திருமாகறல்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

விங்குவிளை கழனிமிகு கடைசியர்கள் பாடல்விளை யாடலரவம்
மங்குலொடு நீள்கொடிகண் மாடமலி நீடுபொழின் மாகறலுளான்
கொங்குவிரி கொன்றையொடு கங்கைவளர் திங்களணி செஞ்சடையினான்
செங்கண்விடை யண்ணலடி சேர்பவர்கள் தீவினைகள் தீருமுடனே.

பொழிப்புரை :

நன்றாக இஞ்சி விளையும் வயலில் பணிசெய்யும் பள்ளத்தியர்களின் பாடலும் , ஆடலுமாகிய ஓசை விளங்க , மேகத்தைத் தொடும்படி நீண்ட கொடிகளும் , உயர்ந்த மாடமாளிகைகளும் , அடர்ந்த சோலைகளும் கொண்ட திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் சிவபெருமான் . நறுமணம் கமழும் கொன்றை மலரும் , கங்கையும் , பிறைச்சந்திரனும் அணிந்த சிவந்த சடையை உடையவனும் , சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தை உடையவனுமான அப்பெருமானின் திருவடிகளை இடைவிடாது நினைப்பவர்களின் தீவினைகள் உடனே தீரும் .

குறிப்புரை :

விங்கு விளைகழனி - இஞ்சி விளையும் கழனியிலே , மிகு கடைசியர்கள் - மிக்க பள்ளத்தியர்கள் , பாடல் விளையாடல் - பாடலும் விளையாடலுமாகிய , அரவம் - ஓசைகளையும் , மங்குலொடு நீள்கொடிகள் - மேகமண்டலம் வரை நீண்ட கொடிகளையுடைய . மலிமாடம் - நெருங்கிய மாடங்களையும் , நீடுபொழில் - நெடிய சோலைகளையும் உடைய , மாகறல் உளான் - திருமாகறலில் இருப்பவன் . கொங்குவிரி - வாசனை விரிகின்ற . வளர்திங்கள் - வளரக்கூடிய பிறைச் சந்திரனையும் . செங்கண்விடை அண்ணல் - சிவந்த கண்களையுடைய திருமாலாகிய இடபத்தையுமுடைய . சிவபெருமானது அடிசேர்பவர்களும் - திருவடியை இடைவிடாது நினைப்பவர்களுக்கு . தீவினைகள் - கொடியவினைகள் . தீரும் - நீங்கிவிடும் . ` பைங்கண்வெள் ளேற்றண்ணல் ` ( திருநள்ளாறு ) என்னாமல் செங்கண் விடையென்றதனால் திருமாலாகிய விடையென்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கலையினொலி மங்கையர்கள் பாடலொலி யாடல்கவி னெய்தியழகார்
மலையினிகர் மாடமுயர் நீள்கொடிகள் வீசுமலி மாகறலுளான்
இலையின்மலி வேல்நுனைய சூலம்வல னேந்தியெரி புன்சடையினுள்
அலைகொள்புன லேந்துபெரு மானடியை யேத்தவினை யகலுமிகவே.

பொழிப்புரை :

வேதாகமக் கலைகளைக் கற்பவர்களின் ஒலியும் , பெண்களின் பாடல் , ஆடல் ஒலிகளும் சேர்ந்து இனிமை தர , அழகிய மலையை ஒத்த உயர்ந்த மாட மாளிகைகளில் நீண்ட கொடிகள் அசைய செல்வ வளமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . இலைபோன்ற அமைப்புடைய வேலையும் , கூர்மையான நுனியுடைய சூலத்தையும் , வலக்கையிலே ஏந்தி , நெருப்புப் போன்ற சிவந்த புன்சடையில் அலைகளையுடைய கங்கையைத் தாங்கிய அச்சிவபெருமானின் திருவடிகளைப் போற்ற வினை முற்றிலும் நீங்கும் .

குறிப்புரை :

கலையின் ஒலி - கலை கற்பவர்களின் ஒலியும் , ( மங்கையர்கள் பாடல் ஒலி . ஆடல் ( ஒலி ஆகிய இவ்வொலிகள் சேர்ந்து ) கவின் எய்தி - இனிமைதர . அழகு ஆர் மலையின் நிகர் மாடம் - அழகு பொருந்திய மலையையொத்த மாடங்களில் . உயர்நீள் கொடிகள் - மிக நீண்ட கொடிகள் . வீசும் - வீசுகின்ற . மலி - ( செல்வ வளத்தால் ) மிகுந்த . மாகறல் - உள்ளான் . இலையின் மலி - இலையைப் போன்ற வடிவையுடைய . வேல் - வேலையும் . நுனைய - கூரிய நுனியையுடைய . சூலம் - சூலத்தையும் . வலம் ஏந்தி - வலக்கையில் ஏந்தி . எரிபுன்சடையினுள் - நெருப்புப் போன்ற சிறிய சடையினுள் . அலைகொள்புனல் - அலைகளையுடைய கங்கைநீரை . ஏந்து பெருமான் - தரித்த சிவபெருமானது . அடியை ஏத்த - திருவடிகளைத் துதிக்க . வினைமிக அகலும் - வினை முற்றிலும் நீங்கும் . இலையின் மலி :- உவமவாசகம் ஆகலால் இன் என்பது சாரியை .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

காலையொடு துந்துபிகள் சங்குகுழல் யாழ்முழவு காமருவுசீர்
மாலைவழி பாடுசெய்து மாதவர்க ளேத்திமகிழ் மாகறலுளான்
தோலையுடை பேணியதன் மேலொர்சுடர் நாகமசை யாவழகிதாப்
பாலையன நீறுபுனை வானடியை யேத்தவினை பறையுமுடனே.

பொழிப்புரை :

துந்துபி , சங்கு , குழல் , யாழ் , முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , காலையும் மாலையும் வழிபாடு செய்து முனிவர்கள் போற்றி வணங்க மகிழ்வுடன் சிவபெருமான் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் தோலாடையை விரும்பி அணிந்து , அதன்மேல் ஒளிவிடும் நாகத்தைக் கச்சாகக் கட்டி , அழகுறப் பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசி விளங்குகின்றான் . அவனுடைய திருவடிகளைப் போற்றி வணங்க , உடனே வினையாவும் நீங்கும் .

குறிப்புரை :

துந்துபிகள் - சங்கு , குழல் , யாழ் , முழவு - இவ் வாத்தியங்களோடு . காமருவுசீர் - அழகிய சிறப்பினையுடைய . காலையொடு - காலையிலும் . மாலை - மாலையிலும் . வழிபாடு செய்து - பூசித்து . மாதவர்கள் - முனிவர்கள் . ஏத்தி - துதித்து . மகிழ் - மகிழ்கின்ற மாகறல் உளான் . தோலையுடை பேணி - தோலை ஆடையாக விரும்பி . ( அதன்மேல் ) ஓர் சுடர்நாகம் - ஒளி பொருந்திய பாம்பை . அசையா - கச்சாகக்கட்டி ; அழகிது ஆய் - அழகை யுடையதாக . பாலை அ ( ன் ) ன பாலையொத்த . நீறுபுனைவான் - திருநீற்றைப் பூசுபவராகிய சிவபெருமான் . ` பால்கொள் வெண்ணீற்றாய் ` என்பது திருவாசகம் ; அடிகள் ஏத்த - திருவடிகளைத் துதிக்க . உடனே வினை பறையும் - உடனே வினைநீங்கும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

இங்குகதிர் முத்தினொடு பொன்மணிக ளுந்தியெழின் மெய்யுளுடனே
மங்கையரு மைந்தர்களு மன்னுபுன லாடிமகிழ் மாகறலுளான்
கொங்குவளர் கொன்றைகுளிர் திங்களணி செஞ்சடையி னானடியையே
நுங்கள்வினை தீரமிக வேத்திவழி பாடுநுகரா வெழுமினே.

பொழிப்புரை :

ஒளிர்கின்ற முத்து , பொன் , மணி இவற்றை ஆபரணங்களாக அணியப்பெற்ற பெண்கள் தங்கள் துணைவர்களுடன் நீராடி மகிழ்கின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் நறுமணம் கமழும் கொன்றையையும் , குளிர்ந்த சந்திரனையும் சிவந்த சடையில் அணிந்துள்ளான் . அவனுடைய திருவடிகளை உங்கள் வினைதீர மிகவும் போற்றி வழிபட எழுவீர்களாக .

குறிப்புரை :

இங்கு - இஞ்சி முதலிய குறிஞ்சி நிலப் பொருள்களையும் . கதிர் - ஒளியையுடைய ( முத்தினொடு , பொன் , மணிகள் ) உந்தி - ( அடித்துக் கொண்டு வரும் ) நதியில் . ( உந்தி - பெயர் . இகரம் வினை முதற்பொருளில் வந்தது ) எழில்மெய் , ( எழில் ) உள் உடனே - அழகிய தோற்றப் பொலிவோடும் , அழகிய மனத்தோடும் . ( மனத்திற்கு அழகாவது ; தூய்மையுடைமை ). மங்கையர்களும் மைந்தர்களும் - மாதரும் ஆடவரும் . மன்னு புனல் ஆடி - நிலைபெற்ற நீரில்மூழ்கி . மகிழ் மாகறல் - மகிழ்கின்ற திருமாகறல் , உள்ளான் . நுங்கள் - உங்கள் . வினை நீங்கும்படி . வழிபாடு நுகரா - வழிபாடு செய்து . எழுமின் . மன்னுபுனல் என்றது அதனருகில் ஓடும் சேயாற்றினை .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

துஞ்சுநறு நீலமிரு ணீங்கவொளி தோன்றுமது வார்கழனிவாய்
மஞ்சுமலி பூம்பொழிலின் மயில்கணட மாடமலி மாகறலுளான்
வஞ்சமத யானையுரி போர்த்துமகிழ் வானொர்மழு வாளன் வளரும்
நஞ்சமிருள் கண்டமுடை நாதனடி யாரைநலி யாவினைகளே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் நீலோற்பல மலர்கள் இருட்டில் இருட்டாய் இருந்து , இருள்நீங்கி விடிந்ததும் நிறம் விளங்கித் தோன்றுகின்றன . நிறையப் பூக்கும் அம்மலர்கள் தேனை வயல்களில் சொரிகின்றன . அருகிலுள்ள , மேகங்கள் படிந்துள்ள பூஞ்சோலைகளில் மயில்கள் நடனமாடுகின்றன . இத்தகைய சிறப்புடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் வஞ்சமுடைய மதயானையின் தோலை உரித்துப் போர்த்து மகிழ்கின்றான் . ஒப்பற்ற மழுப்படையை உடையவன் . நஞ்சையுண்டு மிக இருண்ட கழுத்தையுடையவன் . அத்தலைவனான சிவபெருமானின் அடியார்களை வினைகள் துன்புறுத்தா .

குறிப்புரை :

இருள் நீங்க - விடிய . துஞ்சும் நறும் நீலம் - குவியும் நறும் மணமுள்ள நீலோற்பலம் , ஒளிதோன்றும் ( கழனி ) இருட்டோடு இருளாய் இருந்த நீலோற்பலம் . விடிந்ததும் நிறம் விளங்கிக் காட்டுகிறது . ( வரம்பில் பல பூக்கள் மலர்வதால் ) மதுவார் கழனி தேன் சொரியும் ( கழனி ) கழனிவாய் - கழனிக்கருகிலுள்ள . மஞ்சுமலி - மேகங்கள் படிந்த . பூம் பொழிலின் - மலர்ச் சோலைகளில் . மயில்கள் நடம் ஆடல் - மயில்கள் நடித்தல் . மலி - மிகுந்த . மாகறல் உ ( ள் ) ளான் . வஞ்சம் - வஞ்சத்தையுடைய . மதயானை - மதஞ்சொரியும் யானையின் . உரி - தோலை , ( போர்த்து மகிழ்வான் ). ஓர் - ஒப்பற்ற . மழுவாளன் - மழு ஆயுதத்தையுடையவன் . ( வாள் சிறப்புப் பெயர் , பொதுப் பெயர் குறித்தது ). நஞ்சம் - நஞ்சம் உண்டதினால் . வளரும் இருள் - மிக்க இருளையுடைய . நாதன் - தலைவனாகிய சிவபெருமானின் , ( அடியாரை ). வினைநலியா - வினைகள் துன்புறுத்தமாட்டா .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மன்னுமறை யோர்களொடு பல்படிம மாதவர்கள் கூடியுடனாய்
இன்னவகை யாலினிதி றைஞ்சியிமை யோரிலெழு மாகறலுளான்
மின்னைவிரி புன்சடையின் மேன்மலர்கள் கங்கையொடு திங்களெனவே
உன்னுமவர் தொல்வினைக ளொல்கவுயர் வானுலக மேறலெளிதே.

பொழிப்புரை :

என்றும் நிலைத்திருக்கும் வேதங்களை நன்கு கற்ற அந்தணர்களும் , பலவிதத் தவக்கோலங்கள் தாங்கிய முனிவர்களும் கூடி இறைவனை இனிது இறைஞ்சும் தன்மையில் தேவர்களை ஒத்து விளங்குகின்ற திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் மின்னல்போல் ஒளிரும் விரிந்த செஞ் சடையின்மேல் மலர்களையும் , கங்கையையும் , பிறைச் சந்திரனையும் அணிந்துள்ளான் . அப்பெருமானை நினைந்து வழிபடுபவர்களின் தொல்வினைகள் நீங்க , உயர் வானுலகை அவர்கள் எளிதில் அடைவர் .

குறிப்புரை :

பல்படிமம் - பல தவ வேடத்தையுடைய . மாதவர்கள் - முனிவர்கள் , இன்ன - இது போன்ற . வகையால் - விதங்களால் , ( இனிது ). இறைஞ்சி - வணங்கி , இமையோரில் எழு - நரை திரை மூப்புச் சாக்காடின்றி , வானவரைப்போல் தோன்றும் . மின்னை விரி புன்சடையின்மேல் - மின்னலைப்போல் ஒளியை விரிக்கின்ற சிறிய சடையின்மேல் - ( மலர்களும் கங்கையும் திங்களும் ). என - எனவரும் இவற்றை . உன்னுவார் - நினைப்போர் ; சொரூபத்தியானம் பண்ணுபவர்கள் . வினைகள் ஒல்க - வினைகள் ஒழிய . உயர் வானுலகம் ஏறல் எளிது . சைவ வேடம் , பஞ்சாட்சரசெபம் , சோகம் பாவனை முதலியன இன்னவகையாலெனக் குறிக்கப்பட்டவை . ` புன்சடை ....... மலர் திங்கள் என ` - எனவரும் இவற்றை என்றது ;- பாம்பு அணி , வெண்டலை மாலை , தோல் ஆடை முதலிய கோலத்தை .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

வெய்யவினை நெறிகள்செல வந்தணையு மேல்வினைகள் வீட்டலுறுவீர்
மைகொள்விரி கானன்மது வார்கழனி மாகறலு ளானெழிலதார்
கையகரி கால்வரையின் மேலதுரி தோலுடைய மேனியழகார்
ஐயனடி சேர்பவரை யஞ்சியடை யாவினைக ளகலுமிகவே.

பொழிப்புரை :

கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் , இனி இப்பிறவியில் மேலும் ஈட்டுதற்குரிய ஆகாமிய வினைகளை ஒழிக்க வல்லவர்களே ! மேகங்கள் தவழும் ஆற்றங்கரைச் சோலைகளிலுள்ள பூக்களிலிருந்து தேன் ஒழுகும் வயல்களையுடைய திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் யானையின் தோலை உரித்துப் போர்த்த அழகிய திருமேனியுடையவன் . யாவர்க்கும் தலைவனான அப் பெருமானின் திருவடிகளை நினைந்து வழிபடுபவர்களை வினையானது அடைய அஞ்சி அகன்று ஓடும் .

குறிப்புரை :

வெய்யவினை நெறிகள் செல - கொடிய வினைகள் தாம் வந்த வழியே செல்லவும் - ` வந்த வழியே செல் ` என்பது உலக வழக்கு . வந்து அணையும் மேல் வினைகள் - ஆகாமியங்கள் ( பலவாய் ஈட்டப்படுவதால் பன்மையாற் கூறினார் .) வீட்டலுறுவீர் - ஒழிக்கத் தொடங்குகின்றவர்களே . மைகொள் - மேகங்கள் படிந்த . விரி - விரிந்த . கானல் - ஆற்றங்கரைச் சோலைகளின் . மதுவார் கழனி - தேன்மிகும் கழனிகளையுடைய . ( மாகறல் ) கானல் இப்பொருளிலும் வருவதைச் ` செங்கானல் வெண்குருகு பைங்கானல் இரைதேரும் திருவையாறே ` என்றருளிச் செயலால் அறிக . ( தி .1. ப .130. பா .3.)

பண் :சாதாரி

பாடல் எண் : 8

தூசுதுகி னீள்கொடிகண் மேகமொடு தோய்வனபொன் மாடமிசையே
மாசுபடு செய்கைமிக மாதவர்க ளோதிமலி மாகறலுளான்
பாசுபத விச்சைவரி நச்சரவு கச்சையுடை பேணியழகார்
பூசுபொடி யீசனென வேத்தவினை நிற்றலில போகுமுடனே.

பொழிப்புரை :

பொன்மயமான மாடங்களின் உச்சியில் கட்டப்பட்டுள்ள வெண்துகிலாலான கொடிகள் கருநிற மேகத்தைத் தொடுகின்ற மாசுபடு செய்கை தவிர வேறு குற்றமில்லாத , பெரிய தவத்தார்கள், வேதங்கள் ஓத விளங்கும் திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான். அப்பெருமான் பாசுபத கோலத்தை விரும்பி, வரிகளையுடைய விடமுடைய பாம்பைக் கச்சாக அணிந்த அழகுடையவன் . திருவெண்ணீற்றைப் பூசியவன் . அவனைப் போற்றி வழிபட வினையாவும் நில்லாது உடனே விலகிச் செல்லும் .

குறிப்புரை :

பொன்மாடம்மிசை - பொன்மயமான மாடங்களின் மேல் கட்டிய . தூசு துகில் - வெள்ளாடையினாலாகிய . நீள்கொடிகள் - நெடிய கொடிகளே . மேகமொடு - கரிய மேகத்தோடு . தோய்வன - படிவனவாய் . மாசுபடுசெய்கை - மாசுபடுசெய்கை மிக . பிற மாசுபடு செய்கை இல்லாத - ( மாகறல் ) மிசையே . என்பதின் ஏகாரத்தைக் கொடிகளோடு கூட்டுக . ( மாதவர்கள் ) ஓதி - வேதங்களை ஓதிக்கொண்டு . மலி - திரள்கின்ற , மாகறல் உளான் . பாசுபத இச்சை - பாசுபத வேடத்தில் இச்சையையும் . வரி - நெடிய . நச்சரவு - ( நஞ்சு + அரவு ) விடப்பாம்பை . கச்சை உடை - கச்சையாக உடுத்தலையும் . பேணி - மேற்கொண்டவன் , ( இகரவிகுதி ஆண்பாலில் வந்தது . உடை : ( உடு + ஐ ) உடுஐ - உடுத்தலை , முதனிலைத் தொழிற்பெயர் , அணிதல் என்னும் பொது வினையாற் கூறற் பாலது . உடுத்தல் என வேறு வினையாற் கூறப்பட்டது . ( அழகு ஆர் பொடி பூசு ஈசன் என ஏத்த ). வினை - வினைகள் . இலபோகும் - இல குறிப்பு முற்றெச்சம் . பாசுபத வேடமாவது :- ` சவந்தாங்கு மயானத்துச் சாம்பல் என்பு , தலையோடு மயிர்க்கயிறு தரித்தான்றன்னைப் , பவந்தாங்கு பாசுபத வேடத்தானை ` என்னும் திருவீழிமிழலைத் திருத்தாண்டகத்தால் உணரப்படுவது .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தூயவிரி தாமரைக ணெய்தல்கழு நீர்குவளை தோன்றமதுவுண்
பாயவரி வண்டுபல பண்முரலு மோசைபயின் மாகறலுளான்
சாயவிர லூன்றியவி ராவணன தன்மைகெட நின்றபெருமான்
ஆயபுக ழேத்துமடி யார்கள்வினை யாயினவு மகல்வதெளிதே.

பொழிப்புரை :

தூய்மையான தாமரை , நெய்தல் , கழுநீர் , குவளை போன்ற மலர்கள் விரிய , அவற்றிலிருந்து தேனைப் பருகும் வரிகளையுடைய வண்டுகள் பண்ணிசையோடு பாடுதலால் ஏற்படும் ஓசை மிகுந்த திருமாகறல் என்னும் திருத்தலத்தில் சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அவன் தன் காற்பெருவிரலை ஊன்றி இராவணனின் வலிமை கெடுமாறு செய்தவன் . அப்பெருமானின் புகழைப் போற்றி வணங்கும் அடியவர்களின் வினை எளிதில் நீங்கும் .

குறிப்புரை :

தூய - தூய்மையான . விரிதாமரைகள் - தாமரை மலர்களும் . நெய்தல் கழுநீர் குவளைதோன்ற - இம்மலர்களும் தோன்ற - விரிய ; ( மது உண்கின்ற ) பாய - பரந்த . வரி - கீற்றுக்களையுடைய ( பல வண்டுகள் ) பண் - பாடல்களை . முரலும் - இசைபாடும் . ஓசைபயில் - ஓசைமிகுந்த ( மாகறல் ) சாய - வலி குறையும்படி . விரல் ஊன்றிய - விரலால் அடர்க்கப் பட்ட . இராவணன் - இராவணனுடைய . தன்மைகெட - நிலைகுலைய நின்ற பெருமான் . ஆய - பொருந்திய . புகழ் - புகழை . ஏத்தும் - துதிக்கும் . அடியார் , வினை ஆயினவும் - வினை அனைத்தும் அகல்வது எளிது . ஆயின வினையெனக்கொண்டு - இப்பிறப்பில் ஈட்டிய ஆகாமிய வினைகளும் எனலும் ஆம் . அப்பொழுது உம்மை இறந்தது தழுவிற்றாம் . சாய்தல் :- உரிச்சொல் . இப்பொருட்டாதலைத் தொல்காப்பியம் உரியியற் சூத்திரம் (34) கொண்டறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

காலினல பைங்கழல்க ணீண்முடியின் மேலுணர்வு காமுறவினார்
மாலுமல ரானுமறி யாமையெரி யாகியுயர் மாகறலுளான்
நாலுமெரி தோலுமுரி மாமணிய நாகமொடு கூடியுடனாய்
ஆலும்விடை யூர்தியுடை யடிகளடி யாரையடை யாவினைகளே.

பொழிப்புரை :

பைம்பொன்னாலாகிய வீரக்கழல்களை அணிந்த திருவடிகளையும் , நீண்ட சடைமுடியையும் காணவேண்டும் என்ற விருப்பமுடன் முயன்ற திருமாலும் , பிரமனும் அறியாவண்ணம் நெருப்புப் பிழம்பாய் ஓங்கி நின்ற சிவபெருமான் திருமாகறலில் வீற்றிருந்தருளுகின்றான் . உடம்பில் நாலிடத்து நெருப்பைக் கொண்டும் , தோலுரித்து மாணிக்கத்தைக் கக்கும் பாம்பணிந்தும் , அசைந்து நடக்கின்ற இடபத்தை வாகனமாகக் கொண்டுள்ள சிவபெருமானின் அடியார்களை வினைகள் அடையா .

குறிப்புரை :

காலின் - திருவடிகளில் அணிந்த . நல - நல்ல . பைங்கழல் மேல் - பைம்பொன்னால் ஆன வீரகண்டையின் மேலும் . நீள் முடி - நீண்ட முடியின்மேல் . சிரசின்மேல் அணிந்த சந்திரன் முதலியவற்றின் மேலும் . உணர்வு - அறிதலில் . காமுறவினார் - விருப்பமுற்றவர்களாகிய . மாலும் மலரானும் - திருமாலும் , பிரமனும் . அறியாமை - அறியாதபடி . எரியாகி - நெருப்புப் பிழம்பாகி . உயர் - உயர்ந்த ( திருமாகறலில் உள்ளவன் ) நாலும் எரி - சிரிப்பு , நெற்றிக்கண் , கை , திருமேனிமுழுதும் ஆகிய நாலிடத்தும் நெருப்பும் . நாலும் - ( அளவையாகுபெயர் ஏழாம் வேற்றுமைத் தொகை .) உரியும் தோலும் , சட்டையுரிக்கின்ற நாகமும் ஆகிய இவற்றோடு பொருந்தி என்பது மூன்றாம் அடியின் பொருள் . உரிநாகம் - வினைத்தொகை . ஆலும் - அசைந்து நடக்கும் விடை . அடிகள் அடியாரையடையா வினைகளே - பெருமானின் அடியாரை வினைகள் அடையா .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கடைகொணெடு மாடமிக வோங்குகமழ் வீதிமலி காழியவர்கோன்
அடையும்வகை யாற்பரவி யரனையடி கூடுசம் பந்தனுரையால்
மடைகொள்புன லோடுவயல் கூடுபொழின் மாகறலுளா னடியையே
உடையதமிழ் பத்துமுணர் வாரவர்கள் தொல்வினைக ளொல்குமுடனே.

பொழிப்புரை :

வாயில்களையுடைய மிக உயர்ந்த நீண்ட மாடங்களும் , நறுமணம் கமழும் வீதிகளும் உடைய சீகாழியில் வாழ்பவர்கட்குத் தலைவனான திருஞானசம்பந்தன் , சிவபெருமானைச் சேர்தற்குரிய நெறிமுறைகளால் துதித்து , மடைகளில் தேங்கிய தண்ணீர் ஓடிப் பாய்கின்ற வயல்களும் , நெருங்கிய சோலைகளுமாக நீர்வளமும் , நிலவளமுமிக்க திருமாகறல் என்னும் திருத்தலத்தில் வீற்றிருந்தருளும் அப்பெருமானைப் போற்றி அருளிய இத்தமிழ்ப் பாக்கள் பத்தினையும் உணர்ந்து ஓதவல்லவர்களின் தொல்வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

கடைகொள் - வாயில்களையுடைய . நெடுமாடம் - நீண்ட மாடங்கள் . மிக ஓங்கு - மிகவும் உயர்ந்த . கமழ்வீதி - வாசனை கமழும் வீதிகள் . மலி - மிகுந்த . காழியவர் - சீகாழியில் உள்ளவர்களுக்கு . கோன் - தலைவனான ( திருஞானசம்பந்தன் ). அரனை அடையும் வகையால் - சிவ பெருமானைச் சேர்வதற்குரிய விதத்தால் . பரவி - துதித்து . அடிகூடு - திருவடியைப் பற்றுக்கோடாகச் சேர்ந்த ( சம்பந்தன் ). மடைகொள் - மடைகளில் தேங்கிய தண்ணீர் . ஓடும் - ஓடிப்பாய்கின்ற . வயல்களும் . கூடு - கூட்டமான . பொழில் - சோலைகளும் உடைய . மாகறல் உளான் . தொல்வினைகள் - பழமையான வினைகள் . ஒல்கும் - வலிகுறைந்து நீங்கும் .
சிற்பி