திருச்சண்பைநகர்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

எந்தமது சிந்தைபிரி யாதபெரு மானென விறைஞ்சியிமையோர்
வந்துதுதி செய்யவளர் தூபமொடு தீபமலி வாய்மையதனால்
அந்தியமர் சந்திபல வர்ச்சனைகள் செய்யவமர் கின்றவழகன்
சந்தமலி குந்தளநன் மாதினொடு மேவுபதி சண்பைநகரே.

பொழிப்புரை :

`எங்கள் சிந்தையிலிருந்து நீங்காத தலைவனே !` என்று தேவர்கள் தொழுது போற்ற , நறுமணம் கமழும் தூபதீபம் முதலிய உபசாரங்களோடு பூசாவிதிப்படி மாலை , முதலிய சந்தியா காலங்களில் அர்ச்சனைகள் செய்ய வீற்றிருக்கும் அழகனான சிவபெருமான் , நறுமணம் கமழும் கூந்தலையுடைய உமாதேவியை உடனாகக் கொண்டு விளங்குகின்ற தலம் திருச்சண்பைநகர் ஆகும் .

குறிப்புரை :

இமையோர் - தேவர்கள் . எம் தமது - எம்முடைய . சிந்தை பிரியாத - மனத்தினின்றும் நீங்காத . பெருமான் என - தலைவனென்று . வந்து துதிசெய்ய - வந்து துதிக்கவும் . வளர் - வாசனை மிகுந்த . தூபம் ஒடு - தீபம் ( ஒடு ) - தூப தீபங்கள் முதலிய உபசாரங்களோடு . மலிவாய்மை அதனால் - சிறந்த விதிப்படி , அந்தி - மாலை நேரங்களிலும் . அமர் - பொருந்திய . பலசந்தி - பலசந்தியா காலங்களிலும் . அர்ச்சனைகள் செய்ய - அருச்சிக்கவும் , அமர்கின்ற - விரும்புகின்ற . அழகன் - சிவபெருமான் . சந்தம்மலி - அழகுமிக்க , குந்தளம் - கூந்தலையுடைய , நல்மாதினொடும் - நல்ல உமாதேவியாரோடும் . மேவு - பொருந்திய . பதி - தலம் . ( சண்பை நகரே ). அழகன் - சிவபெருமானுக்கொருபெயர் ; ` அணங்கு காட்டில் அனல்கையேந்தி அழகன் ஆடுமே ` ( தி .11 காரைக்காலம்மையார் மூத்த திருப்பதிகம் பா .2.) என்பதும் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

அங்கம்விரி துத்தியர வாமைவிர வாரமமர் மார்பிலழகன்
பங்கய முகத்தரிவை யோடுபிரி யாதுபயில் கின்றபதிதான்
பொங்குபர வைத்திரை கொணர்ந்துபவ ளத்திரள் பொலிந்தவயலே
சங்குபுரி யிப்பிதர ளத்திரள் பிறங்கொளிகொள் சண்பைநகரே.

பொழிப்புரை :

திருமேனியிலே பரந்த புள்ளிகளையுடைய பாம்பையும் , ஆமையோட்டையும் கலந்த மாலையாக மார்பிலே விரும்பியணிந்த அழகனாகிய சிவபெருமான் , தாமரை மலர்போன்ற முகத்தையுடைய உமாதேவியாரோடு பிரியாது வாழ்கின்ற தலமாவது , பொங்கியெழும் கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து குவிக்கின்ற பவளத்திரள்களின் பக்கத்திலே , வலம்புரிச் சங்குகளும் , சிப்பிகளும் சொரிந்த முத்துக் குவியல்களின் மிகுதியான பிரகாசத்தைக் கொண்ட திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

அங்கம் - உடம்பில் , விரி - பரந்த . துத்தி - புள்ளிகளையுடைய . அரவு - பாம்புகளையும் . ஆமை - ஆமையோட்டையும் . மார்பில் . விரவு - கலந்த . ஆரம் - ஆரமாக . அமர் - விரும்பும் . அழகன் - சிவபெருமான் . பங்கயம் - தாமரைபோன்ற . முகத்து - முகத்தையுடைய . அரிவையோடு - உமாதேவியாருடன் . பிரியாதுபயில் - பிரியாமல் வாழ்கின்ற . பதி - தலம் . பொங்கு - மிகுந்த . பரவைத்திரை - கடலலைகள் . கொணர்ந்து - அடித்துக் கொண்டுவரக் ( குவிந்த ) பவளத்திரள் - பவளக்குவியல்களின் . அயலே - பக்கத்தில் . சங்கு - சங்குகளும் . புரி - வலமாகச் சுற்றிய . இப்பி - சிப்பிகளும் . ( சொரிந்த ) தரளத்திரள் - முத்தின் குவியல்கள் . பிறங்கு - சிவப்பும் . வெண்மையும் கலந்து விளங்கும் . ஒளிகொள் - பிரகாசத்ததைக்கொண்ட ; சண்பை நகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

போழுமதி தாழுநதி பொங்கரவு தங்குபுரி புன்சடையினன்
யாழின்மொழி மாழைவிழி யேழையிள மாதினொ டிருந்தபதிதான்
வாழைவளர் ஞாழன்மகிழ் மன்னுபுனை துன்னுபொழின் மாடுமடலார்
தாழைமுகிழ் வேழமிகு தந்தமென வுந்துதகு சண்பைநகரே.

பொழிப்புரை :

வட்டவடிவைப் பிளந்தாற் போன்ற பிறைச் சந்திரனும் , கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும் , சீறும் பாம்புகளும் தங்குகின்ற முறுக்குண்ட செஞ்சடையுடையவன் சிவபெருமான் , யாழ் போன்ற இனிய மொழியையும் , மாம்பிஞ்சு போன்ற விழிகளையும் கொண்டு தன்னையே பற்றுக் கோடாகக் கொண்ட உமாதேவியோடு அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , வாழை , புலிநகக் கொன்றை , மகிழ் , புன்னை முதலிய மரங்கள் நிறைந்து அடர்ந்த சோலைகளின் பக்கத்தில் மடல்கள் பொருந்திய தாழையின் அரும்பை யானையின் ஒடிந்த தந்தம் என்று சூடாது அலட்சியம் செய்யும் திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

போழும் - ( வட்டவடிவை ) பிளந்தால் அனைய . மதி - பிறைச்சந்திரனும் . தாழும்நதி - கீழே பாய்ந்து ஓடுகின்ற கங்கையாறும் . பொங்கு அரவு - மிகுந்த பாம்புகளும் . தங்கு - தங்குகின்ற . புரி - முறுக்கிய ( புன்சடையினன் ) யாழின் மொழி - வீணையின் ஓசையை யொத்த ( மொழி ). மாழை விழி - மாம்பிஞ்சுபோன்ற கண்ணையும் . ஏழை இள மாதின் ஒடு - தனக்கென ஒரு செயல் இல்லாதவளாகிய இளமையுடைய பெண்பிள்ளையுடனே . இருந்த பதிதான் - தங்கி இருக்கும் தலமாவது . வாழை - வாழை மரங்களும் , வளர்ஞாழல் - வளர்கின்ற புலிநகக் கொன்றையும் . மகிழ் - மகிழமரங்களும் . மன்னு பு ( ன் ) னை - நிலைபெற்ற புன்னை மரங்களும் . துன்னு - அடர்ந்த . பொழில்மாடு - சோலைகளில் . தாழை முகிழ் - தாழம் அரும்பை . வேழம் - யானையின் . இகு - ஒடித்த . தந்தமென - தந்தமென்று . உந்துதரு - ( சூடாது ) அலட்சியம் செய்யும் ( சண்பைநகரே .) ` எத்திறன் நின்றான் ஈசன் அத்திறத்து அவளும் நிற்பள் ` என்னும் உண்மை நூல் ( சித்தியார் சூ . 2.75.) மொழிபற்றி ` ஏழை ` யென்றார் . ` தாழை .... உந்து ` - திரிபதிசய அணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கொட்டமுழ விட்டவடி வட்டணைகள் கட்டநட மாடிகுலவும்
பட்டநுதல் கட்டுமலர் மட்டுமலி பாவையொடு மேவுபதிதான்
வட்டமதி தட்டுபொழி லுட்டமது வாய்மைவழு வாதமொழியார்
சட்டகலை யெட்டுமரு வெட்டும்வளர் தத்தைபயில் சண்பைநகரே.

பொழிப்புரை :

முழவு முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , வைத்த பாதங்கள் வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்யத் திருநடனம் செய்யும் சிவபெருமான் பட்டத்தை நெற்றியில் அணிந்து , சூடிய மலர்மாலைகளின் நறுமணம் மிகுந்த பாவை போன்ற உமாதேவியாரோடு வீற்றிருந்தருளுகின்ற தலமாவது , எப்போதும் உண்மையே பேசுகின்ற , அறுபத்து நான்கு கலைகளையும் பயில்கின்ற கற்றவர்கள் கூறுவனவற்றை , சந்திரனொளி நுழைய முடியாதவாறு ஓங்கி உயர்ந்து அடத்தியாக உள்ள சோலைகளில் வளர்கின்ற கிளிகள் சொல்லும் பான்மையுடன் விளங்கும் திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

முழவுகொட்ட - வாத்தியங்கள் அடிக்க . இட்ட - வைத்த . அடி - பாதங்கள் . வட்டணைகள் கட்ட - வட்டணை என்னும் நாட்டிய வகைகளைச் செய்ய . நடமாடி - நடனமாடும் சிவபெருமான் . குலவும் - விளங்கும் . பட்டம் - பட்டத்தை . நுதல்கட்டு - நெற்றியில் அணிந்த . மலர் - சூடியமலர் மாலைகளின் . மட்டு - வாசனை . மலி - மிகுந்த . பாவையொடு - பதுமைபோன்ற உமாதேவியுடன் . மேவுபதி - தங்கும்தலம் . தமது வாய்மை வழுவாத - தமது உண்மை தவறாத . மொழியார் - வார்த்தைகளையுடைய கற்றோர்களின் . சட்ட - முறையான் . கலை எட்டும் மருவெட்டும் - கலைகள் அறுபத்து நான்கையும் . வட்டமதி - வட்டமான சந்திரன் . தட்ட - தடுக்கப்பட்ட . பொழிலுள் - சோலையிலே . வளர் - வளர்கின்ற . தத்தை - கிளிகள் . பயில் - சொல்லும் ( சண்பைநகர் ) சட்டகலை ...... பயில் என்பது வீறுகோள் அணி .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பணங்கெழுவு பாடலினொ டாடல்பிரி யாதபர மேட்டிபகவன்
அணங்கெழுவு பாகமுடை யாகமுடை யன்பர்பெரு மானதிடமாம்
இணங்கெழுவி யாடுகொடி மாடமதி னீடுவிரை யார் புறவெலாந்
தணங்கெழுவி யேடலர்கொ டாமரையி லன்னம்வளர் சண்பைநகரே.

பொழிப்புரை :

பண்ணிசையோடு கூடிய பாடலும் , ஆடலும் நீங்காத பரம்பொருளும் , ஐசுவரியம் முதலிய ஆறுகுணங்களை உடையவனும் , உமாதேவியைத் தன் திருமேனியில் இடப்பாகமாகக் கொண்டவனும் , அன்பர்கட்கு அருள்புரிகின்ற பெருமானுமாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , ஒன்றோடொன்று இணங்கியாடுமாறு நாட்டப்பட்ட கொடிகளையுடைய மாடங்களும் , மதில்களும் உடையதும் , மணம் பொருந்திய புறவிடங்களிலெல்லாம் குளிர்ச்சி பொருந்திய இதழ்கள் விரிந்த தாமரைமலர்கள் மேல் அன்னங்கள் வளர்கின்ற இயல்பினதும் ஆகிய திருச்சண்பைநகர் ஆகும் .

குறிப்புரை :

பண் ( அம் ) - இசை . கெழுவு - பொருந்திய . பாடலினொடு ஆடல் பிரியாத - பாடலையும் ஆடலையும் நீங்காத ; பர மேட்டி , பகவன் - ஐசுவரியம் முதலிய ஆறு குணங்களையும் உடையவனும் . அணங்கெழுவு - பெண் பொருந்திய . பாகமுடை - இடப்பாகம் உள்ள . ஆகம் உடை - உடம்பை உடைய . அன்பர் பெருமானது - அன்பர்களுக்கெல்லாம் தலைவனாகிய சிவபெருமானது ( இடம் ஆம் ). எழுவி - நாட்டப்பட்டு . இணங்கு - ஒன்றோடு ஒன்று ஒத்த . ஆடுகொடி - ஆடும் கொடிகளையுடைய . மாடம் அதில் - மாளிகைகளில் . நீடுவிரையார் - மாதர் ; பூசுவன , சூடுவனவற்றால் வாசனை மிக்கு . புறவு எலாம் - புறாக்கள் எல்லாம் . தண்அம்கெழுவி - மகிழ்ச்சி பொருந்தி . ( உலாவ ). ஏடு அலர்கொள் தாமரையில் - இதழ்கள் விரிந்த தாமரை மலர்களில் . அன்னம் வளர் - அன்னங்கள் வளர்கின்ற ( சண்பை நகரே ). ஆர் - ஆர்ந்து . வினையெச்சம் பகுதியளவாய் நின்றது . நம் மினத்தில் ஒரு பறவை வந்து பேறு பெற்ற இடம் நமக்கு மிக்க உறவாகுமென்று புறாக்கள் மகிழ்கின்றன . தண் - குளிர்ச்சி ; மகிழ்ச்சி மேல் நின்றது . ` சிராப்பள்ளிக் குன்றுடையானைக் கூறவென்னுள்ளம் குளிரும்மே ` என்புழிப்போல . தண்பண் என்பன தனிமொழிக்கண்ணும் சாரியை யேற்றன .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பாலனுயிர் மேலணவு காலனுயிர் பாறவுதை செய்தபரமன்
ஆலுமயில் போலியலி யாயிழைத னோடுமமர் வெய்துமிடமாம்
ஏலமலி சோலையின வண்டுமலர் கிண்டிநற வுண்டிசைசெயச்
சாலிவயல் கோலமலி சேலுகள நீலம்வளர் சண்பைநகரே.

பொழிப்புரை :

பாலனான மார்க்கண்டேயனின் உயிரைக் கவர வந்த எமனது உயிர் நீங்கும்படி உதைத்த பரமன் , ஆடுகின்ற மயில் போன்ற சாயலையுடைய ஆராய்ந்து தேர்ந்தெடுத்த ஆபரணங்களையணிந்த உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலமாவது , ஏலம் முதலிய வாசனைப் பொருள்கள் மிகுந்த சோலைகளில் வண்டுகளின் கூட்டம் மலர்களைக் கிளறி , தேனைக்குடித்து இசைபாட , அழகிய மீன்கள் துள்ளிப்பாய , நீலோற்பல மலர்கள் செழித்து வளர்கின்ற திருச்சண்பை நகர் ஆகும் .

குறிப்புரை :

பாலன் உயிர்மேல் அணவுகாலன் உயிர்பாற - மார்க்கண்டேயனது உயிர்மேற் சென்ற யமன் உயிர் நீங்க . உதை செய்த பரமன் - உதைத்த மேன்மையுடையவனும் . ஆலும் - ஆடுகின்ற . மயில் போல் - மயில்போன்ற . இயலி - சாயலையுடையவராகிய , ஆயிழைதனோடும் - ஆராய்ந்த ஆபரணத்தையணிந்த உமாதேவியாரோடும் . அமர்வு எய்துமிடம் - தங்குதல் பொருந்திய தலம் . ஏலம் மலி சோலை - ஏலம் முதலிய ஓடதி வர்க்கங்கள் மிகுந்த சோலையிலே . இளவண்டு - இளம் வண்டுகள் . மலர்கிண்டி - மலரைக் கிளறி . நறவு உண்டு - தேனைக் குடித்து . இசை செய - பாட . சாலிவயல் - நெல் விளைந்த வயல்களிலே . கோலமலி - அழகுபொருந்திய . சேலுகள - மீன்கள் துள்ளிப்பாய . நீலம் வளர் - நீலோற்பலங்கள் செழிக்கின்ற ( சண்பை நகரே ). செய்யஉகள என்பன காரணகாரியப் பொருளின்றி வந்த வினையெச்சங்கள் . ` வாவிதொறும் வண்கமலம் முகங்காட்டச் செங் குமுதம் வாய்கள் காட்டக் கருநெய்தல் கண்காட்டும் கழுமலமே ` என்புழிப்போல் . ( தி .1. ப .129. பா .1.)

பண் :சாதாரி

பாடல் எண் : 7

விண்பொயத னான்மழைவி ழாதொழியி னும்விளைவு தான்மிகவுடை
மண்பொயத னால்வளமி லாதொழியி னுந்தமது வண்மைவழுவார்
உண்பகர வாருலகி னூழிபல தோறுநிலை யானபதிதான்
சண்பைநக ரீசனடி தாழுமடி யார்தமது தன்மையதுவே.

பொழிப்புரை :

வானம் பொய்த்து மழை பெய்யாது ஒழிந்தாலும் , மிகுந்த விளைச்சலைத்தரும் நிலம் வறண்டதால் வளம் இல்லாமல் போனாலும் , அடியவர்கட்கும் , மற்றும் பசித்தவர்கட்கும் உணவுதரத் தம் கொடைத்தன்மையில் தவறாதவர்கள் , நெடிய உலகத்தில் பல ஊழிகளிலும் நிலையாக இருந்த தலம் திருச்சண்பைநகர் ஆகும் . அங்குக் கோயில் கொண்ட சிவபெருமான் திருவடிகளைத் தொழுது வணங்குகின்ற அடியார்களின் தன்மையும் அதுவேயாகும் .

குறிப்புரை :

விண் - மேகம் . பொய் அதனால் - பொய்த்ததனால் . மழை விழாது ஒழியினும் - மழைத்துளிகள் விழாது ஒழிந்தாலும் . விளைவுதான் மிகவுடை - விளைவு மிகுதலையுடைய . மண்பொய் அதனால் - நிலம் வறண்டமையால் . வளம் இராது ஒழியினும் - வளம் இல்லாமல் போயினும் . தமது வண்மை வழுவார் - தமது கொடை தவறாதவர்களாகி . உண்பகர - அடியவர்களுக்கு உணவு தர . வார் உலகின் - நெடிய உலகத்தில் , ( பல ஊழிதோறும் , நிலையான பதி சண்பை நகராகும் .) ஈசன் அடி - அங்குள்ள சிவபெருமானின் திருவடிகளை . தாழும் அடியார் - வணங்கும் அடியார்களது . தன்மை அது - தன்மையும் அதுவாம் என்றது தலத்திலுள்ள வள்ளியோர் ` வான்பொய்ப்பினும் , மண்பொய்ப்பினும் வண்மைகுன்றாவாறு போல ` அடியார்களும் வானந்துளங்கினும் மண்கம்பமாகினும் , அஞ்சகில்லாது தம்வழிபாடு குறைவின்றிப் பூசிப்பர் என்பதாம் . மழைவிழாதொழிதலும் மண்வளமிலாதொழிதலும் ஒரு காலத்தும் நேரா என்ற பொருள் தரலால் அவை எதிர்மறையும்மைகள் . உணவு என்ற பெயர்ப்பகுபதம் உண் எனப் பகுதியளவாய் நின்றது .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

வரைக்குலம கட்கொரு மறுக்கம்வரு வித்தமதி யில்வலியுடை
அரக்கனது ரக்கரசி ரத்துற வடர்த்தருள் புரிந்தவழகன்
இருக்கையத ருக்கன்முத லானவிமை யோர்குழுமி யேழ்விழவினிற்
றருக்குல நெருக்குமலி தண்பொழில்கள் கொண்டலன சண்பைநகரே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்து இமயமலையரசனின் மகளான உமாதேவிக்கு அச்சத்தை உண்டாக்கிய , அறிவற்ற ஆனால் வலிமையுடைய இராவணனின் மார்பு , கைகள் , தலைகள் ஆகியவை மலையின்கீழ் நொறுங்கும்படி தன் காற்பெருவிரலை ஊன்றி , பின் அவன் தன் தவறுணர்ந்து இறைஞ்ச ஒளிபொருந்திய வெற்றிவாளும் , நீண்ட ஆயுளும் கொடுத்து அருள்புரிந்த அழகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , சூரியன் முதலான தேவர்கள் ஏழாந்திருவிழாவில் கூடிவந்து வணங்க , தேவலோகத்திலுள்ள கற்பகச்சோலையை நெருக்கும்படி , மேகம் படிந்த குளிர்ச்சி பொருந்திய சோலைகள் சூழ்ந்த வளமிக்க திருச்சண்பைநகர் ஆகும் .

குறிப்புரை :

வரை - இமயமலையில் அவதரித்த . குலமகட்கு - சிறந்த உமாதேவியாருக்கு . ஒரு மறுக்கம் - ஓர் அச்சத்தை . வருவித்த - உண்டாக்கிய . மதி இல் - புத்தியில்லாத . வலியுடை - வலிமையையுடைய . அரக்கனது இராவணனது . உரகரசிரத்து - மார்பு , கைகள் , தலைகளில் . உற - அழுந்த . அடர்த்து - நெருக்கி , ( பின் அவன் வேண்ட அருள் புரிந்த ). அழகன் - அழகனாகிய சிவபெருமானின் . இருக்கை அது - இருக்கும் தலமாவது . ஏழ் விழவினில் - ஏழாந்திருவிழாவில் . இமையோர் குழுமி - தேவர்கள் கூடி வணங்க . கொண்டலன - மேகம் படிந்தனவாகிய . மலி - செழித்த . தண் பொழில்கள் - குளிர்ச்சி பொருந்திய சோலைகள் . தருக்குலம் - கற்பகச் சோலையை . நெருக்கும் - வருத்தும் ; சண்பைநகர் , வணங்க என ஒரு சொல் வருவிக்க . அக்காலத்துத் திருவிழாக்கள் பெரும்பாலும் ஏழாம் நாளில் முடிவுற்று வந்தனவென்பதை இப்பதிகத்தாலும் அப்பர் திருநேரிசையில் வருவதாலும் அறிக .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நீலவரை போலநிகழ் கேழலுரு நீள்பறவை நேருருவமாம்
மாலுமல ரானுமறி யாமைவளர் தீயுருவ மானவரதன்
சேலுமின வேலுமன கண்ணியொடு நண்ணுபதி சூழ்புறவெலாஞ்
சாலிமலி சோலைகுயில் புள்ளினொடு கிள்ளைபயில் சண்பைநகரே.

பொழிப்புரை :

நீலமலைபோன்ற பெரிய பன்றி உருவம் கொண்ட திருமாலும் , பெரிய அன்னப்பறவையின் உருவம் தாங்கிய பிரமனும் , அறியாத வகையில் வளர்ந்தோங்கிய நெருப்புப் பிழம்பு வடிவாகிய வணங்குவோர்க்கு வேண்டும் வரங்கள் தருகின்ற சிவபெருமான் , சேல்மீனும் , வேலும் ஒத்த கண்களையுடைய உமாதேவியோடு வீற்றிருந்தருளும் தலம் , சுற்றியுள்ள அயலிடங்களிலெல்லாம் நெற்பயிர்கள் மலிந்ததும் , சோலைகளில் குயில்களும் , மற்ற பறவைகளோடு கிளிகளும் வசிக்கின்றதுமான திருச்சண்பை நகராகும் .

குறிப்புரை :

நீலவரைபோல - நீலமலையைப்போல . நிகழ் - பொருந்திய . கேழல் உருஆம் - பன்றியின் வடிவம் தாங்கிய . மாலும் - திருமாலும் . நீள் பறவை - பெரிய அன்னப்பறவையாகிய . நேர் உருவம் ஆம் - நேரிய உருவம் ஆன . மலரானும் - பிரமனும் . அறியாமை - அறியாவாறு . வளர்தீ உருவம் ஆன - வளர்ந்த நெருப்பின் வடிவு தாங்கிய . ( பரமன் ) வரதன் - சிவபெருமான் . சேலும் - மீனையும் . இனம் - சிறந்த . வேலும் அடை - வேலையும்போன்ற . கண்ணியொடு - கண்களையுடைய உமாதேவியாரோடு . நண்ணுபதி - தங்கும் தலமாவது . சூழ்புறவு எலாம் - தலத்தைச் சூழ்ந்த புறம்பு ஆகிய இடங்களில் எல்லாம் . சாலி - நெற்பயிர்களும் . மலி - செழித்த . சோலை - சோலைகளில் . குயில் - குயில்களும் . புள்ளினொடு - ஏனைப் பறவைகளும் . கிள்ளை - கிளிகளும் . பயில் - தங்கியுள்ள ( சண்பை நகர் ) வரதன் - வரந்தருபவன் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

போதியர்கள் பிண்டியர்கள் போதுவழு வாதவகை யுண்டுபலபொய்
ஓதியவர் கொண்டுசெய்வ தொன்றுமிலை நன்றதுணர் வீருரைமினோ
ஆதியெமை யாளுடைய வரிவையொடு பிரிவிலி யமர்ந்தபதிதான்
சாதிமணி தெண்டிரை கொணர்ந்துவயல் புகவெறிகொள் சண்பைநகரே.

பொழிப்புரை :

அரசமரத்தை வணங்கும் புத்தர்களும் , அசோக மரத்தை வணங்கும் சமணர்களும் நேரம்தோறும் தவறாது உண்டு பொய்ப்பொருளாம் நிலையற்ற உலகப்பொருள்களைப் பற்றிப் பேசுகின்ற , மெய்ப்பொருளாம் இறைவனைப் பற்றிப் பேசாத அவர்கள் உரைகளை மேற்கொண்டு , செய்யத்தக்க பயனுடைய செயல் யாதுமில்லை . பயன்தரும் நெறி எது என்று அறிபவர்களே ! முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானும் , எங்களை ஆட்கொள்ளும் உமா தேவியும் பிரியாது தங்கி இருக்கும் தலமாவது , உயர்ந்த சாதி இரத்தினங்களைத் தெளிந்த கடலலைகள் அடித்துக்கொண்டு வந்து வயல்களில் விழும்படி செய்கின்ற திருச்சண்பை நகராகும் . அதனைப் புகழ்ந்து பேசி அத்தலத்து இறைவனை வழிபடுவீர்களாக .

குறிப்புரை :

போதியர்கள் - அரசமரத்தை வணங்கும் புத்தர்களும் . பிண்டியர்கள் - அசோக மரத்தைப் பாராட்டும் சமணர்களும் . போது வழுவா வகை - நேரம் தோறும் தவறாத விதம் , ( உண்டு .) பல பொய் ஓதியவர் - பல பொய்யுரைகளைச் சொல்லுபவர் . கொண்டு - மேற்கொண்டு . செய்வது - செய்யத்தகுந்த பயனுடைய செயல் . ஒன்றுமிலை - சிறிதும் இல்லை . நன்று அது - பயன்தரும் நெறி . உணர்வீர் - அறிவீர்கள் . உரைமின் - புகழ்வீர்களாக . ஆதி - முதன்மைக் கடவுளும் . எமை - எங்கள் . ஆளுடைய - ஆட்கொள்ளும் . அரிவையொடும் - அம்பிகையொடும் . பிரிவு இலி - பிரியாதவனுமாகிய சிவபெருமான் . அமர்ந்த பதி - தங்கியிருக்குந் தலமாகிய . சாதி மணி - உயர்ந்த சாதி இரத்தினங்களை . தெண்திரை கொணர்ந்து - தெளிவாகிய அலைகள் அடித்துக்கொண்டு வந்து . வயல் புக - வயலில் போய் விழும்படி . எறிகொள் - எறிதலைக்கொண்ட . சண்பை நகரே - திருச்சண்பை நகர் ஆகும் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

வாரின்மலி கொங்கையுமை நங்கையொடு சங்கரன் மகிழ்ந்தமருமூர்
சாரின்முர றென்கடல் விசும்புற முழங்கொலிகொள் சண்பைநகர்மேற்
பாரின்மலி கின்றபுகழ் நின்றதமிழ் ஞானசம் பந்தனுரைசெய்
சீரின்மலி செந்தமிழ்கள் செப்புமவர் சேர்வர்சிவ லோகநெறியே.

பொழிப்புரை :

கச்சணிந்த கொங்கைகளையுடைய உமைநங்கையோடு எவ்வுயிர்கட்கும் நன்மையைச் செய்கின்ற சங்கரன் என்ற பெயர் கொண்ட சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலமாவதும் , வீதிகள் முதலிய இடங்களில் கடலோசைபோல் முழங்குகின்ற பேரொலியானது , வானுலகைச் சென்றடையுமாறு உள்ளதும் ஆகிய திருச்சண்பை நகரைப் போற்றி , இப்பூவுலகில் நிலைத்த புகழுடைய தமிழ் ஞானசம்பந்தன் அருளிய சிறப்புடைய இச்செந்தமிழ்ப் பாக்களைப் பாடுகிறவர்கள் சிவலோகத்தை அடைவர் .

குறிப்புரை :

வாரின்மலி - கச்சையணிந்த . நங்கை - மகளிரிற் சிறந்தவள் . சங்கரன் - நன்மையைச் செய்பவனாகிய சிவபெருமான் . மகிழ்ந்து அமரும் ஊர் - மகிழ்ந்து வீற்றிருக்கும் தலமாகிய . சாரின் - வீதி முதலிய இடங்களில் எல்லாம் . தெண்கடல் - தெளிவாகிய கடல்போல . முரல் - ஒலிக்கின்ற . முழங்கு ஒலி - பேரோசையானது . விசும்பு உறக்கொள் - வானுலகை யடையுமாறு கொண்ட ( சண்பைநகர் மேல் ). பாரில் - பூமியில் . மலிகின்ற - மிகுந்த . புகழ்நின்ற - புகழ் நிலைத்துநின்ற ( தமிழ் ஞானசம்பந்தன் ) உரைசெய் - பாடிய . சீரின்மலி - தாளவொத்துக்களுக்கு இசைந்த . ( செந்தமிழ் இசைப் பாடல்களை .) செப்பும் அவர் - பாடுவோர் . சிவலோக நெறி சேர்வர் - முறையே சிவலோகம் சேர்வர் .
சிற்பி