திருமாணிகுழி


பண் :சாதாரி

பாடல் எண் : 1

பொன்னியல் பொருப்பரையன் மங்கையொரு பங்கர்புன றங்குசடைமேல்
வன்னியொடு மத்தமலர் வைத்தவிறல் வித்தகர் மகிழ்ந்துறைவிடம்
கன்னியிள வாளைகுதி கொள்ளவிள வள்ளைபட ரள்ளல்வயல்வாய்
மன்னியிள மேதிகள் படிந்துமனை சேருதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

சிவபெருமான் பொன்மயமான இமயமலை அரசனின் மகளான உமாதேவியைத் தன்திருமேனியில் ஒருபாகமாகக் கொண்டவர் . கங்கைநீர் தங்கிய சடையில் வன்னிப் பத்திரத்துடன் பொன்னூமத்தம் பூவை அணிந்த வலிய அறிவுருவான அச்சிவ பெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , வரப்பின்மேல் இள வள்ளைக் கொடிகள் படர்ந்த சேற்றையுடைய வயலில் , இள வாளை மீன்கள் துள்ளிப்பாய , இள எருமைகள் அதில் படிந்து வீடுசேரும் , நீர்வளமும் நிலவளமுமிக்க திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

பொன் இயல் - பொன்மயமான . பொருப்பு அரையன் - இமயமலைஅரசனது . மங்கை ஒரு பங்கர் - புதல்வியாராகிய அம்பிகையை ஒரு பாகமாக உடையவர் . புனல் தங்கு சடைமேல் - கங்கை நீர் தங்கும் சடையின்மேல் . வன்னியொடு - வன்னிப் பத்திரத்துடன் , மத்தம் மலர் - பொன்னூமத்தைப்பூவை . வைத்த - அணிந்த . விறல் வித்தகர் - வலிய சமர்த்தராகிய சிவபெருமான் . ( மகிழ்ந்து ) உறைவு இடம் - தங்கும் இடமாவது . இளவள்ளை படர் அள்ளல் வயல்வாய் - இளம் வள்ளைக் கொடிகள் ( வரப்பின்மேல் ) படர்ந்த சேற்றையுடைய வயலில் . கன்னி இளவாளை - மிக்க இளமை பொருந்திய வாளைமீன்கள் . குதிகொள்ள - குதித்துத் தாவும்படி . இளமேதிகள் - இள எருமைகள் . மன்னி - தங்கி . படிந்து - மூழ்கி . மனைசேர் - வீட்டிற்குச் சேரும் உதவி மாணிகுழி - திருமாணி குழியென்னும் பதியேயாம் . இத்தலம் ` உதவி ` என்னும் அடைமொழியோடு இணைத்தே கூறப்படுகிறதன் காரணம் விசாரித்து அறியத்தக்கது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சோதிமிகு நீறதுமெய் பூசியொரு தோலுடை புனைந்துதெருவே
மாதர்மனை தோறுமிசை பாடிவசி பேசுமர னார்மகிழ்விடம்
தாதுமலி தாமரை மணங்கமழ வண்டுமுர றண்பழனமிக்
கோதமலி வேலைபுடை சூழுலகி னீடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

ஒளிமிகுந்த திருவெண்ணீற்றினைத் திருமேனியில் உத்தூளணமாகப் பூசி , தோலை ஆடையாக அணிந்து , தெருக்களில் பெண்கள் உள்ள ஒவ்வொரு இல்லமும் சென்று இசைப்பாடல்களைப் பாடி வயப்படுத்தும் பேச்சுக்களைப் பேசும் சிவபெருமான் மகிழ்ந்து வீற்றிருந்தருளும் தலம் மகரந்தப்பொடிகள் மிக்க தாமரை மலர்கள் மணம் வீசுவதும் , வண்டுகள் ஒலிக்கின்ற குளிர்ச்சி பொருந்திய வயல்களையுடையதும் , கடலலைகளின் ஓசை மிகுந்ததும் ஆகி விளங்குகின்ற திருமாணிகுழி என்பதாம் .

குறிப்புரை :

சோதி மிகு - ஒளி மிகுந்த . நீறு அது - திருநீற்றை . மெய்பூசி - திருமேனியில் உத்தூளித்து . ஒரு தோல் உடை புனைந்து - தோலை ஆடையாக அணிந்து , தெருவே - தெருக்களில் . மாதர் மனைதோறும் - பெண்டிர் உள்ள ஒவ்வொரு வீட்டிலும் . இசைபாடி - இசைப் பாடல்களைப் பாடி . வசி - வயப்படுத்தும் பேச்சுக்களை பேசும் . ( அரனார் மகிழ்வு இடமாவது ) தாது மலி - மகரந்தப் பொடிகள் மிக்க , ( தாமரை ). மணம் கமழ - மணம் வீச . வண்டு முரல் - வண்டுகள் ஒலிக்கும் . பழனம் மிக்கு - வயல்கள் மிக்கு . ஓதம் மலி - ஓசை மிகுந்த . வேலை புடை சூழ் - கடல் சூழ்ந்த , உலகில் - இவ்வுலகில் , உதவி மாணிகுழியே - திருமாணிகுழியேயாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

அம்பனைய கண்ணுமை மடந்தையவ ளஞ்சிவெரு வச்சினமுடைக்
கம்பமத யானையுரி செய்தவர னார்கருதி மேயவிடமாம்
வம்புமலி சோலைபுடை சூழமணி மாடமது நீடி யழகார்
உம்பரவர் கோனகர மென்னமிக மன்னுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

அம்பு போன்ற கூரிய கண்களையுடைய உமாதேவி அஞ்ச , கோபமுடைய , தூணிலே கட்டக்கூடிய மதயானையின் தோலை உரித்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க சோலை களையுடையதும் , இரத்தினங்கள் பதிக்கப் பெற்ற மாடமாளிகைகள் நிறைந்த அழகிய தேவலோகத்து நகரமாகிய அமராவதியைப் போன்று நிலைபெற்று விளங்குவதும் ஆகிய திருமாணிகுழியாகும் .

குறிப்புரை :

அம்பு அனைய - அம்புபோன்ற . கண் உமை மடந்தை அவள் , கண்களையுடைய உமாதேவியார் . அஞ்சி வெருவ - மிகவும் அஞ்ச . சினம் உடை - கோபத்தையுடைய . கம்பம் - தூணிலே கட்டக் கூடிய . யானை உரி செய்த - யானையை உரித்தருளிய . அரனார் - சிவபெருமான் . கருதி - எண்ணி . மேய - மேவிய ; இடமாம் . வம்புமலி - வாசனைமிக்க . ( சோலை ) புடைசூழ - சுற்ற . மணி - இரத்தினங்கள பதித்த . மாடம் - வீடுகளின் வரிசை . நீடி - உயர்ந்து . அழகு ஆர் - அழகு பொருந்திய . உம்பரவர் கோன் - தேவர்க்கு அரசனாகிய இந்திரனது . நகரம் என்ன - நகரமாகிய அமராவதி என்னும்படி . மிக மன்னு - நன்கு நிலைபெற்ற . ( உதவிமாணி குழியே ).

பண் :சாதாரி

பாடல் எண் : 4

நித்தநிய மத்தொழில னாகிநெடு மால்குறள னாகிமிகவும்
சித்தம தொருக்கிவழி பாடுசெய நின்றசிவ லோகனிடமாம்
கொத்தலர் மலர்ப்பொழிலி னீடுகுல மஞ்ஞைநட மாடலதுகண்
டொத்தவரி வண்டுக ளுலாவியிசை பாடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

நாள்தோறும் அநுட்டானம் முதலிய நியமம் பூண்டவனாய்த் திருமால் வாமனவடிவங் கொண்டு மனத்தை ஒருமுகப்படுத்தி வழிபாடு செய்யச் சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , கொத்தாக மலர்ந்துள்ள பூக்களையுடைய சோலைகளில் சிறந்த மயில்கள் நடனமாட அதைப்பார்த்த வரிகளையுடைய வண்டுகள் நடனத்துக்கு ஒத்தவாறு இசைபாடுகின்ற திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

நித்தம் - நாடோறும் . நியமத் தொழிலனாகி - அநுட்டானம் முதலிய நியமமாய்ப் பூண்டவனாய் . நெடுமால் - திருமால் . குறளன் ஆகி - வாமன வடிவங்கொண்டு . மிகவும் சித்தம் ( அது ) ஒருக்கி - மனத்தை நன்கு ஒரு முகப்படுத்தி . ( வழிபாடு செய்ய ) நின்ற - இருந்த . சிவலோகன் - சிவலோக நாயகனாகிய சிவபெருமான் ( இடமாம் .) கொத்து அலர் - கொத்துக்களிலே மலர்ந்த . மலர்ப் பொழிலில் - மலர்களையுடைய சோலையில் . நீடுகுல மஞ்ஞை - சிறந்த மயில்கள் . நடமாடல் அது - நடித்தலை . கண்டு - பார்த்து , வரி வண்டுகள் - கீற்றுகளையுடைய வண்டுகள் உலாவி - சுற்றி . ஒத்த இசைபாடு - ஒத்த இசைகளைப் பாடுகின்ற ( உதவிமாணிகுழி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 5

மாசின்மதி சூடுசடை மாமுடியர் வல்லசுரர் தொன்னகரமுன்
நாசமது செய்துநல வானவர்க ளுக்கருள்செய் நம்பனிடமாம்
வாசமலி மென்குழன் மடந்தையர்கண் மாளிகையின் மன்னியழகார்
ஊசன்மிசை யேறியினி தாகவிசை பாடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

சிவபெருமான் குற்றமில்லாத சந்திரனைச் சடையில் சூடியவர் . வல்லசுரர்களின் பழமைவாய்ந்த திரிபுரங்களை அழித்து நற்குண நற்செய்கையுடைய தேவர்கட்கு அருள்புரிந்தவர் . அப் பெருமான் வீற்றிருந்தருளும் தலம் , நறுமணமிக்க மெல்லிய கூந்தலையுடைய பெண்கள் , மாளிகைகளில் தங்கி அழகிய ஊஞ்சலில் ஏறியமர்ந்து இனிமையாக ஊசற்பாட்டுப்பாடி ஆடுகின்ற திருமாணி குழி ஆகும் .

குறிப்புரை :

மாசுஇல்மதி - குற்றமில்லாத சந்திரனை . சூடு - அணிந்த சடைமுடியர் - பெரிய சடாமுடியையுடையவர் . வல் அசுரர் - வலிய அசுரர்களின் . தொல்நகரம் - பழைய திரிபுரங்களை . முன் - அக்காலத்தில் . நாசம் ( அது ) செய்து - அழித்து . ( நல்வானவர்களுக்கு அருள் செய் ). நம்பன் இடமாம் - சிவபெருமானின் இடமாம் . வாசமலி - மணம் மிகுந்த . மென்குழல் மடந்தையர்கள் - மெல்லிய கூந்தலையுடைய மாதர்கள் , மாளிகையின் மன்னி - மாளிகைகளில் தங்கி , அழகுஆர் - அழகு பொருந்திய . ஊசல்மிசை ஏறி - ஊசலின்மேல் ( ஏறி உகைத்து ). இனிதாக இசைபாடு - இனிமையுடையதாக ஊசற் பாட்டைப் பாடி ( ஆடுகின்ற உதவிமாணி குழியே ).

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மந்தமலர் கொண்டுவழி பாடுசெயு மாணியுயிர் வவ்வமனமாய்
வந்தவொரு காலனுயிர் மாளவுதை செய்தமணி கண்டனிடமாம்
சந்தினொடு காரகில் சுமந்துதட மாமலர்கள் கொண்டுகெடிலம்
உந்துபுனல் வந்துவயல் பாயுமண மாருதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

மலரும் நிலையிலுள்ள மலர்களைக் கொண்டு சிவவழிபாடு செய்த பிரமசாரியான மார்க்கண்டேயனின் உயிரைக் கவரும் மனத்தோடு வந்த காலனின் உயிர் நீங்குமாறு காலால் உதைத்த நீலகண்டனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் , சந்தன மரங்கள் , கரிய அகிற் கட்டைகள் இவற்றைச் சுமந்து மலையிலிருந்து விழுந்து , குளங்களில் பூத்துள்ள சிறந்த மலர்களையும் தள்ளிக் கொண்டு வரும் கெடிலநதியின் நீர் வயல்களில் பாய நறுமணம் கமழும் திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

மந்தமலர்கொண்டு - நன்கு மலராத மலர்களைக் கொண்டு . வழிபாடுசெய்யும் - பூசனைபுரிந்த . மாணி - மார்க்கண்டேயரின் . உயிர்வவ்வ மனமாய் - உயிரைக் கவரும் கருத்தோடு ( வந்த ஒரு காலன் உயிர் மாள ) உதைசெய்த - உதைத்த . மணிகண்டன் - நீலகண்டனாகிய சிவ பெருமானின் ( இடம் ஆம் ). சந்தினோடு - சந்தனமரங்களோடு . கார் அகில் - கரிய அகிற் கட்டைகளையும் ( சுமந்து மலையினின்றும் இறங்கி ) தடம் மாமலர்கள் கொண்டு - தடாகங்களிற் பூத்த சிறந்த மலர்களையும் கொணர்ந்து . கெடிலம் உந்துபுனல் - திருக்கெடில நதியின் மோதும் தண்ணீர் வயல்பாயும் - வயலிற் பாய்வதனால் எய்திய . மணம்ஆர் - வாசனை பரவுகின்ற ( உதவிமாணிகுழி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 7

எண் பெரிய வானவர்க ணின்றுதுதி செய்யவிறை யேகருணையாய்
உண்பரிய நஞ்சுதனை யுண்டுலக முய்யவரு ளுத்தமனிடம்
பண்பயிலும் வண்டுபல கெண்டிமது வுண்டுநிறை பைம் பொழிலின்வாய்
ஒண்பலவி னின்கனி சொரிந்துமண நாறுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

எண்ணற்ற தேவர்கள் வணங்கிநின்று துதிசெய்யப் பேரருளுடையவனாய் எவரும் உண்ணுதற்கரிய நஞ்சை உண்டு உலகம் உய்யும்படி அருள்செய்த உத்தமனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்ணிசை பாடுகின்ற வண்டுகள் , பல மலர்களையும் கிளறி , தேனருந்த , வளம்மிக்க பசுமை வாய்ந்த சோலைகளிடத்துச் சிறந்த பலாமரங்களின் இனிய கனிகளிலிருந்து தேனைச் சொரிந்து நறுமணம் கமழ்கின்ற திருமாணிகுழி என்பதாகும் .

குறிப்புரை :

எண் பெரிய - மிக்க செருக்கையுடைய . வானவர்கள் - தேவர்கள் ( நின்று துதிசெய்ய .) இறையே - சற்று . கருணை ஆய் - கிருபை உடையவராகி . உண்பு அரிய - எவரும் உண்ணுதற்கு அரிய . ( நஞ்சுதனை உண்டு ). உலகு உய்ய அருள் உத்தமனிடம் - உலகம் உய்யும்படி அருள் புரிந்த உத்தமனாகிய சிவபெருமானது இடமாவது . பண்பயிலும் - இசையைப் பாடிக்கொண்டிருக்கும் ( வண்டு ). பல - பல மலர்களையும் . கெண்டி - கிளறி . மது உண்டு - தேனைக் குடிக்க . நிறை - வளம் நிறைந்த . பைம் பொழிலின் வாய் - பசிய சோலையினிடத்து . ஒண்பலவின் - சிறந்த பலா மரங்களின் . இன்கனி - இனிய கனிகள் . சொரிந்து - தேனைச் சொரிந்து . மணம் நாறு - மணங்கமழ்கின்ற ( உதவி மாணிகுழியே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 8

எண்ணமது வின்றியெழி லார்கைலை மாமலை யெடுத்ததிறலார்
திண்ணிய வரக்கனை நெரித்தருள் புரிந்தசிவ லோகனிடமாம்
பண்ணமரு மென்மொழியி னார்பணை முலைப்பவள வாயழகதார்
ஒண்ணுதன் மடந்தையர் குடைந்துபுன லாடுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

கயிலைமலையின் பெருமையையும் , சிவ பெருமானின் அளவற்ற ஆற்றலையும் சிந்தியாது , கயிலைமலையைப் பெயர்த்தெடுத்த வலிய அரக்கனான இராவணனை அம்மலையின்கீழ் நெரித்து , பின் அவன் சாமகானம் பாட அருள்புரிந்த சிவலோக நாயகனாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , பண்போன்று மென்மொழி பேசுபவர்களாய்ப் பருத்த கொங்கைகளையும் , பவளம் போன்ற வாயையும் , அழகிய ஒளிபொருந்திய நெற்றியையுமுடைய பெண்கள் கையாற் குடைந்து நீராடும் திருமாணி குழி ஆகும் .

குறிப்புரை :

எண்ணம் அது இன்றி - முன் யோசனை சிறிதும் இல்லாமல் ( துணிந்து ) எழில்ஆர் - அழகு பொருந்திய . கயிலை மா மலை - சிறந்த கயிலாயமலையை . எடுத்த - எடுக்கத் தொடங்கிய . திண்ணிய - ( இலேசில் அழிக்கமுடியாத ) வலிமை வாய்ந்த . திறல் ஆர் - திறமையுடைய . அரக்கனை - இராவணனை . நெரித்து - அடர்த்து ( பின் அருள்புரிந்த .) சிவலோகன் - சிவலோகநாயகனாகிய சிவபெருமானது .( இடம் ஆம் .) பண் அமரும் - இசை பொருந்திய . மென்மொழியின் - மெல்லெனப் பேசும் சொற்களையும் . ஆர் - ( அணிகலன்கள் ) நிறைந்த . பணை - பருத்த . முலை - தன பாரங்களையும் . பவளவாய் - பவளம் போன்ற வாயையும் . அழகு ( அது ) ஆர் - அழகு பொருந்திய . ஒள் - ஒளிவாய்ந்த . நுதல் - நெற்றியையுமுடைய ( மடந்தையர் ). குடைந்து புனல் ஆடு - ( கையால் ) குடைந்து நீராடும் , ( உதவிமாணிகுழி ).

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நேடுமய னோடுதிரு மாலுமுண ராவகை நிமிர்ந்துமுடிமேல்
ஏடுலவு திங்கண்மத மத்தமித ழிச்சடையெம் மீசனிடமாம்
மாடுலவு மல்லிகை குருந்துகொடி மாதவி செருந்திகுரவி
னூடுலவு புன்னைவிரை தாதுமலி சேருதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

பிரமனும் , திருமாலும் இறைவனின் அடிமுடி தேடியும் உணராவகை நெருப்புப்பிழம்பாய் ஓங்கி நின்றவர் சிவபெருமான் . அவர் தம் சடைமுடியில் வெண்தாமரை இதழ் போன்ற பிறைச்சந்திரனையும் , ஊமத்தை , கொன்றை ஆகியவற்றையும் அணிந்து விளங்குபவர் . எம் இறைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , மகரந்தப்பொடி நிறைந்த மல்லிகை , குருந்து , மாதவி , செருந்தி , குரவம் , புன்னை என்ற மணம் கமழும் மலர்கள் நிறைந்த திருமாணிகுழி என்பதாம் .

குறிப்புரை :

நேடும் - தேடும் . அயனோடு - பிரமனுடன் . ( திருமாலும் ) உணரா ( த ) வகை - உணராதவிதம் . நிமிர்ந்து - (` பாதாளம் ஏழினும் கீழ் ... ... ... பாதமலர் , போதார்புனை முடியும் எல்லாப் பொருள் முடிவே ` என்ன ஓங்கிய .) முடிமேல் - தலையில் . ஏடு உலவு திங்கள் - ( வெண்தாமரை ) இதழ்போல் தவழ்கின்ற பிறைச்சந்திரனையும் . மதம் - மணம் வீசுகின்ற , மத்தம் - பொன்னூமத்தையையும் . இதழி - கொன்றை மாலையையும் . சடை - சடையையும் உடைய , ( எம் ஈசன் இடம் ஆம் .) மாடு - பக்கங்களிலே . உலவு - படர்கின்ற .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மொட்டையம ணாதர்முது தேரர்மதி யில்லிகண் முயன்றனபடும்
முட்டைகண் மொழிந்தமொழி கொண்டருள்செய் யாதமுதல் வன்றனிடமாம்
மட்டைமலி தாழையிள நீர்முதிய வாழையில் விழுந்தவதரில்
ஒட்டமலி பூகநிரை தாறுதிர வேறுதவி மாணிகுழியே.

பொழிப்புரை :

மொட்டைத் தலையுடைய சமணர்களும் , பேதைமை முதிர்ந்த புத்தர்களும் இறையுண்மையை உணராதவர்கள் . முயன்று செய்த வினைகளே பயன்தரும் . அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்பவர்கள் அவர்கள் . உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத , அவர்கள் சொன்ன சொற்களால் அவர்கட்கு அருள்புரியாத சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , மட்டைகளையுடைய தென்னைகளின் இளநீர்கள் வாழையிலும் , பாக்கு மரங்களிலும் விழுந்து குலைகள் சிதற விளங்கும் திருமாணிகுழி ஆகும் .

குறிப்புரை :

மொட்டை - மொட்டைத் தலையையுடைய . அமண் ஆதர் - சமணர்களாகிய அறிவிலிகளும் . முது தேரர் - பேதைமையின் முதிர்ந்த புத்தர்களுமாகிய , மதி இல்லிகள் - புத்தியற்றவர்களும் , முயன்றன படும் - முயன்று செய்த வினைகளே பயன்தரும் ( அதற்குக் கர்த்தா வேண்டா என்று சொல்லும் ) முட்டைகள் - உருட்டிய வழி உருளும் முட்டைபோல் தமக்கென ஓர் உறுதி இல்லாத அவர்கள் மொழிந்த மொழி கொண்டு - சொன்ன சொற்களால் , அருள் செய்யாத - அருள் புரியாத ( முதல்வன்றனிடமாம் ,) மட்டை மலி தாழை - மட்டைகளையுடைய தென்னைகளின் . இளநீர் - இளநீர்கள் . முதிய வாழையில் - முதிர்ந்த வாழையில் . விழுந்த அதரில் - விழுந்த வழியே . ஒட்டமலி - வரிசையாக உள்ள : பூகநிரை - கமுகின் சோலைகளின் . தாறு உதிர - குலைகளில் உள்ள காய்கள் உதிரும் படியாக , ஏறு - எற்றித்தாக்கும் ( உதவிமாணிகுழியே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

உந்திவரு தண்கெடில மோடுபுனல் சூழுதவி மாணிகுழிமேல்
அந்திமதி சூடியவெம் மானையடி சேருமணி காழிநகரான்
சந்தநிறை தண்டமிழ் தெரிந்துணரும் ஞானசம் பந்தனதுசொல்
முந்தியிசை செய்துமொழி வார்களுடை யார்கணெடு வானநிலனே.

பொழிப்புரை :

பலபொருள்களை நீர்ப்பெருக்குடன் அடித்து வரும் கெடிலநதி சூழ்ந்த உதவி மாணிகுழியின் மீது , மாலைக்காலப் பிறைச்சந்திரனைச் சூடிய எம் தலைவனான சிவபெருமானின் திரு வடிகளை இடைவிடாது தியானிக்கும் அழகிய சீகாழியில் அவதரித்த ஞானசம்பந்தன் சந்தம் நிறைந்த இன்தமிழில் அறிந்துணர்ந்து அருளிய இத்திருப்பதிகத்தை இசையுடன் பாட முற்படுபவர்கள் உயர்ந்த முத்திப் பேற்றைப் பெறுவர் .

குறிப்புரை :

உந்திவரு - பல பொருள்களை அடித்துக்கொண்டு வருகின்ற . தண் - குளிர்ச்சி பொருந்திய . கெடிலம் - கெடில நதியின் . ஓடுபுனல் - ஓடும் தண்ணீர் . சூழ் - சூழ்ந்த . ( உதவிமாணி குழிமேல் .) அந்திமதி சூடிய எம்மானை - அந்திக்காலத்தில் தோன்றும் பிறைச் சந்திரனை அணிந்த எம் தலைவனாகிய சிவபெருமானது . அடி - திருவடிகளை . சேரும் - இடைவிடாது தியானிக்கும் . அணி - அழகிய . காழிநகரான் - சீகாழியில் அவதரித்தருளியவரும் . சந்தம் நிறை - சந்தம் நிறைந்த . தண் தமிழ் - இனிய தமிழை . தெரிந்து உணரும் - அறிந்து உணர்ந்த ( ஞானசம்பந்தனது .) சொல் - சொற்களாகிய இப்பதிகத்தை . முந்தி - முற்பட . இசை செய்து - இசையைத் தொடங்கி . மொழிவார்கள் - பாடுவோர் . நெடுவான நிலன் - எவற்றினும் உயர்ந்ததாகிய முத்தியுலகத்தை , உடையார் - உடைமையாகப் பெறுவர் .
சிற்பி