திருத்தேவூர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

காடுபயில் வீடுமுடை யோடுகலன் மூடுமுடை யாடைபுலிதோல்
தேடுபலி யூணதுடை வேடமிகு வேதியர் திருந்துபதிதான்
நாடகம தாடமஞ்ஞை பாடவரி கோடல்கைம் மறிப்பநலமார்
சேடுமிகு பேடையன மூடிமகிழ் மாடமிடை தேவூரதுவே.

பொழிப்புரை :

சிவபெருமான் வசிக்கும் வீடு சுடுகாடாகும். முடைநாற்றம் பொருந்திய மண்டையோடு அவன் உண்கலமாகும். அவனது ஆடை புலித்தோலாகும். உணவு தேடியுண்ணும் பிச்சையாகும். இத்தகைய கோலமுடைய, வேதத்தை அருளிச் செய்த வேதப் பொருளாக விளங்கும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, சோலைகளில் மயில்கள் ஆட, வண்டுகள் பாட, காந்தள்கள் அசைந்து கைத்தாளமிட, அழகிய இளம் பெண்அன்னம் போன்ற பெண்கள் ஆடவர்களோடு ஊடி, பின் ஊடல் நீங்கி மகிழ்கின்ற மாடங்கள் நிறைந்த திருத்தேவூர் என்பதாகும்.

குறிப்புரை :

பயில் வீடு - தங்கும் வீடு. காடு - மயானம். கலன் - உண்கலம். முடைஓடு - முடை நாற்றம் பொருந்திய மண்டையோடு. மூடும் - அரையை மூடும். உடை ஆடை - உடுத்துக் கொள்வதாகிய ஆடை. புலி தோல் - புலித்தோல். ஊண் - உணவு. தேடுபலி - தேடியுண்ணும் பிச்சை. உடை வேடம்மிகு - இவற்றையுடைய கோலம் மிக்க. வேதியர் - வேதத்தின் பொருளாயுள்ள சிவபெருமானது. திருந்துபதியாம் - திருத்தமான தலமாகும் (சோலைகளில்). மஞ்ஞை நாடகம் அது ஆட - மயில் நாட்டியம் ஆட. அரி - வண்டுகள். பாட - இசைபாட. கோடல் - காந்தள்கள். கைமறிப்ப - கரக்கம்பஞ்செய்ய. நலமார் - அழகுடைய. சேடுமிகு - இளமை மிக்க. பேடை அனம் - பெண் அன்னம்போன்ற மகளிர். ஊடி - ஆடவரோடு பிணங்கி மகிழ் - அவர்கள் பிணக்கு நீக்குவதால் மகிழ்கின்ற. மாடம்மிடை - மாடங்கள் நெருங்கிய (தேவூர் அதுவே) அன்னம் - உவம ஆகுபெயர்.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

கோளரவு கொன்றைநகு வெண்டலையெ ருக்குவனி கொக்கிறகொடும்
வாளரவு தண்சலம கட்குலவு செஞ்சடைவ ரத்திறைவனூர்
வேளரவு கொங்கையிள மங்கையர்கள் குங்குமம் விரைக்குமணமார்
தேளரவு தென்றறெரு வெங்குநிறை வொன்றிவரு தேவூரதுவே. 

பொழிப்புரை :

கொல்லும் தன்மையுடைய பாம்பு, கொன்றை, சிரிக்கும் மண்டையோடு, எருக்கு, வன்னி, கொக்கு இறகு, ஒளி பொருந்திய பாம்பு, குளிர்ச்சி பொருந்திய கங்காதேவி, இவை குலவுகின்ற சிவந்த சடையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், மன்மதனும் விரும்பும் கொங்கைகளை உடைய, கணவரோடு கூடிய இள மங்கையர்கட்குக் குங்குமக் குழம்பின் மணத்தை அதிகரிக்கச் செய்யும் தன்மையுடையதும், கணவரைப் பிரிந்த மகளிர்கட்குத் தேள் கொட்டுவது போல் துன்பஞ் செய்கின்ற தன்மையுடையதுமான தென்றல் காற்று தெருவெங்கும் நிறைந்து பெருகும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

கோள் அரவு - கொலைத் தொழிலையுடைய பாம்பு. (கொன்றை). நகுவெண்டலை - சிரிக்கும் வெண்டலை. (எருக்கு) வன்னி - வன்னியிலை. (கொக்கு இறகொடும்) வாள் அரவும் - ஒளிபொருந்திய பாம்பும்; தண் சல மகள் - குளிர்ச்சி பொருந்திய கங்காதேவியும். குலவு - குலவுகின்ற (செஞ்சடை) வரத்து - வளர் தலையுடைய. (இறைவன் ஊர்). வேள் அரவு - விரும்புதல் பொருந்திய (கொங்கை). இளமங்கையர்கள் - (கணவரோடு கூடிய) இளம் பெண்களின். குங்குமம் விரைக்கு - குங்குமக் குழம்பின் வாசனைக்கு. மணமார் - மேலும் மணத்தைத் தருகின்ற (தென்றல்பிரிந்த மகளிர்க்கு) தேள் அரவு - தேள் கொட்டுவதைப்போல் மோதுகின்ற (தென்றல் தெருவெங்கும்) நிறைவு ஒன்றி - நிறைந்து. வரு தேவூர் அதுவே. தென்றல் காற்று கணவரொடு கூடிய மகளிர்க்கு, பலமலர்களிற் படிந்து கொணர்ந்த வாசனையை வீசி இன்பஞ் செய்கின்றதென்றும், பிரிந்த மகளிர்க்குத் தேள் கொட்டுவதுபோல் துன்பஞ் செய்கின்றதென்றும் கூறியவாறு. கொங்கையிள மங்கையர் என்று கூறப்பட்டிருப்பினும், மங்கையர் கொங்கையெனப் பொருள் கொள்ளல் நேர். வேள் அரவு - தொழிற்பெயர், தோற்று தேற்று என்னும் பகுதிகளில் தல் விகுதிக்குப் பதில் அரவு என்னும் தொழிற்பெயர் விகுதி வந்து தோற்றரவு தேற்றரவு என்றாதற்போல, வேள் + தல் வேட்டல். தல்விகுதிக்குப்பதில், அரவு நின்று, வேளரவு என்றாயிற்று.

பண் :சாதாரி

பாடல் எண் : 3

பண்டடவு சொல்லின்மலை வல்லியுமை பங்கனெமை யாளுமிறைவன்
எண்டடவு வானவரி றைஞ்சுகழ லோனினிதி ருந்தவிடமாம்
விண்டடவு வார்பொழி லுகுத்தநற வாடிமலர் சூடிவிரையார்
செண்டடவு மாளிகை செறிந்துதிரு வொன்றிவளர் தேவூரதுவே. 

பொழிப்புரை :

பண்ணிசை போன்ற இனிய மொழிகளைப் பேசுகின்ற மலைமகளான உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டு எம்மையாளும் இறைவன் எண்ணற்ற தேவர்கள் தன் திருவடிகளை வணங்க இனிது வீற்றிருந்தருளும் இடம், வானளாவி உயர்ந்த சோலைகள் உகுக்கும் தேன்துளிக்கும் மலர்களைச் சூடி, அதனால் நறுமணம் கமழ, ஆகாயமளாவிய உயர்ந்த மாளிகைகள் நிறைந்த திருமகள்வாசம் செய்யும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

பண் தடவு - பண்ணின் இனிமை பொருந்திய (சொல்லின்) மலைவல்லி உமை - மலையின் மகளாகிய உமாதேவியாரை. பங்கன் - ஒரு பங்கில் உடையவனும். எமை - எம்மை (ஆளும் இறைவன்) எண் தடவு - எண்ணத்தக்க. வானவர் - தேவர்கள். இறைஞ்சு கழலோன் - வணங்கும் திருவடியையுடையோனுமாகிய சிவபெருமான். இனிது இருந்த இடம் - மகிழ்வோடிருந்த இடம். விண் தடவுவார் பொழில் - ஆகாயத்தை அளாவிய நெடிய சோலைகள். உகுத்த - சொரிந்த. நறவு ஆடி - தேனில் மூழ்கியும். மலர் சூடி - மலர்களை அணிந்தும். விரை ஆர் - இவற்றால் வாசனைமிகுந்த. சேண் தடவு - ஆகாயமளாவிய. மாளிகை - மாளிகைகள். செறிந்து - நெருங்கி. திருஒன்றி - லக்ஷ்மிகரம் பொருந்தி (வளர் தேவூர் அதுவே) மாளிகைகளைச் சூழப் பூஞ்சோலைகள் உள்ளன. காற்று வீசுவதால் பூந்தேனும் பூக்களும் அவற்றில் வீசப்படுகின்றன. அதனால் அம்மாளிகைகள் (நீரில் மூழ்கி மலர் சூடிவரும் மாதர்கள் போலத்தாங்களும்) தேனில் மூழ்கி மலர்சூடி நிற்பன போற் காணப்படுகின்றன. அவற்றால் வாசனையும் உடையனவாகக் காணப் படுகின்றன வென்பது பின்னிரண்டடிகளின் கருத்து. சேண் என்பது செண் என எதுகை நோக்கிக் குறுக்கல் விகாரம் பெற்றது.

பண் :சாதாரி

பாடல் எண் : 4

மாசின்மன நேசர்தம தாசைவளர் சூலதரன் மேலையிமையோர்
ஈசன்மறை யோதியெரி யாடிமிகு பாசுபதன் மேவுபதிதான்
வாசமலர் கோதுகுயில் வாசகமு மாதரவர் பூவைமொழியும்
தேசவொலி வீணையொடு கீதமது வீதிநிறை தேவூரதுவே. 

பொழிப்புரை :

சிவபெருமான் களங்கமற்ற மனமுடைய அடியார்கள் தன்மேல் கொண்ட பக்தி மேன்மேலும் பெருக விளங்குபவன். சூலப்படையை ஏந்தியவன். வானுலகிலுள்ள தேவர்கட்குத் தலைவன். வேதங்களை ஓதியருளி வேதப்பொருளாயும் விளங்குபவன். நெருப்பேந்தி நடனம் ஆடுபவன். வெற்றிதரும் பாசுபத அஸ்திரம் உடையவன். அத்தகைய சிவபெருமான் இனிது வீற்றிருந்தருளும் தலமாவது, நறுமணமிக்க மலர்களை மூக்கால் கோதுகின்ற குயில்களின் கூவலும், நாகணவாய்ப் பறவை போன்று பேசுகின்ற பெண்களின் இனிய மொழியும், அடியவர்கள் இறைவனைப் புகழும் ஒலியும், வீணை மீட்டும் ஒலியும், கீதங்களின் ஒலியும் நிறைந்து விளங்கும் வீதிகளையுடைய திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

மாசில் மனநேசர் - களங்கமற்ற மனத்தையுடைய, அடியார்கள் (தன்மேல் வைத்த) ஆசைவளர் - ஆசை வளர்தற்குரிய. சூலதரன்- சூலத்தைத் தரித்தவனும். மேலை இமையோர் ஈசன் - வானுலகத்தில் உள்ள தேவர்களுக்குத் தலைவனும், மறைஓதி - வேதங்களை ஒதி அருளியவனும். எரி ஆடி - அக்கினியில் ஆடியவனும், மிகு - வெற்றியை மிகுக்கும். பாசுபதன் - பாசுபத அஸ்திரத்தை யுடையவனும் ஆகிய சிவபெருமான். மேவுபதிதான் - தங்கும் தலமாவது. வாசம் மலர் - வாசனையுடைய மலர்களை. கோதுகுயில் - மூக்கால் கோதுகின்ற குயில்களின். வாசகமும் - கூவுதலும் மாதரவர் - பெண்களின் (மொழிவார்த்தையும்). பூவைமொழி - நாகண வாய்ப்புட்களின் வார்த்தையும், தேசஒலி - வேறு நாட்டில் இருந்து வணங்க வந்தவர்களின் ஓசையும், வீணையொடு - வீணையின் ஒலியுடன் கூடிய. கீதமது - கீதங்களின் ஒலியும். வீதிநிறை - வீதிகளின் நிறைகின்ற. (தேவூர் அது) இனி மாதரவர் பூவைமொழி என்பதற்குப் பெண்கள் பூவைகளைப்பயிற்றும் மொழியின் ஓசையென்றும், பெண்களின் பூவைபோன்ற மொழியின் ஓசையென்றும் பொருள் கோடலும் ஆம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

கானமுறு மான்மறிய னானையுரி போர்வைகன லாடல்புரிவோன்
ஏனவெயி றாமையிள நாகம்வளர் மார்பினிமை யோர்தலைவனூர்
வானணவு சூதமிள வாழைமகிழ் மாதவி பலாநிலவிவார்
தேனமுது வுண்டுவரி வண்டுமருள் பாடிவரு தேவூரதுவே.

பொழிப்புரை :

சிவபெருமான் காட்டில் வாழ்கின்ற மான்கன்றைக் கரத்தில் ஏந்தியவன். யானையின் தோலை உரித்துப் போர்வையாகப் போர்த்தியவன். நெருப்பேந்தித் திருநடனம் செய்பவன். பன்றியின் கொம்பு, ஆமை ஓடு, இளம் பாம்பு, இவற்றை மார்பில் அணிந்தவன். தேவர்களின் தலைவன். அவன் உகந்தருளிய திருத்தலம் வானளாவிய மா, வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்கள் தழைத்து, சொரிகின்ற தேனை உண்டு, வரிகளையுடைய வண்டுகள் தேனுண்ட மயக்கத்தில் பாடும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

கானம் உறும் - காட்டில் வாழும். மான்மறியன் - மான்கன்றை ஏந்தியவன். யானை உரிபோர்வை - யானைத்தோலாகிய போர்வையோடு. கனல் ஆடல் புரிவோன் - நெருப்பில் ஆடுபவன். ஏன எயிறு - பன்றியின் கொம்பும். ஆமை - ஆமையோடும். இளநாகம் - இளம் பாம்புகளும். வளர் - பொருந்துகின்ற. மார்பின் - மார்பை யுடைய (இமையோர் தலைவன்) ஊர் - (தேவர்கள் நாயகனாகிய சிவ பெருமானின்) தலம். வான் அணவு சூதம் - ஆகாயத்தை அளாவிய மாமரங்களும். (வாழை, மகிழ், மாதவி, பலா முதலிய மரங்களும்) நிலவி - தழைத்து. வார்தேன் அமுது உண்டு - சொரிகின்ற தேனாகிய உணவை உண்டு. வரிவண்டு - இசைபாடும் வண்டுகள். மருள் - அந்தக் காலத்திற்குரியதல்லாத பண்ணை (தேன் உண்ட மயக்கத்தால்) பாடி வரு(ம்) தேவூர் அதுவே. மருள் - மருள்தல் தொழிலாகுபெயர். வளர் என்பது இங்குப் பொருந்திய என்னும் பொருள் தந்து நின்றது. வண்டு மருள் பாடி என்பதனை \\\\\\\"மாலை மருதம் பண்ணிக் காலைக் கைவழி மருங்கிற் செவ்வழி பண்ணி வரவெமர் மறந்தனர்\\\\\\\" என்னும் செய்தியிலும் காண்க. (புறநானூறு - 149.)

பண் :சாதாரி

பாடல் எண் : 6

ஆறினொடு கீறுமதி யேறுசடை யேறனடை யார்நகர்கடான்
சீறுமவை வேறுபட நீறுசெய்த நீறனமை யாளுமரனூர்
வீறுமல ரூறுமது வேறிவளர் வாயவிளை கின்றகழனிச்
சேறுபடு செங்கயல் விளிப்பவிள வாளைவரு தேவூரதுவே. 

பொழிப்புரை :

சிவபெருமான் சடையிலே கங்கையோடு, பிறைச்சந்திரனையும் அணிந்தவன். இடபவாகனம் ஏறியவன். கோபம்கொண்டு தேவர்களைத் துன்புறுத்தும் பகையசுரர்களின் முப்புரங்களை எரித்துச் சாம்பலாகும்படி செய்தவன். திருமேனியில் திருநீற்றைப் பூசியவன். நம்மையாட்கொள்ளும் அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், செழிப்பான மலர்களிலிருந்து ஊறும் தேன் வயல்களில் பாய்ந்து சேறுபடுத்த, கயல்மீன்கள் விளையாட அழைக்க இள வாளைமீன்கள் வருகின்ற திருத்தேவூர் என்பதாகும்.

குறிப்புரை :

ஆறினொடு - கங்காநதியுடனே. கீறுமதி - பிறைச் சந்திரனும், ஏறு - ஏறியுள்ள. சடை - சடையையுடைய, ஏறன் - இடப வாகனத்தையுடையவனும், சீறும் அவை (தேவர் முதலியோரை) சீறி அழிப்பனவாகிய. அடையார் நகர்கள் - பகைவர்களின் முப்புரங்களையும், வேறுபட நீறுசெய்த - அழியும்படியாக எரித்து. நீறன் - திருநீற்றைப் பூசியருளியவனும் (ஆகிய) நமையாளும் அரன் - நம்மை யாட்கொள்ளும் சிவபெருமானின் (ஊர்) வீறுமலர் ஊறும் மது - செழித்த மலரில் ஊறிவடிகின்ற தேன் வெள்ளமானது. ஏறி - பாய்ந்து. வளர்வாய - விளைகின்ற. கழனி - வயல்களின். சேறுபடு - சேற்றிலுள்ள, செங்கயல் விளிப்ப - செவ்விய கயல்மீன்கள் (தம்மோடு விளையாடக்) கூப்பிட. இளவாளைவரு - இளமை பொருந்திய வாளைமீன்கள் வரும் (தேவூரதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 7

கன்றியெழ வென்றிநிகழ் துன்றுபுர மன்றவிய நின்றுநகைசெய்
என்றனது சென்றுநிலை யெந்தைதன தந்தையம ரின்பநகர்தான்
முன்றின்மிசை நின்றபல வின்கனிக டின்றுகற வைக்குருளைகள்
சென்றிசைய நின்றுதுளி யொன்றவிளை யாடிவளர் தேவூரதுவே. 

பொழிப்புரை :

கோபித்து உலகையழிக்க எண்ணி வெற்றிபெற்ற பகையசுரர்களின் நெருங்கிய மூன்றுபுரங்களையும், சிவபெருமான் சிரித்துச் சாம்பலாகுமாறு செய்தவன். நான் சென்றடையக் கூடிய பற்றுக்கோடாக விளங்குபவன். என் தந்தைக்குத் தந்தையாகிய அச்சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் இனிய தலமாவது, வீட்டின் முன்னால் நின்ற பலாக்கனிகளைத் தின்று கறவைப் பசுக்களின் கன்றுகள் துள்ளி விளையாடி வளர்கின்ற திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

கன்றி எழ - கோபித்து (உலகை அழிக்கக் கிளம்ப) வென்றி நிகழ் - வெற்றிபெற்ற. துன்று - நெருங்கிய. புரம் - திரிபுரங்களையும். அன்று அவிய - அக்காலத்தில் அழியும்படி. நின்று நகை செய் - நின்று சிரித்த. என்தனது - என்னுடைய. சென்று நிலை - சென்று (அடையக் கூடிய) பற்றுக்கோடும். எந்தை தனதந்தை - என் தந்தைக்குத் தந்தையுமாகிய சிவபெருமான். அமர் - விரும்பும். இன்பநகர் - இன்பகரமான தலம். கறவைக் குருளைகள் - கறவைப் பசுக்களின் கன்றுகள். சென்று - போய். முன்றின்மிசை நின்ற - வீட்டின் முன்னால் நின்ற. (பலவின் கனிகள் தின்று) இசைய நின்று - பொருந்த நின்று. ஒன்ற - ஒருசேர. து(ள்)ளி விளையாடி - துள்ளி விளையாடி. வளர் - வளர்கின்ற (தேவூர் அதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஓதமலி கின்றதெனி லங்கையரை யன்மலி புயங்கணெரியப்
பாதமலி கின்றவிர லொன்றினில் அடர்த்தபர மன்றனதிடம்
போதமலி கின்றமட வார்கணட மாடலொடு பொங்குமுரவம்
சேதமலி கின்றகரம் வென்றிதொழி லாளர்புரி தேவூரதுவே. 

பொழிப்புரை :

கடல் அலைகள் மோதுகின்ற தென்னிலங்கை மன்னனான இராவணனின் வலிமை மிகுந்த புயங்கள் நெரிபடத் தன் காற்பெருவிரலை ஊன்றி அடர்த்த சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, மகிழ்ச்சி மிகுந்த பெண்கள் நடனமாடவும், முழவு ஒலிக்கவும், சேற்றில் பயில்கின்ற கையினால் உழவுத் தொழில் செய்து வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் வேளாளர்கள் நிறைந்த திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

ஓதம் மலிகின்ற - கடல் அலைகள் மோதுகின்ற. தென் இலங்கை அரையன் - இராவணனது, வலி - வலிமை மிகுந்த. புயங்கள் - தோள்கள். நெரிய - அரைபட. பாதம் மலிகின்ற - பாதத்தில் பொருந்திய. விரல் ஒன்றினில் - ஒருவிரலால். அடர்த்த - நெருங்கிய. (பரமன் தனது இடம் ஆம் நகரில்) போதம் மலிகின்ற மடவார் - மகிழ்ச்சி மிகுந்த பெண்கள். நடமாடல் ஒடு - நாட்டிய மாடுவதொடு, பொங்கும் முரவம் - ஒத்து முழங்கும் முழவின் ஓசை ஒலிக்க (வயலுள்) சேதம் மலிகின்ற - சேற்றில் பயில்கின்ற. கரம் - கையினால். தொழிலாளர் - உழவுத் தொழிலினர். வெற்றி புரி - வறுமைப் பிணியையும், பசிப்பிணியையும் ஓட்டி வெற்றிகாணும் (வேளாண்மை விளைவைச் செய்யும் தேவூரதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வண்ணமுகி லன்னவெழி லண்ணலொடு சுண்ணமலி வண்ணமலர்மேல்
நண்ணவனு மெண்ணரிய விண்ணவர்கள் கண்ணவ னலங்கொள்பதிதான்
வண்ணவன நுண்ணிடையி னெண்ணரிய வன்னநடை யின்மொழியினார்
திண்ணவண மாளிகை செறிந்தவிசை யாழ்மருவு தேவூரதுவே.

பொழிப்புரை :

கருநிற மேகத்தையொத்த அழகிய திருமாலும், மகரந்தப்பொடி நிறைந்த தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும், அளவற்ற தேவர்களும் `இவர் நிலைமையை அறியும்வழி என்ன` என்று யோசிக்கும்படி நெருப்புப்பிழம்பாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், அழகிய நிறமும், சிறிய இடையும், அன்ன நடையும், அளவற்ற இனிய மொழிகளுமுடைய பெண்கள், உறுதியாக அமைந்த மாளிகைகளில் யாழிசைக்க விளங்கும் திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

வண்ணமுகில் அன்ன எழில் அண்ணலொடு - கருநிறத்தையுடைய மேகத்தையொத்த அழகிய திருமாலுடன், சுண்ணமலி வண்ண - மகரந்தப் பொடிநிறையும் இயல்பையுடைய. மலர்மேல் - தாமரைமேல். நண் அவனும் - தங்கும் பிரமனும். எண் அரிய - அளவற்ற. விண்ணவர்கள் - ஏனைத் தேவர்களும். கண்ண - இவர் நிலைமையை அறியும் வழி என் என்று யோசிக்குமாறு (வளர்ந்த) அனலம் - அக்கினி வடிவமான சிவபெருமான். கொள் - இடமாகக் கொண்ட. பதி - தலம். வண்ணம் வனம் - நிறத்தின் அழகையும் (அழகிய நிறத்தையும்). நுண்ணிடை - சிறிய இடையையும், அன்னம் நடை - அன்னம் போன்ற நடையினையும் உடைய. எண்ணரிய - அளவற்ற. இன்மொழியினார் - இனிய மொழிகளையுடைய பெண்கள். (தங்குகின்ற) திண்ணவணம் - உறுதியான அமைவுடைய. மாளிகை - மாளிகைகளில், செறிந்த - மிகுந்த, யாழ் இசை - யாழ் முதலிய கருவிகளில் ஓசையும். மருவு - பொருந்திய. (தேவூர் அதுவே.)

பண் :சாதாரி

பாடல் எண் : 10

பொச்சமமர் பிச்சைபயி லச்சமணு மெச்சமறு போதியருமா
மொச்சைபயி லிச்சைகடி பிச்சன்மிகு நச்சரவன் மொச்சநகர்தான்
மைச்சின்முகில் வைச்சபொழில்
* * * * * * 

பொழிப்புரை :

பொய்யான துறவு வேடம்கொண்டு பிச்சை யெடுக்கும் சமணர்களும், புகழற்ற புத்தர்களும் கூறும் விருப்பமான உபதேச மொழிகளை விலக்கி, பித்தன் எனப்படுபவனும், விடமுடைய பாம்பை அணிந்தவனும் ஆகிய சிவபெருமானுடைய, மொய்த்த மெய்யடியார்கள் நெருங்கிய தலமாவது, மேகத்தைத் தொடும்படி உயர்ந்துள்ள சோலைகள் சூழ்ந்த திருத்தேவூர் ஆகும்.

குறிப்புரை :

பொச்சம் அமர் - பொய் பொருந்திய. (துறவி வேடங் கொண்டு) பிச்சையெடுக்கும். அச்சமணும் - அந்தச் சமணர்களும். எச்சம் அறு - புகழற்ற. போதியரும் - புத்தர்களும். ஆம் - ஆகிய. மொச்சை - இழி தொழிலர். பயில் - சொல்லும். இச்சை - விருப்பமான உபதேசமொழிகளை. கடி - விலக்கும். பிச்சன் - பித்தன் என்னும் பெயருடையவனும். மிகு நச்சு அரவன் - மிகுந்த விடத்தைக்கக்கும் பாம்பை அணிந்தவனுமாகிய சிவபெருமானது. மொச்ச - (மொய்த்த) அடியார்கள் நெருங்கிய (நகர்தான்) மைசில் முகில் - கரிய சில மேகங்கள். வைச்சபொழில் - தங்கிய சோலைகள் ..... எச்சம் - புகழ் என்னும் பொருளில் வருதலை \\\"எச்சமென்றென்னெண்ணும் கொல்லோ\\\" (குறள். 1004) என்பதாலும் அறிக. பிச்சன்:- \\\"பிச்சன் பிறப்பிலி பேர் நந்தி.\\\" (தி.10 திருமந்திரம்).

பண் :சாதாரி

பாடல் எண் : 11

துங்கமிகு பொங்கரவு தங்குசடை நங்களிறை துன்றுகுழலார்
செங்கயல்கண் மங்கையுமை நங்கையொரு பங்கனமர் தேவூரதன்மேல்
பைங்கமல மங்கணிகொள் திண்புகலி ஞானசம் பந்தனுரைசெய்
சங்கமலி செந்தமிழ்கள் பத்துமிவை வல்லவர்கள் சங்கையிலரே. 

பொழிப்புரை :

நீண்டு வளர்ந்து படமெடுக்கும் பாம்பைச் சிவந்த சடையில் அணிந்தவர் நம் தலைவரான சிவபெருமான். அவர் அடர்ந்த கூந்தலையும், செவ்விய கயல்மீன் போன்ற கண்களையுமுடைய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர். அவர் வீற்றிருந்தருளும் தலம் திருத்தேவூர், அதைப் போற்றிப் பசிய தாமரை மலர்கள் அழகு செய்கின்ற வலிய திருப்புகலியில் அவதரித்த ஞானசம்பந்தன் அருளிய இச்செந்தமிழ்ப்பாக்கள் ` அடியார் கூட்டங்களில் ஓத வல்லவர்கள் குற்றமற்றவர் ஆவர்.

குறிப்புரை :

துங்கம் மிகு - உயர்ச்சி மிகுந்த. பொங்கு அரவு - மிகுந்த பாம்புகள். தங்கு - தங்குகின்ற. சடை - சடையையுடைய. நங்கள் இறை - எங்கள் தலைவனும். துன்று - அடர்ந்த. குழல் ஆர் - கூந்தலையுடைய. செங்கயல்கண் - செவ்விய மீன்போன்ற கண்களையுடைய. மங்கை - பெண்ணாகிய. உமைநங்கை - உமாதேவியார். ஒருபங்கன் - ஒரு பாகமாக உடைய சிவபெருமான். அமர் - விரும்புகின்ற. (தேவூர் அதன் மேல்) பைங்கமலம் - பசிய தாமரை மலர்கள். அணிகொள் - அழகைச் செய்கின்ற. திண்புகலி - வலிய சீகாழியில் (அவதரித்த, ஞானசம்பந்தன்.) உரைசெய் - பாடிய. சங்கம் மலி - அடியார் கூட்டங்களில் ஓதுதற்கரிய. (செந்தமிழ்கள் பத்தும் இவை வல்லவர்) சங்கை இலர் - குற்றமற்றவர் ஆவர்.
சிற்பி