திருப்பட்டீச்சரம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

பாடன்மறை சூடன்மதி பல்வளையொர் பாகமதின் மூன்றொர்கணையால்
கூடவெரி யூட்டியெழில் காட்டிநிழல் கூட்டுபொழில் சூழ்பழைசையுள்
மாடமழ பாடியுறை பட்டிசர மேயகடி கட்டரவினார்
வேடநிலை கொண்டவரை வீடுநெறி காட்டிவினை வீடுமவரே.

பொழிப்புரை :

சிவபெருமான் வேதங்களை அருளிச்செய்து வேதப் பொருளாயும் விளங்குபவர் . பிறைச்சந்திரனைச் சூடியவர் . பல வளையல்களையணிந்த உமாதேவியைத் தம் திருமேனியின் ஒரு பாகமாகக் கொண்டவர் . மதில்கள் மூன்றினையும் ஒரு கணையால் எரித்த வீர அழகைக் காட்டியவர் . நிழல்தரும் சோலைகள் சூழ்ந்த திருப்பழையாறையில் , மாடங்களையுடைய திருமழபாடி என்னும் நகரில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றார் . பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . வேடநிலைக்கேற்ப நல்லொழுக்கத்தில் நிற்கும் அடியவர்களின் வினைகளைப் போக்கி முத்திநெறி அருளவல்லவர் .

குறிப்புரை :

பாடல் மறை - பாடுவது வேதம் . சூடல்மதி - சூடுவது சந்திரன் . ஓர்பாகம் - ஓர்பாகத்தில் ( அமர்ந்திருப்பவர் ). பல்வளை - பல வளையல்களை அணிந்த உமாதேவியார் . மதில் மூன்று - திரிபுரங்களையும் . ஓர் கணையால் - ஓர் அம்பினால் . கூட எரியூட்டி - ஒருசேர நெருப்பை உண்ணச்செய்து . எழில்காட்டி - தனது வீரத்தின் அழகைக்காட்டி . ( சிரித்துப் புரம் எரித்ததை ) நிழல் கூட்டு பொழில் - நிழலைத் தரும் சோலை சூழ்ந்த . பழசையுள் - திருப்பழையாறையில் . மாடம் மழபாடி - மாடங்களையுடைய மழபாடியென்னும் பகுதியில் . உறை - தங்குகின்ற . பட்டிசரம் மேய - திருப்பட்டீச்சரத்தில் எழுந்தருளியுள்ள . கடிகட்டு அரவினார் - அரையில் கட்டிய பாம்பையுடையவர் . வேடநிலைகொண்டவரை - தமது வேடத்திற்கேற்ப ஒழுக்கத்தின் நிற்றலையுடைய அடியவரை . வீடுநெறிகாட்டி - அடைதற்குரிய முத்தி மார்க்கத்தையும் அறிவித்து . வினை வீடும் அவர் - அவர்களது கன்மங்கள் தாமே யொழியும்படி செய்ய வல்லவராவர் . பட்டீச்சரம் மே ( வி ) ய அரவினார் வினை வீடுமவராவர் என்க . பழையாறை - பெரிய நகரமாயிருந்த இடம் . இப்பொழுது அதன் ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறு பெயர்களால் வழங்குகின்றது . பட்டீச்சரம் கோயிலின் பெயராகவும் , இக்கோயிலிருக்கும் ஊரைப் பட்டீச்சரம் என இன்று வழங்குவர் . சம்பந்தப் பெருமான் காலத்தில் இவ்வூர் மழபாடியென வழங்கப்பட்டது . மழ நாட்டில் கொள்ளிட நதியின் வடகரையிலுள்ள மழபாடி என்னும் தலம் வேறு . கடி - இடக்கரடக்கல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

நீரின்மலி புன்சடையர் நீளரவு கச்சையது நச்சிலையதோர்
கூரின்மலி சூலமது வேந்தியுடை கோவணமு மானினுரிதோல்
காரின்மலி கொன்றைவிரி தார்கடவுள் காதல்செய்து மேயநகர்தான்
பாரின்மலி சீர்பழைசை பட்டிசர மேத்தவினை பற்றழியுமே.

பொழிப்புரை :

சிவபெருமான் கங்கையைச் சடையில் தாங்கியவர் . நீண்ட பாம்பைக் கச்சாகக் கட்டியவர் . கூர்மையான இலைபோன்ற வடிவுடைய கொடிய சூலப்படையை ஏந்தியவர் . கோவண ஆடை அணிந்தவர் . மான் தோலையும் அணிந்தவர் . கார்காலத்தில் மலரும் கொன்றையை மாலையாக அணிந்தவர் . அத்தகைய கடவுள் விரும்பி வீற்றிருந்தருளும் தலமாவது பூமியில் மிக்க புகழையுடைய திருப்பழையாறை ஆகும் . அங்குள்ள திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலிலுள்ள இறைவனைப் போற்றி வணங்க நம் வினைகள் யாவும் அடியோடு அழியும் .

குறிப்புரை :

நீரின்மலி புன்சடையர் - கங்கை நீரினால் நனைந்த புன்சடையை உடையவர் . நீள் அரவு கச்சை ( அது ) - அவர்கட்கும் கச்சையாவது நீண்ட பாம்பு . நச்சு இலையது ஓர் கூரின் மலிசூலம் ( அது ) ஏந்தி - நஞ்சு பூசிய இலை வடிவத்தையுடையதாகிய ஓர் கூரின் மிகுந்த சூலத்தினை ஏந்தினவர் . உடைகோவணமும் மானின் உரித்தோல் - உடையும் கோவணமும் மானினுடைய உரித்த தோல் . காரின்மலி கொன்றை விரிதார் - கார்காலத்தில் மிக மலரும் கொன்றை விரிந்த மாலையாகும் . கடவுள் - இத்தகைய கடவுள் . காதல்செய்து - விரும்பி . மேய - மேவிய . நகர்தான் - தலமாவது . பாரின் மலிசீர் - பூமியில் மிகுந்த புகழையுடைய . பழைசை - திருப்பழையாறையில் உள்ள . பட்டிசரம் - திருப்பட்டீச்சரத்தை . ஏத்த - துதிக்க . வினை - நமது வினைகள் , பற்று அழியும் - அடியோடு அழியும் . கொன்றை கார்காலத்தில் மலர்வதென்பதைக் ` கண்ணி கார்நறுங் கொன்றை ` என்னும் புறநானூற்றாலும் அறிக . - (1)

பண் :சாதாரி

பாடல் எண் : 3

காலைமட வார்கள்புன லாடுவது கௌவைகடி யார்மறுகெலாம்
மாலைமண நாறுபழை யாறைமழ பாடியழ காயமலிசீர்ப்
பாலையன நீறுபுனை மார்பனுறை பட்டிசர மேபரவுவார்
மேலையொரு மால்கடல்கள் போல்பெருகி விண்ணுலக மாளுமவரே.

பொழிப்புரை :

பெண்கள் காலையில் நீர்நிலைகளில் நீராடுவதால் உண்டாகும் ஓசையை உடையதாய் , மாலையில் பூசை செய்வதால் வீதிகளிலெல்லாம் நறுமணம் கமழ்வதாய் உள்ள திருப்பழையாறை என்னும் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் , தன் திருமேனி முழுவதும் மிக்க சிறப்புடைய பால்போன்ற திருவெண்ணீற்றைப் பூசிய மார்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை வணங்குவார் இம்மையில் கடல்போல் செல்வம் பெருக , மறுமையில் விண்ணுலகை ஆள்வர் .

குறிப்புரை :

காலை மடவார்கள் புனலாடுவது கௌவை - காலைவேளையில் தண்ணீர்த்துறைகளில் மகளிர் நீராடுவதால் உண்டாகும் ஓசையும் . மாலை - மாலைவேளையில் . கடி ஆர் - புதுமை மிகுந்த , மறுகு எலாம் - வீதிகளில் எல்லாம் . மணம் நாறும் - மணம் மணக்கும் ( ஓசையும் மணமும் என இருபுலன்களின் இனிமை கூறவே , ஏனையமூன்றும் : கண்ணுக்கினிய காட்சியும் வாய்க்கினிய சுவையும் , தென்றற்காற்றால் உடற்கினிய ஊறும் எக்காலத்தும் எவ்விடத்தும் நுகர்வர் எனப் ( பதிவளம் குறிப்பித்தவாறு ). பழையாறை மழபாடி - பழையாறை என்னுந் தலத்தில் மழபாடி என்னும் பகுதியில் . அழகாய - அழகாகிய . மலிசீர் - மிக்க சிறப்புடைய , பாலையன நீறுபுனை பாலையொத்த திருநீற்றை யணிந்த , மார்பனுறை பட்டிசரமே பரவுவார் - மார்பினை உடையவராகிய சிவபெருமான் தங்கும் பட்டீச்சரம் என்னும் கோயிலைத் துதிப்போர் ( இம்மையில் மேலை மேன்மை தருவனவாகிய செல்வங்கள் ) மால்கடல்கள்போல் பெருகி - வளரப்பெற்று ( மறுமையில் ) விண்ணுலகம் - சொர்க்கலோகத்தை . ( ஆளுமவர் ) தொன்மை - தொல்லை யென்று வருவதுபோல் , மேன்மை - மேலையென்றாகிப் பண்பாகுபெயராய்ச் செல்வத்தை யுணர்த்தி நின்றது .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கண்ணின்மிசை நண்ணியிழி விப்பமுக மேத்துகமழ் செஞ்சடையினான்
பண்ணின்மிசை நின்றுபல பாணிபட வாடவல பான்மதியினான்
மண்ணின்மிசை நேரின்மழ பாடிமலி பட்டிசர மேமருவுவார்
விண்ணின்மிசை வாழுமிமை யோரொடுட னாதலது மேவலெளிதே.

பொழிப்புரை :

சிவபெருமானின் கண்களை உமாதேவி பொத்த , அதனால் அரும்பிய வியர்வையைக் கங்கையாகச் செஞ்சடையில் தாங்கியவன் . அப்பெருமான் பண்ணிசைகளோடு பாடல்களைப் பாடவும் , ஆடவும் வல்லவன் . பால் போன்ற வெண்ணிறச் சந்திரனைச் சூடியவன் . அப்பெருமான் மண்ணுலகில் ஒப்பற்ற பெருமையுடைய திருமழபாடி என்னும் தலத்தில் திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் . அவனைப் போற்றி வணங்குபவர்களுக்கு விண்ணுலகிலுள்ள தேவர்களுடன் வாழ்வது எளிதாகும் .

குறிப்புரை :

கண்ணின்மிசை - தமது கண்களின் இடத்தில் . நண்ணி - ( உமாதேவியாரின் கரங்கள் ) சேர்ந்து ( மறைத்ததால் அக் கரங்களின் அரும்பிய வியர்வை நீர் ) முகம் - ( பரவிய ) ஆயிர முகங்களையும் . இழிவிப்ப - ஓர் திவலையாகச் சிறுகுவித்துச் சடையின் ஓர் உரோமத்தில் தாங்க . ஏத்து - ( அதன் பிரவாகத்தால் உலகமழியாமைக் காத்தருளிய திறனைப் பிரமன் முதலியோர் ) துதிக்கப்பெற்ற ( செஞ் சடையினான் ). கமழ் - ( அடியார் புனைந்த மாலைகளால் ) மணம் வீசும் ; செஞ்சடையினான் . பண்ணின் மிசை - இசைவழியே பொருந்தி . பலபாணிபட - பல தாள ஒத்துக்களும் பொருந்த . ஆடவல - ஆடவல்ல . பான்மதியினான் - வெண்மையான சந்திரனை அணிந்தவன் . மண்ணின்மிசை நேர் இல் - பூமியில் தனக்குச் சமானமில்லாத . மழபாடி - மழபாடி என்னுந் தலத்தில் . மலி - தங்கிய . பட்டிசரமே மருவுவார் - பட்டீச்சரத்தையே பற்றாக அடைவோர் . விண்ணின்மிசை வாழுமிமையோரொடு உடன் ஆதல் அது - வான் உலகில் வாழும் தேவருடன் வாழ்வதாகிய அத்தகைமை . மேவல் - அடைவது . எளிது - அவர்களுக்கு ஓர் அரியதன்று . அதனினும் மிக்க சிவலோகத்தில் வாழ்வர் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மருவமுழ வதிரமழ பாடிமலி மத்தவிழ வார்க்கவரையார்
பருவமழை பண்கவர்செய் பட்டிசர மேயபடர் புன்சடையினான்
வெருவமத யானையுரி போர்த்துமையை யஞ்சவரு வெள்விடையினான்
உருவமெரி கழல்கடொழ வுள்ளமுடை யாரையடை யாவினைகளே.

பொழிப்புரை :

முழவு முதலிய வாத்தியங்கள் அதிர்ந்து ஒலிக்க , திருமழபாடி என்னும் திருத்தலம் கோயில் உற்சவங்களாலும் , விழாக் களியாட்டங்களாலும் ஓசை மிகுந்து விளங்குகின்றது . மலை உள்ளதால் பருவகாலத்தில் மழை பொழிய , வளம் மிகுந்து , கண்டவர் மனத்தைக் கவர்கின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் படர்ந்த செஞ்சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அப்பெருமான் அஞ்சத்தக்க மதயானையின் தோலை உமாதேவி அஞ்சுமாறு உரித்துப் போர்த்துக் கொண்டவன் . வெண்ணிற இடபத்தை வாகனமாகக் கொண்டவன் . நெருப்புப்போன்ற சிவந்த திருமேனியுடைய அச்சிவபெருமானின் திருவடிகளை உள்ளம் ஒன்றித் தொழுபவர்களை வினையால் வரும் துன்பம் சாராது .

குறிப்புரை :

மரு ( வு ) வ - பொருந்தியனவாகிய , முழவு - முழவு முதலிய வாச்சியங்களோடு . மலி மத்தம் - விழாக்களியாட்டுக்கள் மிகுந்த . விழவு - உற்சவத்தால் எழும் ஓசைகள் . ஆர்க்க - ஆரவாரிக்க . வரை ஆர் - மலையின் கண்தங்கிப் பொழிகின்ற . பருவம் மழை - பருவகாலத்திற் பெய்யும் மழையால் உண்டாகிய . பண் ( பு ) - வளங்கள் . கவர்செய் - கண்டார் மனத்தைக் கவர்கின்ற , ( பட்டீச்சரம் மே ( வி ) ய , படர்ந்த ) புன்சடையினான் - புன்சடைகளையுடையவனும் . விடையினான் - விடையையுடையவனும் எனக்கூட்டுக . அனைவரும் அஞ்சுமாறு யானைத்தோலைப் போர்த்து அக்கோலத்தோடே உமாதேவியாரும் அஞ்ச அவர் முன்வந்த விடையினான் . அவனது உருவம் நெருப்பு , அவனது கழல் தொழுவாரை வினைகள் அடையா என்பது பின்னிரண்டடிகளின் கருத்து . மருவு - உகரச் சாரியை தொக்குநின்றது . மரூஉ எனினும் ஆம் , பண்பு - பண் எனக் கடைக் குறையாயிற்று . கவர்தலுக்குச் செயப்படுபொருள் வருவித்துரைக்கப் பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மறையினொலி கீதமொடு பாடுவன பூதமடி மருவிவிரவார்
பறையினொலி பெருகநிகழ் நட்டமமர் பட்டிசர மேயபனிகூர்
பிறையினொடு மருவியதொர் சடையினிடை யேற்றபுன றோற்றநிலையாம்
இறைவனடி முறைமுறையி னேத்துமவர் தீத்தொழில்க ளில்லர்மிகவே.

பொழிப்புரை :

வேதங்கள் ஓதும் ஒலியும் , கீதங்கள் பாடும் ஒலியும் , பூதகணங்கள் திருவடிக்கீழ் அமர்ந்து போற்றும் ஒலியும் கலந்து ஒலிக்க , பறை என்னும் வாத்திய ஓசையும் பெருகத் திருநடனம் புரியும் சிவபெருமான் திருப்பட்டீச்சரம் என்னும் கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் . குளிர்ச்சி பொருந்திய சந்திரனை அணிந்த சடையிலே கங்கையையும் தாங்கிய நிலையான தோற்றப் பொலிவு உடையவன் . அத்தகைய இறைவனின் திருவடிகளை நாடொறும் முறைமையோடு போற்றி வணங்குபவர்கள் துன்புறும் வினைகளிலிருந்து முற்றிலும் நீங்கியவராவர் .

குறிப்புரை :

மறையின் ஒலி - வேதங்களின் ஓசையும் , பூதம் அடிமருவி - பூதகணங்கள் அடியின் கீழ்ப் பொருந்தி . கீதமொடு - கீதத்தோடும் , பாடுவன - பாடப்படுவனதாகிய . ( ஒலி ) - ஓசையும் . விரவு ஆர் - கலத்தலையுடைய . பறையின் - முழவ வாத்தியங்களின் . ஒலிபெருக - ஓசையும் பெருகும்படியாக . நிகழ் நட்டம் அமர் - பொருந்திய நடனமாடுகின்ற , பட்டிசரமேய - பட்டீச்சரம் என்னும் ஆலயத்தில் தங்கிய . பனிகூர் - குளிர்ச்சி பொருந்திய . பிறையின்ஒடு - சந்திரனுடனே . மருவியது - பொருந்தியதாகிய . சடையின் இடை - சடையில் . புனல் ஏற்ற - கங்கை நீரை ஏற்ற . தோற்றம் - தோற்றப் பொலிவு . நிலையாம் - நிலையாகவுள்ள . இறைவனடி - கடவுளின் திருவடிகளை , முறை - நாடோறும் . முறையில் ஏத்தும் அவர் - முறைமையோடு துதிப்போர் . தீத்தொழில்கள் இல்லர் மிகவே - துன்புறும் வினைகள் முற்றிலுமிலராவர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பிறவிபிணி மூப்பினொடு நீங்கியிமை யோருலகு பேணலுறுவார்
துறவியெனு முள்ளமுடை யார்கள்கொடி வீதியழ காயதொகுசீர்
இறைவனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நறவவிரை யாலுமொழி யாலும்வழி பாடுமற வாதவவரே.

பொழிப்புரை :

பிறவியாகிய நோயும் , மூப்பும் நீங்கித் தேவலோகத்தில் உள்ளவர்களால் பாராட்டப்படுகின்றவர்களும் , உலகப் பற்றைத் துறந்த உள்ளமுடைய ஞானிகளும் வாழ்கின்ற , கொடி அசைகின்ற வீதிகளையுடைய திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் அழகிய சிறப்புடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான் . அக்கோயிலைப் போற்றி வணங்குபவர்கள் வினை சிறிதும் இல்லாதவராகி , தேன் ஒழுகுகின்ற நறுமணம் கமழும் மலர்களாலும் , தோத்திரங்களாலும் சிவனை வழிபட மறவாதவர்களாவர் . அவர்கள் சிவகணங்களோடு உறைவர் என்பது குறிப்பு .

குறிப்புரை :

பிறவி பிணி மூப்பினொடு நீங்கி - பிறவித்துன்பமும் , அதில் அடையக்கூடிய பிணியும் , மூப்பும் ஒழிந்து . இமையோர் உலகு பேணலுறுவார் - தேவர் உலகமும் பாராட்டி எதிர்கொண்டு அழைக்கும் தன்மை உள்ளவராவார்கள் . துறவி என்னும் உள்ளம் உடையார்கள் - துறத்தலாகிய உள்ளமுடைய மெய்யடியார்கள் . ( தங்கிய ) கொடிவீதி - கொடிகட்டியவீதியும் . அழகாயதொருசீர் - அழகுடைய பொருள்கள் எல்லாம் வந்து தொகும் சிறப்பையுடைய . இறைவன் உறை பட்டிசரமே - தலைவன் தங்கியிருக்கும் பட்டீச்சரமே . ஏத்தி எழுவர் - துதித்துத் துயில் எழுபவர் . வினையேதும் இலராய் - வினைசிறிதும் இல்லாதவராகி , நறவம் - தேன் ஒழுகுகின்ற . விரையாலும் - வாசனைபொருந்திய மலர்களாலும் . மொழியாலும் - தோத்திரங்களாலும் . ( வழிபாடுமறவாத ) அவர் - சிவன் ; உலகில் சிவகணத்தவரோடு உறைபவராவர் என்பது குறிப்பெச்சம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

நேசமிகு தோள்வலவ னாகியிறை வன்மலையை நீக்கியிடலும்
நீசன்விறல் வாட்டிவரை யுற்றதுண ராதநிரம் பாமதியினான்
ஈசனுறை பட்டிசர மேத்தியெழு வார்கள்வினை யேதுமிலவாய்
நாசமற வேண்டுதலி னண்ணலெளி தாமமரர் விண்ணுலகமே.

பொழிப்புரை :

திக்குவிசயம் செய்வதில் விருப்பம் கொண்டுவரும் இராவணன் தன் புய வலிமையினால் சிவபெருமான் வீற்றிருக்கும் கயிலை மலையைப் பெயர்த்தெடுக்க , இழிபண்புடைய இராவணனின் வலிமையை வாட்டியவராய் , தன்னுடைய எல்லையும் , தன்னுடைய நிலைமையும் பிறரால் அறியப்படாது , பிறைச்சந்திரனை அணிந்த அச்சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலைத் தொழுது வணங்குவார்களின் வினை முழுவதும் நீங்க , இனிப் பிறந்திறத்தலும் நீங்க அவர்கள் சிவஞானம் பெறுதலால் விண்ணுலகத்தை எளிதில் அடைவர் .

குறிப்புரை :

நேசம் மிகு - திக்குவிசயத்தில் விருப்பம் மிகுந்த . தோள்வலவன் ஆகி - புயவலிமையுடையவனாய் . இறைவன் மலையை - சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் கைலாய மலையை . நீக்கியிடலும் - தூக்கி அப்பால் இட முயன்ற அளவில் . நீசன் விறல் வாட்டி - இழிதகவினனாகிய இராவணனது வலிமையை வாட்டியவன் . வரை - தன்னுடைய எல்லையையும் . உற்றது - தன்னுடைய நிலைமையையும் . உணராத - பிறரால் அறியப்படாத . நிரம்பா மதியினான் - நிரம்பாத ( பிறைச் ) சந்திரனை அணிந்தவன் ( ஆகிய ). ஈசன் உறை - கடவுள் தங்கிய ( பட்டீச்சரம் தொழுது எழுவார் ) வினை ஏது மிலவாய் - கன்மங்கள் முற்றும் அழிந்தனவாகி , நாசம் ( இனிப்பிறந்து ) இறத்தல் . அற - நீங்க . வேண்டுதலின் - வேண்டிச்சிவஞானம் பெறுதலினாலே . அமரர் விண்ணுலகம் - ( அவர்களுக்குத் ) தேவர் உலகம் . எளிதாம் - ஓர்பொருளன்று . நேசம் - இங்கு ஆசையை யுணர்த்திற்று .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

தூயமல ரானுநெடி யானுமறி யாரவன தோற்றநிலையின்
ஏயவகை யானதனை யாரதறி வாரணிகொண் மார்பினகலம்
பாயநல நீறதணி வானுமைத னோடுமுறை பட்டிசரமே
மேயவன தீரடியு மேத்தவெளி தாகுநல மேலுலகமே.

பொழிப்புரை :

தூய தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் சிவபெருமானுடைய தோற்றத்தையும் , பலவகையான நிலைகளையும் அறியாதவர்களாயின் வேறுயார்தான் அவற்றை அறிவர் ? அழகிய அகன்ற மார்பு முழுவதும் திருநீற்றினை அணிந்து உமாதேவியோடு இறைவன் வீற்றிருந்தருளுகின்ற திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலை அடைந்து அவன் இரு திருவடிகளைப் போற்றி வணங்கச் சிவஞானம் பெறுதலும் , அதன் பயனால் முக்தியுலகை அடைதலும் எளிதாகும் .

குறிப்புரை :

தூயமலரானும் நெடியானும் - தூய்மையாகிய தாமரை மலரில் இருப்பவனாகிய பிரமனும் திருமாலும் . அவன் - அவ்விறைவனுடைய . தோற்றம் - தோற்றத்தையும் . நிலையின் - நிலைமையின் . ஏய - பொருந்திய . வகையானதனையும் - வகையையும் ( பலவகையான நிலைமையையும் ) அறியார் - அறியாதவர்களாவார்கள் . ( ஆயின் ) யார் அது அறிவார் - அவரது தோற்றத்தையும் நிலமையையும் அறியவல்லவர்கள் யார் ? அணிகொள் மார்பின் அகலம் - அழகான மார்பின் அகன்ற இடத்தில் . பாய - முழுவதும் , ( நல்ல ) நீறு அது அணிவான் - திருநீற்றை அணிபவனுமாகிய சிவ பெருமான் . உமைதனோடும் உறை - உமாதேவியோடும் தங்கும் , ( பட்டீசரமே ) மேய் - அடைந்து . ( மேவியவனது ) ஈரடியும் ஏத்த - இரண்டு திருவடிகளையும் துதிக்க . எளிதாகும் நலம் - சிவஞானம் அடைதல் எளிதாகும் . ( அதன்பயனாக அடைய வல்லது ) மேல் - மேலான . உலகமே - முத்தியுலகாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

தடுக்கினை யிடுக்கிமட வார்களிடு பிண்டமது வுண்டுழல்தரும்
கடுப்பொடி யுடற்கவசர் கத்துமொழி காதல்செய்தி டாதுகமழ்சேர்
மடைக்கயல் வயற்கொண்மழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
படைக்கொரு கரத்தன்மிகு பட்டிசர மேத்தவினை பற்றறுதலே.

பொழிப்புரை :

தடுக்கையேந்திப் பெண்கள் இடுகின்ற உணவை உண்டு , சுற்றித் திரிகின்றவர்களும் , கடுக்காய்ப் பொடியைத் தின்பவர்களுமான சமணர்களும் , உடம்பைப் போர்த்திக் கொள்கின்ற பௌத்தர்களும் கூறும் அன்பற்ற மொழிகளை ஏற்க வேண்டா . மடைகளில் கயல்மீன்கள் பாய வளப்பம் மிகுந்த வயல்களையுடைய நெடிய திருப்பழையாறையின் , திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியில் , திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் மழுப்படையைக் கையிலேந்தி வீற்றிருந்தருளும் சிவபெருமானைப் போற்றி வணங்க வினையாவும் முற்றிலும் நீங்கும் .

குறிப்புரை :

தடுக்கினை - இடுக்கி - ( சென்ற இடங்களில் உட்காரத் ) தடுக்கை இடுக்கிக்கொண்டு . மடவார் - பெண்கள் . இடு - இடுகின்ற பிண்டமது - உணவை . உண்டு உழல்தரும் - உண்டு சுற்றித்திரிகின்ற . கடுப்பொடியார் - கடுக்காய்ப் பொடியைத் தின்பவரும் . உடற்கவசர் - உடம்பைப் போர்த்துக்கொள்பவருமான சமணரும் பௌத்தரும் . ( கத்துமொழி ) காதல் செய்திடாது - விரும்பாமல் . கமழ்சேர் - வாசனையுடைய . மடைக்கயல் - மடையின்கண் கயல் மீன்கள் . ( உலாவும் ) வயல் - வயல்களையுடைய . மழபாடி நகர் - மழபாடி நகராகிய . நீடுபழையாறையதனுள் - விஸ்தாரமான பழையாறை நகருள் . படைக்கு ஓர் கரத்தன் - சூலப்படைக்கு ஏற்ற ஒரு கையையுடையவன் . ( கரத்துக்கு ஏற்ற ஓர் படையன் - கையில் ஒரு சூலப்படையை ஏந்தியவன் என்பது நேரிய பொருள் ) மிகு - வளம்மிகுந்த . பட்டீச்சரம் ஏத்த , வினைபற்றறுதலே அதன் பயன் . அதன் பயனென்பது அவாய் நிலை .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மந்தமலி சோலைமழ பாடிநகர் நீடுபழை யாறையதனுள்
பந்தமுயர் வீடுநல பட்டிசர மேயபடர் புன்சடையனை
அந்தண்மறை யோரினிது வாழ்புகலி ஞானசம் பந்தனணியார்
செந்தமிழ்கள் கொண்டினிது செப்பவல தொண்டர்வினை நிற்பதிலவே.

பொழிப்புரை :

தென்றல் உலாவும் சோலைகளையுடைய திருமழபாடி என்னும் நகர்ப் பகுதியைத் தன்னுள் கொண்ட நெடிய பழையாறை என்னும் திருத்தலத்தில் , தன்னையடைந்தவர்கட்குப் பந்தமும் , வீடும் அருளவல்ல நல்ல திருப்பட்டீச்சரம் என்னும் திருக்கோயிலில் வீற்றிருந்தருளுகின்றான் படர்ந்த சிறுசடைகளையுடைய சிவபெருமான் . அப்பெருமானைப் போற்றி எவ்வுயிர்களிடத்தும் இரக்கமுள்ள மறையோர்கள் இனிது வாழ்கின்ற திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அழகிய செந்தமிழில் அருளிய இப்பதிகத்தைக் கேட்டற்கும் , உணர்தற்கும் இனிதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் வினைகள் நீங்கும் .

குறிப்புரை :

மந்தம் - தென்றல் காற்று . மலி - மிகுந்துலாவும் . ( சோலைகளையுடைய ) மழபாடிநகர் - மழபாடி என்னும் நகரப் பகுதியைத் தன்னுட் கொண்ட . நீடு - நெடிய ( பழையாறை என்னும் தலத்தில் ) பந்தம் உயர் வீடும் - பந்தமும் உயர்ந்த முத்தியும் . நல - அடைந்தவர்க்கு அளிப்பதில் நல்லதாகிய . ( பட்டீச்சரம் மேவிய .) படர்புன் சடையனை - படர்ந்த சிறு சடைகளை உடையவனாகிய சிவபெருமானை . அந்தண் - அழகிய ஜீவ காருண்ணியம் உடைய ( மறையோர் ). இனிதுவாழ் - இனிமையாக வாழ்கின்ற . ( புகலி , ஞானசம்பந்தன் ) அணியார் - அணிகளோடு கூடிய . செந்தமிழ்கள் - செந்தமிழ்ப் பதிகங்களை . கொண்டு - பிறவிக் கடல்கடக்கும் புணையாகக்கொண்டு . இனிது செப்பவல தொண்டர் - கேட்டற்கும் உணர்தற்கும் இனியதாகச் சொல்லவல்ல தொண்டர்களின் . வினை - வினைகள் . நிற்பது இல - நில்லாவாம் .
சிற்பி