திருவைகாவூர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

கோழைமிட றாககவி கோளுமில வாகவிசை கூடும்வகையால்
ஏழையடி யாரவர்கள் யாவைசொன சொன்மகிழு மீசனிடமாம்
தாழையிள நீர்முதிய காய்கமுகின் வீழநிரை தாறுசிதறி
வாழையுதிர் வீழ்கனிக ளூறிவயல் சேறுசெயும் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவனைத் தவிர வேறு பற்றுக்கோடில்லாத ஏழையடியவர்கள் , கோழை பொருந்திய கழுத்து உடையராயினும் , பாடும் கவிகளைப் பொருளுணரும்படி நிறுத்திப் பாடாவிடினும் , தங்களால் இயன்ற இசையில் , பக்தியுடன் பாடுகின்ற பாடல்கள் எவையாய் இருந்தாலும் , அவற்றிற்கு மகிழ்கின்றவன் சிவபெருமான் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது தென்னை மரத்தின் முற்றிய காய்கள் கமுக மரத்தில் விழ , அதன் வரிசையான குலைகள் சிதறி வாழைக்குலையில் விழ , அவ்வாழை மரங்களினின்றும் உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் வயலில் ஊறி அதனைச் சேறாகச் செய்யும் வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

கோழை மிடறு ஆக - கோழைபொருந்திய கண்டம் ஆயினும் . கவிகோளும் இலவாக - பாடும் கவிகள் பொருள் கொள்ளும்படி நிறுத்திப் பாடுதலும் இல்லனவாயினும் , கூடும் வகையால் இசை - இசை இயன்ற அளவில் , ( ஏழை அடியார் அவர்கன் ) யாவை சொன்னசொல் - தன்னை அன்பினால் பாடின பாடல்கள் எவையாய் இருந்தாலும் . மகிழும் - அவற்றிற்கு மகிழ்கின்ற ( ஈசன் இடமாம் ) தாழை - தென்னைமரத்தின் . இளநீர் முதியகாய் - இளநீர்முற்றிய நெற்றுக்கள் . கமுகில் - கமுகமரத்தில் ( வீழ ) நிரைதாறுசிதறி - வரிசையான குலைகள் சிதறி ( வாழைக்குலையில் வீழ ) வாழை - அவ்வாழைமரங்களினின்றும் . உதிர்வீழ் - உதிர்ந்து வீழ்கின்ற கனிகள் . வயல் ஊறி - வயலில் ஊறி . சேறுசெய்யும் - அதனைச்சேறாகச் செய்கின்ற . திருவைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

அண்டமுறு மேருவரை யங்கிகணை நாணரவ தாகவெழிலார்
விண்டவர்த முப்புரமெ ரித்தவிகிர் தன்னவன் விரும்புமிடமாம்
புண்டரிக மாமலர்கள் புக்குவிளை யாடுவயல் சூழ்தடமெலாம்
வண்டினிசை பாடவழகார்குயின்மி ழற்றுபொழில் வைகாவிலே.

பொழிப்புரை :

வானளாவிய பெரிய மேருமலையை வில்லாகவும் , அக்கினியைக் கணையாகவும் , வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் கொண்டு , பகையசுரர்களின் அழகிய முப்புரங்களை எரியுண்ணும்படி செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , தாமரை மலர்களில் வண்டுகள் புகுந்து தேனுண்டு விளையாடி , வயல்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள குளங்களிலும் தேனுண்ட மகிழ்ச்சியில் இசைபாட , அதற்கேற்ப அழகிய குயில்கள் கூவுகின்ற சோலைகளையுடைய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

அண்டம் உறு - ஆகாயத்தை அளாவிய . மேருவரை - மேருமலை ( வில் ). அங்கி - கணை . அக்கினி - அம்பு . அரவு - ( அது ) பாம்பு . நாண் ( ஆக ) விண்டவர்தம் - பகைவர்களாகிய அசுரர்களின் . எழில் ஆர் முப்புரம் - அழகிய திரிபுரங்களையும் . எரித்த - எரியச் செய்த . விகிர்தன் - சிவபெருமான் . ( விரும்பும் இடம் ). வண்டு - வண்டுகள் . புண்டரிக மாமலர்கள் புக்கு விளையாடும் - சிறந்த தாமரை மலர்களில் புகுந்து விளையாடும் . வயல் - வயல்களிலும் . சூழ் - அவை சூழ்ந்த . தடம் - தடாகங்களில் எல்லாம் . இன்இசை பாட - இனிய சுதியைப்போல் பாட . அழகு ஆர் குயில் - அழகு மிகுந்த குயில்கள் . மிழற்று - அவற்றிற்கேற்பப் பாடுவதைப் போலக் கூவுகின்ற . பொழில் - சோலைகள் உடைய . ( வைகாவிலே ).

பண் :சாதாரி

பாடல் எண் : 3

ஊனமில ராகியுயர் நற்றவமெய் கற்றவை யுணர்ந்தவடியார்
ஞானமிக நின்றுதொழ நாளுமருள் செய்யவல நாதனிடமாம்
ஆனவயல் சூழ்தருமல் சூழியரு கேபொழில்க டோறுமழகார்
வானமதி யோடுமழை நீண்முகில்கள் வந்தணவும் வைகாவிலே.

பொழிப்புரை :

மனம் , வாக்கு , காயம் ஆகிய திரிகரணங்களால் செய்யப்படும் குற்றங்கள் இல்லாதவர்களாய் , நல்ல தவத்தை மேற்கொண்டு , பதிநூல்களை நன்கு கற்று , கேட்டுத் தெளிய உணர்ந்த அடியார்கள் ஞானத்தால் வணங்க , நாடோறும் அருள்செய்ய வல்ல சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நல்ல வயல் வளமும் அழகிய சந்திரனைத் தொடும்படி ஓங்கியுயர்ந்த மதில்களும் , மழைதரும் மேகங்கள் தவழும் சோலைகளும் விளங்குகின்ற திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

ஊனமிலராகி - யாதொரு குற்றமும் இல்லாதவராய் . நல்தவம் - நல்ல தவத்தை மேற்கொண்டு . மெய் - உண்மை நூல்களைக் கற்று , ( கேட்டு ), ( அவை உணர்ந்த அடியார்கள் ) ஞானம் மிக . நின்று தொழ - நின்று வணங்க , நாடோறும் அருள் செய்ய வல்ல நாதன் இடமாம் . ஆன வயல் - பொருந்திய வயல்களில் . மல் - ( மல்லல் ) வளங்கள் . சூழ்தரும் - நிறைந்திருக்கும் . சூழியருகு - நீர் நிலைகளின் பக்கங்களிலும் . பொழில்கள் தோறும் - சோலைகள் தோறும் . ( சந்திரனும் முகில்களும் ) வந்து . அணவும் - வந்து தவழும் வைகாவிலே .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இன்னவுரு வின்னநிற மென்றறிவ தேலரிது நீதிபலவும்
தன்னவுரு வாமெனமி குத்ததவ னீதியொடு தானமர்விடம்
முன்னைவினை போய்வகையி னான்முழு [ துணர்ந்துமுயல் கின்றமுனிவர்
மன்னவிரு போதுமரு வித்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவபெருமானை இன்ன உருவம் உடையவன் ; இன்ன நிறம் உடையவன் என்று உயிர்கள் தம் ஆன்ம போதத்தால் அறியமுடியாது . புண்ணியங்கள் பலவும் தனது உரு என்று சொல்லும்படி மிகுந்த தவக்கோலத்தை உடையவன் . அப்பெருமான் அருளோடு வீற்றிருந்தருளும் இடம் , முன்னை வினைகளெல்லாம் நீங்க , அவனை வணங்கும் நெறிகளை முறைப்படி முழுவதும் உணர்ந்து நிட்டைகூட முயல்கின்ற முனிவர்கள் காலை , மாலை என்ற இருவேளைகளிலும் சென்று தொழுது போற்றும் , வயல்வளம் பொருந்திய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இன்ன உரு - இன்னவடிவம் ( இன்ன நிறம் என்று ) அறிவதேல் அரிது - ஆன்மபோதத்தினால் அறிவதானால் அறிய முடியாது . நீதிபலவும் - பலவாகிய புண்ணியங்களெல்லாம் , ( தன்ன உருவு ஆண் என ) மிகுத்ததவன் - மிகுந்த தவக்கோலத்தையுடையவன் , நீதியொடு - அருளொடு . தான் அமர்வு இடம் - தான் விரும்புதலையுடைய இடமாகும் முன்னை வினை போய் - முற்பிறப்பில் செய்த வினைகள் நீங்க . வகையினால் - முறைமைப்படி முழுதுணர்ந்து - முழுவதும் அறிந்து , முயல்கின்ற - ( நிட்டை கூடுதற்கு ) முயல்கின்ற . முனிவர் - முனிவர்கள் . மன்ன - நிலைபெறும்படியாக . இருபோதும் - இருவேளையும் . மருவி - அடைந்து . தொழுதுசேரும் - தொழுது சேர்கின்ற , வயல் - வயல் வளம் பொருந்திய வைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

வேதமொடு வேள்விபல வாயினமி குத்துவிதி யாறுசமயம்
ஓதியுமு ணர்ந்துமுள தேவர்தொழ நின்றருள்செ யொருவனிடமாம்
மேதகைய கேதகைகள் புன்னையொடு ஞாழலவை மிக்கவழகார்
மாதவிம ணங்கமழ வண்டுபல பாடுபொழில். வைகாவிலே.

பொழிப்புரை :

வேதங்களை ஓதியும் , ஓதுவித்தும் , வேள்விகள் பல செய்தும் , விதிப்படி ஆறு சமயநூல்களைக் கற்றும் , உணர்ந்தும் உள்ள பூவுலகதேவர்கள் என்று போற்றப்படும் அந்தணர்கள் தொழ அவர்கட்கு அருள்செய்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , சிறந்த தாழைகள் , புன்னை , புலிநகக்கொன்றை மிகுந்துள்ளதும் , மிக்க அழகுடைய மாதவிக் கொடிகள் நறுமணம் கமழவும் வண்டுகள் பல பாடவும் விளங்கும் சோலைகள் சூழ்ந்ததுமாகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வேதமொடு - வேதத்தைக்கற்றதோடு , பலவாயின வேள்வி - பலவாகிய யாகங்களையும் , மிகுந்து - மிகச்செய்து . விதி - விதிப்படி . ஆறு சமயம் - ஆறுசமய நூல்களையும் . ஓதியும் - கற்றும் . ( உணர்ந்தும் ) உள - உள்ள . தேவர்தொழ - பூ தேவர்களாகிய அந்தணர் ( தொழ ) மேதகைய - மேன்மை தங்கிய . கேதகைகள் - தாழைகளும் . புன்னையொடு ஞாழல் - புன்னைமரத்தோடு புலிநகக் கொன்றைகளும் . மிகுந்த அழகோடு கூடிய . மாதவி - மாதவிக்கொடிகளும் ( மணங்கமழ ) வண்டு பல பாடும் ( சோலைசூழ்ந்த வைகாவில் ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

நஞ்சமுது செய்தமணி கண்டனமை யாளுடைய ஞானமுதல்வன்
செஞ்சடையி டைப்புனல்க ரந்தசிவலோகனமர் கின்றவிடமாம்
அஞ்சுடரொ டாறுபத மேழினிசை யெண்ணரிய வண்ணமுளவாய்
மைஞ்சரொடு மாதர்பல ருந்தொழுது சேரும்வயல் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவபெருமான் நஞ்சை அமுது போன்று உட்கொண்டவன் . நம்மை ஆட்கொள்கின்ற ஞானமுதல்வன் . சிவந்த சடையிலே கங்கையை ஒளித்த சிவலோக நாயகனாகிய அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அழகிய தீபச்சுடருடன் , பிரணவம் முதலாகிய பஞ்சாட்சரத்தைப் பொருளுணர்ந்து உச்சரித்து , ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களைப் பாடி , எண்ண முடியாத விதத்தில் ஆடவர்களோடு மகளிர்கள் பலரும் தொழுது வணங்கும் , வயல்வளமிக்க திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நஞ்சு - அமுதுசெய்த விடத்தை உண்டருளிய . மணிகண்டன் - நீலகண்டனும் , நமை - நம்மை . ஆளுடைய - ஆளாகவுடைய . ஞானம் - முதல்வன் . ஞானமே திருவுருவாகிய முதல்வன் . செஞ்சடையிடை - சிவந்த சடையினிடத்தில் . புனல்கரந்த - கங்கை நீரை ஒளித்த . சிவலோகன் - சிவலோக நாயகனுமாகிய சிவபெருமான் . அமர்கின்ற - தங்கும் ( இடமாம் ) அஞ்சுடரொடு - அழகிய தீப முதலியவற்றுடன் . ஆறுபதம் :- பஞ்சப்பிரம மந்திரங்கள் ஐந்தையும் , ஐந்தாகவும் , அங்க மந்திரம் ஆறினையும் ஒன்றாகவும்கொண்டு ஆறுபதம் என்றார் . இதற்கு வேறு பொருள் கூறுவாருமுளர் . ( பதம் - மந்திரம் ) ஏழிசை - ஏழுசுரங்களோடு பாடும் தோத்திரப் பாடல்களுடனும் . எண்ணரிய வண்ணம் உளவாய் - எண்ணமுடியாத விதம் உளவாக . மஞ்சரொடு - ஆடவர்களொடு ( மாதர் பலரும் ) தொழுது - வணங்கி . சேரும் - அடைகின்ற வயல்சூழ்ந்த திருவைகாவில் என்க . அஞ்சுடர் .... எண்ணரிய இவை குறிப்பாக இலக்கங்களை யுணர்த்துகின்றன . அதனால் இவை எண்ணலங்காரம் எனப்படும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

நாளுமிகு பாடலொடு ஞானமிகு நல்லமலர் வல்லவகையால்
தோளினொடு கைகுளிர வேதொழும வர்க்கருள்செய் சோதியிடமாம்
நீளவளர் சோலைதொறு நாளிபல துன்றுகனி நின்றதுதிர
வாளைகுதிகொள்ளமது நாறமலர் விரியும்வயல் வைகாவிலே.

பொழிப்புரை :

நாள்தோறும் பக்தியோடு தோத்திரப் பாடல்கள் பாடி , ஞானமலர்களான கொல்லாமை , அருள் , ஐம்பொறி அடக்கல் , பொறை , தவம் , வாய்மை , அன்பு , அறிவு இவை கொண்டு தோள்களும் , கைகளும் கூப்பித் தொழுபவர்கட்கு அருள் செய்கின்ற சோதிவடிவான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நீண்டு வளர்ந்த சோலைகளிலுள்ள தென்னைகளிலிருந்து முற்றிய நெற்றுக்கள் உதிர , அதனால் வாளைமீன்கள் துள்ளிப்பாய , அதனால் தேன்மணக்கும் மலர்கள் விரிய வயல்கள் சூழ்ந்த திருவைகாவூர் என்னும் திருத்தலம் ஆகும் .

குறிப்புரை :

நாளும் - நாடோறும் . மிகுபாடலொடு - மிகுந்த பாடலொடு . ஞானமிகும் - சிவஞானமிக்க . நல்லமலர் - நல்ல மலர்களோடு . தோளினொடு கைகுளிர - தோளும் கையும் குளிரும் படியாக . தொழுமவர்க்கு - வணங்குகின்றவர்களுக்கு . அருள்செய் - அநுக்கிரகம் பண்ணுகின்ற . சோதி இடமாம் - ஒளிவடிவானவனது இடமாகும் . நீளவளர்சோலை தொறும் - உயரமாக வளர்ந்த சோலைகள்தொறும் . நாளிபல - தென்னை மரங்கள் பலவற்றில் . நின்றது - நின்ற தாகிய . துன்றுகனி - அடர்த்தியான நெற்றுக்கள் . உதிர - உதிரும்படி , வாளை - வாளைமீன்கள் . குதிகொள்ள - துள்ளிப்பாய , ( அதனால் ) மதுநாற - தேன் மணக்கும்படி . மலர் விரியும் - மலர்கள் விரிகின்ற , வயல் - வயல்கள் சூழ்ந்த , வைகாவிலே .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

கையிருப தோடுமெய்க லங்கிடவி லங்கலையெ டுத்தகடியோன்
ஐயிருசி ரங்களையொ ருங்குடனெ ரித்தவழ கன்றனிடமாம்
கையின்மலர் கொண்டுநல காலையொடு மாலைகரு திப்பலவிதம்
வையகமெ லாமருவி நின்றுதொழு தேத்துமெழில் வைகாவிலே.

பொழிப்புரை :

இருபது கைகளும் , வலிமையான உடம்பும் துன்புறும்படி பெரிய கயிலைமலையைப் பெயர்த்த தீயோனான இராவணனின் பத்துத் தலைகளையும் ஒருங்கே நெரித்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இவ்வையகத்திலுள்ள அடியவர்கள் பலர் கையில் மலர் கொண்டு , காலையும் , மாலையும் தியானித்து , பக்தியுடன் பலவிதத் தோத்திரங்களைப் பாடி வணங்கிப் போற்றுகின்ற அழகிய திருவைகாவூர் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

விலங்கலை ( கயிலை ) மலையை ( எடுத்த ) கடியோன் - தீயோனாகிய இராவணன் , ( கை இருபதோடும் ) மெய் - உடம்பு . கலங்கிட - குழம்ப . ஐஇருசிரங்களை - பத்துத் தலைகளையும் , ஒருங்கு உடன் - ஒருசேர . நெரித்த - அரைத்த . ( அழகன் தன் இடம் ஆம் ) வையகம் எல்லாம் - உலகம் முழுவதும் . மருவி - வந்து தங்கி . ந ( ல் ) ல காலையொடு - அதிகாலை வேளையிலும் . மாலை - மாலை வேளையிலும் . கருதி - தியானித்து , ( கையில் மலர் கொண்டு ) பல விதம் நின்று தொழுது ஏத்து - பலவிதமாக நின்று தொழுது துதிக்கும் . எழில் - அழகினையுடைய , வைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

அந்தமுத லாதிபெரு மானமரர் கோனையயன் மாலுமிவர்கள்
எந்தைபெரு மானிறைவ னென்றுதொழ நின்றருள்செ யீசனிடமாம்
சிந்தைசெய்து பாடுமடி யார்பொடிமெய் பூசியெழு தொண்டரவர்கள்
வந்துபல சந்தமலர் முந்தியணை யும்பதிநல் வைகாவிலே.

பொழிப்புரை :

இவ்வுலக ஒடுக்கத்திற்கும் , தோற்றத்திற்கும் நிமித்த காரணனான சிவபெருமான் , பிரமனும் , திருமாலும் தங்கள் செருக்கொழிந்து ` எம் தந்தையே ! தலைவனே ! இறைவனே ` என்று தொழுது போற்ற அவர்கட்கு அருள் செய்துவீற்றிருந்தருளும் இடமாவது , சிந்தித்துப் பாடும் அடியார்களும் , தன் மேனியிலே திருநீற்றைப் பூசியுள்ள தொண்டர்களும் நறுமணம் கமழும் மலர்களை ஏந்தி , வழிபடுவதற்கு ஒருவரையொருவர் முந்துகின்ற , நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .

குறிப்புரை :

அந்தம் ( இறுதியாம் எவற்றிற்கும் ) இறுதியானவனும் . முதல் ஆதி - முதலாம் எவற்றிற்கும் முதலானவனும் . பெருமான் - பெருமையையுடையவனும் . அமரர்கோனை - தேவர் தலைவனும் ஆகிய இறைவனை . ( அயனும் மாலும் இவர்கள் ). எந்தைபெருமான் - எமது தந்தையாகிய தலைவனே . இறைவன் - கடவுளே . ( என்று தொழ நின்று ). அருள்செய் - அவர்களுக்கு அருள்புரியும் ( ஈசன் இடம் ஆம் ) சிந்தைசெய்து - சிந்தித்து . ( பாடும் அடியார்களும் ). பொடி - திருநீற்றை . மெய்பூசி - உடம்பிற் பூசிக்கொண்டு . எழுதொண்டர் - வருகின்ற தொண்டர்களும் வந்து - பல சந்தம் மலர் - பலவித மலர்களைக் கொண்டு . முந்தி - ஒருவரின் ஒருவர் முற்பட்டு . அணையும் - சேரும் . பதி - தலம் , நல்வைகாவில் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

ஈசனெமை யாளுடைய வெந்தைபெரு மானிறைவ னென்றுதனையே
பேசுதல்செ யாவமணர் புத்தரவர் சித்தமணை யாவவனிடம்
தேசமதெ லாமருவி நின்றுபர வித்திகழ நின்றபுகழோன்
வாசமல ரானபல தூவியணை யும்பதிநல் வைகாவிலே.

பொழிப்புரை :

சிவபெருமானை எம்மை ஆட்கொள்ளும் தந்தை , தலைவன் , இறைவன் என்று போற்றுதல் செய்யாத சமணர்கள் , புத்தர்கள் இவர்களின் சித்தத்தில் புகாத அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , எல்லா தேசத்தாரும் கூடிநின்று போற்ற , நிலைத்த புகழுடைய அப்பெருமானை நறுமணமிக்க நல்மலர்களைத் தூவி வழிபட நற்கதிதரும் திருத்தலமாகிய திருவைகாவூர் ஆகும் .

குறிப்புரை :

பேசுதல் செயா - பேசாத , சித்தம் அணையா - மனத்திற் புகுதாத . அவனது - அத்தகையானது . ( இடம் ) தேசம் அது எலாம் - எல்லாத் தேசத்தினரும் , மருவிநின்று - பொருந்திநின்று , பரவி - துதித்து , திகழ நின்ற புகழோன் - புகழ் நிலைத்து விளங்குவோனாகிய சிவபெருமானை . வாசமலரான பல தூவி - வாசமிக்க பல மலர்களைத் தூவி ( ஆன சொல்லுருபு ) அணையும் - வந்து சேரும் பதியாகிய , நல்வைகாவில் , தேசமது எலாம் மருவிநின்று பரவி வாசமலரான பல தூவித் திகழநின்ற புகழோனையணையும் பதியெனக் கூட்டுக . ஆன - பூசைக்குரியவாகிய எனினும் ஆம் . ` பூத்தேர்ந் தாயன கொண்டு ` என முன்வந்தது . பல வகையான மலர் என்றும் கொள்க . அது ` பரந்து பல்லாய் மலர் இட்டு ` என்னும் திருவாசகக் ( தி .8) கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

முற்றுநமை யாளுடைய முக்கண்முதல் வன்றிருவை காவிலதனைச்
செற்றமலி னார்சிரபு ரத்தலைவன் ஞானசம் பந்தனு ரைசெய்
உற்றதமிழ் மாலையீ ரைந்துமிவை வல்லவ ருருத்திரரெனப்
பெற்றமர லோகமிக வாழ்வர்பிரி யாரவர்பெ ரும்புகழொடே.

பொழிப்புரை :

முழுவதுமாய் நம்மை ஆட்கொண்ட முக்கண்ணுடைய முதல்வனான சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருவைகாவில் என்னும் திருத்தலத்தைப் போற்றி , தன்னையடைந்தோர் வினைகளை அழிக்கும் சிரபுரத்தில் அவதரித்த தலைவனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ்ப்பாக்கள் பத்தினையும் ஓத வல்லவர்கள் உருத்திரர்களாகிச் சிவலோகத்தில் முத்தியின்பத்தில் இருந்து பிரியாது புகழுடன் வாழ்வர் .

குறிப்புரை :

செற்ற - மிகுத்த . ம ( ல்ல ) லின் - வளங்களால் , ஆர் - நிறைந்த ( செற்ற - தன்னையடைந்தோர் வினைகளை அழித்த , எனினும் ஆம் .) சிரபுரத்தலைவன் - சீகாழித் தலைவராகிய , ஞானசம்பந்தர் , உருத்திரர் எனப்பெற்று அமரலோக மிக உருத்திரர் ஆகி சிவலோகத்தில் . பெரும் புகழோடு - பெரிய புகழ்ச்சிக் குரியதாகிய முத்தியின்போடு , பிரியார் - நீங்காதவராகி மிக வாழ்வார் என்க . அமரன் - ( சாவாதவன் ) சிவபெருமான் ஒருவர்க்கேயுரியது . ` செத்துச் செத்துப் பிறப்பதே தேவென்று , பத்தி செய் மனப்பாறைகட்கேறுமோ ` என்பதும் ` சாவா மூவாச் சிங்கமே ` என்பதும் அப்பமூர்த்திகள் திருவாக்கு . ( திருக்குறுந்தொகை : திருத்தாண்டகம் ). ஆகையால் அமரலோகம் என்பது சிவலோகத்தைக் குறிக்கும் .
சிற்பி