திருவீழிமிழலை


பண் :சாதாரி

பாடல் எண் : 1

சீர்மருவு தேசினொடு தேசமலி செல்வமறை யோர்கள்பணியத்
தார்மருவு கொன்றையணி தாழ்சடையி னானமர்ச யங்கொள்பதிதான்
பார்மருவு பங்கயமு யர்ந்தவயல் சூழ்பழன நீடவருகே
கார்மருவு வெண்கனக மாளிகை கவின்பெருகு வீழிநகரே.

பொழிப்புரை :

சிறப்புப் பொருந்திய சிவஒளியோடு , தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற செல்வன் கழலேத்தும் செல்வத்தை உடைய அந்தணர்கள் வணங்குகின்ற தாழ்ந்த சடையையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளும் வெற்றிமிகும் பதியாவது , பூமியில் பொருந்திய தாமரை மலர்கள் மலர்ந்த வயல்களும் , மேகம் சூழ்ந்த வெண்மையான , செல்வ வளமிக்க மாளிகைகளும் அழகுபெற விளங்குகின்ற திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

சீர்மருவு - சிறப்புப் பொருந்திய . தேசினொடு - சைவ ஒளியோடு . தேசம்மலி - தேசங்களிலெல்லாம் புகழ்பெற்ற . செல்வ மறையோர் - ( செல்வன் கழல் ஏத்தும் ) செல்வத்தையுடைய அந்தணர்கள் , பணிய . தாழ்சடையினான் - தொங்கும் சடையை யுடையவனாகிய சிவபெருமான் . அமர் - தங்கும் . சயம்கொள் - வெற்றி கொண்ட . பதி - தலம் . பார்மருவு - பூமியிற் பொருந்திய . பங்கயம் - தாமரைமலர்கள் . உயர்ந்த - உயர்வுற்ற . வயல்சூழ் பழனம் - மருதம் . நீட - வளம்மிக . கார்மருவு - மேகம் அளாவிய . வெண் - வெண்மையான நிறத்தையும் . கனகம் ஐசுவரியங்களையும் உடைய , மாளிகைகள் . கவின்பெருகு - அழகுபெருகுகின்ற வீழிநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

பட்டமுழ விட்டபணி லத்தினொடு பன்மறைக ளோதுபணிநல்
சிட்டர்கள்ச யத்துதிகள் செய்யவருள் செய்தழல்கொண் மேனியவனூர்
மட்டுலவு செங்கமல வேலிவயல் செந்நெல்வளர் மன்னுபொழில்வாய்
விட்டுலவு தென்றல்விரை நாறுபதி வேதியர்கள் வீழிநகரே.

பொழிப்புரை :

கொட்டும் முழவின் ஓசையும் , ஊதும் சங்கின் ஒலியும் , பல வேதங்களை ஓதுகின்ற பணியை மேற்கொள்ளும் , சீலமுடைய அந்தணர்கள் வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட அருள்செய்பவர் அழல் போன்ற சிவந்த மேனியுடைய சிவபெருமான் . அவர் வீற்றிருந்தருளும் ஊரானது நறுமணம் கமழும் செந்தாமரை மலர்கள் வேலி போன்று சூழ்ந்து விளங்குவதும் , செந்நெல் பெருகும் வயல்வளமிக்கதும் , வளம் பொருந்திய சோலைகள் சூழ்ந்ததும் , தென்றலின் நறுமணம் கமழ்வதும் அந்தணர்கள் வசிக்கின்றதுமான திருவீழிநகர் என்னும் பதியாகும் .

குறிப்புரை :

பட்ட - கொட்டிய . முழவு - முழவின் ஓசையையும் , இட்ட - ஊதிய , பணிலத்தினொடு - சங்கவாத்தியத்தின் ஓசையுடனே , பல் மறைகள் - பல சாகைகளையுடைய வேதங்களை , ஓது - ஓதுகின்ற , பணி - பணியை மேற்கொண்ட , நல் - நல்ல , சிட்டர்கள் - சீல முடையவர்களாகிய . அந்தணர்கள் , சயத்துதிகள் செய்ய - வெல்க என்னும் துதிப்பாடல்கள் பாட , அருள்செய்து , தழல் கொள் மேனியவன் - அக்கினிமயமான திருமேனியுடைய சிவபெருமானது , ஊர் . மட்டு உலவு - வாசனை வீசும் . செங்கமல வேலி - செந்தாமரை வேலியைப்போல் சூழ்ந்த . வயல் - வயல்களில் . ( செந்நெல்வளர் - வீழிநகர் ) மன்னு - நிலைபெற்ற . பொழில்வாய் - சோலையினிடத்தில் . விட்டு உலவு - வீசி வீசி அடிக்கின்ற தென்றல் - தென்றல் காற்று , விரைநாறு . வாசம் வீசுகின்ற . பதி - தலமாகிய ( வேதியர்கள் - அந்தணர்கள் வசிக்கும் ) வீழிநகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

மண்ணிழிசு ரர்க்குவள மிக்கபதி மற்றுமுள மன்னுயிர்களுக்
கெண்ணிழிவி லின்பநிகழ் வெய்தவெழி லார்பொழி லிலங்கறுபதம்
பண்ணிழிவி லாதவகை பாடமட மஞ்ஞைநட மாடவழகார்
விண்ணிழிவி மானமுடை விண்ணவர்பி ரான்மருவு வீழிநகரே.

பொழிப்புரை :

தேவலோகத்திலிருந்து பூவுலகிற்கு வந்த தேவர்கட்கு வளமிக்க பதி , மற்றுமுள்ள மன்னுயிர்கட்கு எண்ணற்ற இன்பங்களைத் தரும் பதி , அழகிய சோலைகளில் வண்டுகள் பாட , இள மயில்கள் நடனமாட , அழகிய தேவலோகத்திலிருந்து கொண்டு வரப்பட்டு வழிபடப்படும் விமானமுடைய கோயிலில் தேவர்களின் தலைவனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் சிறப்புடைய திருவீழிமிழலை என்னும் தலமாகும் .

குறிப்புரை :

மண்இழி - ( வானுலகினின்று ) பூ உலகிற்கு வந்த . சுரர்க்கு - தேவர்களுக்கும் . வளம்மிக்கபதி - வளமிகுந்து அளிக்கும் தலமாகும் . மற்றுமுள மன்னுயிர்களுக்கு . எண் ( இல் ) இழிவு இல் - அளவற்ற சிறந்த . இன்பம் நிகழ்வு எய்த - இன்பம் உண்டாக . எழில் ஆர் பொழில் - அழகுபொருந்திய சோலையில் . இலங்கு - விளங்குகின்ற . அறுபதம் - வண்டுகள் , இழிவு இலாத வகை பண்பாட - குறைவு இல்லாதபடி இசைப்பாடலைப் பாட . மடமஞ்ஞை நடமாட - இளம் மயில்கள் நடனம் ஆட . அழகார் - அழகுபொருந்திய . விண்ணிழி விமானம் உடை - தேவர் உலகினின்றும் இறங்கிய கோயிலையுடைய , விண்ணவர்பிரான் - தேவநாயகராகிய சிவபெருமான் . மருவு - தங்கியுள்ள வீழிநகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

செந்தமிழர் தெய்வமறை நாவர்செழு நற்கலைதெ ரிந்தவவரோ
டந்தமில்கு ணத்தவர்க ளர்ச்சனைகள் செய்யவமர் கின்றவரனூர்
கொந்தலர்பொ ழிற்பழன வேலிகுளிர் தண்புனல்வ ளம்பெருகவே
வெந்திறல்வி ளங்கிவளர் வேதியர்வி ரும்புபதி வீழிநகரே.

பொழிப்புரை :

பக்தியுடன் இனிய செந்தமிழ்ப் பாக்கள் பாடும் அன்பர்களும் , தெய்வத் தன்மையுடைய வேதம் ஓதும் நாவையுடைய அந்தணர்களும் , சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்த அறிஞர்களும் , நற்குண , நற்செய்கையுடைய ஞானிகளும் அர்ச்சனைகள் செய்ய , சிவபெருமான் விரும்பி வீற்றிருந்தருளும் ஊரானது , கொத்தாக மலரும் பூக்கள் நிறைந்த சோலைகளும் , வேலி சூழ்ந்த வயல்களும் , குளிர்ந்த நீர்நிலைகளும் வளம்பெருகி விளங்க , வேள்வி இயற்றும் வேத விற்பன்னர்கள் விரும்புகின்ற பதியாகிய திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

செந்தமிழர் - செந்தமிழ் மொழி பேசுவோர் . தெய்வமறை நாவர் - தெய்வத்தன்மை பொருந்திய வேதங்களை ஓதும் நாவையுடையவர் , செழுநற்கலை தெரிந்தவர் அவரோடு - சிறந்த நற்பயன் தருவதாகிய கலைகளைத் தெரிந்தவர்களாகிய அவர்களுடன் , அந்தமில் குணத்தவர்கள் - அளவற்ற குணத்தையுடையவர்களான ஞானிகளும் ( அர்ச்சனைகள் செய்ய ) அமர்கின்ற - விரும்பித் தங்குகின்ற . அரன் அமர்கின்ற ஊர் - சிவபெருமான் எழுந்தருளிய ஊராகும் . கொந்து அலர் பொழில் - கொத்துக்களில் மலர்கின்ற சோலைகளும் , வேலி - சூழ்ந்த . பழனம் - வயல்களில் , குளிர் - குளிர்கின்ற . தண் புனல்வளம் பெருக - தண்ணீரின் வளம்பெருக . வெம் - விரும்பத்தக்க . திறல் விளங்கி - வலிமையால் விளங்கி . வளர் - மிகுகின்ற . வேதியர் விரும்பு பதி - அந்தணர் விரும்பும் தலம் ஆகிய வீழி நகரே .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

பூதபதி யாகியபு ராணமுனி புண்ணியநன் மாதைமருவிப்
பேதமதி லாதவகை பாகமிக வைத்தபெரு மானதிடமாம்
மாதவர்க ளன்னமறை யாளர்கள் வளர்த்தமலி வேள்வியதனால்
ஏதமதி லாதவகை யின்பமமர் கின்றவெழில் வீழிநகரே.

பொழிப்புரை :

நிலம் , நீர் , நெருப்பு , காற்று , ஆகாயம் என விளங்குகின்ற ஐம்பூதங்கட்கும் பதியாகிய சிவபெருமான் பழமையான தவக் கோலம் பூண்டவர் . அவர் புண்ணிய தேவியாகிய உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது மாதவர்களும் , அந்தணர்களும் அழலோம்பி வளர்க்கும் வேள்வியினால் பசி , பிணி , வறுமை , மழையின்மை முதலிய தீங்கு நேராமலும் , உண்டி , நோயின்மை , செல்வம் , பருவ மழை முதலிய நன்மை நிகழவும் , மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை ஆகும் .

குறிப்புரை :

பூதபதி ஆகிய - பூதங்களுக்குத் தலைவராகிய . புராண முனி - பழமையாகிய தவக்கோலம் பூண்டவர் . புண்ணியம் நல்மாதை - அருளேயுருவமாகிய சிற்சத்தியை . பேதம் ( அது ) இலாதவகை - வேறுபாடு இல்லாத விதம் . மருவி - கலந்தும் . மிக - வேறுபாடு நன்குதோன்ற . பாகம் - இடப்பாகத்தில் , வைத்த - வைத்தருளிய , பெருமானது இடமாம் . இல்லத்திலிருந்து அழலோம்பும் அந்தணர்கள் . தகைமையால் - வனத்திற்சென்று தவம்புரியும் மாதவர்களைப் போன்றவர்கள் , அவர்கள் அழல் ஓம்புகின்றனர் . அதனால் பசி , பிணி , வறுமை , மழையின்மை முதலிய தீங்கு நேராமலும் , உண்டி , நோயின்மை , செல்வம் , பருவமழை முதலிய நன்மை நிகழவும் மாந்தர் மகிழ்ச்சியடைகின்ற திருவீழிமிழலை என்பது பின் இரண்டடியின் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

மண்ணின்மறை யோர்மருவு வைதிகமு மாதவமு மற்றுமுலகத்
தெண்ணில்பொரு ளாயவை படைத்தவிமை யோர்கள்பெரு மானதிடமாம்
நண்ணிவரு நாவலர்க ணாடொறும் வளர்க்கநிகழ் கின்றபுகழ்சேர்
விண்ணுலவு மாளிகை நெருங்கிவளர் நீள்புரிசை வீழிநகரே.

பொழிப்புரை :

இப்பூவுலகில் அந்தணர்கள் ஆற்றி வருகின்ற வைதிக தருமங்களையும் , மகா முனிவர் ஒழுகிவருகின்ற தவநெறிகளையும் , மற்றும் உலகியல் நெறி பற்றிய பல்வகை அறங்களையும் படைத்தருளிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது , நாடிவருகின்ற புலவர்கள் நாள்தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும் , வானளாவிய மாளிகைகள் நிறைந்து செல்வம் வளர்வதும் , ஓங்கிய மதிலையுடையதுமான திருவீழிமிழலை ஆகும் .

குறிப்புரை :

வைதிகமும் - வேதநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும் . மாதவம் - சிறந்த தவநெறி யொழுக்கத்திற்குரிய அறங்களையும் , மற்றும் உலகியல் நெறிபற்றி யொழுகற்பால பல்வகையறங்களையும் படைத்தருளிய சிவபெருமானது இடமாவது என்பது முதலிரண்டடியின் கருத்து . நாடி வருகின்ற புலவர்கள் நாள் தோறும் வளர்க்க வளர்ந்து வரும் புகழையுடையதும் , வான் அளாவிய மாளிகைகள் செறிந்து செல்வம் வளர்வதும் , ஓங்கிய மதிலை யுடையதுமாகிய திருவீழிமிழலையென்பது பின்னிரண்டடியின் கருத்து .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

மந்திரநன் மாமறையி னோடுவளர் வேள்விமிசை மிக்கபுகைபோய்
அந்தரவி சும்பணவி யற்புத மெனப்படரு மாழியிருள்வாய்
மந்தரநன் மாளிகை நிலாவுமணி நீடுகதிர் விட்டவொளிபோய்
வெந்தழல் விளக்கென விரும்பினர் திருந்துபதி வீழிநகரே.

பொழிப்புரை :

வேத மந்திரங்கள் ஓதி வளர்க்கப்படும் வேள்வியின் புகையானது மேலே சென்று ஆகாயத்தில் கலந்து அற்புதம் போன்று பகற்காலத்தே இருள் சூழக் கடலைக் கடைந்த மந்திர மலையைப் போன்ற அழகிய மாளிகைகளில் பதிக்கப்பட்ட இரத்தினங்களின் ஒளியானது நெடுந்தூரம் பாய்ந்து புகையால் விளைந்த இருளைப் போக்கி ஒளிரும் . அவ்வொளி வெவ்விய தழலில் ஏற்றிய விளக்கொளிபோல் விளங்கும் இயல்பினதாய் விருப்பமுடையவர்களாய் , மனநிறைவோடு மக்கள் வாழ்கின்ற தலம் திருவீழிமிழலை யாகும் .

குறிப்புரை :

மந்திரம்நல் மாமறையினோடு - நல்ல சிறந்த வேதத்தின் மந்திரங்களுடன் . வளர் - வளர்ந்த . வேள்வி மிசை - யாகத்தில் . மிக்க புகை போய் - மிக்கு எழும்பிய புகைசென்று . அந்தரம் - மேலே . விசும்பு அணவி - ஆகாயத்திற் கலந்து . அற்புதம் என - பகற்காலத்தே இருள்சூழ்ந்தது . அற்புதம் என்று வியக்க . படரும் - படர்ந்ததனால் உண்டாகிய . ஆழி - ஆழ்ந்த - இருள்வாய் . மந்தரம் - மந்தர மலைபோன்ற . நல் - அழகிய . மாளிகை - மாளிகையில் . நிலவும் - ( பதித்து ) விளங்குகின்ற . மணி - இரத்தினங்களின் . நீடு - நெடுந்தூரம் பாயும் . கதிர் - கிரணங்கள் . விட்ட - வீசிய . ஒளி - பிரகாசம் . போய் - சென்று . வெம்தழல் - வெவ்விய தழலில் ஏற்றிய . விளக்கு என - விளக்கொளிபோல் . ( ஒளிபரப்பி ) அவ்விருளைப்போக்க . அதனால் விருப்பமுடையவர்களாய் . திருந்து - திருப்திகரமாய் வாழ்கின்ற . பதி - தலமாகிய வீழிமிழலையே .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

ஆனவலி யிற்றசமு கன்றலைய ரங்கவணி யாழிவிரலால்
ஊனமரு யர்ந்தகுரு திப்புனலில் வீழ்தரவு ணர்ந்தபரனூர்
தேனமர் திருந்துபொழில் செங்கனக மாளிகை திகழ்ந்தமதிளோ
டானதிரு வுற்றுவள ரந்தணர் நிறைந்தவணி வீழிநகரே.

பொழிப்புரை :

தசமுகன் எனப்படும் இராவணன் தன் வலிமையைப் பெரிதாகக் கருதிக் கயிலைமலையைப் பெயர்த்தெடுக்க , அவனது தலைகள் அரைபடும்படி அழகிய திருக்காற்பெருவிரலை ஊன்றி , அவனுடைய உடலிலிருந்து குருதி பெருகுமாறு செய்த சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது தேன்மணம் கமழும் சோலைகளும் , செம்பொன் மாளிகைகளும் , உயர்ந்த மதில்களும் உடையதாய்ச் செல்வம் பெருகி வளரும் அந்தணர்கள் நிறைந்த அழகிய திருவீழிநகராகும் .

குறிப்புரை :

ஆன - தனக்குள்ள . வலியின் - வலிமையைக்கருதி மலையெடுத்ததனால் . தசமுகன் - இராவணனது . தலை - தலைகள் . அரங்க - அரைபட . அணி ஆழி விரலால் - மோதிரம் அணிந்த விரலால் . ஊன் அமர் - உடம்பில் உள்ள . உயர்ந்த - மிகுந்த . குருதிப்புனலில் - இரத்த வெள்ளத்தில் . வீழ்தர - வீழ்ந்துபுரள . உணர்ந்த - நினைத்து மிதித்த . பரன் - சிவபெருமானது . ஊர் - தலமாவது . தேன் அமர் - வண்டுகள் தங்கும் . திருந்து - திருத்தமான . பொழில்கள் - சோலைகளும் , செங்கனக மாளிகைகளும் . திகழ்ந்த - விளங்குகின்ற . மதிலோடு - மதிலுடனே . ஆன - ( நிறைவு ) ஆகிய . திரு உற்று - செல்வம் பொருந்தி . வளர் - மேன்மேலும் பெருகுகின்ற ( வீழிநகர் ) அந்தணர் நிறைந்த . அணி - அழகிய வீழிநகர் . மதிள் - ல , ள வொற்றுமை .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

ஏனவுரு வாகிமணி டந்தவிமை யோனுமெழி லன்னவுருவம்
ஆனவனு மாதியினோ டந்தமறி யாதவழன் மேனியவனூர்
வானணவு மாமதிண் மருங்கலர் நெருங்கிய வளங்கொள்பொழில்வாய்
வேனலமர் வெய்திட விளங்கொளியின் மிக்கபுகழ் வீழிநகரே.

பொழிப்புரை :

பன்றி வடிவம் கொண்டு பூமியைத் தோண்டிய திருமாலும் , அழகிய அன்னப்பறவை உருவெடுத்த பிரமனும் தேடத் தன் முடியையும் , அடியையும் அறியப்படாத வண்ணம் நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது , வானளாவிய பெரிய மதில்களினருகில் மலர்கள் அடர்ந்த , வளமிக்க சோலையில் மாந்தர் வெயிற்காலத்தில் தங்க , விளங்குகின்ற தெய்வத்தன்மை மிக்க புகழுடைய திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

ஏன உருவு ஆகி - பன்றி வடிவம்கொண்டு . மண் இடந்த - பூமியைத்தோண்டிய . இமையோனும் - தேவனாகிய திருமாலும் . எழில் - அழகிய , அன்ன உருவம் ஆனவனும் . ஆதியினோடு - அடியையும் . அந்தம் - முடியையும் . அறியாத - ( முறையே ) அறியப்படாத . அழல் மேனியவன் - நெருப்பு வடிவாய் நின்ற சிவபெருமானது ஊர் . வான் அணவு - ஆகாயத்தை அளாவிய . மாமதில் மருங்கு - பெரிய மதிலினருகிலே . அலர் நெருங்கிய - மலர்கள் அடர்ந்த . வளம்கொள் பொழில்வாய் - சோலையில் . வேனல் அமர்வு எய்திட - மாந்தர் வெயிற் காலத்திற்குத் தங்க . விளங்குகின்ற . ஒளியின் மிக்க - தெய்வத்தன்மையால் மிக்க . புகழ் - புகழையுடைய . வீழிநகர் - திருவீழிமிழலையாம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

குண்டமண ராகியொரு கோலமிகு பீலியொடு குண்டிகைபிடித்
தெண்டிசையு மில்லதொரு தெய்வமுள தென்பரது வென்னபொருளாம்
பண்டையய னன்னவர்கள் பாவனை விரும்புபரன் மேவுபதிசீர்
வெண்டரள வாணகைநன் மாதர்கள் விளங்குமெழில் வீழிநகரே.

பொழிப்புரை :

சமணர்கள் முரட்டுத்தன்மை உடையவராய் , அழகிய மயிற்பீலியும் , குண்டிகையும் ஏந்தி , எட்டுத் திக்கிலும் மிகுந்த ஆற்றலுடைய தெய்வம் ஒன்று உள்ளது என்பதால் என்ன பயன் உள்ளது ? வேதத்தை ஓதும் பிரமனைப் போன்ற அறிஞர்கள் விரும்பிப் போற்றும் சிவபெருமான் வீற்றிருந்தருளும் ஊர் , வெண்ணிற முத்துப்போன்ற ஒளிபொருந்திய பற்களையுடைய கற்புடைப் பெண்கள் விளங்கும் அழகிய திருவீழிமிழலையாகும் .

குறிப்புரை :

குண்டு - முருட்டுந்தன்மையையுடைய . அமணர் ஆகி - கோலம் மிகு - அழகு மிக்க . பீலியொடு - மயிற்பீலியொடு . குண்டிகை பிடித்து , எண்டிசையும் - எட்டுத்திக்கிலும் , இல்லை ஒரு தெய்வம் உளது என்பர் , அது என்ன பொருள் ஆம் - அவ்வாறு அவர்கள் கூறுவது என்ன பயன் தருவதாகும் , பண்டை - வேதத்தைக் கேட்ட அக்காலத்து . அயன் - பிரமனை . அன்னவர்கள் - ஒத்த அந்தணர்களின் . பாவனை - பாவிக்கும் திறனை . விரும்பு - விரும்பு கின்ற . பரமன் - சிவபெருமான் . மேவுபதி - தங்கும் தலம் . சீர் - சிறப்புற்ற . வெண்தரளவாள்நகை - வெள்ளிய முத்து போன்ற . ஒளிபொருந்திய பற்களையுடைய . நல்மாதர்கள் - கற்புடைய பெண்கள் . எழில் விளங்கும் - அழகால் விளங்கும் வீழிநகர் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

மத்தமலி கொன்றைவளர் வார்சடையில் வைத்தபரன் வீழிநகர்சேர்
வித்தகனை வெங்குருவில் வேதியன் விரும்புதமிழ் மாலைகள்வலார்
சித்திர விமானமமர் செல்வமலி கின்றசிவ லோகமருவி
அத்தகு குணத்தவர்க ளாகியனு போகமொடி யோகமவரதே.

பொழிப்புரை :

பொன்னூமத்தை மலரும் , கொன்றைமலரும் , நீண்ட சடையிலே அணிந்த பெருமானும் , திருவீழிமிழலைநகரில் வீற்றிருந்தருளும் சதுரனுமாகிய சிவபெருமானைப் போற்றி , வெங்குரு என்னும் பெயரையுடைய சீகாழியில் அவதரித்த வேத வல்லுநனான ஞானசம்பந்தன் அருளிய இத்தமிழ் மாலைகளை ஓத வல்லவர்கள் , அழகிய கோயிலையுடைய செல்வம் மலிகின்ற சிவலோகத்தை அடைந்து , சத்துவ குணம் உடையவர்களாகி இறைவனோடு பேரின்பம் துய்ப்பதற்குரிய சிவயோகத்தைப் பெறுவர் .

குறிப்புரை :

மத்தம் - பொன்னூமத்தை மலரும் . மலி - வாசனை மிகுந்த , கொன்றை - கொன்றைமாலையும் , வளர்வார் சடையில் வைத்த - வளரும் நெடிய சடையிலேயணிந்த , பரன் - மேம் பட்டவனும் , வீழி நகர் சேர் வித்தகனை - திருவீழிமிழலை ஆகிய தலத்தில் உள்ள சதுரனும் ஆகிய சிவபெருமானை . வெங்குருவில் வேதியன் , விரும்பு தமிழ் மாலைகள் வ ( ல் ) லார் . சித்திர விமானம் அமர் - அழகிய கோயிலையுடைய . செல்வம் மலிகின்ற . சிவலோகம் மருவி - சிவலோகத்தையடைந்து . அத்தகு - அவ்வளவு சிறந்ததாகிய . குணத்தவர்களாகி - சத்துவகுண முடையவர்களாகி . அனுபோக மொடு - இறைவனோடு பேரின்பம் உறும் . யோகம் அவரதே - சிவ யோகம் தம்முடையதாகவே கைவரப் பெறுவர் .
சிற்பி