வேதங்களின் உட்பொருளை நன்குணர்ந்த ஞானசம்பந்தன் , திருமயிலாடுதுறையைப் போற்றிப் பாடிய இத் தமிழ்ப்பாக்கள் பத்தினையும் இசையோடு பாடுகிறவர்கள் சொர்க்கலோகம் அடைவர் .

குறிப்புரை :

நிணந்தரு - இறந்தார் உடவின் கொழுப்புப் பொருந்திய , மயானம் - சுடுகாட்டில் , நிலம் , வானம் , மதியாததொரு சூலமொடு - பூவுலகிலும் , வானுலகிலும் உள்ள வீரரெவரையும் பொருட்படுத்தாததாகிய ஒரு சூலத்தோடு , பேய்க்கணம் தொழு - பேய்க்கூட்டம் தொழும் கபாலி . பிரமகபாலத்தை ஏந்தும் சிவ பெருமானது - கழல் ஏத்தி - திருவடியைத் துதித்து , மிக வாய்த்ததொரு காதன்மையினால் - மிகப் பொருந்திய ஒப்பற்ற அன்பினால் , மணம் தண் மலிகாழி - மணமும் குளிச்சியும் மிகுந்த சீகாழியில் ( அவதரித்த ) மறை - வேதங்களை உணர்ந்த . ஞானசம்பந்தன் - ( மயிலாடுதுறையில் புணர்ந்த தமிழ் ;) இசையால் உரை செய்வார் - இசையொடு பாடுகிறவர் . பொன்னுலகமே பெறுவார் - சொர்க்கலோகமே அடைவார்கள் . புணர்ந்த பிறவினை விகுதி குன்றியது .
சிற்பி