திருவேதிகுடி


பண் :சாதாரி

பாடல் எண் : 1

நீறுவரி யாடரவொ டாமைமன வென்புநிரை பூண்பரிடபம்
ஏறுவரி யாவரு மிறைஞ்சுகழ லாதிய ரிருந்தவிடமாம்
தாறுவிரி பூகமலி வாழைவிரை நாறவிணை வாளைமடுவில்
வேறுபிரி யாதுவிளை யாடவள மாரும்வயல் வேதிகுடியே.

பொழிப்புரை :

திருநீற்றினையும் , வரிகளையுடைய ஆடும் பாம்பையும் , ஆமையோட்டையும் , அக்குமணியையும் , எலும்பு மாலையையும் சிவபெருமான் அணிந்துள்ளார் . அவர் இடப வாகனத்தில் ஏறுவார் . யாவரும் வணங்கத்தக்க முதல்வராகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் , பாளைகள் விரிந்த பாக்குமரங்கள் நிறைந்த சோலைகளிலும் , பழங்கள் கனிந்த வாழைத் தோட்டங்களிலும் நறுமணம் வீச , மடுக்களில் ஆணும் , பெண்ணுமான வாளை மீன்கள் வேறு பிரியாமல் விளையாடும் , வயல்வளமிக்க திருவேதிகுடி ஆகும் .

குறிப்புரை :

நீறு - திருநீற்றையும் . வரி - நெடிய . ஆடு அரவொடு - ஆடும் பாம்புடனே . ஆமை - ஆமையோட்டையும் . மனவு - அக்குப் பாசியையும் . என்புநிரை - எலும்பு மாலையையும் . பூண்பர் - அணிவார் . இடபம் ஏறுவர் - காளையை ஏறிநடத்துவார் . யாவரும் - எவரும் . இறைஞ்சு - வணங்கத்தக்க . கழல் - திருவடிகளையுடைய , ஆதியர் - முதல்வர் ஆகிய சிவபெருமான் ( இருந்த இடம் ஆம் .) தாறு விரி - பாளைகள் விரிந்த . பூகம் - கமுகஞ்சோலைகளிலும் , ( பழங்கள் கனிந்த ) மலிவாழை - அடர்ந்த வாழைத் தோட்டங்களிலும் , விரை நாற - வாசனை வீசவும் . மடுவில் - மடுக்களில் . இணைவாளை - ஆணும் பெண்ணுமான வாளைமீன் இணைகள் . வேறு பிரியாது விளையாட - வேறாகப் பிரியாமல் விளையாடவும் . வயல் வளம் ஆரும் - வயல்களில் வளங்கள் மிகுந்தும் உள்ள . வேதிகுடி - திருவேதி குடியே . ஆமை என்ற சொல் , ஆமை யோட்டைக் குறிப்பது ; முதலாகு பெயர் . மனவு - அக்குப்பாசி , வேட்டுவக் கோலம் தாங்கிய பொழுது அணிந்தது . நிறை - வரிசை ; இங்கு மாலையைக் குறித்தது . அயன் அரி முதலிய தேவர்கள் செருக்குறா வண்ணம் பலவூழிகளிலும் இறந்த அவர்தம் எலும்பை மாலையாக அணிந்தவர் . ( கந்தபுராணம் ததீசியுத்தரப் படலம் - 12) காண்க . ஏறுவர் + யாவரும் = ஏறுவரி யாவரும் . விரைநாற என்பதற்கேற்பப் ` பழங்கள் கனிந்த ` என அடை வருவித்துரைக்கப்பட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சொற்பிரிவி லாதமறை பாடிநட மாடுவர்தொ லானையுரிவை
மற்புரி புயத்தினிது மேவுவரெந் நாளும்வளர் வானவர்தொழத்
துற்பரிய நஞ்சமுத மாகமு னயின்றவ ரியன்றதொகுசீர்
வெற்பரையன் மங்கையொரு பங்கர்நக ரென்பர்திரு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் இசையும் , சொல்லின் மெய்ப்பொருளும் பிரிதல் இல்லாத வேதத்தைப்பாடி நடனம் ஆடுவார் . முதிர்ந்த யானையின் தோலை உரித்து மல்யுத்தம் புரிய வல்ல தோளில் இனிதாக அணிவார் . நாள்தோறும் தேவர்கள் வணங்க , உண்ணுதற்கரிய நஞ்சை அமுதமாக முற்காலத்தில் உண்டருளியவர் . பலவாற்றானும் புகழ்மிக்க மலையரையன் மகளாகிய உமாதேவியாரை ஒருபாகமாகக் கொண்டருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி என்பதாம் .

குறிப்புரை :

சொல் பிரிவு இலாத - இசையோடு சொற்பிரியாத . மறை - வேத கானத்தை . பாடி - பாடிக்கொண்டு . நடம்ஆடுவர் - நடனம் ஆடுவர் . தொல் - முதிர்ந்த . ஆனை - யானையின் . உரிவை - தோலை . மல் புரி புயத்து - மல் யுத்தம் புரியவல்ல தோளில் . ( எந்நாளும் ) இனிது மேவுவர் - இனியதாக அணிவார் . வளர் வானவர் தொழ - அச்சம் மிகுந்த தேவர்கள் துதிக்க . துற்பு அரிய - உண்ணுதற்கரிய , நஞ்சு அமுதமாக முன் அயின்றவர் - விடத்தை அமுதமாக முற் காலத்தில் உண்டருளியவர் . தொகுசீர் இயன்ற - பலவாற்றானும் தொக்க புகழ் பொருந்திய . வெற்பு அரையன் மங்கை - மலை அரையன் மகளாகிய உமாதேவியாரை . ஒரு பங்கர் - ஒரு பாகமாகக் கொண்டு அருளியவராகிய சிவபெருமானது , ( நகர் திருவேதிகுடியே ) வேத புருடனுக்குச் சந்தஸ் ( இசை ) பாதமாகக் கூறப்படுவதால் பாதமின்றி நடைபெறாமை குறித்தற்குச் சொற்பிரியாத என்பதற்குச் செயப்படு பொருள் வருவித்துரைக்கப்பட்டது . மற்போர் அருச்சுனனுடன் நடந்தது . தங்களுக்கு உயிர் அளித்தமை கருதி வானவர் எந்நாளும் தொழ நஞ்சு அயின்றனரென வரலால் தொழ என்பது காரியப் பொருட்டு . துற்று - உண்டி . துற்பு - உண்ணல் . துன் ( னுதல் ) பு துற்பு என்றுகொண்டு . அண்டுதற்கரிய எனினும் ஆம் . அயிலல் - உண்ணல் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

போழுமதி பூணரவு கொன்றைமலர் துன்றுசடை வென்றிபுகமேல்
வாழுநதி தாழுமரு ளாளரிரு ளார்மிடறர் மாதரிமையோர்
சூழுமிர வாளர்திரு மார்பில்விரி நூலர்வரி தோலருடைமேல்
வேழவுரி போர்வையினர் மேவுபதி யென்பர்திரு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச்சந்திரனை அணிந்தவர் . பாம்பு , கொன்றைமலர் இவற்றைச் சடையிலணிந்து , அதில் தங்கிய கங்காநதியைப் பகீரதன் முயற்சிக்கு வெற்றி உண்டாக உலகிற் பாயச்செய்த அருளாளர் . விடம் உண்டதால் கருநிறம் வாய்ந்த கண்டத்தையுடையவர் . தேவலோகத்திலுள்ள மகளிரும் , ஆடவரும் தங்கள் குறைகளைக் கூறி அவை தீர அருளை வேண்டுபவர் . அழகிய மார்பில் முப்புரிநூல் அணிந்தவர் . புலித் தோலாடை அணிந்தவர் . அதன் மேல் யானைத்தோலைப் போர்த்தவர் . அத்தகைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருவேதிகுடி ஆகும் .

குறிப்புரை :

போழும் மதி - வட்டத்தைப் பிளந்தாலனைய பிறைச் சந்திரன் . பூண் - சுற்றிய . அரவு - பாம்பு . ( கொன்றை மலர் ஆகிய இவைகள் ) துன்றுசடை - நெருங்கிய சடா மகுடத்தினின்றும் . வென்றி புக - ( பகீரதன் முயற்சிக்கு ) வெற்றி உண்டாக . மேல் வாழு நதி - அதன் மேல் தங்கிய கங்காநதியை . தாழும் - உலகிற் பாயச்செய்த ( அருளாளர் ) இருளார் மிடறர் - கருமை பொருந்திய கண்டத்தை யுடையவர் . மாதர் இமையோர் - மாதர்களோடு கூடிய தேவர்கள் . சூழும் இரவாளர் - சுற்றி நின்று தங்கள் குறைகளை வேண்டி இரக்கப்படுபவர் . ( திருமார்பில் ) விரி நூலர் - ஒளி பரவிய பூணூலை யுடையவர் . வரி தோலர் - புலித்தோலுடையையுடையவர் . மேல் - உடம்பின்மீது . வேழ உரி போர்வையினர் - யானைத் தோலைப் போர்வையாகக் கொண்டருளியவர் ( ஆகிய சிவபெருமான் ) மேவு பதி - தங்கும் தலம் . வேதிகுடி என்பர் - திருவேதிகுடி என்பர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

காடர்கரி காலர்கனல் கையரனன் மெய்யருடல் செய்யர்செவியில்
தோடர்தெரி கீளர்சரி கோவணவ ராவணவர் தொல்லைநகர்தான்
பாடலுடை யார்களடி யார்கண்மல ரோடுபுனல் கொண்டுபணிவார்
வேடமொளி யானபொடி பூசியிசை மேவுதிரு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் சுடுகாட்டில் இருப்பவர் . யானையின் தோலை உரித்து அதற்குக் காலனாக ஆனவர் . நெருப்பைக் கையில் ஏந்தியவர் . நெருப்புப் போன்ற சிவந்த மேனி உடையவர் . தூய உடம்பினர் . காதில் தோட்டை அணிந்தவர் . கிழிந்த ஆடை அணிந்தவர் . சரிந்த கோவணத்தை அணிந்தவர் . பசுவேறி வரும் கோலத்தை யுடையவர் . அச்சிவபெருமான் வீற்றிருந்தருளும் பழமையான நகரானது , தோத்திரம் பாடும் அடியார்கள் புனிதநீரால் அபிடேகம் செய்து , மலரால் அர்ச்சித்து வணங்கி , சிவவேடத்தை நினைப்பூட்டும் திருவெண்ணீற்றினைப் பூசிக் கீர்த்தியுடன் விளங்குகின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

காடர் - மயானத்திலிருப்பவர் ` கோயில் சுடுகாடு ` என்பது திருவாசகம் . கரிகாலர் - யானைக்கு யமன் ஆனவர் . கனல் கையர் - நெருப்பைக் கையில் ஏந்தியவர் . அனல் மெய்யர் - நெருப்பே உடம்பாக உடையவர் . உடல் செய்யர் - அதனால் மேனி செந்நிறம் உடையவர் . செவியில் தோடர் - காதில் தோட்டையணிந்தவர் . தெரிகீளர் - தெரிந்தெடுத்த கீளையுடையவர் . சரிகோவணர் - சரிந்த கௌபீனத்தை அணிந்தவர் . ஆவணவர் - பசுவேறிவரும் கோலத்தை யுடையவர் ( ஆ - பசு ; வண்ணம் - கோலம் ) தொல்லைநகர்தான் - சிவபெருமானின் பழமையான தலம் ஆகிய . பாடல் உடையார்கள் அடியார்கள் - தோத்திரம் பாடுதலை உடையவர்களாகிய அடியார்கள் . மலரோடு புனல் கொண்டு - மலரையும் தண்ணீரையும் கொண்டு . பணிவார் - வணங்குபவர்களாய் . வேடம் - வேடத்திற்குரியதாகிய . ஒளியான - பிரகாசம் பொருந்திய . பொடிபூசி - திருநீற்றை உத்தூளித்து . இசைமேவு - கீர்த்தியடைகின்ற ( திருவேதிகுடியே )

பண் :சாதாரி

பாடல் எண் : 5

சொக்கர்துணை மிக்கவெயி லுக்கற முனிந்துதொழு மூவர்மகிழத்
தக்கவருள் பக்கமுற வைத்தவர னாரினிது தங்குநகர்தான்
கொக்கரவ முற்றபொழில் வெற்றிநிழல் பற்றிவரி வண்டிசைகுலாம்
மிக்கமரர் மெச்சியினி தச்சமிடர் போகநல்கு வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் மிக்க அழகுடையவன் . கோபத்தால் சிரித்து மும்மதில்களும் வெந்தழியுமாறு செய்தபோது , அங்கிருந்த மூவர் தன்னை வணங்கிப் போற்ற அவர்கள் மகிழும்படியாகத் தன் பக்கத்திலே இருக்கும்படி அருள்புரிந்தவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் நகராவது , மாமரச் சோலைகளில் மகளிர் விளையாடும் ஆரவாரமும் , மகளிரின் மேனி ஒளியானது மாந்தளிர்களை வென்ற வெற்றி பற்றி வரிவண்டுகள் இசைபாடும் ஒலியும் , தேவர்கள் போற்றும் ஒலியும் கொண்டு , தன்னையடைந்து வழிபடுபவர்களின் அச்சமும் , துன்பமும் நீங்க நன்மையை அளிக்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

சொக்கர் - பேரழகு உடையவரும் . துணைமிக்க - தங்களுக்குத் தாங்கள் உதவி செய்துகொள்வதில் மிக்க . எயில் - மதிலிலிருந்த அசுரர் . உக்கு - பொடியாகி . அற - ஒழிய . முனிந்து - கோபித்து . தொழும்மூவர் - அவர்களுக்குள் தன்னை வணங்கிய மூவர் . மகிழ - மகிழும்படியாக , பக்கம் உற - தன் பக்கத்திலே யிருக்கும்படி . தக்க அருள்வைத்த - சிறந்த கருணைசெய்த ( அரனார் ) இனிது - நன்கு , ( தங்கும் ) நகர்தான் - தலமாவது . அரவம் உற்ற - விளையாடும் மகளிரின் ஆரவாரம் பொருந்திய . கொக்கு பொழில் - மாமரச்சோலைகளில் . நிழல் - மகளிரின்மேனியின் ஒளியானது . வெற்றிபற்றி - மாந்தளிர்களை வென்ற வெற்றியைப் பற்றி . வரிவண்டு - கீற்றுக்களையுடைய வண்டுகள் . இசைகுலாம் - பாராட்டி இசைபாடிக் கொண்டாடும் ( திருவேதிகுடி .) மிக்க அமரர் - உடலின் ஒளியால் மிக்க தேவர்கள் . மெச்சி - அம்மகளிர்க்கு மெச்சிப் ( பாராட்டும் திரு வேதிகுடி ) அச்சம் இடர்போக ( தன்னையடைந்தவர்களுக்கு ) அச்சமும் துன்பமும் நீங்க . இனிது - நன்மையை . நல்கு - அளிக்கும் . ( திருவேதிகுடி ) பாராட்டும் என ஒருசொல் வருவித்துரைக்க .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

செய்யதிரு மேனிமிசை வெண்பொடி யணிந்துகரு மானுரிவைபோர்த்
தையமிடு மென்றுமட மங்கையொ டகந்திரியு மண்ணலிடமாம்
வையம்விலை மாறிடினு மேறுபுகழ் மிக்கிழி விலாதவகையார்
வெய்யமொழி தண்புலவ ருக்குரைசெ யாதவவர் வேதிகுடியே.

பொழிப்புரை :

சிவபெருமான் தம் சிவந்த திருமேனியில் வெண்ணிறத் திருநீற்றை அணிந்தவர் . கரிய யானையின் தோலைப் போர்த்தவர் . ` பிச்சையிடுங்கள் ` என்று இளமைவாய்ந்த உமாதேவி யாரோடு வீடுவீடாகத் திரிகின்றவர் , நம் தலைவரான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , இப்பூமியில் பஞ்சத்தால் பண்டங்களின் விலை ஏறினாலும் , மிகுந்த புகழும் , குறையாத பண்பாடும் உடையவர்களும் , இனிய புலவர்கட்குக் கொடையளிக்கும்போது வன்சொற்கள் சொல்லாத் தன்மையுடையவர்களும் ஆகிய மாந்தர்கள் வாழ்கின்ற திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

செய்ய திருமேனிமிசை - சிவந்த திருமேனியில் . வெண்பொடி அணிந்து - வெண்மையான திருநீற்றையணிந்து . கருமான் உரிவையைப் போர்த்து - கரிய மிருகமாகிய யானையின் தோலைப் போர்த்து . ஐயம் இடும் என்று - பிச்சை இடுங்கள் என்று . மடமங்கையொடு - இளமை பொருந்திய உமாதேவியாரோடு . அகம் திரியும் - வீடுவீடாகத் திரிகின்ற , அண்ணல் - தலைவனது ( இடமாம் ). வையம் - பூமி . விலை மாறிடினும் - பஞ்சத்தினால் பண்டங்களின் விலை மாறினாலும் . ஏறுபுகழ் - முன்பே மிகுந்த கீர்த்தி . மிக்கு - மேலும் மிகுந்து . இழிவிலாத - குறையாத . வகையார் - பண்பாடு உடையவர்களும் . தண்புலவருக்கு - இனிய புலவர்களுக்குக் ( கொடை தரும்போது ). வெய்ய மொழி - வன்சொற்களை . உரைசெய்யாத - சொல்லாத . அவர் - அத்தகையார்களுமாகிய மாந்தர் ( வாழும் ). வேதிகுடி - திருவேதிகுடியாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

உன்னியிரு போதுமடி பேணுமடி யார்தமிட ரொல்கவருளித்
துன்னியொரு நால்வருட னானிழ லிருந்ததுணை வன்றனிடமாம்
கன்னியரொ டாடவர்கண் மாமணம் விரும்பியரு மங்கலமிக
மின்னியலு நுண்ணிடைநன் மங்கைய ரியற்றுபதி வேதிகுடியே.

பொழிப்புரை :

காலை , மாலை ஆகிய இருவேளைகளிலும் தியானித்துத் தன் திருவடிகளைப் போற்றும் அடியார்களுடைய துன்பங்கள் நீங்கும்படி அருள்செய்பவன் சிவபெருமான் . தன்னை யடைந்த சனகர் , சனந்தனர் , சனாதனர் , சனற் குமாரர் என்ற நான்கு முனிவர்கட்கும் கல்லால மரத்தின்கீழ் தட்சிணாமூர்த்தி கோலம் கொண்டு அறம் உரைத்தவன் . அனைத்துயிர்கட்கும் பற்றுக்கோடாய் விளங்குபவன் . அவன் உறைவிடம் கன்னியர்களும் , ஆடவர்களும் சிறப்பான வகையில் திருமணம் செய்து கொள்ளும் மங்கலநாளில் திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை மிகச் சிறப்புற நடத்துகின்ற மின்னலைப் போன்ற நுண்ணிடையுடைய மகளிர்கள் வாழும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

இருபோதும் - பகல் இரவு என்ற இருவேளைகளிலும் . உன்னி - தியானித்து . அடிபேணும் - தமது திருவடியைப் போற்றும் . அடியார் தம் இடர் - அடியார்களுடைய துன்பங்கள் . ஒல்க - ஒழிய . அருளி - அருள் செய்து . துன்னிய - அடைந்த . ஒரு நால்வருடன் - சனகர் முதலிய நால்வரோடு . ஆல் நிழல் இருந்த - கல்லாலின் நிழலில் இருந்து உபதேசித்த . துணைவன்தன் - அனைத்துலகத்திற்கும் பற்றுக்கோடாய் உள்ள சிவபெருமானது ( இடமாம் ), கன்னியரோடு ஆடவர்கள் - கன்னிகைகளுடன் ஆண்கள் , ( புரியும் ) மாமணம் - சிறந்த மணத்தை , விரும்பி - நடத்துவதை விரும்பி , அரும் - வேறெங்கும் காணற்கு அரிய . மங்கலம் - திருமணத்திற்குரிய மங்கலச் சடங்குகளை . மிக - மிக்க சிறப்புற , ( மங்கையர் இயற்றுபதி ) மின் இயலும் - மின்னலைப்போன்ற , நுண்ணிடை - சிறிய இடையையுடைய . நல் மங்கையர் - சடங்கியற்றும் தகுதிவாய்ந்த பெண்டிர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

உரக்கரநெ ருப்பெழநெ ருக்கிவரை பற்றியவொ ருத்தன்முடிதோள்
அரக்கனை யடர்த்தவனி சைக்கினிது நல்கியரு ளங்கணனிடம்
முருக்கிதழ் மடக்கொடி மடந்தையரு மாடவரு மொய்த்த கலவை
விரைக்குழன் மிகக்கமழ விண்ணிசை யுலாவுதிரு வேதிகுடியே.

பொழிப்புரை :

கயிலைமலையைப் பெயர்த்து எடுக்க முயன்ற அரக்கனான இராவணனின் தலைகளையும் , தோள்களையும் , நெஞ்சிலும் , கரத்திலும் நெருப்புப்போல் வருத்துமாறு மலையின்கீழ் அடர்த்து , பின் அவன் சாமகானம் இசைக்க அவனுக்கு ஒளி பொருந்திய வெற்றிவாளையும் , நீண்ட வாழ்நாளையும் அருளிய பெருங்கருணையாளனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலமாவது , கல்யாண முருங்கைப்பூப் போன்ற உதடுகளையுடைய , இளங்கொடி போன்ற பெண்களும் , ஆடவர்களும் , நறுமணம் கமழும் கலவையைக் கூந்தலில் தடவ , அதன் மணமானது விண்ணுலகிலும் பரவ விளங்கும் திருவேதிகுடி என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

வரை - கயிலை மலையை . பற்றிய - பேர்த்தெடுக்கத் தொடங்கிய . ஒருத்தன் அரக்கனை - ஒரு அரக்கனாகிய இராவணனது . முடிதோள் - தலையையும் தோளையும் , உரம் கரம் - நெஞ்சிலும் கைகளிலும் . நெருப்பு எழ - நெருப்புக்கக்கும்படி . நெருக்கி அடர்த்து - அழுந்த மிதித்து , பின் அவன் ) இசைக்கு - இசைப்பாடலுக்கு . இனிது நல்கியருள் - ( வாளும் - வாழ்நாளும் ) மகிழக்கொடுத்தருளிய . அங்கணன் - சிவபெருமானின் ( இடம் ,) முருக்குஇதழ் - கல்யாண முருங்கைப்பூவையொத்த அதரத்தையுடைய . மடக்கொடி - இளங்கொடிபோன்ற . மடந்தையரும் - பெண்களும் . ஆடவரும் - ஆண்களும் . மொய்த்த - நிறையப் பூசிய , கலவை - கலவைச் சந்தனத்தின் . விரை - வாசனையும் . குழல் - மாதர் கூந்தலின் . விரை - வாசனையும் . மிகக் கமழ - மிகவும் மணம் வீச , ( அது ) விண் - தேவருலகில் . இசை உலாவு - புகழ்பெறச் சுற்றிலும் கமழும் திருவேதிகுடியே .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

பூவின்மிசை யந்தணனொ டாழிபொலி யங்கையனு நேடவெரியாய்த்
தேவுமிவ ரல்லரினி யாவரென நின்றுதிகழ் கின்றவரிடம்
பாவலர்க ளோசையியல் கேள்விய தறாதகொடை யாளர்பயில்வாம்
மேவரிய செல்வநெடு மாடம்வளர் வீதிநிகழ் வேதிகுடியே.

பொழிப்புரை :

தாமரை மலரில் வீற்றிருக்கும் பிரமனுடன் , சக்கராயுதத்தை ஏந்திய அழகிய கையையுடைய திருமாலும் தேட , தீப்பிழம்பாகி , இப்பெருமானை அன்றி வேறு கடவுள் இல்லை என ஏத்தப்பெறும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , புலவர்கள் ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை உரைக்க , கேள்விச் செல்வத்தினை நீங்காத கொடை வள்ளல்கள் செவிமடுக்குமாறு , செல்வம் மிகுந்த நெடிய மாடமாளிகைகளும் , வீதிகளும் திகழ்கின்ற திருவேதிகுடி என்பதாகும் .

குறிப்புரை :

பூவின்மிசை - தாமரை மலரில் வசிக்கும் . அந்தணனொடு - பிரமனுடன் . ஆழி பொலி - சச்கராயுதம் விளங்கும் . அங்கையனும் - அகங்கையை யுடையவனாகிய திருமாலும் . நேட - தேட . எரியாய் - தீப்பிழம்பாகி , ( அவ்விருவரையும் பார்த்தவர்கள் ) இவர் - இப் பிரமவிட்டுணுக்கள் . தேவர் அல்லர் - கடவுளர் ஆகார் . ( என்றால் ,) இனி , யாவர் ? - கடவுளாவார் யாவர் ? ( சிவபெருமானேதான் .) என - என்று கூறும்படி . ( நின்று ,) திகழ்கின்றவர் - விளங்குகின்றவராகிய சிவபெருமானது ( இடம் .) பாவலர்கள் - புலவர்களின் . ஓசை இயல் - ஓசையினிமையுடைய இயற்றமிழ் நூற்பொருளை . கேள்வி ( அது ), கேட்டறிதல் . அறாத - நீங்காத ( கொடையாளர் ) பயில்வு ஆம் - வாழ்வதாகிய ( வேதிகுடி ). மேவு அரிய - வேறெங்கும் தங்குதல் இல்லாத . செல்வம் - செல்வத்தையுடைய . நெடுமாடம் வளர் - நெடிய மாடங்கள் பெருகும் . வீதிநிகழ் - வீதிகள் பொருந்திய , ( வேதிகுடியே .)

பண் :சாதாரி

பாடல் எண் : 10

வஞ்சமணர் தேரர்மதி கேடர்த மனத்தறிவி லாதவர்மொழி
தஞ்சமென வென்றுமுண ராதவடி யார்கருது சைவனிடமாம்
அஞ்சுபுலன் வென்றறு வகைப்பொரு டெரிந்தெழு விசைக்கிளவியால்
வெஞ்சின மொழித்தவர்கண் மேவிநிகழ் கின்றதிரு வேதிகுடியே.

பொழிப்புரை :

வஞ்சனையுடைய சமணர்களும் , புத்தர்களும் கெட்ட மதியுடையவர்கள் . இறைவனை உணரும் அறிவில்லாத அவர்கள் கூறும் மொழிகள் பற்றுக்கோடாகத் தக்கன என்று எந்நாளும் நினையாத அடியார்கள் தியானிக்கின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது ஐம்புலன்களை வென்று , அறுவகைச் சமய நூற் பொருள்களை ஆராய்ந்து , ஏழுவகைச் சுரங்களால் இசைப்பாடல்களைப் பாடி , கோபத்தை ஒழித்த அருளாளர்கள் மேவி விளங்குகின்ற திருவேதிகுடி ஆகும் .

குறிப்புரை :

வஞ்ச அமணர் - வஞ்சனையையுடைய அமணர்களும் . தேரர் - புத்தர்களுமாகிய . மதிகேடர் - கெட்ட மதியை யுடையவர்கள் , ( தம் மனத்து அறிவிலாதவர் ) மொழி - சொற்களை . தஞ்சம் என - பற்றுக்கோடாகத் தக்கது என்று . என்றும் - எந்நாளிலும் . உணராத - நினையாத ( அடியார் .) கருது - தியானிக்கின்ற . சைவன் - சிவபெருமானின் ( இடம் ஆம் .) அஞ்சுபுலன் வென்று - பஞ்சேந்திரங்களையும் வென்று . அறுவகைப் பொருள் தெரிந்து - அறுவகைச் சமய நூற்பொருள்களை ஆராய்ந்து . ஏழு இசைக் கிளவியால் - சப்த சுரங்களையுடைய இசைப் பாடல்களால் ( வெம்சினம் ஒழித்தவர்கள் .) மேவி நிகழ்கின்ற - விரும்பி வாழநின்ற ( வேதிகுடி .)

பண் :சாதாரி

பாடல் எண் : 11

கந்தமலி தண்பொழினன் மாடமிடை காழிவளர் ஞானமுணர்சம்
பந்தன்மலி செந்தமிழின் மாலைகொடு வேதிகுடி யாதி கழலே
சிந்தைசெய வல்லவர்க ணல்லவர்க ளென்னநிகழ் வெய்தியிமையோர்
அந்தவுல கெய்தியர சாளுமது வேசரத மாணைநமதே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் குளிர்ந்த சோலைகளும் , அழகிய மாடங்களும் நெருங்கிய சீகாழியில் அவதரித்த ஞான சம்பந்தன் பொருட்செறிவுடைய செந்தமிழில் அருளிய இப்பாமாலை கொண்டு திருவேதிகுடியில் வீற்றிருந்தருளும் முதல்வனான சிவ பெருமானின் திருவடிகளைச் சிந்தித்துப் போற்றுபவர்கள் நல்லவர்களாய்த் திகழ்வர் . மறுமையில் தேவலோகத்தை அடைந்து அரசாள்வர் . இது நமது ஆணை .

குறிப்புரை :

கந்தம் மலி - வாசனைமிகுந்த . தண்பொழில் - குளிர்ச்சி பொருந்திய சோலைகளும் . நல் மாடம் - அழகிய மாடங்களும் . மிடை - நெருங்கிய ( காழி ,) மலி - பொருட்செறிவையுடைய ( செந் தமிழ் .) ஆதி - முதல்வன் . சரதம் - நிச்சயம் .
சிற்பி