திருவேதவனம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

கற்பொலிசு ரத்தினெரி கானினிடை மாநடம தாடிமடவார்
இற்பலி கொளப்புகுது மெந்தைபெரு மானதிட மென்பர் புவிமேல்
மற்பொலி கலிக்கடன் மலைக்குவ டெனத்திரை கொழித்தமணியை
விற்பொலி நுதற்கொடி யிடைக்கணிகை மார்கவரும் வேதவனமே.

பொழிப்புரை :

பருக்கைக் கற்கள் மிகுந்த,பாலைவனம் போன்ற வெப்பம் உடைய சுடுகாட்டில் சிவபெருமான் நடனமாடுகின்றார். அவர் மகளிர்களின் இல்லந்தோறும் புகுந்து பிச்சை ஏற்பவர். எம் தந்தையாகிய அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், இப்பூமியில், ஒலிக்கின்ற கடலலைகள் மலைச்சிகரங்களைப் போல உயர்ந்து ஓடிவந்து கரையிலே ஒதுக்குகின்ற இரத்தினங்களை வில்லைப் போன்ற வளைந்த நெற்றியும், பூங்கொடி போன்ற மெல்லிய, குறுகிய இடையும் உடைய உருத்திரகணிகையர்கள் வாரிக் கொள்கின்ற வளமிக்க திருவேதவனமாகும்.

குறிப்புரை :

கல் - பருக்கைக் கற்கள். பொலி - வெப்பம் மிகும். சுரத்தின் - பாலைநிலம் போன்ற. எரிகான் இடை - கொதிக்கும் மயானத்தில். மாநடம் அது ஆடி - சிறந்த கூத்தை ஆடி. மடவார் - பெண்களின். இல் - வீடுகளில். பலிகொள் - பிச்சை கொள்வதற்கு. புகுதும் - புகும். எந்தை பெருமான் - எனக்குத் தந்தையாகிய தலைவனின்; இடம் என்பர். புவிமேல் - இந்தப் பூமியின்மீது. மல்பொலி - வளம் மிகுந்த. கலிக்கடல் - ஓசையையுடைய கடல். மலைக்குவடு என - மலையின் சிகரங்களைப்போல (வரும்) திரை - அலைகள். கொழித்த - கொழிப்பதுபோல் மடக்கிச் சொரிந்த. மணியை - இரத்தினங்களை. வில்பொலி - வில்லைப்போன்ற. நுதல் - புருவத்தையும். கொடி (பொலி) இடை - பூங்கொடி போன்ற இடையையும் உடைய. கணிகைமார் - உருத்திர கணிகையர். கவரும் - வாரிக்கொள்கின்ற (வேதவனம்) புகுதும்:- `து\\\' சாரியை.

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பண்டிரை பயப்புணரி யிற்கனக மால்வரையை நட்டரவினைக்
கொண்டுகயி றிற்கடைய வந்தவிட முண்டகுழ கன்றனிடமாம்
வண்டிரை நிழற்பொழிலின் மாதவியின் மீதணவு தென்றல்வெறியார்
வெண்டிரைகள் செம்பவள முந்துகடல் வந்தமொழி வேதவனமே. 

பொழிப்புரை :

முற்காலத்தில் ஒலிக்கின்ற அலைகளையுடைய பாற் கடலில், பொன்மயமான மந்தரமலையை மத்தாக ஊன்றி, வாசுகி என்னும் பாம்பைக் கயிறாகக் கொண்டு தேவர்கள் கடைய எழுந்த ஆலகால விடத்தை, அமுது போன்று உண்டருளிய அழகனான சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம், நிழல்தரும் சோலைகளில் வண்டுகள் ஆரவாரிப்பதாய், மாதவி முதலிய மரங்களின் மீது தவழும் தென்றற் காற்றின் நறுமணமுடையதாய்க் கடலின் வெண்ணிற அலைகள் செம்பவளங்களை உந்தித் தள்ளும், புகழுடைய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

பண்டு - முற்காலத்தில். இரை -ஒலிக்கின்ற. பயம் - பால். புணரியில் - அலைகளையுடைய பாற்கடலில். கனகமால் வரையை - பொன்மயமான பெரிய மந்தர மலையை. நட்டு - மத்தாக ஊன்றி. அரவினை - வாசுகி என்னும் பாம்பை. கயிறிற்கொண்டு - கயிறாகக்கொண்டு. கடைய - தேவர்கள் கடைய. வந்த விடம் - எழுந்த ஆலகாலவிடத்தை. உண்ட - உண்டருளிய. குழகன்றன் இடமாம் - அழகனாகிய சிவபெருமானின் இடமாகும். வண்டு இரை - வண்டுகள் ஆரவாரிக்கின்ற. நிழல் - நிழலையுடைய. பொழிலில் - சோலையிலே. மாதவியின்மீது - மாதவி முதலிய மரங்களின் மீது. அணவு - தாவிய. தென்றல் - காற்றின். வெறி ஆர் - வாசனையுடையதும். வெண்திரைகள் - வெள்ளிய அலைகளால் (செம்பவளம்) உந்து - வீசுகின்ற. கடல் வந்து - கடல் வந்து படியும். மொழி (ஆர்) - கீர்த்தியையுடையதும் ஆகிய. (வேதவனமே).

பண் :சாதாரி

பாடல் எண் : 3

காரியன்மெல் லோதிநதி மாதைமுடி வார்சடையில் வைத்துமலையார்
நாரியொரு பான்மகிழு நம்பருறை வென்பர்நெடு மாடமறுகில்
தேரியல் விழாவினொலி திண்பணில மொண்படக நாளுமிசையால்
வேரிமலி வார்குழனன் மாதரிசை பாடலொலி வேதவனமே. 

பொழிப்புரை :

மேகத்தையொத்த மெல்லிய கூந்தலையுடைய, கங்காதேவியை நீண்ட சடைமுடியில் தாங்கி, மலைமகளைத் தன் திருமேனியின் பாதிப்பாகமாகக் கொண்டு சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற தலமாவது, நீண்ட மாடங்களையுடைய வீதிகளில் தேர் ஓடும் திருவிழாக்களின் ஒலியும், திண்ணிய சங்குகளின் ஒலியும், ஒளி பொருந்திய பேரி அல்லது தம்பட்டம் என்னும் வாத்தியத்தின் ஒலியும், நாடோறும் ஒலிக்க, நறுமணம் கமழும் தொங்கும் கூந்தலையுடைய பெண்கள் இசைக்கருவிகளோடு பாடுகின்ற பாட்டினிசையும் ஒலிக்கின்ற திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

கார் இயல் - மேகத்தையொத்த. மெல் ஓதி - மெல்லிய கூந்தலையுடைய. நதிமாதை - கங்காதேவியை. முடி - தலையில். வார்சடையில் - நீண்ட சடையின் மேல் ( வைத்து) மலையார் நாரி - இமயமலையிலுள்ளார் மகளாகிய அம்பிகையை. ஒருபால் - ஒரு பாதியுடம்பில் (வைத்து). மகிழும் - மகிழ்கின்ற. நம்பர் - சிவ பெருமான். உறைவு - தங்கும் இடம். என்பர். நெடும் மாடம் - நெடிய மாடங்களையுடைய. மறுகில் - வீதிகளில். தேர் இயல் விழாவின் ஒலி - தேர் ஓடும் திருவிழாக்களில் ஒலிக்கும். திண்பணிலம் - திண்ணிய சங்கு. ஒண்படகம் - சிறந்த படகம் என்னும் வாத்தியம் முதலியவற்றின் ஒலியோடு. நாளும் - நாடோறும். வேரிமலி - மணம் மிக்க. வார் குழல் - தொங்கும் கூந்தலையுடைய. நல்மாதர் - உத்தமிகளாகிய பெண்கள். இசையால் - இசைக் கருவிகளோடு. இசை பாடல் ஒலி - இசைபாட்டுப் பாடுவதாலுண்டாகிய ஒலியும் (உடைய வேதவனம்). திருமறைக் காட்டை (நம்பன் உறைவு என்பர்).

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நீறுதிரு மேனியின் மிசைத்தொளிபெ றத்தடவி வந்திடபமே
ஏறியுல கங்கடொறும் பிச்சைநுக ரிச்சைய ரிருந்தபதியாம்
ஊறுபொரு ளின்றமி ழியற்கிளவி தேருமட மாதருடனார்
வேறுதிசை யாடவர்கள் கூறவிசை தேருமெழில் வேதவனமே. 

பொழிப்புரை :

சிவபெருமான் தம் திருமேனியிலே திருநீற்றை ஒளி பொருந்தப் பூசியவர். இடபவாகனத்தில் ஏறியவர். ஊர்கள்தொறும் சென்று பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவர். அப்பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, இனிய தமிழ்மொழியில் இயற் சொற்களைத் தேர்ந்தெடுத்துப் பேசும் இளம்பெண்களுடன், வாணிகத்தின் பொருட்டு வேற்றுத் திசைகளிலிருந்து கப்பலில் வந்த ஆண்கள் பேசுவதற்குச் சொற்களைத் தெரிந்து கொள்ளும் அழகிய திருவேதவனம் ஆகும்.

குறிப்புரை :

நீறு - திருநீற்றை. திருமேனியின் மிசைத்து - திருஉடம்பின் மேலதாய். ஒளிபெறத்தடவி - ஒளிபொருந்தப் பூசி. (இடபமே ஏறி), உலகங்கள் தொறும் வந்து - ஊர்கள்தோறும் சென்று. (உலகம் - முதல் ஆகுபெயர்). பிச்சை நுகர் இச்சையர் - பிச்சை எடுத்து உண்பதில் இச்சையுடையவராகிய சிவபெருமான். இருந்த பதி - இருக்கும் தலம். ஊறுபொருள் - பல கருத்துக்களைத் தருகின்ற. இன்தமிழ் - (இனிய தமிழ்) மொழியில். இயல்கிளவி - இயற் சொற்களை. தேரும் - இப்பொருட்கு இச்சொல் எனத் தேர்ந்து பேசும். மடமாதருடன் - (இலை,காய், கறி, சிறுதின்பண்டம், சிற்றுண்டி முதலியன விற்கும்) இளம் பெண்களுடனே. ஆர் - அங்கே. (வாணிகம் முதலிய வினை மேற்கொண்டு கப்பலில் வந்த). வேறு திசை ஆடவர்கள் - வேறு திசைகளினின்றும் வந்த ஆண்கள். கூற - பேசுவதற்கு. இசை தேரும் - சொற்களைத் தெரிந்துகொள்ளும். எழில் ஆர் - அழகு மிக்க. வேதவனமே - இயற்கிளவி - இயற்சொல். இசை - சொல்.

பண் :சாதாரி

பாடல் எண் : 5

கத்திரிகை துத்திரி கறங்குதுடி தக்கையொ டிடக்கைபடகம்
எத்தனை யுலப்பில்கரு வித்திர ளலம்பவிமை யோர்கள்பரச
ஒத்தற மிதித்துநட மிட்டவொரு வர்க்கிடம தென்பருலகில்
மெய்த்தகைய பத்தரொடு சித்தர்கண் மிடைந்துகளும் வேதவனமே. 

பொழிப்புரை :

கத்தரிகை, துத்தரி, ஒலிக்கின்ற உடுக்கை, தக்கை , படகம் என்னும் இசைக்கருவிகள் ஒலிக்க, தேவர்கள் துதிக்க, தாளத்திற்கேற்பத் திருத்தாளையூன்றி நடனமாடும் ஒப்பற்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம், உண்மைத் தன்மையுடைய பத்தர்களும், சித்து வல்லவர்களும் நெருங்கி மகிழ்ச்சி மீதூரத் துள்ளிக் குதிக்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

கத்திரிகை துத்திரி இவ்வாத்தியங்களுடனே. கறங்கு துடி - ஒலிக்கும் உடுக்கையும். தக்கை - தக்கை என்னும் வாத்தியத்தோடு. இடக்கை படகம் என்னும் இவற்றோடு. உலப்பு இல் - அளவற்ற. எத்தனை கருவித்திரள் - எவ்வகைப்பட்ட இசைக் கருவிகளின் கூட்டங்கள். அலம்ப - ஆரவாரிக்க. இமையோர்கள் - தேவர்கள். பரச - துதிக்க. ஒத்து - தாள ஒத்துக்கிணங்க. அற - நன்றாக. மிதித்து - தாளையூன்றி. நடம் இட்ட - நடனமாடிய. ஒருவர்க்கு - சிவபெருமானுக்கு (இடம் அது என்பர்). மெய்த்தகைய - உண்மைத் தன்மையையுடைய. பத்தர்கள் - பக்தர்களும். சித்தர்கள் - சித்து வல்லவர்களும். மிடைந்து - நெருங்கி. உகளும் - மகிழ்ச்சி மீக்கூரும். (வேதவனமே;) உகளுதல் - துள்ளிக் குதித்தல்;- அது மகிழ்ச்சிமீக்கூர நிகழ்வதாற் காரணம் காரியமாக உபசரிக்கப்பட்டது.

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மாலைமதி வாளரவு கொன்றைமலர் துன்றுசடை நின்றுசுழலக்
காலையி லெழுந்தகதிர் தாரகை மடங்கவன லாடுமரனூர்
சோலையின் மரங்கடொறு மிண்டியின வண்டுமது வுண்டிசைசெய
வேலையொலி சங்குதிரை வங்கசுற வங்கொணரும் வேதவனமே. 

பொழிப்புரை :

மாலையில் தோன்றும் சந்திரனும், ஒளிபொருந்திய பாம்பும், கொன்றை மலரும் நெருங்கிய சடையில் தங்கிச் சுழன்று புரள, காலையில் தோன்றிய கதிரவன் ஒளியும் விண்மீன்களின் ஒளியும், திருமேனியின் ஒளியும், திருநீற்றுப் பூச்சின் ஒளியும் கண்டு அடங்குமாறு, நெருப்பேந்தி நடனமாடுகின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், சோலைகளிலுள்ள மரங்களில் வண்டினங்கள் தேனைக்குடித்து ஒலி செய்ய, கடலினின்றும் ஒலிக்கும் சங்குகளையும், கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும் அலைகள் கரைக்குக் கொணரும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

மாலைமதி - மாலைக்காலத்தில் உதிக்கும் சந்திரனும். வாள் அரவு - ஒளி பொருந்திய பாம்பும். (கொன்றை மலர்) துன்று - நெருங்கிய (சடை). நின்று - தங்கி. சுழல - சுழன்று புரள. காலையில் எழுந்த கதிர் - உதய சூரியனும். தாரகை - விண் மீன்களும். மடங்க - திருமேனிக்கும், திருநீற்றுப்பூச்சிற்கும் முறையே நிகராகாமல் தோற்க, அனல் ஆடும் - தீயில் நின்று நடம் புரியும், (அரனது ஊர்). சோலையில் - மரங்கள் தொறும். மிண்டி - நெருங்கி. இனவண்டு - வண்டின் கூட்டங்கள். மது உண்டு - தேனைக் குடித்து. இசை செ(ய்)ய - இராகம் பாட. வேலை - கடலினின்றும், ஒலிசங்கு - ஒலிக்கும் சங்குகளையும், வங்க சுறவம் - கப்பல்களையுடைக்கும் சுறாமீன்களையும், திரை - அலைகள் (கொணரும் வேதவனமே) மாலைமதி, வங்கசுறவம் இவை உருபும் பயனும் தொக்க தொகைகள்.

பண் :சாதாரி

பாடல் எண் : 7

வஞ்சகம னத்தவுணர் வல்லரண மன்றவிய வார்சிலைவளைத்
தஞ்சக மவித்தவம ரர்க்கமர னாதிபெரு மானதிடமாம்
கிஞ்சுக விதழ்க்கனிக ளூறியசெவ் வாயவர்கள் பாடல்பயில
விஞ்சக வியக்கர்முனி வக்கண நிறைந்துமிடை வேதவனமே.

பொழிப்புரை :

வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய அசுரர்களின் மூன்று மதில்களையும் பெரிய மேருமலையை வில்லாக வளைத்து அழகிய உலகில் ஒழித்த தேவதேவனாம், முழுமுதற் கடவுளான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது, முள் முருக்கம் பூவையொத்த உதடுகளால், கனிபோன்று இனிய மொழிகளைப் பேசும் சிவந்த வாயையுடைய பெண்கள் பாட, வியக்கும் மனத்தையுடைய இயக்கர்களும், முனிவர் கூட்டங்களும் நிறைந்து போற்ற விளங்கும் திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

வஞ்சக மனத்து - வஞ்சகம் பொருந்திய மனத்தையுடைய. அவுணர் - அசுரர்களின். வல் அரணம் - வலிய (மூன்று) மதில்களையும். அம் சகம் - அழகிய உலகில். அவித்த - ஒழித்த, அமரர்க்கு அமரன் - தேவதேவனாகிய. ஆதி பெருமானது - முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது. இடம் ஆம். கிஞ்சுக இதழ் - முள் முருக்கம் பூவையொத்த உதடுகளில். கனிகள் ஊறிய - இனிமையின் ஊற்றென்னும் படியான (சொற்களைப் பேசும்). செவ்வாயவர் - சிவந்த வாயையுடைய பெண்கள். பாடல் பயில - பாட. விஞ்சு சுகம் - (வியப்பு) மிக்க மனத்தையுடைய. இயக்கர் - இயக்ஷர்களும். முனிவக் கணம் (துறந்த) முனிவர்கூட்டமும். (அப்பாடலைக் கேட்க) நிறைந்து மிடை - நிறைந்து நெருங்குகின்ற. (வேதவனமே) முனிவர்+கணம் - முனிவக்கணம் என்றாயிற்று. வாணியத்தெரு. என்ற தொடரிற்போல, \\\"சிலவிகாரமாம் உயர்திணை\\\" என்ற நன்னூல் விதிப்படி.

பண் :சாதாரி

பாடல் எண் : 8

முடித்தலைகள் பத்துடை முருட்டுரு வரக்கனை நெருக்கிவிரலால்
அடித்தலமுன் வைத்தலம ரக்கருணை வைத்தவ னிடம்பலதுயர்
கெடுத்தலை நினைத்தற மியற்றுதல் கிளர்ந்துபுல வாணர்வறுமை
விடுத்தலை மதித்துநிதி நல்குமவர் மல்குபதி வேதவனமே. 

பொழிப்புரை :

கிரீடம் அணிந்த பத்துத் தலைகளையுடையனாய், முரட்டுத் தன்மையுடைய அரக்கனான இராவணனைத் தன் காற் பெருவிரலை ஊன்றி மலையின்கீழ் நெருக்கிப் பின் அவனுக்குக் கருணைபுரிந்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம், பலவிதத் துன்பங்களும் கெடும்படி அறம் இயற்றும் முயற்சியுடையவர்களாய், புலவர்களின் வறுமையை நீக்கக் கருதித் திரவியங்களைக் கொடுக்கும் கொடையாளிகள் நிறைந்த திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

முடி - கிரீடம். (தலைகள் பத்து உடைய) முருடு உரு - முரட்டுத் தன்மைகாட்டும் உருவையுடைய. (அரக்கனை விரலால், நெருக்கி அடித்து). முன் - அக்காலத்தில். அடித்தலம் - பாதாளத்தில். வைத்து - இருத்தி. அலமர - கலங்கும்படி. கருணை வைத்தவன் - மறக்கருணை புரிந்தருளிய சிவபெருமானது. இடம் - வாழும் இடம் (யாதெனில்) பல துயர் - (அதனால் விளையும் பலவித துன்பங்களையும். கெடுத்தலை நினைத்து அறம் இயற்றுதலில்) கிளர்ந்து - முயற்சியுடையவர்களாய். புலவாணர் - புலமையால் வாழ்பவர்களாகிய புலவர்களினின்றும். வறுமை - வறுமையை. விடுத்தலை மதித்து - நீக்குதலை அழுத்தமாகக் கருதி. நிதி - திரவியங்களை. நல்குமவர் - கொடுக்கும் கொடையாளிகள். மல்குபதி - நிறைந்த தலமாம்.

பண் :சாதாரி

பாடல் எண் : 9

வாசமலர் மேவியுறை வானுநெடு மாலுமறி யாதநெறியைக்
கூசுதல்செ யாதவம ணாதரொடு தேரர்குறு காதவரனூர்
காசுமணி வார்கனக நீடுகட லோடுதிரை வார்துவலைமேல்
வீசுவலை வாணரவை வாரிவிலை பேசுமெழில் வேதவனமே. 

பொழிப்புரை :

நறுமணம் கமழும் தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனும், திருமாலும் அறியாத சிவன் பெருமையைப் பழிப்பதற்குக் கூசாத பயனிலிகளாகிய சமணர்களுடன், பௌத்தர்களும் அடையாத சிவபெருமான் வீற்றிருக்கும் தலமாவது செம்படவர்கள் பெரிய கடலலைகள் ஓடிவரும்போது வலையை வீசி, அவை கொணர்கின்ற இரத்தினங்களையும் ,மணிகளையும் சிறந்த பொன்னையும் வாரி விலைபேசும் அழகிய திருவேதவனம் என்னும் திருத்தலமாகும்.

குறிப்புரை :

மலர் மேவி உறைவானும் - தாமரை மலரில் தங்கி வசிப்பவனாகிய பிரமனும். நெடுமாலும் - திருமாலும். அறியாத - அறியாததாகிய. நெறி - சிவன் பெருமையை. கூசுதல் செயாத - பழிப்பதற்குக் கூசாத, அமண் ஆதரோடு - பயனிலிகளாகிய சமணர்களுடன். தேரர் - பௌத்தர்களும். குறுகாத - அடையாத. அரன் - அச்சிவபெருமானது. (ஊர்) நீடு - நெடிய. கடல் - கடலில். ஓடு - ஓடிவருகின்ற. திரை - அலைகள். வார் - சொரிகின்ற. துவலைமேல் - திவலைகளின்மேல், (வலையைவீசுகின்ற) வலைவாணர் - செம் படவர்கள். காசு - இரத்தினங்களையும். மணி - முத்துக்களையும். வார்கனகம் - மிக்க பொன்னினையும். (வாரி விலை பேசும்) எழில் - அழகிய (வேதவனம்).

பண் : சாதாரி

பாடல் எண் : 10

* * * * * * * * * *

பொழிப்புரை :

* * * * * * * * * *

குறிப்புரை :

* * * * * * * * * *

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மந்தமுர வங்கடல் வளங்கெழுவு காழிபதி மன்னுகவுணி
வெந்தபொடி நீறணியும் வேதவன மேவுசிவ னின்னருளினால்
சந்தமிவை தண்டமிழி னின்னிசை யெனப்பரவு பாடலுலகில்
பந்தனுரை கொண்டுமொழி வார்கள்பயில் வார்களுயர் வானுலகமே. 

பொழிப்புரை :

மந்தமான ஓசையுடைய கடல்வளமிக்க சீகாழிப் பதியில் விளங்கும் கவுணியர் கோத்திரத்தில் அவதரித்த ஞான சம்பந்தன், திருவேதவனத்தில் வீற்றிருந்தருளும் திருவெண்ணீறு அணிந்த சிவபெருமானின் இன்னருளால் அவனைப் போற்றிச் சந்தம் விளங்கும் இன்னிசையால் அருளிய இத்திருப்பதிகத்தைப் பாடுபவர்கள் உயர்ந்த சிவலோகத்தில் வாழ்வர்.

குறிப்புரை :

மந்தம் முரவம் - மந்தமான ஓசையையுடைய. கடல் வளம் கெழுவு - கடலினால் பெறத்தகும் வளங்கள் பொருந்திய. காழிபதி - சீகாழி யென்னும் தலத்தில். மன்னு - நிலைபெற்ற, கவுணி - கவுணிய கோத்திரத்தினர். (`கவுணிபந்தன் என இயைக்க\\\' இருபெயரொட்டுப் பண்புத் தொகை.) (வெந்த) பொடி நீறு - பொடியாகிய நீறு (நீறணியும் சிவன் என்க). சந்தம் இவை - சந்த இசையோடு கூடிய இப் பாடல்கள். தண்தமிழின் இன்னிசை - குளிர்ந்த தமிழ் மொழியின் இனிய இசைப்பாடல்கள். என - என்று. பரவு பாடல் - துதித்துப் பாடிய பாடல். உயர் வான் உலகம் - சிவலோகத்தில். பயில்வர் - வாழ்வார்கள்.
சிற்பி