திருத்தோணிபுரம்


பண் :சாதாரி

பாடல் எண் : 1

சங்கமரு முன்கைமட மாதையொரு பாலுடன் விரும்பி
அங்கமுடன் மேலுறவ ணிந்துபிணி தீரவருள் செய்யும்
எங்கள்பெரு மானிடமெ னத்தகுமு னைக்கடலின் முத்தந்
துங்கமணி யிப்பிகள் கரைக்குவரு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

முன்கையில் சங்குவளையல் அணிந்த உமா தேவியைத் தன்னுடைய உடம்பின் ஒரு பாகமாக விருப்பத்துடன் அமர்த்தி , எலும்பைத் தன் உடம்பில் நன்கு பொருந்தும்படி அணிந்து , தன்னைத் தியானிப்பவரது மும்மலப் பிணிப்பு நீங்கும்படி அருள் புரிகின்ற எங்கள் சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடமாவது அலை வீசுகின்ற கடலினின்றும் முத்துக்களும் , இரத்தினங்களும் , சங்குப்பூச்சிகளும் கரைக்கு வந்து சேருகின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

சங்கு அமரும் - சங்கு வளையல் பொருந்திய . ( முன்கை ) மடமாதை - இளமைமாறாத உமாதேவியாரை . உடன் ஒருபால் - தன்னோடு உடம்பின் ஒருபாகமாக . விரும்பி - விரும்பி அமர்த்தி . அங்கம் - எலும்பை . உடல்மேல் - உடம்பின்மீது . உற - பொருந்தும்படி , அணிந்து . பிணிதீர - மும்மலப் பிணிப்பு நீங்கும்படி . அருள்செய்யும் எங்கள் பெருமான் இடம் . முனைக்கடலின் - அலை முனைந்து வீசுதலையுடைய கடலினின்றும் . முத்தம் - முத்துக்களும் . துங்கம் - உயர்ச்சி பொருந்திய . மணி - இரத்தினங்களும் . இப்பிகள் - சங்குப் பூச்சிகளும் . கரைக்கு வருகின்ற தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 2

சல்லரியி யாழ்முழவ மொந்தைகுழ றாளமதி யம்பக்
கல்லரிய மாமலையர் பாவையொரு பாகநிலை செய்து
அல்லெரிகை யேந்திநட மாடுசடை யண்ணலிட மென்பர்
சொல்லரிய தொண்டர்துதி செய்யவளர் தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சல்லரி , யாழ் , முழவம் , மொந்தை , குழல் , தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க , பெரிய மலையாகிய இமயமலையரசரின் அரிய மகளாகிய உமாதேவியைத் தன் திருமேனியில் ஒரு பாகமாகப் பிரியாமல் கொண்டு , கையில் அனலை ஏந்தி இரவில் நடனமாடுகின்ற , சடைமுடியையுடைய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்ற இடம் , சொல்லுதற்கரிய பெருமையுடைய தொண்டர்கள் போற்ற நாளும் புகழ் வளரும் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

சல்லரி - யாழ் , முழவம் , மொந்தை , குழல் , தாளம் முதலிய வாத்தியங்கள் ஒலிக்க என்பது முதலடியின் கருத்து . மா - பெரிய . கல்மலையர் அரிய பாவை - இமயமலையினர் தம் அரிய புதல்வியாகிய உமாதேவியாரை . ஒரு பாகம் நிலைசெய்து - ஒரு பாகமாக நீங்காமற் கொண்டு . கை எரி ஏந்தி - கையில் அனலையேந்தி . அல் - இரவில் . நடம் ஆடு - கூத்தாடுகின்ற . ( சடை அண்ணல் இடம் என்பர் ) வளர் - ஊழிதோறூழியுயர்கின்ற தோணிபுரத்தை . ஆம் - அசை ` மேயவிவ்வுரைகொண்டு விரும்பும் ஆம் - ஆயசீர் அநபாயன் அரசவை ` என்புழிப்போல ( தி .12 பெரிய புராணம் ) தோணிபுரம் இடம் ஆம் என்பர் எனினும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 3

வண்டரவுகொன்றைவளர் புன்சடையின் மேன்மதியம் வைத்துப்
பண்டரவு தன்னரையி லார்த்தபர மேட்டிபழி தீரக்
கண்டரவ வொண்கடலி னஞ்சமமு துண்டகட வுள்ளூர்
தொண்டரவர் மிண்டிவழி பாடுமல்கு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

வண்டுகள் மொய்த்து ஊதுகின்ற கொன்றைமலர் மாலையை அணிந்த வளர்ந்த சிவந்த சடையில் பிறைச்சந்திரனையும் தரித்து , பண்டைக்காலத்தில் இடையில் பாம்பைக் கச்சாகக் கட்டிய மேலான இடத்திலுள்ள சிவபெருமான் , திருமால் முதலியோர் தனது அருளின்றி அமுதம் கடையச் சென்ற தோடம் அவரைவிட்டு நீங்குமாறு , திருவருள் செய்து , அலைகளின் ஆரவாரத்தையுடைய சிறந்த பாற்கடலினின்றும் எழுந்த நஞ்சினை அமுதமென உண்ட கடவுளாய் வீற்றிருந்தருளும் ஊர் , திருத்தொண்டர்கள் ஒருவரை ஒருவர் முந்திச் செய்கின்ற வழிபாடுகள் மிகுந்த திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

வண்டு - வண்டினம் . அரவு - மோதி ஊதுகின்ற . கொன்றை ( மாலையோடு ) வளர் - வளர்கின்ற ( புன் ) சடையின் மேல் - சடையின்மேல் . மதியம் - பிறைச்சந்திரனை , வைத்து . அரவு - பாம்பை . பண்டு - அக்காலந்தொட்டு . தன் அரையில் , ஆர்த்த - அரைஞாணாகக்கட்டிய . பரமேட்டி - மேலான இடத்திலிருப்பவனும் . பழிதீர - ( திருமால் முதலியோர் இறைவனாணையின்றிக் கடல் கடையச் சென்ற ) தோடம் அவரைவிட்டு நீங்குமாறு . கண்டு - தெரிந்து . அரவம் - ஆரவாரத்தையுடைய . ஒண் கடலின் - சிறந்த பாற்கடலில் எழுந்த . நஞ்சம் அமுது உண்ட கடவுள் . ஊர் - ஊராவது . தொண்டர் அவர் - அத்தகைய பேரன்பு படைத்த அடியார்கள் . மிண்டி - ஒருவர் ஒருவரின் நெருங்கி . வழிபாடுமல்கு - வழிபடும் வழிபாடுகள் மிகுந்த . தோணிபுரம் ஆமே .

பண் :சாதாரி

பாடல் எண் : 4

கொல்லைவிடை யேறுடைய கோவணவ னாவணவு மாலை
ஒல்லையுடை யானடைய லாரரண மொள்ளழல் விளைத்த
வில்லையுடை யான்மிக விரும்புபதி மேவிவளர் தொண்டர்
சொல்லையடை வாகவிடர் தீர்த்தருள்செய் தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் முல்லைநிலத்ததாகிய இடப வாகனத்தை யுடையவன் . கோவண ஆடை அணிந்தவன் . அடியவர்கள் பாடிப் போற்றித் தொழும் பாமாலைகளை உடையவன் . தொண்டர்கள் பக்தியுடன் ஒலிக்கும் அரநாமமும் , சிவநாமமும் ஓதப் படும் பண்பினன் . பகைவரது மதில்கள் எரிந்து சாம்பலாகுமாறு செய்த மேருவை வில்லாக உடையவன் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் பதியாவது , இறைவனையே பற்றுக்கோடாகக் கொண்டு மேன் மேலும் பக்தி செய்கின்ற தொண்டர்களின் வேண்டுகோள்களை ஏற்று , அவர்களின் துன்பங்களைத் தீர்த்து அருள்செய்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

கொல்லை - முல்லை நிலத்திலுள்ள , விடையேறு - இடபவாகனத்தை . உடைய , கோவணவன் - கோவணமாகிய ஆடை உடைய துறவிக்கோலத்தினன் . நா அணவும் மாலை - ( அடியார்கள் ) நாவினாற் பாடும் பாமாலைகளின் ( அணவுதல் - பொருந்துதல் பூமாலையின் வேறு பிரிக்க இங்ஙனம் கூறப்பட்டது ) ஒல்லை உடையான் - ஓசையையுடையவன் . ஒல் - ஒலிக்குறிப்பு ; அநு கரணஓசை என்பர் . மேவி - தன்னையே பற்றுக்கோடாக அடைந்து . வளர் - அன்புமிகப்பெறுகின்ற . ( தொண்டரது ) சொல்லை - வேண்டிக்கொள்ளும் சொற்களை . அடைவு ஆக - ( வியாஜமாக ) வழியாகக்கொண்டு - இடர் - துன்பங்களை . தீர்த்து அருள்செய் தோணிபுரம் ( தலம் ) ஆம் . அடையலார் - பகைவரது . அரணம் - புரங்களை . ஒள் அழல் விளைத்த - ஒளியையுடைய நெருப்பால் எரித்த - விளைத்த என்ற சொல் சார்புபற்றி எரித்த என்னும் பொருளில் வந்தது . வில்லையுடையான் - விற்போரையுடையவன் . வில் - எரித்தற்குக் கருவியாக இன்மையால் விற்போர் எனப்பட்டது . வில் - இலக்கணை . ஏறு - ஏறப்படுவது . செயப்படுபொருள் உணர்த்தும் விகுதி புணர்ந்து கெட்டது .

பண் :சாதாரி

பாடல் எண் : 5

தேயுமதி யஞ்சடையி லங்கிடவி லங்கன்மலி கானிற்
காயுமடு திண்கரியி னீருரிவை போர்த்தவனி னைப்பார்
தாயென நிறைந்ததொரு தன்மையினர் நன்மையொடு வாழ்வு
தூயமறை யாளர்முறை யோதிநிறை தோணிபுர மாமே.

பொழிப்புரை :

கலைகள் தேய்ந்து அழியும் நிலையிலிருந்த சந்திரனைச் சடைமுடியில் தரித்து மீண்டும் விளங்கி ஒளிருமாறு செய்தவர் சிவபெருமான் . மலைகள் மிக்க காட்டில் திரிகின்ற சினமுடைய , கொல்லும் தன்மையுடைய வலிய யானையின் தோலை உரித்துப் போர்த்தவர் . தம்மையே சிந்தித்திருப்பவர்கட்குத் தாயைப் போலக் கருணை காட்டிப் பாதுகாப்பவர் . எங்கும் நிறைந்த தன்மையர் . அடியவர்கட்கு நன்மை புரிதலையே தம் கடனாகக் கொண்ட அப்பெருமானார் வீற்றிருந்தருளுகின்ற இடம் , தூய்மையுடைய வேதியர்கள் வேதங்களை ஓதி நிறைகின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

தேயும் - கலை தேய்ந்து வரும் . மதியம் - பிறைச் சந்திரன் . ( அம் சாரியை .) இலங்கிட - தன்னைச்சரண்புக்கதால் விளங்க ( இலங்கு + இடு + அ = இலங்கிட ) இடு துணை வினை என்ப . விலங்கல் - மலைகள் . மலி - மிக்க . கானில் - வனத்தில் . காயும் - கோபிக்கின்ற . அடு - கொல்லவல்ல . திண் - வலிய . கரியின் - யானையின் . ஈர் உரிவை - உரித்ததோலைப் போர்த்தவன் . ஈர் உரிவை - ` அடியளந்தான் தாயது ` எனல் போல்வது . நினைப்பார் - நினைப்பவருக்குத் தாயைப்போல உதவ எங்கும் நிறைந்த ஒரு தன்மையினர் . நன்மையொடு வாழ்வு - நன்மைபுரிவதே தொழிலாக வாழும் இடம் . ( முறையாக ) ஓதி - வேதங்களையோதி , நிறைகின்ற திருத்தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 6

பற்றலர்த முப்புரமெ ரித்தடிப ணிந்தவர்கண் மேலைக்
குற்றமதொ ழித்தருளு கொள்கையினன் வெள்ளின்முது கானிற்
பற்றவனி சைக்கிளவி பாரிடம தேத்தநட மாடுந்
துற்றசடை யத்தனுறை கின்றபதி தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பகைவர்களின் முப்புரங்களை எரிந்து சாம்பலாகுமாறு செய்தவர் . தம் திருவடிகளைப் பணிந்து வணங்குபவர்களின் குற்றங்களை ஒழித்துத் திருவருள் புரியும் கொள்கையினையுடையவர் . பாடைகள் மலிந்த சுடுகாட்டில் பற்றுடையவர் . பூதகணங்கள் இசைப்பாடல்களைத் துதித்துப்பாட நடனமாடுபவர் . அடர்ந்து வளர்ந்த சடையையுடைய , அனைத்துயிர்க்கும் தந்தையாகிய சிவபெருமான் வீற்றிருந்து அருளுகின்ற தலம் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

பற்றலர் - பகைவர் ( மனம் பற்றுதல் இல்லாதவர் காரணப்பெயர் .) மேலைக்குற்றம் - முற்பிறவிகளிற்செய்து நுகர்ந்து எஞ்சிய வினைகள் . அடிபணிந்த அன்பர்கள் தன்னையோவாதே யுள்குவாராயின் , அவை காட்டுத்தீமுன் பஞ்சுத்துய்போற்கெடுதலின் ஒழித்தருளுகொள்கையினன் என்றார் . அருளு என்பதில் உகரம் சாரியை . வெள்ளில் - பாடை . முதுகானில் - மயானத்தில் . பற்றவன் - விருப்புடையவன் . இசைக்கிளவி - இசைப்பாடல்களை ( கிளவி - வெளிக்கிளம்பும் ஓசை ) பாரிடம் ( அது ) - பூதம் . ஏத்த - துதித்துப்பாட . நடமாடும் - அத்தன் . துற்ற - நெருங்கிய சடை , ( அத்தன் ) உறைகின்ற பதி தோணிபுரம் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 7

பண்ணமரு நான்மறையர் நூன்முறை பயின்றதிரு மார்பிற்
பெண்ணமரு மேனியினர் தம்பெருமை பேசுமடி யார்மெய்த்
திண்ணமரும் வல்வினைக டீரவருள் செய்தலுடை யானூர்
துண்ணென விரும்புசரி யைத்தொழிலர் தோணிபுர மாமே.

பொழிப்புரை :

சிவபெருமான் பண்ணிசையோடு கூடிய நான்கு வேதங்களை அருளியவர் . வேதாகம சாத்திரங்களின் முடிவான கருத்தை , மோனநிலையில் சின்முத்திரையால் தெரிவித்தருளிய திருமார்பையுடையவர் . உமாதேவியைத் தம் திருமேனியில் ஒரு பாகமாகக் கொண்டவர் . தமது பெருமை பேசும் அடியவர்களின் தீர்ப்பதற்கரிய வல்வினைகளைத் தீர்த்து அருளியவர் . அப்பெருமான் வீற்றிருந்தருளும் ஊரானது சரியையாதி தொழில்களை விரைவுடன் பணிசெய்தலில் விருப்புடைய மெய்த்தொண்டர் வாழ்கின்ற திருத்தோணிபுரம் என்னும் திருத்தலமாகும் .

குறிப்புரை :

நூல்முறை பயின்ற திருமார்பின் - ஆகம சாத்திரங்களின் கருத்தைப் . பயின்ற ( பயிற்றிய ) மோன முத்திரையால் சனகர் முதலியோர்க்குத் தெரிவித்தருளிய , திருமார்பினையும் - ( பயின்ற என்பதில் பிறவினை விகுதி தொக்கு நின்றது ). பெண் அமரும் - தங்கிய . மேனியர் - திருவுடம்பையும் உடையவர் . தம் பெருமை - தமது பெருமையை . பேசும் - பேசிப்புகழும் அடியார் . மெய் - உள் பொருளாகிய . திண் அமரும் - வலிமைபொருந்திய வல்வினைகள் - பிறரால் எளிதில் நீக்கமுடியாத வினைகள் ( அல்லது வலிய வினைகளுக்குள் வலிமைபொருந்திய - மிக வலிய எனினும் ஆம் .) சரியைத் தொழிலர் - சரியையாதி பணிபுரிவோர் . சரியை உபலக்கணம் . ` இருவரும் உணரா அண்ணல் ... உரத்தில் சீர்கொள் கரதலம் ஒன்று சேர்த்தி மோனமுத் திரையைக் காட்டி .` ( கந்தபுராணம் மேருப் படலம் . பா . 12) துண் என விரும்பு - ( எங்குக் குற்றம் நேர்ந்து விடுகிறதோ என்று ) அச்சத்தோடு விரும்பும் , தொழிலர் - பணியை மேற்கொண்டவர்கள் தங்கும் திருத்தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 8

தென்றிசையி லங்கையரை யன்றிசைகள் வீரம்விளை வித்து
வென்றிசை புயங்களை யடர்த்தருளும் வித்தகனி டஞ்சீர்
ஒன்றிசையி யற்கிளவி பாடமயி லாடவளர் சோலை
துன்றுசெய வண்டுமலி தும்பிமுர றோணிபுர மாமே.

பொழிப்புரை :

தென்திசையில் விளங்கிய இலங்கை மன்னனான இராவணன் எல்லாத் திசைகளிலும் திக்விஜயம் செய்து தனது வீரத்தை நிலைநாட்டி , வெற்றி கொண்ட தோள்களை நெருக்கிப் பின் அருளும் புரிந்த வித்தகனான சிவபெருமான் வீற்றிருந்தருளும் இடம் , இசையுடன் குயில்கள் பாட , மயில்கள் ஆட , வளம் பொருந்திய சோலைகளின் மலர்களிலுள்ள தேனை உண்ணும்பொருட்டு , வண்டுகளும் , மிகுந்த தும்பிகளும் சுருதிகூட்டுவது போல் முரல்கின்ற திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

இலங்கையரையன் . திசைகள் - எட்டுத் திசைகளிலும் . வீரம் விளைவித்து - தனது வீரத்தை நிலைநாட்டி ( திக்கு விசயம் செய்து ) வென்று - வெற்றிகொண்டு . இசை - இசைந்த ( ஒன்றை யொன்று ஒத்த ) புயங்களை அடர்த்து . அருளும் - அருள்புரிந்த வித்தகன் இடம் . சீர் ஒன்று - தாளவொத்துக்கு இசைந்த . இசை இயல் கிளவி - இசை பொருந்திய பாடல்களை . பாட - குயில்கள் பாட . மயில் ஆட . வளர்சோலை . துன்றுசெய - அவ்வாடலைக் காணும் சபையினர் போல நெருங்க . வண்டு - வண்டுகளும் . மலி - மிகுந்த , தும்பி வண்டுகளும் . முரல் - சுருதி கூட்டுவதைப்போல ஒலிக்கின்ற தோணிபுரம் . பாட என்பதற்கு எழுவாய் வருவித்துரைக்கப்பட்டது ; தோன்றா எழுவாய் . அன்றி இசையியற் கிளவி - என்பதை அன்மொழித் தொகையாகக் கொண்டு குயிலெனினும் ஆம் . பன்மொழித்தொடர் : இசையியன்ற குரலோசையுடையது என்று பொருள் .

பண் :சாதாரி

பாடல் எண் : 9

நாற்றமிகு மாமலரின் மேலயனு நாரணனு நாடி
ஆற்றலத னான்மிகவ ளப்பரிய வண்ணமெரி யாகி
ஊற்றமிகு கீழுலகு மேலுலகு மோங்கியெழு தன்மைத்
தோற்றமிக நாளுமரி யானுறைவு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

நறுமணம் கமழும் தாமரைமலரில் வீற்றிருக்கும் பிரமனும் , திருமாலும் தேட முயலத் தங்களது ஆற்றலால் அளந்தறிதற்கு அரிதாகும் வண்ணம் , நெருப்புப் பிழம்பாகி , கீழுலகு மேலுலகு ஆகியவற்றை வியாபித்து ஒங்கியெழுந்த தன்மையுடைய தோற்றத்தை உடையவனாய் ஒருநாளும் அவர்கள் அறிதற்கரியனாகிய சிவ பெருமான் வீற்றிருந்தருளும் இடம் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

நாடி - தேடத்தொடங்கி , ஆற்றல் அதனால் - தங்கள் வலிமையினால் . அளப்பு மிக அரிய வண்ணம் - சிறிதும் அளத்தலரிய தாகும்படி . எரி ஆகி - அக்கினிப் பிழம்பு ஆகி . ஊற்றம் - உற்ற இடத்தையும் . எழு - எழுந்த . தோற்றம் - தமது தோற்றத்தையும் . நாளும் - இன்றும் . அரியான் - அறிதல் அரியவனாகிய கடவுள் . உறைவு - வாழும் இடம் தோணிபுரம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 10

மூடுதுவ ராடையினர் வேடநிலை காட்டுமம ணாதர்
கேடுபல சொல்லிடுவ ரம்மொழிகெ டுத்தடைவி னானக்
காடுபதி யாகநட மாடிமட மாதொடிரு காதிற்
றோடுகுழை பெய்தவர்த மக்குறைவு தோணிபுர மாமே.

பொழிப்புரை :

உடலை மூடி மறைக்கின்ற துவராடையணிந்த புத்தர்களும் , தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையினைப் போல தமது அறிவும் உளது எனக் காட்டும் அறிவிலிகளாகிய சமணர்களும் தீமை விளைவிக்கக் கூடிய பல சொற்களைக் கூறுவர் . அத்தீய மொழிகளை நீக்கி , சுடுகாட்டைத் தமது இருப்பிடமாகக் கொண்டு , நடனமாடி , உமாதேவியோடு கூடி , இருகாதுகளிலும் முறையே தோடும் , குழையும் அணிந்தவராகிய சிவபெருமான் வீற்றிருந்தருளும் தலம் திருத்தோணிபுரம் ஆகும் .

குறிப்புரை :

மூடு துவராடையர் - துவர் ஆடை போர்ப்பவர்களாகிய புத்தர் . வேட நிலைகாட்டும் அமண் ஆதர் - தமது வேடமாகிய ஆடையணியாத் தன்மையைப்போலவே தமது ஞானநிலையும் எனக்காட்டும் சமணர்களாகிய அறிவிலிகள் . அம்மொழி - அவர் மொழியை . கெடுத்து - நீக்கி . அக்காடு - அத்தகைய மயானம் . பதியாக - இருப்பிடமாகக்கொண்டு , நடம் ஆடி . மடமாதோடு ( கூடி ) - அர்த்தநாரீசுர வடிவமாய் . இருகாதில் - இருகாதுகளிலும் . முறையே , தோடும் , குழையும் பெய்தவர் - அணிந்தவராகிய சிவபெருமானுக்கு . உறைவு - வசிக்கும் இடம் , தோணிபுரமாம் . அடைவினால் - முறைப்படி . அதைச் சேர்வீர்களாக என்பது அவாய் நிலை . ஆடையர் ஆதர் கேடுபல சொல்லிடுவர் அம்மொழி கெடுத்து அடைவினால் அதனைச் சேர்வீர்களாக என்க . அல்லது கெடுத்த அடைவினான் எனப் பிரித்து அடைவினான் - சிவபெருமான் எனலும் ஆம் .

பண் :சாதாரி

பாடல் எண் : 11

துஞ்சிருளி னின்றுநட மாடிமிகு தோணிபுர மேய
மஞ்சனைவ ணங்குதிரு ஞானசம் பந்தனசொல் மாலை
தஞ்சமென நின்றிசைமொ ழிந்தவடி யார்கள்தடு மாற்றம்
வஞ்சமிலர் நெஞ்சிருளு நீங்கியருள் பெற்றுவளர் வாரே.

பொழிப்புரை :

அனைத்துலகும் ஒடுங்கிய பிரளயம் எனப்படும் பேரிருளில் நின்று நடனமாடுபவனாய்ப் , புகழ்மிகுந்த திருத்தோணி புரத்தை விரும்பி வீற்றிருந்தருளுகின்ற சிவபெருமானை வணங்கித் திருஞானசம்பந்தர் அருளிய இச்சொல்மாலைகளே தமக்குப் பற்றுக் கோடாகும் என்ற கருத்தில் நிலைத்துநின்று , அதனை இசையுடன் ஓதும் அடியவர்கள் நெறிதவறுதலும் அதற்குக் காரணமான வஞ்சனையும் இல்லாதவர்கள் . அவர்கள் நெஞ்சிலுள்ள அறியாமை என்னும் இருள் நீங்கப்பெற்று , இறைவனது அருள்பெற்றுச் சீலத்துடன் வளர்வர் .

குறிப்புரை :

துஞ்சு - உலகெலாம் ஒடுங்கிய . இருளில் பிரளயகால இருளில் . ( நின்று ) நடம் ஆடி - நடம் ஆடிய பெருமானும் . மிகு - புகழால் மிகுந்த , தோணிபுரம் மே ( வி ) ய . மஞ்சனை - சிவபெருமானை . மாலையே நமது பற்றுக்கோடாகும் என்று , நின்று இசைமொழிந்த அடியார்கள் . தடுமாற்றம் , வஞ்சம் , இலர் - நெறி தவறுதலும் , அதற்குக் காரணமாகிய மாயையும் இலராவார் . இருளாவது தன்னைக் காட்டிப் பிறபொருளைக் காட்டாமலிருக்கும் ; இது தன்னையும் , தான்மறைத்த ஆன்மாவையும் காட்டாமையால் வஞ்சம் எனப்பட்டது . இருளும் - ஆணவமலமும் , மாயையும் இலர் எனவே . ஏனைய கன்மமும் தொலையப்பெற்று , அருள் பெற்று , வளர்வார் என்க .
சிற்பி